Showing posts with label modi. Show all posts
Showing posts with label modi. Show all posts

Saturday, June 23, 2018

காலத்தின் தேவை கிராமங்கள்தான் - எட்டு வழிச்சாலைகள் அல்ல

எல்லா விவாதங்களும் மோடி ஆதரவு (அ) மோடி எதிர்ப்பு என்கிற கண்ணாடியை மாட்டிக் கொண்டு எதிர்கொள்ளப்படுகிறது. தொலைக்காட்சி விவாதங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை இந்த கண்ணாடிதான் உண்மைகளை திரிக்கிறது.
ஆனால் இந்தியாவும், அதனுடைய ஆன்மாவான கிராமங்களும், விவசாய வாழ்க்கை முறையும், எளிய மக்களும் மோடிக்கு முன்பும் இருந்தார்கள், மோடிக்குப் பின்பும் இருப்பார்கள்.
எனவே தற்போது மோடிக்குப் பதில் மகாத்மா காந்தியே இந்தியப் பிரதமராக இருந்தாலும், எட்டு வழிச்சாலைகள் திணிக்கப்படும்போது நான் எனது சந்தேகங்களைக் கேட்பேன், அதுகுறித்து விமர்சனங்களை எழுப்புவேன்.
என்னைப் பொறுத்தவரையில் விவசாயமும், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும் திட்டங்கள் தான் காலத்தின் தேவை. வளர்ச்சி என்கிற பெயரில் கான்க்ரீட் காடுகளை உருவாக்குவதை விட இருக்கிற காடுகளை பாதுகாப்பதும் வளர்ப்பதும்தான் உடனடித் தேவை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்.
இந்தியா இயல்பாகவே பசுமையான விவசாய நாடு. அதை அமெரிக்கா போல சாலைகளும், கட்டிடங்களும் நிறைந்த நரகமாக மாற்றிவிட்டு, பிறகு மொட்டை மாடியில் பயிர் செய்கிறேன் என்பதும், பூமியிலிருந்து தப்பித்துப் போய் செவ்வாய் கிரகத்தில் குடியமர்வேன் என்பதும் அபத்தம்.
அமீபா முதல் மனிதன் வரை வாழ்க்கை என்பது சுத்தமான நீரிலும், நிலத்திலும், மாசுபடாத காற்றிலும் ஆகாயத்திலும்தான் இருக்கிறது. கான்க்ரீட்டுகளில் அல்ல.
நம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு வளமாக இருக்க வேண்டுமென்றால், இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான திட்டங்கள் எந்த அரசாங்கத்திடம் இருந்தாலும் சொல்லுங்கள். காவல் துறையின் அதட்டல்கள் இல்லாமல் மக்களே இரு கரம் கூப்பி வரவேற்பார்கள்.

Monday, July 14, 2014

கேப்போம்ல : மோடி சர்க்காருக்கு கோப்புகளை கொளுத்துவதில் அவசரம் ஏன்?

குவிந்திருக்கும் கோப்புகளை தூசி தட்டி அடுக்கி வைப்பது நல்லதுதான். ஆனால் அவற்றை அழிப்பதற்கு முன்பு வீட்டிலிருக்கும் அனைவரையும் இது தேவையாக என கேட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் இது போல எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி சர்க்கார் பழையதை ஒழிப்பதாகச் சொல்லி போகி கொண்டாடியிருக்கிறது.

ஒரு நாடு தொடர்புடைய எந்த கோப்பும் மோடிக்கு மட்டும் சொந்தமல்ல. அது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்புடையது. சொல்லப்போனால் அதை வெறும் கோப்பு என ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் அவற்றில் உள்ளவை நாட்டின் வரலாற்றுப்பதிவுகள். எனவே கோப்புகளை அழிப்பது என்பதும், வரலாற்றை அழிப்பது என்பதும் ஒன்றுதான். இது மோடி அரசுக்கு தெரியாதது அல்ல.

எனவே பழைய கோப்புகளை அழிப்பது தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுத்ததும்,  அவசரம் அவசரமாக அழித்தபின் அறிவித்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது. BIG DATA என யார் யாரோ செல்ஃபி எடுத்துக்கொள்வதையெல்லாம் இந்த உலகம் ஆடியோ, வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதற்கான டெக்னாலஜியும், வாய்ப்பும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது அழிப்பதற்கு முன் அவற்றை டிஜிட்டலாக பிரதி எடுக்க ஏன் மோடி சர்க்கார் முயற்சிக்கவில்லை?
யாரையும் கேட்காமல் பழைய கோப்புகளை அழிக்க முடிவெடுத்தது ஏன்?
எந்தெந்த கோப்புகள் அழிக்கப்பட்டன என்பதற்கு பட்டியல் உள்ளதா?
அந்தக் கோப்புகள் இருப்பதால் இப்போதைய இந்திய அரசுக்கு என்ன பிரச்சனை?
அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் அதற்கு அழிப்பு ஒன்றுதான் தீர்வு என்ற முடிவை பரிந்துரைத்தது யார்?
இதற்காக யார் யாரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது?

தற்போதைய மோடி அரசுக்கு ஒரு விண்ணப்பம். அடுத்த முறை கோப்புகள் எதையாவது அழிக்க முடிவெடுத்தால் மக்களுக்கு ஒரு கடுதாசி போடுங்கள். எத்தனையோ மில்லியன் இந்தியர்கள் அவற்றை பத்திரப்படுத்தி வைக்கத் தயாராக இருக்கிறோம். கேட்டுக்கொண்டால் நாங்களே கூட அவற்றை டிஜிட்டலாக மாற்றித்தருகிறோம்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் மோடி சர்க்கார் இந்திய வரலாற்றின் சில பக்கங்களை அழித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்த வரலாறு முக்கியமா? இல்லையா என்பதை தனியாக விவாதிக்கலாம்.

இப்போதைக்கு ஒரே ஒரு எளிய கேள்வி. அவசரம் அவசரமாக நாட்டு மக்களுக்குத் தெரியாமல் அழிக்கவேண்டிய அவசரம் என்ன?

#கேப்போம்ல

Tuesday, July 1, 2014

புகைப்படங்களால் மூளைச்சலவை செய்யும் மோடியும், ஜெயலலிதாவும்

இமெயில் கண்டுபிடித்த தமிழர் சிவா அய்யாதுரை! சகஜமாக பிரதமரின் தோளில் கை போட்டபடி போஸ். சூப்பர்! 

தோளில் கை போட அனுமதித்தது பெருந்தன்மை என்றால் அதனை பிரசுரிக்க அனுமதித்தது அதனினும் பெருந்தன்மை. இந்த ஃபோட்டோ இது போன்ற எண்ணத்தைதான் உண்டாக்குகிறது. மோடியின் மேல் ஒரு இணக்கமான எண்ணத்தை உருவாக்குகிறது. மோடி என்றாலே டெர்ரர் என்ற பிம்பத்தை இது போன்ற ஃபோட்டோக்கள் நிச்சயம் குறைக்கும். ஒரு புகைப்படமோ, வீடியோவோ எந்த வகையான பிம்பத்தை உருவாக்கும் என்கிற சைக்காலஜியை, மற்ற எவரையும் விட மிக நன்றாக உணர்ந்தவர் மோடி. பிரதமர் ஆனபின் அவர் தற்போது ஒரு சாஃப்ட் இமேஜை உருவாக்க விரும்புகிறார் போலிருக்கிறது. எனது யூகம் சரியாக இருக்குமானால் இனி தொடர்ச்சியாக இது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகும்.

மீடியாக்களின் வழியாக தன்னைப்பற்றிய பிம்பத்தை பரப்புவதில் மோடியை விட ஜெயலலிதா செம ஷார்ப். எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தின்போது அவரை இழுத்துத்தள்ளிய புகைப்படமும் வீடியோவும் அவருக்கு அரசில் களம் அமைத்துத்தந்தது. அவருடைய இன்றைய நிலைக்கு அது ஒரு அடித்தளம். அதை உணர்ந்து மீடியாக்களின் வழியாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் மிக அருமையாக திட்டமிடுகிறார். பிரச்சார மேடைகளில் அவர் நிற்பதும், பேசுவதும், ஆவேசமாக சவால்விடுவதும் டிவியிலும், புகைப்படத்திலும் தான் எப்படித் தோன்றுவோம் என்பதை உணர்ந்து வெளிப்படுத்தும் கச்சிதமான உடல் மொழிகள். 


அரசு நிமித்தமாக அவர் பலரை சந்திக்கிறார். அந்த புகைப்படங்களில் எல்லாம் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை கவனிக்கலாம். தொடர்ச்சியாக எல்லா ஃபோட்டோக்களையும் கவனித்துப் பார்த்தால் இது புரியும். எல்லா ஃபோட்டோக்களிலும் ஜெயலலிதா நிமிர்ந்து நிற்பார். அவரை சந்திக்கிறவர்கள் வணக்கம் சொல்லும்போதோ, பூங்கொத்தோ ஏதோ கொடுக்கும்போதோ இயல்பாக குனிகிற தருணத்தில் க்ளிக் செய்யப்படுகிற புகைப்படங்களை மட்டுமே பிரசுரிப்பார்கள். அருகில் இருப்பவர் நிமிர்ந்து நிற்பது போன்ற புகைப்படங்களை மறந்தும் பிரசுரிக்க மாட்டார்கள். அப்படி வந்திருந்தால் அவை வெகு அபூர்வம். 

இந்த வகை ஃபோட்டோக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பிரசுரிப்பதில் முதல்வர் விளம்பரப் பிரிவு கவனம் பிசகியதே இல்லை. இது ஒரு திட்டமிட்ட பிரெயின் வாஷ். யாராக இருந்தாலும் ஜெயலலிதாவை சந்திக்கச் செல்லும்போதே தலைகுனிந்துதான் செல்ல முடியும் என்ற ஒரு பிம்பத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள். 

சரியாகச் சொல்வதாக இருந்தால், கே.கே.எஸ்.எஸ்.ஆர் தன் மனைவியுடன் ஜெயலலிதாவின் காலில் விழுவதாக ஒரு புகைப்படம் பலவருடங்களுக்கு முன் பிரசுரமானது. அதுதான் ஜெயலலிதாவின் காலில் விழும் கலாச்சாரத்திற்கும், மண்டியிடும் புகைப்பட கேலரிகளுக்கும் அச்சாரம். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஒரு முரட்டு அரசியல்வாதி. அவரே ஜெயலலிதாவின் காலில் மண்டியிடுகிறாரே. அப்படியானால் ஜெயலலிதாவால் யாரைவேண்டுமானாலும் வீழ்த்தமுடியும், தன் முன் மண்டியிடவைக்க முடியும் என்ற எண்ணத்தை அந்த புகைப்படம் ஏற்படுத்தியது. அந்த புகைப்படம் ஏற்படுத்திய ஃபியர் ஃபேக்டரை ஜெயலலிதா இன்று வரை துல்லியமாக கையாளுகிறார். 

அமெரிக்க பிரதமர்கள் மற்றவர்களை சந்திக்கும்போது இது போல திட்டமிட்டு புகைப்படங்களை பிரசுரிப்பதாகச் சொல்வார்கள். ஜெயலலிதா அதே ஸ்டைலைத்தான் பின்பற்றுகிறாரா எனத்தெரியவில்லை. ஆனால் அவரை சந்திப்பவர்கள் தொடர்பான புகைப்படங்களில் பணிவும் பயமும் வெளிப்படவேண்டும் என்பதில் மிகக் கவனமாக உள்ளார். அதில் வெற்றியும் பெறுகிறார் என்பது என் அனுமானம்.

மீடியாக்கள் வழியாக பிம்பங்களை உருவாக்கி போர் புரியும் வித்தையை இன்னும் பல அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் கற்பார்கள். அப்போது அரசியல் களம் மிகவும் க்ரியேட்டிவாக இருக்கும்.