Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, October 18, 2014

டிபிக்கல் ஜெயலலிதா ஸ்டைலில் Grand entry!

ஜெயலலிதா கைதானவுடன் பிரியாணி பொட்டலத்துக்காக பலபேர் நடித்தார்கள்  என்பது உண்மை. ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்தவுடன் தானாகவே பலபேர் தெருக்களில் கூடினார்கள் என்பதும் உண்மை.

ஜெயலலிதா அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை நிருபிக்க இனிமேலும் நீதிமன்றங்களில் வழக்கு நடக்கும். ஆனால் மக்கள் செல்வாக்கையும் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை எல்லா மன்றங்களும் ஒப்புக்கொள்ளும்.

தெருவெங்கும் கட்சிக்காரர்களும், பொது மக்களும் மழையில் நனைந்தபடி ஆரவாரமாக வரவேற்ற இந்த Grand entry எதிர்பார்த்ததுதான். டிபிக்கல் ஜெயலலிதா ஸ்டைல்.

இருபத்தி ஒரு நாள் சிறை வாசம் தந்த களைப்பை போயஸ் கார்டன் திரும்பிக்கொண்டிருக்கும்போது வழியிலேயே ஜெயலலிதா மறந்து உற்சாகமாகியிருப்பார். நடுவழியில் ஒரு பிள்ளையாரை வழிபட்டது அவர் ரிலாக்ஸ் ஆக ஆரம்பித்திருக்கிறார் என்பதன் அறிகுறி.

ஜனநாயக நாட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் செல்வாக்கு அவசியம். ஆனால் மக்கள் செல்வாக்கு மட்டுமே போதாது, சுய ஒழுக்கமும் தேவை என்பதை அதே ஜனநாயகம் ஜெயலலிதாவுக்கு கடுமையாக உணர்த்தியிருக்கிறது.

ஜெயலலிதா இன்றைக்கு தோற்றிருக்கலாம். இடைக்கால ஆறுதல் பெற்றிருக்கலாம். நாளை வெல்லவும் கூடும். ஆனால் தனக்கு எது நடந்தாலும் அதை தமிழக மக்களின் பிரச்சனை என்பது போன்ற அரசியல் மாயங்களை உருவாக்குவதில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒருவருக்கொருவர் சளைக்காத தந்திரசாலிகள். அதைத்தான் இன்றைய தமிழக அரசியல் நமக்கு உணர்த்துகிறது. இதுதான் மற்ற எல்லாவற்றையும் விட மாபெரும் உண்மை.

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வெல்கம் பேக் ஜெயலலிதா! 

Sunday, October 5, 2014

பள்ளிக் குழந்தைகளின் மனதில் திணிக்கப்படும் ஊழல் அரசியல்

ஜாமீன் போராட்டத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையாம். யார்? யாரைக் கேட்டு எடுத்த முடிவு இது?
என்ன நடந்தாலும் சரி, சாராயக் கடைகளை மூடமாட்டோம். ஆனால் பள்ளிக்கூடத்தை மூடுவோம் என்கிற இந்த அத்துமீறலைச் செய்வது யார்?
ஊழலை ஆதரிப்பது, எதிர்ப்பது போன்று நடிப்பது போன்ற அபத்தங்களுக்கும், அசிங்கங்களுக்கும் நாம் அனைவரும் பழகிவிட்டோம். ஆனால் அதை அடுத்த தலைமுறை குழந்தைகளின் மனதில் திணிக்க முயற்சிக்கும் இந்த அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நம் வீட்டுக் குழந்தைகளின் படிப்பில் தலையிட்டு, அவர்களை தங்கள் அநாகரீக அரசியல் விளையாட்டுக்கு உட்படுத்தும் இந்தச் செயல் சர்வாதிகாரமானது. இந்த அசிங்கத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் செய்வது யார்? யாரோவா? அதிமுக என்ற கட்சியா? தமிழக அரசா?
ஜெயலலிதாவுடைய கைதும், அதைத் தொடர்ந்து நடக்கின்ற கலவரங்களும், ஊழல்களை நியாயப்படுத்திப் பேசுகிற ஒரு பரவலான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே அசிங்கம். இப்போது இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கள்ளம் கபடமில்லாத பள்ளிக் குழந்தைகளின் படிப்பையும், மனதையும் கெடுக்கிற அபாயத்தை நோக்கி ஏவப்பட்டிருக்கிறது. இதனை அனுமதிக்கவே கூடாது.
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.
ஜெயலலிதாவுக்கு தெரியாமல்தான் இந்த அத்துமீறல் நடைபெறுகிறது என்று நம்புகிறேன். அவருக்குத் தெரிந்தால் நிச்சயம் இதனை அனுமதிக்க மாட்டார் என்பது என் திடமான நம்பிக்கை. நிச்சயம் அவர் இந்த அளவுக்கு மோசமான முடிவுகளை ஆதரிக்கிற பெண் அல்ல.
ஒருவேளை இது ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் நடக்கிறது என்றால், இது கடுமையான குற்றம். அதுவும் சாதாரணக் குற்றமல்ல. அவர் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை விட மாபெரும் குற்றம். சொத்துக்குவிப்பை விட இந்த அராஜக அதிகாரக் குவிப்பு மிக மிக தவறானது, உடனே தண்டிக்கபடக் கூடியது.
நாம் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பள்ளிகளை மூடச் சொல்லும் இந்த அராஜக முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
நம் குழந்தைகளை அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து பாதுகாக்க நாம் உடனே ஒன்றுபட வேண்டும். வரும் 7ம் தேதி எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் பள்ளிகள் இயங்க வேண்டும்.
பள்ளிகளில் அரசியல் பாடமாக இருக்கலாம். ஆனால் அரசியல் மேடைகளில் பள்ளிகளை நடத்த அனுமதிக்கவே கூடாது.
டியர் மிஸ்டர் பன்னீர்செல்வம்! குனிந்தது போதும். கொஞ்சம் நிமிருங்கள். நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர் என்பதை உணர்ந்து இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்துங்கள்.
உங்களுக்கு உங்கள் தலைவியின் விடுதலை எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட எங்களுக்கு எங்கள் குழந்தைகளின் கல்வி முக்கியம்.

Sunday, September 28, 2014

ஜெலலிதாவை ஆட்டிப் படைக்கும் மீடியாக்கள்!

உண்மையில் இன்று சிறைக்குச் சென்றிருப்பது ஜெயலலிதா அல்ல. மீடியாக்கள் உருவாக்கி வைத்திருந்த ஜெயலலிதா என்கிற பிம்பம். ”இதுதான் நான் என்று” ஜெயலலிதாவே நம்பிவிட்ட அளவுக்கு சித்தரிக்கப்பட்ட பிம்பம் அது.

ஆரம்பத்தில் ஜெயலலிதா என்ற பெண்ணுக்குள்ளும், அரசியல்வாதிக்குள்ளும் பல நியாயங்களும், நம்பிக்கைகளும் துளிர்த்திருந்தன. ஆனால் அவற்றை நசுக்கிவிட்டு பழிவாங்குதலையும், சர்வாதிகாரத்தையும் அரக்கத்தனமாக வளர்த்தது மீடியா. கருணாநிதி & கோவை முன்னிறுத்தி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு சுற்றியிருப்பவர்களையும் எரிக்கும் நெருப்பாக அவரை எப்போதும் தணலிலேயே வைத்திருந்தது, இன்னமும் வைத்திருக்கிறது.

ஜெயலலிதாவை கருணாநிதிக்கு எதிராக, அவரை விட வலிமையாக சித்தரித்த வரை ஓகே. ஆனால் அவர் எதைச் சொன்னாலும் நியாயம், தப்பே செய்தாலும் சரி, அவரை எவரும் தட்டிக் கேட்க முடியாது, கேட்கக்கூடாது என்கிற பிம்பத்தை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர் இந்த நாட்டை விட, சட்டத்தை விட, அதன் வலிமையைவிட சர்வ வல்லமை பெற்றவர் என்று சித்தரித்து அவரையும், அவரது ஆதரவாளர்களையும் ஏன் எதிரிகளையும் நம்ப வைத்து ஏமாற்றியது மீடியா.

ஜெயலலிதா என்ற பெயரில் மீடியாக்கள் நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவின் சீஸன் 2 இது. சீஸன் 1 ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி. ரியாலிட்டி ஷோக்களில் திடீரென எவருமே எதிர்பாராத சம்பவங்கள் இடம் பெறும். அதே போல சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை என்பது ஜெயா ஆதரவு மீடியாக்களே எதிர்பாராத டிவிஸ்ட்.

அதனால்தான் இந்த வழக்கு தீர்ப்புக்கு வந்ததும் அத்தனை மீடியாக்களும் மௌனம் காத்தன. இது பற்றி செய்தி வெளியிடாமல் தவிர்த்தன. அதாவது தாங்களே தோற்பதாக நினைக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் உருவாக்கிய பிம்பம் சரிவதில் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் . . .

வெற்றிகரமாக நடந்து வரும் ஒரு ஷோவை அவ்வளவு எளிதில் கை விட்டுவிட மாட்டார்கள். எனவே நாம் கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு இன்னும் பல டிராமாக்கள் நடத்தப்படும் என்று நான் திடமாக நம்புகிறேன். மீடியாக்களின் ஆட்டம் இன்னும் முடியவில்லை.

ஜெயலலிதா மீண்டு வர வேண்டும் என்றால் மீடியாக்களின் இந்த கள்ள ஆட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி என்பது எதிரிகளை வெல்வது மட்டுமல்ல, தன்னைத் தானே வெல்வதிலும் இருக்கிறது. ஜெயலலிதா கருணாநிதியை வென்று காட்டிவிட்டார். ஆனால் தன்னைத் தானே வெல்வதில் தோற்றுக்கொண்டே இருக்கிறார். எதிர்பாராத இந்த சிறை அனுபவம் அவருக்கு அந்த பக்குவத்தை தரும். புத்தம் புதிதாக தன்னை மீட்டுக்கொண்டு மீண்டும் வருவார் என்று நம்புகிறேன்

Thursday, August 16, 2012

ஃபேஸ்புக் நண்பர் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதம்

வணக்கம் கலைஞர் அவர்களே, 

பல தலைமுறைகள் கண்ட நீங்கள், இன்றைய இணைய தலைமுறையையும் நேரடியாக சந்திக்க வந்ததை பலத்த கைதட்டல்களுடன் வரவேற்கிறோம்.

சரியோ, தவறோ இயன்றவரை பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்தித்து உங்கள் கருத்துகளை எங்களிடம் கூறிவருகி
றீர்கள்.

அரசியல் களம் பல கண்டது உங்கள் பேனா! நாட்டின் தலையெழுத்தை புரட்டிப் போட்ட பல விவாதங்களை துவக்கியும், நடத்தியும் வைத்திருக்கிறது உங்கள் பேனா! உங்களுடைய அனுபவம் வாய்ந்த பேனா, இனி எங்களுடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லும் என்பது இனிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

உங்கள் மீதும், உங்கள் இயக்கம் மீதும் இங்கே எத்தனையோ விமர்சனங்கள் உண்டு, ஆதரவுக் குரல்களும் உண்டு. இவற்றையெல்லாம் சமாளிக்கத்தான் நீங்கள் இணையம் வந்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

உங்களை நாங்கள் கேள்வி கேட்க முடியுமா? என தயக்கமும், எங்கள் விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? என அச்சமும் எங்களில் சிலருக்கு இருக்கிறது. அவற்றை களைவீர்கள், எங்களுடன் கலந்து உரையாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதுகிறேன்.

வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வையும் உங்கள் பேனா நுனியில் வைத்திருப்பவர் நீங்கள். கட்டற்ற சுதந்திரம் தந்திருக்கும் இணையம், உங்களைப் போன்ற மாபெரும் தலைவர்களையும் சந்திக்க, உரையாட வாய்ப்பு தந்திருக்கிறது. இதனை நாங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்வோம்.

உங்களைத் தொடர்ந்து, உங்களைப் போன்ற இதர தலைவர்களும் இணையத்திற்கு வர வேண்டும். விவாதங்களில் ஈடுபட வேண்டும். அதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும். மக்களுக்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் இதனால் குறையும்.

அப்படி ஒரு நிலையை நீங்கள் விரைவில் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் ஒரு முறை உங்களை இணைய உலகிற்கு அன்புடனும், ஆரவாரத்துடனும் வரவேற்கிறேன்.

இப்படிக்கு உங்கள் ஃபேஸ்புக் நண்பன்.
(ஃபேஸ்புக் எல்லோரையும் இப்படித்தான் அறிமுகம் செய்து வைக்கிறது)

Saturday, July 14, 2012

கவுஹாத்தி சம்பவம் சென்னையிலும் நடக்கும் அபாயம் - No to 24x7 Bar


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,

அசாம் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.

ஒரு இளம் பெண்ணை போதையில் இருந்த 20 முரட்டு இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை  படம் பிடித்த செய்தி நிறுவன காமிராவுக்கு போஸ் கொடுத்தபடி தங்களின் கொடும் செயலை தொடர்ந்தார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது எல்லாவற்றுக்கும் அடிப்படை, குடி போதை!

இனி 24 மணி நேரமும் மது சப்ளை செய்யலாம், பார்களை திறந்து வைக்கலாம், என்று சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுமதி தந்திருக்கிறீர்கள். வருமானம் பெருகும், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினர் மது அருந்த வசதியாக இருக்கும் என்று ஒரு அற்ப காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

குடித்து சீரழியும் தமிழக இளைஞர்களை விட, குடிக்க முடியாமல் அவதிப்படும் வெளிநாட்டினரின் மேல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கரிசனம் வியப்பளிக்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரமும் மது கிடைக்குமானால், கவுஹாத்தி சம்பவங்கள் தமிழகத்திலும் நிழக வாய்ப்பு உள்ளது. எனவே உடனே 24 மணி நேர மது சேவையை நிறுத்த ஆணையிடுங்கள்.

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். 24 மணி நேர பார்களுக்கு பூட்டு போடுங்கள்!

வெளிநாட்டினர்கள் எப்படியாவது குடித்துக் கொள்வார்கள். தமிழக இளைஞர்களை போதையிலிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.


Monday, July 2, 2012

கல்யாண மண்டப புரோக்கராக அவதாரம் எடுத்திருக்கும் ஜெ.வுக்கு ஒரு கடிதம்

மாண்புமிகு கல்யாண மண்டப புரோக்கரம்மாவுக்கு வணக்கம்,


ஒரு புத்தகத்தை இருமுறை வாசிப்பதை விட, ஒரு கல்யாணத்தையே இருமுறை செய்வது நல்லது என்று சமீபத்தில் நடந்த 1006 கல்யாண வைபவத்தில் நிரூபித்தீர்கள். 

அதே போல, நூலகங்களுக்குப் போய் புத்தகம் படிக்கும் ஆர்வலர்களை விட, நூலகங்களில் கல்யாணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் அதிகம் என நீங்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை தற்போது திருமண மண்டபமாக மாற்றி வாடகைக்கு விட்டிருப்பதன் மூலம், தமிழகத்தில் தலை சிறந்த கல்யாண மண்டப புரோக்கராக உயர்ந்திருக்கிறீர்கள்.

இதே போல, உங்கள் போயஸ் கார்டன் வீட்டின் ஒரு பகுதியையும், கொட நாடு கெஸ்ட் ஹவுஸின் ஒரு பகுதியையும் திருமண மண்டபங்களாக அறிவித்துவிட்டால், மண்டபம் கிடைக்காமல் திண்டாடும் தமிழகம் உங்களை வாழ்த்தும். ஒரே ஆண்டில், நூறாண்டு கல்யாண மண்டப புரோக்கர்களையும் மிஞ்சியவர் என்ற புகழும் உங்களுக்கு கிடைக்கும்.

இப்படிக்கு,
நூலகங்களில் கல்யாண மண்டபங்களை விரும்பாத ஒரு சாதாரணன்.

(பின் குறிப்பு - The Hinduவில் வெளியான ஒரு செய்திக் குறிப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது)

Wednesday, March 21, 2012

கூடங்குளத்தை போர்க்களமாக்கும் ஜெ. போலீசுக்கு ஒரு கடிதம்!

வான் படை, தரைப் படை, கடல் படை என வித விதமான படைகளுடன் கூடங்குளத்தில் போய் இறங்கி, ஒரு போருக்கு ஆயுத்தமாகியிருக்கும் தமிழக போலீசாருக்கு ஒரு தகவல்.

கூடங்குளம் என்பது அயல் நாடு அல்ல. அங்கிருப்பவர்களும் நம் மக்களே...
அவர்கள் உங்களை போருக்கு அழைக்கவில்லை!

அவர்கள் தங்கள் அச்சத்தையும், உரிமையையும் முன்னிறுத்தி அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

அணு உலை எதிர்ப்பு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சனை அல்ல. இன்றைய சிறிய தேவைக்காக, நாளைய சமுதாயத்தை அழிக்கின்ற அரசுகள் உருவாக்குகின்ற பிரச்சனை.

கூடங்குளத்தில் உங்கள் குடும்பத்தினர் எவராது இருந்தால், இந்தப் போராட்டம் அவர்களுக்கும் சேர்த்தே நடத்தப்படுகிறது.

எனவே அவர்களை பயமுறுத்தி, கலவரம் உண்டாக்கி உங்கள் படைபலத்தை சோதிக்காமல், அமைதிகாக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!



இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இடிந்த கரை மக்களுக்கு மின்சாரம், உணவு, தண்ணீர் இவை மூன்றையும் தடை செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பெண்களும், குழந்தைகளும் உட்பட மக்கள் அவதிப்படுகிறார்களாம்.

அருகில் உள்ள இலங்கையில் சர்வாதிகாரி ராஜபக்ஷே இதே அடக்குமுறையைத்தான் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அவிழ்த்துவிட்டார். 
தமிழகத்தின் ராஜபக்ஷேவாக தன் கோரப்பற்களை காட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு மண்டியிட்டு,  நீங்களும் அதை கொடுமையை உங்கள் சொந்த சகோதர சகோதரிகளுக்குச் செய்கிறீர்கள். மனம் நிறைய கோபத்துடனும், அதைவிட அன்புடனும் உங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்து ஒரு வேண்டுகோள்!

அதிகாரத்தின் பெயரால், துப்பாக்கி முனையில் மக்களை துன்புறுத்தும் உங்கள் ஈனச் செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

மின் சேகரிப்பு திட்டம் - தமிழகஅரசுக்கு ஒரு யோசனை

ஜெயலலிதா செய்ததிலேயே உருப்படியானது மழை நீர் சேகரிப்பு திட்டம்தான்.  இன்று வரையில் இந்த திட்டம் மக்களும், அரசும் சேர்ந்து வெற்றிகரமாக மழை நீரை சேகரிக்க, உதவுகிறது. இதே பாணியில் மின்சாரத்தையும் சேகரிக்கலாம்.

ஆறரை கோடி மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில், குறைந்தபட்சம் ஒரு கோடி குண்டு பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சி.எஃப்.எல் குழல் பல்புகளை பயன்படுத்தினால், உடனடியாக 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.


இதை நான் சொல்லவில்லை. பதவிக்கு வந்தவுடன், ஜெயலலிதா அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பிலேயே இது இருக்கிறது.  இதை நிறைவேற்றினாலே, 500 மெகாவாட் மிச்சமாகிவிடும். இந்த தகவலும் அதே கொள்கைக் குறிப்பிலேயே இருக்கிறது. மிச்சப்படுத்துவதே உற்பத்திக்கு சமம், எனவே அணு உலைக்குப் பதிலாக இதை பரிசீலிக்கலாம்.


ஆனால் ஜெயலலிதாவோ போலீஸ் மிரட்டல்களை வைத்துக் கொண்டே ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இருக்கட்டும் அது அவர் ஸ்டைல். சங்கரன் கோவிலில் கால்கடுக்க நின்று அலுத்துவிட்டது போலிருக்கிறது. தற்போது கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்ட தமிழக போலீசார் கூலிங்கிளாஸை மாட்டிக் கொண்டு, சந்துக்கு சந்து நின்று கொண்டிருக்கிறார்கள். 


இப்படி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அணு உலையை உடனே இயக்கினாலும் மின்சார உற்பத்தியாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் என்கிறார்கள். கூடங்குளத்தின் உச்சபட்ச  உற்பத்தி 1000 மெகாவாட். ஆனால் தற்போது 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யுமாம். அதில் கிட்டத்தட்ட 50 மெகாவாட்டை கூடங்குளமே செலவிழித்துவிடுமாம். மீதி இருப்பது 350 மெகாவாட்தான். அதை கூடங்குளத்தில் இருந்து மாநிலத்தின் மற்றபகுதிகளுக்கு எடுத்து வரும்போது, வழியிலேயே 70 மெகாவாட் லீக் ஆகிவிடுமாம். மீதி உள்ள 280 மெகாவாட்டில் பாதியை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். எனவே இத்தனை அமர்க்களத்திற்கும் பிறகு தமிழகத்துக்கு கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான்.

எனவே அணு உலைக்கு பதிலாக, ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச சி.எஃப்.எல் பல்புகளை வழங்கலாம். வீட்டுக்கு வீடு குண்டு பல்புகளை தூக்கி எறிந்துவிட்டு, சி.எஃப்.எல் பல்புகளை பயன்படுத்தச் சொல்லலாம். இதனால் நமக்கு 500 மெகாவாட் மிச்சமாகிவிடும்.



இந்த தகவல்கள் அனைத்தையும் தனது ஓ பக்கங்களில் ஞாநி அழகாக எழுதியுள்ளார். ஜெயலலிதாவுக்கு அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அர்த்தமுள்ளவை. ஜெயலலிதா பதில் சொல்லப்போவதில்லை என்றாலும், நீங்கள் அக் கேள்விகளை தெரிந்து கொள்வதில் தவறில்லை. இங்கே சொடுக்குங்கள்!



Monday, March 19, 2012

சங்கரன் கோவிலும் அடுத்த பிரதமரும்

சங்கரன் கோவில்!
மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு சாதாரண இடைத்தேர்தல். ஆனால் இது இந்திய அளவில் அரசியல் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய சில அம்சங்களை உள்ளடக்கியது.

முதலில் தேர்தல் நடைபெறும் சூழலைப் பார்ப்போம். விலைவாசி, மின்சாரப் பற்றாக்குறை என மக்களின் கடும் அதிருப்தியுடன் அதிமுக தேர்தலை சந்திக்கிறது. எனவே ஏற்கனவே இத் தொகுதியை தன் வசம் வைத்திருக்கும் அதிமுக, இந்த தேர்தலை அது வென்றே ஆக வேண்டும். இல்லையென்றால் இந்த ரிசல்ட் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். இதை வென்றால் மட்டுமே கூட்டணிக் கட்சிகள் அதிமுகவின் சொல்பேச்சை கேட்கும்.

பிரதான எதிர்கட்சிகள் எல்லாமே இம்முறை தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன. ஆளும்கட்சியை அதிகார பலம், பண பலத்தை மீறி இவர்களால் வெல்ல முடியாது. சிதறிக்கிடப்பதால் அதிமுகவுக்குதான் லாபம். ஆனால் தங்கள் சுய பலம் என்ன என்பதை ஓரளவுக்கு அறியவும், எதிர்காலத்தில் தங்களுக்குள்ளோ அதிமுகவுடனோ கூட்டணி அமைத்தால் கடுமையாக பேரம் பேசவும் இவர்களுக்கு உதவும்.


பாராளுமன்றத்துக்குள் குறைந்தபட்சம் 30 எம்பிக்களுடன் நுழைவதற்கான முன்னோட்டமாக அதிமுக இதைப் பார்க்கிறது. அகில இந்திய அளவில் தேர்தல் நடக்கும்போது, காங்கிரஸ் தோற்று பிஜேபி ஆட்சியை பிடிக்கக்கூடிய நிலை வந்தால், யார் பிரதமர் என்ற மோதல் அங்கே அதிகரிக்கும். அகில இந்திய அளவில் நரேந்திர மோடிதான் இப்போதைக்கு பிரபலம். ஆனால் அத்வானி கோஷ்டி மோடியை குஜராத்துக்குள்ளேயே முடக்க முயற்சிக்கும். ஏனென்றால் அத்வானிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. ஆனால் அவருக்கு கட்சியில் அவ்வளவாக ஆதரவு இல்லை.

இந்த சமயத்தில் 30 எம்பிக்களுடன் ஜெயலலிதா தனது ஆதரவைத் தந்து, தன்னை பிரதமாராக முன்னிறுத்தினால் பிஜேபி ஆதரிக்குமாம். இது பத்திரிகையாளர் சோவின் கணக்கு. எனவே தேவகவுடா பிரதமர் ஆனது போல ஜெயலலிதாவும் பிரதமராவார் என்று சோ தலைமையில் ஒரு அரசியல் சாணக்ய குழு ஒன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.  இந்தப் பிரச்சாரம் ஜெயிக்க வேண்டுமென்றால் சங்கரன் கோவிலில் அதிமுக ஜெயித்தே ஆக வேண்டும்.

இனி திமுகவுக்கு வருவோம். இலங்கையில் மனித உரிமைப் பிரச்சனை நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டிருக்கிறது. ஐ.நா சபையில், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் உட்பட சொல்ல ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்திய அரசு இன்னும் இது தொடர்பாக முடிவெடுக்கவில்லை. ஒரு வேளை அதிமுக தோற்றால், திமுக உடனே தனது வாபஸ் ஆயுதத்தை கையிலெடுக்கும். வழக்கம்போல பூச்சாண்டி காட்டுவதாக அல்லாமல் உண்மையிலேயே வாபஸ் வாங்கும். காங்கிரஸ் ஆட்சி கவிழும்.

உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் மூன்றாவது அணி என்ற ஒரு திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார். திமுக அதற்கு எண்ணெய் ஊற்றி அதே தேவகவுடா ஃபார்முலாவில், முலயாம்சிங்கை பிரதமராக முன்னிறுத்தி, மாநில அளவில் வலிமையான கட்சிகளை இழுத்து,  3வது அணிக்கு முயற்சிக்கும்.

(பதிவை எழுதியபின் இரண்டாவது அப்டேட்...  திமுகவின் பயமுறுத்தல் இந்த முறை வேலை செய்துவிட்டது. உடனடி தேர்தல், 3வது அணி, இலங்கை விவகாரத்தில் தமிழக கட்சிகளின் அழுத்தம், இவற்றின் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.)

இதனால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடுமா என்று கேட்காதீர்கள். அதைப்பற்றி யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை. அதே போலத்தான் கூடங்குளம் பிரச்சனையும். அதிமுக ஓட்டு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே  வழவழா கொழ கொழவாக தேவையா இல்லையா எனச் சொல்லாமல் இது வரை அரசு மழுப்பிக் கொண்டிருக்கிறது.

(இது முதல் அப்டேட்... இந்தப் பதிவை எழுதியபின் வந்த செய்தி.தமிழக அமைச்சரவை கூடங்குளத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்தபின் இந்த அறிவிப்பு வந்திருப்பதை கவனிக்கவும்)

ஜெயித்தால் போராட்டக்காரர்களை இந்த அரசு சிறையில் தள்ளும். ஆனால் இன்றே பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுமானால், போராட்டக்காரர்களுடன் வெட்கமே இன்றி மீண்டும் சாதாரணமாகப் பேசும்.

எனவே சங்கரன் கோவில் சாதாரண கோவிலல்ல... அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விகளை துவக்கி வைத்திருக்கும் அரசியல் கோவில்.

Saturday, March 10, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - இந்தியா ஆதரிக்குமா?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் கண்டு கொள்ளாத எந்த அரசியல் செய்தியையும் தமிழர்களும் கண்டு கொள்வதில்லை. சமீபத்திய உதராணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு பற்றிய செய்தி.  இவர்கள் இருவரின் அறிக்கையைத் தொடர்ந்து இந்தச் செய்தி டீக்கடை மற்றும் சலூன்களில் விவாதிக்கப்படும் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு என்றால் என்ன?
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எனச் சொல்லிக் கொண்டு, இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது உலகம் அறிந்த செய்தி. தற்போது இந்தச் செய்திகள் குற்றச்சாட்டுகளாக உருப்பெற்று இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

ஒரு நாட்டிற்கு எதிரான இது போன்ற குற்றச்சாட்டுகளை அனுமதிப்பதற்கும், விசாரிப்பதற்கும் நடைபெறும் அமர்வுதான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு. மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாதிக்கு மேல், அதாவது 24 நாடுகளின் ஆதரவை பெற்றுவிட்டால், குற்றம் சுமத்தப்படும் நாட்டின் மீது, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும் என்பது விதி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
தற்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.  அதே நேரத்தில் இலங்கை அரசு, தமக்கு எதிரான இந்த தீர்மானத்தை தோற்கடிக்க தனது ஆதரவு நாடுகளிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 22 நாடுகள் இலங்கைக்கு எதிராக திரண்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு நாடுகள் ஆதரவு தந்துவிட்டால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் வலுப்பெறும் என்பதும் வதந்திகள்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது சந்தேகமே!
இந்தியா இலங்கைக்கு எதிரான நிலை எடுக்குமா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வரவில்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன.

ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது. இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குதான் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒரு பத்திரிகை பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடைய நம்பிக்கையில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. காரணம் அமெரிக்காவால் நடத்தப்படும் சர்வதேச அரசியல் பிண்ணனி.

இந்த உலகத்தின் நாட்டாமையாக தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு எந்த தார்மீக அருகதையும் இல்லை. உலகம் முழுக்க மனித உரிமைகளை மீறி வருவது அமெரிக்காதான். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டுக்கு நெருக்கடி தந்தால், அந்தப் பிராந்தியத்தில் தனது வாலை நுழைக்கிறது என்று அர்த்தம். அதே போல ஆசியாவில் பொருளாதார வல்லரசுகளாக உயர்ந்து வரும் இந்தியாவையும், சீனாவையும் அருகில் இருந்து அதட்ட அதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. தற்போது அது தேர்ந்தெடுத்திருக்கும் இடம் இலங்கை. எனவே அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு நிச்சயம் சீனா வாக்களிக்காது. இந்தியாவும் வாக்களிக்காது. ஆனால் தமிழக அரசியல் மற்றும் இலங்கை அரசியல் நெருக்கடி காரணமாக இந்தியா நடுநிலை எடுக்கலாம்.

தான் மூக்கை நுழைக்க வசதியாக, அமெரிக்கா இதை சர்வதேச மனித உரிமைப் பிரச்சனையாக்கப் பார்க்கிறது. ஆனால் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்பது இலங்கை ஆதரவு நாடுகளின் கருத்து.

பாக், பங்களாதேஷ் போர்களின் போதும், காஷ்மீர் பிரச்சனைகளிலும் இந்தியாவின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. எனவே இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், எதிர்காலத்தில் இலங்கை சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படாமல் போகலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, சீனா இரண்டையுமே சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல?
மிக முக்கியமாக இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையின் மேல் பகிரங்க குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் ஒரு கண்காணிப்பு குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு LLRC - Lessons Learnt and Reconciliation Commission என்று பெயர். உள்நாட்டுப் போரால் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே இந்தக் குழுவின் நோக்கம். அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தக் குழு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுதான் உள்ளது.

ராஜபக்ஷேவை இந்த தீர்மானம் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. இலங்கையின் மேல் எந்தப பகிரங்க குற்றச்சாட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றாலும், அதனால் இலங்கைக்கு சர்வதேச அரசியல் பாதிப்பு எதுவும் பெரிதாக இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக நிறுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன்.




Friday, March 9, 2012

ஒய் திஸ் உலை வெறி - பட்டாசாய் ஒரு பாட்டு!

கூடங்குளம் போல ஒரு அணு உலையை நிறுவினால் 50 வருடங்களுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் அதனால் ஏற்படும் கழிவுகளை 1,00,000 வருடங்களுக்கு பத்திரமாக எங்காவது பதுக்கி வைக்க வேண்டும். அதற்காக செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மனிதனின் வாழ்வாதாரம் நிச்சயமாக பாதிக்கப்படும் என்கிறார்கள் அணுஉலைக்கு எதிராகப் போராடும் விஞ்ஞானிகள்.

உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய விஞ்ஞானி (Physicist) திரு. ஹேன்ஸ் பீட்டர் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அவர் சொல்வதை கவனியுங்கள். எந்த அணுஉலையும் 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல. அதற்கு உத்தரவாதம் தரும் எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.

அணு உலையால் ஏற்படும் ஆபத்துகளை விட, அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கிறார். சுற்றுப்புறச் சூழல் பாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால், அணுக் கழிவுகளைக் கொண்டு அணு குண்டு தயாரிக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.

அணு உலை பாதுகாப்பானது என்று வைத்துக் கொண்டாலும், இன்னும் சில 100 வருடங்களில் அது இயங்கத் தேவையான யுரேனியமும் தீர்ந்துவிடும். அப்போது இந்த அணுஉலைகள் அனைத்தும் இயங்காமல் நின்றுவிடும். அப்படி இயங்காமல் போகக்கூடிய அணுஉலைகளை மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காமல், எப்படி இடித்துத் தள்ளுவது? அதற்கு திட்டங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்ன? என்று தொடர் கேள்விகள் எழுப்புகிறார். எனவே மாஃபியா கொள்ளைக்காரர்களைப் போல பூமியிடமிருந்து இயற்கை கனிமங்களை திருடி, மக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவதை உடனே கைவிடுவோம். சூரியக் கதிர்களை நோக்கி நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

சூரியக் கதிர்களை உள்வாங்கி, சேமித்து அதனால் மின் சக்தி உட்பட வித விதமான சக்திகளை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பக்கவிளைவுகள் இல்லாத இவற்றில் நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்களை தேசப்பற்று இல்லாத தீவிரவாதிகள் என்று அரசுகள் முத்திரை குத்த முயற்சித்து வருகின்றன. ஆனால் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசுகளின் இந்த சூழ்ச்சிக்கு அஞ்சாத இளைஞர்கள் சிலர் ஒரு அருமையான மியூசிக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

அணு உலைக்கு எதிரான இந்த அருமையான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை நான் மனமார வரவேற்கிறேன். இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்புகளை தர வேண்டும்.

எரிதழல் படைப்பகம் மற்றும் அதன் குழவினர் அனைவருக்கும் என் அன்பும், ஆதரவும்.

Tuesday, March 6, 2012

மக்களையே மக்களுக்கு எதிராகத் தூண்டும் ஜெ, மன்மோகன் சிங் அரசுகள்!

இந்த நூற்றாண்டின் அசுர வளர்ச்சி தகவல் தொழில் நுட்பம். அதன் பிரமாண்டமான பயன், அதன் வழியாக ஒன்றுமையாக ஒன்று கூடி அரசுகளை கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கும் மக்களின் எழுச்சி!

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் வழியாக மக்கள் தாங்களாகவே விவாதிக்கிறார்கள். அரசை கேள்வி கேட்பது என்று முடிவெடுக்கிறார்கள். முன் எப்போதையும் விட தைரியமாக விமர்சிக்கிறார்கள். பெரும் திரளாக ஒன்று கூடி அரசுகளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணுகிறார்கள். அடுத்த தேர்தல் வரை ஜாலியாக காலம் தள்ளிவிடலாம் என்று மெத்தனமாக இருக்கும் ஜனநாயக அரசுகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. நான்தான் ராஜா என்னை என்ன செய்ய முடியும் என்று எதேச்சதிகாரத்துடன் திரிந்த மன்னர் ஆட்சிகளும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் மக்கள் தாமாகவே முன் வந்து, அலையலையாக ஒன்று கூடி, ஒரு சுனாமியைப் போல அரசுகளை தூக்கி எறியும் சக்தியுடன் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மிரண்டு போயிருக்கும் அரசியல்வாதிகள், தற்போது அரசியல் எதிரிகளை சமாளிப்பதை விட, கேள்வி கேட்கும் மக்களை திசை திருப்புவது எப்படி? அவர்களுடைய கூர்மையை மழுங்கச் செய்வது எப்படி? அவர்களுடைய ஒற்றுமையை குலைப்பது எப்படி என்று தங்கள் கருப்பு மூளைகளை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். நமது இந்திய அரசியலுக்கு வருவோம். முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் ரீதியாக முடிவெடுக்க திராணி இல்லாத ஜெயலலிதா அரசு, தமிழக மக்களை கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும் எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. தமிழகத்தில் மலையாளம் பேசும் மக்களும், அவர்களது வியாபாரத் தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அதை கண்டும் காணாதது போல தமிழக அரசும், தமிழக போலீசும் இருந்துவிட்டன. இப்போது என்ன ஆயிற்று? கேரள மக்களின் மேல் தேவையற்ற திணிக்கப்பட்ட கோபத்தை வளர்த்ததோடு பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

உம்மண் சாண்டியின் தலைமையில் கேரள அரசும், இதே போல மறைமுகமாக ரௌடிகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களுடைய வீடுகள் சூறையாடப்பட்டன. தமிழக போலீசைப் போலவே, கேரள போலீசும் இந்த தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டன.

அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சமாளிக்க முடியாத தமிழக-கேரள அரசுகள், தமது மக்களை அண்டை மாநில மக்களுக்கு எதிராக தூண்டி தங்களது இயலாமையை மறக்கடிக்கிறார்கள். சகோதரர்களாக வாழ்ந்து தமிழக, கேரள மக்களை எதிரிகளாக மாற்றி தங்களது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

தற்போது இதே பிரித்தாளும் வழிமுறையை, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையிலும் ஜெயலலிதா அரசு கடைபிடிக்கிறது.  நான் ஆட்சிக்கு வந்ததுமே திருடர்களும், கொள்ளையர்களும் ஆந்திராவுக்கு தப்பிவிட்டார்கள் என்று கொக்கரித்தார் ஜெயலலிதா. ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் கொலைகள், கொள்ளைகள். தமிழக போலீசும், ஜெயலலிதாவும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஏற்கனவே விலைவாசிப் பிரச்சனையால் கோபத்தில் இருக்கும் மக்களை சமாதானப்படுத்துவது எப்படி என்று ஜெயலலிதா அரசு தடுமாறிக் கொண்டிருந்தது.  அவர்களை கவனம் கலைக்க அரசும், போலீசும், திட்டமிட்டு, இரகசியமாக கையிலெடுத்திருக்கும் விஷயம்தான் வட இந்தியர்களின் மீது மக்களின் கோபத்தை திசை திருப்பும் செயல்.

ஆங்காங்கே அதிகமாகிக் கொண்டிருந்த செயின் திருட்டு,  வழிப்பறி, கொலைகள் உட்பட, தொடர் வங்கிக் கொள்ளைகளால் மக்கள் தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருந்தார்கள். இதைச் சமாளிக்க அரசு நடத்திய ஆக்ஷன் பிளான்தான் என்கவுண்டர். என்கவுண்டரைப் பற்றி ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அது வேறு சப்ஜெக்ட். ஆனால் இதில் நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒரு கேவலமான அம்சம் உள்ளது. அது... தமிழகத்தில் நிகழும் அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணம் இங்கு பிழைப்புக்காக வந்திருக்கும் வட இந்தியர்கள்தான் என்கிற மறைமுகப் பிரச்சாரம்தான். என்கவுண்டர் நடந்த தினத்திலிருந்தே இந்தப் பிரச்சாரம் அசுர வேகத்தில் பரப்பப்படுகிறது. தமிழக போலீஸ் மீது மற்றும் அரசின் மீது இருந்த மக்களின் அதிருப்தியை வட இந்தியர்களின் மீது வேகமாகத் திணக்கும் பணியை அரசு செய்து கொண்டு வருகிறது. அது பற்றிய செய்திகளும், அவதூறுகளும் தினமும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் வசிக்கும் வட இந்தியர்களை கணக்கெடுக்கிறார்களாம். அவர்களுடைய விரல் ரேகைகள் போலீசில் பதியப்படுகின்றன. பாதுகாப்புக்காகச் செய்வதாகச் சொன்னாலும், அது பற்றி வெளியாகும் செய்திகள் வட இந்தியர்களின் மேல் தமிழக மக்களுக்கு கோபத்தையும், சந்தேகத்தையும் உருவாக்குவதாகவே இருக்கிறது.

தங்களால் ஒழுங்காக செயல்பட முடியவில்லை என்பதை மறைக்க மக்களை மக்களோடு மோதவிடும் கொடுமையான விஷயத்தை கையில் எடுக்கிறது அரசு. ஏற்கனவே கர்நாடகாவுடன் சண்டை. புதிதாக கேரளாவுடன் மோதல். தற்போது வட இந்தியர்களை எதிரிகளாக்கும் சம்பவங்கள். இதில் பாதிக்கப்படுவது எந்த அரசியல்வாதியும் இல்லை. மிகச் சாமர்த்தியமாக மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி அதில் குளிர்காயும் குள்ளநரித் தனத்தை ஒவ்வொரு அரசியல்வாதியும் கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதே தந்திரத்தைதான் தமிழர்களை ஒடுக்க, இலங்கையில் ராஜபக்ஷே வரை ஒவ்வொரு அரசியல் சூத்திரதாரியும் கையாண்டார்கள். சிங்களர்-தமிழர்கள் இடையில் நிரந்தரப் பகையை உருவாக்கி இன்னமும் அதை வைத்து வசதியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தாலும், நமது அரசியல் அமைப்பால் ஒன்றாகச் சேர்ந்து சகோதரர்களாக வாழந்து கொண்டிருக்கும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நமது கேடுகெட்ட அரசியல்வாதிகளும் தயாராகிவிட்டார்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே குள்ளநரித் தந்திரத்தைதான் தற்போது மன்மோகன்சிங் அரசும் கையில் எடுத்திருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று சித்தரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி பொறுக்காத வெளிநாடுகளின் உதவியோடு அணு உலைத்திட்டத்தை குலைப்பதாக திட்டமிட்டு செய்தி பரப்புகிறது. இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் தன் வாயால் சொல்வதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் அந்தக் குற்றச்சாட்டை நிருபிக்க அவர் எந்த ஆவணத்தையும் காட்டவில்லை.

மின் உற்பத்தியில் இதுவரை கவனம் செலுத்தாத மத்திய, மாநில அரசுகள் தட்டுப்பாடு வந்ததும் தங்களின் இயலாமையை மறைக்க வழி தெரியாமல் விழித்தார்கள். இன்று சமாளித்துவிடுவோம், நாளை சமாளித்துவிடுவோம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய தமிழக, மத்திய அரசுகள், மக்களின் வளர்ந்து வரும் கோபத்தை அடக்குவதற்கு கையாளும் தந்திரம்தான் மக்களையே மக்களுக்கு எதிராக திசை திருப்பும் கேவலமான அரசியல்.

மன்மோகன் சிங் நேரடியாக குற்றம் சுமத்துகிறார். ஜெயலலிதா இதை மறைமுகமாக அனுமதிக்கிறார். பிரச்சனை தீர வழி இல்லை என்றதும், பிரச்சனைகளை திசை திருப்புவதில் மத்திய-மாநில அரசுகள் இரகசியக் கூட்டு வைத்துக் கொண்டுவிட்டன.

அரசியல்வாதிகளே! வெளிநாட்டுச் சதி என்பது உண்மையாகவே கூட இருந்துவிட்டுப் போகட்டும். தமிழகத்தின் மின் வெட்டுப் பிரச்சனை தீர உங்களின் யோசனை என்ன? திட்டங்கள் என்ன? பிரச்சனை எப்போது தீரும்? உங்களிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பதுதான் உண்மை.

பிரச்சனைகளைத் தீர்க்க உங்களிடம் இருக்கும் ஒரே திட்டம் . . . மக்களையே மக்களுக்கு எதிராக மோத வைப்பது. இதில் உங்களுக்கு சிறு வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் . . . மக்கள் மாக்கள் அல்ல. எப்போதும் உங்கள் குள்ளநரித் திட்டங்கள் பலிக்காது! எங்களை பிரிக்க முடியாது.

நாங்கள் களைத்திருப்போம்! ஆனால் ...
எப்போதும் விழித்திருப்போம்!

Saturday, February 25, 2012

கூடங்குளம் எதிர்ப்பு - அமெரிக்க சதியா?

எந்த சலசலப்புக்குமே வாய் திறக்காத பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று அதிசயமாகப் பேசினார். கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அரசு சாரா அமெரிக்க சேவை நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன. கூடங்குளம் எதிர்ப்பு பின்னணியில் அமெரிக்க சதி இருக்கிறது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

கடந்த சில மாதங்களாகவே இதே குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது இ.வி.கே.எஸ் இளங்கோவனும் இதை மேடைக்கு மேடை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தினமலர் பத்திரிகை விடாமல் இதே கருத்தை பல மாதங்களாக எழுதிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அப்போதெல்லாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாத இந்தக் குற்றச்சாட்டு தற்போது வலுவடைந்திருக்கிறது. ஏனென்றால் மௌனகுரு என்று வர்ணிக்கப்படும் பிரமரே வாய்திறந்து இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரஷ்யாவின் கோபம்
பிரதமரே இப்படிச் சொன்னதும், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் எம்.கடாகின் இன்று மீடியாவுக்கு வந்துவிட்டார். கொஞ்சம் கோபமாகவே தனது குற்றச்சாட்டுகளையும், சந்தேகங்களையும் பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்தார்.

 கூடன்குளம் அணு மின் நிலையம் உலகிலேயே100 சத வீத பாதுகாப்பானது. புகுஷிமா விபத்து நடந்தபோது போராட்டக்காரர்கள் சும்மாதான் இருந்தார்கள். ஆனால் 6 மாதத்திற்கு பின்னர் அவர்கள் கூடங்குளம் வேண்டாம் என்று பிரச்னை எழுப்புவது போராட்டக்காரர்கள் மீதான சந்தேகத்தை தெளிவாக்கியிருக்கிறது. அவர்களுடைய போராட்டத்துக்கான நிதி அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியாவிற்கு வருகிறது. அவர்களுக்கு ரஷ்யாவின் துணையுடன் இங்கு அணு உலை அமைவதில் விருப்பமில்லை. இந்திய பிரதமரே பகிரங்கமாக குற்றம்சாட்டியபின், எங்களுடைய சந்தேகம் உண்மைதான் என்று ஊர்ஜிதமாகிறது. எனவே அணுமின் நிலையம் துவக்குவதற்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்றார்.


போராட்டக்குழு தலைவர் உதயகுமாரின் சவால் - நாங்கள் யாரிடமும் பணம் பெறவில்லை
ஆனால் போராட்டக் குழு தலைவர் உதயகுமார் அசரவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமருக்கு நேரடியாக சவால் விடுத்தார். போராட்டக் குழுவுக்கு அமெரிக்க நிதி கிடைப்பதாக பிரதமர் சொல்வது பொய். குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் போராட்டத்தை கை விடுகிறோம். நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலகத் தயாரா என்று பகிரங்கமாக சவால் விட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரதமர், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகிய மூவர் மீதும், தவறான குற்றச்சாட்டுகளை சொல்வதாக வழக்கு தொடரும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்.


உரிமம் ரத்து செய்யப்பட்ட அமெரிக்க NGOக்களின் பெயர் என்ன? மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து 3 அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.


பிரதமர் அலுவலகமும், போராட்டக் குழுவினரும் நேரடியாக மோதிக் கொள்ளும் இந்த சூழலில், உரிமம் ரத்து செய்யப்பட்ட 3 அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் பெயர்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். ஏன் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்ற காரணத்தையும் ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும். அப்போதுதான் பிரதமர் கூறியி குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும்.


ரஷ்யா கொஞ்சம் அளவுக்கு மீறி பேசுகிறதா?
வழக்கம்போல இந்த விஷயத்தில் பிரதான எதிர்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வாயைத் திறக்காமல் இருக்கின்றன. அவர்களுக்கு ஓட்டு பயம். ரஷ்யா கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இன்று பேசியதாகத் தோன்றியது. கூடங்குளம் விஷயத்தை பொறுத்தவரை அவர்கள் வியாபாரிகள்தான். அவர்களுடைய தொழில்நுட்பத்தை நமது மத்திய அரசு பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்கிறது. எனவே ஒரு கன்ஸல்டன்ட் என்ற அளவுடன் ரஷ்யா தனது மூக்கை நிறுத்திக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் தனது அமெரிக்க வெறுப்புக்கு, இந்தியாவில் குஸ்தி மேடை அமைக்கும் தோரணையை கைவிட வேண்டும்.


கூடங்குளம் ஆதரவு/எதிர்ப்பு பின்னணியில் தலை தூக்கும் இதர பிரச்சனைகள்
அண்ணா ஹசாரேவைப் பார்த்து அவருடைய பாணியிலேயே, போராட்டக் குழுவினர் வலுவாக அணி சேர்ந்ததும் அவர்களை கலைக்க ஜெயலலிதா அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. சில நாட்களிலேயே கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் கூடங்குளத்தை தடுக்கிறார்கள் என்று தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஆதரவுடன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்னமும் மெலிதாக இந்தப் பிரச்சனை இருக்கிறது.


அந்தப் பிரச்சாரம் அவ்வளவாக எடுபடவில்லை என்றதும், கிறிஸ்தவ அமைப்புகளுக்குப் பதிலாக அமெரிக்க நிதி உதவி பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த அணு உலைச் சண்டையில் இழுக்கப்பட்டிருக்கின்றன.


பிரதமரும் இந்த குற்றச்சாட்டில் இணைந்து கொண்டார் என்பதுதான் ஹைலைட். உபரி லைட்டாக ரஷ்யாவின் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம் இந்தியாவில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறது.


மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
எது உண்மை எது பொய் என்பது காலப்போக்கில் தெரிந்துவிடும். ஆனால் சில விஷயங்களில் இந்திய மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஹிந்து, கிறித்துவன் என்ற பிரிவினை வாதங்களுக்கு பலியாகக் கூடாது. அடுத்து ரஷ்யா உட்பட எந்த நாட்டையும், நமது இந்தியாவிற்குள்ளேயே இருந்து மற்ற நாடுகளுக்கு எதிரான வெறுப்பை உமிழ இடம் தரக் கூடாது.


அணு உலை விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா இருவருமே வியாபாரிகள். இரு வியாபாரிகளுக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. ஆனால் அவர்களுடைய சண்டைக்கு இந்தியா மைதானமாகிவிடக் கூடாது.

கோர்டில் சசிகலாவின் ஒப்புதல்! (சட்டப்படி) வாக்கு மூலமே அல்ல!

செக்ஷன் 313 கேள்விப்பட்டிருக்கீங்களா? எனக்கு நான் படிச்ச டென்த் பி செக்ஷன்தான் தெரியும். இன்னைக்கு காலையிலதான் செக்ஷன் 313ஐ பத்தி கேள்விப்பட்டேன். எனக்கு லெட்டர்ஸ் டு த எடிட்டர் பிடிக்கும். ஒரே செய்தியைப் பற்றி (படித்த எழுதக்கூடிய) மக்களின் வெவ்வேறு கோணங்கள் கிடைக்கும் என்பதால். சில நேரம் அதில் வல்லுனர்களும் எழுதுவார்கள். எல்லாவற்றையும் சேர்த்து படித்தால் சுவாரசியமாக இருக்கும். இன்று காலையில் காபியுடன், ஒரு சுவாரசியமும் சேர்ந்தே கிடைத்தது.

இன்று காலை ஹிந்து நாளிதழில் டாக்டர் ஏ.இ.செல்லையா என்பவர்தான் இந்த (டெக்னிகல்) குண்டை போட்டிருந்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லா தப்பையும் நான்தான் செய்தேன் என்று சசிகலா ஒப்புக் கொண்டுவிட்டதாக நாம் எல்லோரும் அப்பாவியாக நம்பிக் கொண்டிருக்கிறோம். சசிகலா எல்லாக் குற்றங்களையும் தானே செய்ததாக வாக்குமூலம் தந்துவிட்டதாக நாம் எல்லோருமே நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். முந்திரிக்கொட்டை செய்திச் சேனல்களும், பரபரப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட செய்தித் தாள்களும், புலனாய்வு செய்வதாக சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகளும், அப்படித்தான் அந்த சசிகலா அழுகைக் காட்சியை வர்ணித்திருந்தன. ஆனால் . . .

நான் சொல்வதெல்லாம், உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை என்று சாட்சிகள், குற்றவாளிகள் எல்லோரும் கோர்டில் சொல்வதை (சினிமா வாயிலாக) நாம் அறிவோம். கிரிமினல் நடவடிக்கைகளில் செக்ஷன் 313 ஒரு ஸ்பெஷல். இதன்படி
  • குற்றம் சாட்டப்பட்டவரிடம் இது போல சத்யப் பிரமாணம் வாங்கிக் கொள்ளப்படாது. 
  • சத்யப்பிரமாணம் வாங்கிக் கொள்ளாததால் குற்றம் சாட்டப்படுபவர் பொய் சொல்லவும் அனுமதி உண்டு. அவர் சொன்னது பொய் என பின்னர் தெரியவந்தாலும், அதற்கு தண்டனை கிடையாது. 
  • இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று மறுக்கிற உரிமையும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு. 


பின்ன எதுக்குதான் செக்ஷன் 313?
தனக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் உள்ளன? அது தொடர்பான கேள்விகள் என்ன என்பதை குற்றவாளிகள் தெரிந்து கொள்ள சட்டம் தருகிற ஒரு வாய்ப்பாம். தன்னை தற்காத்துக்கொள்ள, செக்ஷன் 313ன் கீழ் கேட்கப்படும் கேள்விகளை குற்றம்சாட்டப்பட்டவர் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் (அ) பொய் சொல்லலாம் (அ) பதில் தெரியாது என பாஸில் விடலாம். குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டம் தெரிந்தே இந்த சலுகையை தருகிறது.

அதனால் செக்ஷன் 313ன் கீழ் ஒப்புக் கொள்ளப்படும் குற்றங்கள் வாக்கு மூலங்கள் அல்ல. எந்த வேல்யுவும் இல்லாத ஒரு கேள்வி பதில் வேடிக்கை அவ்வளவுதான். எனவே ஜெ. எந்த குற்றமும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று சசிகலா கோர்டில் அழுதுகொண்டே சொன்னது வாக்குமூலமே அல்ல. கோர்ட் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொள்ளவில்லை.

செக்ஷன் 164 என ஒன்று இருக்கிறதாம். அதன் கீழ் சொல்லப்படும் பதில்கள்தான் வாக்குமூலமாக பதிவு செய்யப்படும். ஜெவோ சசிகலாவோ இந்த செக்ஷனின் கீழ் கேள்விகளை இது வரையில் எதிர்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை அப்படி எதிர்கொண்டால் அவர்கள் எப்படி பல்டி அடிப்பார்கள் என்பதை, இதை வாசிக்கிற உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

ஜெவும் சசியும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தியை மீடியாக்கள் நம் தலையில் திணிக்கின்றன. கிடையவே கிடையாது! வழக்குகளில் இருந்து தப்பிக்க, வழக்கை திசை திருப்ப வேண்டியதிருக்கிறது. அதற்கான தந்திரக் காட்சிகள்தான் இவை என்று யூகங்களையும் வதந்திகளையும் சிலர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

செக்ஷன் 313 இந்த வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் வலு சேர்க்கிறது. . . நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். நான் மீண்டும் லெட்டர்ஸ் டு த எடிட்டர் படிக்கப் போகிறேன். நீங்க. . .?

Friday, February 24, 2012

சென்னை போலீஸ் - ஒய் திஸ் கொலவெறி!

முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறேன். இது சென்னை போலீசுக்கு எதிரான கட்டுரை அல்ல. கொள்ளையர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாக கொடி பிடிக்கும் கட்டுரையும் அல்ல. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை அப்படியே நம்பமுடியாது. அவர்களின் அத்துமீறல்கள், ஜோடனைகள் பற்றி கேள்விகள் எழுவது இயல்பு.

பின்வருபவை, சென்னை போலீஸ் நடத்தி முடித்திருக்கும் எண்கவுன்டர் பற்றிய சில சந்தேகங்கள் (மீடியாக்கள் எழுப்பியுள்ள கேள்விகளின் தொகுப்பு)

துப்பாக்கி சத்தம் கேட்கவே இல்லை
நள்ளிரவு 1 மணிக்கு துவங்கிய துப்பாக்கி சண்டை 1.15 வரை நீடித்ததாக போலீஸ் சொல்கிறது. சுவற்றில் 10 இடங்களில் குண்டு பாய்ந்த சுவடுகள் (Ricochet) உள்ளது. உள்ளிருந்த 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு போலீசார் துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்திருக்கிறார்கள். வீட்டுக்குள் கதவை உடைத்து போலீஸ் நுழைந்திருக்கிறது. எவ்வளவு சத்தம் கேட்டிருக்க வேண்டும்.   ஆனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த எவருக்கும் ஏன் துப்பாக்கிச் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை. வேறு சில சத்தங்கள் கேட்டது போல இருக்கிறது என்று மற்றவர்களும் சந்தேகமாக இழுக்கிறார்கள். அனைத்தும் சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கிகளா?

தோட்டாக்களின் தடயமே இல்லாத ஜன்னல்கள்
ஒரு ஜன்னல் க்ரில் வழியாக முதல் ரவுண்டை சுட்டதாக போலீஸ் சொல்லியிருக்கிறது. வெறும் 9 செ.மீ அகலம் மட்டுமே அந்த துளை வழியாக நிச்சயம் கையை விட முடியாது. அதுவும் துப்பாக்கி ஏந்திய கையை விட முடியாது. எனவே வெளியே இருந்துதான் சுட்டிருக்க முடியும். ஆனால்  வெளிச்சமே இல்லாத நள்ளிரவில் 9 செமீ அகலத் துளை வழியாக ஜன்னல் கம்பிகளில் கூட படாமல் சுட்டோம் என்று கூறுவதை நம்ப முடியவில்லை. துப்பாக்கி குண்டுகள் நிச்சயம் ஜன்னலில் பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி தடயம் எதுவும் இல்லை.

சேதமே இல்லாத உடைத்ததாகச் சொல்லப்படும் கதவுகள், தாழ்பாள்கள்
ஜன்னல் வழியாக சுட்டுவிட்டு அதன் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று என்கவுண்டரை தொடர்ந்ததாக போலீஸ் ஜோடிக்கிறது. ஆனால் உடைக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் கதவிலோ, தாழ்பாள்களிலோ இல்லை.

துப்பாக்கிகள் உண்மையா? பொம்மையா?
கொள்ளை சம்பங்கள் அனைத்திலும் கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கியை பயன்படுத்தியாக போலீஸ் கூறியிருந்தது. ஆனால் என்கவுண்டர் நடந்த அறையில் 7 உண்மைத் துப்பாக்கிகள் கிடந்ததாக போலீஸ் அறிக்கை சொல்கிறது. உண்மைத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள், ஏன் பொம்மைத் துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்டார்கள்.

பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளிருந்து போலீசை துரத்திச் சுட்டார்களாம்
போலீஸ் தரப்பில் இருவருக்கு காயம். கொள்ளையர்கள் சுட்டதால்தான் தற்காப்புக்காக நாங்கள் சுட்டோம் என்கிறது போலீஸ். ஆனால் வீடு பூட்டியிருந்தது. முதலில் ஒரு ரவுண்டு சுட்டோம். அதற்குப்பின் கேட்டை உடைத்துதான் உள்ளே சென்றோம் என்கிறது அதே போலீஸ். வெளியே எட்டிப் பாரக்கக் கூட சிரமமான ஒரு சிறிய பூட்டப்பட்ட அறைக்குள் இருந்தவர்கள் வெளியில் இருந்த போலீசை எப்படிச் சுட்டிருக்க முடியும்?

ஏன் சுற்றி வளைக்கவில்லை?
பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்கள்தான் முதலில் சுட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும், பூட்டியிருந்த வீட்டுக்குள் பதுங்கியிருப்பவர்களை எளிதாக மடக்கியிருக்கலாமே.. வீட்டின் மொத்த பரப்பே 300 சதுர அடிதான். அதில் ஒரு சிறிய அறைக்குள்தான் கொள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள். கதவைத் திறந்து அவர்கள் தப்பி ஓடுவதற்கு இருந்த ஒரே வழியும், குறுகலனா சிறிய பாதைதான். போலீஸ் எளிதாக அவர்களை மடக்கியிருக்க முடியும். ஆனால் ஏன் அவர்களை உயிருடன் பிடிக்க முடிவு செய்யவில்லை.

அறைக்குள் இருந்த அனைவருமே கொள்ளையர்கள் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்?
என்கவுண்டர் நடத்துவதற்கு முன்பு, உள்ளே இருந்த அனைவருமே கொள்ளையர்கள்தான் என்பதை போலீஸ் எப்படி உறுதி செய்தது? வங்கி CCTV காமிராவில் சிக்கியவன், காமிராவில் அணிந்திருந்த அதே உடையில் இறந்து கிடந்தான். மற்றவர்கள் கொள்ளையர்கள்தான் எப்பதை போலீஸ் எப்போது உறுதி செய்தது. சுடுவதற்கு முன்பா? சுட்ட பின்பா?

என்கவுண்டரை எதிர்பார்த்து போலீஸ் தயாராகச் சென்றது எப்படி?
போலீஸ் நடவடிக்கைகளை பார்க்கும்போது, கொள்ளையர் தேடுதல் வேட்டை நிச்சயம் என்கவுண்டரில்தான் முடியும் என்று எதிர்பார்த்து செயல்பட்டது போல இருக்கிறது. சம்பவம் மதியம் வரை அவர்களிடம் பொம்மை துப்பாக்கிதான் இருந்தது என்று கூறிய போலீஸ், அவர்களிடம் உண்மைத் துப்பாக்கி இருப்பதை எப்போது அறிந்தது?


இலட்சங்களை கொள்ளையடித்தவர்கள் சில ஆயிரம் அட்வான்ஸ் பணத்தை திரும்பப் பெறவா காத்திருந்தார்கள்?

பல இலட்சங்கள் கொள்ளைக்குப் பின், போலீஸ் தேடுவதாகத் தெரிந்ததும் ஏன் வீட்டை காலி பண்ணவில்லை? வீட்டு ஓனர் தாமதமாகத் தருவதாகச் சொன்ன சிறிய அட்வான்ஸ் தொகைக்காக கொள்ளையர்கள் காலி பண்ணாமல் இருந்தார்களாம். இதுவும் போலீஸ் சொன்ன செய்திதான்.


என்கவுண்டர் நள்ளிரவில், செய்தியோ அதிகாலையில்தான்
நள்ளிரவு 1.15 மணிக்கே என்கவுண்டர் முடிந்துவிட்டதாக போலீஸ் சொல்கிறது. ஆனால் அதிகாலை 5.30 மணி வரை மீடியாக்களை சம்பவ இடத்துக்கு அனுமதிக்கவே இல்லை. எதற்காக இந்த இடைப்பட்ட 4 மணி நேரம் பயன்படுத்தப்பட்டது? ஏன் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலேயே மீடியாக்கள் தடுத்து நிறுத்தப்பட்டன?

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் தண்டிப்பதே சந்தேகத்துக்கு உரிய வகையில் இருப்பதை அனுமதிக்க முடியாது. தீவிரவாதி கசாப்பையே இன்னும் கோர்ட்டில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 5 பேரும் குற்றவாளிகள்தானா என்று உறுதிப்படுத்தாமலே அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டதாகச் சொல்வது சந்தேகங்களை எழுப்புகிறது.

கடைசியாக ஒரு சந்தேகம் : 
வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்ற பதத்தை அடிக்கடி போலீஸ் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?

Wednesday, December 14, 2011

உம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி!

Supreme court asked Tamil Nadu and Keral not to arouse people’s feelings and create a fear psychosis.


Justice Lodha regretted that both parties, instead of dousing the fire, were adding fuel to it.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தவறு யார் பக்கம்? இதன் முடிவு என்ன என்பதை நாம் தமிழராக அல்ல, மலையாளிகளை எதிர்க்கிறவராக யோசிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். கேரள அரசும் இதே தந்திரத்தை பயன்படுத்துகிறது. இது மிகவும் மோசமான, குள்ளநரித்தனமான அரசு தந்திரம்.

கடந்த ஒரு வாரமாக கேள்விப்படும் செய்திகள் எதுவுமே நல்லதற்கல்ல. தமிழக கேரள எல்லைகளில் சர்வசாதாரணமாக மாற்று மாநிலத்தாரின் உடமைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள். பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்படுகின்றன. கடைகள் அடைக்கப்படுகின்றன. போக்குவரத்து முடங்குகிறது. ரயில் மறிக்கப்படுகிறது. 25,000ம் பேர் ஒன்றாக அணி திரள்கிறார்கள். அவர்களை போர்வையாக வைத்துக்கொண்டு ஒரு கும்பல் மாற்று மாநிலத்தவர் மீது கல்லெறிகிறது, அடித்து நொறுக்குகிறது.

இதை தட்டிக் கேட்க வேண்டிய போலீசார் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். நான்காவது தூண் என்று வர்ணித்துக் கொள்ளும் மீடியாக்களோ, இந்த ரௌடிகளின் அட்டகாசத்தை மொழி உணர்வாகவும், மாநில உணர்வாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன.

இதன் பின்னணி என்ன? எங்கே இருந்து வந்தது இந்த திடீர் விரோதம்? பிரச்சனையை தீர்க்க திராணியில்லாத அரசுகள் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. தங்களது இயலாமையை மறைக்க மக்களை மோதிக் கொள்ள வைக்கின்றன. மக்களும் ஆட்டு மந்தைகளைப் போல, அரசின் இந்த விபரீத தந்திரங்கள் புரியாமல் அணி திரள்கிறார்கள். உடனே எதிர்கட்சிகள் பதறிவிட்டன. மக்கள் விலைவாசி பிரச்சனை, அடிப்படை வசதிக் குறைவு பிரச்சனைகளை மறந்து அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில், தாங்களும் உண்ணாவிரதம், போராட்டம், அணிவகுப்பு என்று தங்கள் பங்குக்கு மக்களை தூண்டிவிடுகிறார்கள்.

இதைச் செய்யாதே என்று கண்டிப்பாகச் சொல்ல இந்த அரசாங்கங்களுக்கு நாதி இல்லை (ஏனென்றால் மறைமுகமாக தூண்டிவிடுவதே அரசும், அரசியல்கட்சிகளும்தான்). நான் இதைச் செய்ய மாட்டேன், என்று சிந்தித்து முடிவெடுக்கும் அறிவும் அந்த கும்பலுக்கு இல்லை. (ஏனென்றால் அரசாங்கமே அனுமதிக்கிற ஒரு அராஜகத்தை அனுபவிக்கும் ஆசை)

உம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி. மனிதாபிமானங்களையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைத்துவிட்டு, விரோதங்கள், கோரமாக இளிக்கும்போது, நீங்கள் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள்?

நீங்கள் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையை தீர்ப்பது இருக்கட்டும். ஓவ்வொரு கேரள தமிழனும், தமிழக மலையாளியும், பயமின்றி இரவில் தூங்க நினைக்கின்றான். உங்களால் அதற்கு உத்திரவாதம் தர முடியுமா? முடியாது என்றால், பதவியை விட்டு ஓடுங்கள்.

எங்களுக்கு எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளத் தெரியும். அவர்கள் மலையாளியாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும்.

Saturday, December 3, 2011

கனிமொழி இனி ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டும்!

கனிமொழி நினைத்தே பார்த்திருக்கமாட்டார். கிட்டத்தட்ட 192 நாட்கள் திஹார் சிறை வாசம். அதுவும் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்காக. கருணாநிதி போன்ற அரசியல்வாதியின் மகளாக இருப்பதின் சௌகர்யம், அசௌகர்யம் இரண்டையும் ஒரு சேர அனுபவித்திருக்கிறார் கனிமொழி.

அவர் ஜாமீனில்தான் வெளியே வந்திருக்கிறார். இன்னமும் சட்டத்தின் முன்னால் அவர் குற்றம்சாட்டப்பட்டவர்தான். இதிலிருந்து அவர் மீண்டு வருவது ஒரு நெடிய போராட்டமாக இருக்கும். மீண்டு வரமுடியாமலும் போகலாம்.

அவர் சென்னைக்கு வந்திறங்குகிற வேளையில் இரண்டு அரசியல் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒன்று, அவருடைய வருகையை ஒட்டி திமுகவின் கொண்டாட்டங்களை பாதிக்கும் வகையில் ஸ்டாலினை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்வது. இரண்டு, சென்னை சங்கமம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து கனிமொழியையே கைது செய்வது. முதலாவது வதந்திக்கு முகாந்திரம் அதிகம். இரண்டாவது நடந்தாலும் நடக்கலாம்.

தனது அரசியல் எதிரி கருணாநிதியை பழிவாங்க, ஜெயலலிதாவுக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடையாது. இதை கருணாநிதியை விட கனிமொழி நன்றாக உணர வேண்டும். இல்லையென்றால் அவர் நசுக்கப்படுவார். கனிமொழி உடனே என்ன செய்ய வேண்டும்?

சென்னை வந்ததும், அப்பாடா என ஓய்வெடுக்காமல் தமிழக அரசியல் கோதாவில் இறங்க வேண்டும். ஜெயலலிதா சார்பில் திமுகவிற்கு எதிராக முடுக்கிவிடப்படும் வழக்குகளையும், நெருக்கடிகளையும் நேரடியாக சந்திக்க வேண்டும்.

கனிமொழி இனி எப்படி இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடை  ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைதான் உதாரணம். பெண்ணாக இருந்தாலும், நெருக்கடி வந்த போதெல்லாம், முன் எப்போதையும் விட மேலும் வலிமையுடன் ஜெயலலிதா களம் இறங்கியிருக்கிறார். ஓடி ஒளியவில்லை. அவரையே முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை அரசியல் களத்தில் சந்திக்க கனிமொழி தயாராக வேண்டும்.

தான் ஒரு அரசியல்வாதியா? அரசியல்வாதியின் மகள் மட்டுமா? என்பதை அவர் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது. திஹாரிலிருந்து அவருடைய தனி விமானப் பயணம் சென்னையைத் தொடும்போது அவர் இந்தக் கேள்விகளுக்கான விடையுடன் தரையிறங்க வேண்டும்.

அவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ள இதை விட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது.

காலம் கேள்விகளை மட்டுமே வீசும். பதில் மட்டுமே நாம். உங்கள் பதில் என்ன கனி?

Thursday, November 3, 2011

முதல்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

உங்கள் மேல் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் உங்களை 'அம்மா' என்றே குறிப்பிடுகின்றோம். அந்த உரிமையில் கேட்கிறேன். தயவு கூர்ந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றவோ, மூடவோ வேண்டாம்.

உலகில் சச்சரவுகள் இல்லாத இடம் என்று எதுவுமே கிடையாது, நூலகங்களைத் தவிர.
நூலகங்களில் மட்டும்தான் வாசிப்பதும், சக மனிதனை நேசிப்பதும் ஒரு சேர நிகழ்கின்றன.
எங்களுக்கு நூலகம் வேண்டும்.

விரைந்து நல்ல முடிவெடுங்கள். உங்களை மேலும் நேசிக்க வாய்ப்பு தாருங்கள்.

அன்புடன்

தமிழக மக்களில் ஒருவன்
செல்வகுமார்.

Tuesday, August 16, 2011

அன்னா ஹசாரே - செய்திச் சேனல்களின் TRP பூஸ்டர்


அன்னா ஹசாரே கைது! என்று அதிகாலையிலேயே செய்திச் சானல்காரர்கள் அலற ஆரம்பித்துவிட்டார்கள்

இதென்ன எமர்ஜென்சியா? என்னை கைது செய்து ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கே என்று தெரியவில்லை - இது கிரண்பேடியின் ட்வீட்

செய்திச் சேனல்களின் பாட்ஷா அன்னா ஹசாரேவுக்கு, ஆகஸ்டு 15 அன்றே டிரையலர்கள் துவங்கிவிட்டன. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம் என்று கூவாத குறையாக மீடியாக்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இன்று காலை 8 மணியிலிருந்து ஆங்கில செய்திச் சானல்களை பார்த்தால் நாடெங்கும் ஒரே கலவரம். மக்கள் ஊழலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தெருவெங்கும் கூடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு மக்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சியை விட படு மோசமான அடக்கு முறை என்று ஸ்க்ரோலிங்கும், வாய்ஸ் பைட்டுகளும் பயமுறுத்தின.

இது போதாது என்று அதிரடி டிவிட்டுகளும், ஃபார்வர்டு செய்யப்பட்ட SMSகளும், அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள், ஊழலுக்கு எதிராக கூடுவோம் போராடுவோம் என்று படு ஆக்ரோஷமாக ஆட்களை திரட்டிக் கொண்டிருந்தன.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தால், மீடியாக்களின் எந்த பரபரப்பும் இன்றி களைத்துப் போய் நண்பர் நின்று கொண்டிருந்தார். ஸாரிடா நீ சைடுல பணம் வெட்டாமல் உங்க வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் கனெக்ஷன் கிடைக்காதாம் என்றார்.

டிவிக்களில் சொல்லிக் கொண்டிருப்பது போல எந்த எமர்ஜென்சி அடக்கு முறையும் இல்லை. பஜ்ஜியில் எண்ணை அதிகமாக இருக்கிறது என்ற சில்லறை முறைப்புகளும், யோவ் உள்ள போய்யா என்ற ஃபுட்போர்டு பஸ் போராட்டங்களும்தான் இருந்தன.

மீடியாக்கள் இத்தனை உசுப்பியும், ஏன் அன்னா ஹசாரேவின் லோக்பல் மக்களை பரவலாகச் சென்றடையவில்லை. டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிளாகுகளில் பரபரவென எவ்வளவோ எழுதியும் ஏன் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று சேர மாட்டேன்கிறார்கள்.

மிக முக்கியமான காரணம், இதை எழுதியிருக்கும் நான் உட்பட, இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட, எல்லோருமே அடிப்படையில் லஞ்சத்துக்கு பழகியவர்கள். நான் செய்தால் தப்பு இல்லை, தப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சமாதானமடைந்தவர்கள். ஆனாலும் மனசாட்சி உறுத்துவதால் அவ்வப்போது சாமிக்கு தேங்காய் உடைப்பதைப் போல, அன்னா ஹசாரேக்களுக்கு வாழ்க கோஷம் போட்டுவிட்டு மறந்துவிடுகிறோம். ஸ்கூல் ஃபீஸ், மின்சாரக் கட்டணம், மளிகை பாக்கி, மகளின் திருமணம் என்ற தினசரி தனிமனித நெருக்கல்களின் காரணமாக, சமூகப் போராட்டங்களுக்கு உடலும், உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. எனவே தான் ஊழலையும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களையும் சினிமா பார்ப்பது போல, வேடிக்கை பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.

அடுத்த காரணம், சுனாமி பரிதாபங்கள், அன்னா ஹசாரே கோபங்கள் என எல்லாவற்றையும் ஊதிப் பெரிதாக்கி, இடை இடையே ஷாம்பூ விளம்பரங்கள் மற்றும் டெலிஷாப்பிங் அபத்தங்களை ஒளிபரப்பி எதையும் பூதாகரமாக்கி பணம் சம்பாதிக்கும், TRP டிவி உத்திகள். எனவே அடடா இவ்வளவு பெரிய போராட்டமா? நமக்கு இடம் கிடைக்காது என்று ஒதுங்குதல் அல்லது இவங்க சொன்ன மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லையே என்று நிராகரித்தல் ஆகிய இரு மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுங்கிவிடுகிறோம்.

மூன்றவாது மிக முக்கிய காரணம். அன்னா ஹசாரே லோக்பல் மசாதாவை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கிறார். ஆனால் மகாத்மா காந்திக்கும், அன்னா ஹசாரேவுக்கும் மிகப்பெரிய வேற்றுமைகள் உள்ளன. காந்தி காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை முன்னிறுத்தி அதன் போராட்டத் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டு இயங்கினார். ஆனால் ஹசாரே அப்படி எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். அன்னா ஹசாரே சொல்வது எவ்வளவுதான் நல்ல விஷயமாக இருந்தாலும், எத்தனைதான் மீடியா ஆதரவு இருந்தாலும், ஈர்க்கப்பட்டு திரளும் மக்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு தேவை. அது நாடு முழுவதும் கிராமம் கிராமமாக இயங்க வேண்டும். மத்திய தலைமையாக அன்னா ஹசாரே இருக்கும்போது, அவர் பேச்சுக் கேட்டு நடக்கும் கிளைத் தலைவர்கள் இருக்க வேண்டும். ஆனால் அன்னா ஹசாரே விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை.

இதை பிஜேபி தனக்கு சாதகமாக்கப் பார்க்கிறது. எங்களை அழைத்தால் நாடு முழுவதும் ஆதரவு தருகிறோம் என்கிறது. சுப்பிரமணியன் சுவாமி, நான் வரவா என்கிறார். பாபா ராம்தேவ் ஏற்கனவே குட்டையைக் குழப்பியது ஞாபகமிருக்கலாம்.

எனவே என்னதான் நியாயமான காரணங்களுக்காக அன்னா ஹசாரே போராடினாலும், அது நாடு தழுவிய இயக்கமாக இயங்க வேண்டும் என்றால், நாடு தழுவிய அமைப்பு அவருக்கு வேண்டும். அது தற்சமயம் இல்லாததால், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் போராட்டம், காங்கிரஸை தேர்தலில் தோற்கடிக்கும் போராட்டமாக மட்டும் சுருங்கிவிடும். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் உழைப்பை ஏதோ ஒரு கட்சி கபளிகரம் செய்து கொண்டு போய்விடும். மிஞ்சிப் போனல் ஆட்சி மாறும்! ஆனால் ஊழலும் அதை எதிர்க்கும் போராட்டங்களும் அப்படியேதான் இருக்கும். அன்னா ஹசாரே செய்திச் சேனல்களின் TRP பூஸ்டராக இருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார். யோசிங்க மக்காஸ்! யோசிங்க ஹசாரே!

Tuesday, July 19, 2011

மு.க வுக்கு ஆதரவா, ஜெ. வுக்கு வக்காலத்தா, நம் குழந்தைகளுக்கு கல்வியா? எது முக்கியம்? தீர்மானியுங்கள்.


சமச்சீர் கல்வி விவகாரத்தை இரு கழகங்களுக்கான சண்டை என்ற மனோபாவத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை. 

கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் வக்காலத்து வாங்கி வீணாகப் போனது போதும். இது அரசியல் பிரச்சனை அல்ல. அடிப்படைக் கல்வி பிரச்சனை. நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற அரசியல் வர்க்கத்தை நாம் சீற்றத்துடன் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமது அருமையான குழந்தைகளை இதைவிடக் கொடுமையாக கேவலப்படுத்த முடியாது. அவர்களுக்கு பள்ளி உண்டு. ஆனால் கல்வி இல்லை. வேறு எந்த நாட்டிலாவது இது போலக் குளறுபடி உண்டா?

நமது குழந்தைகள் பாடம் படித்து 2 மாதங்களாகிவிட்டன. உலக வரலாற்றிலேயே கல்வி விஷயத்தில் இந்த அளவுக்கு பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்ட அரசு எதுமே இல்லை.
எங்கள் குழந்தைகளுக்கு ஏன் கல்வியை மறுக்கிறீர்கள் என்று இந்த அரசாங்கத்தை ஒரே குரலில் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும். நல்லதோர் வீணையாக இருக்கும் நம் குழந்தைகள் புழுதியில் எறியப்படுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக, நம் குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும். அல்லது நாளை முதல் பாடங்களை நடத்த வேண்டும்.