Showing posts with label திருவெம்பாவை. Show all posts
Showing posts with label திருவெம்பாவை. Show all posts

Monday, December 21, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 4,5

வாழ்க வளமுடன்!
தமிழின் அமுத வரி எடுத்தேன் ..
திருவெம்பாவை சொல்ல...

இந்த வரிகளை எழுதித்தந்தவள் ஃபேஸ்புக் தங்கை அமுதா. திருவெம்பாவை பற்றி எழுதும்போது,  நமீதாக்களை பற்றிக் குறிப்பிடாமல் பக்தியோடு எழுதுங்கள், என்று செல்லமாக அதட்டி மேற்கண்ட வரிகளைக் கொடுத்தாள். அதிலிருந்து நான் தொடரவேண்டுமாம். 3 நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த எழுத்து கூட வரமாட்டேன்கிறது.

வெள்ளத்தில் ஏற்படும் சுழி, மெதுவாகத் துவங்கி, துரிதமாக பெருகி, படு குழியாக மாறி, எதையும் உள்ளுக்குள்ளே ஆழ்த்திவிடும். அந்தச் சுழி போன்ற மயக்கத்தில், (நமீதாக்களையும், தமன்னாக்களையும் இரசித்துக்கொண்டு) செல்லும் திசை தெரியாது (ஜொள்ளின்)ஆழத்தில் சிக்கும் (என்னைப் போன்ற ஜீவராசிகளின்) உயிர்களை உணர்வூட்டி, தட்டி எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" (சாமி கும்பிடும்போது, சினிமா நடிகை எதுக்குடா ராஸ்கல்) என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவதுதான் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

ஸ்ஸ்ஸ் அப்பா, உருப்படியா ஒரு வரி எழுதலாம்னு பார்த்தா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .

மார்கழி மாதத்தில் நான் மட்டும்தான் 8 மணி போர்வைக்குள் பதுங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். அந்தக்காலத்திலேயே இறைவனை வழிபடவேண்டிய சில பெண்களே சுணக்கமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்பாடல்களில் வரும் பெண்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள்.(உய் உய்னு சுத்த தமிழ்ல கலக்கறனா?) அந்தப் பெண்கள் என்ன செய்கிறார்கள் ? ஒன்று கூடுகிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லாதவன், அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடுகிறார்கள். பிறகு இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன (என்னைப் போல பெட்ஷீட்டுக்குள் அலாரத்தை அணைத்துவிட்டு அரைமயகத்திலிருக்கும்) அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவிக்கிறார்கள்(என் மனைவி எனக்கு காபி தருவது போல), அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானை (மார்கழி மாசத்துலயாவது சாமியைக் கும்பிடுங்க என்று என் வீட்டில் அர்ச்சிப்பது போல) பாடத் தேற்றுகின்றனர்.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர், இறை மணக்க, தமிழ் மணக்க, உளம் மணக்க திருவண்ணாமலை தரிசனத்தின்போது எழுதியபாடல்கள்.
 நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று (தங்கை அமுதா என்னை, அண்ணா நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இன்பமாக இம்சிப்பதைப்போல) அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.

பெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே.

"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே"

(ஹையா... எழுதி முடிச்சுட்ட்ட்ட்ட்டேன். மைடியர் தங்கை அமுதா . . . எப்ப்பூடி? இந்த சேட்டைக்காரனும் பக்தி கலந்து எழுதுவேன்ல . .)

இனி  திருவெம்பாவை


இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

 "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

    "அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

ஆறு - வழி.

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !
பள்ளி எழுந்தருள்க !

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

இன்னும் ஒரு திருவெம்பாவை



இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

"இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !

புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.

Wednesday, December 16, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 3

இன்னைக்கு மார்கழி முதல் நாள்!
காபி போட்டுத் தர்றேன், கோலம் போடும் போது துணைக்கு நில்லுங்க!, இந்த “ங்க” விலிருந்து சொன்னது யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முதலில் நான் மட்டும் வாசலுக்கு வந்தேன். இன்னும் விடியாத முன் காலையில் சில தினசரி வாக்கர்கள் கான்வாஸ் சரசரக்க கடந்தார்கள். ”ஷ்செல்வம் குட்ஷ்மார்னிங்”, மூச்சிறைக்க விஷ் பண்ணிச் சென்ற அந்த மாமியின் பெயர் எனக்குத் தெரியாது. ”பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ” கையில் FMஆ iPODஆ எனத் தெரியவில்லை. அலறவிட்டபடி நடந்த அந்த டி-சட்டையரை கடந்த ஒரு மாதமாகப் பார்க்கிறேன்.
”காபி ரெடி!”, குரல் கேட்டுத் திரும்பும்போது கையில் யோகா கிட்டுடன் அந்த நமீதா நங்கை தெரிந்தாள். நின்று பார்த்துவிட்டு போகலாமா?

”என்னண்ணே, இன்னைக்கு காலையிலேயே . . .”, பக்கத்து வீட்டு காய்கறி எக்ஸ்போர்டர். அவருடைய அண்ணேக்கு திரும்பியதில் நமீதா நங்கை கடந்துவிட்டாள். நானும் காபிக்கு உள் புகுந்தேன். பின்னாடியே பொத்தென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வந்து விழுந்தது. காபியையும், இந்தியாவையும் கையில் ஏந்தியபோது . . . கடைசி பக்கத்தில் ஜெனிலியாவும், முதல் பக்கத்தில் இலியானாவும் சிரித்தார்கள். சுவைத்தேன் . . . காபியை.

கேட்டில் ”வள்” என ஒரு குரலும், ”டாய்” என பதில் குரலும் கேட்டது. தினமும் அந்தநாய் அந்த டிராக்சூட்டுக்கார பையரை(னை?) இழுத்துக் கொண்டு வாக்கிங் போகும். என்றாவது மிஸ்டர்.வள் எங்கள் வீட்டுச்சுவரின்பக்கம் காலை உயர்த்தும்போது மட்டும் டி.சூ பையரின் கண்கள் அசடு வழிய என்னை பார்க்கும். இன்று எங்கள் கண்கள் சந்திக்கவில்லை.

சீக்கிரம் உள்ள வாங்க . . . உள்ளதான இருக்கேன் என்று சொல்வதற்குள், குரல்வந்த பாத்ரூம் வாசலை அடைந்திருந்தேன். குழாய் உடைத்துக்கொண்டு தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. உடனே சரி பண்ணுங்க . . . நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் சரி செய்துவிட்டு நமிரும்போது, வாசலில் கோலம் முடிந்திருந்தது. மார்கழியின் முதல்நாள் இப்படித்தான் விடிந்தது.

இனி திருவெம்பாவை!



இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்துகொள்ளலாம்!

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

    "பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

    விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 2

தமிழ் தெரியாத சாயாஜி ஷிண்டே பாரதியாரா நடிச்சார். அதே மாதிரி தமிழ் சரியா எழுதத் தெரியாத ஒரு டாக்டர் எனக்கு திருவெம்பாவையை நெட்டில தேடித் தந்தார். டாக்டர்கள் ஏன் எப்பவுமே நமக்குப் புரியாத மாதிரியே எழுதறாங்க அப்படின்ற சந்தேகம் அரை டிரவுசர் காலத்துல இருந்து, பெர்முடாஸ் (இதுவும் அதேதான்) காலம் வரை இருக்கு. ஒரு வேளை அவங்களுக்கு ஸ்பெல்லிங் தெரியாதோ?

சரி மருத்துவரை விட்டுட்டு திருவெம்பாவைக்கு வருவோம்.
வரிகளை அர்த்தங்களுடன் இங்கு தந்திருக்கிறேன்.
நன்றி டாக்டர்! (டாக்டரை வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் டைட்டில் ஸ்டைலில் அலறியபடி வாசிக்கவும்)

எனது நண்பர் விவேக் நாராயண் அபார திறமைசாலி. இதுபோல கிளாசிகல் டச்சுடன் இசையமைக்கச் சொன்னால் நொடியில் செய்துவிடுவார். இந்தப் பாடலும் அப்படி துரிதமாக உருவானதுதான். பிழைகள் இருக்கலாம். இருந்தால் சுட்டிக்காட்டலாம்!

இனி திருவெம்பாவை.


டவுன்லோடு செய்ய இங்கே சொடுக்குங்கள்!

கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;
சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி
மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல
செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் ! திருப்பெருந்துறை
வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்;
ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும்,
(விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

Sunday, December 13, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 1

கோலமும், குளிரும், இசையும் இல்லாமல் மார்கழி மாதமா? ஆழ்வார் திருநகரிலுள்ள எனது வீட்டில் மார்கழி வந்தால் சாணம் தெளித்து, வண்ணப் பொடிக் கோலம் போட்டு பூசணிப்பூ வைக்கிற பழக்கம் இன்றும் சில கால மாற்றங்களுடன் இருக்கிறது. வண்ணப் பொடிகள் ஜிகினா பொடிகளுடன் அதிகரித்து, பூசணிப்பூ எப்போதாவது தலைகாட்டுகிறது. ஆனால் சாணத்தைக் காணவில்லை. பனிகூட குறைந்துவிட்டது. கால மாற்றத்தில் மார்கழிக் காலையில் திருப்பள்ளி எழுச்சிக்குப் பதிலாக அல்லது கூடவே சினிமாக்குத்துகள் கேட்கும் அபஸ்வரங்களும் நடந்து கொண்டிருக்கிறது.

நண்பர் விவேக் நாராயண் இன்று வந்திருந்தார். அவருடைய குருஜி திரு.எட்டியப்பன் ராஜாவின் உத்தரவின் பேரில் திருப்பள்ளி எழுச்சியை பாடி ரெகார்ட் செய்திருப்பதாக ஒரு பென் டிரைவை கொடுத்தார். ஒரே நாளில் வீட்டிலேயே நாம் சாட்டிங் செய்யும் சாதாரண மைக்கில் பாடப்பட்டு ரெக்கார்ட் செய்யப்பட்டது.

உங்களுக்காக இதோ மார்கழி ஸ்பெஷல் திருப்பள்ளி எழுச்சி - 01

போற்றிய என் வாழ் முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின்திருமுகத்து எமக்கு அருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே,
 ஏற்றுயர்கொடி  உடையாய், எனை உடையாய்,
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய்
அகன்றது உதயம், நின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன, இவை ஓர்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே,
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே,
அலைகடலே, பள்ளி எழுந்தருளாயே.



இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்
அடுத்தத்தடுத்த பாடல்களை, நாளையும், அதைத் தொடர்ந்தும் இணைக்கிறேன்.

இது ஒரு scratch. பிழைகள் இருக்கலாம். நீங்கள் சுட்டிக்காட்டலாம்.