Happy to see my chithappa actor Solai in August 16, 1947 trailer.
அவர் இந்தப் படத்துக்காக 6 மாதங்களுக்கு மேல் தாடி வளர்த்துக் கொண்டிருந்தார். இப்போதும் அந்த தாடி சற்று மட்டுப்பட்டு நீளம் குறைந்து இருக்கிறது. ஒருவேளை தேவைப்படலாம் என்று விட்டுவைத்திருக்கிறார். அவரை இந்த கெட்டப்பில் பார்த்தபின் குஷியாகிவிட்டேன்.
அவர் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே நடித்து வந்தார். நான்தான் அவரை முதன் முதலில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். யாதுமானவள் என்கிற குறும்படத்தில் நெகிழ வைக்கும்படி நடித்திருந்தார். தற்போது நான் இயக்கியுள்ள யாதெனக்கேட்டேன் படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் அவர் நடிப்பை பாராட்டியுள்ளார்கள். இந்த நிலையில் ஆகஸ்டு 16, 1947 பட டிரையலர் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்தவுடன் எனக்கு மட்டுமல்ல, சித்தப்பாவை அறிந்த எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி!
அவரால் மிக மிகக் கனமான கதாபாத்திரங்களைக் கூட அனாயசமாக நடிக்க முடியும் என்பது என் கருத்து. பார்க்கலாம். காலம் அவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகளை வைத்திருக்கிறது என்று!
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சந்தோஷம்!
ஆனாலும் பிடிவாதமாக நடந்த சிவாஜிகணேசனின் சிலை அகற்றம், ஏனோ தானோவென நடந்த அவரது மணி மண்டபத் திறப்புவிழா, என சிவாஜிகணேசனின் புகழுக்கு நேர்ந்த பல அவமரியாதைகள், மனதில் நெருடுவதை தவிர்க்க இயலவில்லை. அதனால் உண்மையிலேயே இந்த அரசு அவரது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதைக் காணும் வரை பெரிதாக மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.
பல்வேறுதரப்பு மக்களின் அதிருப்திகளை சம்பாதித்திருக்கும் இந்த அரசு, வரப்போகும் தேர்தலில் எல்லோருடைய வாக்குகளையும் கவர பல முயற்சிகள் செய்யும் என்பது அனைவரும் அறிந்த இரகசியம். அதில் ஒன்றாக சில ஆயிரம் வாக்குகளாவது இந்த அறிவிப்பின் மூலம் கிடைக்கும் என்று இந்த அரசு நினைத்திருக்கலாம். அந்த வகையில் அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் சிலைக்கு இது முதல் வெற்றி.
திரும்பவும் அதே இடத்தில் அவரது சிலை வைக்கப்பட்டால்தான் அது அவரது கலைக்கு செய்யப்படும் மரியாதை!
ஆனாலும் அரசின் இந்த அறிவிப்பு நடிகர்திலகத்தின் இரசிகர்களுக்கு ஆறுதல் தரும்.
இரண்டே பேர் நடித்திருக்கும் படம்
வித்தையடி நானுனக்கு
இதே போல் இரண்டே பேர் நடித்திருக்கும் திரைப்படங்கள் எத்தனை இருக்கும் என்று கூகுளில் தேடினேன். பத்து படங்களைக் கூட பட்டியல் போட முடியவில்லை. அந்த வகையில் எங்களுக்கு ஒரு பெருமை. உலக அளவில் டாப் - 10க்குள் வந்துவிட்டோம்.
DUEL SLEUTH BEFORE SUNRISE BEFORE SUNSET GRAVITY ANTICHRIST GERRY இவையெல்லாம் இதுவரை ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இரண்டே பேர் நடித்திருக்கும் திரைப்படங்கள். அந்த வரிசையில் எங்களுடைய ”வித்தையடி நானுனக்கு” திரைப்படமும் சிறப்பு கவனம் பெறுகிறது. தற்போது திரைப்படத்தை Crowd Funding முறையில் வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் வெள்ளித் திரையில் வித்தையடி நானுனக்கு திரைப்படத்தைக் காணலாம்.
வசந்த சேனா வசந்த சேனா!
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நானென்ன நானா
சேனா... வசந்த சேனா!
இந்தப் பாடல் பலருக்கும் ஞாபகம் இருக்கும். ஆனால் படத்தின் பெயரைக் கேட்டால் தெரியாது. இது சூர்யா நடித்து அதிகம் பிரபலமாகாத ஸ்ரீ என்றொரு படம். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் T.S.முரளிதரன். எனது நண்பர்!
ரோஜாவும் ஏ.ஆர்.இரகுமானும் வருவதற்கு முன், என்னிடம் ஒரு ஆடியோ கேசட் வந்தது. மெரைன் இஞ்ஜினியராக இருந்த எனது நண்பன் ஒருவன் அதைக்கொடுத்து, இதில் என் நண்பனின் டியூன்ஸ் இருக்கிறது கேட்டுப்பார் என்றான். அக்கால வழக்கமான ஆர்மோனியம், கிடார், தபேலா ஒலிகளை எதிர்பார்த்து அசட்டையாக கேசட்டை ஒலிக்கவைத்தேன். முதல் டியூன் கேட்டதுமே நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் கூட்டமே அசந்துவிட்டது. நாங்கள் எவரும் அதற்கு முன்பு கேட்டிராத டிஜிட்டல் இசை. புத்தம் புது ஒலிகள். அவ்வளவுதான் அன்றே அவரை நண்பராக்கிக்கொண்டேன். பல கதைகள் பேசி, பல டியூன்கள் போட்டு தற்போது அவரே ஒரு இயக்குநராகிவிட்டார்.
வித்தையடி நானுனக்கு படம் ரெடி
”அவர்” என்ற டைட்டிலுடன் ஒரு படத்தை தயாரித்து இயக்க முடிவு செய்திருந்தேன். அதற்காகவே Canon 7D மற்றும் உபகரணங்கள் வாங்கியிருந்தேன். அப்படங்களுக்கான பாடல் ஒலிப்பதிவின்போது முரளி ஒரு கதை சொன்னார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உடனடியாக தயாரிக்க முடியும் என்பதையும் விளக்கினார். அதனால் சட்டென்று தைரியம் பிறந்து ”அவர்” படத்துக்கு முன் ”வித்தையடி நானுனக்கு” படத்தின் தயாரிப்பில் இறங்கி படத்தையும் தயாரித்துவிட்டோம். நான் ISR Ventures, முரளி Media Merchants. இருவரின் கூட்டுத்தயாரிப்பாக படம் ரெடி.
தயாரிப்புக்காக அல்ல - ரிலீசுக்காக Crowd Funding
இப்போது அதன் தொடர்ச்சியாக படத்தின் ரிலீசுக்காக Crowd Funding-ல் இறங்கியுள்ளோம். முதலில் தயங்கிய என்னை முரளியின் விடாத தொடர் முயற்சி மாற்றிவிட்டது. www.indiegogo.com என்ற இணையதளத்தை ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக கவனித்தபின் இதில் நம் முயற்சியை துவக்குவோம் என்றார். இதோ.. நாங்கள் தயார்!
650 ரூபாய் போதும்
ஆளுக்கு ரூ.650. இதுபோல 3500பேரை ஒருங்கிணைக்கலாம் என்றார். விட்டால் மீண்டும் தயங்குவேன் என்று முயற்சியை துரிதப்படுத்திவிட்டார். ”வித்தையடி நானுனக்கு” உருவாவதற்கு அவருடைய முயற்சியே காரணம். நானாவது திரைப்படம் தயார் ஆனதும், டிவி நிகழ்ச்சிகள், டாகுமென்டரிகள் என பல திசைகள் திரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் முரளி தனது அவருடைய ஆர்வம் குறையால் அதிலேயே கவனமாக இருக்கிறார். அதனால் திரைப்படம் வெளியாவதற்கும் அவருடைய முயற்சிகள் நிச்சயம் வெற்றியைத்தரும் என்று நம்புகிறேன். இணை தயாரிப்பாளராக நானும் அவருடைய முயற்சி வெற்றிபெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் படம் தயாரிப்பது எளிது. வெளியிடுவதுதான் கடினம். தயாரிப்புச் செலவை விட வெளியிடும் செலவு அதிகம். அதற்கு Crowd Funding உதவும் என்றுதான் தோன்றுகிறது. அதனாலேயே இந்த முயற்சி. எங்களைப்போன்ற புதிய சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களும் இந்த இணையதளத்தை ஒரு முறை பார்க்கலாம், நம்பிக்கை பெறலாம்.
வித்தையடி நானுனக்கு பற்றிய Crowd Funding விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்.
கிரவுட்ஃபண்டிங் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?
கிரவுட்ஃபண்டிங் வழியாக எங்கள் திரைப்படம் ரிலீஸ் ஆவது ஒருபுறம் இருக்கட்டும். டிஜிட்டல் சினிமா பிரபலம் ஆகாத காலகட்டத்தில் ”அவர்” திரைப்படத்தின் துவக்கவிழாவையே ”டிஜிட்டல் சினிமா” பற்றிய வொர்க் ஷாப்பாகத்தான் நடத்தினோம். அதுபோல கிரவுட் ஃபண்டிங் பற்றியும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளத்தயார். எங்களைப் போன்ற புதிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது பற்றி கேள்விகள் இருக்கும். கிரவுட் ஃபண்டிங் என்றால் என்ன? அதன் வழியாக எவ்வளவு திரட்ட முடியும்? அது எப்படி சாத்தியமாகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல நீங்கள் நண்பர் முரளியை அழைக்கலாம். அவருடைய எண் - 9841524590
பின் குறிப்பாக ஒரு ஃபிளாஷ்பேக்
வசந்தசேனா பாடல் வெறும் டியூனாக இருந்தபோது நான்தான் அதற்கு வரிகள் எழுதினேன்
பூவைக்கண்டேன் பூவும் ஆனாள்
நிலவைக் கண்டேன் நிலவும் ஆனாள்
கவிதை கண்டேன் கவிதை ஆனாள்
தோழி... காதல் தோழி!
வெறும் டியூனாக இருந்த பாடல் பின்னொருநாளில் திரைப்பாடலாக உருவெடுத்தது போல, முரளியின் ”வித்தையடி நானுனக்கு” படமும் திரைப்படமாக விரைவில் தியேட்டர்களின் திரையைத்தொடும் என்று நம்புகிறேன்.