Showing posts with label தேர்தல் 2009. Show all posts
Showing posts with label தேர்தல் 2009. Show all posts

Friday, May 15, 2009

தி.மு.க அலை! பின் தங்கியது இலை!

பல Exit Poll கள் ஜெயலலிதாவுக்கு வெற்றி முகம் என்று கூறின. ஆனால் Post Pollகள் தி.மு.க கூட்டணியின் அலை அடிக்கிறது என்று சொல்கின்றன.

எக்ஸிட் போல் என்பது ஓட்டுப் போட்டுவிட்டு வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வருபவரிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டு கணிப்பது.

போஸ்ட் போல் என்பது, நிதானமாக சில சமயங்களில் ஒரு நாள் கழித்துக் கூட வாக்காளர்களை அவர்களுடைய இடத்திலேயே சந்தித்து யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டு கணிப்பது.

எக்ஸிட் போல்களில் பங்கு பெறும் வாக்காளர் பெரும்பாலும் உண்மையைச் சொல்லுவதில்லை. காரணம் வாக்குச் சாவடிசூழ்நிலை, பதற்றம் மற்றும் பயம்.

போஸ்ட் போல்களில் பங்கு பெறும் வாக்காளர்கள் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால் வாக்களித்துவிட்டு வெகு நேரம் கழித்துதான் அவருடைய கருத்து கேட்கப் படுகிறது. மிக முக்கியமாக அவருடைய இடத்திலேயே கேட்கப்படுவதால் பதற்றமோ, பயமோ இருப்பதில்லை.

எக்ஸிட் போலில் வாக்காளரிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் பார்ட் டைமில் வேலை செய்பவர்கள். கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மக்களை சந்திக்கிறார்கள். உடனுக்குடன் சூட்டோடு சூடாக கணிப்புகளை தெரிவிக்கும் போட்டியில், எக்ஸிட் போல் நடத்துபவர்கள் இவர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கு வாக்காளரிடம் துல்லியமான பதிலை கேட்டு வாங்கும் திறமையோ, பயிற்சியோ குறைவு.

ஆனால் போஸ்ட் போலில் வாக்காளர்களை சந்திப்பவர்கள் இதற்கென்று பயிற்சி பெற்றவர்கள். வாக்காளர்களிடம் நயமாகப் பேசி, நண்பரைப் போல உறவாடி முடிந்தவரையில் உண்மையை வெளிவரவைப்பார்கள்.

எக்ஸிட் போல் வாக்குச்சாவடிக்கு அருகில்தான் நடக்கிறது. அவர்கள் வாக்காளர்களை சந்திக்கும்போது, ஒரு குறிப்பிட்ட கட்சியினர் அதிக அளவில் வாக்களிக்க வந்திருந்தால், அதன் துல்லியம் அடிபட்டுப்போகிறது.

போஸ்ட் போல் இந்த தவறை சரி செய்யும் விதமாக பரவலாக தொகுதியின் வெவ்வேறு பகுதிக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து நடத்தப் படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் எக்ஸிட் போலை விட, போஸ்ட் போலுக்கு நம்பகத்தன்மை அதிகம்.

இந்த அடிப்படையில் பார்த்தால் சில எக்ஸிட்போல்கள் ஜெயலலிதா ஜெயிக்கிறார் என்று கூறுகின்றன. டைம் நவ் போன்ற சானல்கள் தேர்தலன்று காலை ஒன்பதரை மணிக்கே, ஜெயலலிதா முந்துகிறார் என்று தங்கள் எக்ஸிட் போலின் அடிப்படையில் கூற ஆரம்பித்துவிட்டன.

இன்று வெளிவந்த போஸ்ட் போலின் அடிப்படையில் பார்த்தால் குறிப்பாக சிஎன்என்-ஐபின் சேனலின் கணிப்புபடி, கிட்டத்தட்ட இது தி.மு.க அலை. தடுமாறுகிறது இரட்டை இலை.

இந்த முடிவுகளுக்கான காரணிகள்
வாக்குப் பதிவு சதவிகிதம் கூடியிருப்பது
இலங்கைப் பிரச்சனை - எல்.டி.டி.யி ஆதரவு
தி.மு.கவிற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ள பரவலான ஆதரவு
குறிப்பாக தி.மு.விற்கு நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள ஆதரவு

”வெள்ளம் வந்தப்ப 2000 ரூபாய் குடுத்தாரு”
”ஒரு ரூபாய்க்கு அரிசி இதுக்கு முன்னாடி யாரு குடுத்தா?”
”இலவச டிவி தந்திருக்காரு”
”இன்னும் கேஸ் ஸ்டவ் தருவாங்களாமே”
இதெல்லாம் கிராமப்புரங்களில் பரவலாக ஒலித்த டயலாக்

அலை எதுவுமில்லாத தேர்தல். இந்த எம்.பி பரவால்ல. காதுகுத்துக்கு நெறைய மொய் எழுதுனாரு என்று படு லோக்கல் காரணிகள் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய தேர்தல்

”ஏழை பணக்காரன்னு பாக்கலப்பா. வீட்டுக்கு ஒரு டிவி உண்டுன்னு வந்து சொல்லிட்டுப் போயிட்டானுங்கப்பா. சில வீட்டுக்கு குடுத்துட்டானுங்க. சிலருக்கு எலக்ஷனுக்க அப்புறம்ன சொல்லிட்டானுங்க. அதாவது இலவசத்தை கரெக்டா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டானுங்க. கிராமப் புறத்துல வேற என்ன வேணும்” இது கம்பம் அருகிலிருக்கும் உத்தமப்பாளையத்தை சேர்ந்த என்னுடைய நண்பர் கூறியது.

கூட்டணிகள் பெறக் கூடிய வாக்குகளின் சதவிகிதம்
தி.மு.க கூட்டணி - 47%
அ.தி.மு.க கூட்டணி - 34%
விஜயகாந்த் - 10%
மற்றவர்கள் - 9%

தனிப்பட்ட முறையில் எனக்கும் இதுதான் தேர்தல் முடிவாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. காலையில் தெரிந்துவிடும்.

கொசுறு -
அன்புமணி ராமதாஸ் மீண்டும் காங்கிரசுடன் இணைவதில் தயக்கம் எதுவிமில்லை என்று கூறிவிட்டார்.
நரேந்திர மோடி ஜெயலலிதாவை சந்திக்கவுள்ள நிலையில், தோழர்கள் ஜெவை வீட்டுக்கே சென்று சந்தித்த பிறகும், மூன்றாவது அணியின் மீட்டிங்கிற்கு வருவது சந்தேகமாம்.

Thursday, May 14, 2009

இந்தியாவை வட்டமிடும் அமெரிக்க கழுகு

A. Peter Burleigh, US Charge d’Affaires (head of mission) -
இவர் தெற்கு ஆசியாவின் நாடித்துடிப்பை அறிந்தவர். சிங்களம், பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர் இந்தியாவிற்கு வந்து பொறுப்பேற்றபோது யாருக்கும் இவரைத் தெரியாது. ஆனால் நேற்றிலிருந்து இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் வல்லுனர்களின் ஊகஙகள் மற்றும் வியுகங்களுக்கு தீனிபோடுபவராகிவிட்டார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக் கட்டத் தேர்தலில் நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கும்போது, அமெரிக்க தூதரகத்தின் சார்பில் பர்களே பி.ஜே.பியின் பிரதம வேட்பாளரான அத்வானியை சந்தித்தது பல்வேறு சிந்தனைகளை தூண்டிவிட்டிருக்கிறது. அவர் அத்வானியை மட்டும் சந்திக்கவில்லை சந்திரபாபு நாயுடு மற்றும் புது அரசியல்வாதி சிரஞ்சீவியையும் சந்தித்திருக்கிறார்.

சில அரசியல்கட்சிகளும், மீடியாக்களில் ஒரு பகுதியினரும் இந்திய அரசியலில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக சந்தேகப்படுகிறார்கள். இடதுசாரிகளின் தலைமையில் உள்ள மூன்றாவது அணியில் சந்திரபாபு நாயுடு உள்ளார். ஒருவேளை மூன்றாவது அணி இந்தியாவில் ஆட்சி அமைக்க முயற்சித்தால் அதற்கு அவரும், சிரஞ்சீவி போன்றவர்களும் ஆதரவு அளிக்கக் கூடாது என வலியுறுத்தவே இந்த சந்திப்பு நடந்தாக கொதிக்கிறார்கள்.

இடதுசாரிகளின் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அதில் அமெரிக்காவிற்கென்ன பிரச்சனை?
இடதுசாரிகள் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்ப்பவர்கள். அதை காரணம்காட்டிதான் காங்கிரஸ் அரசை விட்டு வெளியே வந்தார்கள். ஒருவேளை அவர்கள் பதவிக்குவந்தால் அணுசக்தி ஒப்பந்தம் கிடப்பில் போடப்படும் என்று அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை ஜார்ஜ் புஷ்ஷாக இருந்தாலும் சரி, ஒபாமாவாக இருந்தாலும் சரி, இந்த ஒப்பந்தம் தொடர்வதில் குறியாக உள்ளார்கள். அதனால் அதற்கு குறுக்கே நிற்கும் எவரையும் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை வழியாக அமெரிக்கா தனிமைப்படுத்த நினைக்கிறது. அதே நேரத்தில் அதற்கு ஆதரவளிப்பவர்களை ஒன்று சேர்க்கவும் முயற்சி செய்கிறது. அதற்குத்தான் நாயுடு, சிரஞ்சீவி மற்றும் அத்வானி சந்திப்புகள் எல்லாம்.

அத்வானி அதாவது பி.ஜே.பியும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறதே என்று சிலர் கேட்கலாம். பி.ஜே.பி, ஜெயலலிதா போன்றவர்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்களே ஒழிய முழுக்க தூக்கி எறிய வேண்டும் என்று சொல்லவில்லை. அதில் சில மாற்றங்கள் செய்துகொள்ளலாம் என்றுதான் சொல்கிறார்கள். அதனால் இவர்களை ஒன்று சேர்த்து தனக்கு ஜால்ரா அடிக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.

ஜால்ரா அடிப்பதைத்தான் ஏற்கனவே காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறதே என்றும் சிலர் கேட்கலாம். உண்மைதான் . . . ஆனால் இன்றைய நிலவரப்படி தேர்தல் கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றாலும் மீண்டும் இடதுசாரிகளின் துணையின்றி ஆட்சி அமைக்க முடியாது. அப்படி அமையும் ஆட்சி இடதுசாரிகளின் தலையீட்டால் முழுக்க முழுக்க அமெரிக்கா சொல்வதை கேட்கும் அரசாக இருக்க முடியாது.

எனவே அணுசக்தி ஒப்பந்தத்தை சில மாற்றங்களுடன் ஏற்கும் பி.ஜே.பி தலைமையில் சில கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவில் புதிய ஆட்சி அமைக்க அமெரிக்கா முயலுகிறது என்று நான் நினைக்கிறேன். இதற்கு எது காரணமாக இருந்தாலும் இது அமெரிக்காவின் அத்துமீறல்தான். இந்தத் தேர்தலிலேயே அமெரிக்க பணமும், அதிகாரமும் எங்கேயோ உள்குத்து செய்திருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது.

”அமெரிக்கா இந்திய அரசியலின் உள்விவகாரங்களில் தலையிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று இந்த சந்திப்புக்கு இடதுசாரிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் ”அமெரிக்கா இந்தியத் தேர்தலில் தலையிடவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் ஹிலாரி கிளிண்டன் வரவிருப்பதால் அதற்கு முன்னேற்பாடாக இந்த சந்திப்புகள்” என்று மொக்கையாக ஒரு விளக்கத்தை அமெரிக்கா கொடுத்திருக்கிறது.

குழம்பியிருக்கும் இந்திய அரசியல் வானில் அமெரிக்க கழுகு வட்டமிட ஆரம்பித்திருக்கிறது. இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Wednesday, May 13, 2009

Exit Poll - 2009

Exit Poll என்பது வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் கேட்டு ஒரு முடிவுக்கு வருவது.
முன்னணி ஆங்கில செய்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு Exit Pollகளை நடத்தின.
இதில் உள்ள பெரிய ரிஸ்க், எந்தக் கட்சிக்கு வாக்களித்தேன் என்று, வாக்காளர் சொன்னது உண்மையா? பொய்யா? என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதே போல Exit Pollகள் மிகச் சில நூறு வாக்களர்களிடம் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஒரு அலை அடிக்கும்போது பெரும்பாலும் Exit Pollகள் சரியாக உள்ளன. ஆனால் அலை இல்லாத தேர்தல்களில் Exit Pollகள் பெரும்பாலும் தவறிவிடும். ஏனென்றால் Spoilers எனப்படும் ரிசல்டுகளை பாதிக்கக் கூடிய கட்சிகளின் மதிப்பு இதில் தெரிவதில்லை. உதாரணமாக இந்த Exit Pollகளில் விஜயகாந்துக்கு எத்தனை வாக்குகள் விழுந்தன என்பது தெரியாது. அந்த வாக்குகள் தி.மு.க அல்லது அ.தி.மு.க வாக்குகளை பிரிக்கும். அது எந்தக் கட்சிக்கு என்பது Exit Pollகளில் தெரியாது.
எனவே அதை மனதில் கொண்டு நிறைய Exit Pollகளை படித்துவிட்டு (விஜயகாந்தை கணக்கிலெடுக்காமல்) குத்துமதிப்பாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்

தமிழகம்
மொத்தம் - 39
காங்கிரஸ் - 2 (ஜீரோ முதல் 4 வரை மாறலாம்)
தி.மு.க(மற்ற கட்சிகள்) - 12 (9 முதல் 13 வரை மாறலாம்)
அ.தி.மு.க - 25 (24 முதல் 28 வரை மாறலாம்)

இந்திய அளவில்
C-VOTER-POLLING AGENCY EXIT POLL FOR INDIA TV AND UTV BUSINESS CHANNEL
UPA                          - 193-205
NDA - 181-193
THIRD FRONT - 105-121
STAR NEWS-NIELSEN EXIT POLL
UPA                             -  202
NDA - 198
THIRD FRONT - 96
CNN-IBN NEWS CHANNEL POST-POLL SURVEY
UPA                           - 185-205
NDA - 165-185
THIRD FRONT - 110-130
NEWS-X CHANNEL EXIT POLL
UPA                              - 202
NDA - 193
THIRD FRONT - 101
HEADLINES TODAY NATIONAL PROJECTION
UPA - 191
NDA - 180
LEFT PARTIES - 38
OTHER PARTIES - 134

மீடியா போர் - சன், கலைஞரை ஜெயித்தது மக்கள் தொலைக்காட்சி!

தேர்தல் வரும்போது, வழக்கமாக சன்னும் ஜெயாவும் களத்தில் மோதும். நடுவில் நடந்த தாத்தா-பேரன்கள் சண்டையில் கலைஞரை கடு்ப்பேற்ற சன் டிவி நடுநிலை வேஷம் போட்டதும் ஃபோகஸ் மாறிவிட்டது. பிறகு “கண்கள் பனித்து - இதயம் இனித்தவுடன்“ இருவரும் ஒன்று சேர்ந்தார்கள்.

தேர்தல் வந்தவுடன் மீடியா போர் பழையபடி சூடு பிடித்தது. ஜெயா டிவி ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரையை மட்டும் ஃபோகஸ் செய்தது. எனவே ஒரு முனையில் சன்-கலைஞர். மறுமுனையில் மக்கள் தொலைக்காட்சி. மக்கள் தொலைக்காட்சி அசரவே இல்லை.

புதுச்சேரியில் நடைபெற்ற திரைத்துறையினரின் பரப்புரையை ராஜ் டிவியிடமிருந்து பெற்று திடீர் நேரலை செய்ததை சன்னும், கலைஞரும் எதிர்பார்க்கவே இல்லை. பதிலுக்குப் பதில் ஒளிபரப்ப அவர்களிடம் எந்த சரக்கும் இல்லை.

அதே போல இன்னொரு நிகழ்ச்சி. மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்றால் குற்றமாகிவிடும். ஏனென்றால் பிரச்சாரத்திற்கான நேரக் கெடு முடிந்துவிட்டது. ஆனால் மாம்பழத்தைப் பற்றி ஒரு ஆவணப்படம் போடலாம். அது குற்றமல்ல.

இதுதான் மாம்பழம். மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. இந்த மாம்பழம் தித்திக்கும். அந்த மாம்பழம் புளிக்கும் . . . என்று நொடிக்கொரு முறை மாம்பழம், மாம்பழமென தனது சின்னத்தை உச்சரிப்பது போல ஒரு ஆவணப்படத்தை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சன், கலைஞர், தேர்தல் கமிஷன் உட்பட எல்லோருக்கும் பெப்பே காட்டிவிட்டு அட்டகாசமாக தனது மறைமுகப் பிரச்சாரத்தை மக்கள் தொலைக்காட்சி செய்தது.

ஆனால் நேற்று மாலைதான் ஹைலைட். திராவிடர் கழகம் தயாரித்த விசிடிக்கு நேற்று மதியம் தடை விலக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் அவலத்தை விளக்குகின்ற சிடி என்று அவர்கள் சொன்னாலும், அது உண்மையில் காங்கிரசுக்கும், தி.மு.கவுக்கும் எதிராக பிரச்சாரம் செய்கின்ற சிடி. பிரச்சாரத்திற்கான கடைசி நேரம் கடந்துவிட்டிருந்த படியால் தேர்தல் கமிஷனின் விதிப்படி அதை மக்களிடம் போட்டுக் காண்பிக்க முடியாத நிலை. அதை ஒரு நிகழ்ச்சியாக டிவியிலும் காட்ட முடியாத நிலை. அதனால் அந்த சிடியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்று ஆளும் கட்சி அசந்திருந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி மிக சாமர்த்தியமாக ஒரு வேலை செய்தது. என்ன தெரியுமா?

திடீரென செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது. செய்தி என்ன தெரியுமா? பெரியார் திராவிடர் கழகம் தயார் செய்திருந்த சிடிக்கு தடை நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட அந்த சிடியை இப்போது பார்க்கலாம் என்ற ஒற்றை வரிச் செய்திதான். அந்த ஒற்றை வரி முடிந்தவுடன் அந்த சிடி ஒளிபரப்பப்பட்டது.

அசத்தலான அட்டாக். நிகழ்ச்சியாக அதை காண்பிக்க முடியாது. ஏனென்றால் அது பிரச்சாரமாகிவிடும். ஆனால் இதுதான் அந்த தடை நீக்கப்பட்ட சிடி என்று செய்தியாக ஒளிபரப்ப முடியும். ஏன் என்று எந்த விதியும் கேள்வி கேட்க முடியாது. சன்னும், கலைஞரும் பேந்தப் பேந்த விழத்துக் கொண்டிருக்க, மக்கள் தொலைக்காட்சி அட்டகாசமாக பிரச்சார நேரம் முடிந்த பின்னும் நள்ளிரவு வரை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை, அமெரிக்கா தூங்கிய நேரத்தில் இந்தியா விழித்துக் கொண்டது என்பார்கள். அதே போல மீடியா பிரச்சாத்தைப் பொறுத்தவரையில் சன்னும் - கலைஞரும் தூங்கிய நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி எழுந்து கொண்டது.

அ.தி.மு.க முந்துகிறது. ஆனால் . . . குறுக்கே கேப்டன்

மதிய நிலவரப்படி அதாவது 20 சதவிகிதம் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அ.தி.மு.க முன்ணணியில் உள்ளதாக ஆங்கில செய்திச் சேனல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விஜயகாந்துக்கு கிடைக்கும் வாக்குகளை வைத்துதான் இந்தக் கணிப்புகள் பொய்க்குமா அல்லது உண்மையாகுமா என்பது தெரியவரும்.

சோவும் மற்றவர்களும் ஒரு கருத்தை தெரிவித்தனர். பொதுவாக விஜயகாந்தின் வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகள் + எம்.ஜி.ஆர் இரசிகர்களின் வாக்குகள் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டுமே அ.தி.மு.விற்குச் சேரவேண்டிய வாக்குகள். ஆனால் அந்த வாக்குகளை விஜயகாந்த் பிரித்துவிட்டார் என்றால், தி.மு.க -20, அ.தி.மு.க-20 எனப் பிரிந்துவிடும் என்றார்கள். நான் இப்படித்தான் நடக்கும் என்று யுகிக்கின்றேன்.

தேர்தல் நிலவரம் - காலை 10 மணி - அ.தி.மு.க முன்னணி

தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் வழக்கம்போல சொதப்பிக்கொண்டிருக்க, ஆங்கில செய்திச் சேனல்கள் பரபரப்பாக இருக்கின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதன்மை செய்தி ஆசிரியர் ஜெயலலிதாவை சென்னை சூப்பர் குயின் என்று வர்ணித்தார். நான் கவனித்த சேனல்களின் நிலவரப்படி, அ.தி.மு.க முந்திக்கொண்டிருக்கிறது.
மத்திய சென்னையிலும் இன்னும் பல பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தை அமுக்கினால் உதயசூரியன் சின்னத்தில் விளக்கு எரிவதாக ஜெயலலிதா குற்றப்பத்திரிகை வாசித்தார். நேரலையில் தோன்றிய சோ.இராமசுவாமி தி.மு.க பதவியலிருந்தால் அதற்கு வாய்ப்பிருக்கிறது வழக்கம்போல ஜெயலலிதாவை சப்போர்ட் பண்ணினார்.
”அணிமாற்றம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, பி.ஜே.பி உட்பட என்னை எல்லா கட்சியினரும் அணுகியுள்ளார்கள். நான் நினைப்பது போல தேர்தல் முடிவுகள் வந்துவிட்டால், நான் டெல்லி சென்று எனது முடிவை தெரிவிப்பேன்” என்றார் ஜெயலலிதா.
”காங்கிரசும், ஜெயலலிதாவும் கைகுலுக்கும் வாய்ப்புகளும் பெருகிக் கொண்டு வருகிறது” என்று சோ குறிப்பிட்டார்.

Tuesday, May 12, 2009

தடை நீக்கப்பட்ட சிடி - மக்கள் தொலைக்காட்சியுடன் கலைஞர், சன் மோதல்!

மனதைப் பிசையும் தமிழ் இனப்படுகொலை காட்சிகளுடன் ஆளும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று முழங்கும் சிடிக்களை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் மக்களை பார்க்கவிடாமல் கேபிள் கட், சில இடங்களில் பவர் கட் என்று மக்கள் தொலைக்காட்சி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சியின் நற்பெயரை(?)க் கெடுக்க சமூகவிரோதிகள் திட்டமிட்டு மின்சாரம் துண்டிப்பு, 4 பேர் கைது என்று சன்னும், கலைஞர் டிவியும் பதிலுக்கு பதில் ஏசிக் கொண்டிருக்கின்றன.

ஜெயா டிவி கப்சிப் என்றிருக்கிறது. அந்த சிடியையும் கண்டுகொள்ளவில்லை, மின்வெட்டையும் கண்டுகொள்ளவில்லை.

மக்கள் தொலைக்காட்சியில் நான் அந்த சிடிக்களை முழுக்கப் பார்த்துவிட்டேன். இதுவரை பார்க்காதவர்கள் உடனே மக்கள் டிவியை பார்க்கவும். போகிற போக்கைப்பார்த்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு (பிரச்சார நேரம் ஓய்ந்த பின்னும்) எதிர்பிரச்சாரமாக விடிய விடிய ஒளிபரப்பாகும் என எண்ணுகிறேன். அதே சமயம் ஆளும் தி.மு.க எப்படியாவது நீதி மன்றத் தடையை பெற்றுவிடும் என்று தோன்றுகிறது.

இந்த சிடிக்கள் எப்படியும் யுடியுபில் வந்துவிடும். ஆனால் தேர்தல் பரபரப்புடன் பார்க்வேண்டுமானால் இப்போதே மக்கள் டிவி பாருங்கள்.

நீதி - வழக்கறிஞர்களுடன் மோதக் கூடாது. மோதினால் . . . ? பிரச்சாரம் ஓய்ந்தபின்னும், எதிர்கட்சிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி கிடைக்கும்.

தி.மு.க கூட்டணி முந்துகிறது - என்.டி.டி.வி

கருணாநிதிக்குப் பிடிக்காத NDTV கருணாநிதிக்குப் பிடித்த ஒரு கருத்துக்கணிப்பை வௌயிட்டிருக்கிறது.

கணிப்பு 1 - ஏப்ரல் மாதம்
தி.மு.க கூட்டணி - 20 முதல் 22 வரை
அ.தி.மு.க கூட்டணி - 19 முதல் 21 வரை

கணிப்பு 2 - இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 21
அ.தி.மு.க கூட்டணி - 18

கணிப்பு 3 - மூன்றாம் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 21
அ.தி.மு.க கூட்டணி - 18

கடைசிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரச்சாரமும், கருணாநிதியின் வீல் சேர் பிரச்சாரமும் இந்த நிலையை மாற்றாது என்றுதான் தோன்றுகிறது.

தி.மு.க மக்களுக்கு மட்டும் இலவசங்களை வழங்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கும் மின்வெட்டு, விலைவாசி, வேலைவாய்ப்பில் மந்தம் போன்ற இலவசங்களை வாரி வழங்கியது. இதை விஜயகாந்த் கெட்டியாக பிடித்துக்கொண்ட அளவிற்கு அ.தி.மு.க பிடித்துக்கொள்ளவில்லை. ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற குருஜிக்களின் இரகசிய விசிடிக்களை பார்த்துவிட்டு, திடீரென தமிழ்தாய் வேஷம் போட்டுக்கொண்டு, தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்பதை தனது தேர்தல் முழக்கமாக மாற்றிக் கொண்டுவிட்டார். “தமிழ் பதிவர் உலகத்திலும்“, ”உலகமெங்கும் உள்ள சில ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும்”, ”எப்போதுமே ஈழத்தை ஆதரிக்கும் ஜெ. ஆதரவாளர்களிடத்திலும்”, ”கருணாநிதியின் அரசியல் நிலையால் ஏமாந்த சீமான் போன்ற அதீத உணர்வாளர்களிடத்திலும்” இதனால் ஒரு பெரிய சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் அந்த சலசலப்பு மிகக் குறுகிய ஒரு வட்டம் என்பதும், அது கூட இன்னமும் முழுமையாக தி.மு.க எதிர்ப்பாக மாறவில்லை என்பதும் என் எண்ணம். எனவே தி.மு.க ஓட்டு சிதறும் ஆனால் பதற வைக்காது. இங்கே தி.மு.க தவற விடுவது போல அங்கே அ.தி.மு.க விஜயகாந்திடம் சில ஓட்டுக்களை தவறவிடும். எனவே தி.மு.கவைப் பொறுத்தவரை கணக்கு சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

மிக முக்கியமாக ”மானாட மயிலாட பார்க்க விரும்புகிற மக்களை”, ”ஈழப் பிரச்சனை குறித்து பரிதாபப்படுகிற மக்களாக” அ.தி.மு.வின் பிரச்சாரம் மாற்றவில்லை. காரணம் ஜெவின் தனி ஈழ கோஷம் சந்தேகங்களையும், ஆச்சர்யங்களையும் சமமாகத்தான் உண்டாக்கியிருக்கிறது.

கருணாநிதிக்கு அவருடைய முதுமை ஒரு அட்வான்டேஜ். அவருடைய ஆட்சியின் பலகீனங்களை அவருடைய வீல்சேர் விசிட் எளிதாக மறைக்கிறது. ஜெயலலிதாவின் தனிநபர் அட்டாக்கும், மக்களை நெருங்காத ஹெலிகாப்டர் பயணங்களும், ஓட்டுக்களை அள்ளித்தருமா என்றால் சந்தேகம்தான்.

எந்த அலையும் இல்லாத ஒரு தேர்தல். யார் பிரதமர் என்பதைப் பற்றி பேசாமல், கருணாநிதி, ஜெயலலிதா சண்டையாக மாறிப்போன லோக்கல் தேர்தல். பி.ஜே.பியெல்லாம் இந்த தேர்தலில் நிற்கிறதா என்றே பொதுமக்களுக்குத் தெரியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் பா.ம.க வின் அணிமாற்றத்தால் தி.மு.க கூட்டணி 40லிருந்து 20க்குச் சுருங்கும். அ.தி.மு.க கூட்டணி ஜீரோவிலிருந்து 20க்கு விரியும்.

கருத்துக்கணிப்பின் படி தி.மு.கவின் வெற்றியாக அதன் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அந்த வகையில் இது அ.தி.மு.கவிற்கு ஒரு திருப்தியான தேர்தல்தான். ஆனால் ஜெயலலிதாவின் இரகசிய பிரதமர் கனவிற்கும், அப்படி இல்லாத பட்சத்தில் எதிர் வரும் மத்திய அரசின் உதவியுடன் மைனாரிட்டி தி.மு.க மாநில அரசுக் கலைப்பிற்கும் இது உதவாது. அதே போல அவருடைய ”தனி ஈழ” கோஷத்தை மேலும் வலுவாக்கவும் இந்த ரிசல்ட் பயன்படாது.

ஆனால் இருதரப்புமே இதனால் ஏமாற்றமாக உணரும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஸ்பெஷாலிட்டி!

என் கணிப்பு 1 - கடைசிக் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 20
அ.தி.மு.க கூட்டணி - 19
விஜயகாந்த் - 0 (ஓரிரு தொகுதி தவிர அனைத்து தொகுதியிலும் டெபாஸிட் இழப்பார்)
அ.தி.மு.க, தி.மு.கவின் வெற்றி தோல்விகளில் வாக்கு வித்தியாசம் மிகப் பெரியதாக இருக்காது. இது விஜயகாந்திற்கு சட்டமன்ற தேர்தலில் டிமாண்டை அதிகரிக்கும்.

ஜெயலலிதாவை எச்சரித்த சீமான்!

திரைப்படத் துறையினரின் தேர்தல் பரப்புரையை நேற்று முன்னறிவிப்பின்றி ராஜ் டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது. அதை உள்வாங்கி மக்கள் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. அனைவருமே உணர்ச்சிப் பிழம்பாக கொதித்தார்கள். கூட்டம் ஆர்ப்பரித்தது. நான் மக்கள் தொலைக்காட்சியில் இந்த பரப்புரையைக் கண்டேன். பிரபாகரன் என்ற பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் ஆடியோ காணாமல் போய்விட்டு மீண்டும் வந்தது. ராஜ்டிவியில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் சீமான் பேச ஆரம்பித்தவுடன் ஆடியோக்காரர் எங்கேயும் கை வைக்கவில்லை.

சீமான் படு நிதானமாக ஆரம்பிக்கிறார். அவருடைய முதல் குரல் கேட்டவுடனேயே அவ்வளவு பெரிய கூட்டமும் அவருடைய குரலுக்கு கட்டுப்படுகிறது. நேரம் ஆக ஆக வேகமெடுக்கும் நீராவி இயந்திரம் போல, அவருடைய பேச்சில் அனல் கூடிக் கொண்டே போகிறது. அவருடைய பேச்சில் இலயிக்கும் அனைவரின் உணர்வுகளையும் தனது வீச்சினால் இதயத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிக் கிளறுகிறார். அவர் குரலை உயர்த்தும்போதெல்லாம் புலி உறுமுவதைப் போல இருக்கிறது. மகத்தான ஆளுமை. ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் இவ்வளவு சக்தியா? அல்லது அவர் உச்சரிக்கும்போதுதான் அவ்வளவு சக்தி பெறுகிறதா?

இராமேஸ்வரத்தில் அவருடைய பேச்சைக் கேட்டேன். நேற்றைய பரப்புரை எனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. இராமேஸ்வரம் பேச்சைப் போல சுருக்கமாகவும், கொந்தளிப்பாகவும் நேற்று இல்லை. காரணம் . . .

இராமேஸ்வரம் முதல் இன்று வரை மாறியிருக்கும் அரசியல் சூழல்! இலங்கைப் பிரச்சனையை அடக்கி வாசிக்க வேண்டும். இது கருணாநிதியின் அரசியல் கட்டாயம். இலங்கைப் பிரச்சனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இது ஜெயலலிதாவின் அரசியல் கட்டாயம். ஆழ் மனதுக்குப் பிடித்த கருணாநிதியை எதிர்க்க வேண்டும். அரசியல் மனதிற்குப் பிடித்த ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும். உணர்வுக்குப் பிடித்த திருமாவளவனை விட்டுத்தராதிருக்க வேண்டும். இந்த இரட்டை மனநிலை சீமானின் அரசியல் கட்டாயம்.

அவருடைய பேச்சில் இது வெளிப்படையாகவே எதிரொலித்தது. காங்கிரஸையும், சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் வெளுத்து வாங்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட கருணாநிதியின் பெயரை உச்சரிக்கவில்லை. காங்கிரசுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் சூரியனுக்குப் போடாதீர்கள் என்று சொல்ல அவருக்கு நா எழவில்லை. திருமாவளவனை ஒரு இடத்தில் கூட அவர் விட்டுத்தரவில்லை. இந்த குழப்ப மனநிலையால் அவருடைய பேச்சில் அனல் கம்மியாக இருந்தது.

திடீரென ஜெயலலிதாவை ஆதரிக்க நேரிட்ட குற்ற உணர்வும் அவரை ஆட்டிப்படைத்தது. தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று சொன்ன ஒரே காரணத்திற்க்காக நான் அந்த பெருமகளை ஆதரிக்கிறேன். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தனி ஈழக் கோரிக்கையை கை விட்டால் . . .? (என்று என் போன்றவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் சொன்னார்) தேர்தல் முடிந்தவுடன் தனி ஈழக் கோரிக்கையை கை விட்டால் இதே சீமான் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி உங்களை எதிர்ப்பேன் என்று அதிரடியாக ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லாமல் முழங்கினார்.

ஆனால் சீமான் ஒன்றை மறந்து விட்டார். இன்று அக்கினிக் குஞ்சாக உலகம் முழுவதும் தமிழ் இன உணர்வை பற்ற வைத்துக் கொண்டிருக்கும் சீமான், தேர்தலுக்குப் பின் ஜெயலலிதாவை எதிர்க்கும் ஒரு நிலைக்கு வந்தால், இன்று வரை அவருடன் மேடையை அலங்கரித்தவர்கள் பலர் அவரை விட்டு விலகுவார்கள். அது மட்டுமல்ல அவருடைய வீர முழக்கத்தை வெறும் வெற்று முழக்கமாகவே மக்கள் பார்ப்பார்கள். கருணாநிதி - ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டுகளில், வெட்டுப்பட்ட சாதாரண சிப்பாயாக குறுகிவிடும் அபாயம் அவருக்கு உண்டு.

ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது என்று எனது மனது நினைக்கிறது. சீமானின் நண்பர்களில் ஒருவர் எனக்கும் நண்பர். ”சினிமாவையே நேசித்து, சினிமாவையே சுவாசிக்கிற ஒருத்தர் தான் சீமான்” என்று அவர் சீமானைப் பற்றிச் சொல்வார். அது ஈழப்பிரச்சனை இனப்படுகொலையாக உருவெடுக்கும் முன்பு. இன்று என்னைக் கேட்டால் ”தன் இனத்தை நேசித்து, தன் இனத்தையே சுவாசிக்கிற ஒருவர் தான் சீமான்” என்று சொல்வேன்.

ஆனால் அரசியல் விளையாட்டுகள் மிகவும் கொடூரமானவை. அதில் நேர்மையை விட துரோகங்கள் தான் அதிகம். இன்றைக்கு அவர் விரும்பாமலேயே அந்த விளையாட்டுக்குள் அவரும் இருக்கிறார். துரோகம் சீமான் என்கிற அற்புத இளைஞனை வென்று விடாமலிருக்க வேண்டும்! உணர்வுகளைப் புதைத்து, கேளிக்கையின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களை மீட்டெடுக்க, நாளைய தமிழினத்திற்கு அவன் தேவை!

Thursday, May 7, 2009

இத்தாலி அன்னையும் - தமிழ் அம்மாவும் கைகுலுக்கும் நேரம் வந்துவிட்டதா?

Rahul said the Congress considered the TDP, the JD (U) and the AIADMK as secular-minded parties. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் இவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்திய அரசியல் அணி மாற்றங்களைப் பற்றிய ஜோசியங்கள் தொடங்கிவிட்டன.

தேர்தல் காலங்களில் தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கப்படும். அதற்கேற்ப கூட்டணிகளுக்குள் படபடவென பட்டாசு கொளுத்திப் போடும் வேலையை ராகுல் காந்தி கனக் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய கடைசி கட்ட பிரச்சாரம் முழுக்க முழுக்க தேர்தலுக்குப் பின் உருவாகக் கூடிய அணி மாற்றங்களைப் பற்றித்தான் இருக்கிறது.

கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்ட ராகுல், தற்போதே எதிரணியில் இருக்கும் இடது சாரிகள், ஜனதா தள் மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு வலை வீச ஆரம்பித்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய வலையில் இந்த மீன்கள் சிக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.

அதற்கு முதல் காரணம் மூன்றாவது அணி என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பதை, அந்த அணியில் உள்ளவர்களே உணர ஆரம்பித்துவிட்டதுதான்.

நித்திஷ் குமாரும் இடது சாரிகளும் ”இது பற்றி தற்போது எதுவும் பேசுவதற்கில்லை” என்று கூறிவிட்டார்கள். ஆனால் ராகுல் தொடர்ந்து அவர்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மறுப்பெதுவும் சொல்லவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எதிராளியை பாய்ந்து குதறும் ஜெயலலிதா ”ராகுல் அப்படியா சொன்னார்? நான் இன்னும் அவருடைய பேட்டியை படிக்கவில்லை” என்று பட்டும் படாமல் பதில் சொல்கிறார். இடதுசாரிகளும்,நித்திஷ்குமாரும் சொன்னது போல ஒரு குறைந்த பட்ச மறுப்பு கூட அவரிடமிருந்து வெளிவரவில்லை.

நாட்டின் வேறெந்த பகுதியையும் விட தமிழ்நாட்டில் ராகுலின் பேச்சும், ஜெயலலிதாவின் பட்டும் படாத பதிலும், மிகப் பெரிய கூட்டணி குழப்பங்களை உண்டாக்கும். சோனியாவின் வருகை ரத்தானதற்கும், ராகுலின் இந்தப் பேச்சுக்கும் மிக எளிதில் இங்கே முடிச்சு போடப்படும்.

உணர்ச்சிகரமான ஒரு இன அழிப்பு பிரச்சனையை இங்கே சாதாரண கருணாநிதி-ஜெயலலிதா பிரச்சனையாக மாற்றி ஆளாளுக்கு அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களி்ன் அவலத்தை முன்னிறுத்தி  அணி மாற்றங்களும் நடந்து, தேர்தல் பிரச்சாரமும் கடைசிக் கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த வினாடி வரை சோனியாவும், ஜெயலலிதாவும் எதிரெதிர் அணியில். கம்யுனிஸ்டுகளை அருகில் வைத்துக்கொண்டே காங்கிரசுக்கு அழைப்புவிடுத்த ஜெ.வை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. ஒருவேளை வெளிப்படையாக ராகுலும், இரகசியமாக ஜெயலலிதாவும் ஆசைப்படுவது போல தேர்தலுக்குப்பின் ஓரணிக்கு திரண்டால் . . .?


ஐயோ பாவம் . . . இவர்களை நம்பிய கருணாநிதி பிரிவு ஈழ ஆதரவாளர்கள் மற்றும் ஜெ. பிரிவு ஈழ ஆதரவாளர்கள்.

Wednesday, May 6, 2009

கருணாநிதி இருந்தும் இல்லாத தேர்தல் களம்

தி.மு.க தன்னை புதிய தலைமைக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. தி.மு.வின் சரித்திரத்தில் முதன் முறையாக கருணாநிதி இல்லாமல் அடுத்த கட்டத் தலைவர்கள் மட்டும் களத்தில் உள்ளார்கள். வடசென்னையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திற்குப்பின் திருச்சியில் ஒரு கூட்டத்தில் கருணாநிதி பேசினார். அத்துடன் சரி. முதுமையும், தற்போதைய உடல் நிலையும் அவரை மீண்டும் மருத்துவமனைக்குள் முடங்கச் செய்துவிட்டது. இன்றைக்கு (மே 6) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் இணைந்து செய்யவிருந்த பிரச்சாரம் ரத்தாகிவிட்டது. இன்னும் இரு நாட்களுக்கு அவர் மருத்துவமனையில்தான் இருப்பார் என்று செய்திகள் கூறுகின்றன.

நிச்சயமாக தி.மு.க தொண்டர்களுக்கு இது ஒரு சோர்வை உண்டாக்கும். குறைந்தபட்சம் இன்னும் ஒரே ஒரு பிரச்சார மேடையிலாவது கருணாநிதி தோன்ற வேண்டும் என்று தீவிர உடன்பிறப்புகள் காத்திருக்கின்றார்கள். கருணாநிதி அப்படி ஒரு சாகசத்தை செய்யக் கூடியவர்தான். தற்போது வீல் சேரில் அசராமல் வலம் வருவதைப்போல, ஸ்டெரச்சரில் படுத்துக் கொண்டாவது ஒரு மேடையில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொன்னாலும் சொல்வார். அப்படி ஒன்று நடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கருணாநிதியின் விளம்பர மோகமும், எத்தனையோ கருத்துக்களும், அரசியல் நடவடிக்கைகளும் எனக்குப் பிடிக்காது. ஆனால் அவருடைய உழைப்புக்கும், எதற்கும் துவளாத குணத்துக்கும் நான் மிகப் பெரிய இரசிகன். இந்தக் குணத்தைப் பொறுத்தவரை, இன்றைய தேதியில் உலக அளவில் அவருக்கு ஈடு கொடுக்க எவரும் இல்லை. குறிப்பாக தி.மு.வில் எவரும் இல்லை.

இருந்திருந்தால் இன்றைக்கு சோனியாவுடன் அவர்கள் கருணாநிதியின் இடத்தை பிரச்சார மேடையில் நிரப்பியிருப்பார்கள். இன்றையக் கூட்டம் நடந்திருக்கும். இன்றைய பிரச்சாரக் கூட்டத்தின் ரத்து, தி.மு.வின் நிலையைத்தான் காட்டுகிறது.

கருணாநிதி இந்தத் தேர்தலை விட, தேர்தலுக்குப் பின் கட்சியின் தலைமையைப் பற்றித்தான் அதிகம் கவலைப் படுகிறார் என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பது சரியோ தவறோ, ஆனால் அவர் தேர்தலுக்கு முன் இன்னும் ஒரே ஒரு முறையாவது மேடையில் தோன்றி கர்ஜிப்பார் என்று காத்திருக்கிறேன்.

ஜெயலலிதா மட்டும் தனியாக வாள் சுழற்றுவது, ஜெயலலிதாவுக்கே அலுப்பாக இருக்கும். நீங்கள் இல்லாத தேர்தல் களம் பரபரப்பின்றி இருக்கிறது! வாருங்கள் கலைஞரே!

Tuesday, May 5, 2009

நேற்று ஜெ! இன்று புலிகள்! ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?

இலங்கைக்குச் சென்று வந்தஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஜி அவர்களின் சிடியில் அப்படி என்னதான் இருக்கிறது. அதைப் பார்த்த அடுத்த நாளே ஜெயலலிதா தீவிர ஈழ ஆதரவாளராக மாறிவிட்டார். அதைப் பார்த்து ஈழ ஆதரவாளர்கள் பலரும் ஜெயலலிதா ஆதரவாளராக மாறிவிட்டார்கள்.

தற்போது விடுதலைப் புலிகளே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை அணுகியுள்ளார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு அவருக்கிருக்கும் நல்லெண்ண உறவுகளைப் பயன்படுத்தி, ஈழப்போரை நிறுத்த உதவுமாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடேசன் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் ஆசிரமத்திலிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச்செய்தி உண்மையா பொய்யா என இதுவரை புலிகள் தரப்பிலிருந்து எதுவும் சொல்லப்படவில்லை.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால் போர் நிறுத்தம் என்றால் என்ன?
புலிகள் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில், தற்போது பிரபாகரன் தப்பி, பின்னர் பலம் திரட்டி மீண்டும் போரிடுவது.
இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழர்களை கொன்று குவித்து, உடனே பிரபாகரனை பிடித்து, மீண்டும் புலிகள் பலம் பெறுவதை தடுப்பது.

பிரபாகரன் தப்பிவிட்டால் புலிகள் மட்டுமல்லாமல் ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே மீண்டும் புத்துணர்வு பெறுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் பிரபாகரன் தப்பிவிட்டார் எனத் தெரிந்தால், அடுத்த கணமே இங்கிருக்கும் ஜெயலலிதா உட்பட அனைவரும் தங்கள் அரசியல் நிலையை மாற்றிக் கொள்வார்கள்.  ஜெ.பிரிவு ஈழ ஆதரவாளர்கள்தான் தர்மசங்கடப்படுவார்கள்.

இந்திராகாந்தி பாணியில் போரிட்டு, இலங்கையை பணிய வைத்து, தனி ஈழம் அமைப்பேன் என்று ஜெ மேடையில் முழங்கினாலும், இது வரையில் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் தனது கருத்து என்ன என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் புரிந்து கொண்ட வரையில் புலிகள் மேல் அவருக்கு இன்னமும் அபிமானம் வரவில்லை. இனியும் வரப்போவதில்லை. அதனால் அவர் தனி ஈழம் என்று கூறினாலும் தனி ஈழத்தின் தலைவராக பிரபாகரனை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் தீவிர ஈழ ஆதரவாளர்களோ தனி ஈழம் என்றால் அது பிரபாகரன் தலையில்தான் அமையும் என்று போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் என்ன விசித்திரம் பாருங்கள். கருணாநிதியின் இன்றைய அரசியல் நிலையால் பிரபாகரனை ஏற்காத ஜெயலலிதாவும், பிரபாகரனைத் தவிர வேறு எவரையும் ஏற்கத் தயாராக இல்லாதவர்களும் ஓரணியில் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அதாவது ஈழ ஆதரவு என்பது பின்னுக்குப் போய், கருணாநிதி எதிர்ப்பு என்கிற ஒரு கோட்டில் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டி. அந்த சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?

அன்று எம்.ஜி.ஆர் - இன்று கருணாநிதி : உடல்நிலை பற்றிய கிண்டல்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அவருடைய கடைசி காலத்தில் அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டார். அப்போது அதனை அருவருக்கத்தக்க வகையில், கடுமையாக கேலி செய்து தி.மு.க ஆதரவு செய்தித்தாளில் கிண்டல் செய்திகளும், கிண்டல் போட்டோக்களும் வெளிவந்தன.  அந்த கேலிகளையும் கிண்டல்களையும் கருணாநிதி அனுமதித்தார்.

காலச் சக்கரம் உருண்டோடிவிட்டது. இன்று கருணாநிதி சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டும், மருத்துவமனைகளில் இருந்து கொண்டும் அரசை நடத்தும் நிலைக்கு அவரை முதுமை வாட்டி எடுக்கிறது.

அன்று கருணாநிதி எம்.ஜி.ஆரின் உடல் நிலையை கேலி செய்தது போல, இன்று ஜெயலலிதா மேடை போட்டு கருணாநிதியின் உடல் நிலையை கேலி செய்கிறார். நாடகம் என்று கிண்டல் செய்கிறார். என்னை சந்திக்க பயந்து கொண்டு மருத்துவமனையில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று ஜோக் அடிக்கிறார்.

காலச் சக்கரம் யாருக்காகவும் நிற்பதில்லை!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

Sunday, May 3, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நினைத்துக் கொண்டு லோக்கல் ரௌடிகளாகிக் கொண்டு வரும் முட்டாள்கள்!

நேற்று ஐதராபாத்தில் பயிற்சி முடித்துவிட்டு கோவை மாவட்டம் மதுக்கரை ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். அதைப் பார்த்த சில அதிரடி ஈழ ஆதரவாளர்கள், இந்திய இராணுவம் இரகசியமாக இலங்கைக்கு ஆயுதம் எடுத்துச் செல்வதாக நினைத்து வீரர்கள் வந்த லாரிகளை வழிமறித்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். முதலில் பயந்து ஓடிய இராணுவ வீரர்கள் துணைக்கு அவர்களது தோழர்கள் வந்தவுடன் உருட்டுக் கட்டைகளால் திருப்பித் தாக்கியிருக்கின்றனர். வேடிக்கைப் பார்த்த பொது மக்கள் உட்பட, தடுக்க வந்த போலீஸ்காரர்களுக்கும், செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தத் தாக்குதலில் அடி விழுந்திருக்கிறது.

இது விரும்பத்தகாத சம்பவம். உலகப் பொருளாதாரச் சரிவால் ஏற்கனவே திடீரென வேலை வாய்ப்புகளை இழந்துள்ள இந்திய இளைஞர்கள், இது போன்ற சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விரக்தியான நிலையை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள், ஈழப் பிரச்சனை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா இரயில் எரிப்பு போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களில் உங்களை பலியாடாக்க முயல்வார்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். ஏற்கனவே தீக்குளிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன. சில குடும்பங்கள் அமைதியை இழந்து விட்டன. இப்போது நமது இந்திய இராணுவத்தினரையே அதுவும் இந்திய எல்லைக்குள்ளேயே, தாக்குவதென்பது பக்குவமற்ற முட்டாள்தனமான ரௌடித்தனமான செயல்.

இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கும். ஏன் நமது வீட்டுக்குள்ளேயே, ஒரு குறிப்பிட்ட அரசியல் விவகாரத்தில் அப்பாவுக்கு ஒரு கருத்தும், அம்மாவுக்கு ஒரு கருத்தும், மகனுக்கு ஒரு கருத்தும் இருக்கும். அப்படி இருக்கிறது என்பதற்க்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது போன்ற ஒரு கேவலமான அவலமான நிலைதான், நாமே நமது இராணுவத்தை தாக்குவதாலும் ஏற்படும்.

அதனால் மீண்டும் அறிவுறுத்துகிறேன். நீங்கள் எந்தக் கழகத்தை ஆதரித்தாலும் பரவாயில்லை. எந்தக் கழகத்தை எதிர்த்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தியாவையே எதிர்க்கிறேன். இந்திய இராணுவத்தையே எதிர்க்கிறேன் என்று நமது நாட்டுக்குள்ளேயே கலகம் பண்ணாதீர்கள். நஷ்டம் உங்களுக்குத்தான். உங்களைத் தூண்டிவிடுபவர்களுக்கல்ல.

உங்களைத் தூண்டிவிடுபவர்கள் அனைத்தையும் பணத்தால் அளப்பவர்கள். நீங்கள் தீக்குளித்தால் உங்கள் குடும்பத்துக்கு பத்து இலட்சம் கொடுத்துவிட்டு, அதனால் பத்து ஓட்டு கிடைக்குமா என்று கணக்குப் போடுபவர்கள்.
உங்களை இந்திய இராணுவத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டு, மோதவிட்டு அதை உணர்ச்சிகரமான செய்தியாக்கி, அந்தச் செய்தியை ஓட்டுகளாக்கி நாளைக்கு பதவிக்கு வந்ததும், நீங்கள் எதிர்க்கின்ற இதே இந்திய இராணுவத்தை காவலுக்கு வைத்துக் கொண்டு நாடாளத் துடிப்பவர்கள்.

நீங்கள் இப்படிச் செய்வதால் இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுடன் நிதானமாக சிந்தியுங்கள்!

Saturday, May 2, 2009

சங்கராச்சாரியார் அரெஸ்ட்டில் இழந்ததை ஈழ பிரச்சனையில் ஈடுகட்டப் பார்க்கிறார் ஜெ!

சில வருடங்களுக்கு முன், மக்களுக்கு விளங்காத ஒரு மர்மப்பிரச்சனையில் சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையிலடைத்தார் ஜெயலலிதா. பொம்பளை நரேந்திர மோடி என்று ஜெயலலிதாவை ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையும் கூட. பாபர் மசூதியில் இராமர் கோவிலைக் கட்டாவிட்டால் வேறு எங்கே கட்டுவதாம் என்கிற அவருடைய பிரபலமான பஞ்ச் டயலாக், அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் ஹிந்து தீவிரவாத முகத்தின் ஒரு பக்கம். சான்ஸ் கிடைத்தால் இவரும் நரேந்திர மோடி அளவிற்கு கோர தாண்டவம் ஆடக் கூடியவர் என்பது என் எண்ணம்.

ஆனால் அவருடைய சங்கராச்சாரியார் அரெஸ்ட், கொஞ்சம் மென்மையான ஹிந்து ஆதரவாளர்களை அசைத்துவிட்டது. உதாரணத்திற்கு எஸ்.வி.சேகரின் புலம்பல்கள். அந்தப் புலம்பல்கள் ஜெவிற்கு எதிரான வாக்குகளாக மாறுகின்ற அபாயம் வந்தபோது, அதை ஈடுகட்ட ஈழப்பிரச்சனை அவருக்கு வாய்த்துவிட்டது.

ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் எவரும் மனம் மாறி கருணாநிதிக்கு வாக்களிக்கப்போவதில்லை.
அதே போல தனி ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் மனம் மாறி ஜெவிற்கு வாக்களிக்கப்போவதில்லை (உதாரணத்திற்கு கருணாநிதியை சூழ்நிலைக் கைதி என்று வர்ணித்துவிட்டு காங்கிரஸை மட்டும் எதிர்க்கக் கிளம்பியிருக்கும் தமிழ்திரையுலகம்).

ஆனாலும் அங்கே சங்கராச்சாரியார் அரெஸ்டால் சிதறிய வாக்குகளை, இங்கே ஈழ ஆதரவாளர்களின் கருணாநிதி எதிர்ப்பு வாக்குகளை வைத்து சரி கட்டிக் கொள்ளலாம் என்று ஜெ கணக்கு போட்டிருக்கிறார்.

அவர் கணக்கு தவறாமலிருக்க வை.கோ, இராமதாசு மற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள் துணை போயிருக்கிறார்கள்.
அந்தக் கணக்கு பொய்க்க வேண்டுமென்று கருணாநிதி (உண்ணாவிரதம் உட்பட) என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேர்தல் இந்த கணக்கை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் முடிந்தவுடன் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, அனைவரும், வாக்காளர்கள் உட்பட அனைவரும் ஆளுக்கொரு திசைக்கு பறந்துவிடுவார்கள்.

ஈழப்பிரச்சனையும், சங்கராச்சாரியார் மர்மமும் அப்படியேதான் இருக்கப் போகிறது.

அழகிரியின் 5000ம் ரூபாயும் - அம்மாவின் 50 நாள் ஈழ ஆதரவும்

தமிழக வாக்காளர்களைப் பொறுத்தவரையில் . . .
50 ரூபாய் பிரியாணிக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
ஜெயலலிதாவின் 50 நாட்கள் ஈழ ஆதரவிற்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
அழகிரியின் 5000ம் ரூபாய்க்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
கருணாநிதியின் வீல் சேர் முதுமைக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
நேரு குடும்பத்து வாரிசுகளுக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
திருமாவின் தலித் முழக்கத்திற்கு  விலை போகிறவர்கள் ஒரு வகை
சிறுபான்மை ஆதரவு கோஷங்களுக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை


மொத்தத்தில் ஏதாவது ஒன்றிற்கு விலை போவதில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் ஒரே வகை.

ஆனால் தற்போது வாக்காளர்களின் பேராதரவுடன் முன்னணியில் இருப்பது . .
அழகிரியின் 5000ம் ரூபாயும்
அம்மாவின் 50 நாள் ஈழ ஆதரவும்
இரண்டுமே தேர்தல் முடிந்தவுடன் நின்று போகும்.

Friday, May 1, 2009

ஜெயலலிதாவின் அருகில் பெட்டைகளாக, பேடிகளாக கம்யுனிஸ்டுகளும், வை.கோவும் - சுதர்சனம்

இன்றைக்கு திருச்சியில் தி.மு.க கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. முதன் முறையாக காங்கிரஸ் கட்சியின் சுதர்சனம் மேடையில் பேசியதைப் பார்த்தேன். நறுக்கென்று பேசாமல் கொஞ்சம் வழ வழா கொழ கொழாவாகத்தான் பேசினார். ஆனால் அவர் பேசிய ஒரு பாயிண்ட் எனக்குப் பிடித்திருந்தது.

”சேது சமுத்திரம் திட்டம் துவங்கிய போது அது என்னால்தான் நடந்தது என்றார் வை.கோ. எங்களால்தான் நடந்தது என்றார்கள் கம்யுனிஸ்டு தோழர்கள். ஆனால் அவர்களை அருகில் வைத்துக் கொண்டே சேது சமுத்திர திட்டத்தை நிறுத்துவோம் என்பதை வலியுறுத்தி ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது அதை எதிர்த்துப் பேச முடியாமல் பெட்டைகளாகவும், பேடிகளாகவும் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்” என்றார்.

உண்மைதான்! நான் ஒரு காலத்தில் மிகவும் மதித்த வை.கோ.வும், இந்த தேர்தலுக்கு முன்பு வரை என்னை வசீகரித்த கம்யுனிஸ்டுகளும் ஜெயலலிதாவின் முன் பேடிகளாகவும் பெட்டைகளாகவும்தான் அமர்ந்திருந்தார்கள்.