Showing posts with label kamalhassan. Show all posts
Showing posts with label kamalhassan. Show all posts

Monday, June 3, 2024

இரகுமானுக்கு அப்புறம் நீதான்டா!

இந்தியன்-2 பாடல்கள்!
அனிரூத் இரசிகர்கள் கொஞ்சம் தயக்கமாகத்தான் பாடல்களை வரவேற்றிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.இரகுமான் இரசிகர்களில் பலர் இது இந்தியன்-1 போல இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இளையராஜா இரசிகர்கள் இதை கேட்டிருப்பார்களா எனத் தெரியவில்லை.
தமிழ் சினிமா பாடல்களின் இரசிகர்கள் என இப்போது பொத்தாம் பொதுவாக குறிப்பிட முடியவில்லை. அதனால் இப்படி தனித்தனியாக குறிப்பிடுகிறேன்.
ஷங்கருக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அளித்த பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும், இருவரின் இரசனைக்கும் மெல்லிய அளவில் ஒட்டாமை இருந்தது போலிருந்தது. ஆனால் ஆனிரூத் ஷங்கரின் இரசனைக்கு பிசகில்லாமல் மாறிவிட்டார். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து விலகி, இயக்குநருடன் பேசிப்பேசி பாடல்களை உருவாக்கும் பாணிக்கு மாறியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. இந்தியன் -2 பாடல்களில் ஷங்கரும் இருக்கிறார், ஆனிரூத்தும் தெரிகிறார் என்பதுதான் சிறப்பு.
ஆனிரூத் மாஸ் பாடல்களுக்குதான் லாயக்கு, அவருக்கு உணர்வுப்பூர்வமாக இசையமைக்கத் தெரியாது என்கிற இமேஜ், இந்தியன்-2 விலிருந்து மாறிவிடும். படம் வெளியாகி காட்சிகளுடன் பார்க்கும்போது இதுவரை ஆனிரூத்தை ஏற்காதவர்களும், இரசிப்பார்கள். ஆனிரூத் இப்படத்திலிருந்து இன்னும் புதிதாக மாறுவார்.
ஆடியோ அறிமுக விழாவில் இரகுமானுக்கு அப்புறம் எவன்டா என்றார் ஆனிரூத். நீதான்டா என்கிறேன் நான். சியர்ஸ் ஆனிரூத்!
Indian 2 is Anirudh 2

 

Saturday, August 13, 2022

கார்த்தி - மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

”பருத்தி வீரன் வெளியாகுமா என்று சந்தேகம் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் நடக்குமா? பாதியிலேயே நின்று விடுமா என்று மனது தளர்ந்து போயிருந்தது. அந்த சமயத்தில் மனம் சோர்ந்து போனபோது என்னை தூக்கி நிறுத்தியது கமல் சாரின் மருதநாயகம் காட்சிகள்தான்.
பருத்தி வீரன் துவக்க விழாவிற்கு அழைக்க அப்பாவுடன் கமல் சார் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அவர் மருதநாயகம் டிரையலரையும், ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளையும் காட்டினார். மிரண்டு போய்விட்டேன். உலக சினிமாக்கள் எதிலும் நான் பார்த்திராத காட்சி அமைப்பு, உடை, ஷாட் என பிரமிக்க வைத்தது.
மருதநாயகம் படத்தின் துவக்க விழாவுக்கு அப்பாவுடன் நான் சென்றிருந்தேன். விழாவெல்லாம் முடிந்து அடுத்த நாள் யாரோ என்னை இடித்துவிட்டுச் சென்றார்கள். அது இரும்பு கொண்டு என்னை இடித்தது போலிருந்தது. திரும்பிப் பார்த்தால் கமல் சார். இடுப்பு வரை நீள முடியுடன், உடலை இரும்பு போல வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
ப்பா... அசுர உழைப்பு. கமல் சார் இவ்வளவு உழைத்த அந்தப் படம் நின்று போய்விட்டது. அது நின்று போய்விட்ட வலியை விடவா, என்னுடைய வலி என்று தோன்றியது. எப்போது நான் துவண்டு போனாலும் மருதநாயகம் நின்று போனாலும், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கமல் சாரின் உழைப்புதான் எனக்கு உற்சாகம் தருகிறது. என்னை தோளில் தட்டி தூக்கி நிறுத்துகிறது.
- பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி
கார்த்தியின் இந்த வார்த்தைகளில் ஜெயிக்கக் காத்திருக்கும் ஒவ்வொருக்கும் செய்தி இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் ஆயிரம் வலிகளைத் தாண்டித்தான் சாத்தியமாகியிருக்கிறது. துவண்டு போகாமல் அடுத்தடுத்து செயல்படுபவன்தான் குடும்பத்தாலும், மக்களாலும் கொண்டாடப்படுகிறான். இந்த நம்பிக்கையில்தான் நாங்கள் யாதெனக்கேட்டேன் படத்தை தயாரித்திருக்கிறோம். விரைவில் திரையைத் தொடுவோம். இரசிகர்களின் இரசனைகளுக்கு உணவளிப்போம். வெற்றி பெறுவோம்.
இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Sunday, July 10, 2022

அசர வைக்கும் கே.பாலச்சந்தர் அறிமுகங்கள் - குற்றால அருவி முதல் சூப்பர் ஸ்டார் வரை

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அறிமுகங்கள்.

இருமல் தாத்தா முதல், குற்றாலம் அருவி வரை ஒரு பட்டியல் போட்டால் அவருடைய அறிமுகங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இருப்பார், என் தந்தை ஐ.எஸ்.ஆரும் இருக்கிறார்.


இது இயக்குநர் சிகரத்தின் நிகரற்ற சாதனை. இன்னும் அடுத்த 100 வருடங்களுக்கு அவருடைய அறிமுகங்கள் திரை உலகை ஆட்சி செய்வார்கள். 

நான் இயக்கியுள்ள யாதெனக்கேட்டேன் சிறப்புக்காட்சி பார்த்த சிலர், சில இடங்களில் பாலசந்தர் டச் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். அவருடைய படம் பார்த்து வளர்ந்தவர்களிடம் இந்த டச் இயல்புதான். தவிர்க்கவே முடியாமல் தலைவர் பாலச்சந்தர் நம்மை உள்ளுக்குள் இருந்து இயக்குவார்.

இந்த வீடியோ கே.பி பட டியூன்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு மாஷப். இதில் அவருடைய அறிமுகங்கள் டைட்டில் அனிமேஷனாக உள்ளது. கே.பி மறைந்த தினத்தில் நண்பர் ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் முரளியுடன் அமர்ந்து இந்த வீடியோவை உருவாக்கினோம்.

இன்று என் நண்பரும் இல்லை. இயக்குநர் சிகரமும் இல்லை. எனவே இயக்குநர் சிகரம் கே.பி மற்றும் நண்பர் முரளி ஆகியோரின் நினைவாக இந்த வீடியோவை பகிர்ந்து கொள்கிறேன். காலம் மட்டும் உதவியிருந்தால் இருவருக்குமே யாதெனக்கேட்டேன் படத்தை திரையிட்டுக் காண்பித்து மகிழ்ந்திருப்பேன்.

Love and respects to KB Sir, My dad ISR and dear friend Murali.

#KBalachander #ActorISR #Murali

Wednesday, June 22, 2022

ரஜினி முகமே இல்லாமல் ரஜினி பட போஸ்டர் அறிமுகம்.

Rajini's Jailer first look poster
இதற்கு முன்பு இப்படி வெளியானதில்லை என நினைக்கிறேன். அவருடைய அடுத்த படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் இரத்தம் படிந்த ஒரே ஒரு கத்திதான் இருக்கிறது.

கமல் நடித்த விக்ரம் பட வெற்றிதான் இந்த போஸ்டருக்கு காரணமாக இருக்குமோ என எனக்குத் தோன்றுகிறது. விக்ரம் படம் முழுவதும் காட்சிக்குக் காட்சி இரத்தம் தெறித்தது. இரசிகர்களும் அதற்கு அமோக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். கபாலியைத் தவிர ரஜினி படங்களில் இந்த அளவுக்கு வன்முறைக் காட்சிகள் இருந்ததில்லை. ஆனால் ஜெயிலர் படம் விக்ரமைப் போலவே ஆக்சன் மசாலாவாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மாற்றத்திற்கு ரஜினி இரசிகர்களின் அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். விக்ரம் வெற்றி பெற்ற பின் நெல்சனை பலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். லோகேஷ் கமலை பயன்படுத்தியது போல விஜய்யை பீஸ்ட் படத்தில் பயன்படுத்தவில்லை என்று விஜய் இரசிகர்கள் ஒரு பக்கம் வறுத்தெடுத்தெடுத்தார்கள். மறு பக்கம் ரஜினி இரசிகர்கள், தலைவரை வேஸ்ட் பண்ணிடாத, விக்ரம் போல அதிரடியாக இருக்கணும் என்று ஆன்லைனில் நெருக்கடி தந்திருப்பார்கள்.
லோகேஷே ஒரு பேட்டியில் இது பற்றி வருத்தப்பட்டார். நெல்சனுக்கு தேவையில்லாத நெருக்கடி கொடுப்பதாக அவர் பேட்டியில் குறிப்பிட்டார். அந்த நெருக்கடியின் விளைவுதான் இரத்தம் படித்த கத்தி ஜெயிலர் போஸ்டராக வெளி வந்திருக்கிறது.
படம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. ஆனால் போஸ்டர் இரசிகர்களை இரத்தம் பார்க்கத் தயாராக இருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறது.
இப்போதைக்கு ஜெயிலர்கள் இரசிகர்கள்தான். ரஜினியும், நெல்சனும் கைதிகளாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
- ISR Selvakumar