Showing posts with label அவள். Show all posts
Showing posts with label அவள். Show all posts

Thursday, January 1, 2009

அவள் தந்த கிரீட்டிங் கார்டு


எனக்கு அவள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் !!!

அந்த கிரீட்டிங்கார்டுகள், நான் பொக்கிஷங்களாக பாதுகாத்து வைத்திருக்கிற விஷயங்களில் ஒன்று. அதில் பெரும்பாலானவை என்னுடைய பிறந்த நாளுக்கு எனக்கு வந்த காதல் பரிசுகள். மற்றவை காதலும், நட்பும் கலந்த புத்தாண்டு வாழ்த்துகள்! வெகு சில பொங்கல் மற்றும் தீபாவளி வாழ்த்துகளும் உண்டு!

எனக்கு எத்தனை வாழ்த்து அட்டைகள் வந்தனவோ, அதே அளவுக்கு நானும் வாழ்த்து அட்டைகளை முத்தங்களுடனும், ஏக்கங்களுடனும் அனுப்பியிருக்கிறேன். அனுப்புவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சென்னை அண்ணாசாலையிலுள்ள ஹிக்கிம்பாதம்ஸில் வாழ்த்து அட்டைகளை தேட ஆரம்பித்துவிடுவேன். 90 சதவிகித அட்டைகளின் கவர்கள் 'பிங்க்' நிறத்தில் இருக்கும். அதை தொடும்போதே 'சில்லென்று ஒரு காதல் பிறக்கும்'. 'பிங்க்' பெண்களின் நிறம். Girlish! ஒரு பெண்ணின் மென்மை வாழ்த்து அட்டைகளுக்கு தேவைப்படுகிறது. அதனாலேயே அது 'பிங்க்' நிறத்தில் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன். வெளிர் பச்சையும் உண்டு! அது கூட நமது மனதில் பசுமை கூட்டி மேலும் மென்மையாக்கும்.

அந்த கிரீட்டிங்கார்டுகளில் ஓரிரு வரிகளில் மிகப் பிரமாதமான கவிதைகள் இருக்கும். அந்தக் கவிதைகள் நம்மை மயக்கி விலையைப் பார்க்காமல் கிரீட்டிங்கார்டுகளை வாங்க வைத்துவிடும். அந்த வரிகளுக்கு மேலே 'டியர் - - - ' என எழுதி முத்தங்களால் ஒத்தி எடுத்து 'வித் லவ்' என முடித்த அந்த தருணங்களை என்னால் மறக்கவே முடியாது.

காரணம் அவை எல்லாமே காதல் கசிந்த இரகசிய தருணங்கள்! பின்னிரவு, முன்பனி என எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி காற்றில் மிதந்த மகரந்த நொடிகள்! பார்க்கிற, படிக்கிற விஷயங்கள் எல்லாம் கவிதையாய் மிளிர்ந்த காலங்கள்.

அந்த கிரீட்டிங் கார்டுகளில் ஏதோ ஒன்றில் திடீரென நட்பு காதலானது. காதல் இன்றைய உறவானது. அது எது? தேடும்போதெல்லாம் என்னை நான் பழைய நினைவுகளில் தொலைக்கிறேன்.

நானும் அவளும் நாங்களாகி, கிட்டத்தட்ட 12 வருடங்களாகிவிட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்ட வாழ்த்து அட்டைகள் இன்றைக்கு ஒன்றாக ஒரே பெட்டியில்தான் இருக்கிறது.

அந்த வசீகர நினைவுகளை, கனவுகளை, இரகசியங்களை பதிவு செய்த கிரீட்டிங்கார்டுகளை வருடத்திற்கொரு முறை தூசி தட்டி பத்திரப்படுத்தும்போது மீண்டும் மீண்டும் சுகந்தமான ஒரு வாசனை காற்றை நிரப்புகிறது. மனது இலகுவாகிறது. மீண்டும் ஒரு முறை காதல் துளிர்க்கிறது. நான் மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்.

இன்றைக்கு கூட அவள் தந்த காதல் அட்டைகளை எடுத்து வாசித்தேன்.
அவளுக்கே தெரியாமல் இரகசியமாக!

அதுதான் சுகம், அதுதான் அன்பு, அதுதான் காதல்!

ஹேப்பி நியு இயர் . . .

Monday, September 1, 2008

அவளை என்னால் மறக்க முடியவில்லை

அவள் தமிழில் அறிமுகமாகி, மலையாளத்திலும் பிரபலமாகியிருந்தாள்.  அவள் கைகளிலும் கால்களிலும் பிளேடு கீறல்.
"படுபாவி எல்லாம் அந்த ராஸ்கலுக்காகத்தான். இரத்தம் நிறைய போயிடுச்சி.  ஆனாலும் பிழைச்சுட்டேன்.  அவனை விடமாட்டேன்" என்று சீறிவிட்டு "டயலாக் என்ன?" என்றாள்.

சில வருடங்களுக்கு முன், தி.நகரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ஷோ ரூமுக்கு விளம்பரப் படம் எடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.  நான் சொன்னது  அவர்களுக்கு பிடிக்கவில்லை.  அவர்கள் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டு, சமாதானமாகி கடைசியாக ஒரு  ஸ்கிரிப்ட் ஓகே ஆனது. அதற்கு ஒரு ஜிங்கிளையும் ரெக்கார்ட் செய்த பிறகு, துணிக்கடை தரப்பிலிருந்து எங்களால் இவ்வளவு செலவு செய்ய முடியாது என்று சொல்லி பாதியாக வெட்டப் பட்ட ஒரு பட்ஜெட் வந்தது.

இந்த மாதிரி புது விளம்பரதாரர்கள் ஜகா வாங்குவதை அடிக்கடிபார்த்து பழகியிருந்ததால், நான் பெரிசாக அலட்டிக்கொள்ளவில்லை.   பட்ஜெட் குறையும்போதெல்லாம் உதவுவதற்க்காகவே சில மாடல் கோ-ஆர்டினேட்டர்கள் உள்ளார்கள்.  ரூபாய் 500லிருந்து 1000ம் வரை பேமெண்ட் கொடுத்தால் போதும். ஒரு நாள் முழுக்க நடித்துவிட்டு முகம் சுளிக்காமல், ஆட்டோ ஏறிப்போவார்கள்.  பட்ஜெட் சரிபாதியாகிப் போனதால் நான் அந்த மலிவு மாடல்களுக்காக காத்திருந்தேன்.

உள்ளே வரலாமா? என்று கேட்டுவிட்டு உள்ளே வந்தவள் 'அவள்'. கையில் பிளேடு கீறலுடன் 'டயலாக் என்ன?' என்று கேட்ட அவள். கிட்டத்தட்ட 7 வருட இடைவெளி. அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வேறு நரை தாடியை மறைக்க ஃபுல் ஷேவில் இருந்தேன்.  அதனால் நான் யாரென்று தெரியாமலேயே 'ஹலோ' என்று கையைக் குலுக்கிவிட்டு பெயரைச் சொன்னாள். அது அவளுடைய பெயர் அல்ல.  7 வருடங்களுக்கு முன்பு தமிழ்-மலையாளத் திரை உலகம் அறிந்த பெயர் அல்ல.

"ஏன் பெயரை மாற்றிக் கொண்டாய்?" என்று நான் கேட்டதும், அவள் அதிர்ந்து போனாள்.  என்னை எப்படித் தெரியும் என்றாள்? சொன்னேன்.   ஒரு நெடிய மெளனம்.  அப்போது கீறிய பிளேடின் வலியை இப்போது அவள் அனுபவிப்பதாய் உணர்ந்தேன்.
"புது பேரு, புது வாழ்க்கைன்னு இப்பதான் 3 வேளை சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். நான் பழைய ஆர்டிஸ்டுன்னு யாருக்கும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்."
"ஏன்?"
"எல்லாரும் என்னை மறந்துட்டாங்க?"
"இப்போ சொன்னா என்ன ஆகும்?"
"திரும்பவும் மறந்துடுவாங்க"

என்னால் மறக்க முடியவில்லை.

Friday, August 22, 2008

நானும் அவளும் . . . சில பழக்கங்களும்.


"சார்... நான் ஒரு ஆச்சாரமான பிராமிண். இந்த Resortல நான் வெஜ் சமைக்கறாங்க, அதனால கண்டிப்பா பூண்டு யூஸ் பண்ணுவாங்க. எனக்கு மட்டுமில்ல எந்த பிராமிணுக்கும் பூண்டு வாசனையே கூடாது. அபச்சாரம். அதனால தயவு செய்து நாம வேற ஹோட்டலுக்குப் போயிடலாம்."

இந்த வரிகளை படிக்கும்போது சிரிப்பு வருதா? வரும். அடுத்த வரிகளையும் படிங்க.

நான் அந்தப் பெண்ணை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். யாரோ ஒருவனுடன் பைக்கில் வந்து இறங்கி எங்களுடன் காரில் வந்து அமர்ந்து கொண்டாள். அவள் முதன்முதலில் அறிமுகமான சினிமாக் காட்சிஎதுவெனத் தெரிந்தால் சட்டென்று அவளா என்று என்னைப் போலவே வியப்பீர்கள். ஆனால் அது எந்தக் காட்சியென்று நான் சொல்லப் போவதில்லை. அவள் 'மெட்டிஒலியில்' நடித்திருக்கிறாள். முடிந்தால் யாரென்று யூகியுங்கள், ஏனென்றால் கடைசிவரை அவள் யாரென்று நான் சொல்லப்போதில்லை.

வழியில் டிபன் சாப்பிட்டுவிட்டு, கார் ஒரு திருப்பத்தில் திருவான்மியூருக்குள் நுழையும்போது, அதுதான் என் ஹஸ்பெண்ட் என்று கைகாட்டினாள். சிறிது நேரத்திற்கு முன் அவளை பைக்கில் வந்து இறக்கிவிட்ட அந்தக் கணவன், பான்பராக் மென்றுகொண்டிருந்தான்.

நான் நடத்தப்போகும் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கத்தான் அவள் வந்திருந்தாள்.

"நைட்டே திரும்பிடலாமா?", என்றாள்

"மிட் நைட் ஆகும்."

மொபைல் போனை எடுத்து "ஏங்க நான் வற்ரதுக்கு நாளைக்கு மத்தியானம் ஆகும்", என்றாள் எங்கோ தொலைவில் பான்பராக்கை மென்று கொண்டிருந்தவனிடம்.

இரவு நிகழ்ச்சி நடக்க இருந்த Resortல் மதிய உணவுக்கு முன், "ஒரு தடவை ஸ்கிரிப்டை பாத்துடறியா?" என்றேன். அவள் சரி எனச் சொல்லும்போது எனது மடி அருகே இருந்தாள். ஒரு முறை, இரு முறை தொடர்ந்து பல முறை, ஆனாலும் அவளால் அந்த ஸ்கிரிப்டை தன் வசப் படுத்தவே முடியவில்லை.

"சார் சாப்பிட்டுட்டு உட்காரலாமா?" என்றாள். நான் அலுப்புடன் கையை அலம்பிக்கொண்டு டேபிளுக்கு வந்தேன். டேபிளில் இரண்டு கோப்பைகளில் விஸ்கி.

"இது யாருக்கு?"

"நமக்குத்தான்" என்றாள்.

"நான் மது அருந்துவதில்லை."

"ஆச்சரியமா இருக்கே. எப்படி சார் இந்தமாதிரியெல்லாம் இருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டே இரண்டு லார்ஜையும் அவளே முடித்துவிட்டாள்.

"எனக்குப் பசிக்கிறது. உணவு அருந்தலாமா?", என்றேன்.

"வேண்டாம் சார்", என்றாள்.

"ஏன்?"

இப்போது முதல்வரியைப் படியுங்கள், சிரியுங்கள்.