Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, August 14, 2012

அங்கும் இங்கும் - கனவுகள்


சித்த மருத்துவக் கனவு

‘ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமாக கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக் குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல, பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது.‘

மருத்துவர் சிவராமன்
(வலது முதல் நபர் )
டாக்டர் கு. சிவராமன் எழுதியுள்ள ‘மருந்தென வேண்டாவாம் . . .‘ என்ற புத்தகத்தின் இந்த அறிமுக வார்த்தைகளை படித்து அசந்து போனேன். பொதுவாக உணவுப் பழக்கம் பற்றிய புத்தகங்கள், திகட்டிப் போன திருமண விருந்து போல இருக்கும். ஆனால் இந்த நூலின் பின் அட்டையில் இதைப் படித்ததும், முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.

முதல் அத்தியாயமே அருமை! அன்னைக்கான உணவு! பொதுவாக நமக்கு உணவு ஊட்டுபவள் அன்னை. அவளுக்கு உணவு ஊட்டுவது எப்படி? எந்த வகையான உணவு ஊட்ட வேண்டும் என்று முதல் அத்தியாயமே வித்தியாசமாக இருக்கிறது.

‘ஒரு கவள சோற்றை நாம் சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக, எத்தனை மணி நேரம் கால் கடுக்க நின்று, கதை சொல்லி காக்காய் காண்பித்து, இப்போதைய நமது ‘சிக்‘ அல்லது ‘சிக்ஸ் பேக்‘ உடம்பிற்கு அவர்கள் அடித்தளம் போட்டிருப்பார்கள்? அவர்களுக்காக வயோதிக சங்கடங்களை பொறுத்து நம்மோடு இணைத்து வைத்திருப்பதில்தான் அவர்கள் நல்வாழ்வு துவங்கும். காக்கை கதை கேட்கும்போதே, நம்மையறியாமல் உணவு உள்ளே இறங்கிவிடும். அது போல இது போல அழகான பகிர்வுகளுடன் அவர் உணவுப் பழக்கங்கள் பற்றிச் சொல்லும்போது, இலகுவாக மனதில்பதிகிறது. சினிமா மால்களுக்கு செல்வதை குறைத்து, மாதத்தில் ஒரு நாள் புத்தகக் கடைகளுக்கு சென்று இது போல புத்தகங்களை வாசிக்கலாம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். Inaguration of 'Society for Integrative Health Research' என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இந்த புத்தகமும், அதை எழுதிய மருத்துவர் கு.சிவராமனும் அறிமுகமானார்கள். ஓரிரு வார்த்தைகள்தான். அதற்குள் அவரை கருத்தரங்கிற்கு வந்தவர்கள் கவர்ந்து கொண்டுவிட்டார்கள். கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயம் இந்த புத்தகத்தைப் போலவே மிக முக்கியமானது. மேற்கத்திய மருந்து நிறுவனங்கள், திட்டமிட்டு எப்படி நமது சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி பேசினார்கள். சித்த மருத்துவத்தில் சாதாரண அரிப்பு முதல் கான்சர் வரை மருந்து உள்ளது என்பதை ஆர்வத்துடனும், ஆதங்கத்துடனும் பகிரந்து கொண்டார்கள்.

ஆதங்கத்துக்கு காரணம், மக்களிடம் சித்த மருத்துவத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைவாக உள்ளது என்பதுதான். ஆனால் குறைபட்டுக் கொள்வதுடன் நின்றுவிடாமல், மக்களிடம் சித்த மருத்துவம் பிரபலமாக என்ன வழி என்றும் பல கருத்துகளை கூறினார்கள். அதில் ஒரு அம்சம் கவனிக்கத்தக்கது. சித்த மருத்துவம், மேற்கத்திய மருந்துகளைப் போல பிராண்டடாக கிடைப்பதில்லை. சைதாப்பேட்டை சித்த மருத்துவரும், கோயமுத்தூர் சித்த மருத்துவரும் மருத்துவத்தில் சிறந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. சித்த மருந்து சாப்பிடும் ஒரு சைதாப்பேட்டைவாசி கோயமுத்தூர் செல்கிறார் எனக் கொள்வோம். வயிற்று வலி வந்தால் சைதாப்பேட்டை மருத்துவருக்குதான் ஃபோன் செய்வாரே தவிர, கோயமுத்தூர் மருத்துவரை நம்ப மாட்டார். ஆனால் அவரே மேற்கத்திய மருந்து சாப்பிடுபவராக இருந்தால், சைதாப்பேட்டையில் வாங்கிய அதே டோலோபாரை, கோயமுத்தூர் பார்மஸியில் வாங்கிக் கொள்வார். பிராண்ட் பெயர் ஒரு நம்பிக்கையை தருகிறது.

சித்த மருத்துவர்கள் தனித் தனியாக ஒரு தீவு போல இயங்குவதால், மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பிராண்டாக வெளிவருவதில் சாத்தியமே இல்லை. இதுவே அவர்கள் ஒன்றுபட்டு இந்த வியாதிக்கு இதுதான் தீர்வு என்று ஒரு மருந்து பட்டியல் தயாரித்து, மக்கள் எங்கு சென்றாலும் எளிதாக கிடைக்க வழி செய்தால், நம்பகத்தன்மை பெருகும். மேற்கத்திய மருந்துகளைப் போல பணம் பிடுங்காமல், பக்க விளைவுகள் இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும். ஆனால் இதற்கு சித்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் இணைய வேண்டும், அதற்காகத்தான் இந்த அமைப்பு என்று அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் ஒன்றிணையும் அந்த நாள் எப்போது வரும் என்று, மருத்துவர் சிவராமன் போலவே நானும் காத்திருக்கிறேன்.

ஈழக் கனவு
கருணாநிதி டெசோ மாநாடு நடத்தி முடித்துவிட்டார். இது வெற்றி-தோல்வி, பலன்-பலனில்லை என பல விவாதங்கள், இணையச் சண்டைகள் அடுத்த பத்து நாட்களை அபகரித்துக்கொள்ளும்.

இந்த மாநாட்டில் ராம்விலாஸ் பஸ்வான் பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்த டெஸோ மாநாடுகளை வட மாநிலங்களிலும் நடத்துங்கள். அப்போதுதான் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சனை புரியும் என்று பேசினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு இனப்பிரச்சனை தமிழகத்தை தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் உணரப்படவே இல்லை என்பதுதான் இதன் சாராம்சம். இன்று வரை தமிழக அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கிப் பிரச்சனையாக மட்டுமே ஈழப் பிரச்சனை சுருங்கிவிட்டது.

எனவே கருணாநிதி,ஜெயலலிதா,வை.கோ,நெடுமாறன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.இந்திய அரசை ஈழத்தமிழர் விஷயத்தில் நிர்ப்பந்திக்க ஒரே வழி, இந்தப் பிரச்சனையை தமிழகம் தாண்டியும், இந்தியா முழுவதும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு அல்லாத பிற மாநில இந்திய தலைவர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் விவாதங்களை சர்வதேச அளவில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும். ஐ.நா.வில் குரல் எழுப்பக் கூடிய நாடுகளின் நட்பையும், ஆதரவையும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் திரட்ட வேண்டும். இறுதியாக ஐ.நா.வின் நிர்பந்தத்துடன் இலங்கை அரசை ஈழம் தொடர்பான நியாயமான அரசியல் முடிவுகள் எடுக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால், மிக மிக முக்கியமாக, இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒரு வலுவான அரசியல் தலைவரை உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கருணாநிதி, ஜெயலலிதாவையே நம்பிக் கொண்டிருக்க கூடாது. தாங்களே முடிவெடுக்கக் கூடிய, தாங்களே தங்களை வழிநடத்திக் கொள்ளக் கூடிய ஒரு ஈழத் தமிழ் தலைவர் காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு தலைவர் உருவாக வேண்டும். அந்த தலைவரின் கீழ் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரு வேளை தனி ஈழமே கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள வலுவும், ஈர்ப்பும், எதிர்கால திட்டமும் உள்ள ஈழ தமிழ் அரசியல் தலைமையே இப்போதைய தேவை. இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது என்றாலும், இதெல்லாம் நடந்தே ஆக வேண்டும். 

எத்தனை எத்தனை உயிர்கள், விவரிக்க முடியாத தியாகங்கள்! இவற்றிற்கெல்லாம் ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசியல் தலைவர்களையே நம்பிக் கொண்டிருக்கும் போக்கை கைவிட்டு, தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்ள ஒரு ஈழ அரசியல் தலைமை விரைவில் வடிவமெடுக்க வேண்டும். அப்படி வடிவமெடுக்காவிட்டால், ஈழம் என்கிற நெடும் கனவு, வெறும் கனவாகப் போய்விடும். ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது. விரைவில் ஈழத் தமிழர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். இதுவே என் எண்ணம், இதுவே என் பிராத்தனை!

www.aanthaireporter.comல் வெளியான கட்டுரை!

Saturday, March 10, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - இந்தியா ஆதரிக்குமா?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் கண்டு கொள்ளாத எந்த அரசியல் செய்தியையும் தமிழர்களும் கண்டு கொள்வதில்லை. சமீபத்திய உதராணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு பற்றிய செய்தி.  இவர்கள் இருவரின் அறிக்கையைத் தொடர்ந்து இந்தச் செய்தி டீக்கடை மற்றும் சலூன்களில் விவாதிக்கப்படும் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு என்றால் என்ன?
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எனச் சொல்லிக் கொண்டு, இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது உலகம் அறிந்த செய்தி. தற்போது இந்தச் செய்திகள் குற்றச்சாட்டுகளாக உருப்பெற்று இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

ஒரு நாட்டிற்கு எதிரான இது போன்ற குற்றச்சாட்டுகளை அனுமதிப்பதற்கும், விசாரிப்பதற்கும் நடைபெறும் அமர்வுதான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு. மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாதிக்கு மேல், அதாவது 24 நாடுகளின் ஆதரவை பெற்றுவிட்டால், குற்றம் சுமத்தப்படும் நாட்டின் மீது, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும் என்பது விதி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
தற்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.  அதே நேரத்தில் இலங்கை அரசு, தமக்கு எதிரான இந்த தீர்மானத்தை தோற்கடிக்க தனது ஆதரவு நாடுகளிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 22 நாடுகள் இலங்கைக்கு எதிராக திரண்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு நாடுகள் ஆதரவு தந்துவிட்டால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் வலுப்பெறும் என்பதும் வதந்திகள்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது சந்தேகமே!
இந்தியா இலங்கைக்கு எதிரான நிலை எடுக்குமா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வரவில்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன.

ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது. இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குதான் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒரு பத்திரிகை பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடைய நம்பிக்கையில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. காரணம் அமெரிக்காவால் நடத்தப்படும் சர்வதேச அரசியல் பிண்ணனி.

இந்த உலகத்தின் நாட்டாமையாக தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு எந்த தார்மீக அருகதையும் இல்லை. உலகம் முழுக்க மனித உரிமைகளை மீறி வருவது அமெரிக்காதான். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டுக்கு நெருக்கடி தந்தால், அந்தப் பிராந்தியத்தில் தனது வாலை நுழைக்கிறது என்று அர்த்தம். அதே போல ஆசியாவில் பொருளாதார வல்லரசுகளாக உயர்ந்து வரும் இந்தியாவையும், சீனாவையும் அருகில் இருந்து அதட்ட அதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. தற்போது அது தேர்ந்தெடுத்திருக்கும் இடம் இலங்கை. எனவே அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு நிச்சயம் சீனா வாக்களிக்காது. இந்தியாவும் வாக்களிக்காது. ஆனால் தமிழக அரசியல் மற்றும் இலங்கை அரசியல் நெருக்கடி காரணமாக இந்தியா நடுநிலை எடுக்கலாம்.

தான் மூக்கை நுழைக்க வசதியாக, அமெரிக்கா இதை சர்வதேச மனித உரிமைப் பிரச்சனையாக்கப் பார்க்கிறது. ஆனால் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்பது இலங்கை ஆதரவு நாடுகளின் கருத்து.

பாக், பங்களாதேஷ் போர்களின் போதும், காஷ்மீர் பிரச்சனைகளிலும் இந்தியாவின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. எனவே இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், எதிர்காலத்தில் இலங்கை சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படாமல் போகலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, சீனா இரண்டையுமே சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல?
மிக முக்கியமாக இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையின் மேல் பகிரங்க குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் ஒரு கண்காணிப்பு குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு LLRC - Lessons Learnt and Reconciliation Commission என்று பெயர். உள்நாட்டுப் போரால் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே இந்தக் குழுவின் நோக்கம். அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தக் குழு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுதான் உள்ளது.

ராஜபக்ஷேவை இந்த தீர்மானம் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. இலங்கையின் மேல் எந்தப பகிரங்க குற்றச்சாட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றாலும், அதனால் இலங்கைக்கு சர்வதேச அரசியல் பாதிப்பு எதுவும் பெரிதாக இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக நிறுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன்.




Thursday, November 11, 2010

ராஜாவை கை கழுவினால், காங்கிரசுக்கு ஆதரவு - ஜெவின் ஓப்பன் பல்டி!

ராஜாக்களும், ராணிக்களும் முழுவீச்சில் களமிறங்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி இந்திய அரசியலில் எல்லா கூத்துகளும் நடக்கும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடிபடும் தொகையைக் கேட்டால் தலையை சுற்றுகிறது. அதை விட தலை சுற்றல் ஜெயலலிதாவின் காங்கிரஸ் ஆதரவு பேட்டி

நேற்று இரவு வரை காங்கிரசை திட்டிக் கொண்டிருந்தார் ஜெ. அதை நம்பி அதிமுக எம்பி மைத்ரேயனும் காலையில் ஆங்கில டிவிக்களில் காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார். திடுமென மதியம் ஜெ TIMES NOW சேனலில் தரிசனம் தந்தார்.  என்னிடம் 18 எம்பிக்கள் இருக்கிறார்கள். எனவே ராஜாவை கை கழுவினால் தி.மு.க ஆதரவை விலக்கி விடும் என்று காங்கிரஸ் அஞ்ச வேண்டாம். நான் காங்கிரசின் ஆட்சி கவிழாமல் இருக்க நாடு முழுக்க பல கட்சிகளிடம் பேசி மெஜாரிட்டிக்குத் தேவையான 18 எம்.பிக்களை திரட்டி ஆதரவு தருகிறேன் என்று பரபரப்பான பல்டி அடித்தார்.


இந்த டிவி பேட்டியே ஒரு TIMES NOW சேனலின் டிராமா போல இருந்தது. அதாவது ஜெ தனது பதில்களை எழுதி வைத்து வாசித்தார். இடையிடைய திறமையாக நடித்து தனது கேள்விகளை எடிட்டிங்கில் ஒட்டிக் கொண்டார், பேட்டி கண்ட அர்னாப். இது எனது கணிப்பு.

மீண்டும் அந்த பேட்டி ஒளிபரப்பானால் கவனித்துப் பாருங்கள். ஜெயலலிதா நேர்பார்வை பார்க்காமல் அடிக்கடி காமிராவிற்கு கீழ் இருக்கும் பிராம்ப்டரை பார்த்து படிப்பது தெரியும். ஆக திமுகவிற்கு எதிராக, ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஒரு ஆங்கில சேனல் களம் இறங்கிவிட்டது. பேட்டி என்ற பெயரில் ஒரு ஒத்திகை பார்க்கப்பட்ட பேச்சை ஒளிபரப்பியுள்ளது. எப்பவுமே ஜெவிற்கு ஆங்கில சேனல்களில் மவுசு அதிகம். அதிலும் TIMES NOW சேனல் ஜெவிற்கு ஸ்பெஷல் கவரேஜ் தரும். சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது அவரை குயின் என்று வர்ணித்து மகிழ்ந்தது.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று ஜெயலலிதாவிற்கு கவலையாக இருக்கிறதாம். அதனால்தான் இந்த ஆதரவாம். அட..அட... ஜெவிற்கு காங்சிரசின் மேல் ஏன் இந்த திடீர் பாசம்? வேறென்ன தமிழகத்தில் கோட்டையை பிடிக்க காங்கிரஸ் தேவை. அதற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் அவர்.

இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜம். நாளையே ஜெவும், சோனியாவும் கைகுலுக்கி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தாலும் எனக்கு நிச்சயமாக ஆச்சரியமாக இருக்காது.

ஈழப் பிரச்சனையில் தனக்கு எதிராக கருத்துகள் உருவானாலும், விடாப் பிடியாக கருணாநிதி ஏன் காங்கிரஸ் திண்ணையை விட்டு இறங்காமல் இருந்தார் என்று இப்போது புரிகிறதா? ஜெவும் அதே திண்ணைக்குதான்  தொடர்ந்து குறிவைத்துக் கொண்டிருக்கிறார். வலியப் போய் ஒரு டிவி பேட்டி வழியாக காங்கிரசுக்கு ஆதரவு தருகிறேன் என்று ஜெ சொல்லியிருப்பதுதான் உண்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முகம். ஈழப் பிரச்சனையில் ஜெ, கருணாநிதி, வை.கோ உட்பட எவருக்கும் உண்மையில் அக்கறை கிடையாது. தமிழகத்தில் ஆட்சியில் பிடிப்பதுதான் அவர்களுடைய உண்மையான இலட்சியம்.

இப்போதாவது ஈழ சகோதர சகோதரிகள் இந்த உண்மையை புரிந்து கொண்டு, தமிழக அரசியல்வாதிகளை நம்பாதிருக்க பழக வேண்டும்!

Saturday, November 28, 2009

ஈழம் - அரசியல் தந்திரங்களுக்கான நேரம்

வரக்கூடாத செய்திகள்
'இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் ’ எனும் தலைப்பில், சிறுபான்மைத் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சூரிச் நகரில் ஒன்று  கூடி ஆராய்ந்தனர். இலங்கைத் தமிழ்க்கட்சிகளின்  தலைவர்கள் கலந்து கொண்ட  இந்த சந்திப்பு,  எந்தவித  அரசியல் முடிவும் எடுக்கப்படாமலே முடிவுக்கு வந்ததாக அறியப்படுகிறது..
//எந்த முடிவும் எட்டப்படாமல் குழப்பமான கூட்டங்கள் கூடுவது இனி நிறுத்தப்படவேண்டும். நிச்சயம் அனைவரும் ஒன்று கூட வேண்டும். கூடினால் அது ஒரு முடிவை அறிவிக்க வேண்டும்//



வரவேண்டிய செய்திகள்
நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்... இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
//களங்களில் போராடும்போது எதிரணியின் குழப்பங்கள்தான் முதல் வெற்றி. இராமாயண கதைகளில் இருந்து ஈழப் போராட்டம் வரை இதில் மாற்றம் ஏதும் இல்லை. கருணாவை ராஜபக்ஷே பயன்படுத்தியது போல, ராஜபக்ஷே,பொன்சேகா குழப்பங்களை அணையாமல் விரிவடைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்//

விசித்திரமான செய்திகள்
தமிழக அரசியலின் பிரதான எதிரிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இன்றைக்கு ஈழ ஆதரவு விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தமிழனத் தலைவர்(?) பதவிக்கு போட்டியிடுவோம் என்று ஜெவும் நினைத்திருக்கமாட்டார், கருணாநிதியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இந்திய அரசியல் விசித்திரங்களால், ஜெயலலிதாவும் இன்று தனி ஈழத்தை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார். எதிரெதிர் அணியில் இருந்தாலும், கருத்து வேறுபாடு இருந்தாலும் நெடுமாறன், வை.கோ., மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன், கி.வீரமணி உட்பட அனைவருமே தனி ஈழ ஆதரவாளர்களே!
//கருணாநிதி உட்பட எவருக்கும் இந்தியாவை இலங்கைக்கு எதிராக போர் செய்ய நிர்பந்திக்க முடியாது என்பதை இப்போதாவது உலகத் தமிழர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் இந்த தமிழக அரசியல்வாதிகள் நினைத்தால் இலங்கைத் தமிழ்அரசியல் கட்சிகளை ஒரு குறுகிய காலத்திற்காகவாவது ஒன்றிணைக்க முடியும். குறைந்தபட்சம் ஜனவரி 26 அன்று நடைபெறப்போகும், இலங்கைத் தேர்தல் வரை அவர்களால் ஒன்றிணைக்க முடியும்//


சாதகமான உலகச் செய்திகள்
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கையில் 2010ல் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என்று பகிரங்கமாக பிரிட்டன் குரல்கொடுத்துள்ளது.

அமெரிக்கா சரத்பொன்சேகாவை போர் குற்றங்களுக்காக விசாரிப்போம் என்று அறிவித்தது.

ஆசிய அரங்கில் இந்தியாவிற்கு வெளிப்படையாக நெருக்கடி கொடுக்கும் சீனா.  சீனாவின் இலங்கை ஆதரவு. அதன் காரணமாக மட்டுமே இலங்கையின் மேல் கடுமையை கூட்டியிருக்கும் இந்திய நிலை.

ராஜபக்ஷே வழியாக இந்தியாவிற்கு செக் வைக்க நினைக்கும் சீனா - சரத்பொன்சேகாவை மிரட்டி முன்நிறுத்தி ஆசியாவில் நுழைந்து சீனாவையும், இந்தியாவையும் தொலைவில் நிறுத்தப்பார்க்கும் அமெரிக்கா!

மாவீரர் தினம் முதன் முறையாக, ஈழத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் தமிழர் வசிக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்!

//இவையெல்லாம் ஈழப் பிரச்சனை வெவ்வேறு வடிவில் உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள்//




எதிர்பாராமல் குழம்பிப் போயிருக்கும் இலங்கை அரசியலில் தமிழ் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?
தமிழர்களைப் பொறுத்தவரை ராஜபக்ஷே, பொன்சேகா இருவருமே எதிரிகள்தான்.பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் ராஜபக்ஷேவுக்கு மட்டுமல்லாமல், தமிழர்களும் எதிர்பாராததுதான். ஆனால் பொன்சேகாவின் ராஜபக்ஷே எதிர்ப்பால் இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ஒரு சிறிய அரசியல் இடைவெளி கிடைத்துள்ளது. அதாவது பொன்சேகா வெற்றிபெற்றால், ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆவார் என்று செய்திகள் கசியத் துவங்கியுள்ளன. ராஜபக்ஷே-கருணாவை வென்று, பொன்சேகர்-ரணில் கூட்டணி வெற்றி பெற்றால், அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழ் கட்சிகள் முன் எப்போதையும் விட வலுவாக செயல்பட முடியும். ஏனென்றால் ரணில் ஏற்கனவே பிரபாகரன் இருந்தபோதே, ஈழத் தமிழர்களின் விஷயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடித்தவர். ஈழத் தமிழர்களை ஒழிப்பதை விட, அவர்களை அரசியல் ரீதியாக இணைப்பது என்பதில் ஆர்வம் காட்டியவர்.

எனவே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, ஜனவரி 26 தேர்தலின் போது இலங்கை தமிழ் கட்சிகள் தேர்தல்களை புறக்கணிக்காமல், தமக்குள் சண்டையிடாமல், சிதறிவிடாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு முனைப்பு காட்ட வேண்டும்.

இதுவே அரசியல் தந்திரங்களுக்கான சரியாண தருணம்.

Friday, October 23, 2009

41,685 தமிழர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பினார்கள் - தமிழ் பதிவர்கள் மௌனம்


காலையில் The Hindu இணையதளத்தில் இந்த செய்தியை பார்த்தேன். அப்புறம் நக்கீரனில் பார்த்தேன். பின்னர் சன் செய்திகளில் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. நான் அறிந்தவரை இந்தச் செய்தியின் சாராம்சம் இதுதான்.

முகாம்களில் இருந்து திருப்பி அனுப்பபட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 இலங்கை ரூபாயும், ரூ. 20,000க்கான வங்கி வைப்பு நிதியும் வழங்கப்பட்டது. அது தவிர, 6 மாதத்திற்கான ரேஷன் பொருட்களும், அவசர தேவைக்கான துணிகளும் வழங்கப்பட்டன. வவுனியா, மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு மக்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.

இதற்க்கான விழாவில் பேசிய மஹிந்த ராஜபக்ஷே, தமிழக முதல்வருக்கும், பாரதப் பிரதமருக்கும் நன்றி தெரிவித்தாராம்.

ஆனால் இந்த செய்தி குறித்த சந்தோஷமோ பரபரப்போ பகிர்தலோ, தமிழ் பதிவர்களிடையே துளி கூட இல்லை. டிவிட்டரில் கூட இந்தச் செய்தி தமிழர்களிடையே உலவவில்லை.  ஆதவன் ரிலீசுக்கு மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதியவர்களும், டிவிட்டரில் கமெண்ட் அடித்தவர்களும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் இருந்து விடுதலை ஆகிறார்கள் என்பதை ஏனோ கண்டு கொள்ளவில்லை!!! Facebookல் மட்டும், இந்தச் செய்தியைப் பற்றி சந்தேகம் தெரிவித்து ஒரு பதிவை பார்த்தேன். மற்றபடி பதிவர் உலகில் இந்தச் செய்தி எந்தச் சலனமும் இல்லாமல் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது.

கொஞ்சமாவது சந்தோஷம் தரக்கூடிய இந்தச் செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கிறோம் என்று தமிழ் பதிவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Sunday, October 18, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

”இலங்கைக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு”
தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் இலங்கைக்கு சென்று வந்த பின் சென்னையில்  மேற்கண்ட வாசகங்களுடன் சில போஸ்டர்கள் முளைத்தன.

இதை கண்டித்து, Facebookல் சிலர், முக்கியமாக இலங்கைத் தமிழர்கள் கலைஞரை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது. அவர்களுடைய கோபம் நியாயமானதே. ஆனால் கோபப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?


வயிற்று வலி எனக்கு என்றால், நான்தானே மருந்து சாப்பிட வேண்டும். கசப்பு என்பதால் எனக்காக இன்னொருவர் மருந்து சாப்பிட முடியுமா? பிரபாகரனின் (இன்னும் சிலரால் உறுதி செய்யப்படாத) முடிவுக்குப் பின்னால், ஈழத் தமிழர்களின் ஒருங்கிணைந்த தலைவர் யார்? யாராக இருந்தாலும் அவர் ஈழத்தில்தானே இருக்க வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் தி.க தலைவர்கள் அந்தந்த கட்சிக்குதான் தலைவர்களே தவிர, ஈழத் தமிழர்களின் தலைவர்கள் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.

ஆனால் அதை மறந்துவிட்டு, சில ஈழத் தமிழர்கள் தங்களது தலைவர்களை தமிழ்நாட்டில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு ”நான்கே நாட்களில் இலங்கை பிரச்சனையைத் தீர்த்த கலைஞர்” போஸ்டர்கள் கண்களில் படுகின்றன. அவர் கலைஞர் அல்ல, கொலைஞர் என்று அனல் கக்குகிறார்கள். மீண்டும் சொல்கிறேன். உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் கலைஞர் அல்லது கொலைஞரின் மேல் கோப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?


  • உங்கள் விடுதலைக்கு உங்கள் பங்கு என்ன?
  • இலங்கையில் உள்ள தமிழ்கட்சிகள் ஏன் தனித் தனி கட்சிகளாக இயங்குகின்றன? 
  • ஏன் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை? 
  • ஏன் அவர்களுக்குள் பொதுத் தலைமை இல்லை? 
  • அவர்களில் எந்தக் கட்சியை அல்லது அமைப்பை இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்?
  • ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு இவர்களுக்கு பங்கே இல்லையா?

தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கருணாநிதியை அல்லது பிரபாகரனை திட்டித் தீர்த்துவிட்டு பொழுதை போக்குவதும், பிறகு ”மானாட மயிலாட” பார்ப்பதும் வாடிக்கை தான்.

தற்போது இலங்கைத் தமிழர்களும் பிரபாகரனை அல்லது கருணாநிதியைத் திட்டிவிட்டால் தங்கள் கடமை முடிந்தது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நினைப்பு மாறி, இது தங்கள் பிரச்சனை என்று நினைத்து ஒற்றுமையுடன் போராடும் வரை, தனி ஈழம் என்பது கனவாகவே நீடிக்கக் கூடிய அபாயம் உண்டு.

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழ்நாட்டு போஸ்டர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களை குறி வைத்து ஒட்டப்படுகின்றன. அதைப் படித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.
”மானாட மயிலாட” நிகழ்ச்சிகள் எங்கள் (தமிழ்நாட்டு தமிழர்களின்) நேரத்தை  வீணடிக்கப் பிறந்த நிகழ்ச்சிகள். அதைப் பார்த்துவிட்டு கோபப்படாதீரகள். கலைஞர் மீதும், நமீதாக்கள் மீதும் கோபப்படுவதுதான் ஈழப்போராட்டம், தனி ஈழ உணர்வு என்று (கொச்சையாக) வரைமுறைப் படுத்தாதீர்கள்.



உங்கள் தலைவர் யார்? அவரை கண்டுபிடியுங்கள். அவரைக் கண்டுபிடிக்க உங்கள் கோபம் உதவட்டும். தனி ஈழம் பிறக்கட்டும்.

Tuesday, May 12, 2009

ஜெயலலிதாவை எச்சரித்த சீமான்!

திரைப்படத் துறையினரின் தேர்தல் பரப்புரையை நேற்று முன்னறிவிப்பின்றி ராஜ் டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது. அதை உள்வாங்கி மக்கள் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. அனைவருமே உணர்ச்சிப் பிழம்பாக கொதித்தார்கள். கூட்டம் ஆர்ப்பரித்தது. நான் மக்கள் தொலைக்காட்சியில் இந்த பரப்புரையைக் கண்டேன். பிரபாகரன் என்ற பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் ஆடியோ காணாமல் போய்விட்டு மீண்டும் வந்தது. ராஜ்டிவியில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் சீமான் பேச ஆரம்பித்தவுடன் ஆடியோக்காரர் எங்கேயும் கை வைக்கவில்லை.

சீமான் படு நிதானமாக ஆரம்பிக்கிறார். அவருடைய முதல் குரல் கேட்டவுடனேயே அவ்வளவு பெரிய கூட்டமும் அவருடைய குரலுக்கு கட்டுப்படுகிறது. நேரம் ஆக ஆக வேகமெடுக்கும் நீராவி இயந்திரம் போல, அவருடைய பேச்சில் அனல் கூடிக் கொண்டே போகிறது. அவருடைய பேச்சில் இலயிக்கும் அனைவரின் உணர்வுகளையும் தனது வீச்சினால் இதயத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிக் கிளறுகிறார். அவர் குரலை உயர்த்தும்போதெல்லாம் புலி உறுமுவதைப் போல இருக்கிறது. மகத்தான ஆளுமை. ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் இவ்வளவு சக்தியா? அல்லது அவர் உச்சரிக்கும்போதுதான் அவ்வளவு சக்தி பெறுகிறதா?

இராமேஸ்வரத்தில் அவருடைய பேச்சைக் கேட்டேன். நேற்றைய பரப்புரை எனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. இராமேஸ்வரம் பேச்சைப் போல சுருக்கமாகவும், கொந்தளிப்பாகவும் நேற்று இல்லை. காரணம் . . .

இராமேஸ்வரம் முதல் இன்று வரை மாறியிருக்கும் அரசியல் சூழல்! இலங்கைப் பிரச்சனையை அடக்கி வாசிக்க வேண்டும். இது கருணாநிதியின் அரசியல் கட்டாயம். இலங்கைப் பிரச்சனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இது ஜெயலலிதாவின் அரசியல் கட்டாயம். ஆழ் மனதுக்குப் பிடித்த கருணாநிதியை எதிர்க்க வேண்டும். அரசியல் மனதிற்குப் பிடித்த ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும். உணர்வுக்குப் பிடித்த திருமாவளவனை விட்டுத்தராதிருக்க வேண்டும். இந்த இரட்டை மனநிலை சீமானின் அரசியல் கட்டாயம்.

அவருடைய பேச்சில் இது வெளிப்படையாகவே எதிரொலித்தது. காங்கிரஸையும், சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் வெளுத்து வாங்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட கருணாநிதியின் பெயரை உச்சரிக்கவில்லை. காங்கிரசுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் சூரியனுக்குப் போடாதீர்கள் என்று சொல்ல அவருக்கு நா எழவில்லை. திருமாவளவனை ஒரு இடத்தில் கூட அவர் விட்டுத்தரவில்லை. இந்த குழப்ப மனநிலையால் அவருடைய பேச்சில் அனல் கம்மியாக இருந்தது.

திடீரென ஜெயலலிதாவை ஆதரிக்க நேரிட்ட குற்ற உணர்வும் அவரை ஆட்டிப்படைத்தது. தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று சொன்ன ஒரே காரணத்திற்க்காக நான் அந்த பெருமகளை ஆதரிக்கிறேன். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தனி ஈழக் கோரிக்கையை கை விட்டால் . . .? (என்று என் போன்றவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் சொன்னார்) தேர்தல் முடிந்தவுடன் தனி ஈழக் கோரிக்கையை கை விட்டால் இதே சீமான் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி உங்களை எதிர்ப்பேன் என்று அதிரடியாக ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லாமல் முழங்கினார்.

ஆனால் சீமான் ஒன்றை மறந்து விட்டார். இன்று அக்கினிக் குஞ்சாக உலகம் முழுவதும் தமிழ் இன உணர்வை பற்ற வைத்துக் கொண்டிருக்கும் சீமான், தேர்தலுக்குப் பின் ஜெயலலிதாவை எதிர்க்கும் ஒரு நிலைக்கு வந்தால், இன்று வரை அவருடன் மேடையை அலங்கரித்தவர்கள் பலர் அவரை விட்டு விலகுவார்கள். அது மட்டுமல்ல அவருடைய வீர முழக்கத்தை வெறும் வெற்று முழக்கமாகவே மக்கள் பார்ப்பார்கள். கருணாநிதி - ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டுகளில், வெட்டுப்பட்ட சாதாரண சிப்பாயாக குறுகிவிடும் அபாயம் அவருக்கு உண்டு.

ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது என்று எனது மனது நினைக்கிறது. சீமானின் நண்பர்களில் ஒருவர் எனக்கும் நண்பர். ”சினிமாவையே நேசித்து, சினிமாவையே சுவாசிக்கிற ஒருத்தர் தான் சீமான்” என்று அவர் சீமானைப் பற்றிச் சொல்வார். அது ஈழப்பிரச்சனை இனப்படுகொலையாக உருவெடுக்கும் முன்பு. இன்று என்னைக் கேட்டால் ”தன் இனத்தை நேசித்து, தன் இனத்தையே சுவாசிக்கிற ஒருவர் தான் சீமான்” என்று சொல்வேன்.

ஆனால் அரசியல் விளையாட்டுகள் மிகவும் கொடூரமானவை. அதில் நேர்மையை விட துரோகங்கள் தான் அதிகம். இன்றைக்கு அவர் விரும்பாமலேயே அந்த விளையாட்டுக்குள் அவரும் இருக்கிறார். துரோகம் சீமான் என்கிற அற்புத இளைஞனை வென்று விடாமலிருக்க வேண்டும்! உணர்வுகளைப் புதைத்து, கேளிக்கையின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களை மீட்டெடுக்க, நாளைய தமிழினத்திற்கு அவன் தேவை!

Sunday, May 10, 2009

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (ஜெயலலிதாவிற்குத் தந்த) விசிடி என ஒன்று இருக்கிறதா?

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் விசிடி குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

அவர் எடுத்த காட்சிகள் இலங்கை அரசின் அனுமதி பெற்று எடுக்கப்பட்டதா? அல்லது எடுக்கப்பட்டதா?

அந்த வீடியோவை படமெடுத்தவர்கள் யார்? ஸ்ரீஸ்ரீரவிஷங்கரின் ஆட்களா? வெளியாட்களா?

ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் இது போல எத்தனை வீடியோக்களை எந்தெந்த நாடுகளில் எடுத்துள்ளார்?

வீடியோ எடுப்பதின் அவசியம் என்ன? விளம்பரமா? விவகாரமா?

அந்த வீடியோ இந்த உலகத்துக்கு தெரிய வேண்டிய, இலங்கை அரசின் அட்டுழியங்களை அம்பலப்படுத்துகின்ற வீடியோ என்றால் அதை ஏன் சர்வதேச மீடியாக்களுக்கு தரவில்லை? (உதாரணமாக பி.பி.சி, சி.என்.என்)

சரி சர்வதேச மீடியாக்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர் கருதியிருந்தால் இந்திய மீடியாக்களுக்கு ஏன் தரவில்லை? குறைந்த பட்சம் ஜெயா டிவிக்காவது கொடுத்திருந்தால் உலக மக்கள் அந்த அட்டுழியங்களை பார்த்திருக்க முடியும். ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்கு மேலும் உதவியிருக்கும்.

மீடியாக்களை தவிர்ப்பதும் ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் அவர்களின் இஷ்டம். ஆனால் அதை ஏன் மற்ற தலைவர்களுக்கு காட்டவில்லை. என்னிடம் கொடுத்தால் இலவசமாகவே காப்பி எடுத்துத் தருவேன். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு காப்பி கொடுக்கலாம். ஆனால் அதை ஜெயலலிதாவிடம் மட்டும் இரகசியமாகக் கொடுத்தது ஏன்?

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் எடுத்த இரகசிய அல்லது இலங்கை அரசின் அனுமதி பெற்று எடுத்த அந்த வீடியோவை என்னைப் போன்ற சாதாரண பொதுமக்களும் பார்க்க ஆவலாக உள்ளோம். ஜெயலலிதா மட்டும்தான் அந்த விசிடியை பார்க்க வேண்டுமா? மக்கள் பார்க்கக் கூடாதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாததால், எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் வருகிறது.

உண்மையிலேயே அப்படி ஒரு விசிடி இருக்கிறதா?

தமிழீழத்துக்கு ஆதரவாக “கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்” குரல் கொடுப்பாரா?

இளையராஜா வெறியர்கள் - ஏ.ஆர்.இரகுமான் வெறியர்கள்
கருணாநிதிக்கு டின்னு கட்டுபவர்கள் - ஜெயலலிதாவிற்கு டின்னு கட்டுபவர்கள்
தற்போது தமிழில் பிளாக் எழுதுபவர்களில் பலர் இந்த வரைமுறைகளுக்குள் வந்துவிடுகிறார்கள். இவர்களில் நால்வருமே தற்போது ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி-ஜெயலலிதா பக்தர்களை விட்டுவிடலாம். அவர்கள் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால் சிலர் ஏ.ஆர்.இரகுமான் ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆஸ்கர் மேடையில் எதுவும் பேசவில்லை என்று இரகுமானை குற்றம் சொல்லக் கிளம்பிவிட்டார்கள். நல்ல வேளையாக மற்றவர்கள் “இளையராஜா ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பாட்டுப் பாடவில்லை” என்று பதிலுக்குபதில் கேட்காமலிருப்பது ஒரு ஆறுதல்.

என் நண்பரொருவர் புதிதாக தற்போதுதான் தமிழ் பிளாகுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறார். என்னங்க இது? உங்கள்ல பாதிப் பேருக்கு மேல கச்சாமுச்சான்னு யோசிக்கற மாதிரி இருக்கு. பொது மக்களோட கருத்துக்கும், உங்க கருத்துக்கம் சம்பந்தமே இல்ல என்றார். உங்களுக்கு சென்சார் இல்ல, கேள்வி கேட்க யாருமில்ல அப்படின்றதால, இஷ்டத்துக்கு தறிகெட்டு எழுதறீங்க என்று (என்னையும் சேர்த்துதான்) குற்றம் சாட்டினார். சினிமா விமர்சனத்துல இருந்து அரசியல் விமர்சனம் வரைக்கும் எல்லாத்துலயுமே ஒரு டிகிரி பேத்தல், விளாசல், அறிவு, அறியாமை இதெல்லாம் தூக்கலா இருக்கு என்று ரேட்டிங் போட்டார்.

”விட்டா முத்தையா முரளிதரன் ஏன் இன்னமும் சிங்களர்கள் கூட கிரிக்கெட் விளையாடுறார். அவர் ஒரு தமிழன் தானே. இது வரைக்கும் அவர் எடுத்த விக்கெட்டுகளை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, தமிழீழத்துக்கு ஆதரவா குரல் கொடுக்கச் சொல்லுவீங்களா?” என்று கேட்டார்.

அவர் சொன்னார், நான் கேட்டுட்டேன்.
தமிழீழத்துக்கு ஆதரவாக “முத்தையா முரளிதரன்” குரல் கொடுப்பாரா?
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் விளையாட்டு மைதானத்தில் நடு பிட்சில் நின்று கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பந்து வீச மறுக்கட்டும்.
இது வரை சிங்கள வீரர்கள் உதவியுடன், தான் எடுத்த விக்கெட்டுகளை எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எனதில்லை என்று அறிவிக்கட்டும்.

கருணாநிதி-ஜெயலலிதா இவர்களின் அரசியல் மேடையை விட,
ஏ.ஆர்.இரகுமான்-இளையராஜா இவர்களின் பாட்டு மேடையைவிட,
சிங்களர்களின் கூடவே விளையாடும், முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் மேடை, நிச்சயம் உலகத்தின் கவன ஈர்ப்பு பெறும்.

தினம் தினம் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், அவ்வப்போது ஏ.ஆர்.இரகுமானையும் மாற்றி மாற்றி திட்டி எழுதுவதால் மட்டுமே தனி ஈழம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்கள், இனி முத்தையா முரளிதரனை திட்டுவது பற்றியும் சிந்திக்கலாம்.

பின் குறிப்பு
நண்பர்களே,
குறிப்பாக ஈழ நண்பர்களே,
ஒரு இனப்பிரச்சனையை ஏ.ஆர்.இரகுமான் ஏன் சொல்லவில்லை, ரஜினிகாந்த் ஏன் சொல்லவில்லை என்று பேசப்புகும்போது, ஒரு இன உணர்வு வெற்று இரசிகர்களின் உணர்வாக மாறி, அர்த்தமற்ற சலசலப்புகளாக இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன். முத்தையா முரளிதரனை குரல் கொடுக்கச் சொல்வது எனது நோக்கமல்ல. அந்த நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை, இந்த இசை அமைப்பாளர் ஏன் பறிதவிக்கவில்லை? என்று ஒரு இனப்பிரச்சனையை சாதாரண இரசிகர் மன்றப் பிரச்சனையைப் போல வலுவிழக்கச் செய்து விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்தப் பதிவின் நோக்கம் இதை வலியுறுத்துவதுதான்.

பலரும் நான் உண்மையிலேயே நான் முத்தையா முரளிதரனை வம்புக்கு இழுப்பதாகவே நினைத்து பிரசுரிக்க முடியாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டார்கள்.
எனவே பின்னூட்டத்தில் எழுதியிருந்த இந்த வரிகளை தற்போது பதிவிலேயே பின்குறிப்பு என தலைப்விட்டு இணைத்துவிட்டேன்.

Thursday, May 7, 2009

இலங்கை அகதிகளுக்கு உதவும் சூப்பர் ஸ்டார்?

”தனி ஈழம் வேண்டும், ஆனால் அதை வேறு யாரும் வாங்கித்தரக் கூடாது. நான்தான் வாங்கித்தருவேன்” என்று தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் முதல் குட்டிக் கட்சிகள் வரை குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் இவர்களது கவலையில் மனிதாபிமானத்தைவிட அரசியல் இலாபம் அதிகம் கலந்திருப்பதால், அனைத்துக் கட்சியினரின் மீதும் சந்தேகம் வருகிறது.

பிரபாகரன் மீண்டும் பலம் பெற்று படைகளை முன்னெடுத்துச் சென்றால்தான் இந்த அரசியல்வாதிகளின் அலட்டல்கள் குறையும். ஈழ விஷயத்தில் இவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் குணங்கள் மறையும்.

ஈழத்தில் போர் முனையில் சிக்கி தினம் தினம் மாண்டுபோகும் தமிழர்களுக்காக (தேர்தல் நேரத்தில்) கண்ணீர் வடிக்கும் இவர்கள், தப்பி வந்து அகதிகளாக இருப்பவர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா என்று லென்ஸ் வைத்துத் தேடினாலும் அகப்படமாட்டேன்கிறது.

சூப்பர் ஸ்டார் வேகமான ஆள் என்றாலும், மற்றவர்களுக்கு உதவும்போது மிகவும் அமைதியாக விளம்பரமின்றி செய்யக் கூடியவர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். முன்பு ஜெய்சங்கரை அப்படிச் சொல்வார்கள்.
தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு அவ்வப்போது தன்னால் ஆன உதவிகளை ரஜினி தொடர்ந்து செய்து வருகிறாராம். ஆனால் சத்தமின்றி அவர்தான் உதவுகிறார் என்பது தெரியாமல் உதவிகள் அவர்களைப் போய்ச் சேருகின்றதாம்.

ரஜினி அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார். இது உண்மையா பொய்யா என்று சந்தேகம் வந்தாலும் சத்தமின்றி உதவிகள் நடப்பதால் உண்மையாக இருக்கட்டுமே என்று மனது நினைக்கிறது.

Tuesday, May 5, 2009

நேற்று ஜெ! இன்று புலிகள்! ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?

இலங்கைக்குச் சென்று வந்தஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஜி அவர்களின் சிடியில் அப்படி என்னதான் இருக்கிறது. அதைப் பார்த்த அடுத்த நாளே ஜெயலலிதா தீவிர ஈழ ஆதரவாளராக மாறிவிட்டார். அதைப் பார்த்து ஈழ ஆதரவாளர்கள் பலரும் ஜெயலலிதா ஆதரவாளராக மாறிவிட்டார்கள்.

தற்போது விடுதலைப் புலிகளே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை அணுகியுள்ளார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு அவருக்கிருக்கும் நல்லெண்ண உறவுகளைப் பயன்படுத்தி, ஈழப்போரை நிறுத்த உதவுமாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடேசன் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் ஆசிரமத்திலிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச்செய்தி உண்மையா பொய்யா என இதுவரை புலிகள் தரப்பிலிருந்து எதுவும் சொல்லப்படவில்லை.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால் போர் நிறுத்தம் என்றால் என்ன?
புலிகள் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில், தற்போது பிரபாகரன் தப்பி, பின்னர் பலம் திரட்டி மீண்டும் போரிடுவது.
இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழர்களை கொன்று குவித்து, உடனே பிரபாகரனை பிடித்து, மீண்டும் புலிகள் பலம் பெறுவதை தடுப்பது.

பிரபாகரன் தப்பிவிட்டால் புலிகள் மட்டுமல்லாமல் ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே மீண்டும் புத்துணர்வு பெறுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் பிரபாகரன் தப்பிவிட்டார் எனத் தெரிந்தால், அடுத்த கணமே இங்கிருக்கும் ஜெயலலிதா உட்பட அனைவரும் தங்கள் அரசியல் நிலையை மாற்றிக் கொள்வார்கள்.  ஜெ.பிரிவு ஈழ ஆதரவாளர்கள்தான் தர்மசங்கடப்படுவார்கள்.

இந்திராகாந்தி பாணியில் போரிட்டு, இலங்கையை பணிய வைத்து, தனி ஈழம் அமைப்பேன் என்று ஜெ மேடையில் முழங்கினாலும், இது வரையில் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் தனது கருத்து என்ன என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் புரிந்து கொண்ட வரையில் புலிகள் மேல் அவருக்கு இன்னமும் அபிமானம் வரவில்லை. இனியும் வரப்போவதில்லை. அதனால் அவர் தனி ஈழம் என்று கூறினாலும் தனி ஈழத்தின் தலைவராக பிரபாகரனை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் தீவிர ஈழ ஆதரவாளர்களோ தனி ஈழம் என்றால் அது பிரபாகரன் தலையில்தான் அமையும் என்று போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் என்ன விசித்திரம் பாருங்கள். கருணாநிதியின் இன்றைய அரசியல் நிலையால் பிரபாகரனை ஏற்காத ஜெயலலிதாவும், பிரபாகரனைத் தவிர வேறு எவரையும் ஏற்கத் தயாராக இல்லாதவர்களும் ஓரணியில் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அதாவது ஈழ ஆதரவு என்பது பின்னுக்குப் போய், கருணாநிதி எதிர்ப்பு என்கிற ஒரு கோட்டில் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டி. அந்த சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?

Sunday, May 3, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நினைத்துக் கொண்டு லோக்கல் ரௌடிகளாகிக் கொண்டு வரும் முட்டாள்கள்!

நேற்று ஐதராபாத்தில் பயிற்சி முடித்துவிட்டு கோவை மாவட்டம் மதுக்கரை ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். அதைப் பார்த்த சில அதிரடி ஈழ ஆதரவாளர்கள், இந்திய இராணுவம் இரகசியமாக இலங்கைக்கு ஆயுதம் எடுத்துச் செல்வதாக நினைத்து வீரர்கள் வந்த லாரிகளை வழிமறித்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். முதலில் பயந்து ஓடிய இராணுவ வீரர்கள் துணைக்கு அவர்களது தோழர்கள் வந்தவுடன் உருட்டுக் கட்டைகளால் திருப்பித் தாக்கியிருக்கின்றனர். வேடிக்கைப் பார்த்த பொது மக்கள் உட்பட, தடுக்க வந்த போலீஸ்காரர்களுக்கும், செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தத் தாக்குதலில் அடி விழுந்திருக்கிறது.

இது விரும்பத்தகாத சம்பவம். உலகப் பொருளாதாரச் சரிவால் ஏற்கனவே திடீரென வேலை வாய்ப்புகளை இழந்துள்ள இந்திய இளைஞர்கள், இது போன்ற சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விரக்தியான நிலையை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள், ஈழப் பிரச்சனை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா இரயில் எரிப்பு போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களில் உங்களை பலியாடாக்க முயல்வார்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். ஏற்கனவே தீக்குளிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன. சில குடும்பங்கள் அமைதியை இழந்து விட்டன. இப்போது நமது இந்திய இராணுவத்தினரையே அதுவும் இந்திய எல்லைக்குள்ளேயே, தாக்குவதென்பது பக்குவமற்ற முட்டாள்தனமான ரௌடித்தனமான செயல்.

இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கும். ஏன் நமது வீட்டுக்குள்ளேயே, ஒரு குறிப்பிட்ட அரசியல் விவகாரத்தில் அப்பாவுக்கு ஒரு கருத்தும், அம்மாவுக்கு ஒரு கருத்தும், மகனுக்கு ஒரு கருத்தும் இருக்கும். அப்படி இருக்கிறது என்பதற்க்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது போன்ற ஒரு கேவலமான அவலமான நிலைதான், நாமே நமது இராணுவத்தை தாக்குவதாலும் ஏற்படும்.

அதனால் மீண்டும் அறிவுறுத்துகிறேன். நீங்கள் எந்தக் கழகத்தை ஆதரித்தாலும் பரவாயில்லை. எந்தக் கழகத்தை எதிர்த்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தியாவையே எதிர்க்கிறேன். இந்திய இராணுவத்தையே எதிர்க்கிறேன் என்று நமது நாட்டுக்குள்ளேயே கலகம் பண்ணாதீர்கள். நஷ்டம் உங்களுக்குத்தான். உங்களைத் தூண்டிவிடுபவர்களுக்கல்ல.

உங்களைத் தூண்டிவிடுபவர்கள் அனைத்தையும் பணத்தால் அளப்பவர்கள். நீங்கள் தீக்குளித்தால் உங்கள் குடும்பத்துக்கு பத்து இலட்சம் கொடுத்துவிட்டு, அதனால் பத்து ஓட்டு கிடைக்குமா என்று கணக்குப் போடுபவர்கள்.
உங்களை இந்திய இராணுவத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டு, மோதவிட்டு அதை உணர்ச்சிகரமான செய்தியாக்கி, அந்தச் செய்தியை ஓட்டுகளாக்கி நாளைக்கு பதவிக்கு வந்ததும், நீங்கள் எதிர்க்கின்ற இதே இந்திய இராணுவத்தை காவலுக்கு வைத்துக் கொண்டு நாடாளத் துடிப்பவர்கள்.

நீங்கள் இப்படிச் செய்வதால் இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுடன் நிதானமாக சிந்தியுங்கள்!

Thursday, April 30, 2009

ஜெயலலிதா நினைப்பது போல இலங்கைப் பிரச்சனை ஓட்டு வாங்கித் தருமா?

கருணாநிதியின் முதல் பிரச்சாரக் கூட்டம் நமுத்துப் போன பட்டாசு. ஆனால் அவருடைய உண்ணாவிரதத்திற்குப் பிறகு தொண்டர்கள் கொஞ்சம் தெம்பாக நடப்பது போல ஒரு பிரமை. ஆனாலும் கருணாநிதி அவருடைய அடுத்த கட்டப் பிரச்சாரத்தில் இலங்கைப் பிரச்சனையை கொஞ்சம் அமுக்கியே வாசிப்பார் என்று நினைக்கிறேன். இலங்கைப் பிரச்சனையை விட ஒரு ரூபாய் அரிசியும், கலர் டிவியும் தனக்கு அதிக வாக்கு பெற்றுத் தருமென இன்னமும் அவர் நினைப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் ஜெயலலிதாவும், அவருடைய மீடியா மேனேஜர்களும் இலங்கைப் பிரச்சனையை பெரிய ஓட்டு வங்கியாக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இலங்கைப் பிரச்சனை நிச்சயமாக ஜெயலலிதாவிற்கு ஓட்டு வாங்கித் தராது என்றுதான் நான் எண்ணுகிறேன். ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு பிரியாணியில் சர்க்கரை போட்டு சாப்பிடுவது போல, ஒட்டவே மாட்டேன்கிறது. கருணாநிதியால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக நினைக்கும் பல தீவிர ஈழ ஆதரவு வாக்காளர்களைத் தவிர மற்றவர்களை ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு எந்த வகையிலும் பாதிக்கவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களை ஜெவின் ஈழ ஆதரவு வசனங்கள் ஈர்க்கவில்லை. ஜெவின் பிரச்சார மீட்டிங்குகளில் தொண்டர்களின் ரியாக்ஷனைக் கவனித்தால் புரியும். ஜெ கருணாநிதியை திட்டினால் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. இலங்கைப் பிரச்சனையில் உண்ணாவிரதம் உட்பட கருணாநிதியைப் பற்றிய எந்தக் கிண்டலையும் கூட்டம் இரசிக்கிறது. ஆனால் அனல் பறக்க ஈழ ஆதரவு வசனம் பேசும் போது ஸ்..ஸ்..யம்மா என்று வெயில் தாங்காமல் வெறுமனே விசிறிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குள் ஈழ உணர்வு என்பது துளியும் கிடையாது. அ.தி.மு.க தொண்டர்களைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் தான் தலைவர், ஜெயலலிதா அவருடைய வாரிசு, கருணாநிதி இவர்களின் எதிரி, என்று மிக சிம்பிளான மசாலாப்பட பாணியில் கொள்கை படைத்தவர்கள். அவர்களுக்கு ஜெயலலிதாவின் திடீர் பல்டியும் ஈழ ஆதரவும் இன்னமும் அஜீரணமாகவே இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

கருணாநிதி இம்சையால், தமிழக காங்கிரஸ் அவ்வப்போது தங்களுக்கும் இலங்கைப் பிரச்சனையில் அக்கறை இருப்பதாக அறிக்கை விட்டாலும், காங்கிரஸைப் பொறுத்தவரை பிரபாகரன் என்பவர் ராஜீவ் கொலையாளி. எனவே எந்தக் காலத்திலும் காங்கிரஸ்காரர்கள் ஈழப்பிரச்சனையை முன்னிறுத்தி அதை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கருணாநிதியும் இதை புரிந்து கொண்டு அடக்கி வாசிக்கிறார், ஜெயலலிதாவின் குடைச்சல் காரணமாக அவ்வப்போது பட்டும்படாமல் இலங்கைப் பிரச்சனைகளை பேசுகிறார்.

அம்மா முதலில் சாதாரணமாக ஈழ ஆதரவு என்றார். தற்போது வழக்கம் போல அதிரடியாக ”படையெடுத்துப் போய் தனி ஈழம்“ என்று முழங்குகிற அளவுக்கு வந்துவிட்டார். கூட்டணித் தலைவர்களுடன் ஒரே மேடையில் கருணாநிதியை தாக்குவதை மட்டும் முன்னிலைப் படுத்தி பிரச்சாரம் துவங்கியபோது கூட்டமும், ஆர்ப்பரிப்பும் இணைந்தே இருந்தது. ஆனால் லட்டு போன்ற மின்சாரப் பிரச்சனை, அழகிரி பிரச்சனை, விலைவாசிப் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு ஈழப் பிரச்சனையை மட்டும் முன்னிலைப் படுத்தியபின் . . . கூட்டமிருக்கிறது, ஆனால் உற்சாகம் மைனஸ்.

ஜெயலலிதாவின் தனி ஈழத்திற்கு யார் தலைவர்? பிரபாகரனா? எஸ்.எஸ்.சந்திரனா?

திடீர் உண்ணாவிரதம், திடீர் பஸ் கட்டணக் குறைப்பு என கருணாநிதி திடீர் நாயகனாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம் திடீர் என ஒரு விசிடியைப் பார்த்து திடீர் என தனி ஈழத்துக்காக முழங்கிக் கொண்டிருக்கிற ஜெயலலிதா. நேற்று ஏதோ ஒரு மண்டையைப் பிளக்கிற மத்தியான வெயிலில் நாங்கள் ஜெயித்தால் இலங்கையின் மேல் படையெடுத்துப் போய் தனி ஈழம் அமைப்பேன் என்று கத்திக் கொண்டிருந்தார்.

அவருக்கு சில கேள்விகள்.
உங்களுக்கு வாக்களித்தால் யார் பிரதமர் என்பதை சொல்லமுடியுமா?
நீங்கள் இதுவரையிலும் அடையாளம் காட்டாத பிரதமரை மிரட்டி, இலங்கையின் மேல் படையெடுத்துப் போய் தனி ஈழம் அமைப்பேன் என்கிறீர்களே. அப்படி அமைத்தால் அந்த தனி ஈழத்திற்கு யார் தலைவர்? எஸ்.எஸ் சந்திரனா? பிரபாகரனா?
(எதற்கு கேட்கிறேன் என்றால், எஸ்.எஸ்.சந்திரனை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிவிடலாம். ஆனால் பிரபாகரனை அப்படி நினைத்த மாத்திரத்தில் நீங்கள் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற முடியாது)

Monday, April 27, 2009

இலங்கையில் போர் நிறுத்தமும் - கருணாநிதியின் உண்ணாவிரத நிறுத்தமும்

The following is the text issued by the Presidential Secretariat, Colombo

Statement by the Sri Lankan Government on the Security situation

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.

April 27, 2009

Presidential Secretariat

Colombo

எல்.டி.டி.யிக்கு எதிரான தாக்குதல் முடிவுக்கு வருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இன்று காலையில் திடீரென காலை 10 மணி அளவில் இலங்கை உயர் மட்டக் குழு அவசரமாகக் கூடி விவாதித்த பின் இந்த முடிவு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கருணாநிதியும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

அப்பாவித் தமிழர்களின் மேல் அநியாயமான தாக்குதல் நடக்காது, விமானங்கள் குண்டு மழை பொழியாது என்பது நிம்மதி தரும் விஷயம்.

ஆனால் இது கருணாநிதியின் உண்ணாவிரதத்திற்கு கிடைத்த வெற்றியா என்பதைப் பற்றி விவாதங்களும், கேலிகளும், கிண்டல்களும், மோதல்களும் நடக்கும்.

நடக்கட்டும்!

நமக்கும் பொழுது போகணுமில்லையா?

முதல் வெடி?
Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.
இதற்கு என்ன அர்த்தம்? கனரக துப்பாக்கிகள் மற்றும் வான் தாக்குதல்கள் இருக்காது? ஆனால் . . . இந்த அறிக்கையில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா?

கருணாநிதி திடீர் உண்ணாவிரதம்

அண்ணா நினைவிடத்தில் திடீரென இன்று காலை 6 மணி முதல், தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிலவரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஈர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ஜெயலலிதா அண்டு கோ, புதிய கூட்டாளியான ரவிஷங்கர் துணையுடன் அவற்றை ஓட்டுக்களாக மாற்றும் முயற்சியில் நேற்று முதல் மாங்காய் அடித்தார்கள்.

கலைஞருக்கு வேறு வழியே இல்லை. நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலையைப் போலவே, அரசியல் நிலையும் தேய்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது. இதை விட்டால் வேறு நல்ல தருணம் இல்லை. உடல் நிலையை விட்டுக் கொடுத்தாவது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள உண்ணாவிரதத்தை துவங்கிவிட்டார்.

உணர்வுகளை வெல்லும் விரதமா, மாலையில் ஜீஸ் குடிக்கும் விரதமா என்பது அவருடைய உண்ணாவிரத்தின் தீவிரத்தைப் பொறுத்தது. காலையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் முதல்வரை தொலைபேசியில் அழைத்துப் பேசிவிட்டார். இன்னும் பல தொலைபேசி அழைப்புகளும் நேரில் வந்து நலம் விசாரிப்புகளும் தொடரும். சன் டிவியும், கலைஞர் டிவியும் அவற்றை நேரலைகளாக காட்டிக் கொண்டிருக்கும்.

ஆங்கில செய்திச் சேனல்கள் காலையிலேயே கருணாநிதியின் உண்ணாவிரதத்தை பொலிட்டிக்கல் விரதம் என்று வர்ணிக்க ஆரம்பித்துவிட்டன. இதே போல கேலிகளும் சந்தேகங்களும் பல முனைகளிடமிருந்தும் தொடரும்.

இந்திய-இலங்கை அரசுகளிடமிருந்து எந்த தீர்மானமான முடிவுகளும் தெரிவதற்குமுன் கலைஞரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தால், அவருடைய அரசியல் வாழ்வின் மிக சீரியஸான ஜோக் இதுவாகத்தான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் கருணாநிதி என்பவரின் அரசியல் வாழ்வின் முடிவாக இது மாறிவிடக் கூடும்.

பார்க்கலாம்!

Sunday, April 26, 2009

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்ஜியின் ஓட்டுக் கலைப் பயிற்சி - முதல் மாணவி ஜெயலலிதா

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்ஜி சமீபத்தில் இலங்கை சென்று இடம்பெயர்ந்த மக்களை பார்த்து வந்தாராம். அவர்களின் துயரங்களை ஒரு சிடியில் பதிவு செய்து ஜெயலலிதாவுக்கு போட்டுக் காண்பித்தாராம். உடனே ஜெயலலிதா மனது மாறி, தமிழீழத்துக்கு ஆதரவு தரத் தயாராகிவிட்டாராம்.

நல்ல ஜோக்! ஆண்டாண்டு காலமாகத் தொடரும் போராட்டம். எத்தனை இழப்புகள்! எத்தனை மரணங்கள்! அத்தனையையும் தேர்தல் தேதி அறிவிக்கும் முதல் நாள் வரை “போரில் மக்கள் சாவது சகஜம்” என்று எள்ளி நகையாடிய ஜெயலலிதா, சிடியைப் பார்த்ததும் மனது மாறிவிட்டாராம்.

ரவிஷங்கர் ஜி! ஈழத்தில் விழும் ஒவ்வொரு பிணமும் ஒவ்வொரு ஓட்டு என்பதை “சோவை மீறி” எப்படி ஜெயலலிதாவுக்குப் புரியவைத்தீர்கள்?

இன்றைய தேதியில் ஈழப் பிரச்சனையை வைத்து ஓட்டுக்களை வாங்கும் கலைதான் சிறந்த வாழும் கலை என்று ஜெயலலிதாவுக்கு எப்படிப் புரியவைத்தீர்கள்?

ரவிஷங்கர் ஜி,நீங்கள் இலங்கை சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியது வெளிப்படையான விஷயம். ஆனால் திரும்பி வந்ததும் நேற்று வரை தனி ஈழத்தை அதற்கான போராட்டத்தை அங்கீகரிக்காமல், எதிர்த்து வந்த ஜெயலலிதாவை (தேர்தல் நேரத்தில்) சந்தித்ததில்தான் ஏதோ மர்மம் இருக்கிறது.

ஒரு வேளை நாளை அம்மா ஜெயித்து ஈழப் பிரச்சனையை கை கழுவினால் நீங்கள் தமிழ் மக்களிடமிருந்து கருணாநிதியைப் போல “பதுங்கி வாழும் கலையை” கற்க வேண்டியதிருக்கும். சங்கராச்சாரியார் முதல் எஸ்.வி.சேகர் வரை ஜெயலலிதாவை நம்பிய யாரும் சுய மரியாதையோடு வாழ்வதாக சரித்திரம் இல்லை. ஜாக்கிரதை!

கேப்டன், ஜெ, தோழர்கள், வை.கோ, இராமதாசுக்கு கேள்வி

போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கசாப்புக் கடைக்காரனைப் போல இரக்கமே இல்லாமல் பேசிய ஜெயலலிதா.

ஜெயலலிதா லஞ்ச் சாப்பிடாததால், அது பெரும் உண்ணாவிரதப் போராட்டமாகி, உலமே ஈழப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதாகப் பிதற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள்

கிரிக்கெட் மாட்சுகளுக்கு இடையில் டிரிங்ஸ் எடுத்து வரும் பையனைப் போல ஜெயலலிதாவின் டிரிங்ஸ் பையனாக மாறிவிட்ட வை.கோ.

ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவை அன்புச் சகோதரியாக ஏற்று அவர் வீட்டில் விருந்து சாப்பிட்ட அண்ணன் இராமதாசு

கேப்டன் என்று பெயரை வைத்துக் கொண்டு டுவல்த் மேன் போல ஈழ விஷயத்தில் பதுங்கித் திரியும், விஜயகாந்த்.

இவர்கள் அனைவரும், ஈழப் பிரச்சனையில் தமிழின துரோகி, பந்த் பக்தர், தந்தி நாயகர், கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்றும, நாங்கள் பதவிக்கு வந்தால் தனி ஈழம் பெற்றுத் தருவோம் என்று வசை பாடுகிறார்கள்.

இவர்களுக்கு என்னுடைய கேள்வி.

தேர்தலுக்குப் பிறகு நீங்கள் யாரை ஆதரிக்கப் போகிறீர்கள்?
பதவி ஏற்ற மறுநாளே இலங்கையில் போரை நிறுத்துவேன் என்று உறுதி அளிக்கின்ற அரசுக்கா?
மீண்டும் உள்(குத்து)துறை, வெளி(குத்து) உறவுத் துறை அமைச்சர்களை அனுப்பி வெட்டிப் பேச்சு வார்த்தை நடத்துகின்ற அரசுக்கா?
ஒரு வேளை நீங்கள் ஆதரிக்கின்ற அரசு உடனடி போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் அந்த அரசை கவிழ்ப்பீர்களா?