Showing posts with label puthuyugam. Show all posts
Showing posts with label puthuyugam. Show all posts

Saturday, September 5, 2015

We Miss You BK

இந்த உலகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதை நாமே தெரிந்து கொள்கிறோம். ஆனால் அதே உலகம் நாம் பார்க்கிற கோணத்தில் இருந்து ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. இதனை நாம் அறிந்து புரிந்து கொள்வதற்கு ஒரு குருவை நமது வாழ்க்கையில் சந்திக்க வேண்டியதிருக்கிறது.

தொலைக்காட்சித் துறை என்பது இனி இப்படித்தான் இருக்கும். இதில் செய்வதற்கு இனி என்ன இருக்கிறது என்ற ஒரு சலிப்பான எண்ணம் வந்திருந்தது எனக்கு. ஆனால் இது வரை செய்தது எதுவுமே துவக்கம் மட்டுமே இனிமேல்தான் நிறைய செய்ய வேண்டியதிருக்கிறது என்று ஒரு புதிய கோணத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பால கைலாசம் என்கிற பிகே. அந்த வகையில் அவரே எனது குரு.

சாடிலைட், காமிரா, கேபிள், DTH என அனைத்து தொழில்நுட்பங்களையும் கடந்த மனித மனங்களை ஊடுருவும் உணர்வுபூர்வமான ஒரு தத்துவமாக தொலைக்காட்சித்துறையை நோக்குவதற்கு எனக்கு  கற்றுத்தந்தவர் அவரே. அவர் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்கு தேவைப்பட்ட அவகாசங்களும், உரையாடல்களும், வாதங்களும், மோதல்களும், புரிதல்களும், ஏமாற்றங்களும், சினங்களும், சீற்றங்களும், புன்னகைகளும் அபாரமானவை. முற்றிலும் அந்நியனாக, நல்ல நண்பனாக, சக பணியாளனாக, மாணவனாக, சில நேரம் ஒரு ஆசிரியனாகவும் அவருடன் பழக நேர்ந்த அந்தச் சில மாதங்கள் என் வாழ்க்கையின் உன்னதமான உணர்வுக் குவியல்கள். புதுப்புது எண்ணங்களால் நான் தினம்தோறும் புதியவனாகிக் கொண்டிருந்தேன்.

இன்று அவருடைய கனவு மட்டும் என்னுடனும், அவரைப் புரிந்து கொண்ட பலருடனும் ஒரு அக்னியாக உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்கிறது. என்றோ ஒரு நாள் மனிதம் போற்றும் ஒரு புதிய வெளிச்சம் இந்த தொலைக்காட்சி உலகில் ஒளிரும். அதற்கு அவரே காரணம்.

எங்கள் நண்பனே, குருவே நீங்கள் இறுதியாக பேசிய சில வார்த்தைகளுடன் உங்களுடைய தொலைபேசி எண் இன்னமும் என் அலைபேசியில் இருக்கிறது. உங்கள் குரல் இனி அதில் கேட்கப்போவதில்லை. ஆனால் உங்கள் குரலாக என்றேனும் ஒரு நாள் நான் ஒலிப்பேன்.

We Miss You BK! குருவே போற்றி!

Friday, February 20, 2015

இயக்குநர் வசந்தபாலனுடன் மனம் திரும்புதே!

மற்றவர்களுக்காக ஒரு நான்
எனக்காக ஒரு நான்
என இரண்டு ”நான்”களாகத்தான்
நம்மில் பலர் இருக்கிறோம்.

இரண்டு நான்களாக அல்லாமல் ஒற்றை நானாக இருப்பது மிகுந்த சிக்கலானது. நம்மைப்பற்றி நாமே சதா முரண்பட்டுக்கொண்டிருப்போம். ஆனாலும் வெகு சிலர் விரும்பி அப்படி ஒரு நிலையை ஏற்கிறார்கள். அவர்களைப் புரிந்து ஏற்கும் நண்பர்களையும், உறவினர்களையும் அடைகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இயக்குநர் வசந்தபாலன் என்பது என் கருத்து.

”மனம் திரும்புதே” நிகழ்ச்சிக்காக சந்தித்த சில நிமிடங்களைத்தவிர அவருடன் எனக்கு எந்த நேரடித்தொடர்பும் இல்லை. ஆனாலும் அவர் அப்படிப்பட்டவர், எதற்காகவும் தன்னை சமரசம் செய்து கொள்ளாத முழுமையான ”நான்” அவர். மனிதர்களிடம் மட்டுமல்ல, இயந்திரங்களிடம் கூட இதயங்களை எதிர்பார்க்கிற சிறந்த மனிதர் என்பது என் கருத்து. நேற்று மனம் திரும்புதே நிகழ்ச்சியில் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டார். தனது நண்பர் வரதன் பற்றி அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் மிகவும் நெகிழ்வானவை.

இந்த நிகழ்ச்சி தன்னை நெகிழ வைத்துவிட்டது என மனமார பாராட்டினார். இனி அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே கூட போகலாம். ஆனால் ஒரே ஒரு முறை அவருடைய இதயத்தை தொட்டுவிட்டேன். அதுவே எங்கள் நிகழ்ச்சிக்கும், எனக்கும் கிடைத்த வெற்றி. அவர் இன்றும் என்றென்றும் மனநிறைவோடு தொடர்ந்து இயங்கவும், இயக்கவும் வாழ்த்துகள்!

”மனம் திரும்புதே” நிகழ்ச்சி சனிக்கிழமை(21.02.2015) இரவு 9 மணிக்கு.

Monday, August 18, 2014

போயிட்டு வாங்க ஓய்! நீங்கள் கனவு கண்ட புதுயுகம் பிறக்கும்!


கனவுகள் எல்லோருக்கும் உண்டு.
அதற்கு வடிவங்கள் கொடுப்பவர் சிலர்.
அந்த வடிவத்தை மற்றவர்கள் மனதிலும் விதைப்பவர் மிகச் சிலர்.
அந்த மிகச் சிலர்களில் ஒருவர் பி.கே.

சாமான்ய மக்களின் பங்கேற்புக்காகவும், பங்களிப்புக்காகவும் மட்டும் ஒரு தொலைக்காட்சியை உருவாக்குவது அவரது கனவாக இருந்தது. நட்சத்திரங்கள் விரும்பினால் அவர்களும் ஒரு சாமான்யனாகவே அதில் இடம்பெற வேண்டும் என அவர் திட்டமிட்டார். அவர் திட்டம் நிறைவேற அவரைப்போலவே கனவுகளுடன் இருந்தவர்களை தேடித்தேடி சலித்தெடுத்தார். அவர்களில் நானும் ஒருவன்.

அவருடைய கனவு மட்டும் ஈடேறியிருந்தால் அகில உலகமும் வியந்து வரவேற்றிருக்கக்கூடிய புதிய தொலைக்காட்சி வடிவம் பிறந்திருக்கும்.

தனது கனவை அவர் எனக்கு முதன்முதலில் விவரித்தபோது பிரமித்துப்போனேன். கரகரப்பான குரலில் புன்னகையா, கடுமையா எனத்தெரியாத ஒரு பாவனையில் எனது யாதுமானவள் குறும்படத்தைப் பற்றி தன் கருத்துக்களை கூறியபடியே தனது விவரிப்பைத் துவக்கினார். மக்களை பார்க்கவைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதீர்கள். மக்கள் பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளையும், படங்களையும் தயாரிப்பதில் கவனம் செலுத்துங்கள் என்றார். ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பணிபுரிகிறோம் என்றில்லாமல் ஒரு அருமையான கனவுக்கு உயிர்கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தை அனைவரின் மனதிலும் ஓயாமல் பதியவைத்துக்கொண்டே இருந்தார்.

அதற்காக அவர் உருவாக்கிய அலுவலகச் சூழல் அலாதியானது. அங்கே உயர்வு, தாழ்வு கிடையாது. நீ பெரியவன் நான் பெரியவன் கிடையாது. ஆண், பெண் ஏற்ற இறக்கங்கள் கிடையாது.

ஏராளமான இளைஞர்கள் அனுபவசாலிகளுடன் இணைந்து கற்றுக்கொண்டே பணிபுரியும் அபாரமான முறையை உருவாக்கினார்.

நிகழ்ச்சித் தயாரிப்பு என்பதைத்தாண்டி மக்களுக்கு பொறுப்பான பங்களிப்பு என்ற எண்ணத்துடன் செயல்படத்தூண்டினார். அதனால் அலுவலக ஒழுக்கங்களைப் போலவே, தனி மனித ஒழுக்கங்களையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்த ஒழுக்கம் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அவருடைய திடீர் மறைவு அதிர்ச்சிப்பேரலைகளை உண்டாக்கியிருக்கிறது. ஆனாலும் அவருடைய கனவுகள் முற்றுப்பெறவில்லை. ஏனென்றால் அவருடைய கனவுகள் என்னைப்போல பலரின் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது.

”டியர் பிகே, நான் உங்கள் கனவுக்கு உயிர்கொடுப்பேன்.”

அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது நான் இப்படித்தான் உறுதி ஏற்றுக்கொண்டேன். காலம் எனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் குருவாக ஏற்றுக்கொண்ட எங்கள் அன்பு பிகேவுக்கு விடைதருகிறேன்.


போயிட்டு வாங்க ஓய்! நீங்கள் கனவு கண்ட புதுயுகம் பிறக்கும்!

Saturday, August 16, 2014

பட்டி மன்றம் - முதன் முறையாக வெர்சுவல் ஸ்டுடியோவில் படம்பிடிக்கப்பட்டது.

பட்டிமன்றங்கள் என்றாலே உடனே ஏதாவது ஆடிட்டோரியத்திற்குள் புகுந்துவிடுவோம். வெகு அபூர்வமாக ஏதாவது பள்ளி (அ) கல்லூரி மைதானங்களில் படமாக்குவோம். மைதானங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால் மாலை நேரத்துக்கு மேல்தான் தோதுப்படும். ஏனென்றால் அப்போதுதான் பார்வையாளர்கள் தாங்கிக்கொள்கிற அளவுக்கு வெக்கை குறைவாக இருக்கும். ஆனால் இவற்றில் விளக்கைச் சுற்றும் பூச்சிகள், கொசுத்தொல்லை மற்றும் மழை போன்ற தடங்கல்களுக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் ஆடிட்டோரியம்தான் சிறந்த சாய்ஸ்.


ஆனால் இந்த சுதந்திர தினத்துக்கு நாங்கள் வித்தியாசமான, துணிச்சலான ஒரு முடிவெடுத்தோம். எங்களுடைய புதுயுகம் வெர்சுவல் ஸ்டுடியோவிலேயே பட்டிமன்றத்தை படமாக்கலாம் என்பதே அது. ஏற்கனவே நடிகை அபிராமி தொகுத்து வழங்கிய ரிஷிமூலம் பேச்சு மன்றம் நிகழ்ச்சியை வெர்சுவல் ஸ்டுடியோவில் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.  அதைவிட இதில் சிக்கல் குறைவுதான். அதனால் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் பட்டிமன்றத்தை இதுவரை யாரும் முயற்சிக்கவில்லை என்ற சின்ன த்ரில் ஜாலியாக இருந்தது.

சரியாக 48 மணி நேரங்களே எங்களுக்கு இருந்தது. ஆனாலும் 3Dயில் மளமளவென ஒரு செட்டை வடிவமைத்தோம். பார்வையாளர்கள் 50 பேரை திரட்டினோம். பேச்சாளர்களை ஒரு கற்பனை மேடையில் அமர வைத்து அனைவரையும் ஒரு சேர எங்கள் ஸ்டுடியோவிலேயே படம்பிடித்தோம். வெர்சுவல் ஸ்டுடியோவில் உள்ள மிகப்பெரிய சிக்கல் நிழல்கள் விழாத லைட்டிங் மிக முக்கியம். ஆனால் 50 பேருக்கு மேல் உள்ளே இருந்தால் நிழல்களை தவிர்க்க மிகவும் மெனக்கெட வேண்டும். ஆனால் எங்கள் டெக்னிகல் டீம் அபாரமானது. அசராமல் செய்து முடித்தார்கள்.

இதில் இன்னொரு துணிச்சல் என்னவென்றால் பட்டிமன்ற பேச்சாளர்களில் நடுவர் பிரகதீஸ்வரனைத் தவிர வேறு எவருக்கும் பச்சைத் துணிகளால் சூழப்பட்ட கற்பனை மேடைகளில் (Virtual stage) பேசி பழக்கமில்லை. ஆனாலும் பெரிய சிக்கல்கள் எதுவும் எழாமல் படப்பிடிப்பை முடித்து ஒளிபரப்பும் செய்துவிட்டோம்.

அடுத்த முறை பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100 பேருக்கு மேல் உயர்த்தலாமா என்ற தைரியமான எண்ணம் வந்திருக்கிறது. கடினம் இல்லை என்றாலும் ஒரு பட்டிமன்றத்தை முதன் முறையாக வெர்சுவல் ஸ்டுடியோவில் படம்பிடித்த ஒரு திருப்தி. அந்த திருப்தியைத் தந்த புதுயுகம் டெக்னிகல் குழுவிற்கு சபாஷ்.