Thursday, April 25, 2024

ஏ.ஆர்.இரகுமான் - டெய்லர் ஸ்விஃப்ட் கூட்டணி

 பத்து வருடங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் கூட்டணி!

”Kun faya Kun பாடலைக்கேட்டதிலிருந்து ஏ.ஆர்.இரகுமானை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்”, என்று டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். நான் டெய்லர் ஸ்விஃப்ட் பாடல்களை தேடிக்கேட்டது அந்த (2014) பேட்டிக்குப்பின்னர்தான்.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை வாழ்க்கை மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையைப் போல தனித்துவமானது. அவருக்காக இசையமைக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று ஏ.ஆர்.இரகுமான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு (2024) ஒரு பேட்டியில் கூறினார்.
எனது டீன் ஏஜ் பருவத்தை ஆக்கிரமித்தவர் மைக்கேல் ஜாக்சன். இப்போதும் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் அப்படியே இருக்கிறது. அவரும் ஏ.ஆர்.இரகுமானும் இணையப்போகிறார்கள் என்று செய்தி வெளியானபோது மிகவும் உற்சாகமடைந்தேன். ஆனால் மைக்கேல் ஜாக்சனின் மறைவால் அந்தக் கனவுக் கூட்டணி நிறைவேறவில்லை.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை மைக்கேல் ஜாக்சனைப்போல என்னை ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் இசையிலும் ”தன்னைக் கண்டடைவது” என்கிற தேடல் இருப்பதாகத் தோன்றும். இரகுமானின் பாடல்கள் பலவற்றிலும் இந்த தேடல் இருப்பதை கவனிக்கலாம். சமீபத்தில் அந்த தேடல் அதிகமாகியிருக்கிறது. அந்த வகையில் டெய்லர் ஸ்விஃப்ட் அவரை வசீகரித்திருக்கலாம்.
தற்போது டெய்லர் ஸ்விப்ட் #THETORTUEDPOETSDEPARTMENT என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். அப்பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து ஏ.ஆர்.இரகுமான் ஒரு ட்வீட் செய்தார். அவ்வளவுதான் அவர்கள் இருவருடைய கூட்டணி அமைந்துவிட்டதாகவே இரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள்.
இந்தத் தருணத்தில் ஓகே கண்மணி படத்தில் வரும் ”மன மன மன மென்டல் மனதில்” பாடல் ஞாபகம் வருகிறது. அதில் துள்ளலாகப் பாடியிருக்கும் ஜோனிடா காந்தியின் குரலில் டெய்லர் ஸ்விஃப்டின் சாயல் இருக்கும்.
ஏ.ஆர்.இரகுமானின் இசையில் டெய்லர் ஸ்விப்ட் பாடப்போகும் பாடலுக்காக இப்போதிருந்தே காத்திருக்கிறேன்.



Saturday, April 20, 2024

ஜெய்ஹோ பாடலை முதலில் நான் பாடவில்லை - சுக்விந்தர் சிங்

 ஒவ்வொரு அரிசியிலும் அது யாருக்கானது என்று எழுதியிருக்கும் என்பார்கள். படைப்புகளுக்கான விருதுகளும் அப்படித்தான் எனக்கருதுகிறேன். ஜெய்ஹோ பாடலின்மேல் அது ஆஸ்கருக்கானது என எழுதப்பட்டிருந்ததோ என்னவோ!

ஜெய்ஹோ பாடல் எப்படிப் பிறந்தது, அது எந்தப்படத்துக்காக பதிவு செய்யப்பட்டது யாரோ பாடிய அந்தப் பாடலுக்கு தனது குரல் எப்படி வந்தது, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக அது எப்படி தேர்வு செய்யப்பட்டது அது எப்படி ஆஸ்கர் சென்றது

இத்தனை கேள்விகளுக்கும் பதிலாக அப்பாடலைப்பாடிய சுக்விந்தர்சிங் கூறிய வீடியோ ஒன்று பார்த்தேன். சுவாரசியம்!

நான் குறிப்பிட்டுள்ள பகுதி வீடியோவில் 14.15 ல் துவங்குகிறது.

Friday, April 19, 2024

இளையராஜா கதை - இம்தியாஸ் அலி இயக்கத்தில் , ஏ.ஆர் இரகுமான் இசையில்

 இளையராஜா படத்தை இயக்க நான் இம்தியாஸ் அலியை பரிந்துரைக்கிறேன். இசை ஏ.ஆர்.இரகுமானாக இருக்க வேண்டும்.

இன்று சம்கீலா படம் பார்த்தேன். படம் பார்த்தபின் இதனை சொல்லத் தோன்றியது. பஞ்சாப் மாநிலத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய கதை இது. அவனுடைய வாழ்வை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை படம் ஏற்படுத்துகிறது.

தன் மண்ணின் மைந்தனை, ஏன் ஒரு சமூகம் உச்சி முகர்கிறது என்பதையும், அதே சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஏன் அவனை நிராகரிக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இப்படம் விவரிக்கிறது. அவனுடைய ஏற்றத்தை எட்டி நின்று பார்க்கும் இன்னொரு சமூகம் அவன் தடுமாறும்போது அவனை எப்படி தங்கள் சொல் கேட்பவனாக மாற்ற வலை வீசுகிறது என்பதையும் படம் தொட்டுக் காண்பிக்கிறது.

சம்கீலாவின் நிஜப் பாடல்கள் படம் நெடுக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை நிஜ காட்சிகளுடன், திரைக்காட்சிகளை இணைத்து காட்டிய விதம் அற்புதம்.

ஏ.ஆர்.இரகுமான் சம்கீலா பற்றி


ய பாடலையும், அவனுடைய வாழ்வின் முக்கிய தருணங்களுக்கான பாடல்களையும் இப்படத்தில் இசைத்திருக்கிறார். இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், இசையும் மனதை நெகிழ வைத்துவிட்டன.

இந்த மண்ணின் ஈரத்தை சுவாசித்துக் கொண்டும், இந்த மண்ணுக்கான ஈரத்தை தந்து கொண்டும் இருக்கும் இளையராஜாவின் வாழ்வை, அவரைச் சுற்றியுள்ள சமூக அரசியலுடன் பார்ப்பதற்கு, ஆழமான பார்வையுள்ள ஒரு எழுத்து தேவை. அந்த எழுத்தும், அதை திரைக்கு கடத்தும் திறனும் இம்தியாஸ் அலியிடம் இருக்கிறது. ராக்ஸ்டார் உள்ளிட்ட அவருடைய முந்தைய படங்களே இதற்கு சாட்சி!


இளையராஜாவின் கதையை எத்தனையோ விதங்களில் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவருடைய வாழ்வு பெரு வாழ்வு. அவ்வாழ்வின் ஒரு துளியை அருண்மாதேஸ்வரன் முதல் கதையாக இயக்கட்டும், அடுத்த இளையராஜா கதையை இம்தியாஸ் அலி, ஏ.ஆர் இரகுமான் இசையில் இயக்கட்டும். இது என் விருப்பம்.

ISR Selvakumar