Showing posts with label vijayakanth. Show all posts
Showing posts with label vijayakanth. Show all posts

Wednesday, June 22, 2022

ஜம்முன்னு எங்க கேப்டன் திரும்ப வரணும் - பிரார்த்தனைகள்!

கேப்டன் நலமாக இருக்கிறார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் கேப்டனின் ஒரு கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை வாசிக்கும்போதே மனதைப் பிசைகிறது. எப்போதுமே கம்பீரமான மனிதனாக திரையிலும், தரையிலும் தோன்றிய விஜயகாந்துக்குக்கு இந்த நிலையா என்கிற எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. வயது ஒரு காரணம் என்றாலும், அவர் திடீரென உடல் நலம் குன்றியதில் இரசிகர்கள் மட்டுமல்லாமல் சாதாரண பொது மக்களுக்கும் மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. காலம்தான் அதற்கு மருந்து தரும்.

கேப்டன் செய்திருக்கும் எத்தனையோ தர்மங்களும், உதவிகளும் அவரைக் காக்கும். அவர் உடல் நலம் பெற்று இரசிகர்களையும், குடும்பத்தாரையும் மகிழ்விப்பார்.
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பில் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

Monday, March 2, 2015

தமிழக அரசியல் - அடைத்துக்கொண்டிருக்கும் சாக்கடை

 ஜெயலலிதாவுக்கும், மதுவுக்கும், இலவசங்களுக்கும் அடிமையாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிற கட்சி!
கருணாநிதி குடும்பத்தின் ஏற்ற தாழ்வுகளும், சண்டைகளும், சச்சரவுகளும்தான் கட்சிக்கும் அதன் தொண்டனுக்கும் என நிர்பந்திக்கிற கட்சி!
பொறுப்பான எதிர்கட்சி பதவியை இலவசமாகக் கிடைத்த டிஸ்கவுண்ட் கூப்பன் போல உதறித் தள்ளுகிற விஜயகாந்த் கட்சி!
இவர்கள் அனைவருடனும் தேவைப்படும்போது அவ்வவ்போது ஒட்டிப் பிரிகிற கட்சி!
தமிழகத்தில் இப்படி நான்கு வகை கட்சிகள்தான் இருக்கின்றன.

ஊழல் செய்வதும், அதிலிருந்து தப்பிக்கும் தந்திரங்களும் தான் அரசியல் என்பதைத்தவிர இந்தக் கட்சிகளிடம் வேறு கொள்கைகள் இல்லை.
ஊழல் செய்யும் தலைவர்களும், அவர்களை கும்பிட்டுத் தரிசிக்கிற தொண்டர்களும், அவர்களை ஊக்கப்படுத்தும்  சார்பு நிலை மீடியாக்களும் பெருகிவிட்டார்கள்.

அரசியலை சாக்கடை என்பார்கள். இன்றைய தமிழக அரசியலை அடைத்துக்கொண்டிருக்கும் சாக்கடை என்று சொல்லலாம். துர்நாற்றம் சகிக்கவில்லை. தமிகழத்தில் இதுவரையில் இவ்வளவு கேவலமான அரசியல் சூழ்நிலை நிலவியதில்லை. நல்ல கட்சி, நியாயமான கட்சி என ஒரு கட்சி கூட இல்லை. நல்ல தலைவர், நியாயமான தலைவர் என்று ஒரு தலைவர் கூட இல்லை. இவ்வளவு ஏன் ... நியாயமான அரசியல் பேசுகிற ஒரு நல்ல புத்தகம் கூட இல்லை.

மாபெரும் அரசியல் வெற்றிடம் உருவாகியிருக்கிறது. அந்த வெற்றிடத்தை மீண்டும் இதே ஊழல் சாக்கடைகள்தான் நிரப்பும் என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது. இவர்களின் மேல் சலிப்பும், கோபமும் இருந்தாலும் நல்ல தலைமை நல்ல தலைவர் என்று எவருமே கண்களுக்குத் தென்படாததால் இந்த சாக்கடைகளில் ஏதாவது ஒன்றுதான் 2016ல் மீண்டும் அரசாளும்.