Showing posts with label brazil. Show all posts
Showing posts with label brazil. Show all posts

Sunday, July 13, 2014

Good bye Brazil. I miss you!

உலகின் மிகப்பெரிய ஓட்டை பிரேசிலின் கோலுக்கு முன்புதான் இருக்கிறது. எங்கிருந்து யார் அடித்தாலும் ஒரு கோல் விழுந்துவிடுகிறது. இவ்வளவு பெரிய ஓட்டையை பூசி மெழுக குறைந்தபட்சம் இரண்டு உலகக்கோப்பைகள் தேவைப்படும்.

உலகக்கோப்பை முடிந்ததும் அழுத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் ஊழல் பிரச்சனைகள் விசுவரூபமெடுக்கும்போது, பிரேசிலின் கால்பந்து இன்னமும் நசுங்கிப்போகும்.

வழக்கமாக பிரேசிலின் ஆட்டத்தில் ஒரு ஹார்மனி இருக்கும். வீரர்களின் ஓட்டத்திலும் பந்தை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதிலும் ஒரு நடனத்தின் நளினம் இருக்கும். தற்போதைய பிரேசில் அணியிடம் அந்த ஒத்திசைவு மிஸ்ஸிங்.

நெய்மரின் கால்கள் ஒரு மேஜிக்தான். ஆனால் அது அவரின் தனித்துவம். ஒரு குழுவாக பிரேசில் சாதாரண அணியாகத்தான் விளையாடியது. எப்படி அட்டாக் செய்வது என்பது பற்றிய தீர்மானமான வியூகங்கள் இல்லை. பந்தை நெய்மரிடம் கொடுத்தால் போதும். கோலடிப்பது பற்றி அவர் கவனித்துக்கொள்வார் என்பதே அவர்களுடைய வெளிப்படையான வியூகமாக இருந்தது. அதனால்தான் எதிரணியினர் அனைவரும் ஒருவர் விடாமல் நெய்மரை சுற்றி வளைத்து வேட்டையாடிவிட்டார்கள்.

அட்டாக் இப்படி என்றால் தடுப்பாட்டத்திற்கென வியூகம் எதுவுமே இல்லை. கோலுக்கு இடமோ வலமோ பந்து வந்தால் திக்கித் திணறி சமாளிக்கிறார்கள். கோலுக்கு மத்தியில் பந்து விழுந்துவிட்டால், பதற்றமாகி கோல்கீப்பரை அம்போவென்று தவிக்கவிட்டுவிட்டு தடுப்பாட்டவீரர்கள் எல்லாம் எங்கேயோ காணாமல் போய்விடுகிறார்கள். ஜெர்மனி இந்த பலவீனத்தைத்தான் துல்லியமாக பயன்படுத்தி 7 கோல்களை அடித்தது. நெதர்லாந்தும் கிட்டத்தட்ட ஜெர்னியைப்போல பிரேசிலின் பலவீனத்தை குறிவைத்து அடித்து நொறுக்கிவிட்டது.

இவ்வளவு பலவீனமான அணியை வைத்துக்கொண்டு டாப் - 4 அணிகளில் ஒன்றாக வந்ததே அதிர்ஷ்டம்தான். என் கண்முன்னாலேயே பிரேசில் என்ற அற்புதமான அணி சொந்த மண்ணிலேயே காணாமல் போய்விட்டது. அதை கண்டுபிடித்துக்கொடுக்கப்போவது யார்? இந்தக் கேள்வியில்தான் பிரேசிலின் அணியின் எதிர்காலம் உள்ளது.

கிரிக்கெட்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீழ்ந்தது போல தற்போது பிரேசிலின் கால்பந்தாட்ட அணியும் வீழ்ந்துகிடக்கிறது. நெய்மர் பிரேசிலின் கடைசி சூப்பர்ஸ்டாராக இருக்கலாம். மன்னாதிமன்னர்கள் வீழ்வதைப்பார்க்கும்போது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது... காலமும் வெற்றியும் மன்னர்களுக்காக காத்திருப்பதில்லை.

Bye! Bye! Brazil. I miss you!

Monday, June 9, 2014

உலகக்கோப்பையின் முதல் கோலை அடிக்கப்போவது ஒரு செயற்கைக்கால்

உலகக்கோப்பை என்றாலே ஸ்பெஷல்தான். இந்த வருடக் கோப்பை இன்னும் ஸ்பெஷல். வழக்கமாக யாராவது பிரபலம் கால்பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைப்பார். ஆனால் இந்த வருடம் செயற்கைக் கால்கள் அணிந்த ஒரு மாற்றுத்திறனாளி பந்தை உதைக்கப்போகிறார்.

குறிப்பிடும்படியாக இது அவ்வளவு ஸ்பெஷலாக இல்லையே எனத் தோன்றலாம். ஆனால் அந்தக் கால்களில் பொருத்தப்பட்டுள்ள BMI என்ற தொழில்நுட்பம் பற்றி அறிந்தால் அசந்துபோவோம். BMI என்பது Brain Mind Interface என்பதின் சுருக்கம்.

வழக்கமாக செயற்கை உடல்பாகங்கள் ஒரு மரக்கட்டை போல இருக்கும். அந்த பாகங்களால் தொடுதல், படுதல், உரசுதல் போல எதையும் உணர முடியாது. ஆனால் BMI தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட கால்களால் பந்தை உதைத்ததும் பந்தை உதைத்த உணர்வை அந்தக் கால்களை அணிந்திருக்கும் நபர் உணர்வார்.

நியூரோ சயின்ஸில் இது ஒரு மகத்தான சாதனை. இது இன்னும் விரிவுபடுத்தப்படுமானால் எதிர்காலத்தில் செயற்கை பாகங்களுக்கும், இயற்கை பாகங்களுக்கும் உள்ள வித்தியாசம் குறையும். பந்தை உதைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் மூளையில் ஒரு அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வை மூளையில் பதிக்கப்பட்டுள்ள சிலிக்கான் சில்லுகள் ஒரு கட்டளையாக மாற்றும். அந்தக் கட்டளைகள் மின் அலையாக மாற்றப்பட்டு ஒயர்லெஸ் ரிசீவர் பொருத்தப்பட்டுள்ள கால்களுக்கு அனுப்பும். உடனே பாட்டரியில் இயங்கும் கால்கள் அந்தக் கட்டளையை ஏற்றி பந்தை உதைக்கும். பந்தை உதைக்கும்போது கால்களில் பொருத்தப்பட்டுள்ள Infra Red - சிவப்புக் கதிர்கள் சில மோட்டர்களை இயக்கி அந்த அதிர்வுகளை மூளைக்கு திரும்ப அனுப்புகின்றன. அது ஒருவிதமான தொடு உணர்வை மூளைக்குத் தருகின்றன. எனவே பந்தை உதைத்த உணர்வை அந்த மாற்றுத்திறனாளி பெறுவார்.


பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பையில் ஒரு செயற்கைக்கால் பந்தை உதைக்கும். அது BMI தொழில்நுட்பத்துக்கு மேலும் ஒரு பாய்ச்சலைத் தந்து, செயற்கைக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்கும். மூளைக்கு கட்டுப்படும் ரோபோக்கள் உலகை உருவாக்கும்.

GOAL என்று உலகமே அதிரும்போது அது இந்த சாதனைக்கும் சேர்த்த கொண்டாட்டமாக இருக்கும்.