Showing posts with label மாத்தி யோசி. Show all posts
Showing posts with label மாத்தி யோசி. Show all posts

Wednesday, March 21, 2012

மின் சேகரிப்பு திட்டம் - தமிழகஅரசுக்கு ஒரு யோசனை

ஜெயலலிதா செய்ததிலேயே உருப்படியானது மழை நீர் சேகரிப்பு திட்டம்தான்.  இன்று வரையில் இந்த திட்டம் மக்களும், அரசும் சேர்ந்து வெற்றிகரமாக மழை நீரை சேகரிக்க, உதவுகிறது. இதே பாணியில் மின்சாரத்தையும் சேகரிக்கலாம்.

ஆறரை கோடி மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில், குறைந்தபட்சம் ஒரு கோடி குண்டு பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சி.எஃப்.எல் குழல் பல்புகளை பயன்படுத்தினால், உடனடியாக 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.


இதை நான் சொல்லவில்லை. பதவிக்கு வந்தவுடன், ஜெயலலிதா அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பிலேயே இது இருக்கிறது.  இதை நிறைவேற்றினாலே, 500 மெகாவாட் மிச்சமாகிவிடும். இந்த தகவலும் அதே கொள்கைக் குறிப்பிலேயே இருக்கிறது. மிச்சப்படுத்துவதே உற்பத்திக்கு சமம், எனவே அணு உலைக்குப் பதிலாக இதை பரிசீலிக்கலாம்.


ஆனால் ஜெயலலிதாவோ போலீஸ் மிரட்டல்களை வைத்துக் கொண்டே ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இருக்கட்டும் அது அவர் ஸ்டைல். சங்கரன் கோவிலில் கால்கடுக்க நின்று அலுத்துவிட்டது போலிருக்கிறது. தற்போது கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்ட தமிழக போலீசார் கூலிங்கிளாஸை மாட்டிக் கொண்டு, சந்துக்கு சந்து நின்று கொண்டிருக்கிறார்கள். 


இப்படி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அணு உலையை உடனே இயக்கினாலும் மின்சார உற்பத்தியாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் என்கிறார்கள். கூடங்குளத்தின் உச்சபட்ச  உற்பத்தி 1000 மெகாவாட். ஆனால் தற்போது 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யுமாம். அதில் கிட்டத்தட்ட 50 மெகாவாட்டை கூடங்குளமே செலவிழித்துவிடுமாம். மீதி இருப்பது 350 மெகாவாட்தான். அதை கூடங்குளத்தில் இருந்து மாநிலத்தின் மற்றபகுதிகளுக்கு எடுத்து வரும்போது, வழியிலேயே 70 மெகாவாட் லீக் ஆகிவிடுமாம். மீதி உள்ள 280 மெகாவாட்டில் பாதியை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். எனவே இத்தனை அமர்க்களத்திற்கும் பிறகு தமிழகத்துக்கு கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான்.

எனவே அணு உலைக்கு பதிலாக, ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச சி.எஃப்.எல் பல்புகளை வழங்கலாம். வீட்டுக்கு வீடு குண்டு பல்புகளை தூக்கி எறிந்துவிட்டு, சி.எஃப்.எல் பல்புகளை பயன்படுத்தச் சொல்லலாம். இதனால் நமக்கு 500 மெகாவாட் மிச்சமாகிவிடும்.



இந்த தகவல்கள் அனைத்தையும் தனது ஓ பக்கங்களில் ஞாநி அழகாக எழுதியுள்ளார். ஜெயலலிதாவுக்கு அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அர்த்தமுள்ளவை. ஜெயலலிதா பதில் சொல்லப்போவதில்லை என்றாலும், நீங்கள் அக் கேள்விகளை தெரிந்து கொள்வதில் தவறில்லை. இங்கே சொடுக்குங்கள்!



Friday, March 9, 2012

ஒய் திஸ் உலை வெறி - பட்டாசாய் ஒரு பாட்டு!

கூடங்குளம் போல ஒரு அணு உலையை நிறுவினால் 50 வருடங்களுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் அதனால் ஏற்படும் கழிவுகளை 1,00,000 வருடங்களுக்கு பத்திரமாக எங்காவது பதுக்கி வைக்க வேண்டும். அதற்காக செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மனிதனின் வாழ்வாதாரம் நிச்சயமாக பாதிக்கப்படும் என்கிறார்கள் அணுஉலைக்கு எதிராகப் போராடும் விஞ்ஞானிகள்.

உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய விஞ்ஞானி (Physicist) திரு. ஹேன்ஸ் பீட்டர் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அவர் சொல்வதை கவனியுங்கள். எந்த அணுஉலையும் 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல. அதற்கு உத்தரவாதம் தரும் எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.

அணு உலையால் ஏற்படும் ஆபத்துகளை விட, அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கிறார். சுற்றுப்புறச் சூழல் பாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால், அணுக் கழிவுகளைக் கொண்டு அணு குண்டு தயாரிக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.

அணு உலை பாதுகாப்பானது என்று வைத்துக் கொண்டாலும், இன்னும் சில 100 வருடங்களில் அது இயங்கத் தேவையான யுரேனியமும் தீர்ந்துவிடும். அப்போது இந்த அணுஉலைகள் அனைத்தும் இயங்காமல் நின்றுவிடும். அப்படி இயங்காமல் போகக்கூடிய அணுஉலைகளை மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காமல், எப்படி இடித்துத் தள்ளுவது? அதற்கு திட்டங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்ன? என்று தொடர் கேள்விகள் எழுப்புகிறார். எனவே மாஃபியா கொள்ளைக்காரர்களைப் போல பூமியிடமிருந்து இயற்கை கனிமங்களை திருடி, மக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவதை உடனே கைவிடுவோம். சூரியக் கதிர்களை நோக்கி நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

சூரியக் கதிர்களை உள்வாங்கி, சேமித்து அதனால் மின் சக்தி உட்பட வித விதமான சக்திகளை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பக்கவிளைவுகள் இல்லாத இவற்றில் நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்களை தேசப்பற்று இல்லாத தீவிரவாதிகள் என்று அரசுகள் முத்திரை குத்த முயற்சித்து வருகின்றன. ஆனால் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசுகளின் இந்த சூழ்ச்சிக்கு அஞ்சாத இளைஞர்கள் சிலர் ஒரு அருமையான மியூசிக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

அணு உலைக்கு எதிரான இந்த அருமையான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை நான் மனமார வரவேற்கிறேன். இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்புகளை தர வேண்டும்.

எரிதழல் படைப்பகம் மற்றும் அதன் குழவினர் அனைவருக்கும் என் அன்பும், ஆதரவும்.

Saturday, February 25, 2012

மாத்தி யோசி - சக்ஸஸ்!

வகுப்பறையாக இருந்தாலும், இன்டர்நெட் அரட்டை அறையாக இருந்தாலும், எனக்கு மாணவர்களுடன் பழகுவது மிகப் பிடிக்கும்!  சென்ற வாரம் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மாத்தியோசி! புதிதாக வெளிவரப்போகும் இளைஞர் மாத இதழ்! சென்னைக்கு சற்று வெளியே இருக்கும் பொன்னேரியில் இருந்து வெளிவரப்போகிறது. அதனால் பொன்னேரியில் வசிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய ஆரம்பித்த பின், முதல் இதழை துவக்கலாம் என்று முடிவு செய்தோம்.

முதல் செயலாக, 10வது மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் செய்ய முடிவு செய்தோம். இது தேர்வுக் காலம் என்பதால், மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதுவது எப்படி என்பதே அந்தப் பயிற்சி முகாம்.

கிட்டத்தட்ட 170 மாவணர்கள் ஆர்வமுடன் வந்திருந்தார்கள். மாணவிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதால் மிகச் சந்தோஷமாக இருந்தது.

முதலில் இறுக்கமாக இருந்த மாணவர்களுடன் ஜாலியாக பேசத் துவங்கி அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்து, அன்றைய முகாமுக்கு தயார் செய்தேன். மாணவர்கள் பயம் கலைந்து கலகலவென ஆனார்கள்.

பின்னர் திரு. துரை அரசன் ஒரு உற்சாக உரையாற்றினார். குட்டிக் குட்டி கதைகள், பாடல்கள் என பேச்சு நீண்டதால் ஒரே கரகோஷம்.

தொடர்ந்து தியானம் மற்றும் யோகா! தேர்வுக்கு போகும் முன் மனதையும், உடலையும் கட்டுக்குள் கொண்டு வர சின்னச் சின்ன பயிற்சிகள். ஒரு விளையாட்டு போல அவற்றை பயிற்றுவித்ததால் மாணவ, மாணவிகள் முழு ஈடுபாட்டுடன் பயிற்சிகளை செய்தார்கள்.

இறுதியாக திரு.சுரேகா கண்டிப்பும், நகைச்சுவையும் கலந்து டிப்ஸ்களை அள்ளி வீசினார். வந்திருந்த அனைவரும் கவனம் பிசகாமல் அவருடன் ஐக்கியமாகினர்.

ஒரு நெகிழ்வான கதையுடன் சுரேகா முகாமை நிறைவுறச் செய்தார். வந்திருந்த அனைவருமே ஏழை மாணவர்கள். கதையைக் கேட்ட மாணவர்களின் கண்களில் கண்ணீர். எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு. தன் குடும்பத்தின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற கனவு. என வித விதமான எண்ணங்கள், ஆனால் படித்து நன்றாக பாஸ் பண்ண வேண்டும் என்ற ஒரே இலக்குடன் அனைவரும் விடைபெற்றார்கள்.

பயிற்சியாளர்கள் அனைவரிடமும் மாணவர்கள் ஆர்வமுடன் ஆட்டோகிராஃப் வாங்கியது கண்கொள்ளாக் காட்சி. சினிமா நடிகர்களை மட்டுமல்ல, தங்களுக்கு உதவ முன் வந்திருக்கும் நல் இதயங்களையும் ஆராதிப்போம் என்று அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள்.

கிராமப்புற மாணவர்களிடம் நான் ஒரு முக்கியமான அம்சத்தை கவனித்திருக்கிறேன். வழி காட்ட ஆள் இல்லாத வரை இலக்கின்றி இருக்கிறார்கள். வழிகாட்டி கிடைத்துவிட்டால்,  இலக்கை அடையாமல் விட மாட்டார்கள்.

பொன்னேரி மாணவர்கள் அனைவருக்கும் மாத்தியோசி சார்பாக மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்!