Friday, June 29, 2018

சிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சந்தோஷம்!
ஆனாலும் பிடிவாதமாக நடந்த சிவாஜிகணேசனின் சிலை அகற்றம், ஏனோ தானோவென நடந்த அவரது மணி மண்டபத் திறப்புவிழா, என சிவாஜிகணேசனின் புகழுக்கு நேர்ந்த பல அவமரியாதைகள், மனதில் நெருடுவதை தவிர்க்க இயலவில்லை. அதனால் உண்மையிலேயே இந்த அரசு அவரது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதைக் காணும் வரை பெரிதாக மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.
பல்வேறுதரப்பு மக்களின் அதிருப்திகளை சம்பாதித்திருக்கும் இந்த அரசு, வரப்போகும் தேர்தலில் எல்லோருடைய வாக்குகளையும் கவர பல முயற்சிகள் செய்யும் என்பது அனைவரும் அறிந்த இரகசியம். அதில் ஒன்றாக சில ஆயிரம் வாக்குகளாவது இந்த அறிவிப்பின் மூலம் கிடைக்கும் என்று இந்த அரசு நினைத்திருக்கலாம். அந்த வகையில் அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் சிலைக்கு இது முதல் வெற்றி.
திரும்பவும் அதே இடத்தில் அவரது சிலை வைக்கப்பட்டால்தான் அது அவரது கலைக்கு செய்யப்படும் மரியாதை!
ஆனாலும் அரசின் இந்த அறிவிப்பு நடிகர்திலகத்தின் இரசிகர்களுக்கு ஆறுதல் தரும்.

Saturday, June 23, 2018

காலத்தின் தேவை கிராமங்கள்தான் - எட்டு வழிச்சாலைகள் அல்ல

எல்லா விவாதங்களும் மோடி ஆதரவு (அ) மோடி எதிர்ப்பு என்கிற கண்ணாடியை மாட்டிக் கொண்டு எதிர்கொள்ளப்படுகிறது. தொலைக்காட்சி விவாதங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை இந்த கண்ணாடிதான் உண்மைகளை திரிக்கிறது.
ஆனால் இந்தியாவும், அதனுடைய ஆன்மாவான கிராமங்களும், விவசாய வாழ்க்கை முறையும், எளிய மக்களும் மோடிக்கு முன்பும் இருந்தார்கள், மோடிக்குப் பின்பும் இருப்பார்கள்.
எனவே தற்போது மோடிக்குப் பதில் மகாத்மா காந்தியே இந்தியப் பிரதமராக இருந்தாலும், எட்டு வழிச்சாலைகள் திணிக்கப்படும்போது நான் எனது சந்தேகங்களைக் கேட்பேன், அதுகுறித்து விமர்சனங்களை எழுப்புவேன்.
என்னைப் பொறுத்தவரையில் விவசாயமும், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும் திட்டங்கள் தான் காலத்தின் தேவை. வளர்ச்சி என்கிற பெயரில் கான்க்ரீட் காடுகளை உருவாக்குவதை விட இருக்கிற காடுகளை பாதுகாப்பதும் வளர்ப்பதும்தான் உடனடித் தேவை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்.
இந்தியா இயல்பாகவே பசுமையான விவசாய நாடு. அதை அமெரிக்கா போல சாலைகளும், கட்டிடங்களும் நிறைந்த நரகமாக மாற்றிவிட்டு, பிறகு மொட்டை மாடியில் பயிர் செய்கிறேன் என்பதும், பூமியிலிருந்து தப்பித்துப் போய் செவ்வாய் கிரகத்தில் குடியமர்வேன் என்பதும் அபத்தம்.
அமீபா முதல் மனிதன் வரை வாழ்க்கை என்பது சுத்தமான நீரிலும், நிலத்திலும், மாசுபடாத காற்றிலும் ஆகாயத்திலும்தான் இருக்கிறது. கான்க்ரீட்டுகளில் அல்ல.
நம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு வளமாக இருக்க வேண்டுமென்றால், இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான திட்டங்கள் எந்த அரசாங்கத்திடம் இருந்தாலும் சொல்லுங்கள். காவல் துறையின் அதட்டல்கள் இல்லாமல் மக்களே இரு கரம் கூப்பி வரவேற்பார்கள்.

Saturday, June 2, 2018

காவிரி ஆணையம் அமைந்ததில் ஏன் எவருக்கும் மகிழ்ச்சி இல்லை?

கொஞ்சம் விநோதமாகத்தான் இருக்கு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும். அமைந்ததும், அதைப் பற்றி மத்திய அரசிதழ்ல வெளியிடணும் அப்படின்னு போராட்டம், பந்த் அது இதுன்னு என்னென்னமோ நடந்தது.
இப்போ கேட்டது கிடைச்சிருக்கு. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, மத்திய அரசிதழ்லயும் வெளியாகி, அதனுடைய நகல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உட்பட நான்கு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கு. ஒவ்வொரு மாநிலத்துல இருந்தும் வாரிய உறுப்பினர்களா இரண்டு பேரை நியமிக்கணும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதுக்கும் 2 பேரை பரிந்துரை பண்ணிட்டாங்க.
இதுக்காகத்தான் வருடக்கணக்கில் போராட்டங்கள் நடந்தது. இப்போ பலன் கிடைச்சிருக்கு. இது கொண்டாட வேண்டிய நேரம். குறைந்தபட்சம் அது பற்றி பேச வேண்டிய நேரம். ஆனால் இதைப்பற்றி பேச்சே காணோம். அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, எதிர்கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, இதற்காக தொடர்ச்சியாக போராடியவர்களும் கண்டு கொள்ளவில்லை. மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. ஏன்?