Showing posts with label செயல் வழி கல்வி. Show all posts
Showing posts with label செயல் வழி கல்வி. Show all posts

Wednesday, November 4, 2009

தலை சுற்ற வைக்கும் கோனார் நோட்சும், தமிழ் Teacherசும்


”இவையும் சிங்கங்களும் மான்களும் புலிகளும், இங்ஙனம் ஒன்றுக்கொன்று பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும் பறவைகளும் இசையால் மயங்கித் தத்தம் வழியினை அறியாதவனாய் இடந்தோறும் ஒன்றோடொன்று கலந்து சோர்ந்து இசையாகிய வலையின்கண்பட்டன.”

இந்த வரிகளை உளறாமல் படித்துவிட்டால் உங்களுக்கு 5 மதிப்பெண்கள். மனப்பாடம் செய்து மூச்சுத் திணறாமல் ஒப்பித்துவிட்டால் 10 மதிப்பெண்கள். தலையை பிய்த்துக் கொள்ளாமல் உடனே அர்த்தம் கூறிவிட்டால் 15 மதிப்பெண்கள். இல்லாவிட்டால் பிரம்படி மற்றும் பரீட்சையில் ஃபெயில்.

கோனார் நோட்சும், தமிழ் டீச்சரும் சேர்ந்து என் மகளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தலை வலி என்றால் அனாசின், படுக்கையில் என்றால் ஹார்லிக்ஸ், டிவி என்றால் சன் டிவி என்பது போல, தமிழ் பாடம் என்றால் கோனார் நோட்ஸ் என்பது முப்பது வருடங்களாக மாறாத விதி. பலபேரின் தலை விதியை இந்த கோனார் நோட்ஸ் மாற்றியிருக்கிறது.

கோனார் நோட்ஸ் என்பது மாணவர்களின் உற்ற நண்பன் என்பார்கள். ஆனால் உண்மையில் இது தமிழ் டீச்சர்களின் உற்ற நண்பன். குறிப்பாக இங்கிலீஷ் பள்ளிகளில், தமிழ் நடத்தும் தமிழ் டீச்சர்ஸ் கோனாரின் உற்ற நண்பனாக இருக்கிறார்கள். வகுப்பில் எதையும் சொல்லித்தருவதில்லை. கோனார் நோட்ஸை மனப்பாடம் செய்யச் சொல்லிவிட்டு, சிவப்பு இங்க் பேனாவை எடுத்து மார்க் போடத் தயாராகிவிடுகிறார்கள்.

திருவிளையாடல் படத்தில் ”விறகு வாங்கலையோ விறகு” என்று கூவியபடி சிவன் விறகுவெட்டி வேஷத்தில் நடந்து வருவாரே ஞாபகம் இருக்கா?

”ஆமாம்? “பாட்டும் நானே, பாவமும் நானேன்னு“ ஒரு பாட்டு பாடுவாரே...”

”அதேதான். அவர் பாடறதைக் கேட்டு சிங்கம், மான், புலி போன்ற மிருகங்கள் எல்லாம் மயங்கிடுச்சாம். ”

”மயங்கி . .”

”மயங்கிப் போய் தங்களுக்குள்ள பகையை மறந்து, போற பாதையை மறந்து சொக்கிப்போயிடுச்சாம். இதைத்தான் கோனார் நோட்ஸ்ல எழுதியிருக்காங்க.”

”நிஜமாவா? எங்க மிஸ் இதையெல்லாம் சொல்லலயே!”

”கோனார் நோட்ஸ்லயும் இதைத்தான் எழுதியிருக்காங்க.”

”நீ சொல்றது ஈஸியா இருக்குப்பா. ஆனா இது வேண்டாம்.”

”ஏன்?”

”ஏன்னா? கோனார் நோட்ஸ்ல இல்லாததை நான் எழுதினா மிஸ் எனக்கு மார்க் போட மாட்டாங்க.”

”ரெண்டும் ஒண்ணுதாம்மா.”

”ஆனா கோனார் நோட்ஸ்ல நீ சொன்னது இல்லையே . . . அதனால நானே படிச்சிக்கறேன். என்னை விடு.”

”ஏங்க அவளை கெடுக்காதீங்க. ஏய் அப்பா சொல்றத கேட்காதடி . . .”, உள்ளேயிருந்து அவளுடைய அம்மா.

”பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும்.... பகைமை.. பகைமை... பகைமையினு... பக்கை..மை..யின..”

மீண்டும் என் மகள் கோனார் நோட்ஸை கையில் எடுத்துவிட்டாள். இனி நான் தடுக்க முடியாது.

வாழ்க கோனார் நோட்ஸ் . . . வளர்க தமிழ் டீச்சர்ஸ்

Wednesday, October 22, 2008

ல.ச.ரா : வாழ்க்கையே ஒரு பேத்தல்

"நீங்க எப்படி சார் டீச்சிங் கத்துக்கிட்டீங்க?"
"டீச்சிங் பண்ணித்தான்"

இவைதான் என்னுடைய வகுப்புகளில் அவ்வப்போது கேட்கப்படும் கேள்வியும், நான் எப்போதும் சொல்லும் பதிலும்.

Learn by teaching என்பது என்னுடைய கல்வி கற்கும் முறையாக இருந்துவருகிறது. இப்போது நான் வலைப்பூக்களில் பல விஷயங்களை எழுதுவற்க்கான காரணம், அவை எனக்கு தெரிந்திருப்பதால் மட்டுமல்ல, தெரிந்துகொள்வதற்க்காகவும்தான்.

ஒரு விஷயத்தைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்திராமல் அது பற்றி எழுதலாமா? வகுப்பறையில் மாணவர்களுக்குச் சொல்லலாமா?

இதற்கு நான் பதில் எழுதி அதை படிப்பதை விட சாகித்ய அகாடமி விருது பெற்ற போது, 1990ல் லா.ச.ரா ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை படியுங்கள்.

உங்க எழுத்துக்கள் புரியாத தன்மை (Obscurity) கொண்டவை என்று பேசப்படுவது பற்றி?
"லா.ச.ரா. புக்ஸ் நான் படிச்சேன். அது புரியலை" என்று சொல்லிக்கொள்வது ஃபாஷனா போச்சு. என் எழுத்துக்கள் புரியாதுன்னு இவா புரிஞ்சுண்டாளாம். நான் உங்களை ஒண்ணு கேக்கறேன். எழுத்தாளன் எழுதும்போது எல்லாத்தையும் புரிஞ்சுண்டுதான் எழுதறானா என்ன? எழுதணும்னு ஆர்வமும், வேகமும் இருக்கு. இருக்கறதைக் கொட்டிடறோம். எழுதறவனுக்கே நிறைய விஷயம் புரியறதில்லை. அதே மாதிரிதான் படிக்கறவனுக்கும்.

இன்னைக்குப் புரியாததது, நாளைக்குப் புரியலாம். நாளைக்குப் புரியாதது, நாளை மறுநாள் புரியலாம். என்றைக்காவது ஒருநாள் கட்டயாம் புரிந்துபோகும்! அப்படியே புரியாவிட்டால் தான் என்ன? வாழ்க்கையே ஒரு பேத்தல் தானே!

நன்றி : ஆனந்தவிகடன், 14.1.90

கேள்வியில் உள்ள Obscurity என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடியபோது, Deficiency or absence of light, darkness, condition of being unknown, being unclear or hard to understand என்று பல அர்த்தங்கள் காணப்பட்டன.

ஒரு வார்த்தைக்கே இத்தனை அர்த்தங்கள் இருக்கும்போது, ஒரு வாழ்க்கைக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கக்கூடும். அதில் ஒரு அர்த்தம், ல.சா.ரா கூறியதுபோல 'வாழ்க்கை என்பது ஒரு பேத்தல்'

என்னைப் பொறுத்தவரையில் கற்றதும் கற்பதும்தான் வாழ்க்கை. அதனால் எனக்கு Learn by teach வசதியாக இருக்கிறது.

Tuesday, September 2, 2008

'து'வா? 'உ'வா?

இரவு ஒன்பது மணிக்கு மேல் அலுவலக தொலை பேசி அழைத்தால், அது மனைவியாகத்தான் இருக்கும்.
"ஹலோ"
"என்னங்க?", கரெக்ட் மனைவியேதான்.
"என்ன?"
"வீட்டுக்கு வரும்போது இரண்டு ஐட்டம் வாங்கிட்டு வந்திருங்களேன்",
"சொல்லு"
"துவரம் பருப்பு கால் கிலோ"
"ம்..."
"நோட் பண்ணிக்கோங்க. 'து....' பருப்பு. போன தடவை மாதிரி உளுத்தம் பருப்பை வாங்கிட்டு வந்திடாதீங்க.
"ஓ.கே"
"அப்புறம் உளுத்தம் பருப்பு அரை கிலோ. மறந்துடாதீங்க. . . 'உ' பருப்பு.
"இப்பதான 'உ' பருப்பு வேண்டாம்னு சொன்ன?"
"இல்லையே 'து' பருப்புக்கு பதில் 'உ' பருப்பை வாங்கிடாதீங்கன்னுதான் சொன்னேன்."
"என்னை கன்ஃபியூஸ் பண்றே?"
"நீங்க தான் என்னை கன்பியூஸ் பண்றீங்க! எனக்கு இரண்டு பருப்பும் வேணும். ஆனா அது கால் கிலோ, இது அரை கிலோ."
"அதுன்னா எது?"
"அதுன்னா 'து' பருப்பு. நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க, 'து' பருப்பு...'உ' பருப்பு வேண்டாம்"
"வேண்டாமா?"
"வேண்டாம்னா . . . வேண்டாம்னு அர்த்தம் இல்ல. அரை கிலோ வேண்டாம். கால் கிலோ வேணும்னு அர்த்தம்"
"சரி இப்போ எது கால் கிலோ வாங்கணும். 'து'வா? 'உ'வா?"
"ஏன் இப்படி குழம்பிக்கறீங்க?"
"நான் ஒண்ணும் குழம்பல. நீதான் குழப்பற?"
"பேசாம ஒரு பேப்பர்ல எழுதிக்கோங்க"
"சொல்லு"
"துவரம் பருப்பு கால் கிலோ, உளுத்தம் பருப்பு அரை கிலோ"
"அவ்வளவுதானா?"
"அவ்வளவுதான்"

(இப்படியெல்லாம் பேசக் கூடாது என்பதுதான் முதல். இதைத்தான் நான் 'கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் வகுப்பில் எடுக்கிறேன். எப்படி பேச வேண்டும் என்பது அடுத்தது.)

Saturday, August 30, 2008

'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கேட்டிங் கிளாஸ்ன்னு . . .

சில மாதங்களுக்கு முன்னால் 'டயல் ஜெயா டிவி' என்கிற நேரலை நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிற வாய்ப்பு கிடைத்தது. நவீன கல்வி முறையான 'செயல் வழிக் கல்வி(Activity Based Learning) பற்றி தொகுப்பாளருடன் ஒரு உரையாடல், இடையிடையே நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கு பதில். இதுதான் நிகழ்ச்சி.

தொலை பேசியில் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலோர், இளம் இல்லத்தரசிகள் தான்.
'என் பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான்',
'என் பொண்ணு மேத்ஸ்ல வீக்கா இருக்கா',
'பசங்களோட கையெழுத்தை எப்படி இம்ப்ரூவ் பண்றது?'
இப்படி ஒரு வகை புலம்பல்

'என் தங்கையோட பொண்ணை விட என் பையன் மோசமா இருக்கான்'
'முதல் பையன் அளவுக்கு இரண்டாது பையன் சாப்பிட மாட்டேங்கிறான்'
'ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும். ஏதாவது டியூஷன் இருக்கா?'
'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கேட்டிங் கிளாஸ்ன்னு எல்லாத்துக்கும் ஃபீஸ் கட்டி அனுப்பறேன். இதைத் தவிர டெய்லி டியூஷன் இருக்கு. ஆனா எதுலயுமே பிரில்லியண்டா இல்ல. என்ன பண்ணலாம்?'
இது இன்னொரு வகையான புலம்பல்

யாருமே தன் குழந்தையைப் பற்றி சந்தோஷப் படவில்லை. கிட்டத்தட்ட அனைவருமே குற்றப்பத்திரிகை வாசித்தார்கள். கணக்குல 100 எடுத்தா பத்தாது, இங்கிலீஷ்ல 95தான் வருது என்று வருத்தப்பட்டார்கள். எல்லா பெற்றோருமே பக்கத்துவீட்டு குழந்தையை விட தன் குழந்தை மக்கு என்று வருத்தப்பட்டார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பின் ஒரு பெண்மணி என் அலுவகத்திற்கு ஃபோன் செய்தார்.
"சார் என் பையனுக்கு மெமரி பத்தல சார். எதிர் வீட்டுப் பொண்ணு டான் டான்னு எதைக் கேட்டாலும் பதில் சொல்றா? என் பையன் முழிக்கிறான். எதிர் வீட்டுப் பொண்ணு ரெட், க்ரீன், ப்ளுன்னு எல்லா கலரையும் அழகா ஐடன்டிஃபை பண்றா. ஆனா என் பையன் எல்லாத்தையும் தப்புத்தப்பா சொல்றான். நம்பர்ஸ் எதுவுமே சொல்ல வரல. ஏபிசிடி கூட யோசிச்சு யோசிச்சுதான் சொல்றான். ரைம்ஸ் எல்லாம் தப்பு"

"அப்படியா? வயசு என்னம்மா ஆச்சு?"
"29 சார்"
"உங்க வயசை கேட்கலம்மா. உங்க பையன் வயசு என்ன?"
"இப்ப தான் ஒன்னரை வயசாகுது டாக்டர்"

நான் அதிர்ச்சியில் ஃபோனை வைத்துவிட்டேன்.

Saturday, August 16, 2008

Chemistry : டான்ஸ் ஆடிக் கொண்டே கெமிஸ்ட்ரி படியுங்கள் (Video)

செயல் வழி கல்வி(Active Learning Method) இன்று பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இது போன்ற வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டால் கல்வி மேலும் சுலபமாகவும் ஜாலியாகவும் மாறிவிடும்.

நான் என்னுடைய வகுப்புகளில் முறையைத்தான் பயன்படுத்துகிறேன். Spoken English-க்கு இது போல வீடியோக்கள் இருந்தால் தயவு செய்து பரிந்துரைக்கவும்.