Friday, November 14, 2008

மாணவர்களே எங்களை மன்னியுங்கள்!!

எனது இனிய(?) மாணவர்களே,

இன்றைக்கு உங்கள் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் கல்வியோ, கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளோ அல்ல. 
 இளகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஒளிபரப்பான 'கொலை வெறி' தாக்குதலில் உங்கள் அனைவரையும் பார்த்தேன். சிலர் உதடுகளில் மிரட்டல்,சிலர் உதடுகளில் இரத்தம்.சிலர் கையில் கத்தி, சிலர் கையில் உயிர்.

உங்கள் கல்லூரி மூடப்பட்டதற்கு உங்கள் கையிலிருந்த கத்தியும், சிலரின் உடலில் இருந்த இரத்தமும்தான் காரணம் என்று இந்த ஊரும், உலகமும் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் நீங்களே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

பின் யார்தான் காணரம்?

ஜாதி, மதம், இனம் என நமது சமூகத்தின் அத்தனை அழுக்குகளையும், நாற்றங்களையும் கல்லூரி கட்டிடங்களுக்குள்ளும், வகுப்பறைக்குள்ளும் நாங்கள் பரப்பி வைத்திருக்கிறோம். நீங்கள் அட்மிஷன் வாங்கும்போதிலிருந்தே உங்களை அறியாமல் அதில் காலை வைத்து அழுக்காகிப் போகிறீர்கள்.

இன்றைக்கு ஒவ்வொரு கட்சியிலும் மாணவரணி என ஒன்று உள்ளது. நீங்கள் அதில் ஒரு அங்கம், இதில் தவறில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும் எல்லாக்கட்சிகளுக்கும் ஒவ்வொரு அணி உருவாகியுள்ளது. இதுதான் கோளாறு.

கட்சித் தலைவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்களோ, எப்படியெல்லாம் முறைகேடு செய்கிறார்களோ, எப்படியெல்லாம் வன்முறை செய்கிறார்களோ, எப்படியெல்லாம் அவற்றிலிருந்து தப்பிக்கிறார்களோ அவற்றையெல்லாம் நீங்கள் கல்லூரியில் படிக்கும்போதே அனுபவித்துக் கற்றுக் கொள்கிறீர்கள்.

நாங்கள் எடுக்கிற சினிமாக்களும், சின்னத்திரை சீரியல்களும் வகை வகையான கத்திகளையும், துப்பாக்கிகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விதம் விதமான கொலைவெறிகளை தூண்டியிருக்கிறது. வெறி கொண்டவன் வெற்றி பெறுவான் என்று போதித்திருக்கிறது.

நாங்கள் தேர்ந்தெடுத்த நாடாளும் அரசியல்வாதிகளும், அவர்களை எதிர்க்கின்ற அரசியல்வாதிகளும் அந்த துப்பாக்கிகளையும், கத்திகளையும் நிஜ வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பயன்படுத்தி ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களைக் காட்டித்தான் உங்களை வளர்த்தோம்.

காந்தி கூட மாணவர்களை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் அவர்களை வைத்து வெற்று கோஷம் போடவில்லை. அவர்களை வைத்து ஓட்டு சேகரிக்கவில்லை. அவர்களை வைத்து புதிய கல்வி முறைகளையும், திட்டங்களையும் உருவாக்கி சோதித்துப் பார்த்தார்.  ஆனால் நாங்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டோம்.
இன்று எங்களைப் பார்த்து நீங்கள் கத்தியை பயன்படுத்துகிறீர்கள்.
சுருக்கமாகச் சொன்னால் நாங்கள் கற்றுக்கொடுத்ததைத்தான் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீரகள்.


மாணவர்களாகிய நீங்கள் தனியான இனமோ சமூமோ அல்ல. நாங்கள் தான் நீங்கள், நீங்கள்தான் நாங்கள்.

அதனால் நீங்கள் குற்றவாளிகள் அல்ல. உங்களைக் குற்றவாளிகளாக வளர்த்த நாங்கள்தான் குற்றவாளிகள்.

அதனால் எங்களை கத்தியின்றி, இரத்தமின்றி மன்னியுங்கள்.

Monday, November 3, 2008

மேகம் - கொக்கு - கார்டூன் - இந்தியா

ஆரம்பத்தில் கலைந்து போன மேகம் போல இருந்தது.
பிறகு இலங்கை போல தெரிந்தது.
சிறிது நேரம் கழித்து போகோ சேனல் கார்டூன் முகம் போலத் தெரிந்தது.
அப்புறம் ஆப்ரிக்கா போல மாறியது.
கடைசியாக இந்தியா மேப் போல மாறி நிலைத்துவிட்டது.

நான் வளசரவாக்கம் லாமெக் உயர்நிலை பள்ளியில் ஏழாவது படிக்கும்போது தமிழ் வாத்தியார் சட்டையில் எப்போதும் தாடி வைத்த தாத்தா அல்லது கொக்கு அல்லது ஒரு மேகம் இருக்கும். அவருடைய எல்லா சட்டையிலும் பாக்கெட்டின் கீழ் விளிம்பில் அவை இருக்கும். 7பி செக்ஷனில் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழ் வாத்தியாரைப் போலவே, சட்டை முழுக்க யானை, கொம்பு சண்டை, காளை மாடு, கத்தி என வகை வகையாக இருக்கும். ஆனால் அனுமந்தராவ் என்கிற முதல் ராங்க் வாங்குகிற பையன் மற்றும் நீல பாவாடை தாவணியில் வரும் மாணவிகள், இவர்கள் சட்டையிலோ தாவணியிலோ நான் எட்டாவது முடிக்கும் வரை கொக்கு, மேகம் என எதையும் பார்த்ததில்லை.

இன்றைக்கு காலையில் எதிர்பாராத விதமாக என்னுடைய ஜெல் பேனாவை மூட மறந்து பாக்கெட்டில் வைத்துவிட்டேன். காலை 10 மணிக்கு முதல் வகுப்பு முடியும்போது, ஒரு மாணவி பார்த்துவிட்டுச் சொன்னாள். சார் உங்க சட்டையில 'மேகம்'.

பாக்கெட்டின் கீழ் விளிம்பில் இங்க் ஊறி ஊறி ஒரு மேகம் போல பரவியிருந்தது.
பிறகு இலங்கை போல தெரிந்தது.
சிறிது நேரம் கழித்து போகோ சேனல் கார்டூன் முகம் போலத் தெரிந்தது.
அப்புறம் ஆப்ரிக்கா போல மாறியது.
கடைசியாக இந்தியா மேப் போல மாறி நிலைத்துவிட்டது.

இது போல, உங்க சட்டையில என்னைக்காவது மூட மறந்த பேனா, உங்களால் வரைய முடியாத படத்தை வரைஞ்சிருக்கா?

Friday, October 31, 2008

Times of India-யாவா? Crimes of India-யாவா?

சென்னையில் டிஸ்கோதெ கிளப்புகள் எங்கே இருக்கின்றன. அவற்றில் குடித்துவிட்டு இரவு முழுக்க கூத்தடிப்பவர்கள் யார் யார்? அவர்களைப்போல நாமும் எப்படி கூத்தடிப்பது, என்பது பலகாலம் சென்னை வாழ், தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய இரு செய்தித்தாள்களும் வந்தவுடன், அந்த இராத்திரி இரகசியங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் கிடைத்துவிட்டது. தினமும் அர்த்த இராத்திரி வரை ஆடும் அர்த்தமற்ற கும்மாளங்களுக்கு தினமும் ஒரு பக்க கவரேஜ். வாழ்க டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா!

சில மாதங்களுக்கு முன்பு ஈ.சி.ஆர் ரோடில் உள்ள ரெசாட்டுகளில் போலீஸ் திடீர் ரெய்டு நடத்தினார்கள். அரை குறை ஆடைகளுடன் இளைஞர்களும், இளைஞிகளும் கும்பல் கும்பலாக மாட்டினார்கள். ஒரு ரெய்டில் சில பெண்கள் குடித்துவிட்டு ஆடையே இல்லாமல் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார்களாம். இந்தக் கண்றாவிக்கெல்லாம் செக் வைத்தவுடன், டெக்கான் கிரானிகள் சிலிர்த்துக் கொண்டது. போலீஸ் ஏன் அத்து மீறி ரெசாட்டுகளுக்குச் செல்கிறது? என்று கேள்வி எழுப்பியது. சில டெக்கிகள் (முழுக்கப் படித்துவிட்டு அரை குறை உடைகளுடன் கூத்தடிப்பவர்களை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் இப்படித்தான் செல்லமாக அழைக்கின்றன), போலீசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக பேட்டி கொடுத்ததும், அதை டெக்கான் வெளியிட்டதும் கேலிக் கூத்தின் உச்சகட்டம்.

அதே போல இரவு 11 மணிக்கு மேல் குடித்துவிட்டு ஆடக் கூடாது, அப்படி ஆடினால் அந்த கிளப்புகளுக்கு தடை என்று சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் உத்தரவு போட்டது. அவ்வளவுதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பொறுக்கவில்லை. தினமும் அரை மயக்கத்தில் வீடு திரும்பும் உயர் மட்ட(மான) குடி மகன்கள் பலரை பேட்டி கண்டு, 'தனி மனித உரிமையில் தலையிட நீ யார்?', 'எங்கள் சுதந்திரத்தை ஏன் பறிக்கிறாய்?' என்று செய்தி வெளியிட்டது. எது உரிமை? எது சுதந்திரம்? டைம்ஸ் ஆஃப் இந்தியா பதில் சொல்லட்டும்.

அக்டோபர் 25ம் தேதி, இலங்கைத் தமிழர்களின் படுகொலையை கண்டித்து, சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் ஒரே ஒரு பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

Most of the students, drenched in the rain and shivering, stood for hours for a cause they had no clue about.

மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏன் நிற்கிறோம் என்றே தெரியவில்லையாம்.

எதுவும் தெரியாமல் நின்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியே நின்றிருந்தாலும் அதில் என்ன தவறு. டிஸ்கோதெ கிளப்புகளிலும், ஈ.சி.ஆர் ரெசார்ட் மறைவுகளிலும் அரை குறை ஆடைகளுடன் திரிவதைக் காட்டிலும் இது மேலானதே. அந்த மாணவர்களுக்கு இலங்கைப் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் போனதற்கென்ன காரணம்?

சிவாஜி','தசாவதாரம்' போன்ற படங்கள் ரிலீசின் போது மணிக்கணக்கில் நின்று டிக்கெட் வாங்கியவர்களை ஒரு சாதனையாளர்களைப் போல வருணித்தது யார்? டிஸ்கோ இரவுகளில் சிரிப்பவர்களை கலர் போட்டோக்களாக வெளியிட்டு கெளரவப் படுத்துவது யார்? இலங்கைப் பிரச்சனை பற்றி மூடி மறைப்பது யார்? டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள்தான். இந்த பொறுப்பற்ற ஊடகங்களால்தான் இளைஞர்கள் சமூகத்தைப் பற்றி எந்தச் சுரணையுமின்றி வளர்கிறார்கள்.

எனவே டைம்ஸ் ஆஃப் இந்தியா எதுவும் தெரியாமல் நின்ற அந்த மாணவர்களுக்காக ஒரே ஒரு நாள் டிஸ்கோதெ பக்கங்களை நிறுத்தட்டும். நிறுத்திவிட்டு இலங்கைப் பிரச்சனை என்றால் என்ன என்று, ஒரு ஸ்பெஷல் எடிஷன் போடட்டும். தமிழக இளைஞர்களுக்கு எது சுதந்திரம்? எது உரிமை என்று புரிய இது உங்களால் ஆன சிறு முயற்சியாக இது இருக்கட்டும்.

அப்படிச் செய்தால்தான் நீங்கள் Times of India, இல்லையென்றால் நீங்கள் Crimes of India.