Saturday, February 22, 2014

ரஜினி - கோச்சடையான் மொபைல்

ரஜினி மொபைல்!

கார்போன் நிறுவனம் Karbonn Kochadaiiyaan என்ற பெயரில் ஒரு புது மொபைல் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட மாடல்கள் இறங்கியுள்ளன. சில ஆன்லைன் தளங்கள் பேசிக் மாடலுக்கு 2600 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விற்பனையைத் துவக்கிவிட்டன. முப்பதாயிரம் ரூபாய் வரை மாடல்கள் உள்ளதாக செய்திகள் பரபரக்கின்றன.

இது விளம்பர உத்தி எதிர்பார்த்ததுதான். அடுத்த கட்டமாக Appகள் மற்றும் Games வந்திறங்கும். ஆனால் இந்த உத்திகள் மிக விரைவிலேயே போரடிக்க ஆரம்பித்துவிடும்.


  • இன்னும் 5 வருடங்களுக்குள், ஃபோனும், ஃபோனுக்குள் திரைப்படமும் சேர்த்தே மார்கெட்டுக்கு வரும். வந்தாக வேண்டும்.
  • தற்போது இலவசமாகக் கிடைக்கும் Behind the scenes மற்றும் shooting spot புகைப்படங்களை தியேட்டர்களில் விலை கொடுத்து பார்ப்போம். 
  • காட்சிகள் தினமும் ஒரே மாதிரி இருக்காது. சுவாரசியத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சி திரைப்படத்தில் கூடும், குறையும். 
  • எல்லோருக்கும் ஒரே திரை என்பது போய் ஆளுக்கொரு திரை சீட்டிலேயே பொருத்திக் கொள்ளும் காலம் வரும். 
  • திரைப்படத்தை விட, அதை அமர்ந்து பார்க்கும் இடத்திற்குதான் வாடகை வசூலிக்கப்படும். 
  • அதிக வாடகைக்காக அதிக வசதிகள் தரப்படும். 
  • இது தவிர ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர் விருப்பப்பட்ட நேரத்திற்கு படம் ஒளிபரப்பாகும்.




கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் நாம் - யாருக்கும் வெட்கமில்லை

ஜெயலலிதா நேர்மையானவராக இருந்திருந்தால், இது வரை போராடியவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு ஒரே ஒரு வார்த்தையாவது பாராட்டிச் சொல்லியிருப்பார். ஆனால் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதையும், கருணாநிதியை சீண்டுவதையும் ஒரு அறிக்கையாக்கி அதை சட்டசபையிலும் வாசித்துவிட்டார்.

கருணாநிதியும் இதையேதான் செய்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களையும், போராடியவர்களையும் மறந்துவிட்டு, ஜெயலலிதாவுக்கு கிடைத்த வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லையே என்ற கடுப்பை வெளிப்படுத்துவதையே ஒரு அறிக்கையாக்கி வெளியிட்டுவிட்டார்.

தமிழக மக்களாகிய நாமும் இவர்களின் சண்டைக்குள் ஒன்றிப் போய், யார் பெரியவர் உடன் பிறப்பா, ரத்தத்தின் ரத்தமா என்று தெருச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த விஷயத்தை இந்த அளவுக்கு தரமிறக்கி விவாதப் பொருளாக்கியதில் ஒன்று மட்டும் உறுதியாகியிருக்கிறது. ஜெயலலி்தா, கருணாநிதி மற்றும் நாம் உட்பட யாருக்கும் பொறுப்போ, கண்ணியமோ, வெட்கமோ இல்லை. எல்லோரும் சுயம் மறந்து அரசியல்வாதிகளாகிவிட்டோம்.

Wednesday, July 17, 2013

மனசு - கேபிள் சங்கரின் பிரியாணி சிறுகதை குறும்படமாக!

கடந்த வருடம் . . . அதற்கும் முந்தைய வருடமாகக் கூட இருக்கலாம். டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு சந்திப்பு. கேஆர்பி. செந்தில், சுரேகா, கேபிள் மற்றும் நான்.

பேச்சை கேபிளின் சிறுகதைகள் பற்றிய பகிர்வுகள் ஆக்கிரமித்தன. அப்போது சுரேகாவும், செந்திலும் பிரியாணி என்ற சிறுகதையைப் பற்றி சிலாகித்தனர். கதையின் முடிவை வாசித்ததும் கண்கலங்கிவிட்டதாக செந்தில் குறிப்பிட்டார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதை குறும்படமாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு எழுந்துவிட்டது.



கேட்டேன். கேபிள் உடனே அனுமதி தந்தார். திரைக்கதை உருவானதும் கேபிளிடம் வாசித்துக்காட்டினேன். தனக்குப் பிடித்திருக்கிறது என்று அவர் கூறியதும் ரிகர்சலில் ஈடுபட்டேன். யார்யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது தனது குறுகுறு படங்களால் கலக்கிக் கொண்டிருந்த கார்க்கி, நடிகராக குழுவுக்குள் வந்தார். ரிகர்சலின்போது ஞாயிறுதோறும் கலகலப்புதான். அந்த ஜாலி வீடியோக்களை யுடியூபில் பார்க்கலாம்.

படம் தயார் ஆனதும், ஈரோடு பதிவர் சந்திப்பில் கேபிள், கார்க்கி இல்லாமலேயே அவசரம் அவசரமாக ஒரு வெளியீடு நடந்தது. அவ்வளவுதான். விருதுகளுக்கு யோசித்து, தாமதித்து பிறகு மறந்தே போனேன். அதன்பின் வித்தையடி நானுனக்கு திரைப்படத் தயாரிப்பில் இறங்கிவிட்டதால் மனசு குறும்படம் என் மனதுக்குள் வரவே இல்லை.

போனவாரம் ஹார்டு டிஸ்க்கை தூசி தட்டிக் கொண்டிருந்தபோது மனசு மீண்டும் பூக்க ஆரம்பித்தது. யோசிக்காமல் பட்டென்று அடுத்த அரைமணியில் யுடியூபில் ஏற்றிவிட்டேன். தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வெளியான ஒரே குறும்படம் இதுவாகத்தான் இருக்கும்.

படத்தை பார்த்த பலருக்கு கார்க்கியின் நடிப்பு பிடித்திருக்கிறது. கேபிள் ஏற்கனவே இயக்குனர் ஆகிவிட்டார். எனவே தமிழ் திரையுலகின் அடுத்த பிரபலங்களை இப்போதே இந்தக் குறும்படத்தில் பார்த்து இரசியுங்கள்.