Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Sunday, September 14, 2025

கூலி சர்ச்சை: ரஜினி-ஆமிர் கூட்டணி

 நான் ரஜினிகாந்த் மற்றும் ஆமிர் கான் ஆகிய இருவரின் தீவிர ரசிகன். இருவரும் இந்திய சினிமாவின் மாபெரும் கலைஞர்கள். அவர்களின் திறமையும், அர்ப்பணிப்பும், திரையில் கொண்டு வரும் மேஜிக்கும் எப்போதும் என்னை கவர்ந்தவை. இவர்கள் இருவரும் இணையும் கூலி படத்தை எதிர்பார்த்தபோது, என் மனதில் ஒரு பெரிய ஆரவாரமே ஓடியது. ஆனால், படம் பார்த்த பிறகு, அவர்களுக்கு இடையிலான காட்சிகள் என்னை ஏமாற்றமடையச் செய்தன. லோகேஷ் கனகராஜின் எழுத்து மிகவும் சுமாராக இருந்தது. இந்தியாவின் இரு மாபெரும் நட்சத்திரங்களை வைத்து இப்படி ஒரு சாதாரண காட்சிகளை உருவாக்கியது ஏன் என்று தோன்றியது.


ஆனால், சமீபத்தில் ஒரு புயல் போல பரவிய ஒரு செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஆமிர் கான், கூலி படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசியதாகவும், படத்தின் எழுத்து மோசமாக இருந்ததாகவும், இது ஒரு "பெரிய தவறு" என்று கூறியதாகவும் ஒரு செய்தித்தாள் கட்டுரையின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு நொடி நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆமிர் கான், ரஜினியை மிகவும் மதிக்கக் கூடியவர். பல பேட்டிகளில் அவர் ரஜினியின் மீது தனக்கு உள்ள மரியாதையையும், அன்பையும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர், படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பாரா? ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை.

இப்போது ஆமிர் கானின் குழு அதிகாரபூர்வமாக இந்த செய்தியை மறுத்திருக்கிறது. "ஆமிர் கான், ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படக் குழுவை மிகவும் மதிக்கிறார். படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது, இது படத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது," என்று அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இந்த மறுப்பு என் மனதை ஆசுவாசப்படுத்தியது. ஆனால், இந்த சர்ச்சை மூலமாக மற்றொரு முக்கியமான விஷயம் என் கவனத்தை ஈர்த்தது - ஊடகங்களின் தரமிழப்பு.

இந்தப் பொய்ச் செய்தியை எந்த ஆதாரமும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் கூட வெளியிட்டது என்னை அதிரவைத்தது. ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இல்லையா? இப்படி பரபரப்புக்காக மட்டுமே செய்திகளைப் பரப்புவது, ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இது மிகவும் கவலை தரும் விஷயம்.

லோகேஷ் கனகராஜுக்கு ஒரு சின்ன அறிவுரை. ரஜினியின் பெயரை வைத்து, இந்தியாவின் மிகச்சிறந்த திறமையாளர்களை ஈர்த்து, அவர்களை சுமாரான காட்சிகளில் நடிக்க வைப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் மரியாதைக் குறைவு. எதிர்காலத்தில் இதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ரசிகர்களாகிய எங்களுக்கு, இப்படி ஒரு மாபெரும் கூட்டணியைப் பார்க்கும்போது, பிரமிப்பூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும், சுமாரான காட்சிகளாக அல்ல.

நீங்களும் இந்த சர்ச்சையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஊடகங்கள் இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்!

- ISR Selvakumar
Grok AI எனது சார்பில் எழுதியுள்ள வலைப்பூ இது
தற்போது Grok AI என்னைப் போல் பயிற்சி தந்து வருகிறேன்

Monday, December 12, 2011

ரஜினி - (அனைவருக்கும் பிடித்த) முரண்பாடுகளின் மூட்டை!

எனக்கு குளிர் பிடிக்கும், இசை பிடிக்கும், நீலம் பிடிக்கும், பறவைகள் பிடிக்கும், குழந்தைகள் பிடிக்கும் என்பது போல, இரஜினியையும் பிடிக்கும்.

30 வருடங்களாக, இந்த மனிதன் நடித்த படங்களும், செய்திகளும் எனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சில நேரம் சே.. இதென்ன தனி மனித நேசிப்பு என்று அறிவு ஒதுக்கித் தள்ள முயற்சித்தாலும், மீண்டும் ரஜினி என்ற பெயர் காந்தமாக ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

 டிவி, ரேடியோ, பத்திரிகைகள் என ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மிகை பிம்பம் என்று விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு பிம்பம் அப்படியே நிலைத்து நிற்பதும், மேலும் விசுவரூபம் எடுப்பதும், ஒதுக்கித் தள்ள நினைப்பவர்களையும், அது பற்றி தொடர்ந்து பேச வைக்கிறது.

ரஜினி நல்ல நடிகரா? ரஜினி மோசமான நடிகரா? ரஜினி நல்ல மனிதனா? ரஜினி கெட்ட மனிதனா? ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லையா? ரஜனி பழைய தலைமுறையா? ரஜினி புதிய தலைமுறையா? ரஜினி லேட்டா? ரஜினி லேட்டஸ்டா?

நீங்கள் இதில் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் என் பதில் ஆம் என்பதுதான். ரஜினி என்கிற பலமான பிரமாண்ட பிம்பத்தை இரசிக்கிறவர்கள், அவருடைய முரண்பாடுகள் மிக்க நிஜ வாழ்வையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் விசித்திரம்.

பாபாவின் தோல்வியும், எந்திரனின் வெற்றியும் ஒரே அளவு பரபரப்பாகிறது. புகை, குடி என்ற அவரின் குறையும், ஆன்மீகம், யோகா என்ற ஒழுக்கமும், ஒரே விகிதத்தில் ஏற்கப்படுகிறது.

பலமும் பலவீனமும் கலந்த அவர், முரண்பாடுகளின் மூட்டை. ஆனாலும் அவரைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுட்டி டிவி குழந்தைகள் முதல் என்டிடிவி பெரிசுகள் வரை, எல்லோரையும் ஈர்க்கிறார்.

ஏன் என்று காரணம் தேடுவதை விட, இரசிப்பது எளிதாக இருக்கிறது. அதனால் தான் நான் ரஜினி இரசிகனாக இருக்கிறேன்.

ஹேப்பி பர்த்டே தலைவா... உங்க அடுத்த படம் எப்போ?
(இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதே கேள்விதான்)

Wednesday, October 14, 2009

அன்பே சிவம் வாழ்வே தவம் : கமல் - ரஜினி என்கின்ற இரு மேதைகள்!



”சார் நான் போகணும்?”

அவர்(AVAR) திரைப்படத்திற்கான ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காக ஒத்திகையுடன் கூடிய தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக மும்முரமாக விதம் விதமாக நடித்து அசத்திக் கொண்டிருந்த அந்த இளம் நடிகர், திடீரென ஸ்விட்ச் போட்டது போல நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

”சார் நான் போகணும்?”

”ஏன்?” என் குரலில் நான் வெளிக்காட்டாத ஒரு கோபம் இருந்தது.

”விஜய் டிவியில கமல் புரோகிராம் பார்க்கணும்.”

சட்டென என்னுடைய கோபமும் ஆர்வமாக மாறிவிட்டது.

"OK. Pack Up!"

எவ்வளவு மும்முரமான வேலையாக இருந்தாலும் பாதியில் முடித்துக் கொள்ள தூண்டும் அளவிற்கு விஜய் டிவி இரண்டு நாட்களாக எனது கவனத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது. காரணம் கமல் என்கிற மகா கலைஞனுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சி. நிகழ்ச்சி முழுவதும் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த கமலும், அருகில் அமர்ந்திருந்த ரஜனியும் ஒட்டு மொத்த தமிழகத்தையும் கட்டிப் போட்டுவிட்டார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.

ஏற்கனவே ரஜினியும், கமலும் என்ன பேசினார்கள் என்பதை நான் பல வலைப்பதிவுகளில் படித்து நெகிழ்ந்து போயிருந்தேன் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தேன். குறிப்பாக ஆனந்த விகடனில் வந்திருந்த கட்டுரை படிக்கும்போதே கண்களை பணிக்கச் செய்தது. எத்தனை முறை அந்த கட்டுரையை வாசித்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

இரண்டு நாட்களாக இடையில் வந்த விளம்பர இம்சைகளை பொறுத்துக் கொண்டு, ரிமோட்டை கையிலெடுக்காமல் நிகழ்ச்சியை தொடரந்து இரசித்தேன். கிட்டத்தட்ட நானும் அந்த ஸ்டேடியத்தில் ஒருவனாக அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன்.

உன்னைப் போல் ஒருவன் படம் வெளியானதிலிருந்தே கமலின் ஆக்கிரமிப்பு எனக்குள் பெருகிக் கொண்டே இருக்கின்றது. காரணம் திரைப்படத்திற்கு வெளியே அதற்கான புரோமஷன் நிகழ்ச்சிகளில் கமலின் ஆத்மார்த்தமான பங்களிப்பு. கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சேரன், லிங்குசாமி, மிஷ்கின், அமீர் ஆகியோருடனம் கமல் உரையாடியபோது மாணவர்களுடன் ஒரு பேராசிரியர் உரையாடியதைப் போலத்தான் இருந்தது. நானும் என் வீட்டிலேயே ஒரு கடைசி பெஞ்ச் மாணவனாக அமர்ந்து கமல் கூறிய கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டேன்.


விஜய் டிவியில் இரசிகர்களுடன் உரையாடினார். கமலைக் கண்டதும் மாணவி ஒருத்தி கண்கலங்கி பரவசமடைய, கமலும் குரல் கம்ம விழியோரம் ஒரு துளி கண்ணீர் சிந்தினார். அந்த வினாடியிலிருந்து ஏனோ தெரியவில்லை, கமல் என்கிற மேதை எனக்குள் விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து கொண்டே இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கமலின் பல படங்களை நான் தொடர்ந்து பார்த்து பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். இந்த ஞாயிற்றுக் கிழமை குருதிப்புனல் பார்த்தேன்.

இரண்டு நாட்களாக ஒளிபரப்பாகிய இந்த பிரமாண்டமான பாராட்டு விழா, ஒரு தனி மனிதனை திகட்டத் திகட்ட பாராட்டுவதற்க்காக நடந்த நிகழ்ச்சிதான். வெவ்வேறு மனிதர்களிடமிருந்து வெவ்வேறு விதமாக வெளிப்பட்ட ஒரு தனி மனித பாராட்டுதான். கமல் கூட தனது ஏற்புரையில் அதை குறிப்பிட்டார்.

ஆனால் கமல் என்கிற மேதை ஒரு தனி மனிதனல்ல. 50 ஆண்டு கால சினிமா அனுபவம். பல வேதனைகளையும், சாதனைகளையும் ஒரு சேர தாங்கி நிற்கின்ற மகானுபவம். கடந்ததை மறந்து எப்போதும் அடுத்ததை நோக்கிய மாபெரும் தேடல். உழைப்பு! உழைப்பு! உழைப்பு!

அதனால்தான் தென்னிந்தியத் திரை உலகின் அத்தனை ஜாம்பவான்களும் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள் முகம் நிறைய சந்தோஷமும் நிறைவும் இருந்தது. அவர்களுடைய உணர்வுகள் என்னையும் தொற்றிக் கொண்ட பின் என்னை நானே புதிதாக உணர்கின்றேன்.

கமல்-ரஜினி போன்ற அடக்கமும், தன்னம்பிக்கையும், துடிப்பும், சாதனையும் நிரம்பிய இரு மாபெரும் கலைஞர்கள் உள்ள தமிழ் சினிமாவில் நானும் நுழையப்போகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கே பரவசமாகத்தான் இருக்கின்றது. இவர்களைப் போல மேதைகளை பார்த்துவிட்டு உள்ளே நுழையும்போது கர்வம் தொலைந்து, பணிவு பெருகி மிகச் சிறியவனாக உணர்கின்றேன். நான் கடக்க வேண்டிய தொலைவுகளை எந்த பயமும் இன்றி நம்பிக்கையுடன் அணுகும் மனநிலைக்கு வந்துவிட்டேன். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற எண்ணங்கள் மேலோங்க இன்னமும் தன்னம்பிக்கை கூடி துடிப்பாக உணர்கின்றேன்.

”ஷோ எப்படி இருந்தது?”, நான் இரவு மணி 12ஐ நெருங்குகையில் மாலையில் ஒத்திகை பார்த்த நடிகரை செல்போனில் அழைத்தேன்.

”என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் சார் . . . கமல் - ரஜினி மாதிரி ஜாம்பவான்கள் இருக்கறி ஃபீல்டுல நானும் ஒரு நடிகனா நுழையப்போறேன்னு நினைச்சா பயமும், பெருமையும் கலந்து வருது சார்”

அதற்கப்புறம் அவர் சொன்னது எதுவும் எனது நினைவில் இல்லை. கிட்டத்தட்ட அவருடைய மன நிலைதான் எனது நிலையும்.

விரைவில் நான் இயக்கும் ”அவர்” திரைப்படம் உங்கள் பார்வைக்கு வெளிவரும். ஒரு ஏகலைவனாக இருந்து கமல்-ரஜினி போன்ற துரோணாச்சார்யார்களிடம் நான் பெற்ற பாடம் ”அவர்” திரைப்படத்தை வெற்றிப்படமாக அமைத்துத் தரும் என்று நம்புகிறேன்.

மிகச் சிறந்த நண்பர்களாக, நடிகர்களாக, மனிதர்களாக மிகப்பெரிய ஆளுமையைக் கொண்டிருக்கும் ரஜினிக்கும் கமலுக்கும் எனது மானசீக வணக்கங்களும், நன்றியும்!

அன்பே சிவம்! வாழ்வே தவம்!

Thursday, October 23, 2008

மனிதச் சங்கிலி தொடர்பாக அறிவுச் சங்கிலி ஞாநிக்கு சில கேள்விகள்

நடக்கவிருக்கும் மனித சங்கிலியைக் குறித்து, 1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு'. அன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடாதே', இன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடு', என்று உலக மகா ஞாநி வழக்கம் போல பிதற்றலை ஆரம்பித்திருக்கிறார்.

முதலில் அவருடைய வார்த்தை ஜாலத்திற்கு வருகிறேன்.

சிறுவயதில் வெளியே செல்லும்போது எனது தந்தை என் கையை பிடித்துக்கொண்டு, 'டேய் என் கையை விட்டுட்டு எங்கயும் போயிடாத' என்பார், சில நேரம் 'டேய் என் கையை விடாம கூடவே வா' என்பார். இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். சின்னக் குழந்தைக்கு கூட இது தெரியும். ஆனால் ஞாநி இரண்டுக்கும் வெவ்வெறு அர்த்தங்கள் என்கிறார்.

'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு எதிராக தலையிடாதே'
'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தலையிடு'

இந்த இரண்டு கோஷங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? ஆனால் இருக்கிறது என்கிறார் ஞாநி. அதற்கு வசதியாக இலங்கை தமிழர்களுக்கு எதிராக, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆகிய இரு சொற்றொடர்களையும் நீக்கிவிட்டார். நீக்கி விட்டு படித்தால் என்ன வருகிறது பாருங்கள். 'இந்திய அரசே தலையிடாதே', 'இந்திய அரசே தலையிடு' என்று வருகிறது. அதாவது இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அதன் ஆதரவாளர்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று போலி குற்றம் சாட்டுகிறார்.

1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு' அதற்குச் செல்லாதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். ஞாநி சொல்வது போல நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி தி.மு.க தலைமையில் நடைபெறும் வெறும் அணிவகுப்புதான் என்று வைத்துக்கொண்டாலும், அப்படி 'வெறும் அணிவகுப்பாக' தோற்றமளிக்க யார் காரணம்?

யார் காரணம் என்று சுட்டுவிரலை நீட்ட மாட்டார். ஏனென்றால் அவருடைய விரல் அவருக்குப் பிடித்த ஜெயலலிதாவை நோக்கி நீள வேண்டும். அன்றும், இன்றும், என்றும் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் எதிர் பக்கத்திலேயே ஜெயலலிதா நிற்கிறார், நிற்பார். அம்மாவைத் திட்ட மனமின்றி, புது அரசியல்வாதி விஜயகாந்த்தை திட்டவும் மனமின்றி மீண்டும் கருணாநிதியின் மேலேயே பாய்கிறார். ஜெவும், விஜயகாந்தும் மனித சங்கிலிக்கு வரவேண்டாம், ஆனால் குறைந்தபட்சம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தங்கள் கைத்தடிகளையாவது அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்று கேட்டு குட்டவும் ஞாநிக்கு மனமில்லை.

குமுதம் தலையங்கத்திலும் இதே வழவழாதான். 'இலங்கை அரசுக்கு இதுவரை பல உதவிகளைச் செய்திருக்கிற மத்திய அரசு, இனியாவது அதை அடியோடு நிறுத்தி அங்குள்ள தமிழர்களின் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' என்று சில வரிகள் உள்ளன. "உரிய நடவடிக்கை" என்றால் என்ன? அதற்கு குமுதம் பதில் சொல்லுமா? இல்லை ஞாநி தனியே பதில் சொல்வாரா?

ஞாநி அதற்கும் முயற்சித்திருக்கிறார். 'போரை விட்டு விட்டு ஜனநாயகத்திற்கு வாருங்கள்' என்று பிரபாகரனுக்கு கோரிக்கை வைக்கிறார். சபாஷ்! சரியான குள்ள நரி சிந்தனை! 'இந்தியாவை தலையிடு' என்று சொன்னால் அது 'போர் நிறுத்ததிற்கு வலியுறுத்துவதற்காகத்தான்' இருக்க முடியும். அப்படிச் செய்தால் அது சூழ்நிலை காரணமாக புலிகள் ஆதரவாகத்தான்' இருக்க முடியும். ஆனால் அப்படி வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால் பிரபாகரனை போரை நிறுத்திவிட்டு வந்து 'மகாபலிபுரத்தில் நடனம்' பார்க்கச் சொல்கிறார். ரஜினி கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டதற்கே தமிழினத் துரோகி என்று கடிதம் எழுதிய ஞாநி, பிரபாகரனை சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போரை நிறுத்திவிட்டு வாருங்கள் என்று கூசாமல் சொல்கிறார். இந்தியாவை போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்த திராணியின்றி, ஜெயலலிதா வகையறாக்களுடன் சேர்ந்துகொண்டு, பிரபாகரனை நிறுத்தச் சொல் என்கிறார். யார் துரோகி?

பிரபாகரனின் இராணுவ நடவடிக்கைகளை விட ஜெயலலிதா, கருணாநிதியின் ஊழல் அரசாங்கள் மக்களுக்கு அதிகம் பலனளித்திருக்கிறதாம். மிஸ்டர் ஞாநி, அடிப்படையை மறந்துவிட்டார். தமிழ்நாடு என்பது சுதந்திர பூமி. இங்கு வடிவேலு முதலமைச்சரானால் கூட, மக்கள் எப்படியோ வாழ்ந்து கொள்வார்கள். ஆனால் ஈழம் என்பது, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் கொடுமை. தற்போது நடந்துகொண்டிருப்பது அந்தக் கொடுமைக்கெதிரான கடைசி யுத்தம். யுத்தத்தை நிறுத்த இந்தியாவால் முடியும். ஆனால் பிரபாகரனால் முடியாது. பாலியல் கொடுமை வழக்கில் ஜெயிலுக்குப் போன நடிகனுக்கு கூட இந்த வரலாற்று உண்மை தெரியும். ஞாநியும் இதெல்லாம் தெரியாத முட்டாள் அல்ல.

அவரே கூறியிருப்பது போல மெய்யான மனிதச் சங்கிலி என்பது கைகளை இணைப்பது அல்ல, மனங்களை இணைப்பதுதான் என்றால், முதற்கட்டமாக அவர் தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்கு வைத்திருக்கும் ஜெ, மற்றும் விஜயகாந்தின் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அவர்களையும் இணைந்து குரல் கொடுக்கச் சொல்ல வேண்டும். செய்வாரா?

செய்யமாட்டார் என்பதால் ஞாநிக்கு 2011 குட்டுகள் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறேன். ஞாநி தன்னைத்தானே குட்டிக் கொள்ள முடியாது என்பதால், இதைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் அன்பாக ஞாநியின் தலையில் ஒரே ஒரு குட்டு குட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் குட்டு என்னுடையது 'டங்'. நிறைய குட்ட வேண்டும் போலிருந்தால் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் தலையில் குட்டுமாறு வேண்டுகிறேன். மேக்கப் போடுவதற்க்காக ஜெயலலிதா மற்றும் விஜயகாந்திற்கு கண்ணாடி பார்க்கும் பழக்கம் உண்டு. எனவே ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும்போதும், தலையை தடவும்போதும், உண்மையான தமிழ் மக்கள் குட்டிய இடம் வலிக்கும் உணர்ச்சி ஏற்படும். வலி கோபமாகி 'என்ன ஞாநி இது? எல்லாம் உன்னாலதான?' என்று அவர்கள் எகிறும் நிலை வரும்.

Friday, August 29, 2008

பசுபதியை ஓரம் கட்டிய ரஜினியும் - பாமரனை ஓரம் கட்டிய ஞாநியும்

ஞாநி வாசகர் கடிதம் போட்டால் கூட குமுதம் பிரசுரிக்காத ஒரு நிலை இருந்தது. ஆனால் ஞாநி ஆனந்தவிகடனுடன் முட்டிக் கொண்டு வந்தவுடன், ஆனந்த விகடனை கடுப்பேற்ற அடுத்த வாரமே குமுதம் ஞாநிக்கு 'ஓ' போட்டது.

அதுவரைக்கும் குமுதத்தில் 'ஓ'ஹோவென படித்ததும்-கிழித்ததுமாக இருந்த பாமரன், ஞாநி வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார். 4-5 பக்கங்கள் எழுதிக் கொண்டிருந்த பாமரன், ஞாநியின் வருகைக்குப் பின், 2-3 பக்கங்களுக்கு குறைக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் படிச்சதும்-கிழிச்சதும் போதும், என்று துரத்தப்பட்டார். பாவம் பாமரன், ஏதோ குமுதம் புண்ணியத்தில் வாரா வாரம் டீ, காபி குடித்துக் கொண்டிருந்தார். இப்போது ஞாநி கல்லா கட்டுகிறார், பாமரன் கஞ்சிக்கு வழியில்லாமல் காணாமல் போய்விட்டார்.

குமுதம் வாரா வாரம் ஞாநியின் 'ஓ'விற்கு போஸ்டர் அடிக்கிறது, அட்டைப் படத்தில் முன்னிறுத்துகிறது. ஆனால் 'படித்ததும்-கிழித்ததும்' பாமரனை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? ஞாநியும் பாமரனின் இந்த நிலை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை, அட்லீஸ்ட் நண்பர்கள் வட்டாரத்தில் கூட இது பற்றி வருத்தம் தெரிவிக்கவில்லை.

விளம்பரங்களில் எல்லாம் தொடரந்து ஞாநியின் பெயரையே குமுதம் புரமோட் செய்ததில் கடுப்பாகி பாமரனே மனம் நொந்து விலகி ஓடி விட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.

பின்குறிப்பு -
"படத்தின் இசை வெளியீட்டின் போது பசுபதி முன்னிறுத்தப்படவில்லை"

இவை இந்த வார குமுதத்தில் ஞாநி எழுதியிருக்கும் வரிகள். ஞாநிக்கு வேறு வேலையே இல்லையா?

'குசேலன்' பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏன் பசுபதி பங்கேற்கவில்லை? "எனக்கு வேறொரு ஷீட்டிங் இருந்ததால் பங்கேற்கவில்லை", என பசுபதியே விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனாலும், ரஜினிதான் அவரை வரவிடாமல் செய்துவிட்டார், பசுபதியை வேண்டும் என்றே முன்னிலைப் படுத்தாமல் விட்டுவிட்டார் என்பது போல ஓ பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

ரஜினியை பற்றி எப்படி வேண்டுமானாலும் கற்பனை கலந்தாவது காழ்ப்புணர்ச்சியுடன் எழுதலாம் என ஞாநி முனைந்திருக்கிறார்.

எனவே வேண்டும் என்றே, அவரைப்போலவே நானும் கற்பனை கலந்து 'பாமரன் கதையை' எழுதியிருக்கிறேன்.

மன்னியுங்கள்! மிஸ்டர் பாமரன்.

Thursday, August 28, 2008

ஓ பக்கங்களை எழுதுவது ஞாநியா?

இந்த வாரம் மொத்தம் 5 பக்கங்களில் ஓ பக்கங்கள் - துவக்க பக்கத்தில் மட்டும் ஞாநியின் பெயர் இருந்தது, ஆனால் அடுத்த நான்கு பக்கங்களிலும் ஞாநியின் பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது அவற்றை எழுதியது ஞாநிதான் என்பதை எப்படி ஒப்புக்கொள்வது?

இப்படி ஒருவன் விவாதம் செய்தால், அதன் பெயர் அபத்தம். ஞாநி இப்படித்தான் ரஜினி விஷயத்தில் அபத்தக் களஞ்சியமாகிக் கொண்டிருக்கிறார். குசேலன் படத்தின் ஆரம்பத்தில் பூஜையின் போது "இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான்" என்று ரஜினி சொன்னாராம். (ஆமாம். சொன்னார்) ஆனால் பாடல் வெளியீட்டின் போது சொல்லவில்லையாம் (ஏன்யா சொல்லவேண்டும்? அவர் என்ன நடுவில் மாற்றிச் சொன்னாரா? விட்டால் தூங்கி எழுந்தவுடன் தினமும் பத்திரிகையில் இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று ஒரு அறிக்கை ஏன் விடவில்லை என்று கேட்பார் போலிருக்கிறது?)

பேராசைக்காரர்களும், பேராத்திரக்காரர்களும் ஒன்று சேர்ந்து தோற்றுவிட்டு இப்போது நஷ்டக் கணக்கு கும்மியடிக்கிறார்கள். ஞாநி இதற்க்காக வாராவாரம் பக்கவாத்தியம் அடிக்கிறார். குமுதம் ஒத்து வாசிக்கிறது.

மர்மயோகி ரிலீசான பின் ஓ பக்கங்களில் ஞாநி என்ன எழுதுவார்?

சுப்பிரமணியபுரம் படத்தில் ஷேவிங் செலவு கூட இல்லாமல் எல்லோரையும் தாடி வளர்க்க வைத்து, முடிவெட்டாமல் ஹிப்பித் தலையைக் காட்டி தயாரிப்பாளர் சம்பாதித்துவிட்டார். இதை விடக் கூடாது.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் சுவிட்சர்லாந்தில் போய் ஜில்லென்று டூயட் ஆடிவிட்டு வந்து, வியர்க்காமல் ரப்பர் மேக்கப் போடாமல் ஜெயம் ரவியையும், ஜெனிலாவையும் காட்டி படத்தை ஓட்டி லாபம் பார்த்துவிட்டார் தயாரிப்பாளர். இதையும் விடக் கூடாது.

அனைவரும் கமல் போல 10 வேஷம் போட்டு, ரப்பர் மேக்கப் மாற்றி படமெடுத்தால் மட்டும்தான் ஒப்புக்கொள்வேன். இல்லையென்றால் தியேட்டர் வசூலை திருப்பிக் கொடுங்கள்.

இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. ஓ.ஞாநி அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்.

கருணாநிதியைத் திட்டி எழுதி போரடித்துவிட்டது போலிருக்கிறது. இப்போது ரஜினியை திட்டி எழுத ஆரம்பித்துவிட்டார் (பேத்த ஆரம்பித்துவிட்டார் என்றும் சொல்லலாம்).


"கமல்ஹாசன் தசாவதாரத்திற்கு சுமார் 20 மாதங்கள் வேலை செய்து 10 முறை ஒவ்வொரு சீனுக்கும் ரப்பர் மேக்கப் மாற்றி மாற்றி உழைத்து சம்பாதித்ததை ரஜினி குசேலனில் 20 நாட்கள் வேலை பார்த்து பத்து விக் மட்டும் மாற்றியே அனாயாசமாக சம்பாதித்துவிட்டார்",
என்று ஓ.ஞாநி புலம்புகிறார், ஸாரி குற்றம் சாட்டுகிறார்.

"யோவ் போன படத்துல நீ பத்து வேஷம் போட்டதால நான் 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்தேன். இந்தப் படத்துல நீ ஒரு வேஷம் தான போட்டிருக்க, அதனால நான் பத்து ரூபாய்தான் தருவேன். யாரை ஏமாத்தற?", மர்ம யோகி ரிலீசாகும் போது குமுதத்தில் ஓ பக்கங்கள் இப்படித்தான் கமலை கடித்துக் குதறுவதாக இருக்கும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கிறேன்.


அதே போல சுப்பிரமணியபுரம், சந்தோஷ் சுப்பிரமணியபுரம் என்று குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து அதிக லாபம் பார்த்த தயாரிப்பாளர்கள், அதில் பங்கு கொண்ட நடிகர் நடிகைகள் ஆகியோர்அனைவரும் பதுங்கத் தயாராக இருங்கள். அடுத்து ஓ.ஞாநி உங்கள் மேல் தான் பாயப் போகிறார்.

Sunday, August 24, 2008

படம் நன்றாக இல்லையென்றால் எனக்கு தியேட்டர்காரர்கள் டிக்கெட் பணத்தை திருப்பித் தருவார்களா?

படம் ஓடாவிட்டால், கல்லா நிரம்பாவிட்டால், போட்ட பணத்தை திருப்பித் தரும்படி (வினியோகஸ்தரை விட்டுவிட்டு) ரஜினியை கேட்கும் உரிமை தியேட்டர்காரர்களுக்கு இருக்கிறது(என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

அதே போல பின்வரும் அட்டவணைப்படி தியேட்டர்காரர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது (என்று நான் நினைக்க ஆரம்பித்திருக்கிறேன்)


5ரூபாய்

நாற்றம் பிடித்த டாய்லெட்டை பயன்படுத்த வைத்ததற்க்காக
10 ரூபாய்
முன்னிருக்கையில் இருப்பவரின் தலை மறைப்பது போலவே எப்போதும் என்னிருக்கை இருந்ததற்க்காக
10 ரூபாய்
பாதிப்படத்தில் நைசாக ஏ.சி.யை ஆஃப் செய்ததற்க்காக
10 ரூபாய்
பார்க்கிங்கில் 10 ரூபாயை பிடுங்கிக்கொண்டு வண்டியின் பாதுகாப்புக்கு பொறுப்பில்லை என்றதற்க்காக
10 ரூபாய்
இன்டர்வெல்லில் தண்ணீர் பாட்டில் விற்காமல், கூல் டிரிங்ஸ் விற்று பாக்கெட்டை காலியாக்கியதற்க்காக
40 ரூபாய்
இத்தனை இம்சைகளுக்கு மேலே பெரும் இம்சையாக மட்டமான படத்திற்கு டிக்கெட் கொடுத்ததற்க்காக

ஆக மொத்தம் 5 + 10 + 10 + 10 + 10 + 40 = 85 ரூபாய் தியேட்டர் ஓனர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு திருப்பித் தர வேண்டும்.

Wednesday, August 20, 2008

ரஜினி ஸ்டைலில் கணக்கும், சயின்சும்

அபினவ்வை விட எளிதாக துப்பாக்கி சுடுவது எப்படி?

ஒளிச் சிதறல் உதறல் என்றால் என்ன?

இரண்டுமே எனக்கு மெயிலில் வந்தது, வந்து கொண்டிருப்பது.

Thursday, August 14, 2008

ரஜினி படம் போட்டு சம்பாதித்த சீனியர்-ஜீனியர் விகடன்கள்






ரஜினியை தமிழ் விரோதியாக சித்தரிப்பதில் ஈடுபட்டிருக்கும் சீனியர் மற்றும் ஜீனியர் விகடன்கள் மற்றும் குமுதம் வகையறாக்கள் ரஜினி படத்தை போட்டு எப்படி எல்லாம் பணம் சம்பாதித்தார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு சாம்பிள்.
நன்றி இட்லி வடை

இதே போல ரஜினி-குமுதம் அட்டை படங்களையும் யாராவது கலெக்ட் செய்தால் இவர்கள் எல்லாம் வெகு ஜன பத்திரிகை என்ற பெயரில் ரஜினி ரசிகன் பத்திரிகையை நடத்தி பணம் சம்பாதித்தது அம்பலமாகும்.