Showing posts with label அவர். Show all posts
Showing posts with label அவர். Show all posts

Friday, July 13, 2012

ஆண்டோ பீட்டர்

ஆண்டோ பீட்டர்!
என் நண்பர். ஆனால் அதிகம் பேசிப் பழகாத நண்பர். சில நட்புகள் அப்படி அமைந்துவிடும். எப்போதும் நினைவில் இருப்பார்கள். ஆனால் பேசிக் கொள்கிற சந்தர்ப்பம் வாய்க்காது.

அந்தக்கால Tiff முதல் இன்றைய Tam, Tab மற்றும் Unicode வரை தமிழ் எழுத்துருக்களை(font) உருவாக்குவதில் நிறைய பங்காற்றியவர். சிங்கப்பூரில் TI Internet 2000 தமிழ் இணைய மாநாடு நடந்தபோது, கொஞ்சம் நெருக்கமாகப் பழகினோம். அப்போதுதான் www.tamilcinema.com துவங்கியிருந்தார். மாநாட்டில் The future of Tamil ezines பற்றிப் பேச வேண்டும். எதிர்காலத்தில் இணையப் பத்திரிகைகள் நிச்சயம் கொடிகட்டிப் பறக்கும். பல பத்திரிகைகள் உருவாகும் என்று அப்போதே கணித்து சொன்னார். இன்று வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமா.காம் அதற்கு சாட்சி.



ஆண்டோ பீட்டர், கம்ப்யூட்டர் உலகம் பத்திரிகை ஆசிரியர் மகேந்திரன் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். அதனால் பெரும்பாலான சந்திப்புகள் மகேந்திரன் இருக்கும்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பின் போதும், ஏதாவது புத்தகம் எழுத வேண்டும், கைடு தயாரிக்க வேண்டும், விஸ்காம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும், சாஃப்ட் வியூ நிறுவனத்துக்கு விளம்பரம் எடுக்க வேண்டும் என்று ஏதாவது காரணங்கள் இருக்கும். ஆனால் என்னவோ தெரியவில்லை, இதுவரை அவருடன் இணைந்து எந்த புராஜக்டும் செய்ய வாய்க்கவில்லை.

ஆனால் என்ன விசித்திரம் பாருங்கள். CSC நிறுவனர் திரு.ஐயம்பெருமாள் அவர்கள் மறைந்தவுடன் அவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வாய்ப்பு கிடைத்தது. அந்த புத்தகத்திற்கு அணிந்துரை ஆண்டோ பீட்டர்தான். நான் இன்னும் அந்த அணிந்துரையை வாசிக்கவில்லை. அடுத்தவாரம் வெளியிடப்படுவதாக தேதி குறிக்கப்பட்டுள்ள அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவேமாட்டார் என்பது என்பது வாழ்வின் விசித்திரங்களைச் சொல்வதாக இருக்கிறது.

கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருந்த போது, Add Friend என்ற அறிவிப்புடன் ஆண்டோ பீட்டரின் புகைப்படத்தை பார்த்தேன். ஒரு நிமிடம் நிதானித்து அப்புறம் என்று ஒத்தி வைத்துவிட்டேன்.

ஆனால் இன்று அவர் மறைந்துவிட்டார். அவரை ஃபேஸ்புக்கில் நண்பராக ஏற்றுக் கொண்டிருந்திருக்கலாமோ? கடைசியாக ஒரு ஹலோ சொல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!

Wednesday, January 5, 2011

ஒரு மனிதன் எப்போது மாமனிதனாகிறான்?

ஒரு மாபெரும் பாடகரின் வாழ்க்கையில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்.
(எப்போதோ ஒரு பழைய புத்தகத்தில் வாசித்தது)

மிகப் பெரிய நடிகர் நடிக்கவிருந்த படத்தின் பாடல் பதிவிற்க்காக ஒரு இரவுப் பயணம்!  சீர்காழியிலிருந்து திருச்சி வழியாக காலையில் சென்னை அடைந்த அந்தப் பாடகருக்கு ஒரு அதிர்ச்சி. பாடலின் ஒலிப்பதிவு குறிப்புகள் உட்பட, அவரின் உடமைகள் அனைத்தும் காணவில்லை.

உடமைகளை விட பாடல் குறிப்புகள் காணாமல் போனதில் அவருக்கு மிகவும் வருத்தம். குறிப்புகளின் உதவியின்றி இன்று ஒலிப்பதிவு சிக்கலாகப் போகுமே என்று வருந்தியபடியே ஒலிப்பதிவுக் கூடம் வந்தார்.

அங்கு அவருக்கு இரண்டாவது அதிர்ச்சி. இம்முறை இன்ப அதிர்ச்சி.
அங்கு ஒரு நடுத்தர வயதுடைய நபர், தொலைந்து போன அனைத்தையும் கைகளில் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.

மகிழ்ச்சி தாங்கவில்லை பாடகருக்கு! நேரே அவரிடம் சென்று,
”இந்த பை உன்னிடம் எப்படி வந்தது?” என்றார்
”ஐயா நான் ஒரு திருட்டுப் பய. நேற்று ராத்திரி திருச்சியில உங்க கிட்ட இருந்து நான்தான் இதுகள திருடினேன். திருடுனத பார்த்துக்கிட்டிருக்கும் போது தற்செயலா இந்த நோட்டு புத்தகத்தை கவனிச்சேன். இதிலதான் இந்த விலாசம், பாட்டு குறிப்பெல்லாம் இருந்துச்சு. இவ்வளவு பெரிய பாடகர்கிட்ட இருந்து திருடிட்டோமேன்னு வருத்தமாகிடுச்சு. என்னால் உங்களுக்கு எந்த சிரமமும் வரக்கூடாதுன்னு மனசு அடிச்சிக்கிச்சு.  உடனே சென்னை பஸ் பிடித்து வந்துவிட்டேன். எனனை மன்னிச்சுடுங்க ஐயா”

அதைக் கேட்டதும் பாடகருக்கு உள்ளம் நெகிழ்ந்துவிட்டது.
”ஏம்ப்பா.. இவ்வளவு நல்லவனா இருந்துகிட்டு ஏன் திருடிப் பிழைக்கிற?  உழைத்து சம்பாதிக்கலாமே...”
”ஐயா, நானா மாட்டேன் என்கிறேன். சின்னவயசுல மூளைகாய்ச்சல் ஏற்பட்டு ஒரு கை சூப்பிவிட்டது. இதை காரணமா வச்சே யாரும் எனக்கு வேலை தரவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தேன். பட்டினிதான் மிச்சம். அதனால் குடும்பத்தைக் காப்பாத்த, வேற வழி இல்லாம திருட ஆரம்பிச்சுட்டேன். நல்ல வேலை கிடைச்சா உடனே திருட்டை விட்டுவிடுவேன்”.
”அவ்வளவுதான.. இதோ உனக்கு வேலை ரெடி”

அடுத்த சில நிமிடங்களில் ஒலிப்புதிவுக் கூடத்தின் எதிரிலேயே இருந்த ஒரு  டீக்கடையில் அந்த திருடனை வேலைக்கு சேர்த்துவிட்டார் பாடகர்.

அன்றிலிருந்து சென்னை வரும்போதெல்லாம், அந்த டீக்கடையில் மனம் திருந்தியவரை நலம் விசாரித்துவிட்டுதான் பாடகர் தன் ஊர் திரும்புவார். இப்படியே சில வருடங்கள் சென்றன.

திடீரென ஒரு முறை அந்த நபரை பார்க்க முடியவில்லை. பாடகருக்கு ஏனோ தெரியவில்லை, மனது பதறியது. விசாரித்ததில் ஒரு வாரமாகவே அந்த நபர் வேலைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. அவ்வளவுதான், தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே அவரைத் தேடி, வேலூருக்கு பஸ் பிடித்துவிட்டார். வழியெல்லாம் அந்த நபர் மீண்டும் திருட்டு தொழிலில் இறங்கியிருப்பாரோ என்ற பதற்றத்துடனேயே, மளமளவென்று விசாரித்து அந்த நபரின் வீட்டுக்கும் சென்றுவிட்டார்.

பாடகர் தன் வீட்டுக்கு வந்ததைக் கண்டதும் அந்த நபருக்கு பதறிவிட்டது. எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரு மாபெரும் மனிதர் தனது வீட்டுக்கு வந்திருப்பதைக் பார்த்ததும் அந்த நபர் கண் கலங்கிவிட்டார்.

”ஐயா என்னை பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க?”
”இல்லையப்பா. நான் உன்னை பார்க்க வரவில்லை, நீ மறுபடியும் திருட்டுத் தொழிலுக்கு போகமாட்டாய் என்று, நான் உன் மேல் வைத்திருந்த நம்பிக்கை உண்மையா, பொய்யா என்பதை உறுதி செய்ய வந்திருக்கிறேனப்பா” என்றார்

இதைக் கேட்டதும் அந்த நபரின் குடும்பமே நெகிழந்து போய் கண்ணீர் விட்டது.

”ஐயா என்னுடைய முதல் குழ்ந்தைக்கு திடீர்னு மூளைக்காய்ச்சல் வந்திடுச்சு. மருத்துவம் பார்க்க டீக்கடை முதலாளிகிட்ட பணம் கேட்டு கெஞ்சினேன். ஆனா அவர் ஈவு இரக்கம் இல்லாம மறுத்துட்டார். அந்தக் கோபத்துல தான் நான் ஊருக்கே திரும்பிட்டேன். குழந்தைக்கு வைத்தியம் பார்க்க பணம் போதவில்லை. இப்படியே போனால் நான் மறுபடியும் திருடனாகி, என்னைப் போலவே, எனது குழந்தையும் திருடனா ஆகிடுவானோன்னு எனக்கு பயமா இருக்கு” என அவர் கதறியபடியே சொன்னார். அதைக் கண்டதும் பாடகர் ஒரு வினாடி கூட யோசிக்வில்லை.

”கவலைப் படாதே உனக்கு முருகன் துணை இருக்கிறான்”,என்று சொல்லி அரசு மருத்துவமனையில் உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு தேவையான மருந்துகளை தனது சொந்த செலவிலேயே வாங்கித் தந்தார். அத்துடன் நிற்காமல் திருச்சியிலேயே தனது மைத்துனரின் ஜவுளிக்கடையில்  நல்ல வேலையும் வாங்கித் தந்தார்.

அன்று செத்துப் பிழைத்த அந்தக் குழந்தை பிற்காலத்தில் ஒரு I A S அதிகாரியாக தமிழக கல்வித்துறையின் இயக்குனராக உயர்ந்தார்.
அந்த IAS அதிகாரி தனக்கு பணி நியமனம் கிடைத்தவுடன் தனக்கு வாழ்வளித்த பாடகரிடம்  ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள அவருடைய வீட்டிற்க்குச் சென்றார். அங்கு அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அவருக்கு உப்பிட்டவர் அமரராகியிருந்தார். அவர் வாழ்வில் விளக்கேற்றியவர் ஜோதியில் ஐக்கியமாகியிருந்தார். கண்களில் நீர் வழிய அவருடைய படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, தான் யார் என்பதை கனத்த மனதுடன் பாடகரின் குடும்பத்தினரிடம் சொன்னார்.

அதைக் கேட்டதும் அந்தக் குடும்பத்தினர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
”அப்படியா...! உங்களுக்கு உதவி செய்ததை அவர் இது வரை எங்கள் குடும்பத்தினர் எவரிடமும் சொன்னதே இல்லை. அவரால் முன்னேறியுள்ள உங்களை அவரது ஆன்மா மேலும் வழிநடத்தும்” என்று ஆசிர்வதித்தனர்.

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பவனே சிறந்த வள்ளல் என்பார்கள். அது போல...எத்தனை பெரிய உதவி. ஆனால் அதை தனது குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் ஒருவர் செய்திருக்கிறார் என்றால், அவர் மனிதரே அல்ல. கடவுளின் தூதர்!

ஒரு மகானைப் போல நம்மிடையே வாழ்ந்து மறைந்த அந்த உன்னத மனிதர், பாடகர் திரு. சீர்காழி கோவிந்தராஜன்.

அவரின் பாடலைக் கேட்கும் போதெல்லாம் உள்ளம் உருகுகிறதே ஏன்? அவரின் உச்சரிப்பில் ஒவ்வொரு வார்த்தையும் உயிர் பெறுகிறதே ஏன்?

அவர் தனது உதடுகளிலிருந்து பாடவில்லை, தனது உள்ளத்திலிருந்து பாடினார். அதனால்தான் இறைவனின் அருளை தமிழமுதமாக உலகமெங்கும் இன்னமும் காற்றில் நிறைத்துக் கொண்டிருக்கிறார். அவர் குரல் கேட்காத நாள் என்று எதுவுமில்லை. அவர் குரல் ஒலிக்காத கோவிலென்று ஏதுமில்லை. அதுவே அவரது நிரந்தரப் புகழுக்கும், உன்னத வாழ்வுக்கும் சாட்சி!

"தாயாகி அன்பு பாலுட்டி வளர்த்தாய்,
தந்தையாகி நின்று சிந்தை தெளிர்த்தாய்,
குருவாகி எனக்கு நல்லிசைதந்தாய்,
ஞானகுருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீஎன்றும் என் உள்ளம் நிறைந்தாய்”

வாழ்வை தவமாக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்!

Monday, August 30, 2010

டாய் கடவுளே ...

தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், 3 அ.தி.மு.கவினருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த வழக்கில் சாட்சியங்கள் எல்லாம் பின் வாங்கினார்கள். பார்க்கவே இல்லை என்றார்கள். ஃபைல்கள் காணாமல் போயின. மறைமுகமாக மிரட்டினார்கள். வாய்தா..வாய்தா..வாய்தா என்று இழுத்தடித்தார்கள். இரக்கமின்றி செயல்பட்ட அ.தி.மு.வினருக்கு சாதகமாக வழக்கு திருத்தப்பட்டது.

ஆனால் எல்லோரும் கைவிட்டாலும், பின் வாங்கினாலும், அரசியலும், அரசாங்கமும், நியாயங்களும், தர்மங்களும் எதிராக இருந்தாலும், வீராசாமி என்ற ஒரு தனி நபர் மட்டும் தொடர்ந்து போராடினார்.

அவர், அஞ்சவில்லை, அயரவில்லை, சலிக்கவில்லை, விட்டுக் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனைவி மனநிலை பாதிக்கபட்டாலும், கண்ணீருக்கிடையில் கள்ளத்தனங்களை வென்றார்.

அவர்...
அந்த பஸ்ஸில் எரிந்து போன மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி! அவருக்கு என் வணக்கங்கள்!

காலம் கடந்தாலும், சட்டம் வென்றது, நியாயம் வென்றது, தர்மம் வென்றது என்று இந்த சமூகம் மார் தட்டிக் கொண்டாலும், அநியாயமாக பறிபோன உயிர்களுக்கும், அதை நினைத்தே அழுது கொண்டிருக்கும் உயிர்களுக்கும், யார் என்ன ஆறுதல் சொல்ல முடியும்.

டாய் கடவுளே ... எனக்கு உன்னை பிடிக்கவில்லை!

Saturday, May 29, 2010

______________ இன்றி வானத்தில் ஏது நிறம்? கோடிட்ட இடத்தில் எந்த வார்த்தை பொருந்தும்?

தாய்மையின் நிறம் என்ன?
பசுமை நிறம்.
கருணையின் நிறம் என்ன?
வெண்மை நிறம்.
கோபத்தின் நிறம் என்ன?
செம்மை நிறம்.
காணும் நிறமெல்லாம் ஒன்றானால் என்ன நிறம்?
வானவில்!!!

இப்படித் துவங்கும் ஒரு பாடலை ‘அவர்‘ திரைப்படத்தில் நான் எழுதியிருக்கின்றேன். தொடர்ந்து வரும் வரிகளையும் கவனியுங்கள். அந்த வரிகளின் முதல் வார்த்தையை உங்களால் யூகிக்க முடியுமா?

______________ இன்றி அலைகளிலே ஏது நிறம்?
______________ இன்றி தீபத்தில் ஏது நிறம்?
______________ இன்றி வானத்தில் ஏது நிறம்?
காணும் குணமெல்லாம் ஒன்றானால் என்ன நிறம்?
வானவில்!!!


கோடிட்ட இடங்களை ஒரே ஒரு வார்த்தையால் மட்டும் நிரப்புங்கள். உங்கள் கற்பனைகளும், சிந்தனைகளும் எந்த அளவிற்கு என்னுடன் ஒத்துப் போகிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.

Tuesday, May 4, 2010

”அவர்” - திரைப்படத் துவக்க விழாவும், டிஜிட்டல் சினிமா கருத்தரங்கும்

”அவர்” - இயக்குனராக நான் அறிமுகமாகும் முதல் திரைப்படம். ஒரு கனவு நிறைவேறப் போகிற மகிழ்ச்சி இருந்தாலும், முதல் படம் என்கின்ற பதற்றம் இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். முதல் காரணம், இணையம் வழியாக நான் பெற்றிருக்கும் உங்களின் நட்பு, அன்பு மற்றும் ஆதரவு. அடுத்த காரணம், சினிமாவை ஒரு கலையாக மட்டும் பார்க்காமல், கல்வியாக நினைத்து கற்கும் குணம் என்னிடத்தில் எப்போதும் உண்டு. கடைசியாக, மிக மிக முக்கியக் காரணம், தயாரிப்பாளர் திரு. சங்கர நாராயணன். சினிமாவையும் அதன் நவீன தொழில் நுட்பங்களையும் எந்த ஈகோவும் பார்க்காமல் கற்றுத் தெளிவதில் முனைப்பாக இருப்பவர்.

சினிமாவைப் பொறுத்தவரையில் Pre-Production, Production மற்றும் Post-Production வரையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பத்மஸ்ரீ கமல்ஹாசன் இது பற்றிய விழிப்புணர்வை போதுமான அளவு தமிழ் சினிமாத் துறையில் ஏற்கனவே உண்டாக்கி வைத்திருக்கிறார் ஆனாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் அனுபவம் வாய்ந்த சீனியர்கள் முதல் நவீன ஜீனியர்கள் வரை தயங்குகிறார்கள்.  செல்லுலாயிடில் இருந்து டிஜிட்டலுக்கு மாறுவதில் தயக்கம் ஒரு புறம், டிஜிட்டல் பற்றிய முழுத் தெளிவும் இல்லாத குறை இன்னொரு புறம். இந்த இரு காரணங்களால் தமிழ் சினிமா முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாவதில் தாமதமாக நடந்து கொண்டிருக்கிறது.

”அவர்”, முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகும் திரைப்படம்! திரைப்படம் தொடர்பான டிஜிட்டல் காமிராக்கள் முதல், தியேட்டர்களில் உள்ள டிஜிட்டல் புரொஜக்டர்கள் வரை, பல்வேறு வகைகளை பார்த்து சோதித்து உறுதி செய்து பல தகவல்களை திரட்டி இருக்கிறார், தயாரிப்பாளர் திரு. சங்கரநாராயணன்.

அமெரிக்கா மற்றும் சவுதி போன்ற நாடுகளில் ஐடி பொறியாளராக பணியாற்றிய திரு, சங்கரநாராயணன், அடிப்படையில் ஒரு கல்லூரிப் பேராசிரியர்,  எனவே அவருடனான ஒரு சந்திப்பு உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பேருதவியாக இருக்கும்.

பொதுவாக திரைப்படங்களின் துவக்க விழா ஏதாவது சினிமா ஸ்டுடியோக்களில் பூஜையில் துவங்கும். ஆனால் ”அவர்” திரைப்படத்தின் துவக்க விழா ஒரு செமினார் அதாவது ஒரு கருத்தரங்கில் துவங்குகிறது. ”மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா”, இது தான் கருத்தரங்கின் தலைப்பு. நவீன டிஜிட்டல் காமிராக்கள், அவற்றில் உள்ள குறைகள், வசதிகள் தியேட்டர்களில் உள்ள நவீன டிஜிட்டல் புரொக்ஷன் வசதிகள் மற்றும் வகைகள் பற்றி திரு. சங்கரநாரயணன் உங்களுடன் உரையாடுவார்.

டிஜிட்டல் சினிமா எடுக்க எந்த மாதிரி காமிராக்களை பயன்படுத்தலாம்? அவற்றின் வகை என்ன? அவற்றின் திறன் என்ன? அவற்றை வாங்கலாமா? வாடகைக்கு எடுக்கலாமா? வாடகைக்கான செலவு என்ன?
டிஜிட்டல் புரொஜக்டர்கள் எத்தனை வகை உள்ளன? ஒவ்வொரு வகையிலும் எத்தனை தியேட்டர்கள் உள்ள? போன்ற விபரங்களை நீங்கள் ”அவர்” படததின் தயாரிப்பாளர் திரு. சங்கர நாராயணன் அவர்களிடம் நேரடியாகக் கேட்கலாம்.

அன்புடன் வாழ்த்த வாருங்கள்!
இது வரை நாங்கள் கற்றதை, நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.

தலைப்பு
”டிஜிட்டல் சினிமாவின் நவீன தொழில் நுட்பம்!”

நாள்
9.5.2010

நேரம் 
காலை பத்து மணி முதல் மதியம் 1 வரை!

இடம் 
பிளாட் நம்பர் 15,
ஆறுமுகம் நைனார் தெரு,
திருநகர்,
சென்னை - 87.
வழி வடபழனி ->விருகம்பாக்கம்->ஆழ்வார் திருநகர்-> மெகா மார்ட் பின்புறம், வலது புறத்தில் மூன்றாவது தெரு-> வலப்புறம்15 வது இல்லம்.

வழங்குபவர்
திரு. சங்கர நாராயணன்.

மேலும் விபரங்களுக்கு,
email : r.selvakkumar@gmail.com

மிக மிக எளிதாக, விரைவாக, அதிக செலவின்றி இனி  நிறைய திரைப்படங்களை உருவாக்க முடியும்!  காமிராமேன்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட, எவராக இருந்தாலும் நிறைய கேள்விகளுடன் வாருங்கள். அதை விட நிறைய பதில்களுடன் செல்லுங்கள். திரையுலகின் டிஜிட்டல் புரட்சியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

Thursday, April 1, 2010

சூப்பர் ஸ்டாருக்காக ஒரு பாட்டு

சூப்பர் ஸ்டார் ஆகணும் சார். அதுதான் என் கனவு!

நான் தற்போது ”அவர்” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். ஸ்கிரிப்ட், பாடல் பதிவிற்குப் பின், தற்போது நடிகர் நடிகையர் தேர்வு ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்வுக்கு ஒரு இளைஞன் வந்தான்.

ஒல்லியாக, மெல்லிய தாடியுடன், உறுத்தாத ஆங்கிலத்தில் பேசிய அந்த 23 வயது இளைஞன் ஜீன்ஸ் அணிந்திருந்தான்.  காரில் வந்து இறங்கிய அவனுக்கு ஏற்கனவே 5 வருட அனுபவம். புரொடக்ஷன் எக்சிகியுடிவ், லைன் புரொடியுசர், அசோசியேட் டைரக்டர், குறும்பட நடிகர் என கலவையான அனுபவம் கலந்த இளமை. 

உன்னுடைய எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இதுதான்.
”சூப்பர் ஸ்டார் ஆகணும் சார். அதுதான் என் கனவு!”

சூப்பர் ஸ்டார் ஆவது என்றால் என்ன?
தொடர்ந்து வசூல் மன்னனாகத் திகழ்வதா?
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பாடியே மக்களைக் கவர்வதா? எம்.ஜி.ஆரைப் போல சண்டைக்காட்சிகளால் மனங்களை வெல்வதா? ரஜினியைப் போல ஸ்டைல்களால் ஈர்ப்பதா?
இதற்கு ஒரு சிலர் ஆம் என சொல்லக் கூடும். அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?
சூப்பர் ஸ்டார் ஆவது
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பெண்கள் பின்னால் சுற்றியவர் என பெயரெடுப்பதா?
எம்.ஜி.ஆரைப் போல பிடிக்காத தயாரிப்பாளர்களை, நடிகர்களை ஓரங்கட்டியவர் என்று பெயரெடுப்பதா?
ரஜினியைப் போல அரசியல் ஸ்டண்டுகளால் படங்களை ஓட வைப்பவர் என்று பெயரெடுப்பதா?
இப்படி பெயர் எடுத்தால் அவர் சூப்பர் ஸ்டார் அல்ல என்றுதான் பலரும் சொல்வார்கள். சரி, அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?

சூப்பர் ஸ்டார் ஆவது
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, 5 தீபாவளி கண்ட வெற்றிப் படத்தை தருவதா?
எம்.ஜி.ஆரைப் போல சினிமாவில் பிரச்சாரம் செய்தே தமிழக முதல்வர் ஆவதா?
ரஜினியைப் போல வெளிநாடுகளிலும் புகழ் பரப்புவதா?

இந்தக் கேள்விக்கு பதிலாக மூன்றையுமே அனைவரும் பதிலாகச் சொல்வார்கள்.
சரி, அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?

சூப்பர் ஸ்டார் ஆவது . . .
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, கொலை வழக்கில் சிக்கி ஏழையாக வாழ்ந்து மடிவதா?
எம்.ஜி.ஆரைப் போல அட்டைக் கத்தி, வாய் உளறும், நடிக்கவே வராது என்று பெயரெடுப்பதா?
ரஜினியைப் போல மென்டல், கன்னடத்துக்காரன் என்று விமர்சனத்துக்கு உள்ளாவதா?
இந்த மூன்றில் எதையுமே ஒரு சூப்பர் ஸ்டாரின் தகுதியாக எவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் மேலே உள்ள முரண்பாடுகள் அத்தனையையும் கொண்டவர்கள்தான் சூப்பர் ஸ்டார்களாக நம்மிடையே இருக்கிறார்கள். வெற்றியடையும்போது சிகரங்களையும், தோல்வியின்போது அதல பாதாளங்களையும் அவர்கள் கண்டிருக்கிறாரகள், மீண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சூப்பர் ஸ்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் கனவு காணும் ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றிகளை மட்டுமே பார்க்கிறார்கள். அந்த வெற்றிக்கான போராட்டங்களும், இழப்புகளும் மற்றவர்கள் கண்களுக்கு தென்படுவதே இல்லை. அதை விட முக்கியம், வெற்றி பெற்ற பின் அதை தக்க வைக்கும் போராட்டம். அந்த மனப் போராட்டத்தின் விளைவாக அவர்களில் ஏற்படும் தனிமை, இவற்றை அடிப்படையாக வைத்து ஒரு பாடல் உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. அப்படித் தோன்றக் காரணம் ஃபேஸ்புக்கில் எம்.கே.தியாகராஜ பாகவதரைப் பற்றிய சுவையான உரையாடல்.

எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு சமர்ப்பிக்கப்படும் இந்த இசைக்கு பாடல் வரிகளில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று யோசித்தேன். எனவே ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கவிதை எழுதி வரும் 10 பேரை சில வரிகள் எழுத வைத்து அவற்றை இசை அமைத்தோம்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்களில் ”சொப்பன வாழ்வில் மகிழ்ந்து” என்பது சூப்பர் ஹிட் பாடல். அந்தப் பாடல் தேவநகரி என்ற இராகத்தில் அமைந்த பாடல். அந்தப் பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு அதே தேவநகரி இராகத்தில் பாடலை இசையமைத்திருக்கின்றோம்.

வெற்றியின் மகிழ்ச்சியை விட, வெற்றியின் உச்சியில் தனிமையில் அதை தக்க வைக்கும் போராட்டங்களையும், தோல்வியடையும்போது எதிர்கொள்ளும் வலிகளையும் உணர்த்தும் விதமாக இந்தப் பாடலை இசையமைத்துள்ளோம். கேளுங்கள்!  ஒரு கனவு உலகம் உங்களுக்குள் விரியும்.


பாடலை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம்

பாடல் வரிகள் - 10 ஃபேஸ்புக் நண்பர்கள்
இசை - விவேக் நாராயண் ("அவர்" படத்தின் இசையமைப்பாளர்)
பாடியவர்கள் - விவேக் நாராயண், அவருடைய தாயார், அவருடைய மகள்
சவுண்ட் மிக்ஸிங் - ராகேஷ்
ஐடியா - அடியேன்!
தூண்டுதல் - அஷாந்தி ஓம்கர், பார்த்திபன் ஷண்முகம்

Sunday, March 7, 2010

மகளிர் தினம் - ஸ்பெஷல் இசை (”அவர்” திரைப்படக் குழு சார்பாக)

நான் நானாக இருப்பதற்கு என் வாழ்வில் நான் சந்திக்கும் பெண்களே காரணம். தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, ஆசிரியையாக, மாணவியாக, பக்கத்து வீட்டுப் பெண்ணாக, தோழியாக என் வாழ்வில் வந்த அத்தனை பெண்களும், தான் அன்பால் உருவான ஒரு சக்தி என்று எனக்கு நிரூபித்திருக்கின்றார்கள்.

அவர்கள் அனைவருக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு இசையை சமர்ப்பிக்கின்றேன்.

நான் கேட்டுக் கொண்டதற்க்காகவே, வலையுலகில் இன்று அக்கா என்று பலராலும் அன்போடு அழைக்கப்படும் தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதிய பாடல் இது.

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!
- இந்த இரு வரிகளை மட்டும் (ரெக்கார்டிங்கின் போது உண்டான உடனடி தேவையால்) நான் எழுதியிருக்கின்றேன்.

இசையமைத்தது வழக்கம்போல என் நண்பன் விவேக் நாராயண். நான் எவ்வளவு நெருக்கடியில் கேட்டாலும், சட்டென ஸ்வரங்களைக் கோர்க்கும் அவரின் திறமைக்கு இந்தப் பாடல் இன்னொரு சான்று. இந்தப் பாடலைப் பாடியவரும் அவர்தான்.

நேற்று மாலை எழுதப்பட்டு, இன்று மாலை இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை ”அவர்” திரைப்படக் குழுவினரின் சார்பாக வலையுலகத்தில் எழுதிவரும் அத்தனை பெண்களுக்கும் மகளிர் தினப் பரிசாக அறிவிக்கின்றேன்.



பாடலை இங்கே கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அன்பென்னும் ஊஞ்சலில்  அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை அழகே!
அதிகாரம் ஆணவம் அனைத்தும் கடந்து
அரவணைக்கும் அன்னை நீயே!

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!

அன்னப்  பறவையாய்  நல்லதை கைக்கொண்டு
அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!

மன்னவன் மாலையே மாதர்கள் அரசியே
மகிழ்வோடு என்றுமிருப்பாய்!

ஆழி நீ சூழி நீ ஆர்ப்பரிக்கும் ஆர்வம் நீ
அகலாத அன்பின் தேவி!

சொல்லும் நீ செயலும் நீ எண்ணம் நீ வண்ணம் நீ
நல்லதனைத்தும் நீயே!

காந்தம் நீ கருணை நீ எரிமலைநெருப்பும் நீ
பனிஉருச் சிற்பம் நீயே!

புதுயுகப் புயலும் நீ பொதிகையின் கயலும் நீ
புவியாள வந்த அழகே!

குழந்தைக்கு குழந்தை நீ தேவாதி தேவி நீ
உலகெல்லாம் ஆளும் சக்தி!

உண்மையே மென்மையே  ஒளிர்கின்ற பாசமே
உலகத்தின் உயிர்ச்சக்தியே!

Saturday, February 27, 2010

சுஜாதா நினைவாக இசை ரெடி - கேட்டுப்பாருங்க



இந்த முறை டிவிட்டர்கள் சந்திப்பை சுஜாதா நினைவு சந்திப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் முடிவானது. ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதாவின் கவிதை எதையாவது இசையமைக்கலாம் என்று முடிவு செய்தேன். முதலில் சுஜாதாவின் குறள் உரையை இசை வடிவில் தரமுடியுமா என்று சிந்தித்தேன். அதை நெட்டில் தேடியபோது முதலில் கண்ணில் சிக்கியது கீழே இருக்கும் கவிதை. சந்தம்-கிந்தம், மீட்டர் - கீட்டர் எல்லாம் பற்றி சிந்திக்கவே இல்லை. கனமான ஒரு சப்ஜெக்ட் படிப்பதற்கு இலகுவானதாக இருக்கவே அதையே இசைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

இசை என்றால் உடனே நான் அடுத்து போய் நிற்பது நண்பர் விவேக் நாராயண் இல்லம் தான். அவசரம் கருதி போன் போட்டேன். எந்தக் கவிதை என்று கேட்காமலயே சரி என்றார். நேற்று மதியம் வந்து கவிதையை படித்துவிட்டு எதையோ முணுமுணுத்துவிட்டு டியுன் ரெடி என்றார். எப்போ ரெக்கார்டிங் என்றேன். நாங்கள் எப்போதுமே அப்படித்தான். சட்டென சிந்தித்து, பட்டென முடிக்கப்பார்ப்போம். இரவு வா என்று சொல்லவிட்டு மாலை போனில் அழைத்தார்.

வா !
அப்புறம் வா !
போய்விட்டு அப்புறம் வா !
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

சுஜாதாவின் கடைசி வரி தனித்தனி வார்த்தைகளாக படிக்கும்போது எப்படி ஜாலம் காட்டுகிறது பாருங்கள். எனவே அதையே துண்டுப்பல்லவிகளாக பயன்படுத்திக் கொண்டோம்.

ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதா பற்றி அல்லது அவருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனங்கள் அல்லது நினைவுகளை பல குரல்களில் பாடலின் இடையே இணைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதற்க்க்காக இணைய நண்பர்களை அணுகியிருந்தேன். பலரும் தயங்க, இருவர் மட்டும் அனுப்பியிருந்தார்கள்.

ஜமால்(adiraijamal@gmail.com) சரியில்லேன்னா சொல்லுங்கண்ணே, திரும்ப அனுப்பறேன் என்று தனது குரலை அனுப்பியிருந்தார். சுந்தரவதனம்(vadanan2006@yahoo.co.in) .mp4 பார்மட்டில் மொபைல் போனில் பதிவு செய்த தனது குரலை அனுப்பியிருந்தார். இன்று காலை 11 மணி வரை வேறு ஏதாவது குரல்கள் வருகிறதா என்று காத்திருந்துவிட்டு, பாடல் பதிவை முடித்துவிட்டோம்.

வீட்டிலேயே எளிமையாக ரெக்கார்டிங் செய்யப்பட்டது. சுஜாதாவின் நினைவாக!

பாடலை கேட்கும்போது வரிகளை இரசிக்க, வரிகள் கீழே தரப்பட்டுள்ளது. இங்கே கிளிக் செய்து பாடலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

Thursday, February 25, 2010

சுஜாதா நினைவாக ஒரு இசை - வாங்க குரல் கொடுங்க

சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, சுஜாதா எழுதிய கவிதை இது.

எனது நண்பர் இசையமைப்பாளர் விவேக்நாராயண் உதவியுடன் இதை இசை அமைக்கலாம் என்று திடீர் முடிவு செய்திருக்கின்றேன்.

வாசித்துவிட்டு சுஜாதாவைப் பற்றி, அவருடைய எழுத்தைப் பற்றி, இந்த கவிதையைப் பற்றி என்ன தோணுதோ அதை எனக்கு Voice Mailஆக அனுப்புங்கள். ஒத்திகை எல்லாம் பார்க்காமல் ஜாலியாக, இயல்பாக, சுருக்கமாகப் பேசவும். எதுவும் தோன்றாவிட்டால் இந்தக் கவிதையை உங்கள் குரலில் வாசித்து அனுப்புங்கள். இசைக்குள் செருக முடிகிறதா என்று பார்க்கிறேன்.

உங்கள் குரலுடன் இணைத்து பாடலை முழுமையாக்கும் ஐடியா உதித்திருக்கிறது. பாடலின் வடிவம், இசை உத்தி பற்றி எதுவும் இன்னும் தோன்றவில்லை.

ஐடியா வந்தவுடன் உங்களிடம் வந்திருக்கின்றேன். பார்க்கலாம் எப்படி வருகிறதென்று.

நாளை மதியத்திற்குள் குரல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி் r.selvakkumar@gmail.com


இனி கவிதை . . .
கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

Updated on : 27.02.2010
இசையை இங்கே கேட்கலாம்

Sunday, February 21, 2010

அவர்

சென்ற வருடம் டிசம்பர் இறுதியில் நாகர்கோவிலுக்கு ஒரு இரயில் பயணம். அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் தட தட தாலாட்டை மீறி செல்போன் என்னை எழுப்பியது.
”ஹலோ குட்மார்னிங்! சொல்லுங்க என்ன விஷயம்?” என்றது எதிர் முனைக் குரல்.
அழைத்தவர் அவர். (அவர் யார்?) அவர்தானே விஷயத்தை சொல்ல வேண்டும். ஏதாவது ராங்காலாக இருக்குமோ என்று யோசித்தபடி அப்பர் பர்த்தில் தூக்கம் கலைந்தேன்.

”ஹலோ நான் செல்வக்குமார் பேசறேன்”
"ஒரே சத்தமா இருக்கு. என்ன விஷயம் சொல்லுங்க?”
”நீங்கதான் சொல்லணும்”
”கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்கதான் என்னைக் கூப்பிட்டீங்க”
”நானா..?” என்று ஆச்சரியப்பட்ட வினாடியில், நடந்தது எனக்குப் புரிந்து போனது.
”அடடா..மன்னிக்கணும். நான் டிரெயின்ல இருக்கேன். தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது, எப்படியோ உங்க நம்பர் டயல் ஆகியிருக்கிறது”
”பரவால்ல, நானும் இப்பதான் ஒரு வேலையை முடிச்சிட்டு படுத்தேன்”, குரலில் கோபமில்லை, எரிச்சல் இல்லை, தூக்கம் கெட்டதே என்ற அலுப்பு இல்லை.
”சரி நீங்க சென்னைக்கு வந்தப்புறம் சந்திக்கலாம்” என்று மிக அமைதியாக, இயல்பாக பேசிய அந்த குரலுக்கு சொந்தக்காரரை இரண்டு மாதங்கள் ஆகியும் நேரில் சந்திக்க முடியவில்லை.

அவ்வப்போது Facebookல் வந்து ”நண்பா எப்படி இருக்கீங்க?” என்பார். பல முறை தேதி குறித்தும் அவரவர் வேலை பளு காரணமாக, அவரை சந்திக்க முடியாமலேயே இந்தப் பதிவில் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

ஏண்டா விடிய காலையில் 3 மணிக்கு போன் பண்ணி தூக்கத்தை கெடுத்த என்று நியாயமாக கோபம் வரக் கூடிய நிலையிலும், நிதானித்த அவரை எண்ணி வியக்கிறேன். அவரை இதுவரை சந்திக்கவே இல்லை. ஆனாலும் சின்னச் சின்ன கண்ணியமான facebook உரையாடல்கள் மூலம், எப்போதும் நினைவில் நிற்கும் நண்பர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

தன்னை ஆளத் தெரிந்தவர் தரணி ஆள்வார். விரைவில் அவர் தமிழ் மக்களின் மனதை வெல்வார்.

அவருடைய சிறந்த குணத்திற்கு மேலே நான் எழுதியிருப்பதே சாட்சி. அவருடைய திறமைக்கு சாட்சியாக விரைவில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. அவர் இயக்கியுள்ள ”அவர் பெயர் தமிழரசி” இம்மாதம் திரைக்கு வருகிறது 

நல்ல குணம் படைத்த அவர், நிச்சயம் நல்ல திரைப்படத்தை தருவார்.
அவர் - இயக்குனர் மீரா கதிரவன்.

All the best Meera!

Tuesday, October 27, 2009

அவர் - டைட்டில் டிசைன்ஸ் - உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

வடபழனி ராஹத் பிளாசாவில் நான் ஒரு வெஜ் ரோலை சாப்பிட்டு முடிக்கவும், பழனிவேலு பாட்டை கேட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

”பாட்டு நல்லா இருக்கு சார். குதம்பாய், மை டியர் எந்திரா, வானவில் அப்படின்னு எல்லாமே தனித்தனி வெரைட்டியா இருக்கு.  கதை எப்படி இருக்கும்னு கெஸ் பண்ண முடியல. கதை என்ன சார்?”, இது எனது நண்பர் டைட்டில் டிசைனர் பழனிவேலு

”கதையை சொல்வதற்கில்லை. வேண்டுமானால் ஒன் லைன் சொல்லுகிறேன்”, இது நான்.

”ம்ம்ம் . . .சொல்லுங்க”

அவர் இது தான் டைட்டில். யார்? இது தான் ஒன் லைன்”

”ஹா.. ஹா.. ஹா... சார் கேட்கறதுக்கு நல்லா இருக்கு. இருந்தாலும் எனக்கு இது பத்தாது சார். இன்னும் கொஞ்சம் டீடெயில் சொல்லுங்க”

”சொல்லிட்டாப் போச்சு. வெவ்வேறு நிறங்களாக இருந்தாலும், ஒன்றாக இணையும்போது அது, அழகான வானவில்லாகிறது. அது போல வெவ்வேறு குணங்கள் உடையவர்களாக இருந்தாலும், வானவில் போல வண்ணமயமாக ஒற்றுமையாக வாழும் ஒரு குடும்பம்.”

”அப்புறம்?”

”அந்தக் குடும்பத்திற்குள் எட்டாவது நிறமாக ஒருவர் வருகிறார். அவர் எதற்க்காக வந்தார்? அவர் யார்? இது தான் முடிச்சு”

 ”ம்..ம்..ம்.. அவர் - இந்த டைட்டில் ஒரே வார்த்தையில நச்சுன்னு இருக்கு. ஆனா கொஞ்சம் வெயிட்டா இருக்கு.”

”கரெக்ட். அதனாலதான் நான் ஒரு விஷயத்தை யோசிச்சு வைச்சிருக்கேன். வானவில் ஷேடிங்கை டைட்டில்ல கொண்டு வந்துட்டா, நீ ஃபீல் பண்ற அந்த வெயிட் குறைஞ்சு பேலன்ஸ் ஆகிடும்.”

”ஓ.கே சார், இன்புட் பத்தல. இருந்தாலும் நானே ஏதாவது டிரை பண்றேன். பார்த்துட்டு சஜெஷன் சொல்லுங்க. அங்கேயிருந்து அப்படியே டிராவல் பண்ணலாம்”

கீழே இருப்பவை அவர் திரைப் படத்திற்க்காக பழனிவேலு முயற்சித்த சில டைட்டில் டிசைன்கள்.

அவர் டைட்டில் டிசைன் - 1


அவர் டைட்டில் டிசைன் - 2



அவர் டைட்டில் டிசைன் - 3



அவர் டைட்டில் டிசைன் - 4


அவர் டைட்டில் டிசைன் - 5


அவர் டைட்டில் டிசைன் - 6


பழனிவேலு மகா திறமைசாலி. நேரம் எடுப்பார். ஆனால் அபாரமான டிசைன்களைத் தருவார். எதை தேர்ந்தெடுப்பதென்று குழம்பிவிடுவோம். நானும் எனது குழுவினரும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கூறுங்கள். அதிகமாக எது உங்களுக்கு பிடிக்கிறதோ, அதை மேலும் மெருகூட்டலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன். 


அப்புறம் . . . உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவர்கள்  தேர்ந்தெடுத்த டைட்டில் டிசைன் என்று அலட்டலாமென்றிருக்கின்றேன். என்ன சொல்கிறீர்கள்?

Saturday, October 17, 2009

திரு.சிவகுமார் அவர்களிடம் நான் சொல்ல மறந்தது என்ன?


”அறுபது வயசுக்கு மேல ஆச்சு. எத்தனையோ படம் நடிச்சிருக்கார். ஆனா இத்தனை வருஷத்துல இப்பதான் முதன் முதலா ஒரு நல்ல படத்துக்கு டிக்கெட் குடுத்திருக்கார்.”

ஒரு பிரபல நடிகரை இப்படி கலாட்டா செய்தது என் சித்தப்பா சோலை.  அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு இரசித்து சிரித்த அந்த நடிகர், அவருடைய நண்பர், ஓவியர், கம்ப ராமாயணப் பேச்சாளர் திரு. சிவகுமார்.

பெரிய மனிதர்களை நெருக்கத்தில் பார்க்கும்போது, அவர்களிடம் சொல்ல நினைக்கும் பல விஷயங்கள் மறந்துபோகும். இன்றைக்கு என் சித்தப்பாவுடன், திரு.சிவகுமார் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது ஒரு விஷயத்தை அவரிடம் மறக்காமல் சொல்ல நினைத்து, கடைசியில் மறந்து போனேன். அது . . .?

”டேய் சிவகுமார் போன் பண்ணினாரு. சத்தியம் தியேட்டர்ல ஆதவன் படத்துக்கு ரெண்டு டிக்கட் இருக்காம். நாலு மணிக்கு கிளம்பி வா. அவரை பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு, படம் பார்த்துட்டு வந்துடலாம்”, என்று செல்போனில் என் சித்தப்பா சொன்னார்.

”ஓ.கே. சித்தப்பா”, என்று சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் திரு.சிவகுமார் வீட்டில் ஆஜர்.

”வந்துட்டியா . . . வாடா. . . வாடா. . .”, என்று சித்தப்பாவை அழைத்தவர், ”இது யாரு? ஐ.எஸ்.ஆர் பையனா? வாப்பா. . . நல்லா இருக்கியா?” என்று என்னையும் நலம் விசாரித்தார்.

எனது சித்தப்பா சோலை, நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். அவரது நெருக்கத்தின் காரணமாகவே, எனது தந்தையின் மறைவுக்குப் பின்னும் எங்கள் வீட்டில் நடந்த அனைத்து குடும்ப விழாக்களுக்கும் திரு.சிவகுமார் அவர்கள் வருகை தந்தார். எனது தங்கை திருமணத்தின் போது அவர் பரிசளித்த, அவரே வரைந்த காந்தி பென்சில் டிராயிங், 15 வருடங்களுக்குப் பின்னும் எங்கள் வீட்டு சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.


”டேய். இன்னைக்கு ஹிண்டு பேப்பர் படிக்க சொன்னேனே, படிச்சியாடா?, இது திரு.சிவகுமார்.
”இல்லையே. நான் போய் வாங்கறதுக்குள்ள எல்லா பேப்பரும் வித்துடுச்சு”, இது என் சித்தப்பா சோலை.
”பாத்தீங்களா? எப்படி இருக்கான்? எடைக்கு எடை போடறதுக்கு கூட சில பேர் பேப்பர் வாங்கறதில்ல. இன்னைக்கு ஹிண்டு பேப்பர்ல என்னை பத்தி வந்திருக்கு. சேலம் சோனா காலேஜ்ல நான் பேசினதபத்தி சினிமா பிளஸ் பகுதியில போட்டிருக்கான். படிடான்னா . . . படிக்காம வந்துட்டு என்னையே கிண்டல் பண்றான். ஆமா நீங்க படிச்சீங்களா?”, அவர் பேசுவதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்த நண்பரும் இல்லையென்றார்.
”க்கும் . . . எல்லாம் ஒரே ரகம்”

தலைவர்கள், சமூக அந்தஸ்தில் பெரியவர்களாக இருப்பவர்கள் போன்றோர் தனது நண்பர்களுடன் ”வாடா...போடா” என்று மனது விட்டு ஜாலியாக பேசும், எந்த பாசாங்கும் இல்லாத, இறுக்கமற்ற நிமிடங்களை நான் எப்போதுமே சுவாரசியமாக படிப்பேன். இன்று திரு.சிவகுமாரும், எனது சித்தப்பாவும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து பேசிக் கொண்டிருந்தபோது நான் என்னை மறந்தேன்.

ஆதவன் படத்தின் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு எழுந்தோம். 
”போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. நானே இன்னும் படம் பார்க்கல. நாளைக்குதான் வீட்டோட போகப்போறேன்”
”ஓ...நீங்க நடிக்கலன்னவுடனே வீட்டோட போய் பார்க்கற தைரியம் வந்திடுச்சா”
”டேய் . . . போடா . . .போடா. . .தம்பி நீ நாளைக்கு மறக்காம விஜய் டிவியில நான் பேசுறதை பாரு”.

”சரி சார்” என்று எழுந்தேன். எழும்போது எதையோ மறக்கிறேன் என்று தெரிந்தது.

நாங்கள் விடை பெற்று வெளியே வந்தோம். தற்செயலாக டிக்கட்டை திருப்பி பார்த்தேன். டிக்கெட்டின் பின்னால் சோலை என்று எழுதியிருந்தது.
”பார்த்தியாடா . . . எவ்வளவு ஆர்கனைஸ்டா இருக்காரு. இத்தனை பிசிக்கு நடுவுலயும், சும்மா ரெண்டு டிக்கட்டை தூக்கி குடுக்காம பேரை எழுதி வச்சு, கரெக்டா குடுக்கறாரு” என்று வியந்தார் என் சித்தப்பா.

அடுத்த வினாடி திரு. சிவகுமார் அவர்களிடம் நான் எதை சொல்ல மறந்தேன் என்பது ஞாபகம் வந்தது. அது . . . தீபாவளி வாழ்த்து! அதனால் என்ன . . . இந்த பதிவின் வழியாக அவருக்கு வாழ்த்து சொல்லிவிடுகின்றேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Monday, October 5, 2009

வானவில் உலகில் “லலிதம் சுதர்ஸனம்”

நான் தற்போது ”அவர்” திரைப்படத்தை இயக்குகிறேன் என்பது ஒரு ரிப்பீட் செய்தியாகிவிட்டது. ஆனாலும் வேறு வழியில்லை. ”அவர்” திரைப்படம் வெள்ளித் திரையில் ஒளிரும் வரை நான் அடிக்கடி அவரைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பேன். ஏனென்றால் தற்போது என்னை முழுவதும் ஆக்கிரமித்திருப்பவர் அவர் தான்.

படத்திற்கான ஸ்கிரிப்ட் தான் முதல் படி. வசனம் உட்பட ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டுதான் மற்ற எதுவும் என்பதில் உறுதியாக இருந்தேன். திருப்தி வரும் வரையில் ஸ்கிரிப்டை செதுக்கிக் கொண்டே இருந்தேன். எழுதும்போதே எங்கெங்கே எதுபோன்ற இசை தேவை என்பதையும் குறித்துக் கொண்டே வந்தேன். அதனால் ஸ்கிரிப்ட்டை முடித்த கையோடு பாடல் மற்றும் பிண்ணனி இசை கோர்ப்பு பற்றிய விவாதத்தில் இறங்கிவிட்டேன்.

படத்தில் ”வானவில் உலகம்” என்ற பாடல் வருகின்றது. முழுக்க மேற்கத்திய பாணியில் அமைந்த ஒரு மெலடி. அந்த மெலடிக்கு இடையே ஒரு Divine Feel தேவைப்பட்டது. தெய்வீக உணர்வு தேவை என்றவுடன் அதற்கான வார்த்தைகளை சில நாட்கள் தேடினேன். கடைசியாக ரெய்கி மாஸ்டர் திரு.பாலகுமார் அவர்களை நாடினேன். அவர் ”லலிதம் ... சுதர்ஸனம்” என்ற இரு அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகளை கொடுத்தார். சுதர்ஸனம் என்றால் பேரொளி. அது ஆண் சக்தி. லலிதம் என்றால் பெண் சக்தி. இரு சக்திகளும் இணையும்போது, அதனால் ஏற்படக்கூடிய தெய்வீக அதிர்வுகள் பூரணமாக இருக்கும் என்று விளக்கத்தையும் திரு.பாலகுமார் அவர்கள் சொன்னார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், அளப்பறிய ஆற்றல் பொருந்திய ஒன்றை நாம் கையாளப் போகிறோம். அதை கவனமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. இந்த வார்த்தைகளையும், அதற்கான அர்த்தங்களையும் கூறியவுடன், எனது நண்பரும் இசையமைப்பாளருமாகிய விவேக் நாராயண் மௌனமாகிவிட்டார். பிறகு முதலில் டியுனை ஓ.கே. பண்ணு. பிறகு லலிதம் சுதர்ஸனத்திற்கென தனியாக ஸ்பெஷலாக சிந்திக்கலாம் என்றார். நானும் அவர் சொன்ன படியே ஒரு மெட்டை தேர்ந்தெடுத்து ஓ.கே செய்தேன்.

இன்னைக்கு நைட் feed பண்ணிடறேன். நாளைக்கு காலையில பாட்டு ரெடியா இருக்கும் என்றார். சரி என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அவர் பின்னாடியே வந்துவிட்டார்.
என்ன?
பாட்டு ரெடி!
”வானவில் உலகம்” பாட்டு நான் ஓ.கே செய்த மெட்டில் இல்லை. ஆனால் என்ன ஆச்சரியம்? இன்னும் அருமையான ஒரு டியுனில் இருந்தது. அதை விட ஆச்சரியம். அசத்தலான வெஸ்டர்ன் பாணி இசைக்கு இடையில் இழைந்த சாமவேத மெட்டு. வெஸ்டர்ன் இசையுடன் சாமவேதமா? எப்படி? ஏன்? என்று தோன்றுகிறதா?

இசையின் ஆரம்பமே சாமவேதம் தான். அதனால்தான் ஆற்றல் பொருந்திய ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகளை சாமவேத மெட்டில் பொருத்தினேன் என்றார் விவேக் நாராயண். இது பற்றிய விளக்கங்களை அவரே பிளாக் ஒன்றில் எழுதியுள்ளார்.

முதல் முறை கேட்டபோது, ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகள் ஏற்படுத்திய தெய்வீக அதிர்வுகளை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

”அவர்” பாடல்கள் விரைவில் வெளியாகும். அப்போது நீங்களும் அந்த இனிய அதிர்வை உணர்வீர்கள் என்பது என் நம்பிக்கை.

Friday, October 2, 2009

கலைஞர் டிவியில் கமல் தந்த டிப்ஸ்

காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக கலைஞர் டிவியில் கமலின் லைவ் Phone-in ஷோ.
பேசி வைத்துக் கொண்டு செய்வது போல இருக்கிறது என்று கமலே கிண்டல் செய்யும் அளவிற்கு, நிறைய வி.ஐ.பி போன்கள்.

யாருடைய கேள்விக்கோ பதில் சொல்லும்போது, ஹே ராம் போன்ற படங்களை திரையிடும்போது, அந்தப் படத்தில் இடம்பெறும் சரித்திர நிகழ்வுகள் பற்றிய டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்றார் கமல். அருமையான வார்த்தைகள். எந்த சப்ஜெக்டாக இருந்தாலும், கொஞ்சம் ஆழமாக படமெடுக்கும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வார்த்தைகள்.

டெலிவிஷன் ஷோக்களில் கதையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி ஒரு மினி அறிமுகம் அல்லது விவாதம் ஏற்பாடு செய்யலாம். அது போன்ற நிகழ்ச்சிகள் ஆடியன்ஸை தயார் செய்ய உதவும். நாம் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றிய அடிப்படை அறிவு கிடைக்கும். அதனால் அந்த படத்தை இரசிப்பது இலகுவாக இருக்கும். படம் இரசிகனுக்கு புரியாமல் போய்விடக்கூடிய அபாயம் தவிர்க்கப்படும்.

காந்தி அஹிம்சை வழியில் போராடி நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். இந்த அளவிற்குதான் மக்கள் Non-detailஆக சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்றார் கமல். உண்மைதான், நம்மில் பெரும்பாலோர் அவ்வளவுதான் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஹே ராமின் தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம்.

கைபர் போலன் கனவாய், ஆரியர்கள், திராவிடர்கள், சுதந்திரப் போராட்டத்தின் போதிருந்த அரசியல் நிகழ்வுகள் . . . இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய அறிமுக நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டு அதன் பின்னர் ஹே ராம் திரையிடப்பட்டால் மக்கள் அந்தப் படத்தை இன்னமும் மனதுக்கு நெருக்கமாக உணர்வார்கள்.

கலைஞர் டிவியிடம் ஹேராம் படத்திற்கான உரிமை தற்போது இருக்கின்றதாம். எதிர்காலத்தில் படம் ஒளிபரப்பப்படும்போது, மேலே குறிப்பிட்டுள்ளது போல சப்ஜெக்ட் பற்றிய அடிப்படை அறிவு Knowledge base உருவாக்கிவிட்டு ஒளிபரப்பினால் மக்கள் எளிதில் இரசிக்க முடியும். இந்த அறிவுறுத்தல் அன்பே சிவம் போன்ற படங்களுக்கும் பொருந்தும் என்றார் கமல். நான் இந்த பட்டியலில் குணா, ஆளவந்தான் போன்ற படங்களையும் சேர்க்க விரும்புகின்றேன்.

திரையுலக வாழ்க்கையில் பொன் விழா கொண்டாடும் நேரத்தில், ஒரு ஆசிரியராக இருந்து கமல் பல கருத்துக்களை அடக்கத்தோடும் ஆதங்கத்தோடும் சொல்லிக் கொண்டு வருகின்றார். திரைத்துறையில் நுழையவிருக்கும் என்னைப் போன்றோருக்கு அவருடைய வார்த்தைகள் ஒரு வழிகாட்டி.

ISR VENTURES மற்றும் ”அவர்” குழுவினர் சார்பாக திரு.கமலஹாசன் அவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

Thursday, September 24, 2009

பிண்ணனி பாடகர்களின் தவறுகளை சரி செய்யும் Melodyne

சுருதி சுத்தமாக இருக்க வேண்டும். உச்சரிப்பு பளிச்சென இருக்க வேண்டும். தாளத்தில் பாட வேண்டும். இதெல்லாம் அந்தக் காலம். தற்போது டிஜிட்டல் ரெக்கார்டிங் உபயத்தில் பாடவே தெரியாத நான் கூட பாடி விடலாம் போலிருக்கிறது. பாடகர் எப்படி சொதப்பினாலும், சரி செய்து தர Audio Manipularion சாப்டுவேர்கள் உள்ளன. இஞ்சினியரின் திறமை மற்றும் பொறுமையைப் பொறுத்து, பாடகர்களின் அத்தனை பிசிறுகளும் நீக்கப்படுகின்றன.

எங்களுடைய ”அவர்” திரைப்படத்தில் மொத்தம் 9 புதிய பிண்ணனி பாடும் குரல்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். 2 குழந்தைகள், 3 பாடகிகள் மற்றும் 4 பாடகர்கள். இவர்களுடன் கோரஸ் பாடிய 8 குழந்தைகளையும் சேர்த்தால் மொத்தம் 17 அறிமுகப் பாடகர்கள். பாடிய அனைவருமே திறமைசாலிகள். சிறு சிறு தயக்கங்களைத் தவிர, மறுபடி மறுபடி டேக் வாங்கி நேரத்தை வீணடிக்கவில்லை. இந்த திறமைசாலிகளைப் பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

அவர்களுடைய குரல்களில் இருந்த சின்னஞ் சிறு பிசிறு அல்லது தவறுகள் குறித்து இசையமைப்பாளரும், இஞ்சினியரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை. காரணம் மென்பொருள்கள்(Audio Manipulation Softwares). எங்கேயாவது டியுனிங் விலகியிருந்தால் Antares Autotuning என்கிற மென்பொருள் விலகல்களை ஒரே கிளிக்கில் சரி செய்துவிடுகின்றது. இந்த மென்பொருள் இஞ்சினியர் மற்றும் இசையமைப்பாளர்களிடையே மிகப் பிரபலமாக உள்ளது. புல்லாங்குழல், தபேலா உட்பட எந்த இசையில் பிசகியிருந்தாலும் ஒரு சில கிளிக்குகள்தான். டியுனிங் சரியாகிவிடுகிறது.

ஆனால் குரல்கள் (Vocal Corrections) பெருமளவில் சரிசெய்யப் படவேண்டுமானால் Melodyne அட்டகாசமாக கை கொடுக்கிறது. எந்தக் குரலை கொடுத்தாலும் அதிலுள்ள ஸ்வரங்களைப் பிரித்து, ஆராய்ந்து எந்த இடத்தில் குரல் பிசகியிருக்கிறது என்று தானாகவே கண்டுபிடித்து சரி செய்துவிடுகின்றது. அதிலும் தவறுகள் இருந்தால் Auto Corrections முறையை தவிர்த்து விட்டு Manual முறையில் ஒவ்வொரு ஸ்வரமாக பாடகர்களின் குரல்களை பிரித்து மேய்ந்து விடலாம்.

எங்கள் இசையமைப்பாளர் விவேக் நாராயண் Melodyne பயன்படுத்துவதில் ஜகஜால கில்லாடி. ராஜேஷ் வைத்யாவின் வீணை முதல் அறிமுக குழந்தைப் பாடகி அனுஷாவின் குரல் வரை பல்வேறு ஒலி கலவைகளை ஸ்வரம் ஸ்வரமாக பிரித்து சரி செய்து, தன் விருப்பம் போல மாற்றிவிட்டார்.

இங்கே சொடுக்கினால் Melodyne பற்றிய தகவல்களும், டெமோவும் கிடைக்கும்.

எதற்கு இந்த மென் பொருள்களைப் பற்றிச் சொல்கிறேன் என்றால் . . .
அவசரமாக தவறு செய்வது முதல்
அதைவிட அவசரமாக சரி செய்வது வரை
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே மின்னல் வேகத்தில் சாத்தியம்.
ஆனால் Antare Autotuning மற்றும் Melodyne போன்ற Audio Manipulation மென் பொருள்கள் பற்றிய ஞானமும், அவற்றை பயன்படுத்தும் திறமையும் மிகவும் அவசியம்.

யாருக்காவது Melodyne கன்சல்டிங் வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக இசையமைப்பாளர் விவேக் நாராயணை அணுகலாம். Antare Autotuning கன்சல்டிங் வேண்டுமென்றால் சவுண்டு இஞ்சினியர் திரு.ராகேஷை அணுகலாம்.

ஆக தைரியமா பாடுங்க - கிடார் வாசியுங்க. சொதப்பல்களை மறைக்க இருக்கவே இருக்கு அசத்தல் மென் பொருள்கள்.

Tuesday, September 22, 2009

அவருக்காக என் பெயரை மாற்றலாமா?

எனக்கு என் பெற்றோர்கள் வைத்த பெயர் செல்வக்குமார். 60களில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் படம் மற்றும் நாடகத்தில் என் தந்தை(ஐ.எஸ்.ஆர்) நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் இந்த படைப்பு அட்டகாசமான ஹிட். அதில் எனது தந்தை ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் செல்வம். அந்தப் படம் வெளியான நேரத்தில் நான் பிறந்ததால் எனக்கு செல்வக் குமார் என்ற பெயர் வைத்தார்களாம். ஆனால் (பெண்)நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவரும் என்னை செல்வம் என்றே அழைத்தார்கள், அழைக்கிறார்கள்.

இதில் விந்தை என்னவென்றால் செல்வம் என்ற பெயர் செல்வக்குமார் என்று ஆனது. ஆனால் செல்வக்குமாரை அனைவரும் செல்வம் என்றுதான் அழைக்கிறார்கள். கல்லூரியில் படித்த மூன்று நண்பர்கள் (கிருஷ்ணன், விஜயகுமார், வெங்கடேசன்) மட்டும் என்னை செல்வா என்று அழைப்பார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் வரை நான் தாடி வைத்திருந்தேன். அது வரையில் சில நண்பர்கள் என்னை “டேய் தாடி” என்று அழைப்பார்கள்.

கல்லூரி (படிப்பதாக ஊர் சுற்றிய) காலத்திலேயே என் பெயர் ஆனந்த விகடனில் வர ஆரம்பித்தது. இரா.செல்வக்குமார் என்ற பெயரில் கதைகளும், கவிதைகளும், துணுக்குகளும் வெளியாகின. ”இராமச்சந்திரன்” என்பது என் தந்தையின் பெயர். அதனால் ஆர்.செல்வகுமார் என்ற பெயரை இரா.செல்வக்குமார் என்று பிரசுரிக்க கொடுத்தேன்.

வில்லன் நடிகர் திரு.செந்தாமரையின் மகன்கள் தென்னவன் மற்றும் வள்ளுவன் ஆகியோர் எனது பள்ளிக்கால நண்பர்கள். திரு.செந்தாமரை அவர்கள் நியுமராலஜயில் கெட்டிக்காரர். அவரின் பாதிப்பு அவருடைய மகன்களுக்கும் உண்டு. ஒரு நாள் தென்னவன் ஏதேதோ கூட்டிப் பார்த்துவிட்டு இனிமேல் ஒரு 'K' சேர்த்து R.Selvakkumar என்று எழுது, கையெழுத்துப் போடு என்று சொன்னார். நான் அரை மனதுடன் அப்படியே செய்ய ஆரம்பித்தேன். எனது கையெழுத்துகளில் இன்னொரு 'K' சேர்ந்து கொண்டது. போகப்போக கையெழுத்து சுருங்கி selv வரையில்தான் இருந்தது. மற்ற எழுத்துக்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனால் ஒரு சில விசிட்டிங்கார்டுகளில் R.Selvakkumar என்றும், ஒரு சில விசிட்டிங்கார்டுகளில் R.Selvakumar என்றும், தொடர்ந்து குழப்படி செய்து கொண்டிருந்தேன்.

கல்லூரி முடிந்து Zee TVயில் கால் பதித்த காலத்திலிருந்து டைட்டிலில் (இயக்கம்) ISR.SELVAKUMAR என்று பெயர் போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். மீடியா நண்பர்கள் அனைவரும் என்னை செல்வக்குமார் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது டிவி உலகில் என் பெயர் செல்வக்குமார், மற்றவர்களுக்கு என் பெயர் செல்வம். அது இன்று வரையில் அப்படியே தொடர்கிறது.

இடையில் கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் எழுதினேன். அனைத்தும் கணினி தொடர்பானவை. முதன் முதலாக எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் வாய்ப்பு வந்தது. ஆங்கிலத்தில் சுமார் என்றாலும், கம்ப்யுட்டரில் ஞானம் உண்டு என்பதால் தைரியமாக ஒப்புக் கொண்டு எழுதினேன். புத்தகம் வெளியாகும் நேரத்தில் (ஜோதிடத்தில் ஆர்வமுள்ள) நண்பர் ஜெயகோபி எனது பெயரை ISR.SELVA என்று பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார். நானும் அப்படியே செய்தேன். ஜெயகோபி (மெட்டி ஒலி, எம்டன் மகன்)எடிட்டர் ஜெயக்குமாரின் மூத்த சகோதரர். இருவருமே என் நண்பர்கள்தான்.

2006ல் எனது பள்ளிக்கால நண்பர் சுப்பையா இசக்கி கிரியேஷன்ஸ் என்ற ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். முதல் படைப்பாக ”சக்ஸஸ்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரு. ராம்குமார் அவர்களின் புதல்வரும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரனும் ஆகிய துஷ்யந்த் அறிமுகமான படம். அந்த திரைப்படத்தில் புரொடக்ஷன் மேனேஜர் முதல் நடிகர் மற்றும் இணை இயக்குனர் வரை பல்வேறு பொறுப்புகள் ஏற்று ஆல் இன் அழகு ராஜாவாக பணியாற்றினேன். டைட்டிலில் ISR.SELVA என்றே போட்டுக் கொண்டேன்.

இந்த நிலையில் சென்ற மாதம் திடீரென என் பெயரை மாற்றலாம் என்று எனக்கும் என் சித்தப்பாவுக்கும் தோன்றியது. உடனே சித்தப்பாவின் நியுமராலஜி நண்பர் ஒருவரை சந்தித்தோம். அவர் ”சந்தன்” என பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். எனது மனைவி, அம்மா, தம்பி-தங்கைகள் உட்பட அனைவரும் சந்தன் என்ற பெயர் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். நான்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு
தற்போது தயாரிப்பில் உள்ள ஒரு திரைப்படத்திற்கு பாடல் பதிவு முடிந்துவிட்டது. அடுத்த கட்டமாக நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கப் போவது நான். அதற்க்காகவே இந்த பெயர் மாற்றம் பற்றிய யோசனை. திரைப்படத்தின் பெயர் “அவர்”

இப்போது சொல்லுங்கள் அவருக்காக நான் என் பெயரை மாற்றலாமா?

Thursday, October 30, 2008

அவர் !!!

இறுதி யாத்திரைக்கு வருபவர்களில் பலரும் மறுநாள் 'பால்' எனப்படும் நிகழ்வுக்கு வருவதில்லை. என் தந்தை மரணமடைந்த போதும் அப்படித்தான். முதல்நாள் பெருகிவந்து தோள் கொடுத்த ஒருவர் கூட, என் தந்தை சடலமாக தீயில் கருகிய அடுத்தநாள் வரவில்லை. சடலத்தை எரிக்கும் தீயை விடத் தகிக்கும் தனிமை உணர்வு என்னை அப்போது வாட்டியது.

ஆறுதலாக மறுநாளும் அவர் மட்டும் வந்திருந்தார். சிதையில் சாம்பல்களுக்கிடையில் எலும்புத் துண்டுகளை சிறு குச்சிகளை வைத்துக் கிளறி தேடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மட்டும் வந்தது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.

சிதையின் சாம்பல் படிந்த கைகளில் ஒவ்வொரு எலும்புத்துண்டாக எடுத்து மண் சட்டியில் வைத்து சூடு ஆற தண்ணீர் ஊற்றினார். அந்த சமயத்தில் கூட அவர் வந்தது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.

என் தந்தையின் மறைவுக்கு முன்னும் பின்னும், எனக்கு இன்னொரு தந்தையாகவே இருந்து என்னை அவர் வழி நடத்தினார். சில நேரங்களில் ஒரு தோழனைப் போல பழகினார். என்னுடன் மட்டுமல்ல, அந்தக் காலனியில் வசித்த என் நண்பர்கள் ஒவ்வொருவருடனும் இருபத்தைந்து வருடங்களாக அப்படித்தான் பழகினார். அரை டிராயர் போட்ட பருவத்திலிருந்து, மணமாகி ஒரு குழந்தை பெற்ற பின்பும் கூட, கிட்டத்தட்ட நான் அவர் வீட்டில்தான் வளர்ந்தேன் என்று சொல்லலாம். பக்கத்து வீட்டு மாமா என்பதைக் கடந்த அந்த உறவுக்கு தமிழில் தனியாக வார்த்தைகள் இல்லை.

திடீரென ஒருநாள் வீடு மாற்றிச் செல்லப் போவதாகக் கூறினார். வீடு தேடி வந்து எங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டுச் சென்றார். மனதில் வார்த்தைகளில் வராத ஒரு வெறுமை. அவர் வீட்டைக் காலி செய்த கடைசி நாளன்று அவர் வீட்டிலிருந்து ஒரே ஒரு செடியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஏனோ தெரியவில்லை பறித்த செடிகளை என் வீட்டுத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லவில்லை.

தினமும் இரவு, அவர் வீட்டைக் கடக்கும் முன் அவரைப் பார்த்து 5 நிமிடம் பேசிவிட்டுத்தான் என் வீடு செல்வேன். ஆனால் அவர் இல்லாத அந்த வீட்டை தினமும் கடக்க நேர்ந்தபோது, அவரிடம் செலவழிக்க முடியாத 5 நிமிடங்கள் பெருகிப் பெருகி வெறும் தனிமையின் மூட்டையாகிப் போனது. அதைச் சுமக்க சுமக்க, என் தந்தையின் மரணத்தின் போது என்னை எரித்த தனிமைத் தீ மீண்டும் கொளுந்து விட்டு எரிவது போல ஒரு தகிப்பு. அவர் வீட்டிலேயே நான் விட்டுவிட்டு வந்த செடிகளைப் போல நாட்கள் கருகிக் கொண்டிருந்தன. அவர் வீடு மாற்றிப் போய் 3 மாதங்களாகியும் நான் அவரை சந்திக்கவே இல்லை, குறைந்தபட்சம் டெலிபோன் உரையாடல் கூட இல்லை என்பதை நான் திடீரென உணர்ந்தேன். ஏன்?

ஏன்? என்று எனது நண்பர்(அவருடைய மகன்)ஒருநாள் என்னைக் கேட்டார். நண்பரின் குரலில் 'அவர்' நேரடியாக என்னைக் கேட்டது போல உணர்ந்தேன். நாளையே பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தேன். ஆனால் நாளை என்பது அடுத்த 2 மாதங்களுக்கு வரவேயில்லை. ஏனோ தெரியவில்லை . . . நான் அவரை பார்க்கவில்லை, பேசவில்லை. மனதின் ஓரத்தில் தினமும் ஒரு உறுத்தல் என்னைத் தின்று கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் உறுத்தல், குற்ற உணர்வாக மாறி, தயக்கமாக நிலைத்துவிட்டது. என்ன விசித்திரம்!!! என்னை ஒரு தந்தையைப் போல பார்த்துக்கொண்ட அவரைப் பார்ப்பதில் எனக்கென்ன தயக்கம்?

நல்லவேளையாக என்னுடைய நீண்ட நாளைய நண்பன், 'அவரை' பார்ப்பதற்க்காகவே சென்னை வந்திருந்தான். பட்டென ஒட்டிக்கொண்டேன். 'அவர்' வீட்டுக்கு வருகிறேன் என்று அவரைத் தவிர எல்லோரிடமும் சொல்லிவிட்டு என் நண்பன் கூடவே 'அவர்' வீட்டுக்குச் சென்றேன். அவர் எப்போதும் போல அதே உரிமையுடன் 'ஏண்டா கடன்காரா என்னை பார்க்க இத்தனை நாளா வரல?' என்று திட்டோ திட்டென திட்டினார். அவர் திட்டத்திட்ட நான் தனிமைச் சுமைகள் குறைந்து இலகுவாகிக் கொண்டு வந்தேன்.

'சரி எல்லோரும் லஞ்ச் போலாமா?' நண்பன் கேட்டான்.
'ஓ.எஸ் போலாமே . .' என்று அவரும் ஒரு நண்பனைப் போல இயல்பாக கூட வந்தார்.
15 வருடங்களுக்கு முன்பு, என் தந்தையின் மரணத்தின் போதும் இப்படித்தான் இயல்பாக வந்தார். அப்போது எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் எதனாலோ தொடர்ந்து அவரைத் தவிர்த்து வந்த என்னை, எப்போதும் போல ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஹோட்டலுக்கு வந்தபோது, அவருடைய வருகை எனக்கு பெரிதாகப் பட்டது.