Thursday, November 11, 2010

ராஜாவை கை கழுவினால், காங்கிரசுக்கு ஆதரவு - ஜெவின் ஓப்பன் பல்டி!

ராஜாக்களும், ராணிக்களும் முழுவீச்சில் களமிறங்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி இந்திய அரசியலில் எல்லா கூத்துகளும் நடக்கும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடிபடும் தொகையைக் கேட்டால் தலையை சுற்றுகிறது. அதை விட தலை சுற்றல் ஜெயலலிதாவின் காங்கிரஸ் ஆதரவு பேட்டி

நேற்று இரவு வரை காங்கிரசை திட்டிக் கொண்டிருந்தார் ஜெ. அதை நம்பி அதிமுக எம்பி மைத்ரேயனும் காலையில் ஆங்கில டிவிக்களில் காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார். திடுமென மதியம் ஜெ TIMES NOW சேனலில் தரிசனம் தந்தார்.  என்னிடம் 18 எம்பிக்கள் இருக்கிறார்கள். எனவே ராஜாவை கை கழுவினால் தி.மு.க ஆதரவை விலக்கி விடும் என்று காங்கிரஸ் அஞ்ச வேண்டாம். நான் காங்கிரசின் ஆட்சி கவிழாமல் இருக்க நாடு முழுக்க பல கட்சிகளிடம் பேசி மெஜாரிட்டிக்குத் தேவையான 18 எம்.பிக்களை திரட்டி ஆதரவு தருகிறேன் என்று பரபரப்பான பல்டி அடித்தார்.


இந்த டிவி பேட்டியே ஒரு TIMES NOW சேனலின் டிராமா போல இருந்தது. அதாவது ஜெ தனது பதில்களை எழுதி வைத்து வாசித்தார். இடையிடைய திறமையாக நடித்து தனது கேள்விகளை எடிட்டிங்கில் ஒட்டிக் கொண்டார், பேட்டி கண்ட அர்னாப். இது எனது கணிப்பு.

மீண்டும் அந்த பேட்டி ஒளிபரப்பானால் கவனித்துப் பாருங்கள். ஜெயலலிதா நேர்பார்வை பார்க்காமல் அடிக்கடி காமிராவிற்கு கீழ் இருக்கும் பிராம்ப்டரை பார்த்து படிப்பது தெரியும். ஆக திமுகவிற்கு எதிராக, ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஒரு ஆங்கில சேனல் களம் இறங்கிவிட்டது. பேட்டி என்ற பெயரில் ஒரு ஒத்திகை பார்க்கப்பட்ட பேச்சை ஒளிபரப்பியுள்ளது. எப்பவுமே ஜெவிற்கு ஆங்கில சேனல்களில் மவுசு அதிகம். அதிலும் TIMES NOW சேனல் ஜெவிற்கு ஸ்பெஷல் கவரேஜ் தரும். சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது அவரை குயின் என்று வர்ணித்து மகிழ்ந்தது.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று ஜெயலலிதாவிற்கு கவலையாக இருக்கிறதாம். அதனால்தான் இந்த ஆதரவாம். அட..அட... ஜெவிற்கு காங்சிரசின் மேல் ஏன் இந்த திடீர் பாசம்? வேறென்ன தமிழகத்தில் கோட்டையை பிடிக்க காங்கிரஸ் தேவை. அதற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் அவர்.

இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜம். நாளையே ஜெவும், சோனியாவும் கைகுலுக்கி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தாலும் எனக்கு நிச்சயமாக ஆச்சரியமாக இருக்காது.

ஈழப் பிரச்சனையில் தனக்கு எதிராக கருத்துகள் உருவானாலும், விடாப் பிடியாக கருணாநிதி ஏன் காங்கிரஸ் திண்ணையை விட்டு இறங்காமல் இருந்தார் என்று இப்போது புரிகிறதா? ஜெவும் அதே திண்ணைக்குதான்  தொடர்ந்து குறிவைத்துக் கொண்டிருக்கிறார். வலியப் போய் ஒரு டிவி பேட்டி வழியாக காங்கிரசுக்கு ஆதரவு தருகிறேன் என்று ஜெ சொல்லியிருப்பதுதான் உண்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முகம். ஈழப் பிரச்சனையில் ஜெ, கருணாநிதி, வை.கோ உட்பட எவருக்கும் உண்மையில் அக்கறை கிடையாது. தமிழகத்தில் ஆட்சியில் பிடிப்பதுதான் அவர்களுடைய உண்மையான இலட்சியம்.

இப்போதாவது ஈழ சகோதர சகோதரிகள் இந்த உண்மையை புரிந்து கொண்டு, தமிழக அரசியல்வாதிகளை நம்பாதிருக்க பழக வேண்டும்!

Saturday, October 9, 2010

வோறொரு டிவியில் நியுஸ் பார்த்து, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் சேனல்கள்!

மீடியாக்களின் நெகடிவ் பிரசாரங்களை தவிடு பொடியாக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள்.
காமன் வெல்த் போட்டிகளில், நேற்று(அக்டோபர் 8) நம்ம சாய்னா, மலேசியாவின் வோங் மியு சூவை எதிர்த்து 24-26, 21-17 21-14 என்ற கணக்கில் செம த்ரில்லிங் மாட்ச் ஒன்றை ஜெயித்தார். இந்தியாவில் இறகுப் பந்து போட்டியை பிரபலப் படுத்திய பிரகாஷ் படுகோன், அவருடைய மகளும் சினிமா நடிகையுமான தீபிகா படுகோன் உட்பட பிரபலங்கள் காலரியில் உட்கார்ந்திருக்க, இரசிகர்கள் உற்சாகமாகிவிட்டார்கள்.சாய்னா! சாய்னா! என்று அவர்கள் கோரஸாக கிரிக்கெட் வீரர் அல்லாத ஒருவருக்காக குரல் கொடுத்தது, பார்க்கவே பரவசமாக இருந்தது.

அடுத்துதான் நம்ம சூரப்புலி மீடியாக்களின் காமெடி ஆரம்பித்தது. NDTV HINDU மற்றும் SUN NEWS சானல்கள் சாய்னா தங்கம் வென்றுவிட்டதாகவும், இந்தியா மொத்தம் 21 தங்கம் வென்றுவிட்டதாகவும்  ஃப்ளாஸ் நியுஸ் போட ஆரம்பித்துவிட்டன. சாய்னா அடுத்த சுற்றுக்குதான் தகுதி பெற்றுள்ளார் என்பதை அவர்கள் உணர ஒரு மணி நேரம் பிடித்தது.

எதையும் சரிபார்க்காமல், மற்றொரு டிவியை பார்த்தே, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் இவர்கள்தான் காமன்வெல்த் போட்டியை குறை சொல்லி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். காமன்வெல்த் போட்டியில் குறைகள் நிச்சயம் உண்டு. ஆனால் அவற்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் மீடியாக்களின் இலட்சணம் இதுதான்.

அவர்களை விட்டுத் தள்ளுங்கள். எத்தனையோ இடர்பாடுகள் இருந்தாலும், குறைகள் இருந்தாலும் உற்சாகம் குறையாமல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வெற்றி வாகை சூடும் இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். காமன்வெல்த் போட்டிகளில் எங்கே சாக்கடை ஒழுகுகிறது என்பதை தேடிக் கொண்டிருக்கும் காமெடி மீடியாக்களை ஒதுக்கிவிட்டு, வியர்வை சிந்தி பதக்கங்களை வெல்லும் இளைஞர்களை கொண்டாடுவோம்.

Thursday, September 9, 2010

லிமெரிக் - அப்பூடின்னா?

தளை, சீர்,
தேமா, புளிமா,
கருவிளம், கூவிளம்
வெண்பா, கலிப்பா
வேண்டாம்பா, விட்ருப்பா
என இலக்கணம் புரியாமல் பல கவிதைகளை, காவியங்களை நாம் வாசிக்காமலேயே விட்டிருக்கிறோம். காரணம் எப்போதும் கையில் பிரம்புடன் மிரட்டிய வாத்தியார்கள். மார்க்குக்கு பயந்து டப்பா அடித்தே எழுதியதில் கடைசி வரை இலக்கணம் புரியாமலேயே போய்விட்டது.

ஆனால் சுஜாதாவின் புண்ணியத்தில் சில இலக்கண சுவாரசியங்கள் மனதிலேயே தங்கிவிட்டன. இவரை மாதிரியே நம்முடைய தமிழ் வாத்தியார்கள் எல்லோரும் இருந்துவிட்டால் என்ற என்ற ஏக்கம் அப்போதும், இப்போதும், எப்போதும் இருக்கிறது.

லிமரிக் என்ற கவிதை வடிவத்தை சுஜாதாதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். 
 லிமரிக்கின் வடிவம் மிக எளிமையானது.
  • மொத்தம் 5 வரிகள். 
  • 1,2 மற்றும் 5வது வரிகள் ஒரு Rhyme(இயைபுத் தொடை)ல் இருக்க வேண்டும்.
  • 3, 4வது வரிகள் வேறொரு Rhymeல் இருக்க வேண்டும்.
இதைத் தவிர இன்னும் விளக்கங்கள் உள்ளன. மேலும் அறிய விரும்புவர்கள் இங்கே கிளிக்கலாம்.

முதலில் ஆங்கிலத்தில் ஒரு சாம்பிள் பார்ப்போம்.
There was a young lady named Bright
Who travelled much faster than light,
She started one day
In the relative way
And returned on the previous night

அடுத்து தமிழில் ஒரு உதாரணம்
கையில் வில்லில்லாக் காண்டீபன்
கடையில் வாங்கித்தின்றான் கண்ட டிபன்
ராத்திரியில் அடிக்கடி கண்விழிச்சான்
பாத்ரூமில் பாதி இரவு கழிச்சான்
இன்னும் கொஞ்ச நாளைக்கு வெறும் "டீ, பன்"


இந்த உதாரணங்கள் எல்லாம் நெட்டில் சுட்டவையே. இவை முழுமையான லிமரிக்குகளா என்பதிலும் எனக்கு சந்தேகம் உண்டு.

சுஜாதா எழுதச் சொன்னார் ஒரு லிமரிக்கு
சுவையா நான் எழுதி வந்தேன் ஒரு குமரிக்கு
அவ வாயெல்லாம் இங்கிலீசு பேச்சு
அவ முகமெல்லாம் பவுடரு பூச்சு
சும்மா யாருன்னு பார்த்தா அட! நம்ம - ருக்கு !

அடுத்து வரும் லிமெரிக்குகளில் சுவாரசியம் கருதி சில புள்ளி இட்ட இடங்களைத் தருகிறேன். நீங்களே வார்த்தைகளை பூர்த்தி செய்து கொண்டு இரசியுங்கள்.

There once was a pauper named Meg
Who accidentally broke her _______.
She slipped on the ______.
Not once, but thrice
Take no pity on her, I __________.

அதே போல தமிழில் ஒன்று முயற்சி செய்யுங்கள்
ஹார்பர்ல வந்திருக்கு இரும்பு லோடு
பார்பரா வூட்டுல இருக்கான் அந்த பாடு
சைரன் தந்தாச்சு
லாரிங்களும் - - - - -
அவ மடியில கெடக்கான், கூட்டிவா - - !

இப்போ நீங்களே ஒரு லிமெரிக் எழுதுங்க பார்க்கலாம்.