Tuesday, August 7, 2012

இன் & அவுட் சென்னை - கிராஷ்கோர்ஸ்!

மீண்டும் கொடைக்கானல்! இம்முறை இன்னமும் தமிழில் பெயரிடப்படாத Crash Course என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக. எட்டு பேர் கொண்ட மிகச்சுருக்கமான குழு. ஒரு கோடி பங்களா என்று பெயர் பெற்ற பங்களாவில் படப்பிடிப்பு. எனக்கு இணை தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் அவதாரம். அவ்வப்போது குறும்படங்களுக்கு காமிரா பிடித்திருக்கிறேன். (எல்லாம் Canon 7D கொடுத்த தைரியம்). நானே இயக்குனராகவும் இருந்ததால் ஒளிப்பதிவாளராகவும் இருப்பது எளிதாகத்தான் இருந்தது. ஆனால் எனக்குள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டிவிட்டு, வேறொரு இயக்குனரின் ஐடியாக்களை மட்டும் பதிவு செய்யும் ஒளிப்பதிவாளராக மட்டும் களத்தில் நிற்பது, முதலிரு நாட்களுக்கு கடினமாக இருந்தது. நானே இயக்குனராக இருந்தபோது, ஒளிப்பதிவுத் திறமையில் உள்ள எனது பலவீனங்களை தவிர்த்துவிடுவேன். ஆனால் இயக்குனர் முரளியிடம் என் பாச்சா பலிக்கவில்லை.

டி.எஸ்.முரளிதரன் இசையமைப்பாளராக இருந்து இயக்குனராக முதல் முயற்சி செய்யும் படம் இது. சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் என்றால், உங்களில் பலர் அவரை எளிதாக அடையாளம் கண்டு கொள்வீர்கள். சமையல் குறிப்பு படித்து பனியாரம் செய்தால் அதிரசம் வந்து நிற்கும். அதுபோல விரைவாக செய்ய வேண்டும் என்ற துரிதப்படுத்தலால் ஆரம்பத்தில் லைட்டிங் எனக்கு கண்கட்டி வித்தையாக இருந்தது. ஆனால் வாழ்க்கையே ஒரு கிராஷ் கோர்ஸ்தானே. சட்டென்று தயார் ஆகிவிட்டேன். ஒரு டீ குடிக்கும் இடைவெளியில் லைட்டிங்கை இடம் மாற்றி வேறொரு பரிமாணம் தரப் பழகிவிட்டேன். தற்போது எடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. குறையும் நிறையும் தெரியவரும். அதை பின்னர் பட்டியலிடுகிறேன்.

கிராஷ் கோர்ஸ் - 1 :
கற்க வேண்டுமென்றால் நாம் நினைத்ததை நாமே செய்யணும்.
பழக வேண்டுமென்றால் மற்றவர் கேட்பதை நாமே செய்யணும்.

பிஸ்மில்லாகானின் ஷெனாயில் ஹிந்தோளத்தை நேடியாக கேட்டிருக்கிறீர்களா? விருகம்பாக்கம் முதல் தரமணி  வரை சைக்கிளிலேயே பயணிக்க ஏதுவாக உடல் தெம்பும், வாகன மிரட்டல் இல்லாத தெருக்களும் இருந்த காலம். ஐஐடியில் அப்போது மார்டிகிராஸ் என்று பெயரிடப்பட்ட ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் பிரபலம். பிரபல இசைஞர்கள் எல்லாம் வருடா வருடம் வருவார்கள். இரவு பனியில் நனைந்து கொண்டு கிளாசிகல் இசை கச்சேரிகளுக்கு மட்டும் நண்பர்களுடன் சைக்கிளிலேயே சென்று வருவேன். கர்நாடக இசை போல அல்லாமல் ஹிந்துஸ்தானி மிகவும் நிதானமானது. பிஸ்மில்லாகானின் ஷெனாய் ஹிந்தோளத்தை பிரசவித்தபோது ஆரோகரணம் அவரோகணத்தில்  குழந்தை வளர்ப்பு போல கொஞ்சம் கொஞ்சமாக தொட்டிலிட்டு, குளிப்பாட்டி, உடை மாற்றி ஜீவஸ்வரங்களை உச்சி முகர்ந்த கணத்தில், கடவுள் அருகே வந்து கன்னத்தில் முத்தமிடுவது போல இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் கேட்ட அந்த லைவ் பிஸ்மில்லாகான் ஷெனாயை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

மோட்டார் சுந்தரம் பிள்ளையில் மனமே முருகனின் மயில்வாகனம் என்று எம்.எஸ்.வி ஹிந்தோளத்தை கையாண்டிருப்பார். இளமைக்காலம் படத்தில் ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா என்று இளையராஜாவும் தூள் கிளப்பியிருப்பார். ஆனால் எனக்குப் பிடித்தது இன்னும் பழைய எவர் க்ரீன் ஹிட். ஹிந்தோளத்தை வைத்து துடிப்பான ‘கண்களும் கவிபாடுதே...‘ என ஒரு மெட்டமைத்திருக்கிறார் ஆதி
நாராயணராவ்.

கிராஷ் கோர்ஸ் - 2:
கடவுளை தரிசிக்க கண் மூடி தியானிக்கலாம் (அ) கண் மூடி பிஸ்மில்லாகானின் ஷெனாயில் லயிக்கலாம்.

விருகம்பாக்கம் பாரத் பெட்ரோலியம் பங்க்கில் காற்று பிடிக்கும் பான்பராக் வாய் பையனுக்கு ஒரு அட்வைஸ். தம்பி பான்பராக் கெடுதி. காலை 6 மணிக்கே பான்பராக் அதனினும் கெடுதி. உன் துவைக்காத யூனிஃபார்மையும் மீறி, நேற்றைய இரவின் டாஸ்மாக் நாற்றத்தையும் சகித்துக் கொண்டுதான் இன்று என் மோட்டர் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டேன். டயருக்கு காற்று இறங்கிவிட்டால் மீண்டும் காற்றடித்துக் கொள்ளலாம். மனிதனுக்கு மூச்சு நின்றுவிட்டால் இதயத்துக்கு காற்றடிக்கும் பம்பு இன்னும் வரவில்லை. சந்தேகம் ஏதுமிருப்பின், பான்பராக்கை துப்பிவிட்டு வந்து என்னிடம் கேள். சட்டையில் பான்பராக் கரை படிந்துவிட்டால் போகாதாம். ஆனால் அந்தப் பழக்கம் விட்டுவிடக் கூடியதே.. சீக்கிரம் விட்டுவிடு.

கிராஷ் கோர்ஸ் - 3:
கெட்டப் பழக்கங்களை கை விட சிறந்த வழி. தன்னிடம் கெட்டப் பழக்கம் இருப்பதை உடனடியாக ஒப்புக் கொள்வதே.

ஒரு வாரகாலமாக எனக்குப் பிடித்த ஒரு வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடலாமா என்று தமிழக அரசு யோசித்துக் கொண்டிருக்கிறதாம். ஒரு வதந்தியை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்பார்கள். அதனால் இந்த வதந்தியை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலம் இந்த வதந்தி உண்மையாகிவிடுமானால் அதை விட சந்தோஷம் வேறெதுவும் இல்லை. சாராயக்கடையை நடத்திதான் இந்த அரசாங்கத்தை நடத்த முடியும் என்ற கொடுமையான நிலையிலிருந்து வெளிவருவது கடினம்தான். ஆனாலும் எத்தனையோ கோடி குடியர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து கொஞ்சமாவது விடுபட டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடிவைப்பது உதவும்.

கிராஷ் கோர்ஸ் - 4 :
அரசு தன் குடிகளை காக்க குடியை ஒழிக்கணும்.

கடவுள் விளையாட்டு பற்றி ஏதாவது தெரியுமா என்றார் நண்பர். ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படத்தில் சில எபிசோடுகள் இருக்கின்றன என்றேன். நண்பர் கோபமாகிவிட்டார். நானும் சளைக்கவில்லை. திருவிளையாடல் தருமி மாதிரி, மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த சில தகவல்கள் என்னிடம் உள்ளன. வேண்டுமானால் அவற்றைத் தருகிறேன். எவ்வளவு சரியோ அவ்வளவு பரிசு கொடுங்கள் என்றேன். நண்பர் நம்பியாராகி பற்களை நறநறத்தபடி ஒலிம்பிக் பார்க்கப் போய்விட்டார். ஒலிம்பிக்கில் கடவுள் விளையாட்டை காட்டுகிறார்களா என்ன?

Playing God is dangerous என்று அவ்வப்போது நமது சமகால நவீன விஞ்ஞானிகளுக்கு செக் வைக்கப்படுகிறது. டெஸ்ட் டியூப் பேபி, குளோனிங் செய்யப்பட்ட டாலி ஆடு, ஒரு மனிதனின் டி.என்.ஏ வரைபடம் என ஒவ்வொரு அறிவியல் சாகசத்திற்குப் பின்னும், பாராட்டுகளை விட அதிகமாக கண்டனங்கள்தான் அதிகம் வந்தன. அறிவியல் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகள் என்பது, ஒரு நோயை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவோ பயன்படவேண்டும். அவனுடைய தினசரி நடவடிக்கைகள் சுலபமானதாக மாற்ற உதவ வேண்டும். ஆனால் டி.என்.ஏ வரைபடங்களை வைத்து ஒரு மனிதனை உருவாக்குகிற சமாச்சாரம் எல்லாம் கடவுளின் வேலை. அவருடைய வேலையை பார்க்க விஞ்ஞானிகளுக்கு அனுமதியில்லை. அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் பல பயங்கரங்கள் உருவாகும், என்று உலகெங்கும் கண்டனக் குரல்கள் வந்தவண்ணம் உள்ளன. கடவுள் விளையாட்டை மனிதன் விளையாடுவது ஒருபுறம் இருக்கட்டும். 27 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள குழாய்களை பூமியில் புதைத்து அதற்குள் சப்-அடாமிக் துகள்களை மோதவிட்டு 99.9சதவிகிதம் கடவுளையே உருவாக்கிவிட்டோம் என்று ஒரு விஞ்ஞான உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன சொல்வது. அதாவது இந்த உலகை உருவாக்கிய மூலத்தை(கடவுளை) கண்டுபிடித்துவிட்டார்களாம். கண்ணதாசன் ஒரு முறை கேட்டார். மூலம் என ஒன்றிருந்தால் ஆதிமூலம் என்று ஒன்றிருக்கும். அது எது? என்றார். ஏ.பி.நாகராஜன் சார். கண்ணதாசனின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது போல ஏதாவது ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருக்கிறாரா என்று யாராவது ஃபிலிம் நியூஸ் ஆனந்தனைக் கேட்கலாம்.

கிராஷ் கோர்ஸ் - 5:
கடவுளை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க சிறந்த வழி, கடவுளை சதா சர்வகாலமும் மறுத்துக் கொண்டிருப்பதே.

இளைய காமராசர். இது நான் எழுதியுள்ள ஒரு புத்தகத்தின் தலைப்பு. CSC கம்ப்யூட்டர் நிறுவனத்தின் (மறைந்த) தலைவர் திரு.அய்யம்பெருமாள் பற்றி நான் எழுதிய இந்தப் புத்தகம் கடந்தவாரம் ஒரு நெகிழ்வான விழாவில் வெளியானது. வழக்கமான புத்தக வெளியீடாக இல்லாமல், CSC நிறுவனத்தின் தனியுரிமை(Franchise) கிளை நடத்திவருபவர்கள், அய்யம்பெருமாளுடன் தங்கள் அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுடைய உணர்வுகள் எந்தப் புத்தகத்திலும் அடங்காதவை. பரிசுத்தமான உணர்வுகள் வார்த்தைகளில் சிக்குவதில்லை.

கிராஷ் கோர்ஸ் - 6 :
இறந்த பின்னும் வாழலாம். இருக்கும்போது உடனிருப்பவரை வாழ வைத்தால்.

இந்த வாரக் கேள்வி.
கிராஷ் கோர்ஸ் -  இதற்கு சரியான தமிழாக்கம் என்ன?

மேரி கோம்! - இந்திய பெண்களுக்கு ரோல்மாடல்!

மணிப்பூர் நகரமே குஷியில் துள்ளிக் குதிக்கிறது. அதிரும் டிரம் இசையால் இம்பால் இளைஞர்கள் நகரையே குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒலிம்பிக் சலிப்பில் இருந்த இந்திய நாடு, நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது.

காரணம் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்! 51 கிலோ எடைப் பிரிவில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காலிறுதி வெற்றி, அவருக்கு வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருக்கிறது.

29 வயதான அவர் இரு குழந்தைகளுக்கு தாய்! ஹாயாக பிடித்ததை சமைத்துக் கொண்டு, அபத்த சீரியல்களில் நேரம் கழிக்கலாம். ஆனால் மேரி கோம் அப்படி இருக்கவில்லை. மணிப்பூர் காவல்துறையில் தற்போது ASPயாக பணிபுரிகிறார். ஆனால் சிறுவயதிலிருந்தே குத்துச் சண்டையின் மேல் காதல். அவருடைய கரங்கள், தன் இரட்டைக் குழந்தைகளை கொஞ்சியதை விட, பாக்ஸிங் கையுறைகளை அணிந்திருந்த நேரம்தான் அதிகம்.

முரட்டுத்தனமாக விளையாடாதே. நுணுக்கங்களை பயன்படுத்து என்று மட்டும் என் மனைவிக்கு சொன்னேன். அவள் என்னை மட்டுமல்ல, மணிப்பூரையும், இந்தியாவையும் பெருமைப்படுத்திவிட்டாள் என்று பூரிக்கிறார் கணவர்.

‘அவருக்கு தங்கம் வெல்லும் தகுதியுள்ளது. அவர் வெல்வார் என்று நம்பிக்கையும் இருக்கிறது‘, என்று ஊக்கப்படுத்துகிறார் அவருடைய முதல் கோச் இபம்சா சிங்.

‘அடுத்த இரு போட்டிகளையும் வென்று அவர் தங்கம் வெல்ல கடவுளை பிரார்த்திப்பேன்‘ என்று நெகிழ்கிறார், மணிப்பூர் ஒலிம்பிக் அசோஷியனின் செயலாளர் ரோமன் சிங்!

மேரி கோம், ஏற்கனவே ஐந்து முறை உலக சாம்பியனாக இருந்தவர். இரு தினங்களுக்கு முன் அவருடைய குழந்தைகளுக்கு பிறந்த நாள். இந்த வெற்றி அவருடைய குழந்தைகளுக்கு மட்டும் பிறந்த நாள் பரிசு அல்ல, இந்தியாவுக்கே பரிசுதான்.

இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை மேரி கோம்தான்.

எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக முன்னேறிவரும் இந்தியப் பெண்களுக்கு, புதிய ரோல் மாடல் மேர் கோம்!

Friday, August 3, 2012

மதுபானக் கடை - விமர்சனம்



இந்தப் படத்தில் கதை என்று எதுவுமில்லை. கதை இருப்பதாக நினைத்தால் அது உங்கள் கற்பனையே என்ற டைட்டிலுடன் படம் துவங்குகிறது. சரி ஒரு குறும்புக்காக அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்தால்... டாஸ்மாக் மேல் சத்தியமாக படத்தில் கதையே இல்லை.

Sky Walk PVR இரவு காட்சிக்கு, நடிகர்கள், டெக்னீஷியன்கள் என மொத்த மதுபான டீமும் வந்திருந்தது. பின் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நடிகராக திரையில் தோன்றும்போதும் விசிலடித்துக் கொண்டிருந்தார்கள்.

மதுபானக் கடை. இதுதான் படத்தின் டைட்டில். இந்த டைட்டிலுக்கு ஏற்ப சீன் சொல்லு, என்று யாருக்கோ ஒரு குவார்ட்டர் வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் போதையில் அவ்வப்போது துண்டு துண்டாக சொன்ன காட்சிகளை அப்படியே படமாக எடுத்து தள்ளிவிட்டார்கள். நடுநடுவே ஆம்லேட், மீன் வறுவல் எல்லாம் வாங்கித் தந்திருக்கலாம். ஏனென்றால் அவ்வப்போது நடுநடுவே கதை போல சில காட்சிகள் வந்து செல்கின்றன.

இந்தப் படத்தின் காட்சிகளைப் போலவே நானும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் விமர்சனம் செய்ய முயற்சித்திருக்கிறேன்.

PVRல் கார்ன் சூப்பர். ஆனால் ஐஸ்க்ரீம் அளவும் பத்தாது, சுவையும் பத்தாது. வழக்கமாக நான் படம் பார்க்கும்போது நண்பர்கள் ஃபோன் அடிப்பார்கள். இந்த முறை அம்மாதிரி எந்த ரிலீஃபும் இல்லை.  தூக்கமும் வருவது போல வந்து டாஸ்மாக் நெடி தாங்காமல் தியேட்டருக்கு வெளியே ஓடிவிட்டது.

கூட்டமான பஸ் பயணத்தில் நெரிசலில் நசுங்கியபடியே அவ்வப்போது ஸ்டாப்பிங் வந்தாச்சா, என்று தலையை குனிந்து எட்டிப் பார்க்கும்போது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சில காட்சிகள் மனதில் பதியும். குடிகாரர்களின் பேச்சும் அந்தக் காட்சிகள் போல தொடர்பில்லாமல் இருக்கும். இந்தப் படம் திட்டமிட்டே அப்படி எடுக்கப்பட்ட படமோ என்று சந்தேகமாக இருக்கிறது.

புறப்படும்போதே, ஐயய்யே இந்தப் படத்துக்கா என்றார் மனைவி. மதுபானக் கடை என்ற பெயர் பெண்களை தியேட்டருக்கு உள்ளேயே வரவிடாது. ஆனாலும் தியேட்டரில் இரு பெண்களைப் பார்த்தேன். அவர்கள் நண்பர்களுக்காக விசிலடித்தவர்களின் அம்மா (அ) அக்கா (அ) தங்கையாக இருக்கலாம். டாஸ்மாக் உள்ளே எப்படி இருக்கும் என்பதை அப்பெண்களுக்கு இந்தப் படம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வழக்கமாக தியேட்டரை நெருங்கும்போது, நெரிசல் அதிகமாகி, முதல் பத்து நிமிடங்களை பிடுங்கிக் கொள்வது போல டிராபிக் மிரட்டல்கள் இருக்கும். ஆனால் நெல்சன் மாணிக்கம் சாலை வழக்கத்துக்கு மாறாக இரவு 10 மணிக்கே காலி. அதனால் வேறு வழியின்றி குறிப்பிட்ட நேரத்துக்குள் தியேட்டருக்குள் நுழைந்து, படத்தை முதல் காட்சியிலிருந்தே பார்க்க வேண்டியதாயிற்று.

சாக்கடையில் உழலும் பன்றிகள் கூட மேயத் தகுதியில்லாத டாஸ்மாக்கின் அருவருப்பான உள்பகுதியை இந்தப் படத்தில் குளோசப், வைட் ஆங்கிள் என Zoo, Museum பார்ப்பது போல, விதவிதமாகப் பார்க்கலாம்.

குடிகாரர்கள் வாந்தி எடுக்கும்போது அவ்வப்போது சில இரசிக்கத்தக்க தத்துவங்களையும் உதிர்ப்பார்கள். அதுபோல இப்படத்திலும் சில ஷார்ப் வசனங்கள் உண்டு.

செலவில்லாத கையடக்க டிஜிட்டல் காமிராக்களால் நேரக் கூடிய சில சினிமா அபத்தங்களில் ஒன்றுதான் இந்த மதுபானக்கடை.

அடிக்கடி டாஸ்மாக் செல்பவர்களுக்கு இதில் வந்து போகும் சில கதாபாத்திரங்கள் சுவாரசியம் தரக்கூடும். குடிகார நண்பர்களுடன் சைட் டிஷ்ஷை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு அவர்களின் அர்த்தமற்ற உளறல், இளிப்பு, அழுகை, ஆத்திரம் போன்றவற்றால் தலைவலியுடன் திரும்பி வந்த உணர்வுதான் எனக்கு.

தெரியாமல் உளறுபவர்கள் குடிகாரர்கள். இந்த மதுபானக்கடை குழு தெரிந்தே உளறியிருக்கிறது என்பது என் கருத்து. டாஸ்மாக் மட்டும் இல்லாதிருந்தால் இது போன்ற படங்கள் வந்திருக்காது. இந்த ஒரு காரணத்துக்காகவாவது, தமிழக அரசு டாஸ்மாக்கை உடனே மூட வேண்டும்.

குடியின்றி அமையாது உலகு என்று விளம்பரம் செய்கிறார்கள். இப்படமின்றியும் அமையும் தமிழ் சினிமா உலகு.

எதற்காக ஆனந்தவிகடன் போன்ற முன்னணி பத்திரிகைகள் இந்தப் படத்தை விழுந்து விழுந்து புரமோட் செய்தன எனப் புரியவில்லை.

மேற்கண்ட வரிகளில் விமர்சனம் என்று எதுவுமில்லை. அவற்றை விமர்சனம் என்று நீங்கள் நினைத்தால், இந்தப் படத்தின் கதையைப்போல அதுவும் உங்கள் கற்பனையே.