Thursday, April 25, 2024

ஏ.ஆர்.இரகுமான் - டெய்லர் ஸ்விஃப்ட் கூட்டணி

 பத்து வருடங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் கூட்டணி!

”Kun faya Kun பாடலைக்கேட்டதிலிருந்து ஏ.ஆர்.இரகுமானை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்”, என்று டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். நான் டெய்லர் ஸ்விஃப்ட் பாடல்களை தேடிக்கேட்டது அந்த (2014) பேட்டிக்குப்பின்னர்தான்.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை வாழ்க்கை மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையைப் போல தனித்துவமானது. அவருக்காக இசையமைக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று ஏ.ஆர்.இரகுமான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு (2024) ஒரு பேட்டியில் கூறினார்.
எனது டீன் ஏஜ் பருவத்தை ஆக்கிரமித்தவர் மைக்கேல் ஜாக்சன். இப்போதும் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் அப்படியே இருக்கிறது. அவரும் ஏ.ஆர்.இரகுமானும் இணையப்போகிறார்கள் என்று செய்தி வெளியானபோது மிகவும் உற்சாகமடைந்தேன். ஆனால் மைக்கேல் ஜாக்சனின் மறைவால் அந்தக் கனவுக் கூட்டணி நிறைவேறவில்லை.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை மைக்கேல் ஜாக்சனைப்போல என்னை ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் இசையிலும் ”தன்னைக் கண்டடைவது” என்கிற தேடல் இருப்பதாகத் தோன்றும். இரகுமானின் பாடல்கள் பலவற்றிலும் இந்த தேடல் இருப்பதை கவனிக்கலாம். சமீபத்தில் அந்த தேடல் அதிகமாகியிருக்கிறது. அந்த வகையில் டெய்லர் ஸ்விஃப்ட் அவரை வசீகரித்திருக்கலாம்.
தற்போது டெய்லர் ஸ்விப்ட் #THETORTUEDPOETSDEPARTMENT என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். அப்பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து ஏ.ஆர்.இரகுமான் ஒரு ட்வீட் செய்தார். அவ்வளவுதான் அவர்கள் இருவருடைய கூட்டணி அமைந்துவிட்டதாகவே இரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள்.
இந்தத் தருணத்தில் ஓகே கண்மணி படத்தில் வரும் ”மன மன மன மென்டல் மனதில்” பாடல் ஞாபகம் வருகிறது. அதில் துள்ளலாகப் பாடியிருக்கும் ஜோனிடா காந்தியின் குரலில் டெய்லர் ஸ்விஃப்டின் சாயல் இருக்கும்.
ஏ.ஆர்.இரகுமானின் இசையில் டெய்லர் ஸ்விப்ட் பாடப்போகும் பாடலுக்காக இப்போதிருந்தே காத்திருக்கிறேன்.



No comments: