Showing posts with label நானே கேள்வி - நானே பதில். Show all posts
Showing posts with label நானே கேள்வி - நானே பதில். Show all posts

Wednesday, November 26, 2008

சிறிய விஷயம் - பெரிய தவறு

நீங்கள் என்றைக்காவது 'கண் சொட்டு மருந்து' வாங்கியிருக்கிறீர்களா? சமீபத்தில் எனது பெண்ணுக்காக நான் வாங்கினேன். டாக்டர் எழுதிக்கொடுத்த "MOISOL EYE DROPS" மற்றும் "OCUPAL EYE DROPS" ஆகிய இரண்டு சொட்டு மருந்துகளும் மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் பிரச்சனை மருந்தை வாங்கிய கணத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மருந்தை சொட்டு சொட்டாக கண்களில் விடவேண்டுமென்றால் பாட்டிலின் பிளாஸ்டிக் முனைகளில் ஒரு சிறிய துளை தேவைப்படுகிறது.

என்னுடைய மகளும், மனைவியும் அதில் துளையிடுவதற்க்காக முதலில் ஒரு கூரிய பேனா முனையை முயற்சித்திருக்கிறார்கள். அது சரிப்படவில்லை என்றதும் ஒரு ஹேர்பின்னை வைத்து முயற்சித்திருக்கிறார்கள். அதுவும் சரிப்படவில்லையென்றதும் என்னிடம் வந்தார்கள். நான் ஹேர்பின்னையும், பேனா முனையையும் வீசி எறிந்துவிட்டு,  பாட்டில் மூடியை இடமிருந்து வலமாக ஒரு முறை இறுகச் சுற்றினேன். அடுத்த வினாடி சொட்டு மருந்துக்கான துளை ரெடியாகிவிட்டது. எப்படி? இது எப்படி? என்று ஏதோ மேஜிக்கை பார்த்ததுபோல எனது மனைவிக்கும் மகளுக்கும் ஆச்சரியம்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பாட்டில் மூடியின் உள் உச்சியில் ஒரு பிளாஸ்டிக் ஊசியின் கூர் முனை உள்ளது. பாட்டிலை மூடிவிட்டு, இடமிருந்து வலமாக மேலும் இறுக்கும்போது, உள் உச்சியிலிருக்கும் பிளாஸ்டிக் ஊசியின் கூர்
முனை குத்தி துளை ஏற்படுகிறது. இனி அந்த துளை வழியாக மருந்து சொட்டு சொட்டாக எளிதாக வெளிவரும்.

'உங்களுக்கு மட்டும் எப்படி இது தெரிந்தது?" என்று என் மகள் ஆச்சரியம் பொங்கக் கேட்டாள். நான் அமைதியாக மருந்து வைக்கப்பட்டிருந்த மேல் அட்டைப் டப்பாவைக் காட்டினேன். அதில் 'எப்படித் துளையிடுவது என்பது பற்றி' படத்துடன் ஆங்கில விளக்கமும் இருந்தது.

எதற்க்காக இதைச் சொல்கிறேன் என்றால், ஹேர்பின், பேனா முனைகளை வைத்து துளையிடும்போது அவற்றில் உள்ள அழுக்குகள் துளையின் முனையில் ஒட்டிக்கொள்ளும். கண்களில் அந்தத் துளைகளின் வழியாக மருந்திடும்போது, மருந்துடன் சேர்ந்து அழுக்கும் கண்களில் இறங்கும். இதனால் கண்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.

படித்த நடுத்தர வர்க்க மக்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியவில்லை.படிக்காத ஏழை எளிய மக்கள் இதனால் எந்த அளவு பாதிப்படைவார்கள் என்பதை நான் தனியே விளக்கத் தேவையில்லை.

எனவே மருந்து எழுதித் தரும் டாக்டர்களும், மருந்தை விற்பனை செய்யும் கடைக்காரர்களும் 'சொட்டு மருந்து மூடியில் பாதுகாப்பாக துளையிடுவது எப்படி?' என்பது பற்றி ஒரு முறை விளக்குவது நல்லது.

Thursday, October 23, 2008

மனிதச் சங்கிலி தொடர்பாக அறிவுச் சங்கிலி ஞாநிக்கு சில கேள்விகள்

நடக்கவிருக்கும் மனித சங்கிலியைக் குறித்து, 1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு'. அன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடாதே', இன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடு', என்று உலக மகா ஞாநி வழக்கம் போல பிதற்றலை ஆரம்பித்திருக்கிறார்.

முதலில் அவருடைய வார்த்தை ஜாலத்திற்கு வருகிறேன்.

சிறுவயதில் வெளியே செல்லும்போது எனது தந்தை என் கையை பிடித்துக்கொண்டு, 'டேய் என் கையை விட்டுட்டு எங்கயும் போயிடாத' என்பார், சில நேரம் 'டேய் என் கையை விடாம கூடவே வா' என்பார். இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். சின்னக் குழந்தைக்கு கூட இது தெரியும். ஆனால் ஞாநி இரண்டுக்கும் வெவ்வெறு அர்த்தங்கள் என்கிறார்.

'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு எதிராக தலையிடாதே'
'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தலையிடு'

இந்த இரண்டு கோஷங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? ஆனால் இருக்கிறது என்கிறார் ஞாநி. அதற்கு வசதியாக இலங்கை தமிழர்களுக்கு எதிராக, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆகிய இரு சொற்றொடர்களையும் நீக்கிவிட்டார். நீக்கி விட்டு படித்தால் என்ன வருகிறது பாருங்கள். 'இந்திய அரசே தலையிடாதே', 'இந்திய அரசே தலையிடு' என்று வருகிறது. அதாவது இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அதன் ஆதரவாளர்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று போலி குற்றம் சாட்டுகிறார்.

1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு' அதற்குச் செல்லாதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். ஞாநி சொல்வது போல நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி தி.மு.க தலைமையில் நடைபெறும் வெறும் அணிவகுப்புதான் என்று வைத்துக்கொண்டாலும், அப்படி 'வெறும் அணிவகுப்பாக' தோற்றமளிக்க யார் காரணம்?

யார் காரணம் என்று சுட்டுவிரலை நீட்ட மாட்டார். ஏனென்றால் அவருடைய விரல் அவருக்குப் பிடித்த ஜெயலலிதாவை நோக்கி நீள வேண்டும். அன்றும், இன்றும், என்றும் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் எதிர் பக்கத்திலேயே ஜெயலலிதா நிற்கிறார், நிற்பார். அம்மாவைத் திட்ட மனமின்றி, புது அரசியல்வாதி விஜயகாந்த்தை திட்டவும் மனமின்றி மீண்டும் கருணாநிதியின் மேலேயே பாய்கிறார். ஜெவும், விஜயகாந்தும் மனித சங்கிலிக்கு வரவேண்டாம், ஆனால் குறைந்தபட்சம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தங்கள் கைத்தடிகளையாவது அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்று கேட்டு குட்டவும் ஞாநிக்கு மனமில்லை.

குமுதம் தலையங்கத்திலும் இதே வழவழாதான். 'இலங்கை அரசுக்கு இதுவரை பல உதவிகளைச் செய்திருக்கிற மத்திய அரசு, இனியாவது அதை அடியோடு நிறுத்தி அங்குள்ள தமிழர்களின் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' என்று சில வரிகள் உள்ளன. "உரிய நடவடிக்கை" என்றால் என்ன? அதற்கு குமுதம் பதில் சொல்லுமா? இல்லை ஞாநி தனியே பதில் சொல்வாரா?

ஞாநி அதற்கும் முயற்சித்திருக்கிறார். 'போரை விட்டு விட்டு ஜனநாயகத்திற்கு வாருங்கள்' என்று பிரபாகரனுக்கு கோரிக்கை வைக்கிறார். சபாஷ்! சரியான குள்ள நரி சிந்தனை! 'இந்தியாவை தலையிடு' என்று சொன்னால் அது 'போர் நிறுத்ததிற்கு வலியுறுத்துவதற்காகத்தான்' இருக்க முடியும். அப்படிச் செய்தால் அது சூழ்நிலை காரணமாக புலிகள் ஆதரவாகத்தான்' இருக்க முடியும். ஆனால் அப்படி வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால் பிரபாகரனை போரை நிறுத்திவிட்டு வந்து 'மகாபலிபுரத்தில் நடனம்' பார்க்கச் சொல்கிறார். ரஜினி கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டதற்கே தமிழினத் துரோகி என்று கடிதம் எழுதிய ஞாநி, பிரபாகரனை சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போரை நிறுத்திவிட்டு வாருங்கள் என்று கூசாமல் சொல்கிறார். இந்தியாவை போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்த திராணியின்றி, ஜெயலலிதா வகையறாக்களுடன் சேர்ந்துகொண்டு, பிரபாகரனை நிறுத்தச் சொல் என்கிறார். யார் துரோகி?

பிரபாகரனின் இராணுவ நடவடிக்கைகளை விட ஜெயலலிதா, கருணாநிதியின் ஊழல் அரசாங்கள் மக்களுக்கு அதிகம் பலனளித்திருக்கிறதாம். மிஸ்டர் ஞாநி, அடிப்படையை மறந்துவிட்டார். தமிழ்நாடு என்பது சுதந்திர பூமி. இங்கு வடிவேலு முதலமைச்சரானால் கூட, மக்கள் எப்படியோ வாழ்ந்து கொள்வார்கள். ஆனால் ஈழம் என்பது, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் கொடுமை. தற்போது நடந்துகொண்டிருப்பது அந்தக் கொடுமைக்கெதிரான கடைசி யுத்தம். யுத்தத்தை நிறுத்த இந்தியாவால் முடியும். ஆனால் பிரபாகரனால் முடியாது. பாலியல் கொடுமை வழக்கில் ஜெயிலுக்குப் போன நடிகனுக்கு கூட இந்த வரலாற்று உண்மை தெரியும். ஞாநியும் இதெல்லாம் தெரியாத முட்டாள் அல்ல.

அவரே கூறியிருப்பது போல மெய்யான மனிதச் சங்கிலி என்பது கைகளை இணைப்பது அல்ல, மனங்களை இணைப்பதுதான் என்றால், முதற்கட்டமாக அவர் தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்கு வைத்திருக்கும் ஜெ, மற்றும் விஜயகாந்தின் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அவர்களையும் இணைந்து குரல் கொடுக்கச் சொல்ல வேண்டும். செய்வாரா?

செய்யமாட்டார் என்பதால் ஞாநிக்கு 2011 குட்டுகள் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறேன். ஞாநி தன்னைத்தானே குட்டிக் கொள்ள முடியாது என்பதால், இதைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் அன்பாக ஞாநியின் தலையில் ஒரே ஒரு குட்டு குட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் குட்டு என்னுடையது 'டங்'. நிறைய குட்ட வேண்டும் போலிருந்தால் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் தலையில் குட்டுமாறு வேண்டுகிறேன். மேக்கப் போடுவதற்க்காக ஜெயலலிதா மற்றும் விஜயகாந்திற்கு கண்ணாடி பார்க்கும் பழக்கம் உண்டு. எனவே ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும்போதும், தலையை தடவும்போதும், உண்மையான தமிழ் மக்கள் குட்டிய இடம் வலிக்கும் உணர்ச்சி ஏற்படும். வலி கோபமாகி 'என்ன ஞாநி இது? எல்லாம் உன்னாலதான?' என்று அவர்கள் எகிறும் நிலை வரும்.

Sunday, October 12, 2008

இளையராஜாவின் இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானின் பாடல்களை விட, ஏ.ஆர்.இரகுமான் மேல் ஏன் அதிக வெறுப்பு?

எம்.எஸ்.வி இரசிகர்களுக்கு இளையராஜாவை பிடிப்பதில்லை. நன்றாகக் கவனிக்கவும் இளையராஜாவைத்தான் பிடிப்பதில்லை, ஆனால் இளையராஜாவின் பாடல்களைப் பிடிக்கும். அதே போல இளையராஜா இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானைப் பிடிப்பதில்லை, ஆனால் ஏ.ஆர்.இரகுமான் பாடல்களைப் பிடிக்கும்.

ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

அதே போல கருணாநிதியின் உடன் பிறப்புகளுக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. ஆனால் 'மழை நீர் சேகரிப்பு' போன்ற திட்டங்கள் பிடிக்கும். அதுபோல ஜெயலலிதாவின் இரத்தத்தின் இரத்தங்களுக்கு கருணாநிதியை பிடிக்காது. ஆனால் 'இலவச டிவி மற்றும் ஒரு ரூபாய் அரிசி பிடிக்கும்"

ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

உளவியல் ரீதியாக இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும் என்பதால், இளையராஜாவையே பிடித்துப்போய்விடுவதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் இளையராஜாவை விட சினிமா மார்க்கெட்டில் ஏ.ஆர்.இரகுமான் அதிகம் எடுபடுகிறார் என்றதும் ஏன் எனக்கு ஏ.ஆர்.இரகுமானையே பிடிக்காமல் போய்விடுகிறது? முன்பு எம்.எஸ்.வியின் இரசிகர்கள் இளையராஜாவின் மேல் இப்படி ஒரு வெறுப்பு கொண்டிருந்தார்கள். இன்று இளையராஜாவின் இரசிகர்கள் ஏ.ஆர்.இரகுமான் மேல் அதே போல ஒரு வெறுப்பு வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் சரோஜா பட ஆடியோ ரிலீசுக்கு ஏ.ஆர்.இரகுமான்தான் சிறப்பு விருந்தினர். ஆனால் அதை ஒரு பெரிய அதிசயம் போல பரபரப்பாக்கினார்கள். காரணம் ஏ.ஆர்.இரகுமான் மற்றும் இளையராஜா இரசிகர்கள். யுவனை, ஒரு இசை அமைப்பாளராக மட்டும் பார்க்காமல், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமானுக்கு இளையராஜாவின் சார்பில் ஒரு போட்டியாக சில இரசிகர்கள் வரித்திருக்கிறார்கள். அதுதான் அந்த பரபரப்பிற்கு காரணம். முன்பு ஒரு முறை ஏ.ஆர்.இரகுமானும், இளையராஜாவும் ஒரே மேடையில் முதன் முதலாக சந்தித்தபோதும், இதே பரபரப்பு நேர்ந்தது. அந்த மேடைக் காரணம் எனக்கு நினைவில்லை, ஆனால் குமுதம் போன்ற பத்திரிகைகள் அந்த மேடையில் ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவிற்கு பரிசளித்த மோதிரத்திற்கு ஏதேதோ காரணம் கற்பிக்க முயன்ற அபத்தங்கள் ஞாபகம் இருக்கிறது. 80களில் 'ஓரம் போ ருக்குமணி வண்டி வருது' பாட்டிற்கு இளையராஜா அழைத்து, எம்.எஸ்.வி பாட மறுத்த போதும் இதே போல சலசலப்புகள் ஏற்பட்டன. மூச்சு விடக் கூட நேரமின்றி இளையராஜா பிஸியாக இருந்த கால கட்டத்தில், ஏதோ ஒரு படத்திற்கு எம்.எஸ்.வி அவருக்கு உதவி செய்ய நேர்ந்ததாக, இன்று வரை ஒரு உறுதி செய்யப்படாத ஒரு தகவலைக் கேள்விப்பட்டு, எம்.எஸ்.வியின் இரசிகர் ஒருவர் தன்னையே மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவமும் நடந்தது.

தற்போது விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பிடிக்காதவர்களில் கணிசமான பேர், ரஜினி இரசிகர்கள்தான். காரணம், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவை முந்தியது போல, ரஜினியை விஜயகாந்த் முந்திவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி தனக்குப் பிடித்தவர்களை வேறொருவர் முந்திவிட்டதாக நினைக்கும் போது, அவர் மேல் தன்னையே அறியாமல் ஒரு வெறுப்பு வந்து அப்பிக் கொள்கிறது.

ஏ.ஆர்.இரகுமானை விடுங்கள், வணிக ரீதியாக இளையராஜாவை விட அவருடைய இளைய மகன் யுவனுக்கு டிமாண்ட் அதிகம். ஆனால் அவர் மேல் இளையராஜா இரசிகர்களுக்கு கோபமில்லை. ஏனென்றால் இளையராஜாவின் மேலிருக்கும் அசாத்திய இரசிப்பத் தன்மை காரணமாக, யுவனை சங்கர் ராஜாவையே இன்னொரு இளையராஜாவின் ஹிட் பாடலாகத்தான் பார்க்கிறார்கள். அதாவது ஏ.ஆர்.இரகுமானுக்கு இணையாக மார்க்கெட்டில் போட்டி போடக் கூடிய இன்னொரு பாடலாகப் பார்க்கிறார்கள்.

அதே போல ஏ.ஆர்.இரகுமான் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தபோது, அவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் அணைத்து ஏற்றுக் கொண்டவர்கள் எம்.எஸ்.வியின் இரசிகர்கள்தான். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, வணிக ரீதியாக எம்.எஸ்.வியை முந்திய இளையராஜாவை, வெல்ல வந்தவர் ஏ.ஆர்.இரகுமான்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜனி-கமல் இரசிகர்கள் அனைவரும் இது போல இரசிப்புத் தன்மையைத் தாண்டிய விருப்பு வெறுப்புகளை உடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அதே போல எம்.எஸ்.வி - இளையராஜா - ஏ.ஆர். இரகுமான் இரசிகர்களும் இருக்கிறார்கள்.

சொல்லப் போனால் நானும் அந்த இரசிகர்களில் ஒருவன்.

Tuesday, October 7, 2008

பார்வையற்றோர் தாஜ்மகாலை பார்க்க முடியுமா?

புது தில்லி பயணம். சென்ட்ரல் ஸ்டேஷன் பத்தாவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ஜி.டி.யில் ஏறி அமர்ந்தேன். தண்ணீர் பாட்டில்கள் வந்திருக்காத 15 வருடங்களுக்கு முன், தாகத்துக்கு வாட்டர் பேகைத் திறந்தேன். ஏதோ ஒரு கவனக் குறைவில் பக்கத்து சீட்டுக்காரரின் மேல், தண்ணீர் சிதறிவிட்டது.

"ரொம்ப ஸாரி ... தெரியாம . . . அட சார் நீங்களா?"
"ஓ... செல்வக்குமாரா? எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் சார். ஒரு சாஃப்ட்வேர் விஷயமா டெல்லி போயாகணும் அதான் இந்த டிரெயினைப் பிடிச்சேன்"
"நாங்க 20 பேர் டூர் போயிட்டு இருக்கோம்"
"டூரா? டெல்லியில எங்க?"
"நாங்க ஆக்ரா போறோம். ரெண்டு நாள் தங்கி ஆசை தீர தாஜ்மகாலை தரிசிக்கப் போறோம்"
"தாஜ்மகாலை பார்க்கப் போறீங்களா?", அதிர்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை.

அவர்கள் தாஜ்மகாலை பார்க்கப்போனால் எனக்கென்ன அதிர்ச்சி என்கிறீர்களா? விஷயம் தெரிந்தால் நீங்களும் அதிர்ச்சியடைவீர்கள்.

அவர்கள் அனைவரும் பார்வையிழந்தோர்.

அவர்கள் தாஜ்மகாலைப் பார்க்க தாஜ்மகால் வரை செல்ல வேண்டியதில்லை. அவர்கள் திரும்பும் திசை எல்லாம் தாஜ்மகால் தான்.
நீங்களும் நானும் தாஜ்மகாலை குறைந்த பட்சம் ஒரு போட்டோவிலாவது பார்த்திருப்போம். அழகில் மனதை பறிகொடுத்திருப்போம். அதனால் தாஜ்மகாலை நேரில் பார்க்க ஆவல் வருவது இயல்பானது. ஆனால் பிறவியிலேயே பார்வையிழந்த அவர்கள், வெளிச்சத்தையே பார்த்திராத அவர்கள், அழகு என்று எதைச் சொல்கிறார்கள்? தாஜ்மகால் என்று இருள் சூழ்ந்த விழிகளுக்குள் எதைக் காண்பார்கள்?

பார்வையில்லாத அவர்களால் தாஜ்மகாலை பார்க்க முடியுமா?
முடியும் என்று நான் நம்புகிறேன்.
இசையை எழுத்தால் எழுத முடியும் என்றால், வண்ணங்களை காற்றில் உணர முடியும்.
மொழி திரைப்படத்தில், காது கேளாத ஜோதிகா, பிருத்விராஜின் இசைப்பின்னல்களை வெறும் அதிர்வுகளால் உணர்கின்ற அற்புதமான காட்சி வரும். அந்தக் காட்சியுடன், இந்தப் பார்வையற்ற நண்பர்கள் தாஜ்மகாலை பார்த்து இரசிப்பதாகப் பொருத்திப் பாருங்கள். ஒரு வேளை நீங்களும் நானும் பார்வைக்குப் பதிலாக, ஒரு பரவச அதிர்வை உணர நேரிடலாம்.

பார்வையற்ற அந்த நண்பர்களை "Psychological problems of the blinds" என்கிற ஒரு சிம்போசியத்தில் நான் முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. திரு. ருத்ரன் அவர்கள் தலைமையில் நடந்த அந்த நிகழ்வில், நான் தான் தொகுப்பாளர்.

டெல்லி டிரெயினில் நான் தண்ணீர் சிந்திய அந்த நண்பர்தான் முதலில் மேடை ஏறியவர். பிறவியிலேயே பார்வையின்றி பிறந்த அவர், எனது குரலை வைத்தே "மாநிறம் உள்ள நீங்கள் உயரமானவர் அல்ல, சராசரி உயரம்தான்." என்று கூறி என்னையும் பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதைவிட பெரிய ஆச்சரியம், பார்வையற்ற அவர் தலைமையில் 20 பார்வையற்றவர்கள் தாஜ்மகாலைப் பார்க்க கிளம்பியது. அந்த ஆச்சரியத்துடன், விடை தெரியாத கேள்விகளுடன், நான் சந்தித்த நபர்களும், கிடைத்த அனுபவங்களும் தனிக்கதை. அதை பின்னர் எழுதுகிறேன். ஆனால் முடிவில் ஒன்று உணர்ந்து கொண்டேன். அது . . .

பார்வை என்பது கண்களில் இல்லை!

Sunday, August 31, 2008

ஜே.கே. ரித்திஷ் - விஜயகாந்த்! இவர்கள் 'காமெடி வெடியா' அல்லது 'தொடர் சரவெடியா'?

சொந்தப் பணமா? எங்கிருந்தோ வந்தப் பணமா? என்று தெரியாது.  ஆனால் தமிழகத்தில் இன்று இரண்டு பேர் இன்று 'தில்'லாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் ஜே.கே.ரித்திஷ்.

விஜயகாந்த், விருதாச்சலத்தில் ஆரம்பித்தார்.  2011ல் அடுத்த முதல்வர் ஆகிவிட்டுத்தான் நிற்பேன் என்கிறார். உங்கள் கொள்கை என்ன? தமிழகத்தை முன்னேற்ற உங்கள் யோசனை என்ன என்றால், இப்போது வெளியே சொல்ல முடியாது, சொன்னால் மற்ற கட்சிகள் காப்பியடித்துவிடுவார்கள் என்று தைரியமாக காமெடி பண்ணுகிறார்.

ஜே.கே ரித்திஷ் கானல் நீரில் சொதப்பலாக ஆரம்பித்து, நாயகனில் வந்து ஹிட் கொடுத்து நிற்கிறார். பட்டி தொட்டியெங்கும் கிட்டத்தட்ட 6 மாதங்களாக போஸ்டர்கள், பேனர்கள், படத்தில் பில்ட் அப் துவக்கப் பாடல் என பிரமாண்ட காமெடி லுக் கொடுக்கிறார்.

விஜயகாந்த் - ஜே.கே. ரித்திஷ் இருவருக்கும் பணம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியவில்லை.  ஆனால் இருவரும் பணத்தை செலவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

விஜயகாந்த் சினிமாவில் வேண்டுமானால் கேப்டனாக இருக்கலாம். அரசியலில் தொண்டனாகக் கூட முடியாது என்றார்கள். ஆனால் விருதாச்சலத்தில் ஹிட் கொடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

ஜே.கே. ரித்திஷை ஒரு பணக்காரக் கிறுக்கன். முன்பு 'சின்ன எம்.ஜி.ஆர்' என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் ஆட்டம் போட்டுவிட்டு காணாமல் போனது போல, இவரும் அம்பேல் ஆகிவிடுவார் என்றார்கள். ஆனால் 'நாயகன்' ஹிட் கொடுத்து மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.

விஜயகாந்த் நான் தனியாகவே ஜெயிப்பேன். 2011ல் நான்தான் முதல்வர் என்கிறார்.
ஜே.கே.ரித்திஷிம் ஓப்பனிங் சாங்கெல்லாம் வைத்து நானும் தனிதான் என்று சொல்லிவிட்டார்.

சும்மா வேடிக்கை காட்டுகிறார்கள் என்று முதலில் கிண்டல் செய்யப்பட்டார்கள். ஆனால் ஆளுக்கொரு ஹிட் கொடுத்து ஒருவேளை சீரியஸ் பார்ட்டிகளோ என்று அனைவரையும் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார்கள்.

இவர்கள் 'காமெடி வெடியா' அல்லது 'தொடர் சரவெடியா'?
பார்க்கலாம்!

Thursday, August 28, 2008

ஓ பக்கங்களை எழுதுவது ஞாநியா?

இந்த வாரம் மொத்தம் 5 பக்கங்களில் ஓ பக்கங்கள் - துவக்க பக்கத்தில் மட்டும் ஞாநியின் பெயர் இருந்தது, ஆனால் அடுத்த நான்கு பக்கங்களிலும் ஞாநியின் பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது அவற்றை எழுதியது ஞாநிதான் என்பதை எப்படி ஒப்புக்கொள்வது?

இப்படி ஒருவன் விவாதம் செய்தால், அதன் பெயர் அபத்தம். ஞாநி இப்படித்தான் ரஜினி விஷயத்தில் அபத்தக் களஞ்சியமாகிக் கொண்டிருக்கிறார். குசேலன் படத்தின் ஆரம்பத்தில் பூஜையின் போது "இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான்" என்று ரஜினி சொன்னாராம். (ஆமாம். சொன்னார்) ஆனால் பாடல் வெளியீட்டின் போது சொல்லவில்லையாம் (ஏன்யா சொல்லவேண்டும்? அவர் என்ன நடுவில் மாற்றிச் சொன்னாரா? விட்டால் தூங்கி எழுந்தவுடன் தினமும் பத்திரிகையில் இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று ஒரு அறிக்கை ஏன் விடவில்லை என்று கேட்பார் போலிருக்கிறது?)

பேராசைக்காரர்களும், பேராத்திரக்காரர்களும் ஒன்று சேர்ந்து தோற்றுவிட்டு இப்போது நஷ்டக் கணக்கு கும்மியடிக்கிறார்கள். ஞாநி இதற்க்காக வாராவாரம் பக்கவாத்தியம் அடிக்கிறார். குமுதம் ஒத்து வாசிக்கிறது.

மர்மயோகி ரிலீசான பின் ஓ பக்கங்களில் ஞாநி என்ன எழுதுவார்?

சுப்பிரமணியபுரம் படத்தில் ஷேவிங் செலவு கூட இல்லாமல் எல்லோரையும் தாடி வளர்க்க வைத்து, முடிவெட்டாமல் ஹிப்பித் தலையைக் காட்டி தயாரிப்பாளர் சம்பாதித்துவிட்டார். இதை விடக் கூடாது.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் சுவிட்சர்லாந்தில் போய் ஜில்லென்று டூயட் ஆடிவிட்டு வந்து, வியர்க்காமல் ரப்பர் மேக்கப் போடாமல் ஜெயம் ரவியையும், ஜெனிலாவையும் காட்டி படத்தை ஓட்டி லாபம் பார்த்துவிட்டார் தயாரிப்பாளர். இதையும் விடக் கூடாது.

அனைவரும் கமல் போல 10 வேஷம் போட்டு, ரப்பர் மேக்கப் மாற்றி படமெடுத்தால் மட்டும்தான் ஒப்புக்கொள்வேன். இல்லையென்றால் தியேட்டர் வசூலை திருப்பிக் கொடுங்கள்.

இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. ஓ.ஞாநி அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்.

கருணாநிதியைத் திட்டி எழுதி போரடித்துவிட்டது போலிருக்கிறது. இப்போது ரஜினியை திட்டி எழுத ஆரம்பித்துவிட்டார் (பேத்த ஆரம்பித்துவிட்டார் என்றும் சொல்லலாம்).


"கமல்ஹாசன் தசாவதாரத்திற்கு சுமார் 20 மாதங்கள் வேலை செய்து 10 முறை ஒவ்வொரு சீனுக்கும் ரப்பர் மேக்கப் மாற்றி மாற்றி உழைத்து சம்பாதித்ததை ரஜினி குசேலனில் 20 நாட்கள் வேலை பார்த்து பத்து விக் மட்டும் மாற்றியே அனாயாசமாக சம்பாதித்துவிட்டார்",
என்று ஓ.ஞாநி புலம்புகிறார், ஸாரி குற்றம் சாட்டுகிறார்.

"யோவ் போன படத்துல நீ பத்து வேஷம் போட்டதால நான் 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்தேன். இந்தப் படத்துல நீ ஒரு வேஷம் தான போட்டிருக்க, அதனால நான் பத்து ரூபாய்தான் தருவேன். யாரை ஏமாத்தற?", மர்ம யோகி ரிலீசாகும் போது குமுதத்தில் ஓ பக்கங்கள் இப்படித்தான் கமலை கடித்துக் குதறுவதாக இருக்கும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கிறேன்.


அதே போல சுப்பிரமணியபுரம், சந்தோஷ் சுப்பிரமணியபுரம் என்று குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து அதிக லாபம் பார்த்த தயாரிப்பாளர்கள், அதில் பங்கு கொண்ட நடிகர் நடிகைகள் ஆகியோர்அனைவரும் பதுங்கத் தயாராக இருங்கள். அடுத்து ஓ.ஞாநி உங்கள் மேல் தான் பாயப் போகிறார்.

Sunday, August 24, 2008

படம் நன்றாக இல்லையென்றால் எனக்கு தியேட்டர்காரர்கள் டிக்கெட் பணத்தை திருப்பித் தருவார்களா?

படம் ஓடாவிட்டால், கல்லா நிரம்பாவிட்டால், போட்ட பணத்தை திருப்பித் தரும்படி (வினியோகஸ்தரை விட்டுவிட்டு) ரஜினியை கேட்கும் உரிமை தியேட்டர்காரர்களுக்கு இருக்கிறது(என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

அதே போல பின்வரும் அட்டவணைப்படி தியேட்டர்காரர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது (என்று நான் நினைக்க ஆரம்பித்திருக்கிறேன்)


5ரூபாய்

நாற்றம் பிடித்த டாய்லெட்டை பயன்படுத்த வைத்ததற்க்காக
10 ரூபாய்
முன்னிருக்கையில் இருப்பவரின் தலை மறைப்பது போலவே எப்போதும் என்னிருக்கை இருந்ததற்க்காக
10 ரூபாய்
பாதிப்படத்தில் நைசாக ஏ.சி.யை ஆஃப் செய்ததற்க்காக
10 ரூபாய்
பார்க்கிங்கில் 10 ரூபாயை பிடுங்கிக்கொண்டு வண்டியின் பாதுகாப்புக்கு பொறுப்பில்லை என்றதற்க்காக
10 ரூபாய்
இன்டர்வெல்லில் தண்ணீர் பாட்டில் விற்காமல், கூல் டிரிங்ஸ் விற்று பாக்கெட்டை காலியாக்கியதற்க்காக
40 ரூபாய்
இத்தனை இம்சைகளுக்கு மேலே பெரும் இம்சையாக மட்டமான படத்திற்கு டிக்கெட் கொடுத்ததற்க்காக

ஆக மொத்தம் 5 + 10 + 10 + 10 + 10 + 40 = 85 ரூபாய் தியேட்டர் ஓனர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு திருப்பித் தர வேண்டும்.

Saturday, August 23, 2008

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும், கருணாநிதியின் நள்ளிரவு கைதுக்கும் தொடர்பு உண்டா?


எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சைவ - வைணவ மோதலில் கடலுக்குள் போன பெருமாள் விக்ரகத்துக்கும், இந்த நூற்றாண்டில் உலகை உலுக்கிய சுனாமிப் பேரழிவுக்கும் சம்பந்தம் உண்டா?

உண்டு - அப்படி இருக்க சாத்தியமுண்டு என அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து கமல் தசாவதாரத்தில் அசாத்திய திறமை காட்டியிருந்தார். கேயோஸ் - பட்டாம்பூச்சி தியரிக்கு செல்லுலாயிடில் உரை எழுதியிருந்தார்.

அது போல எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும், கருணாநிதியின் மிட் நைட் அரெஸ்டிற்கும் சம்பந்தம் இருக்க முடியுமா என்றால்? முடியும் என்பது என் பதில்.

கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் ஃபோட்டோ

எம்.ஜி.ஆருக்கும் - எம்.ஆர்.ராதாவுக்கும் என்ன பிரச்சனையோ? எதனால் சுட்டுக்கொண்டார்களோ? அதைப் பற்றியெல்லாம் தற்போது விவாதிக்க வேண்டாம். அது அவர்களுடைய Personal பிரச்சனை. ஆனால் அதுதான் தமிழக அரசியலை புரட்டிப் போட்டது என்பது உண்மை.
கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த அந்த ஒரு ஃபோட்டோ, மற்ற அனைவைரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு எம்.ஜி.ஆரை தி.மு.வில் முன்னிலைப் படுத்தியது. தி.மு.க ஜெயிக்க உதவியது.

எம்.ஜி.ஆர் அதன்பின்னர் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்தது முதல்வரானது அனைவரும் அறிந்த வரலாறு. அவருடைய திரைப்பட கதாநாயகியாக இருந்த ஜெயலலிதா அவருடைய அரசியல் நாயகியாகவும் உருவெடுப்பார் என்பது அப்போது யாரும் யோசித்துப்பார்க்காத விஷயம்.

ஜெயலலிதாவை இழுத்து தள்ளிய காட்சி
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவருடைய மனைவி வி.என்.ஜானகியை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். கடுப்பான எம்.ஜி.ஆரின் உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை ஊர்வல வண்டியில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். அது ஜெயலலிதாவின் அதிர்ஷ்டம், வி.என்.ஜானகியின் துரதிருஷ்டம். அந்த காட்சி தூர்தர்ஷனில் நேரடிக் காட்சியாக ஒளிபரப்பானது. பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பாமரர்களும் உச்சுக்கொட்டினார்கள். அவ்வளவுதான். ஜெயலலிதா மற்ற அனைவரையும் (அப்போது பவர்ஃபுல்லாக இருந்த ஆர்.எம்.வீரப்பனையும்) பின்னுக்குத் தள்ளிவிட்டு, அ.தி.மு.கவில் முன்னுக்கு வந்துவிட்டார்.

அதன் பின்னர் ஜெயலலிதா முதல்வர் ஆனதும், கட் அவுட் வைத்ததும், பதவி இழந்ததும் மீண்டும் பதவியைப் பிடித்தார் என்பதும் இன்னொரு வரலாறு. அந்த வரலாற்றில் ஒரு பக்கம்தான் கருணாநிதியின் நள்ளிரவுக் கைது.

அன்று எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டிருக்காவிட்டால் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிற அளவுக்கு பிரபலமாகியிருக்க மாட்டார்.
எம்.ஜி.ஆரின் திரைப்பட நாயகி அரசியல் நாயகி ஆகியிருக்க மாட்டார்.
அவர் கருணாநிதியை கைது செய்திருக்க மாட்டார்.

இது கேயோஸ் தியரியை வைத்து, தமிழக அரசியலை நான் பார்க்கும் பார்வை.

Wednesday, August 20, 2008

நானே கேள்வி - நானே பதில்

இது ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்டது தான்
பொதுமேடையில் "அடிப்பேன் உதைப்பேன்" என்று பேசலாமா?

யாராக இருந்தாலும், என்ன சரியான காரணங்கள் இருந்தாலும் பொது மேடையில் அப்படி பேசுவது தவறு. சினத்தின் உச்சியில் நின்று கொண்டு இதுபோல உறுமுகிற எவரும், சினத்திற்கு தான் அடிமையாவது மட்டுமல்லாமல், அந்தப் பேச்சைக் கேட்கிறவர்களையும் நிதானம் இழக்க வைக்கிறார்கள். ஒருவன் கோபப்படுவதும், அவன் பேச்சைக் கேட்டு மற்றவர்கள் (எதிரிகள் + நண்பர்கள்) கோபப்படுபவதும் உடனடியாக நடந்துவிடும். மலைமேல் இருந்து கீழே விழ நேரமாவதில்லை.

பொதுமேடையில் "மன்னிப்பு" கேட்கலாமா?
யாராக இருந்தாலும், என்ன சரியான காரணங்கள் இருந்தாலும் பொது மேடையில் மன்னிப்பு கேட்பதற்கு ஒரு நேர்மை வேண்டும். மனதளவில் மிகவும் தைரியமானவருக்கே இது சாத்தியம். தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்பவரால் மட்டுமே பொது மேடையில் மன்னிப்பு கேட்க முடியும். அவனுடைய மன்னிப்பை தைரியம் என்று உணர்ந்து கொள்ளவும், அதனை பின்பற்றி மற்றவர்கள் (எதிரிகள் + நண்பர்கள்) திருந்தவும் நாட்கள் பிடிக்கும். சிகரங்களைத் தொட எப்போதுமே நிறைய காலம் ஆகும்.

Sunday, August 17, 2008

(இளம்)பெண்கள் ஏன் பிளாகுகளில் தென்படுவதில்லை

பெரும்பாலும் பெண்கள் சாட்டிங் செய்கிறார்கள் அல்லது இ-மெயிலுகிறார்கள். ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற கண்ணுக்குத் தெரியாத நண்பர்கள் சந்திப்புகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் (Blogs) வலைப்பூக்களில் அதிகம் காணப்படுவதில்லை. அப்படியே வந்தாலும் ரொம்ப சீரியஸ் பா(ர்)ட்டிகளாக இருக்கிறார்கள்.



நான் யூகித்த டாப் 5 காரணங்கள்

  • பிளாகுகளில் ஜொள்ளு கம்மி - லொள்ளு அதிகம்
  • இளசுகளுக்கு பிடிக்காத அரசியல் அதிகம், அழகியல் கம்மி.
  • டீன் ஏஜ் நடமாட்டம் அல்லது கல்லூரிகளின் இளம் வாசனை பிளாகுகளில் கம்மி
  • பிளாகுகளில் காதல் செய்பவர்களை விட, மோதல் செய்பவர்கள் அதிகம்
  • கடைசியாக பிளாகுகளில் சிந்திப்பவர்கள் அதிகம், மற்ற இடங்களில் வெற்று சந்திப்புகள் அதிகம்
நீங்க என்ன சொல்றீங்க?

Saturday, August 16, 2008

நானே கேள்வி - நானே பதில்

61வது சுதந்திர தினத்தில் நான் எடுத்த உறுதி மொழி என்ன?

தமிழன், கன்னடன், மலையாளத்தான், தெலுங்கன், சிங்கு, ஹிந்திக்காரன் என்று தனித் தனி அடையாளங்கள் இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் தவிர்க்க முடியாது.

ஆனாலும் தமிழனை கன்னடன் வெறுப்பதையும், பதிலுக்கு கன்னடனை தமிழன் வெறுப்பதையும் தவிர்க்கலாம். இது நாடு முழுவதும் வெவ்வேறு மொழி பேசும் அனைவருக்கும் பொருந்தும். வல்லரசாக மாறிவரும் இந்தியா, நல்லரசாகவும் குடியரசாகவும் திகழ எல்லலோருமே இணக்கமாக வாழ வேண்டியது அவசியம்.

61வது சுதந்திர தினத்தில் நான் எடுத்த முடிவு இதுதான். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே மொழியை காரணமாக வைத்து மனிதர்களையும், மண்ணையும் நான் வெறுக்க மாட்டேன்.

Thursday, August 14, 2008

நானே கேள்வி - நானே பதில்

ஞானியின் 'ஓ' பக்கங்கள் என்றால் என்ன?

  • வாசகர்களை கருணாநிதிக்கு எதிராக சிந்திக்கத் தூண்டும் பக்கங்கள்.
  • அது முடியாமல் போகும்போது, அதையே இந்த வார ஆச்சரியம் என்று அறிவித்துக் கொள்ளும் பக்கங்கள்.
  • வாரா வாரம் நடிகைளின் ஆடை விலகிய படங்களைக் கொண்டு பக்கங்களை நிரப்பும் குமுதத்தை விமர்சிக்க திராணியில்லாத, குமுதம் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு எழுதப்படும் பக்கங்கள்.
  • குமுதத்தை தவிர வேறு எங்கு எழுதினாலும் போணியாகாத பக்கங்கள்.