Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

Saturday, January 24, 2009

கள்ளக் குறிச்சியில் கள்ளத் தனத்தை ஆரம்பித்துவிட்டார் விஜயகாந்த் : கருத்துக் கணிப்பு முடிவு சரிதான்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் . . .
  • தனியாக நின்று வீணாகப் போவார் என்று 142 பேரும்
  • கூட்டணி சேர்ந்து கல்லா கட்டுவார் என்று 325 பேரும்
வாக்களித்துள்ளார்கள்.

கிட்டத்தட்ட நூறு நாட்கள் நடந்த இந்த கருத்துக் கணிப்பில் பதிவான வாக்குகள் மொத்தம் 467.

ஜனவரி முதல் வாரத்திலேயே நமது கருத்துக் கணிப்பு முடிந்துவிட்டது. ஆனாலும் நமது கேப்டன் உளறுவதற்க்காக காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே நேற்று கள்ளக் குறிச்சியில் நடந்த  நிதியளிப்பு மாநாட்டில் தனது கள்ளத் தனத்தை ஆரம்பித்துவிட்டார்.

அதாவது 100 நாட்கள் முன்பு வரை யாருடனுமே கூட்டணி கிடையாது என்று அலட்டியவர், நேற்று தேசியக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி உண்டு என்று பல்டி அடித்துவிட்டார்.

எனவே விஜயகாந்துக்கு இன்று முதல் பல்டிகாந்த் என்ற பட்டத்தை அளிக்கின்றோம்.

எத்தனையோ அரசியல்வாதிகளை பார்த்துவிட்டோம். இப்போது விஜயகாந்த்தையும் பார்த்துத் தொலைக்கிறோம்.

நேத்து என்னடான்னா கட்சியில ஆளுக்கு 100 ரூபாய் வாங்கி, ஒரு மாசத்துல 100 கோடி ரூபாய் நிதி வசூலிப்பேன்னு சொல்றார். ஆனா நிதியை வைச்சு என்ன செய்வீங்கன்னு கேட்டா வெளியில சொல்ல மாட்டேன் காப்பி அடிச்சிடுவாங்கன்னு ஸ்கூல் பையன் லெவலுக்கு உளறிக் கொண்டிருக்கிறார்.


ஆனா 'ஆனந்த விகடன்' மாதிரி பத்திரிகையே, ஒரு முட்டாள் இரசிகனைப் போல, என்னமோ இவர்தான் தமிழ்நாட்டின் விடிவெள்ளின்னு பத்து வாரம் ஊர் ஊரா போய் ஷோ காட்டுகிறது.


எல்லாம் நம்ம தலையெழுத்து.

வாங்க மிஸ்டர் பல்டி காந்த். வந்து உங்க அடுத்த பல்டியை ஆரம்பியுங்க.

Thursday, December 4, 2008

விஜயகாந்தின் ரியல் பேட்டியும் - ரீல் பேட்டியும்

கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்க ஊழல் செய்தவங்களுக்கு கட்சியில இடம் கொடுத்திருக்கீங்களே?

எங்க கட்சியில பொன்னுசாமி வந்தபிறகுதான் இப்படிச் சொல்றாங்க. நான் கேட்கறேன்.. எந்தக் கட்சியிலதான் ஊழல்வாதிங்க இல்ல.. முந்தின கலைஞர் ஆட்சியில குற்றம் சாட்டப்பட்ட சேடப்பட்டி முத்தையாவும், இந்திரகுமாரியும் இப்போ தி.மு.கவுலதானே இருக்காங்க. ஆக, பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி.. ஆனா நான் செய்தா தப்பு. என்ன நியாயங்க இது? பொன்னுசாமி செய்த தப்புக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்து அதை அவரும் முழுசா அனுபவிச்சுட்டாரு. தண்டனை கொடுக்கறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குத்தானே. பிறகு ஏன் கட்சியில சேர்க்கக்கூடாதுன்னு கேட்கறேன்.. எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. இவர் என்ன, லஞ்சம் தானே வாங்கினாரு.
2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி


இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி விஜயகாந்த்

கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்களே லஞ்சம் வாங்கியிருக்கீங்களே?
எங்க கட்சி சார்புல நான் லஞ்சம் வாங்கின பிறகுதான் இப்படி சொல்றாங்க. நான் கேட்கறேன். எந்தக் கட்சியிலதான் லஞ்சம் வாங்கல. இதுக்கு முன்ன ஆட்சி செய்த கருணாநிதி லஞ்சம் வாங்கலையா? ஜெயலலிதா லஞ்சம் வாங்கலையா? பெரியவங்க செஞ்சா பெருமாள் மாதிரி... நான் செஞ்சா தப்பா, என்ன நியாயங்க இது? கருணாநிதி, ஜெயலலிதா செஞச் தப்புக்கு தண்டனையா அவங்கள ஆட்சிய விட்டு அனுப்பியாச்சு. அவங்களும் அதை ஏத்துக்கிட்டாங்க. தண்டனை கொடுக்கிறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குதான? பிறகு ஏன் லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு கேட்கறேன். லஞ்சம் வாங்கினாதான திருந்த முடியும். எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. நான் என்ன லஞ்சம் தான வாங்கினேன். இது பெரிய தப்பா?

- அடுத்ததும் 2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி
நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் சேருகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வருகிறார்கள்? பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா?

‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க எடுக்கற திடகாத்திரமான முடிவு பிடிச்சிருக்கு.. அதனாலதான் வந்தோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ நடக்குற அரசியல் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி அரசியலைத் தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல எந்த ஆதாயமும் இல்லாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க ஒழுக்கமாகவும், கட்சியோட கொள்கைக்கு கட்டுப்பட்டும் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.

- இதுவும் இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி விஜயகாந்த்

நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் லஞ்சம் வாங்குகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வாங்குகிறார்கள்? மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலா?

‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க வாங்குற லஞ்சம் பிடிச்சிருக்கு.. அதனாலதான் வாங்கறோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ மத்த கட்சிகள் வாங்குற லஞ்சம் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி லஞ்சத்தை தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல மூலமா எந்த லஞ்சமும் வாங்க முடியாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு லஞ்சம் கிடைக்க ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் கட்டுப்பட்டு் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.


- இதுகூட 2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி

அடுத்த மாநாடு எப்போது?

மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களுக்கு அதிக செலவு வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ நான் டெம்போ வேன்ல பிரச்சாரம் பண்ணினேன். மீட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.

- இதுகூட இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி - நன்றி விஜயகாந்த்

அடுத்த மாநாடு எப்போது?

மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை (குவார்டர் அடிச்சுட்டு வந்தாலும்) ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களையும் லஞ்சம் வாங்கி அதிக வசூல் செய்ய வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ லஞ்சப் பணம் வெளியில தெரிஞ்சிடுமேன்னு நான் டெம்போ வேன்ல பதுக்கி வச்சுட்டு பிரச்சாரம் பண்ணினேன். கட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.

2006ல் கல்கிக்கு அளித்த ஒரு பேட்டியின் இன்னொரு பகுதி

நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

என்னோட திட்டங்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.

2011ல் நமக்கு அளிக்கப் போகும் பேட்டியின் இன்னொரு பகுதி
நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன ஊழல் வைத்திருக்கிறீர்கள்?

என்னோட ஊழல்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.

Monday, October 27, 2008

ஜெ, வை.கோ, விஜயகாந்த், சூப்பர் ஸ்டார்களுக்கு த.பாண்டியனின் யோசனை

தமிழ் சினிமாவைப் போலவே, தமிழக அரசியலிலும் கிளாமருக்குத்தான் மரியாதை. அந்த வகையில் தமிழக கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டு மீடியாக்களுக்கு கடைசி பட்சம்தான். அதனாலேயே பல நேரங்களில் அவர்களின் தெளிவான உருப்படியான சிந்தனைகள் மற்றும் யோசனைகள் தமிழக மக்களைப் போய்ச் சேருவதில்லை. இலங்கைத் தூதர் பேசில் ராஜபக்ஷே சென்னை வந்து சென்ற பின்னர் இலங்கைப் பிரச்சனை மீண்டும் வெறுமனே கருணாநிதியை மட்டும் சுற்றும் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி த.பாண்டியன் அருமையான சில யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.

அடுத்த கட்டமாக கருணாநிதி இந்த யோசனைகளை பரிசீலித்து ஆவண செய்ய முயற்சிக்கலாம்.

  • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் தொடர்பாக நேஷனல் செக்யூரிட்டி அட்வைஸர் எம்.கே. நாராயணன், ஃபாரின் செக்ரட்டரி ராகவன் ஆகியோரின் பரிந்துரைகளைக் கேட்பதை இந்திய அரசு உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்குப் பதிலா தமிழர்களை அந்தப் பொறுப்பில் அமர்த்த வேண்டும்.
  • இலங்கை அரசு அனுமதித்தால் இரண்டு தமிழக மத்திய மந்திரிகள் அல்லது தமிழக எம்.பிக்கள் இருவரை பிரணாப் முகர்ஜியுடன் இலங்கைக்கு அனுப்பி நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
  • அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சாராத மருத்துவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், பெளத்த மத பிட்சுக்கள், மெளல்விகள், கிறித்துவ பாதிரியார்கள், இந்துசாதுக்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து, நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்களுடைய கண்காணிப்பில் வழங்க வேண்டும்
  • திரை இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரின் பேச்சு, வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட பேச்சே தவிர அரசியல் அறிக்கைகள் அல்ல. அதனால் அரசு அவர்கள் விஷயத்தில் கடுமையைக் குறைக்கலாம்
கருணாநிதியை காய்ச்சி எடுக்கும் பதிவர்கள் இந்த யோசனையை உரக்கச் சொல்லலாம்.
தமிழக போலீஸ் என்னை கைது செய்ய முயற்சி செய்கிறது என்று போலிக் கூச்சல் போடாமல் ஜெயலலிதா இந்த யோசனைகளை கருணாநிதிக்குச் சொல்லலாம்.
வருங்கால முதல்வர் என்று தன்னை வருணித்துக் கொள்ளும் விஜயகாந்த், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் மக்கு மாதிரி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்காமல், இதை அப்படியே காப்பியடித்து, கருணாநிதியை நிர்பந்திக்கலாம்.
வை.கோ ஜெயிலுக்குள்ளிருந்துகொண்டே, புலிகள் ஆதரவை விடாமல், அ.தி.மு.க அம்மாவை கெட்டியாக பிடித்துக் கொண்டு இந்த யோசனைகளை செய்யச் சொல்லி கர்ஜிக்கலாம்.
நவம்பர் 1ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் நடிகர்கள், சீமான், அமீர் கைதுகளால் தொடை நடுங்கி மெளனவிரதமிருக்காமல், இந்த யோசனைகளை தமிழக முதல்வருக்கு ஒரு வசனமாக அவரவர் ஸ்டைலில் படித்துக் காட்டலாம்.

Saturday, October 25, 2008

'கருப்பு எம்.ஜி.ஆர்' என்பவரை காணவில்லை

அன்புடையீர்,

எங்கள் அன்பு கேப்டன் விஜயகாந்த்தை ஈழத் தமிழர்கள் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து மூன்று நாட்களாக காணவில்லை.

முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகக் கூடிய வயது. பார்ப்பதற்கு கருப்பாக எம்.ஜி.ஆர் போலவே இருப்பார். நான்தான் கேப்டன் கேப்டன் என்று சொல்லிக்கொண்டு திரிவார்.

வடிவேலு வீட்டில் கல்லெறிந்துவிட்டு, சன் டிவியில் லைவ் பேட்டியில் கருணாநதியை திட்டியபோது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இளைஞர் மாநாட்டிற்காக சென்னையில் ஒவ்வொரு இரண்டடிக்கும் ஒரு பேனரில் இரண்டு கையையும் விரித்தபடி சிரித்து போஸ் கொடுத்திருந்தாரே அதிலாவது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இலங்கைப் பிரச்சனையைப் பற்றி 'இவரைத் தவிர வேறு யாரும் பேசியதில்லை' என்று அவருடைய மனைவியும், தே.மு.தி.கவின் அண்ணியும் கொடுத்த சர்டிபிகேட் ஒன்று அவர் கையில் உள்ளது.

கடைசியாக ஆனந்தவிகடன் நிருபர்கள் மற்றும் மச்சினன் சுதிஷிடன் கோயம்பேடு மார்கெட் பக்கத்தில் நின்றுகொண்டு அரிசிப் பிரச்சனையை ஏதோ ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருந்தார்.

ஆனால் இலங்கையில் பிரச்சனை ஆரம்பித்தவுடன், எங்கள் அன்பு கேப்டன், கிரிக்கெட் மேட்சில் டிரிங்ஸ் கொடுக்க வந்த சின்னப் பையனைப் போல திடீரென்று மாயமாக மறைந்துவிட்டார்.

எப்போதுமே நான் தனியாகத் தான் நிற்பேன் என்று அலறிக்கொண்டிருப்பார். அதனால் நேற்று 60 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டிருந்த மனிதச் சங்கிலியைத் தாண்டி, 61வது கிலோ மீட்டரில் ஏதாவது ஒரு இடத்தில் தனியாக இருப்பார் என்று நிறைய டி.வி. கேமராக்கள் மற்றும் பத்திரிகை கேமராக்கள் உதவியுடன் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எங்கேயோ போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

அவரை யாராவது பார்த்தால், 2011ல் தேர்தல் முடியும் வரை, இந்திய எல்லைகளுக்கு அப்பால், யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைக்கும்படி அன்புடன் வேண்டி, கெஞ்சி, கூத்தாடி கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் ஆசான் விஜயகாந்தை 2011 வரை ஒளித்து வைப்பவர்களுக்கு இலவச முதல்வர் பதவி உண்டு. அது எப்படி இலவசமாக கொடுக்க முடியும் என்று கேட்காதீர்கள், சொன்னால் கருணாநிதி அதை காப்பி அடித்து மீண்டும் முதல்வர் ஆகிவிடுவார் என்பதால் அதைச் சொல்ல மாட்டோம்.


இப்படிக்கு
இலங்கைத் தமிழர்கள் பற்றி கவலைப் படும் தமிழர்கள் (தெலுங்கர்கள் அல்ல)