புதுக்குடியிருப்பு தற்போது மரணக்குடியிருப்பாக மாறிவருகிறதாம். பொறியில் சிக்கியுள்ளதாக சொல்லப்படும் 2 இலட்சத்து 50ஆயிரம் தமிழர்களுக்கு ஏதாவது காயமேற்பட்டால் உடனடி மருத்துவ வசதி புதுக்குடியிருப்பில் உள்ள அரசு மருத்துவமனைக்குத்தான் வந்தாக வேண்டும். ஆனால் அந்த மருத்துவமனையிலேயே குண்டு வெடித்தால்...? அதுவும் Zero Casualy for Citizens என்று உறுதி அளித்த இலங்கை அரசு வீசிய குண்டு வெடித்தால் . . .?
"அதிர்ச்சியாக இருக்கிறது. விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை இராணுவம் இருவருக்குமே மருத்துவமனையின் முக்கியத்துவமும் அது இருக்கும் இடமும் தெரியும். ஆனாலும் அங்கு இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகள் வெடிப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது." என்று ரெட் கிராஸ் சேவகர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அவர்கள் கூறுகையில் "ஏற்கனவே அங்கு மின்சார வசதி இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் குண்டு வெடித்ததால், உதவி செய்ய வேண்டிய மருத்துவக்குழுக்களே பதுங்கு குழியில் பதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது."
இந்த தகவலை இலங்கை அரசும் (வேறு வழியில்லாமல்) ஒப்புக் கொண்டுள்ளது. இதே போல ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவமனையில் ஷெல் வெடித்ததாக இராணுவமே ஒப்புக்கொண்டுள்ளது. இது வரை மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளதாகவும் இலங்கையே ஒப்புக்கொண்டுள்ளது. ஒப்புக்கொண்டதே இவ்வளவு என்றால், மறைத்தது எவ்வளவோ?
தமிழ்மக்களுக்கு ஏற்படும் சேதத்தை வெளியுலகிற்குச் சொன்னால் அவர்கள் யாராக இருந்தாலும் நாட்டை விட்டு துரத்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரெட் கிராஸ் இந்த தாக்குதலை வெளியே கசியவிட்டுள்ளது. என்ன செய்யப்போகிறது இலங்கை அரசு?