Sunday, October 12, 2008

இளையராஜாவின் இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானின் பாடல்களை விட, ஏ.ஆர்.இரகுமான் மேல் ஏன் அதிக வெறுப்பு?

எம்.எஸ்.வி இரசிகர்களுக்கு இளையராஜாவை பிடிப்பதில்லை. நன்றாகக் கவனிக்கவும் இளையராஜாவைத்தான் பிடிப்பதில்லை, ஆனால் இளையராஜாவின் பாடல்களைப் பிடிக்கும். அதே போல இளையராஜா இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானைப் பிடிப்பதில்லை, ஆனால் ஏ.ஆர்.இரகுமான் பாடல்களைப் பிடிக்கும்.

ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

அதே போல கருணாநிதியின் உடன் பிறப்புகளுக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. ஆனால் 'மழை நீர் சேகரிப்பு' போன்ற திட்டங்கள் பிடிக்கும். அதுபோல ஜெயலலிதாவின் இரத்தத்தின் இரத்தங்களுக்கு கருணாநிதியை பிடிக்காது. ஆனால் 'இலவச டிவி மற்றும் ஒரு ரூபாய் அரிசி பிடிக்கும்"

ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

உளவியல் ரீதியாக இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும் என்பதால், இளையராஜாவையே பிடித்துப்போய்விடுவதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் இளையராஜாவை விட சினிமா மார்க்கெட்டில் ஏ.ஆர்.இரகுமான் அதிகம் எடுபடுகிறார் என்றதும் ஏன் எனக்கு ஏ.ஆர்.இரகுமானையே பிடிக்காமல் போய்விடுகிறது? முன்பு எம்.எஸ்.வியின் இரசிகர்கள் இளையராஜாவின் மேல் இப்படி ஒரு வெறுப்பு கொண்டிருந்தார்கள். இன்று இளையராஜாவின் இரசிகர்கள் ஏ.ஆர்.இரகுமான் மேல் அதே போல ஒரு வெறுப்பு வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் சரோஜா பட ஆடியோ ரிலீசுக்கு ஏ.ஆர்.இரகுமான்தான் சிறப்பு விருந்தினர். ஆனால் அதை ஒரு பெரிய அதிசயம் போல பரபரப்பாக்கினார்கள். காரணம் ஏ.ஆர்.இரகுமான் மற்றும் இளையராஜா இரசிகர்கள். யுவனை, ஒரு இசை அமைப்பாளராக மட்டும் பார்க்காமல், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமானுக்கு இளையராஜாவின் சார்பில் ஒரு போட்டியாக சில இரசிகர்கள் வரித்திருக்கிறார்கள். அதுதான் அந்த பரபரப்பிற்கு காரணம். முன்பு ஒரு முறை ஏ.ஆர்.இரகுமானும், இளையராஜாவும் ஒரே மேடையில் முதன் முதலாக சந்தித்தபோதும், இதே பரபரப்பு நேர்ந்தது. அந்த மேடைக் காரணம் எனக்கு நினைவில்லை, ஆனால் குமுதம் போன்ற பத்திரிகைகள் அந்த மேடையில் ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவிற்கு பரிசளித்த மோதிரத்திற்கு ஏதேதோ காரணம் கற்பிக்க முயன்ற அபத்தங்கள் ஞாபகம் இருக்கிறது. 80களில் 'ஓரம் போ ருக்குமணி வண்டி வருது' பாட்டிற்கு இளையராஜா அழைத்து, எம்.எஸ்.வி பாட மறுத்த போதும் இதே போல சலசலப்புகள் ஏற்பட்டன. மூச்சு விடக் கூட நேரமின்றி இளையராஜா பிஸியாக இருந்த கால கட்டத்தில், ஏதோ ஒரு படத்திற்கு எம்.எஸ்.வி அவருக்கு உதவி செய்ய நேர்ந்ததாக, இன்று வரை ஒரு உறுதி செய்யப்படாத ஒரு தகவலைக் கேள்விப்பட்டு, எம்.எஸ்.வியின் இரசிகர் ஒருவர் தன்னையே மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவமும் நடந்தது.

தற்போது விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பிடிக்காதவர்களில் கணிசமான பேர், ரஜினி இரசிகர்கள்தான். காரணம், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவை முந்தியது போல, ரஜினியை விஜயகாந்த் முந்திவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி தனக்குப் பிடித்தவர்களை வேறொருவர் முந்திவிட்டதாக நினைக்கும் போது, அவர் மேல் தன்னையே அறியாமல் ஒரு வெறுப்பு வந்து அப்பிக் கொள்கிறது.

ஏ.ஆர்.இரகுமானை விடுங்கள், வணிக ரீதியாக இளையராஜாவை விட அவருடைய இளைய மகன் யுவனுக்கு டிமாண்ட் அதிகம். ஆனால் அவர் மேல் இளையராஜா இரசிகர்களுக்கு கோபமில்லை. ஏனென்றால் இளையராஜாவின் மேலிருக்கும் அசாத்திய இரசிப்பத் தன்மை காரணமாக, யுவனை சங்கர் ராஜாவையே இன்னொரு இளையராஜாவின் ஹிட் பாடலாகத்தான் பார்க்கிறார்கள். அதாவது ஏ.ஆர்.இரகுமானுக்கு இணையாக மார்க்கெட்டில் போட்டி போடக் கூடிய இன்னொரு பாடலாகப் பார்க்கிறார்கள்.

அதே போல ஏ.ஆர்.இரகுமான் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தபோது, அவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் அணைத்து ஏற்றுக் கொண்டவர்கள் எம்.எஸ்.வியின் இரசிகர்கள்தான். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, வணிக ரீதியாக எம்.எஸ்.வியை முந்திய இளையராஜாவை, வெல்ல வந்தவர் ஏ.ஆர்.இரகுமான்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜனி-கமல் இரசிகர்கள் அனைவரும் இது போல இரசிப்புத் தன்மையைத் தாண்டிய விருப்பு வெறுப்புகளை உடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அதே போல எம்.எஸ்.வி - இளையராஜா - ஏ.ஆர். இரகுமான் இரசிகர்களும் இருக்கிறார்கள்.

சொல்லப் போனால் நானும் அந்த இரசிகர்களில் ஒருவன்.

Saturday, October 11, 2008

இயற்கை அவஸ்தைகள்! நமது மாநகர்களின் இன்னொரு பக்கம்

ஸ்பென்சர் பிளாசா வந்திருந்த புதிது. சென்னை கே.கே.நகரில் ஏதோ ஒரு பின்னிரவில் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
"மெட்ராஸ் அமர்க்களமா மாறிகிட்டிருக்கில்ல?", இது நான்.

"மண்ணாங்கட்டி! அவசரமா ஒன் பாத் ரூம் வந்தா, ஒதுங்கறதுக்கு இடமில்ல. மவுண்ட்ரோடுல சாந்தி தியேட்டர்ல இருந்து சஃபையர் வரைக்கும் ஒரு பத்து மூத்திர சந்து இருக்கு. ஆனா ஒரு பப்ளிக் டாய்லெட் கிடையாது. இதுக்குப் பேரு சிட்டியா?", பல்லைக் கடித்துக்கொண்டு பயங்கர கோபத்துடன் பேசியது, நண்பர் ஆந்தைக் குமார் (அப்போதைய ஜீ.வி. ஆந்தையார்)

"அட ஆமா, போனவாரம் கூட நான் இப்படித்தான் அவசரமா . . .", என இன்னொரு நண்பர் தன் ஒன் பாத்ரூம் அவஸ்தையை விவரிக்க . . . ஆந்தைக் குமார் குறுக்கிட்டு,
"உங்க கதையை விடுங்க, எத்தனை பொம்பளைங்க இந்த மாதிரி சிட்டிக்குள்ள அவஸ்தைப் படறாங்க தெரியுமா? நீயாவது ஏதாவது சந்துக்குள்ள புகுந்திடுவ, பொம்பளைங்க என்னய்யா செய்வாங்க? ஏதோ ஸ்பென்சர் பிளாஸா அது இதுன்னு அலட்டறீங்களே... அதுல எத்தனை டாய்லெட் இருக்குன்னு சொல்லுங்க.. அப்புறம் சொல்றேன் அது அலட்டலா? குமட்டலான்னு?"

ஆந்தைக் குமாரின் அதே நியாயமான கோபத்தை, சென்ற வார ஆனந்த விகடனில் தீதும் நன்றும் பகுதியில் நாஞ்சில் நாடன் வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொட்டிருந்தது இன்னொரு சென்சிடிவ் ஏரியா. பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் இயற்கை உபாதை அவஸ்தைகளை கோபமும் வலியும் கலந்து எழுதியிருந்தார். ஆண்கள் ஏதோ ஒரு நிறுத்தத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்கள்? காட்டு வழியில் இருளில் பஸ்ஸை நிறுத்தி லைட்டை அணைத்து, பெண்களின் இயற்கை அவசரங்களை கழிக்க நேரும் அவலமான, அபாயமான தருணங்களை நாஞ்சில் நாடன் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

பஸ் பயணத்தில் வாந்தியைக் கட்டுப்படுத்த, மாதவிலக்கை தள்ளிப் போட மாத்திரைகள் உண்டு. அதே போல மூத்திரத்தை கட்டுப்படுத்த மாத்திரைகள் கண்டு பிடிப்பதைப் பற்றி மருந்து கம்பெனிகள் சிந்திக்கலாம் என்று அவர் யோசனை சொல்லியிருந்தார்.

ஆனால் மருந்துக் கம்பெனிகளை நாடுவதை விட, எதிர் வரும் தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளையும் (வாக்குச் சீட்டு வழியாக) முகத்தில் குத்தி இந்த 'இயற்கை உபாதை பிரச்சனையை' பற்றி ஒரு தீர்வு சொல்லச் சொல்லலாம்.

ஆனந்த விகடன் மூலமாக இந்த பிரச்சனை பற்றி பலரும் சீரியஸாக சிந்திக்க வைத்ததற்க்காக நாஞ்சில் நாடனுக்கு நன்றி!

அப்புறம் . . .
(ஆந்தை) குமார் தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

Friday, October 10, 2008

தமிழகத் தேர்தலின் கருப்பு குதிரைகள்

பொதுவாக தமிழக அரசியல் என்பது, கருணாநிதியை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் அரசியல். அதனால் தேர்தலை பொருத்தவரை அனைத்துக் கட்சிகளுமே கூட்டணி விஷயத்தில் கருப்பு ஆடுகள்தான். ஜெயிப்பது மட்டுமே குறிக்கோள் என்பதால், எல்லா அசிங்கங்களும் தேர்தல் நேரத்தில் நடக்கத்தான் செய்யும்.

தற்போதைய நிலவரப்படி விஜயகாந்த் எந்தக் கழகத்துடன் இணைந்தாலும், எதிர் கழகம் காலி. தனியாக நின்றால் விஜயகாந்த் காலி.

தி.மு.க
தற்போது DMK is in back foot. ஷாக் அடிக்கும் மின்சாரப் பிரச்சனையும், மதுரையிலிருந்து கொண்டு அதிரவைக்கும் அழகிரியும், தி.மு.கவின் தனிப்பெரும் மைனஸ் பாயிண்டுகள். எதிர்க்கட்சிகளை விட மோசமாக ஆளும்கட்சியை தாக்கும் விவகாரங்கள் இவை. ஆனால் ஸ்டாலின் சத்தம் போடாமல் மக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர் மேல் குற்றச்சாட்டுகளே இல்லை. உள்ளாட்சித் துறையை கையில் வைத்துக்கொண்டு படு வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வேண்டுமென்றே மீடியா வெளிச்சங்களைத் தவிர்க்கிறாரா அல்லது மீடியா வெளிச்சத்தை தன் மேல் விழ வைக்கத் தெரியாமல் தவிக்கிறாரா? என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. தி.மு.கவின் ஒரே பிளஸ் தற்போது அவருடைய செயல்பாடுகள்தான்.

அ.தி.மு.க
விஜயகாந்த், இளைய எம்.ஜி.ஆர் பக்தர்களை கவர்ந்துவிட்டதில், அம்மா கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். கட்சியின் பலம் பலவீனம் இரண்டுமே ஜெயலலிதாதான். அவர், ஆக்டிவ் பாலிடிக்ஸிலிருந்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் தொடர் ரெஸ்டில் இருந்ததும், சட்டசபையை தவிர்த்ததும், அக்கட்சியின் மிகப் பெரிய மைனஸ். அந்த இடைவெளியில் விஜயகாந்தும், ராமதாசும் ஸ்கோர் பண்ணிவிட்டார்கள். ஆனால் வீட்டுக்குள் சாக்கடை அடைத்த பிரச்சனைக்கு கூட (சன் டிவி உதவியுடன்) தொடர் போராட்டங்களை நடத்தி கட்சியை லைம் லைட்டில் வைத்திருந்தார். ஆரம்பத்திலும் இப்போதும் கிண்டல் செய்யப்படுகின்ற சமாச்சாரம் இது. ஆனால் இதை மிகப்பெரிய பிளஸ்ஆக நான் நினைக்கிறேன். தேர்தல் நெருக்கத்தில் அந்த துக்கடா போராட்டங்கள், கணிசமான வாக்குகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

தே.மு.தி.க
விஜயகாந்த்தை தவிர வேறு யாரையுமே மக்களுக்கு தெரியாது. விஜயகாந்த்தான் மீடியாக்களின் புதிய டார்லிங். கருணாநதி எதிர்ப்பு பாலிடிக்ஸில் முன்பு ஜெயலலிதாவை சுற்றி வந்த டிவி மைக்குகளும், தினசரி பேனாக்களும், தற்போது விஜயகாந்த் பக்கம் வந்துவிட்டன. அவரும் சளைக்காமல் மீடியாக்களுக்கு நொறுக்குத் தீனி போட்டுக் கொண்டே இருக்கிறார். இதுதான் தே.மு.தி.கவின் பிளஸ். தன்னுடைய எதிரிகள் என்று தி.மு.வையும், அ.தி.மு.கவையும் கை காட்டிவிட்டார். ஆனால் நண்பர்கள் யார் என்று அவரால் யாரையும் கை காட்ட முடியவில்லை. யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்துவிட்டதால், நண்பர்களாக யாரை எப்படி தேர்ந்தெடுத்து கூட்டணி வைப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார். மீடியாக்கள் அவருடைய குழப்பத்தை மறைத்து வைத்தாலும், இதுதான் அவருடைய பெரிய மைனஸ்.

கூட்டணி எதுவாக இருந்தாலும், உள்துறை அமைச்சராக ஸ்டாலினின் ஆர்ப்பாட்டமில்லாத பெர்ஃபாமன்சும், அ.தி.மு.கவின் சின்சியரான வார்டு லெவல் போராட்டங்களும், விஜயகாந்தின் 'தில்லான ஆள்' என்கிற அதிரடி கவர்ச்சியும், தமிழகத் தேர்தலின் கருப்பு குதிரைகள். இந்த மூன்று குதிரைகளும்தான் கடைசி நேரத்தில் வாக்காளரை எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க வைக்கப் போகின்றன.