Showing posts with label yadenakaten. Show all posts
Showing posts with label yadenakaten. Show all posts

Wednesday, April 1, 2026

Skater Girl (2021) - விமர்சனம்

 

ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பிரேரணா (ரேச்சல் சஞ்சீதா) என்ற பழங்குடி இன சிறுமியின் கதை இது. சாதியக் கட்டுப்பாடுகளும், வறுமையும் சூழ்ந்த அந்தச் சூழலில், எதேச்சையாக அங்கே வரும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் மூலம் 'ஸ்கேட்போர்டிங்' (Skateboarding) விளையாட்டு அறிமுகமாகிறது. வெறும் விளையாட்டாகத் தொடங்கும் அந்தப் பயணம், ஒரு பெண்ணின் சுதந்திரப் போராட்டமாக மாறுவதே திரைக்கதை.

பார்க்கும்போது தோன்றியது: நிச்சயமாக இது ஒரு “சிங்கப் பெண்ணே” பாட்டுக்கு ஏற்ற திரைக்கதை. ஆனால் கதைக்குள் கதையாக கிராமத்தைத் தேடி ஒரு ஃபாரின் தேவதை வருவதும், அவருக்கும் அந்த கிராமத்துக்கும் உள்ள தொடர்பும் ஒரு கவிதை. அவர்கள் இருவருக்குமான அந்தப் பிணைப்பு திரையில் மிக அழகாகப் பதிவாகியுள்ளது.

நடிப்பு: புதிய முகமான ரேச்சல் சஞ்சீதாவின் நடிப்பு அபாரம். அந்தச் சிறுமியின் கண்களில் தெரியும் அந்தத் தேடலும், ஸ்கேட்போர்டில் ஏறி நிற்கும் போது கிடைக்கும் அந்த தன்னம்பிக்கையும் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொள்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்: இயக்குநர் மஞ்சுாரி மகஜானி, ராஜஸ்தானின் நிலப்பரப்பை அதன் ஆன்மா சிதையாமல் காட்டியுள்ளார். குறிப்பாக அந்த ஸ்கேட்போர்டிங் பூங்கா உருவான விதமும், அதற்காக ஊர் மக்கள் காட்டும் எதிர்ப்பும் எதார்த்தம்.

படம் பற்றிய ஒரு சிறு குறிப்பு (Filmography Details):

  • திரைப்படம்: Skater Girl (2021)

  • ஓடிடி தளம்: Netflix

  • வகை (Genre): Sports / Drama

  • நடிகர்கள்: ரேச்சல் சஞ்சீதா, அமித் தயாள், அமித் மோடி

  • இயக்கம்: மஞ்சுாரி மகஜானி (Manjari Makijany)

மாத்தியோசி (My View): இது ஒரு சின்ன படம்தான், ஆனால் பத்து நிமிடங்களைத் தாண்டியதுமே நெட்பிளிக்ஸ் பிளே ஆகாமல் வெளியேற்றிக் கொண்டே இருந்தது. போஸ்டரிலேயே ஒரு ஈர்ப்பு இருந்ததால் திரும்பத் திரும்ப முயற்சி செய்து பார்த்தேன். வொர்த்!

அமெரிக்காவின் 'Lords of Dogtown' ஸ்கேட்போர்டிங் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசியது என்றால், 'Skater Girl' இந்தியச் சூழலில் ஒரு விளையாட்டின் மூலம் எப்படிச் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதைப் பேசுகிறது. ஏ.ஐ (AI) காலத்தில் நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னும் மாறாமல் இருக்கும் சில இறுக்கமான மரபுகளை இந்தப் படம் மிக மென்மையாகக் கேள்வி கேட்கிறது.

பார்க்கலாமா? கண்டிப்பாக. மனதிற்கு நெருக்கமான, ஒரு பாசிட்டிவ் எனர்ஜி தரும் படங்களைத் தேடுபவர்கள் மிஸ் பண்ணாதீர்கள்.

  • ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்

Monday, May 6, 2024

யாதெனக்கேட்டேன் - Focus Audience Show!

 

யாதெனக்கேட்டேன்!

Focus Audience Show!
வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி!

குறிப்பிட்ட சிலருக்கு படத்தை திரையிட்டு அவர்களின் கருத்தைக் கேட்டறியும் சிறப்புக் காட்சிக்கு Focus Audience Show என்று பெயர். படத்தை திரையிடுவதற்கு முன் பார்வையாளர்களின் கருத்தை உள்வாங்கிக்கொள்ள இந்தக் காட்சி உதவும். இதன் மூலம் படத்தின் நிறை குறைகளை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். கடந்த வாரம் ஒரு Focus Audience Show ஏற்பாடு செய்திருந்தோம். வந்திருந்தவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். அதற்கு ஏற்ப யாதெனக்கேட்டேன் மெருகேறியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பொன். காசிராஜனை பாராட்டு மழையில் நனைத்துவிட்டார்கள். மிக்க மகிழ்ச்சி!
அடுத்த Focus Audience Show-விற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல். அறிவிப்பு விரைவில்!

#isrselvakumar - #ISRventures
#YadenaKaten #FocusAudienceShow #Preview

Tuesday, April 30, 2024

ஜெயமோகனும் கண்ணதாசனும்!

அழைப்பு!

ஜெயமோகனின் பிரமாதமான சிறுகதை! இன்று காலையில் வாசித்தேன். ஆழமான அறிவியல் புனைவு. மனோஜ்நைட் ஷியாமளன் இக்கதையை வாசித்தால் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் தயார் செய்துவிடுவார்.
“நாம் நம்மையன்றி எதையும் அறிந்ததில்லை” என்கிறது இந்தக் கதை. இதுதான் நான் இயக்கியிருக்கும் ”யாதெனக்கேட்டேன்” திரைப்படத்தின் மையப் புள்ளி. அவர் முழுக்க முழுக்க கற்பனையான ஒரு வெளியைப் படைத்து அறிவியல் புனைவாக எழுதியிருக்கிறார். நான் ஒரு குடும்பக் கதைக்குள் இந்த சிந்தனையை பொருத்த முயற்சி செய்திருக்கிறேன்.
மிகவும் நுட்பமான இந்தச் சிந்தனையை கதையாக எழுதும்போது மையப்புள்ளியிலிருந்து எதைநோக்கி கதையை செலுத்தவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் வேண்டும். அதனை நான் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையிலிருந்து பெற்றேன்.
ஜெயமோகனின் இந்தக் கதையை வாசித்துவிட்டு, கண்ணதாசனின் யாதெனக்கேட்டேன் கவிதையை வாசியுங்கள், அல்லது கண்ணதாசனிலிருந்து ஜெயமோகனுக்குச் செல்லுங்கள். யாதெனக்கேட்டேன் திரைப்படம் இவ்விரு சூரியன்களின் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
என் நீண்ட நண்பர்கள் பட்டியலில் சிலர் மட்டும் யாதெனக்கேட்டேன் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் என் கருத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன். விரைவில் யாதெனக்கேட்டேன் உங்கள் அனைவரின் பார்வைக்கும் வெளியாகும்.
ஜெயமோகனின் அழைப்பு சிறுகதை முதல் கமெண்டில் உள்ளது. அடுத்த கமெண்டில் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையை கொடுத்திருக்கிறேன்.

Saturday, August 13, 2022

கார்த்தி - மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

”பருத்தி வீரன் வெளியாகுமா என்று சந்தேகம் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் நடக்குமா? பாதியிலேயே நின்று விடுமா என்று மனது தளர்ந்து போயிருந்தது. அந்த சமயத்தில் மனம் சோர்ந்து போனபோது என்னை தூக்கி நிறுத்தியது கமல் சாரின் மருதநாயகம் காட்சிகள்தான்.
பருத்தி வீரன் துவக்க விழாவிற்கு அழைக்க அப்பாவுடன் கமல் சார் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அவர் மருதநாயகம் டிரையலரையும், ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளையும் காட்டினார். மிரண்டு போய்விட்டேன். உலக சினிமாக்கள் எதிலும் நான் பார்த்திராத காட்சி அமைப்பு, உடை, ஷாட் என பிரமிக்க வைத்தது.
மருதநாயகம் படத்தின் துவக்க விழாவுக்கு அப்பாவுடன் நான் சென்றிருந்தேன். விழாவெல்லாம் முடிந்து அடுத்த நாள் யாரோ என்னை இடித்துவிட்டுச் சென்றார்கள். அது இரும்பு கொண்டு என்னை இடித்தது போலிருந்தது. திரும்பிப் பார்த்தால் கமல் சார். இடுப்பு வரை நீள முடியுடன், உடலை இரும்பு போல வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
ப்பா... அசுர உழைப்பு. கமல் சார் இவ்வளவு உழைத்த அந்தப் படம் நின்று போய்விட்டது. அது நின்று போய்விட்ட வலியை விடவா, என்னுடைய வலி என்று தோன்றியது. எப்போது நான் துவண்டு போனாலும் மருதநாயகம் நின்று போனாலும், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கமல் சாரின் உழைப்புதான் எனக்கு உற்சாகம் தருகிறது. என்னை தோளில் தட்டி தூக்கி நிறுத்துகிறது.
- பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி
கார்த்தியின் இந்த வார்த்தைகளில் ஜெயிக்கக் காத்திருக்கும் ஒவ்வொருக்கும் செய்தி இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் ஆயிரம் வலிகளைத் தாண்டித்தான் சாத்தியமாகியிருக்கிறது. துவண்டு போகாமல் அடுத்தடுத்து செயல்படுபவன்தான் குடும்பத்தாலும், மக்களாலும் கொண்டாடப்படுகிறான். இந்த நம்பிக்கையில்தான் நாங்கள் யாதெனக்கேட்டேன் படத்தை தயாரித்திருக்கிறோம். விரைவில் திரையைத் தொடுவோம். இரசிகர்களின் இரசனைகளுக்கு உணவளிப்போம். வெற்றி பெறுவோம்.
இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Friday, July 8, 2022

யாதெனக்கேட்டேன் ஸ்பெஷல் ஷோ அனுபவம் 01

நான் இயக்கியுள்ள #யாதெனக்கேட்டேன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி!

ஒரு ஸ்கிரிப்ட் எழுதும்போதே கிட்டத்தட்ட இது எந்த வயதினருக்கு பிடிக்கும் என்பது தெரிந்துவிடும். ஆண்களுக்குப் பிடிக்குமா, பெண்களுக்குப் பிடிக்குமா, குழந்தைகளுக்குப் பிடிக்குமா என்பதையும் ஒரு ஸ்க்ரிப் ரைட்டரால் ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.

எனவே என் அனுமானத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் வரவழைத்து (Focus Audience) அவர்களிடம் படத்தைப் பற்றிய கருத்து கேட்பதற்காக திரையிடப்பட்ட சிறப்புக் காட்சி இது.

அழைத்த அனைவரும் வந்திருந்து கண்டு இரசித்தார்கள். அவர்களுடன் என் நலம் விரும்பிகளும், நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டார்கள்.

இவர்களுக்கு மத்தியில் படத்தை வியாபார ரீதியாக மதிப்பீடு செய்பவர்களும் படத்தை இரசித்தார்கள்.

விரைவில் யாதெனக்கேட்டேன் வெற்றிகரமாகத் திரைக்கு வரும் செய்தி வரும். அதுவரையில் அவ்வப்போது சில புகைப்படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் யாதெனக்கேட்டேன் படத்தை தயாரித்ததும், இயக்கியதும் அழகான அனுபவம். படத்தின் கருவும் ஒரு மாபெரும் அனுபவத்தைப் பற்றியதுதான். விரைவில் நீங்கள் யாதெனக்கேட்டேன் படம் பார்ப்பீர்கள். அந்த அனுபவத்தை உணர்வீர்கள். பார்த்தபின் நான் கூறியதை புன்னகையுடன் ஏற்பீர்கள்.

திரைப்படம் வெளியாகும் முன் எனது அன்புக்குரியவர்கள் நூற்றுக்கணக்கானவர்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் எனக்கு உந்து சக்தியாக இருக்கிறார்கள். அதனால் அனைவரையும் எப்படியாவது நேரில் சந்திப்பேன்.

Thanks to YadenaKaten cast & crew for their contribution and support. As the captain of the ship I also take responsibility to promote them along with the movie. The "YadenaKaten Experience" begins.

Dear Makkas, soon lets meet for a beautiful YadenaKaten Experience.

மகிழ்ச்சி!

#YadenaKaten #preview