Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Monday, February 14, 2011

இதுதான் காதல் என்பதா?


நான் ஓய்வெடுக்கப் போவது என் வீட்டு காலிங் பெல்லிற்கு எப்படியோ தெரிந்துவிடும். இன்றும் அப்படித்தான். எழுந்து வர்றீயா இல்லையா என்பது போல தொடர் டிர்ர்ர்ரிங்.. கடுப்புடன் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தபோது ஒரு இளம்பெண்ணும் ஆணும்.

”சார் ஒரு நிமிஷம்” என்றாள் அவள்.
 ”எனக்கு எதுவும் வேண்டாம்மா”, என்று ஒரே வாக்கியத்தில் அவளை துரத்தப் பார்த்தேன்.
”சார். . . நான் சென்சஸ் எடுக்க வந்திருக்கேன்”, என்றாள். பட்டென என் மூடு மாறியது. படி இறங்கி வந்தேன்.

”ஓ . . . மன்னிக்கணும். நான் யாரோ சேல்ஸ் கேர்ள் என நினைத்துவிட்டேன்”
”பரவாயில்ல சார்.. ஒரு சேர் கொடுங்க சார்”, அவளிடம் பல நாள் பழகிய பெண்ணைப் போல, புன்னகை கலந்த இயல்பு.

சேரை எடுத்துப் போட்டு விட்டு, ”தண்ணீர் வேண்டுமா?” என்றேன்.
”வேண்டாம் சார். ஆனால் வேணுமான்னு கேட்டதுக்கு ரொம்ப நன்றி சார்”, இம்முறை அந்த ஆண் பேசினார். அவரது குரலும் என்னை உடனே நண்பனாகு என்றது. என்னை அறியாமல் ஒரு புன்னகை பிறக்க, அவர் அப்பெண்ணிடமிருந்து சில தாள்களை வாங்கிக் கொண்டு, ”நான் எதிர் வீட்டுக்குப் போய் வேலையை முடிக்கறேன்”, என்றபடி சென்றுவிட்டார்.
 
”சார் உங்க பேரு”, என்றாள் அப் பெண்.
சொன்னேன்.
”பிறந்த தேதி” , என்றாள்.
சொன்னேன்.
தொடர்ந்து அவள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
”அவ்வளவுதான் சார். இந்த இடத்துல உங்க பேர் எழுதி கையெழுத்துப் போடுங்க”, என்று கூறியபோது, அந்த ஆண் உள்ளே நுழைந்தார். கையில் தண்ணீர் பாட்டில்.

”இவங்க வெளியில தண்ணி குடிக்க மாட்டாங்க சார், அதான் கடையில போய் வாங்கிட்டு வந்தேன்”, என்றவர் அந்தப் பெண்ணைப் பார்த்து ”இந்த பிஸ்கெட்டையும் கொஞ்சம் சாப்பிட்டா தெம்பா இருக்கும்”, என்றார்.
உடன் வேலைசெய்யும் பெண்ணின் மேல் இவ்வளவு கரிசனமா? என்ற எண்ணம் எழுந்த போதே,
”சார் இவங்க என் கணவர்”, என்றாள் அப்பெண்.
எனக்குள் பட்டென ஒரு ஆச்சரியம் பூத்தது.

”நீங்க ரெண்டு பேருமே டீச்சர்ஸா?”
”இல்ல சார். நான் மட்டும்தான் டீச்சர். பாரதி வித்யாலயாவில ஒர்க் பண்றேன். இவரு ஆட்டோ ஓட்டறார்.”
”பாவம் சார் இது. தினம் 7 மணிக்கெல்லாம் சென்சஸ் எடுக்க கிளம்பிடுது. சரியா சாப்பிடறது கூட இல்ல. வெயில்ல சுத்துது. நாலு நாளா பாக்கறதுக்கே மனசு கேட்கல சார். அதான் இன்னைக்கு ஆட்டோ ஓட்டறத விட்டுட்டு, நானும் கூடவே வந்துட்டேன்.”
”கூடவே நீங்களே சென்சஸ் எடுக்கறதெல்லாம் இருக்கட்டும். ஆனா அதுக்கு பணம் கிடைக்காதே, ஆட்டோ வருமானமும் போயிடுமே”
”அட போனா போகுது சார். பணம் யாருக்கு சார் வேணும். என்னை நம்பி வந்த பொண்ணு, என் முன்னாடி கஷ்டப் படாம இருந்தால், எனக்கு அதுவே போதும். பாருங்க வெயில்ல சுத்தி எவ்வளவு கருத்துடுச்சு”, குரலில் அப்படியொரு வாஞ்சை!
அதைக் கேட்ட அடுத்த வினாடி மளுக்கென்று ஒரு விசும்பல். அந்தப் பெண்ணின் கண்களில் ஈரம்.
”ஏய்.. நீ ஏம்மா அழற?”, என்றபடி அவர் அவளை அணைத்துக் கொள்ள, அவரின் கண்களில் இருந்தும் அடங்கமாட்டாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.
உலகமே காதலர் தினத்தை வாழ்த்து அட்டைகளிலும், அர்த்தமற்ற சேட்டைகளிலும் கொண்டாடிக் கொண்டிருக்க, இங்கே இரு அன்பான ஜீவன்கள் காதலர் தினத்துக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!”
 என் கண்களிலும் ஈரம் கோர்க்கிறதோ...! இருக்கட்டும்!
அனைவருக்கும் இந்த தம்பதியினரின் சார்பாக, காதலர் தின வாழ்த்துகள்!

புகைப்படம் - ஜெயராஜ் பாண்டியன்.

Thursday, January 13, 2011

தூசி தட்டப்பட்ட மனது - சிறு கதை

என்னப்பா எல்லாம் சுத்தமா க்ளீன் பண்ணியாச்சா?
”ஆச்சு சார்... ரெண்டு ஆள் வேலை.. நான் ஒருத்தனே பார்த்துட்டேன்”
”வேலையே இல்லன்னாலும் இப்படித்தான் சொல்லுவீங்க. ஒரு நிமிஷம் நில்லு”, அவனை காக்க வைத்துவிட்டு, வீடு முழுக்க வலம் வந்தேன்.

குறிப்பாக எனது படுக்கை அறை. மேசையில் நான்கு 100 ரூபாய் தாள்கள் இருந்தன. திடீரென சின்ன சந்தேகம், 500 ரூபாய் வைத்திருந்தேனா, 400 ரூபாய் வைத்திருந்தேனா..? 100 ரூபாயை எடுத்திருப்பானோ.. புதிதாக முளைத்த சந்தேகத்துடன் வெளியே வந்தேன்.


”சார் ரெண்டு பஸ் பிடிச்சு பெரம்பூர் போகணும்”
”இருப்பா அவசரப்படுத்தினா எப்படி.. இந்தா”, கொடுக்கும்போது வேண்டும் என்றே 100 ரூபாயை பிடித்துக் கொண்டு கொடுத்தேன்.

”ரொம்ப தாங்ஸ் சார்... ”,என்றவன் எண்ணிப் பார்த்துவிட்டு, ”சார் 100 ரூபாய் குறையுது சார்”, என்றான்.

”குறையுதா..”, என்றபடி போலி ஆச்சரியம் காட்டி, ”கரெக்டா எண்ணி வைச்சேனே..எப்படி குறையும்?”, என்றபடியே அவன் முகத்தை கவனித்தேன்.

”நல்லா தேடிப் பாருங்க சார்.. பாக்கெட் உள்ளேயே இருக்கும்”
”நான் பாக்கெட்லயே வைக்கலயே.. உள்ள டேபிள்லதான் வைச்சிருந்தேன்”
”டேபிள்லயா?” சட்டென அவன் குரலில் ஒரு பதற்றம் தொற்றியது.
”ஆமாம்.. நீ பணத்தை பார்த்தியா?”, அவன் திருடியிருப்பான் என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டேன்.
”பார்த்தேன் சார்.. ஆனா எவ்வளவு ரூபா இருந்ததுன்னு தெரியாது சார்.. ”
”நிஜமா உனக்கு எவ்வளவு இருந்ததுன்னு தெரியாது..?”
”நெசமாவே தெரியாது சார்..ஆனா..”
”என்ன ஆனா..”
”அது வந்து ...”, என்றபடி தலையை சொறிந்தான்.
”என்னப்பா தலையை சொறியற? ஏதாவது தப்பு செய்துட்டியா?”, என் குரலில் கடுமை ஏறியது.
”ஆமா சார்.. தப்புதான் செய்துட்டேன் சார்.”

சுள்ளென்று கோபம் தலைக்கு ஏற, போலீசுக்கு போன் போட்டுவிடலாமா என்று கை பரபரத்தது. பொறு பொறு என்று என்னை நானே அடக்கிக் கொண்டேன்.
”என்னை தப்பா நினைக்காதீங்க சார். டேபிள்ல அந்த பணத்துக்குப் பக்கத்துல ஒரு பைபிள் இருந்தது சார். புதுசா ஜிப் எல்லாம் போட்டு ரொம்ப அழகா இருந்தது. உங்கள கேட்காமலேயே ஒரு தடவை அதை எடுத்து வாசிச்சுட்டேன்.”

எதிர்பாராத இந்த பதிலால், ஒரே வினாடியில் கோபம் என்னவென்று தெரியாத ஒரு உணர்வாக மாறியது.

”சார் நீங்க எனக்கு மீதி 100 ரூபாய் தர வேண்டாம் சார். அதுக்குப் பதிலாக அந்த பைபிளை தருவீங்களா சார்”
அவன் குரலில் இருந்த பணிவும், நேர்மையும், மளுக் என்று என் கண்களில் கண்ணீர் வரவைத்தது.
”சே... இவனைப் போய் சந்தேகப் பட்டுவிட்டோமே..”

என் கண்ணீரை அவன் கவனிப்பதற்குள், மளமளவென்று உள்ளே சென்று பைபிளுடன் திரும்பி வந்தேன். ஒரு வருடத்திற்கு முன்பு கிறிஸ்துமஸ் திருநாளில் ஒரு நண்பர் பரிசளித்த பைபிள் அது. நான் கிறித்தவனாக இல்லாவிட்டாலும், பைபிளை வாசிப்பேனாக்கும் என்று ஜம்பமாக வாங்கி வைத்த பைபிள். கடவுளின் வார்த்தைகளை எல்லோராலும் வாசித்துவிட முடியாது என்று யாரோ சொன்னது ஞாபகத்தில் வந்தது. இந்த பைபிள் என்னிடம் இருப்பதை விட அவனிடம் இருப்பதே நியாயம் என்று தோன்றியது.

”இந்தாப்பா.. நீ விரும்பிக் கேட்ட பைபிள்”
”ரொம்ப தாங்ஸ் சார்”, என்றபடி பைபிளை திறந்து பார்த்துவிட்டு, ”சார் இதுக்குள்ள 400 ரூபாய்  இருக்கு சார்” என்றான்.
”வைச்சுக்கோப்பா, நான் தான் வைச்சேன். அது உனக்குத்தான். உன்னுடைய வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால நீ கேட்டதுக்கும் மேல தரணும்னு ஆசைப்படறேன்” என்றேன்.
”அடடா... எனக்கு வேண்டாம் சார். வேணாம்னு சொல்றேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க சார். எனக்கு என் கூலியை கொடுங்க சார் அது போதும்”, என்றபடி மீதி 100 ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டான்.

”நான் கேட்டவுடனே இந்த பைபிளை குடுத்துட்டீங்களே.. பெரிய மனசு சார் உங்களுக்கு. ரெண்டு நாளாவே இந்த மாதிரி ஜிப் வைச்ச பைபிள் கிடைச்சா நல்லா இருக்கும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன். கர்த்தர் உங்க மூலமா எனக்கு கொடுத்துட்டார். நீங்க நல்லா இருக்கணும் சார்.”

இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்.
யோவான் - 11வது அதிகாரம்.

பைபிளில் இருந்து அவன் வாசித்து முடிக்கும்போது, அவன் எனக்குள் இருக்கும் மனிதனையும், நான் அவனுக்குள் இருக்கும் மனிதனையும் உணர்ந்து, இருவருமே நெகிழ்ந்து போயிருந்தோம்.

Thursday, August 21, 2008

ஒரு வரி கதைகள் - மீண்டும்

ஒரே வாக்கியம். அதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக உருவிக்கொண்டே வந்தால் ஒரு கதை அல்லது சம்பவம் வரவேண்டும். முயற்சி செய்திருக்கிறேன். படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ். விடுங்க. அங்க தொடாதீங்க. கூச்சமா இருக்கு. வேண்டாங்க.
ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ். விடுங்க. அங்க தொடாதீங்க. கூச்சமா இருக்கு.
ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ். விடுங்க. அங்க தொடாதீங்க.
ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ். விடுங்க.
ம்ம்ம்மா... சுரேஷ் ப்ளீஸ்.
ம்ம்ம்மா... சுரேஷ்
ம்ம்ம்மா...

ஒரு வரி கதைகள்

பேய் கதை
தலைப்பு : இன்று காலை அவனை பார்த்தேன்
கதை : நேற்று அவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன்

நகைச்சுவை
தலைப்பு : ஒரு மாதத்திற்கு முன்னால் விஷம் குடித்தேன்.
கதை : தினம் தினம் மனைவியிடம் செத்து கொண்டிருக்கிறேன்

ரொமான்டிக் நகைச்சுவை
தலைப்பு : நான் கர்ப்பமாக இருக்கிறேன்.
கதை : யார் காரணமா இருக்கும்னு நினைக்கறே?

ஒரு வரியில் கதை எழுதுவது சவால். இது எல்லாமே ஆங்கிலத் தழுவல்தான். ஆனாலும் 10 வினாடி விளம்பர படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது போல மூளையைக் கசக்கி எழுதுகிற இந்த த்ரில் பிடித்திருக்கிறது.

நீங்களும் முயற்சிக்கலாமே?