Showing posts with label ISR. Show all posts
Showing posts with label ISR. Show all posts

Thursday, July 25, 2024

சித்ரா லட்சுமணனுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கா?


சார் வணக்கம்! நல்லா இருக்கீங்களா?

நேற்று இனிய ஆச்சரியமாக சித்ரா லட்சுமணன் அழைத்தார். நான் வணக்கம் சொல்வதற்கு முன், மளமளவென்று அவருடைய பாணியில் நலம் விசாரித்தார்.
அப்பாவின் திரைப் பெயர் ஐ.எஸ்.ஆர், முழுப்பெயர் ஐ.எஸ்.ராமச்சந்திரன்தானே என்றார்.
ஆமாம் சார், என்ன விஷயம் என்றேன்.
அப்பாவின் முழுப்பெயரைக் கேட்டு கேள்வி வந்திருக்கிறது. அதனால் முழுப்பெயரை உறுதி செய்வதற்காக உங்களை அழைத்தேன் என்றார்.
இரண்டு ஆச்சரியங்கள். இன்னமும் யாரோ ஒருவர் எங்கள் தந்தையை நினைவு வைத்திருக்கிறார். அதைவிட ஆச்சரியம், கூகுள், விக்கிபீடியாவைத் தேடி பதில் தராமல், மெனக்கெட்டு குடும்பத்தாரை அழைத்து உறுதி செய்து கொண்ட திரு. சித்ரா லட்சுமணன்.
”எப்படியெல்லாம் கேள்விகள் வருது பாருங்க”, என்றார்.
”சார் அந்தக் கேள்விகள் உங்களிடம் வருவதற்கு காரணமே, நீங்கள் எப்படியும் (உறுதி செய்யப்பட்ட) பதில் தந்து விடுவீர்கள் என்று நாங்கள் எல்லோருமே நம்புகிறோம்”, என்றேன்.
ஆபிஸ் வாங்க, என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
விரைவில் சந்திப்பேன். அவரிடம் கேட்பதற்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் பதில்கள் வாங்கி வருகிறேன்.

Monday, August 22, 2022

ISR 5 நிமிட குறும்படப் போட்டியாளர்களுக்கு இந்தியா எக்ஸைட் நிறுவனம் வழங்கும் டெக்னாலஜி சப்போர்ட்.

5 நிமிட குறும்படப் போட்டியில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ளவும், மற்ற இயக்குநர்களோடு உரையாடவும், தங்கள் அனுபவம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளவும் தனது டெக்னாலஜி அனுபவத்தை வழங்குகிறது இந்தியா எக்ஸைட்.

இதன் மூலம் பங்கேற்பாளர்கள் நண்பர்களாக மாறவும், போட்டி முடிந்த பின்னும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இயங்கவும் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது.

இதனை சாத்தியப்படுத்தியுள்ளதற்காக ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இந்தியா எக்ஸைட் நிறுவனத்துக்கு நன்றி!

Happy for the association with India Excite IT Solutions PVT LTD.

For ISR 5 Minute Short film contest, India Excite will offer remote support for cloud-based interactions and submissions for the contestants via phone, email and chat.

#IndiaExcite #TNOU #StellaMaris #ISRventures #ISR5minuteShortFilmContest #TechSupport

Sunday, July 15, 2012

குமுதம் ராதாவை சொர்ணாக்கா என்கிறது. நானோ . . .

மீடியாக்களின் மேல் உள்ள நம்பகத்தன்மை குறைந்துவிட்டதா?
  1. ஆம்
  2. இல்லை
இரண்டில் ஒரு பதிலை சொல்லிவிட்டு அடுத்த பாராவுக்குச் செல்லுங்கள்

-----------------------------------------------------------------------------------------------------

லண்டன் டெலிகிராஃப் பத்திரிகை நொடித்துப் போயிருந்த சமயம். பெரிய வருமானம் இருக்காது எனத் தெரிந்தும், பிரிட்டிஷ் மீடியா மன்னர் பீவர்புரூக் அதை விலைக்கு வாங்கினார். அனைவருக்கும் ஆச்சரியம். ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டபோது ஒற்றை வார்த்தையில் அவர் சொன்ன பதில் ‘அதிகாரம்‘

ஆம்! இன்று பத்திரிகை என்பது செய்திகளைப் பகிர்வதோடு மட்டும் அல்லாமல், அரசாங்க அளவில் அதிகாரங்களைப் பகிரவும் முற்படுகின்றன. ஒரு பத்திரிகையால் அதிகார மையத்தை ஊடுருவ முடியுமா என்பவர்களுக்கு, நீராகேட் என்று வர்ணிக்கப்பட்ட டெலிஃபோன் உரையாடல்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என்று சொல்லிக் கொண்ட நீரா ராடியாவுடன் இணைந்து மீடியா பிரபலங்களான வீர்சிங்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) மற்றும் பர்காதத் (என்டிடிவி) ஆகிய இருவரும் நடத்திய அரசியல் பேரங்கள் இன்னமும் நெட்டில் கிடக்கின்றன. மன்மோகன்சிங் மந்திரி சபை தொடர்பாக, கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோரிடம் அவர்கள் பேரம் பேசுவதை இப்போதும் கேட்கலாம்.

ஒரு ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக பத்திரிகை துறை வர்ணிக்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியா போன்ற ஒரு நாட்டில், அது தூணாக இல்லாமல் ஒரு அரசியல் கடப்பாறையாக பல நேரம் செயல்படுகிறது. ஒரு புதிய அரசு உருவாவதற்கும், இருக்கின்ற அரசை அசைக்கவும் பத்திரிகைகள் தற்போது முனைப்பு காட்டுகின்றன. தங்களுக்குப் பிடித்த தலைவர்களை உயர்த்தி, பிடிக்காதவர்களை எந்த முகாந்திரமும் இன்றி விமர்சிக்கின்றன. எனவே அரசியல்வாதிகள் பத்திரிகைகளை தங்கள் வசப்படுத்த முயல்கிறார்கள். விளைவு... இன்று ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ சார்பு நிலை எடுக்காத மீடியாவே இல்லை. நடுநிலை என்பதெல்லாம் பம்மாத்து.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், எங்கள் கட்சி தொடர்பான செய்திகளை, போராட்டங்களை எந்த பத்திரிகையும் வெளியிடுவதிலலை. தொலைகாட்சிகளும் கண்டு கொள்வதில்லை என்று அடிக்கடி குற்றம் சாட்டுவார். இத்தனைக்கும் அவரிடமே மக்கள் தொலைகாட்சி என்றொரு தொலைகாட்சி நிறுவனம் உண்டு.

சமீபத்தில் ஆனந்தவிகடனுக்கு பேட்டியளித்த திருமாவளவன் கூறியிருப்பதை வாசியுங்கள். ராமதாஸ் போலவே அவருக்கும் ஆதங்கம். மீடியாக்கள் எங்களைப் பற்றிய செய்திகளை புறக்கணிக்கிறார்கள். எனவே நாங்களே சொந்தமாக டெலிவிஷன் சேனல் துவங்குவோம் என்று கூறியுள்ளார். காரணம் என்ன? பீவர் புரூக் குறிப்பிட்டுள்ளது போல, அதிகாரம். கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்கும், நிலைப்பதற்கும் விலக்கப்படுவதற்கும் மீடியாக்களின் துணை தேவைப்படுகிறது.

அதிகார மையங்களில் தாங்கள் அழுத்தமாகப் பதிந்து கொள்ள, பத்திரிகைகள் இரு வகையாக அரசியல் செய்கின்றன. வலிந்து வலிந்து சிலரைப் பற்றி தொடர்ந்து (Paid news) எழுதி, அவரைப் பற்றிய மெகா பிம்பங்களை மக்கள் மனதில் விதைக்கின்றன. அல்லது சிலரைப் பற்றி கண்டு கொள்ளாமல், அவர்களைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்வது இன்னொரு வகை. எந்த வகையாக இருந்தாலும், வலிமையான மீடியாவை கையில் வைத்திருப்பவர்கள் அனைவருமே தனிக்காட்டு ராஜாக்கள்தான்.

மன்மோகன் சிங்கை Under Achiever என வர்ணித்து டைம் பத்திரிகை இந்த வாரம் ஒரு கட்டுரை வடித்துள்ளது. உடனே இங்கே பிரதான கட்சிகள் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்துவிட்டன. இதே போல வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியை பயன்படுத்தினார். அப்போதும் இதே டைம் பத்திரிகை வாஜ்பாய் ஆட்சியைப் பற்றி ‘Asleep at the Wheel‘ என்று கேலி செய்தது. அவர்களுடைய கணிப்பு சரியா? தவறா? அது தொடர்பான சர்ச்சைகள் தேவையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். இக்கட்டுரைகள் வெளியாகும் தருணங்கள்தான் கவனிக்கப்படவேண்டியவை. இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்கக்கூடும் என்று மக்கள் யோசிக்கத் துவங்கும்போது, இவர் வேண்டாம், அவர் வேண்டும் என்று மக்கள் மனதில் சில எண்ணங்களை விதைக்கிற வேலையை இக்கட்டுரைகள் கச்சிதமாகச் செய்கின்றன. எதற்கு? வேறெதற்கு? அதிகாரம்தான்.

அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால், அவர்களுக்கே அதிகாரம் கிடைத்தது போலத்தானே.

--------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச அளவில் டைம் பத்திரிகை ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றால், கடந்தவாரம் கோடம்பாக்க அளவில் ஒரு அதிர்ச்சியை குமுதம் உண்டாக்கியது. நடிகை ராதாவை, சொர்ணாக்கா என்று விமர்சித்திருந்தது. தனது மகள் கார்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெரிய பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை எல்லாம் தன் செல்வாக்கால் மடக்குகிறாராம். ஏற்கனவே யாராவது தேர்வாகி இருந்தால், அவர்களை படத்தைவிட்டே தன் செல்வாக்கால் தூக்கிவிட்டு தன் மகளை நடிக்க வைக்கிறாராம்.

இது போன்ற ‘.....றாராம்‘ என எழுதப்படும் யூகச் செய்திகளை நான் பெரும்பாலும் படிப்பதில்லை. ஆனால் அம்பிகா-ராதா சகோதரிகள் எங்கள் குடும்பத்திற்கு ஓரளவுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அந்த கட்டுரையை வாசித்தேன். இந்த நேரத்தில் நான் அம்பிகா-ராதா சகோதரிகள் பற்றி ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1991ம் வருடம். பிப்ரவரி 6. பாரத் பந்த். ஊரே அமைதியாக இருந்தது. விஹெச்எஸ் டேப்பில் நண்பர்களுடன் ஏதோ ஒரு அல்பசினோ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் இனம் புரியாத மனக் குழப்பம். சிறிது நேரத்திலேயே கும்பகோணத்திலிருந்து ஒரு ஃபோன். மோகமுள் திரைப்படக் குழுவிலிருந்து யாரோ பேசினார்கள்.

‘நீங்க ஐ.எஸ்.ஆரின் பையன் தானே?‘
‘ஆமாம்‘
‘உங்கள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. உடனே கும்பகோணம் வாருங்கள்.‘ இதுதான் தகவல்.

தகவல் கிடைத்ததும், என் அம்மாவிற்கு அழுகை வந்துவிட்டது.
‘உடனே கும்பகோணம் புறப்படு, நானும் உடன் வருகிறேன்‘ என்று கண்ணீர்.
தங்கைகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். குடும்பத்தில் சகஜநிலை சடுதியில் காணாமல் போனது. வேறுவழியில்லை, உடனே புறப்பட்டாக வேண்டிய கட்டாயம். அன்று பாரத் பந்த் என்பதால் பஸ், இரயில் எதுவும் இல்லை. மோட்டர் பைக்கிலேயே போகலாமா என்கிறான் என் தம்பி ரவி. சில நண்பர்கள் தடுத்துவிட்டார்கள்.

அப்போது ராதாவிடமிருந்து ஃபோன்.
‘ஏன் கவலைப் படறீங்க. எங்க காரை எடுத்துட்டுப் போங்க‘
முற்றிலும் எதிர்பாராத உதவி. கேட்காமலேயே கிடைத்த உதவி. விறுவிறுவென்று புறப்படுகிறோம். தங்கைகளுக்கு துணையாக என் தம்பியை வீட்டிலேயே விட்டுவிட்டு என் அம்மா மற்றும் ஒரு நண்பனுடன் நான் புறப்பட்டேன். கார் புறப்படும்போது,
‘சார், பெட்ரோல் பத்தாது‘ என்றார் டிரைவர்.
பெட்ரோலா? பெட்ரோலுக்கு எங்கே போவது. பந்த் காரணமாக பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருந்தன. மீண்டும் அம்பிகா-ராதா இல்லத்திலிருந்து உதவி. யாரிடமோ சொல்லி, எங்கிருந்தோ பெட்ரோல் வந்து சேர்ந்தது. ஒருவழியாகப் புறப்படும்போது கிட்டத்தட்ட மாலையாகிவிட்டது. டிரைவர் தயங்கினார்.

‘சார் எனக்கு கும்பகோணத்துக்கு வழி தெரியாது. அது மட்டுமில்லாம ஹைவேஸில் இரவில் வண்டி ஓட்டி பழக்கமில்லை‘ என்றார்.
மீண்டும் தயக்கமே இல்லாமல் அம்பிகா-ராதா இல்லத்தில் இருந்து உதவி. டிரைவர் மாற்றப்பட்டு புது டிரைவருடன் புறப்பட்டோம். கார் சிறிது தூரம் சென்றவுடனேயே தடால் என்று சத்தம். திடீரென்று துள்ளி நடுரோட்டுக்கு வந்துவிட்ட காளைமாட்டின் மேல் கார் மோதி நின்றுவிட்டது. முற்றிலும் எதிர்பாராமல் காரின் ரேடியேட்டரே பங்ச்சர் ஆகிவிட்டது.

ராதாவுடன் என் தம்பி ரவிகுமார்
‘கார் நகரவே நகராது சார் என்றார் டிரைவர்.
என்னுடைய அம்மா மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார். வீடு திரும்பவும் வழி இல்லை, கும்பகோணம் செல்லவும் வழி இல்லை. என்ன செய்வது? உடைந்த காரில் என் அம்மாவுக்கு நண்பனை துணைக்கு வைத்துவிட்டு, யாருக்கு எப்படி தகவல் தெரிவிப்பது எனப் புரியாமல் ஆளுக்கு ஒரு திசையில் நானும் டிரைவரும் நடந்தோம். ஃபோன் வசதி தேடி எவ்வளவு தூரம் நடந்தேன் எனத் தெரியாது. ஒரு விறகுக் கடையை கண்டுபிடித்தேன். அவர் அருகிலிருந்த ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, யாரையோ எழுப்பி, சம்மதம் வாங்கி, ஃபோன் செய்ய அனுமதி பெற்றுத் தந்தார்.

புதுகார் விபத்துக்குள்ளாகிவிட்டதே, என்று தயங்கித் தயங்கி விஷயத்தை சொன்னேன். மனம் முழுக்க அப்பாவின் உடல் நிலைபற்றிய அபத்திரம், கார் விபத்து பற்றிய அதிர்ச்சி. நான் என்ன பேசினேன் என்பது ஞாபகமில்லை. என்ன ஆச்சரியம், காரைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.

‘நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா‘ என்ற விசாரிப்புதான் அதிகமாக இருந்தது.

‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்‘ எனக் கேட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. விறகுக் கடைக்காரர்தான் ஏதோ அடையாளம் சொன்னார்.
‘அங்கேயே இருங்கள். இன்னொரு காரை அனுப்பி வைக்கிறோம்‘ எனச் சொன்னார்கள்.

என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. அவசரத்துக்கு உதவியாகக் கொடுத்த கார் விபத்துக்குள்ளான பின்னும், அது பற்றிக் கவலை இன்றி, இன்னொரு காரை அனுப்பி உதவிய அந்த நல்ல மனதை இன்னமும் நான் வியக்கிறேன்.

எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர்
அதிர்ச்சி, சோகம், வியப்பு என பல உணர்வுகள் குவியலாக என்னை புரட்டி எடுத்துக் கொண்டிருக்க மறுநாள் என் தந்தையை மருத்துவமனை படுக்கையில் சந்தித்தோம். அதுவே அவருடன் கழித்த இறுதி நாள். ஒரு இரவு முழுக்க மருந்து, மாத்திரை, ஊசி, வலி, மூச்சிறைப்பு என ஒரு உயிரின் இறுதி அவஸ்தைகளை அருகிலிருந்து கவனித்தேன். அதிகாலை எட்டுமணிக்கு எங்கள் தந்தை எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.

‘முடிச்சுட்டியாடா . . . ‘
அவர் இறுதியாக என்னிடம் கேட்ட கேள்வி இதுதான். குட்டி பத்மினி நிறுவனத்துக்காக என்னை ஒரு ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லியிருந்தார். அவர் அதைக் குறித்துதான் என்னைக் கேட்டார். நான் அந்த ஸ்க்ரிப்டை மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ விஷயங்களை முடிக்கவே இல்லை.

அதில் ஒன்று, அம்பிகா-ராதா குடும்பத்தினருக்கு தகுந்த நேரத்தில் நன்றி கூற வேண்டும் என்பது.

எங்கள் தந்தையை அவர் மூச்சு நிற்பதற்குள் ஒரே ஒரு முறையாவது சந்திக்க உதவி செய்த அவர்களின் நல்ல உள்ளங்களை, கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கடந்த பின், இந்தக் கட்டுரையின் மூலம் உலகுக்குச் சொல்ல ஒரு வாய்ப்பு.

நன்றி! உள்ளத்தில் நல்ல உள்ளங்களுக்கு!

Tuesday, October 27, 2009

அவர் - டைட்டில் டிசைன்ஸ் - உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

வடபழனி ராஹத் பிளாசாவில் நான் ஒரு வெஜ் ரோலை சாப்பிட்டு முடிக்கவும், பழனிவேலு பாட்டை கேட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

”பாட்டு நல்லா இருக்கு சார். குதம்பாய், மை டியர் எந்திரா, வானவில் அப்படின்னு எல்லாமே தனித்தனி வெரைட்டியா இருக்கு.  கதை எப்படி இருக்கும்னு கெஸ் பண்ண முடியல. கதை என்ன சார்?”, இது எனது நண்பர் டைட்டில் டிசைனர் பழனிவேலு

”கதையை சொல்வதற்கில்லை. வேண்டுமானால் ஒன் லைன் சொல்லுகிறேன்”, இது நான்.

”ம்ம்ம் . . .சொல்லுங்க”

அவர் இது தான் டைட்டில். யார்? இது தான் ஒன் லைன்”

”ஹா.. ஹா.. ஹா... சார் கேட்கறதுக்கு நல்லா இருக்கு. இருந்தாலும் எனக்கு இது பத்தாது சார். இன்னும் கொஞ்சம் டீடெயில் சொல்லுங்க”

”சொல்லிட்டாப் போச்சு. வெவ்வேறு நிறங்களாக இருந்தாலும், ஒன்றாக இணையும்போது அது, அழகான வானவில்லாகிறது. அது போல வெவ்வேறு குணங்கள் உடையவர்களாக இருந்தாலும், வானவில் போல வண்ணமயமாக ஒற்றுமையாக வாழும் ஒரு குடும்பம்.”

”அப்புறம்?”

”அந்தக் குடும்பத்திற்குள் எட்டாவது நிறமாக ஒருவர் வருகிறார். அவர் எதற்க்காக வந்தார்? அவர் யார்? இது தான் முடிச்சு”

 ”ம்..ம்..ம்.. அவர் - இந்த டைட்டில் ஒரே வார்த்தையில நச்சுன்னு இருக்கு. ஆனா கொஞ்சம் வெயிட்டா இருக்கு.”

”கரெக்ட். அதனாலதான் நான் ஒரு விஷயத்தை யோசிச்சு வைச்சிருக்கேன். வானவில் ஷேடிங்கை டைட்டில்ல கொண்டு வந்துட்டா, நீ ஃபீல் பண்ற அந்த வெயிட் குறைஞ்சு பேலன்ஸ் ஆகிடும்.”

”ஓ.கே சார், இன்புட் பத்தல. இருந்தாலும் நானே ஏதாவது டிரை பண்றேன். பார்த்துட்டு சஜெஷன் சொல்லுங்க. அங்கேயிருந்து அப்படியே டிராவல் பண்ணலாம்”

கீழே இருப்பவை அவர் திரைப் படத்திற்க்காக பழனிவேலு முயற்சித்த சில டைட்டில் டிசைன்கள்.

அவர் டைட்டில் டிசைன் - 1


அவர் டைட்டில் டிசைன் - 2



அவர் டைட்டில் டிசைன் - 3



அவர் டைட்டில் டிசைன் - 4


அவர் டைட்டில் டிசைன் - 5


அவர் டைட்டில் டிசைன் - 6


பழனிவேலு மகா திறமைசாலி. நேரம் எடுப்பார். ஆனால் அபாரமான டிசைன்களைத் தருவார். எதை தேர்ந்தெடுப்பதென்று குழம்பிவிடுவோம். நானும் எனது குழுவினரும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கூறுங்கள். அதிகமாக எது உங்களுக்கு பிடிக்கிறதோ, அதை மேலும் மெருகூட்டலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன். 


அப்புறம் . . . உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவர்கள்  தேர்ந்தெடுத்த டைட்டில் டிசைன் என்று அலட்டலாமென்றிருக்கின்றேன். என்ன சொல்கிறீர்கள்?

Saturday, October 17, 2009

திரு.சிவகுமார் அவர்களிடம் நான் சொல்ல மறந்தது என்ன?


”அறுபது வயசுக்கு மேல ஆச்சு. எத்தனையோ படம் நடிச்சிருக்கார். ஆனா இத்தனை வருஷத்துல இப்பதான் முதன் முதலா ஒரு நல்ல படத்துக்கு டிக்கெட் குடுத்திருக்கார்.”

ஒரு பிரபல நடிகரை இப்படி கலாட்டா செய்தது என் சித்தப்பா சோலை.  அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு இரசித்து சிரித்த அந்த நடிகர், அவருடைய நண்பர், ஓவியர், கம்ப ராமாயணப் பேச்சாளர் திரு. சிவகுமார்.

பெரிய மனிதர்களை நெருக்கத்தில் பார்க்கும்போது, அவர்களிடம் சொல்ல நினைக்கும் பல விஷயங்கள் மறந்துபோகும். இன்றைக்கு என் சித்தப்பாவுடன், திரு.சிவகுமார் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது ஒரு விஷயத்தை அவரிடம் மறக்காமல் சொல்ல நினைத்து, கடைசியில் மறந்து போனேன். அது . . .?

”டேய் சிவகுமார் போன் பண்ணினாரு. சத்தியம் தியேட்டர்ல ஆதவன் படத்துக்கு ரெண்டு டிக்கட் இருக்காம். நாலு மணிக்கு கிளம்பி வா. அவரை பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு, படம் பார்த்துட்டு வந்துடலாம்”, என்று செல்போனில் என் சித்தப்பா சொன்னார்.

”ஓ.கே. சித்தப்பா”, என்று சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் திரு.சிவகுமார் வீட்டில் ஆஜர்.

”வந்துட்டியா . . . வாடா. . . வாடா. . .”, என்று சித்தப்பாவை அழைத்தவர், ”இது யாரு? ஐ.எஸ்.ஆர் பையனா? வாப்பா. . . நல்லா இருக்கியா?” என்று என்னையும் நலம் விசாரித்தார்.

எனது சித்தப்பா சோலை, நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். அவரது நெருக்கத்தின் காரணமாகவே, எனது தந்தையின் மறைவுக்குப் பின்னும் எங்கள் வீட்டில் நடந்த அனைத்து குடும்ப விழாக்களுக்கும் திரு.சிவகுமார் அவர்கள் வருகை தந்தார். எனது தங்கை திருமணத்தின் போது அவர் பரிசளித்த, அவரே வரைந்த காந்தி பென்சில் டிராயிங், 15 வருடங்களுக்குப் பின்னும் எங்கள் வீட்டு சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.


”டேய். இன்னைக்கு ஹிண்டு பேப்பர் படிக்க சொன்னேனே, படிச்சியாடா?, இது திரு.சிவகுமார்.
”இல்லையே. நான் போய் வாங்கறதுக்குள்ள எல்லா பேப்பரும் வித்துடுச்சு”, இது என் சித்தப்பா சோலை.
”பாத்தீங்களா? எப்படி இருக்கான்? எடைக்கு எடை போடறதுக்கு கூட சில பேர் பேப்பர் வாங்கறதில்ல. இன்னைக்கு ஹிண்டு பேப்பர்ல என்னை பத்தி வந்திருக்கு. சேலம் சோனா காலேஜ்ல நான் பேசினதபத்தி சினிமா பிளஸ் பகுதியில போட்டிருக்கான். படிடான்னா . . . படிக்காம வந்துட்டு என்னையே கிண்டல் பண்றான். ஆமா நீங்க படிச்சீங்களா?”, அவர் பேசுவதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்த நண்பரும் இல்லையென்றார்.
”க்கும் . . . எல்லாம் ஒரே ரகம்”

தலைவர்கள், சமூக அந்தஸ்தில் பெரியவர்களாக இருப்பவர்கள் போன்றோர் தனது நண்பர்களுடன் ”வாடா...போடா” என்று மனது விட்டு ஜாலியாக பேசும், எந்த பாசாங்கும் இல்லாத, இறுக்கமற்ற நிமிடங்களை நான் எப்போதுமே சுவாரசியமாக படிப்பேன். இன்று திரு.சிவகுமாரும், எனது சித்தப்பாவும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து பேசிக் கொண்டிருந்தபோது நான் என்னை மறந்தேன்.

ஆதவன் படத்தின் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு எழுந்தோம். 
”போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. நானே இன்னும் படம் பார்க்கல. நாளைக்குதான் வீட்டோட போகப்போறேன்”
”ஓ...நீங்க நடிக்கலன்னவுடனே வீட்டோட போய் பார்க்கற தைரியம் வந்திடுச்சா”
”டேய் . . . போடா . . .போடா. . .தம்பி நீ நாளைக்கு மறக்காம விஜய் டிவியில நான் பேசுறதை பாரு”.

”சரி சார்” என்று எழுந்தேன். எழும்போது எதையோ மறக்கிறேன் என்று தெரிந்தது.

நாங்கள் விடை பெற்று வெளியே வந்தோம். தற்செயலாக டிக்கட்டை திருப்பி பார்த்தேன். டிக்கெட்டின் பின்னால் சோலை என்று எழுதியிருந்தது.
”பார்த்தியாடா . . . எவ்வளவு ஆர்கனைஸ்டா இருக்காரு. இத்தனை பிசிக்கு நடுவுலயும், சும்மா ரெண்டு டிக்கட்டை தூக்கி குடுக்காம பேரை எழுதி வச்சு, கரெக்டா குடுக்கறாரு” என்று வியந்தார் என் சித்தப்பா.

அடுத்த வினாடி திரு. சிவகுமார் அவர்களிடம் நான் எதை சொல்ல மறந்தேன் என்பது ஞாபகம் வந்தது. அது . . . தீபாவளி வாழ்த்து! அதனால் என்ன . . . இந்த பதிவின் வழியாக அவருக்கு வாழ்த்து சொல்லிவிடுகின்றேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!!