Saturday, July 19, 2014

MH 17 விமானம் சுடப்பட்ட மர்மம் : அமெரிக்கா - ரஷ்யா சண்டையாகிக்கொண்டிருக்கிறது.


மலேசியவிமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் பெரிய அண்ணன்களான அமெரிக்க, ரஷ்ய சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது. 

33,000ம் அடி உயரத்தில் பறக்கிற விமானத்தை சுட்டு வீழ்த்த வேண்டுமானால் வலிமையுள்ள ஏவுகணை வேண்டும். அதை துல்லியமாக இயக்க நன்றாக பயிற்சி பெற்றவர்கள் வேண்டும். அப்படிப்பட்ட ஏவுகணையும், இயக்கும் பயிற்சியும் உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டு. 

உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து பயிற்சியும் ஆதரவும் கொடுத்துவருகிறார்கள். ஏவுகணை கிளர்ச்சியாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியிலிருந்துதான்  ஏவப்பட்டுள்ளது. எனவே ஏவுகணை இயக்கப்பட்ட விதத்தையும், ஏவப்பட்ட பகுதியையும் கவனிக்கும்போது எல்லா சந்தேகங்களும் உக்ரைன் கிளர்ச்சியாளர்களை நோக்கி குவிகிறது. 

விமானத்தை சுட்டு வீழ்த்த உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி செய்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகவே குற்றம் சுமத்துகிறார்.  

சமீபகாலமாக ரஷ்யா மீண்டும் தலையெடுக்க முயல்வதும், அமெரிக்கா எரிச்சலுடன் கவனிப்பதும் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே அமெரிக்காவின்  இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பதை கணிப்பது கடினம்.

உக்ரைன் அதிபர் படு கோபத்தில் இருக்கிறார். மது குடித்த கொரில்லாக்களால் இதைச் செய்ய முடியாது. நிச்சயம் ரஷ்யாவின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்கிறார் காட்டமாக.

விமானம் வீழ்ந்து கிடக்கும் பகுதி தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பயணிகளின் உடல்களை அவர்கள் தான் கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்கள். இதனை கண்காணிக்க யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. தைரியமாக நெருங்கிய பத்திரிகையாளர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்திருக்கிறார்கள். அப்பாவி பயணிகளின் உடல்கள் கொடுமையான வெப்பத்தில் கிடக்கின்றன. எனவே அவற்றை விரைவில் குலைந்து போகாமல் தடுக்க நாங்கள் பத்திரப்படுத்தி வருகிறோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தடயங்களை அழிக்கிறார்கள் என்று ஒபாமாவும், உக்ரைன் அதிபரும் குற்றம்சாட்டுகிறார்கள். சர்வ தேச மனித உரிமை ஆர்வலர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அனுமதித்துவிட்டு, அந்தப் பகுதி மக்கள் எவருடனும் பேசக்கூடாது எனச் சொல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

பிளாக் பாக்ஸை காணோம் என்கிறது உக்ரைன். விபத்து நடந்த முதல் சில மணி நேரங்களிலிருந்தே ரஷ்யாவை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டது அமெரிக்கா. ஒபாமாவே நேரடியாக ரஷ்யாதான் காரணம் என்கிறார். இது உக்ரைன் உள்நாட்டுப்பிரச்சனை அல்ல. இதில் உலக நாடுகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளது. எனவே மற்ற நாடுகளும் இதில் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று உக்ரைன் பிரச்சனையை வழக்கம்போல தனது ஸ்டைலில் சர்வதேசப் பிரச்சனையாக்க அமெரிக்கா முயல்கிறது. ரஷ்யாவோ அசரமாட்டேன்கிறது. இன்னும் விசாரணையே துவங்கவில்லை. அதற்குள் ஏன் தீர்ப்பு தருகிறீர்கள் என்று அமெரிக்காவின் மேல் பாய்கிறது. உக்ரைன் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பே இல்லை என்று நற்சான்றிதழ் தருகிறது. இப்படி மாறி மாறி அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு அப்பாவி மக்களையும், நாடுகளையும் பலிகொடுக்கிறார்களோ என எனக்குத் தோன்றுகிறது.


ஆனால் முக்கியமான சில கேள்விகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் மலேசிய விமானத்தை ஏன் சுட்டு வீழ்த்தவேண்டும்? அதனால் அவர்களுக்கு கிடைக்கும் அரசியல் ஆதாயம் என்ன? ரஷ்யாவின் உத்தரவை ஏற்று இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கன் எனச் சொல்வது உண்மையாக இருந்தால், ரஷ்யாவிற்கு இதனால் என்ன இலாபம் என்பது தெளிவாகத்தெரியவேண்டும்.

இந்தக் கேள்விகளுக்கு ரஷ்யா வாய் திறக்கப்போவதில்லை. ஆனால்  அமெரிக்காவோ, உக்ரைன் அதிபரோ பதில் சொல்வார்கள் என்றால், மர்ம முடிச்சுகள் அவிழக்கூடும்.

Wednesday, July 16, 2014

கேப்போம்ல : முதலமைச்சராக செயல்பட இன்னும் என்னதான் வேண்டும் ஜெயலலிதாவிற்கு?

ஒரு முதலமைச்சராக செயல்பட இன்னும் என்னதான் வேண்டும் ஜெயலலிதாவுக்கு?
சட்டசபையில் எதிர்கட்சிகளே கிடையாது. பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட எதிர்க்கட்சி.
இங்கு இவர் ஆட்சி. மத்தியில் அவருக்குப் பிடித்த மோடியின் ஆட்சி.
அவருடைய எதிரிகள் கருணாநிதியும், காங்கிரசும் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

ஆனாலும் இன்னமும் ஹோல் சேல் மளிகைக்கடை முதலாளி போலவே செயல்படுகிறார். தான் முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டார். 

எதைக் கேட்டாலும் மலிவு விலை கொசுறு கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறார்.
மின்தடை இருக்கே என்றால், மின் தடை இல்லை மின்வெட்டுதான் இருக்கு என்று வார்த்தைகளால் ஏமாற்றுகிறார்.

இலங்கைப் படையினரால் இன்னமும் மீனவர்கள் கைது தொடர்கிறதே என்றால், கச்சத் தீவை மீட்போம் என்கிறார். எப்போது என்றால் காவிரிக்காக போராடுவோம் என்கிறார். காவிரி என்ன ஆச்சு என்றால் முல்லைப் பெரியாருக்கு தாவுகிறார். முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு என்ன வழி என்றால் மத்திய அரசை கை காட்டுகிறார். மத்திய அரசு அந்த 7 பேரை விடுதலை செய்யுமா என்றால், கருணாநிதி ஆட்சி சரியில்லை என்கிறார்.

நடந்துகொண்டிருப்பது இவருடைய ஆட்சி. ஆனால் இவர் கருணாநிதி ஆட்சி நடக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது. அவரை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவரை எதிர்த்து அறிக்கைவிட்டால் அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது போல செயல்படுகிறார்.

டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது. அந்த வருமானத்தில் மலிவு விலை அம்மா பிராண்டுகளை அறிமுகப்படுத்துவது, கருணாநிதியை திட்டி அறிக்கை விடுவது. இவற்றைத் தவிர இந்த 3 ஆண்டுகளில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை ஜெயலலிதா.

மீண்டும் கேட்கிறேன், அரசியல் வானிலை முற்றிலும் அவருக்கு சாதகமாக இருந்தாலும் ஏன் செயல்பட மறுக்கிறார்? சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அவரே கற்பனை செய்யாத அளவிற்கு மக்கள் அரசியல் வெற்றியை தந்திருக்கிறார்கள். பதிலுக்கு கொஞ்சமாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நீண்டகாலத்திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் ஆனபின்பும் அதற்கான அறிகுறியே இல்லையே. இன்னும் என்னதான் வேண்டும், ஜெயலலிதாவுக்கு?

#கேப்போம்ல  

ராமானுஜம் - திரைக்கதை இல்லாத திரைப்படம்

திரு. ஞானராஜ சேகரன் அற்புதமான, அவசியமான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறார். பாரதியார், காமராஜர், பெரியார் மற்றும் ராமனுஜம் என நாம் மறந்த மேதைகளின் வாழ்க்கைகளை தனது திரைப்படங்களின் வழியாக பதிவு செய்கிறார். அடுத்த தலைமுறைக்கு இவர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்த இப்படி ஒரு பதிவு அவசியம் தேவைப்படுகிறது. அதற்காக ஒரு சபாஷ்.

ஆனால் . . . அவருடைய முயற்சிகள் எப்போதும் மேலோட்டமாகவே இருக்கின்றன. அவருடைய முயற்சியில் ஆழம் இல்லை. கதையாக நிகழ்வுகளை வரிசைப்படுத்திவிடுகிறார். இது மிகவும் கடினமானது. ஆனால் ஒருபோதும் கதையை திரைக்கதையாக்க அவர் மெனக்கெட்டதில்லை.

ஒருவரின் வாழ்க்கையை கதையாக வரிசைப்படுத்துவதை விட, ஒரு திரைப்படத்திற்கு ஏற்ற திரைக்கதையாக மாற்றுவது மிக மிக சவாலான ஒரு விஷயம். இந்த சவாலுக்கு அவர் ஒரு போதும் தன்னை உட்படுத்திக் கொண்டதில்லை. மோகமுள்ளில் துவங்கி ராமானுஜன் வரை அவர் திரைக்கதை என்ற ஏரியாவிற்குள்ளேயே வரவில்லை. அவருடைய அத்தனை படங்களும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தாதற்குக் காரணம் திரைக்கதையில் அவர் கவனம் செலுத்தவே இல்லை என்பதுதான்.

ராமானுஜன் படத்தில் அவர் இந்தக் குறையை சரி செய்திருப்பார் என நினைத்தேன். ஆனால் இதில் இன்னும் மோசம். ராமானுஜன் வாழ்க்கையைப் பொறுத்தவரை நாம் அறிந்தது மிக மிக சொற்பமே. அதனால் சுவாரசியமான நிஜ சம்பவங்கள் இல்லவே இல்லை. திரைக்கதாசிரியருக்கு ஒரு வகையில் இது அனுகூலம். கதையை அடுத்தடுத்து நகர்த்துவதற்கும், ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு நகர்வதற்கும் புத்திசாலித்தனமாக சம்பவங்களை கற்பித்து எழுதிக்கொள்ளலாம்.

ஆனால் துளியும் திரைக்குத் தேவையான கற்பனை ஏதுமின்றி துண்டுத் துண்டுக் காட்சிகளாக படம் நகரும்போது மனம் ஒன்ற மறுக்கின்றது. நல்லவேளையாக போரடிக்கும்போதெல்லாம் விசிலடித்து, கூச்சலிட்டு மற்றவர்களை இம்சிக்கும் எவரும் வந்திருக்கவில்லை. அதனால் மொத்த தியேட்டரும் அமைதியாக எந்த ஒன்றுதலும் இல்லாமல் இடைவேளை வரை காத்திருந்தோம்.

ராமானுஜன் என்ற கணித மேதை நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம்தான் அந்த பொறுமையைக் கொடுக்கிறது. இந்தப்படம் நாம் அறியாத யாரைப்பற்றியோ இருந்திருந்தால் நான்கைந்து காட்சிகளுக்குள் பொறுமையிழந்திருப்போம்.

ராமானுஜன் தனது கணித மேதைமையால் முதலில் வகுப்பாசிரியரை ஆச்சரியப்படுத்துகிறார், அடுத்து கோவில் பட்டரை ஆச்சரியப்படுத்துகிறார், அதற்கடுத்து வயதில் பெரிய பட்டதாரிகளை ஆச்சரியப்படுத்துகிறார், பின்னர் புரொபசரை, பிரின்ஸிபாலை, ஊர் பெரியவரை, கலெக்டரை, சென்னை பல்கலைக்கழகத்தை என ஒவ்வொருவராக வரிசையாக ஆச்சரியப்படுத்துகிறார்.  ஆனால் அவர் ஆச்சரியப்படுத்தும் காட்சிகளில் இயக்குனரும், திரைக்கதாசரியரும்  புத்திசாலித்தனமாக எதுவும் செய்யாததால் மகா போரடிக்கிறது.

கணிதத்தில் பெரிய மேதையாக இருந்தாலும் மற்ற பாடங்களை பாஸ் பண்ண முடியாத சாதாரண மாணவனாக தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்கிறார். தனது தந்தை உட்பட எவரும் தனது திறமையை அங்கீகரிக்காததால் வீட்டை ஓடிவிடுகிறார், இரயில் முன் படுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார், தனி அறையில் அமர்ந்து அழுகிறார்.

தனது திறமையை இந்த உலகுக்கு தெரிவிக்க அவர் தைரியமாக தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யவில்லை. அவரது திறமை மற்றவர்களின் முயற்சியால்தான் மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

தன்னம்பிக்கை இல்லாத ஒரு மாபெரும் கணித மேதை தான் ராமானுஜன் என்கிற எண்ணம் நமக்கு படத்தின் இறுதியில் ஏற்படுகிறது. ஆனால் அவருடைய மனப்போராட்டங்களும், மேதைமையின் உச்சங்களும் பலமில்லாத வசனங்களால் படத்தில் சொல்லப்படுகிறது. ஆழமான காட்சிகள் மிஸ்ஸிங். Beautiful Mind படத்தில் இது போன்ற மனச்சிக்கல் கொண்ட ஒரு மேதை அபாரமாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அந்த அளவிற்கான ஸ்கோப் இருந்தும் ராமானுஜன் வெகு சாதாரணமாக படமாக்கப்பட்டுவிட்டது.

ரமேஷ் விநாயகத்தின் இசையில் இரண்டு பாடல்கள் அருமையாக இருக்கின்றன. பிண்ணனி இசையும் பரவாயில்லை. எடிட்டிங் லெனின். படத்தின் நீளத்தை வெட்டி எறிவதிலேயே அவருக்கு பாதி நேரம் செலவாகியிருக்கும் என நினைக்கிறேன். சில காட்சிகளை அவர்தான் வரிசைப்படுத்தினாரோ என்று கூட தோன்றுகிறது.

நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையை அறிமுகப்படுத்துகிற படம் என்பதால் மட்டும் இந்தப்படத்தை நான் வரவேற்கிறேன். அடுத்த படத்திலாவது நல்ல திரைக்கதை குழுவை வைத்துக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும் என திரு.ஞானராஜ சேகரனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.