Friday, May 15, 2009

தி.மு.க அலை! பின் தங்கியது இலை!

பல Exit Poll கள் ஜெயலலிதாவுக்கு வெற்றி முகம் என்று கூறின. ஆனால் Post Pollகள் தி.மு.க கூட்டணியின் அலை அடிக்கிறது என்று சொல்கின்றன.

எக்ஸிட் போல் என்பது ஓட்டுப் போட்டுவிட்டு வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வருபவரிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டு கணிப்பது.

போஸ்ட் போல் என்பது, நிதானமாக சில சமயங்களில் ஒரு நாள் கழித்துக் கூட வாக்காளர்களை அவர்களுடைய இடத்திலேயே சந்தித்து யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டு கணிப்பது.

எக்ஸிட் போல்களில் பங்கு பெறும் வாக்காளர் பெரும்பாலும் உண்மையைச் சொல்லுவதில்லை. காரணம் வாக்குச் சாவடிசூழ்நிலை, பதற்றம் மற்றும் பயம்.

போஸ்ட் போல்களில் பங்கு பெறும் வாக்காளர்கள் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால் வாக்களித்துவிட்டு வெகு நேரம் கழித்துதான் அவருடைய கருத்து கேட்கப் படுகிறது. மிக முக்கியமாக அவருடைய இடத்திலேயே கேட்கப்படுவதால் பதற்றமோ, பயமோ இருப்பதில்லை.

எக்ஸிட் போலில் வாக்காளரிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் பார்ட் டைமில் வேலை செய்பவர்கள். கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மக்களை சந்திக்கிறார்கள். உடனுக்குடன் சூட்டோடு சூடாக கணிப்புகளை தெரிவிக்கும் போட்டியில், எக்ஸிட் போல் நடத்துபவர்கள் இவர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கு வாக்காளரிடம் துல்லியமான பதிலை கேட்டு வாங்கும் திறமையோ, பயிற்சியோ குறைவு.

ஆனால் போஸ்ட் போலில் வாக்காளர்களை சந்திப்பவர்கள் இதற்கென்று பயிற்சி பெற்றவர்கள். வாக்காளர்களிடம் நயமாகப் பேசி, நண்பரைப் போல உறவாடி முடிந்தவரையில் உண்மையை வெளிவரவைப்பார்கள்.

எக்ஸிட் போல் வாக்குச்சாவடிக்கு அருகில்தான் நடக்கிறது. அவர்கள் வாக்காளர்களை சந்திக்கும்போது, ஒரு குறிப்பிட்ட கட்சியினர் அதிக அளவில் வாக்களிக்க வந்திருந்தால், அதன் துல்லியம் அடிபட்டுப்போகிறது.

போஸ்ட் போல் இந்த தவறை சரி செய்யும் விதமாக பரவலாக தொகுதியின் வெவ்வேறு பகுதிக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து நடத்தப் படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் எக்ஸிட் போலை விட, போஸ்ட் போலுக்கு நம்பகத்தன்மை அதிகம்.

இந்த அடிப்படையில் பார்த்தால் சில எக்ஸிட்போல்கள் ஜெயலலிதா ஜெயிக்கிறார் என்று கூறுகின்றன. டைம் நவ் போன்ற சானல்கள் தேர்தலன்று காலை ஒன்பதரை மணிக்கே, ஜெயலலிதா முந்துகிறார் என்று தங்கள் எக்ஸிட் போலின் அடிப்படையில் கூற ஆரம்பித்துவிட்டன.

இன்று வெளிவந்த போஸ்ட் போலின் அடிப்படையில் பார்த்தால் குறிப்பாக சிஎன்என்-ஐபின் சேனலின் கணிப்புபடி, கிட்டத்தட்ட இது தி.மு.க அலை. தடுமாறுகிறது இரட்டை இலை.

இந்த முடிவுகளுக்கான காரணிகள்
வாக்குப் பதிவு சதவிகிதம் கூடியிருப்பது
இலங்கைப் பிரச்சனை - எல்.டி.டி.யி ஆதரவு
தி.மு.கவிற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ள பரவலான ஆதரவு
குறிப்பாக தி.மு.விற்கு நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள ஆதரவு

”வெள்ளம் வந்தப்ப 2000 ரூபாய் குடுத்தாரு”
”ஒரு ரூபாய்க்கு அரிசி இதுக்கு முன்னாடி யாரு குடுத்தா?”
”இலவச டிவி தந்திருக்காரு”
”இன்னும் கேஸ் ஸ்டவ் தருவாங்களாமே”
இதெல்லாம் கிராமப்புரங்களில் பரவலாக ஒலித்த டயலாக்

அலை எதுவுமில்லாத தேர்தல். இந்த எம்.பி பரவால்ல. காதுகுத்துக்கு நெறைய மொய் எழுதுனாரு என்று படு லோக்கல் காரணிகள் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய தேர்தல்

”ஏழை பணக்காரன்னு பாக்கலப்பா. வீட்டுக்கு ஒரு டிவி உண்டுன்னு வந்து சொல்லிட்டுப் போயிட்டானுங்கப்பா. சில வீட்டுக்கு குடுத்துட்டானுங்க. சிலருக்கு எலக்ஷனுக்க அப்புறம்ன சொல்லிட்டானுங்க. அதாவது இலவசத்தை கரெக்டா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டானுங்க. கிராமப் புறத்துல வேற என்ன வேணும்” இது கம்பம் அருகிலிருக்கும் உத்தமப்பாளையத்தை சேர்ந்த என்னுடைய நண்பர் கூறியது.

கூட்டணிகள் பெறக் கூடிய வாக்குகளின் சதவிகிதம்
தி.மு.க கூட்டணி - 47%
அ.தி.மு.க கூட்டணி - 34%
விஜயகாந்த் - 10%
மற்றவர்கள் - 9%

தனிப்பட்ட முறையில் எனக்கும் இதுதான் தேர்தல் முடிவாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. காலையில் தெரிந்துவிடும்.

கொசுறு -
அன்புமணி ராமதாஸ் மீண்டும் காங்கிரசுடன் இணைவதில் தயக்கம் எதுவிமில்லை என்று கூறிவிட்டார்.
நரேந்திர மோடி ஜெயலலிதாவை சந்திக்கவுள்ள நிலையில், தோழர்கள் ஜெவை வீட்டுக்கே சென்று சந்தித்த பிறகும், மூன்றாவது அணியின் மீட்டிங்கிற்கு வருவது சந்தேகமாம்.

Thursday, May 14, 2009

இந்தியாவை வட்டமிடும் அமெரிக்க கழுகு

A. Peter Burleigh, US Charge d’Affaires (head of mission) -
இவர் தெற்கு ஆசியாவின் நாடித்துடிப்பை அறிந்தவர். சிங்களம், பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர் இந்தியாவிற்கு வந்து பொறுப்பேற்றபோது யாருக்கும் இவரைத் தெரியாது. ஆனால் நேற்றிலிருந்து இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் வல்லுனர்களின் ஊகஙகள் மற்றும் வியுகங்களுக்கு தீனிபோடுபவராகிவிட்டார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக் கட்டத் தேர்தலில் நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கும்போது, அமெரிக்க தூதரகத்தின் சார்பில் பர்களே பி.ஜே.பியின் பிரதம வேட்பாளரான அத்வானியை சந்தித்தது பல்வேறு சிந்தனைகளை தூண்டிவிட்டிருக்கிறது. அவர் அத்வானியை மட்டும் சந்திக்கவில்லை சந்திரபாபு நாயுடு மற்றும் புது அரசியல்வாதி சிரஞ்சீவியையும் சந்தித்திருக்கிறார்.

சில அரசியல்கட்சிகளும், மீடியாக்களில் ஒரு பகுதியினரும் இந்திய அரசியலில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக சந்தேகப்படுகிறார்கள். இடதுசாரிகளின் தலைமையில் உள்ள மூன்றாவது அணியில் சந்திரபாபு நாயுடு உள்ளார். ஒருவேளை மூன்றாவது அணி இந்தியாவில் ஆட்சி அமைக்க முயற்சித்தால் அதற்கு அவரும், சிரஞ்சீவி போன்றவர்களும் ஆதரவு அளிக்கக் கூடாது என வலியுறுத்தவே இந்த சந்திப்பு நடந்தாக கொதிக்கிறார்கள்.

இடதுசாரிகளின் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அதில் அமெரிக்காவிற்கென்ன பிரச்சனை?
இடதுசாரிகள் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்ப்பவர்கள். அதை காரணம்காட்டிதான் காங்கிரஸ் அரசை விட்டு வெளியே வந்தார்கள். ஒருவேளை அவர்கள் பதவிக்குவந்தால் அணுசக்தி ஒப்பந்தம் கிடப்பில் போடப்படும் என்று அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை ஜார்ஜ் புஷ்ஷாக இருந்தாலும் சரி, ஒபாமாவாக இருந்தாலும் சரி, இந்த ஒப்பந்தம் தொடர்வதில் குறியாக உள்ளார்கள். அதனால் அதற்கு குறுக்கே நிற்கும் எவரையும் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை வழியாக அமெரிக்கா தனிமைப்படுத்த நினைக்கிறது. அதே நேரத்தில் அதற்கு ஆதரவளிப்பவர்களை ஒன்று சேர்க்கவும் முயற்சி செய்கிறது. அதற்குத்தான் நாயுடு, சிரஞ்சீவி மற்றும் அத்வானி சந்திப்புகள் எல்லாம்.

அத்வானி அதாவது பி.ஜே.பியும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறதே என்று சிலர் கேட்கலாம். பி.ஜே.பி, ஜெயலலிதா போன்றவர்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்களே ஒழிய முழுக்க தூக்கி எறிய வேண்டும் என்று சொல்லவில்லை. அதில் சில மாற்றங்கள் செய்துகொள்ளலாம் என்றுதான் சொல்கிறார்கள். அதனால் இவர்களை ஒன்று சேர்த்து தனக்கு ஜால்ரா அடிக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.

ஜால்ரா அடிப்பதைத்தான் ஏற்கனவே காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறதே என்றும் சிலர் கேட்கலாம். உண்மைதான் . . . ஆனால் இன்றைய நிலவரப்படி தேர்தல் கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றாலும் மீண்டும் இடதுசாரிகளின் துணையின்றி ஆட்சி அமைக்க முடியாது. அப்படி அமையும் ஆட்சி இடதுசாரிகளின் தலையீட்டால் முழுக்க முழுக்க அமெரிக்கா சொல்வதை கேட்கும் அரசாக இருக்க முடியாது.

எனவே அணுசக்தி ஒப்பந்தத்தை சில மாற்றங்களுடன் ஏற்கும் பி.ஜே.பி தலைமையில் சில கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவில் புதிய ஆட்சி அமைக்க அமெரிக்கா முயலுகிறது என்று நான் நினைக்கிறேன். இதற்கு எது காரணமாக இருந்தாலும் இது அமெரிக்காவின் அத்துமீறல்தான். இந்தத் தேர்தலிலேயே அமெரிக்க பணமும், அதிகாரமும் எங்கேயோ உள்குத்து செய்திருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது.

”அமெரிக்கா இந்திய அரசியலின் உள்விவகாரங்களில் தலையிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று இந்த சந்திப்புக்கு இடதுசாரிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் ”அமெரிக்கா இந்தியத் தேர்தலில் தலையிடவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் ஹிலாரி கிளிண்டன் வரவிருப்பதால் அதற்கு முன்னேற்பாடாக இந்த சந்திப்புகள்” என்று மொக்கையாக ஒரு விளக்கத்தை அமெரிக்கா கொடுத்திருக்கிறது.

குழம்பியிருக்கும் இந்திய அரசியல் வானில் அமெரிக்க கழுகு வட்டமிட ஆரம்பித்திருக்கிறது. இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Wednesday, May 13, 2009

Exit Poll - 2009

Exit Poll என்பது வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் கேட்டு ஒரு முடிவுக்கு வருவது.
முன்னணி ஆங்கில செய்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு Exit Pollகளை நடத்தின.
இதில் உள்ள பெரிய ரிஸ்க், எந்தக் கட்சிக்கு வாக்களித்தேன் என்று, வாக்காளர் சொன்னது உண்மையா? பொய்யா? என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதே போல Exit Pollகள் மிகச் சில நூறு வாக்களர்களிடம் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஒரு அலை அடிக்கும்போது பெரும்பாலும் Exit Pollகள் சரியாக உள்ளன. ஆனால் அலை இல்லாத தேர்தல்களில் Exit Pollகள் பெரும்பாலும் தவறிவிடும். ஏனென்றால் Spoilers எனப்படும் ரிசல்டுகளை பாதிக்கக் கூடிய கட்சிகளின் மதிப்பு இதில் தெரிவதில்லை. உதாரணமாக இந்த Exit Pollகளில் விஜயகாந்துக்கு எத்தனை வாக்குகள் விழுந்தன என்பது தெரியாது. அந்த வாக்குகள் தி.மு.க அல்லது அ.தி.மு.க வாக்குகளை பிரிக்கும். அது எந்தக் கட்சிக்கு என்பது Exit Pollகளில் தெரியாது.
எனவே அதை மனதில் கொண்டு நிறைய Exit Pollகளை படித்துவிட்டு (விஜயகாந்தை கணக்கிலெடுக்காமல்) குத்துமதிப்பாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்

தமிழகம்
மொத்தம் - 39
காங்கிரஸ் - 2 (ஜீரோ முதல் 4 வரை மாறலாம்)
தி.மு.க(மற்ற கட்சிகள்) - 12 (9 முதல் 13 வரை மாறலாம்)
அ.தி.மு.க - 25 (24 முதல் 28 வரை மாறலாம்)

இந்திய அளவில்
C-VOTER-POLLING AGENCY EXIT POLL FOR INDIA TV AND UTV BUSINESS CHANNEL
UPA                          - 193-205
NDA - 181-193
THIRD FRONT - 105-121
STAR NEWS-NIELSEN EXIT POLL
UPA                             -  202
NDA - 198
THIRD FRONT - 96
CNN-IBN NEWS CHANNEL POST-POLL SURVEY
UPA                           - 185-205
NDA - 165-185
THIRD FRONT - 110-130
NEWS-X CHANNEL EXIT POLL
UPA                              - 202
NDA - 193
THIRD FRONT - 101
HEADLINES TODAY NATIONAL PROJECTION
UPA - 191
NDA - 180
LEFT PARTIES - 38
OTHER PARTIES - 134