Wednesday, June 22, 2022

ஜம்முன்னு எங்க கேப்டன் திரும்ப வரணும் - பிரார்த்தனைகள்!

கேப்டன் நலமாக இருக்கிறார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் கேப்டனின் ஒரு கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை வாசிக்கும்போதே மனதைப் பிசைகிறது. எப்போதுமே கம்பீரமான மனிதனாக திரையிலும், தரையிலும் தோன்றிய விஜயகாந்துக்குக்கு இந்த நிலையா என்கிற எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. வயது ஒரு காரணம் என்றாலும், அவர் திடீரென உடல் நலம் குன்றியதில் இரசிகர்கள் மட்டுமல்லாமல் சாதாரண பொது மக்களுக்கும் மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. காலம்தான் அதற்கு மருந்து தரும்.

கேப்டன் செய்திருக்கும் எத்தனையோ தர்மங்களும், உதவிகளும் அவரைக் காக்கும். அவர் உடல் நலம் பெற்று இரசிகர்களையும், குடும்பத்தாரையும் மகிழ்விப்பார்.
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பில் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

வாரிசு - பர்ஸ்ட் லுக் - லைட்டா இருக்கா? வெயிட்டா இருக்கா?

வாரிசு! விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில். உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

இந்த டைட்டில் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் கசிந்துவிட்டது. அதனால் முந்தைய படங்களைப் போல பெருத்த எதிர்பார்ப்பு இல்லை. அதனால் கசிந்த அதே டைட்டில் வெளியாதால் சில தீவிர விஜய் இரசிகர்களுக்கு மெல்லிய ஏமாற்றம் தான்.

வழக்கம் போல விஜய் ஹேட்டர்ஸ் இது டிவி சீரியல் டைட்டில் போல இருக்கிறது என்று கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தீனி போடுவது போல இந்த போஸ்டரில் கத்தி, துப்பாக்கிஎன ஆக்சன் படத்துக்கான சமாச்சாரங்கள் எதுவும் இல்லையே என்றும் சில இரசிகர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இப்படி ஒரு கருத்து பரவும் என்பதை பட நிறுவனம் முன் கூட்டியே யூகம் செய்துவிட்டார்கள் என நினைக்கிறேன். அதனால் செகண்ட் லுக், தேர்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகும் என்று டிவீட் செய்திருக்கிறார்கள். அதனால் தீவிர இரசிகர்களின் ஏமாற்றம் சற்று தணிந்திருக்கிறது.

ஆனால் வாரிசு என்ற டைட்டில் விஜய் இரசிகர்கள் பலருக்கு பிடித்திருக்கிறது.

ரஜினி முகமே இல்லாமல் ரஜினி பட போஸ்டர் அறிமுகம்.

Rajini's Jailer first look poster
இதற்கு முன்பு இப்படி வெளியானதில்லை என நினைக்கிறேன். அவருடைய அடுத்த படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் இரத்தம் படிந்த ஒரே ஒரு கத்திதான் இருக்கிறது.

கமல் நடித்த விக்ரம் பட வெற்றிதான் இந்த போஸ்டருக்கு காரணமாக இருக்குமோ என எனக்குத் தோன்றுகிறது. விக்ரம் படம் முழுவதும் காட்சிக்குக் காட்சி இரத்தம் தெறித்தது. இரசிகர்களும் அதற்கு அமோக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். கபாலியைத் தவிர ரஜினி படங்களில் இந்த அளவுக்கு வன்முறைக் காட்சிகள் இருந்ததில்லை. ஆனால் ஜெயிலர் படம் விக்ரமைப் போலவே ஆக்சன் மசாலாவாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மாற்றத்திற்கு ரஜினி இரசிகர்களின் அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். விக்ரம் வெற்றி பெற்ற பின் நெல்சனை பலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். லோகேஷ் கமலை பயன்படுத்தியது போல விஜய்யை பீஸ்ட் படத்தில் பயன்படுத்தவில்லை என்று விஜய் இரசிகர்கள் ஒரு பக்கம் வறுத்தெடுத்தெடுத்தார்கள். மறு பக்கம் ரஜினி இரசிகர்கள், தலைவரை வேஸ்ட் பண்ணிடாத, விக்ரம் போல அதிரடியாக இருக்கணும் என்று ஆன்லைனில் நெருக்கடி தந்திருப்பார்கள்.
லோகேஷே ஒரு பேட்டியில் இது பற்றி வருத்தப்பட்டார். நெல்சனுக்கு தேவையில்லாத நெருக்கடி கொடுப்பதாக அவர் பேட்டியில் குறிப்பிட்டார். அந்த நெருக்கடியின் விளைவுதான் இரத்தம் படித்த கத்தி ஜெயிலர் போஸ்டராக வெளி வந்திருக்கிறது.
படம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. ஆனால் போஸ்டர் இரசிகர்களை இரத்தம் பார்க்கத் தயாராக இருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறது.
இப்போதைக்கு ஜெயிலர்கள் இரசிகர்கள்தான். ரஜினியும், நெல்சனும் கைதிகளாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
- ISR Selvakumar