Wednesday, March 3, 2010

கதவைத் திறந்தால்? மீண்டும் ஒரு சாமியார் கதை!

இரு மாதங்களுக்கு முன் விவேகானந்தர் பாறை போயிருந்தேன். நான் விரும்புகிறபடி, ”எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்களை எனக்குத் தாருங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்”, என்று நம்பிக்கை கொடுத்தவருக்கு ஞானம் பிறந்த இடம். தியான மண்டபத்தில் உஸ் . . உஸ் .. என்று யாரோ ஒருவர் வாய் மேல் விரல் வைத்து அதட்டிக் கொண்டிருக்க, உள்ளே வருபவர்கள் ஒரு கணத்தில் அடங்கி இருளில் துழாவி தியானம் செய்ய அமர்கிறார்கள்.

அணைக்கப்படாத செல்போன் கூப்பாடுகளால் கவனம் குவிக்க முடியாமல், இந்த தியானம் எதை நோக்கி? என்ற கேள்வியுடன் நானும் அமர்ந்திருந்தேன். நான் பனகல் பார்க் ராமகிருஷ்ணா மிஷனில் பிளஸ் டு படித்தபோது அடிக்கடி இப்படி உட்கார வைப்பார்கள். அப்போதும் இதே கேள்விதான்.  இது போல பல தியானங்கள், ஆராதனைகள், அன்னதானங்கள் பங்கு பெற்றிருக்கின்றேன். எல்லாமே தனியார் அல்லது சாமியார் சம்பந்தப்பட்டவை. என்னை அழைத்துப் போன நண்பர்கள் எல்லோருமே ”இந்த சாமியார்தான் பெஸ்ட்” என்றார்கள். அதற்கு விளக்கங்களும் வைத்திருந்தார்கள்.

இந்த விளக்கங்களையும், சாமியார்களையும் எப்போதும் கேலி செய்கிற நண்பர் ஒருவருடன் இந்த ஞாயிற்றுக்கிழமை மெரினா பீச்சுக்கு சென்று கொண்டிருந்தேன். காரை செலுத்தியபடியே அவர் சுவாமி நித்யானந்தா பற்றி சிலாகிக்க ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியம். ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நித்யானந்தா நிச்சயமாக ஏதோ சக்தி உடையவர். தூர இருந்து பார்க்கும்போது ஒல்லியான சரீரத்துடன் இருக்கும் அவர், அருகில் செல்லும்போது மிகப்பெரிய உருவாமாக காட்சியளித்தார் என்றார் பிரமிப்புடன்.

அவருடைய பிரமிப்பு இன்றைய சன் செய்திகளை பார்த்தவுடன் என்னாவகியிருக்கும் என்று யோசிக்கிறேன். எனது நண்பரைப் போலவே இலட்சக் கணக்கில் அவரை ஆராதிக்கும், நம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே அதிர்ந்து போயிருப்பார்கள். குமுதம்  அவரை தொடர்ந்து புரமோட் செய்து வருகிறது. இந்த செய்திக்குப் பின் குமுதம் என்ன செய்யும் என்பதும் என்னால் யூகிக்க முடியாததாக இருக்கிறது. Zero degree சாரு திடீரென நித்யானந்தா பக்தராக மாறி வலையுலகில் கிட்டத்தட்ட நித்யானந்தா கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறி நடந்துவருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் யோசிக்கிறேன்.

ஒரு வருடத்திற்கு முன் என் தம்பி, நித்யானந்தாவின் நேரடி பார்வையில் நடைபெற்ற ஒரு வகுப்பிற்கு போய் வந்தார். முன் பின் அறிமுகம் இல்லாத ஆண், பெண்களை கட்டிப்பிடித்தபடி சில பயிற்சிகள் செய்யச் சொல்கிறாரகள். அவர் ஒரு ஃபிராட் என்றார். அவரைப் போலவே நித்யானந்தாவை சந்தேகித்து பரிகசித்தவர்கள் சிலர். அவர்கள் எல்லோரும் ”நான் அப்பவே சொன்னேன் பார்த்தியா?” என்று ஆனந்தப்படக் கூடும்.

இன்றைய சாமியார்கள் எனப்படுவர்கள் யார்?.தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத வெறுமனே மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது. இன்றைய சன் செய்தி பரபரப்பும் அப்படிப்பட்ட ஒரு பலவீனத்தின் அம்பலம்தான்.

இந்த பலவீனத்தை மறைக்கத்தான் அந்த சாமியார்கள் தனி மனிதனாக நின்று போதிக்காமல், ஆசிரம், ஏ.சி, விமானம், பாதுகாவலர்கள், சிஷ்யர்கள் என்று ஒரு நிறுவனமாக மாறிப் போகின்றார்கள்.  எல்லாவற்றுக்கும் விலை வைக்கின்றார்கள். There is no free lunch என்பார்கள். இது ஏமாளி பக்தர்களுக்கு மட்டுமல்ல, ஏமாற்றும் சாமியார்களுக்கும் பொருந்தும். நித்யானந்தா கொடுத்த விலையை இன்று சன் டிவி காட்டிவிட்டது.


விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் இந்த சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.

சன் டிவிக்கு ஒரு கண்டனம்
நித்யானந்தாவை அம்பலப்படுத்தியது நல்ல விஷயம்தான். ஆனால் உடனிருப்பது R என்ற பெயரில் ஆரம்பிக்கும் நடிகை என்று கூறி பல நடிகையர்களின் மேல் சந்தேகம் வர வைத்தது விஷமத்தனம்.

Tuesday, March 2, 2010

இந்தியர்கள் சகிப்பின் உச்சம். மற்றவர்கள் சகிப்பின் எ - - - -

அசிரத்தையாக துபாய் மியுசியம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, நண்பர் மீனாட்சி சுந்தரம் கோவிலுக்கு போய்விட்டு வரலாம் என்றார். துபாயின் அவசர வாழ்க்கையிலும் தினம் தியானம் பண்ணி கடவுளை வழிபட்டு பிறகு காரில் ஏறிப் பறப்பவர் அவர். அதனால் அவர் அழைத்ததும் வருகிறேன் என்றேன். எனக்கு கோவில் பிரசாதங்களின் மேல் அலாதி பிரியம்.

நம்ம ஊர் மினி ஹால் திருமண மண்டபங்களின் வாசலைப் போல, விசாலமும் இல்லாமல் குறுகலாகவும் இல்லாமல் ஒரு இடம். இங்குதான் கோவில் நுழைவாயில். ஷீவைக் கழற்றி இலவச ஸ்டாண்டில் வைத்துவிட்டு, காமிராவை ஆயத்தப் படுத்தினேன். நண்பர் தயவுசெய்து கிளிக் செய்யாதீர்கள், வந்திருப்பவர்கள் அசௌகரியப்படுவார்கள் என்றார். நான் பதில் பேசவில்லை. காமிராவை ஜீன்ஸ் பாண்டுக்குள் சிரமப்பட்டு நுழைத்தேன்.


பெருமாள் பூகடை என்ற தமிழ் போர்டு மட்டும் ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அந்த குறுகலான நுழைவாயிலின் இருபுறமும் வடஇந்தியர்களின் வழக்கப்படி மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை விற்ற பெட்டிக் கடைகளே நினைவில் நிற்கின்றன. கிட்டத்தட்ட சென்னை ரங்கநாதன் தெருவை நேர்வகிடாக கால்வாசி வெட்டி வைத்ததுபோல குறுகல். ஆனால் எந்தக் கடையிலும் காதைக் கிழிக்கும் சாமி குத்துப்பாட்டுகள் இல்லை.


இரும்பு படிக்கட்டுகளால் ஆன படியேறி மாடிக்கு மேலே சென்றால் கோவில் இருக்கிறது. அதை கோவில் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். ஒரு மார்வாடி வீட்டு வரவேற்பறை போல உள்ளது. திருநீர் இல்லை, குங்குமம் இல்லை. தீபங்கள் இல்லை, பத்திகள் இல்லை. வேத கோஷங்கள் இல்லை, கோவில் மணி இல்லை. தேங்காயும் உடைக்கப்படுவதில்லை. தேங்காய் லிங்கத்தின்(லிங்கம்தானே?) அருகில் காண்பிக்கப்பட்டு பெரிய கருமை நிற பிளாஸ்டிக் கோணியில் திணிக்கப்படுகிறது. ஆனால் அங்கேதான் இந்து மத பக்தர்கள் கூடுகிறார்கள்.

பூசாரி மற்றும் பக்தர்கள் உட்பட அனைவருமே மௌன விரதம் இருப்பவர்கள் போல மனதுக்குள் முனகிக்கொண்டே பிரார்த்தனை செய்தார்கள். நான் அங்கிருந்த சாமிப்பட கண்ணாடிகளில் என் முகம் பார்த்துவிட்டு, தரையில் சாஷ்டாங்க நமஸ்காரத்தில் இருந்தவர்களை இடறாமல் பிரசாதம் எங்கே என்று தேடினேன். நாமே அங்கிருந்த பேப்பர் தட்டுகளை எடுத்துக் கொண்டு வரிசையில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தபோது நண்பரும் நமஸ்காரத்தை முடித்துவிட்டு வந்துவிட்டார். பிரசாதத்துடன் படி இறங்கினோம். கோவில் எப்படி இருக்கிறது? என்றார். பிரசாதம் சுமார் என்றேன்.


புன்னகைத்துக் கொண்டே வாங்க அங்க போலாம் என்றார். அவர் கை காண்பித்த இடம் கிருஷ்ணன் கோவிலாம். அங்கேயும் பளபள மொசைக் தரையில் சைலண்ட் பக்தர்கள் மற்றும் பூசாரிகள். நிஜமாவே இன்னமும் கூட்டம் சேராத ஒரு கல்யாண வீடு போலவே இருந்தது. கிருஷ்ணர் எங்கே இருக்கிறார் என்று தேடியபோது, பக்கத்து காம்பவுண்டில் இருந்த மசூதியில் இருந்து இறை அழைப்பு ஒலித்தது. அதன் பிண்ணனியில் இந்து பக்தர்கள் கை கூப்புவது எனக்கு வித்தியாசமாக இருந்தது. மசூதியின் இறை வணக்கம் முடிந்தபின், பூசாரி ஏதோ ஒரு ஆம்ப்ளிபயரை முடுக்கினார். சன்னமாக ஏதோ பஜன் கேட்டது.


வெளியில் வந்து ஷீவை மாட்டும்போது சீக்கிரம் வாங்க நேரமாகிவிட்டது என்று யாரோ அழைக்க கடைசி நேர பக்தர்கள் அவசரமாக உள்ளே ஓடினார்கள். நண்பர் கடைசியாக ஒரு முறை கோவிலை திரும்பி பார்த்துவிட்டு, ராசியான கோவில், வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்றார்.


நம்ம ஊர் தைப் பூசம் போல வேல் வேல் வெற்றி வேல் என்றும், ஐயப்ப பக்தர்கள் போல சாமியேய் சரணம் ஐயப்பா என்றும், திருப்பதி மலையை நிறைக்கும் கோவிந்தா கோவிந்தா என்றும் இங்கே தினமும் இந்த அரபு மண்ணில் குரல் கொடுக்க அனுமதி வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் இந்த சாமிகளால் அருள் பாலிக்க முடியுமா?


அந்த சாமிகளால் நிச்சயமாக முடியாது. ஆனால் அந்த அரபு மண்ணின் கட்டுப்பாடுகளை ஏற்று தனது ஆகம விதிகளை குறுக்கிக் கொண்ட கோவில்களைப் போல, அரபு மண்ணின் விதிகளை ஏற்று தனது ஆன்மீக அடையாளங்களை சுருக்கிக் கொண்ட பக்தர்களின் சகிப்புத் தன்மையை நான் பாராட்டுகிறேன்.


பின் குறிப்பு

கத்தார் நாட்டு்க்கு குடியுரிமை வாங்கிச் சென்றுள்ள  ஓவியர் திரு. எம்.எஃப் உசேன் அவர்களுக்கு சில விஷயங்கள்.


மத அடையாளங்களை கடைபிடிக்கின்ற விஷயத்தில், துபாயுடன் ஒப்பிடும்போது கத்தார் மிகவும் கெடுபிடியான நாடு.

துபாயில் வசிக்கின்ற இந்தியர்கள், தான் வாழும் மண்ணுக்கேற்ப தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டும் அந்த வேதனைகளை சகித்துக் கொண்டும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை ஒரு முறை அவர்களை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளுங்கள்.


கத்தாருக்கு குடியுரிமை பெற்ற சூட்டோடு, அந்த மண்ணின் இயல்புகளை, புனிதங்களை கலை என்ற பெயரில் மறுக்கவோ, நிர்வாணப்படுத்தவோ முயற்சிக்காதீர்கள்.

உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் இந்தியாவில் மட்டுமே இடமுண்டு. எனவே உங்கள் தூரிகை அத்து மீற நினைக்கும்போதெல்லாம் இந்தியா வாருங்கள். இந்தியர்கள் சகிப்பின் உச்சம். மற்றவர்கள் சகிப்பின் எ . . .

Saturday, February 27, 2010

சுஜாதா நினைவாக இசை ரெடி - கேட்டுப்பாருங்க



இந்த முறை டிவிட்டர்கள் சந்திப்பை சுஜாதா நினைவு சந்திப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் முடிவானது. ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதாவின் கவிதை எதையாவது இசையமைக்கலாம் என்று முடிவு செய்தேன். முதலில் சுஜாதாவின் குறள் உரையை இசை வடிவில் தரமுடியுமா என்று சிந்தித்தேன். அதை நெட்டில் தேடியபோது முதலில் கண்ணில் சிக்கியது கீழே இருக்கும் கவிதை. சந்தம்-கிந்தம், மீட்டர் - கீட்டர் எல்லாம் பற்றி சிந்திக்கவே இல்லை. கனமான ஒரு சப்ஜெக்ட் படிப்பதற்கு இலகுவானதாக இருக்கவே அதையே இசைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

இசை என்றால் உடனே நான் அடுத்து போய் நிற்பது நண்பர் விவேக் நாராயண் இல்லம் தான். அவசரம் கருதி போன் போட்டேன். எந்தக் கவிதை என்று கேட்காமலயே சரி என்றார். நேற்று மதியம் வந்து கவிதையை படித்துவிட்டு எதையோ முணுமுணுத்துவிட்டு டியுன் ரெடி என்றார். எப்போ ரெக்கார்டிங் என்றேன். நாங்கள் எப்போதுமே அப்படித்தான். சட்டென சிந்தித்து, பட்டென முடிக்கப்பார்ப்போம். இரவு வா என்று சொல்லவிட்டு மாலை போனில் அழைத்தார்.

வா !
அப்புறம் வா !
போய்விட்டு அப்புறம் வா !
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

சுஜாதாவின் கடைசி வரி தனித்தனி வார்த்தைகளாக படிக்கும்போது எப்படி ஜாலம் காட்டுகிறது பாருங்கள். எனவே அதையே துண்டுப்பல்லவிகளாக பயன்படுத்திக் கொண்டோம்.

ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதா பற்றி அல்லது அவருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனங்கள் அல்லது நினைவுகளை பல குரல்களில் பாடலின் இடையே இணைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதற்க்க்காக இணைய நண்பர்களை அணுகியிருந்தேன். பலரும் தயங்க, இருவர் மட்டும் அனுப்பியிருந்தார்கள்.

ஜமால்(adiraijamal@gmail.com) சரியில்லேன்னா சொல்லுங்கண்ணே, திரும்ப அனுப்பறேன் என்று தனது குரலை அனுப்பியிருந்தார். சுந்தரவதனம்(vadanan2006@yahoo.co.in) .mp4 பார்மட்டில் மொபைல் போனில் பதிவு செய்த தனது குரலை அனுப்பியிருந்தார். இன்று காலை 11 மணி வரை வேறு ஏதாவது குரல்கள் வருகிறதா என்று காத்திருந்துவிட்டு, பாடல் பதிவை முடித்துவிட்டோம்.

வீட்டிலேயே எளிமையாக ரெக்கார்டிங் செய்யப்பட்டது. சுஜாதாவின் நினைவாக!

பாடலை கேட்கும்போது வரிகளை இரசிக்க, வரிகள் கீழே தரப்பட்டுள்ளது. இங்கே கிளிக் செய்து பாடலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !