Saturday, December 10, 2011

ராஜா-வாலி-மனசு-இசை

இரண்டு மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் டிஸ்கவரி புக் பேலசுக்கு வா என்றார். வந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அரை மணி காத்திருந்து, ஒரு டீ குடித்து வீடு திரும்ப முடிவெடுத்தபோது,. வணக்கம் தலைவரே என்று நண்பர் கேபிள் சங்கரின் குரல். அவ்வளவுதான், தொடர்ந்து நான்ஸ்டாப் டாக்கிங். வாய் வலித்தாலும் பரவாயில்லை, கால் வலிக்கக் கூடாது என நண்பர் வேடியப்பன் (டி.பு.பே) சேர் போட்டுத் தரும்போது, எனக்கு சுரேகா அறிமுகமானார்.

ஊர் கதையெல்லாம் பேசி, சொந்தக் கதை பேசும்போது, கேபிள் பிளாகில் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. குறிப்பாக பிரியாணி என்ற சிறு கதையைப் பற்றி சுரேகா மிகவும் சிலாகித்தார். ரொம்ப டச்சிங்கா இருந்தது, படிச்சவுடனே கண்ணு கலங்கிடுச்சு என்றார்.

சுரேகாவின் அந்த விமர்சனம் என் மனதிலேயே தங்கிவிட்டது. அதனால் கதையை படிக்காமலேயே அடுத்த குறும்படத்திற்கான கதை, கேபிளின் பிரியாணிதான் என்று தீர்மானித்தேன். அடுத்த சில நாட்களில் கேபிள் கதையை அனுப்பி வைக்க, நான் திரைக்கதை எழுதினேன். முக்கியமான கதாபாத்திரத்தில் டிவிட்டர் நண்பர்(@iamkarki) நடிக்க உற்சாகமான டீம் உருவானது. பிரியாணி என்ற டைட்டிலுடன் ஆரம்பித்த ரிகர்சல், மனசு என்ற புது டைட்டிலுடன் நிறைவுற்றது.

என்னைப் பொறத்தவரையில், நான் வேலைசெய்யும் புராஜக்டுகளில், இசைக்காக மிகவும் மெனக்கெடுவேன். சும்மா இசை, ஏதோ ஒரு டிராக் என்பதில் எனக்கு எப்போதும் திருப்தி இல்லை. நண்பர் இசையமைப்பளார் விவேக் நாராயணிடம் கதையை விவரித்தேன். (பிரியாணி)உணவு  இந்தக் கதையில் பிரதானமாக இருப்பதால், பசி தொடர்புடைய ஸ்ரீஇராகத்தில் பிண்ணனி இசை அமைத்து தந்தார். எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

தீம் மியூசிக் - 1 


தீம் மியூசிக் - 2



இசை உருவாகிற கணங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இரண்டு மேதைகள் ஒன்றாக இணைகிறபோது பரவசம்... பரவசம்... பரவசம்.

காற்றில் வரும் கீதமே பாடலுக்கு உருகாதவர் இருக்க முடியாது. அது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். அந்தப் பாடல் உருவாகும் விதத்தை கேளுங்கள். ராஜா மெட்டமைக்க, வாலி வார்த்தைகள் கொடுக்க, ஒரு குழந்தையின் ஜனனம் போல, விவரிக்க முடியாத ஒரு உன்னதத்தை உணர்வீர்கள்.

Friday, December 9, 2011

ஒஸ்தி - விமர்சனம்

ஹிந்தில தபாங் என்றால், தமிழில்ல ஒஸ்தியாம்லே..  சரியான போங்கு. டிரையலரில் ச்சுட்டே போடுவேன் என்றார் சிம்பு. சொன்னதைச் செய்ஞ்சுட்டாருல்லே.. படம் பாத்த அவ்ளவு பேரும் காலிலே..

டர்ட்டி பிக்சரில் வித்யாபாலன் தமிழில் பேசுவதைப் பார்க்க கோயம்பேடு ரோகிணி காம்ப்ளசுக்குள் நுழைந்தோம். கருவாட்டு வாடையுடன் காத்திருந்த போது நண்பர் கணேஷ் டிக்கெட் வாங்கி வந்துவிட்டார். காரை பார்க் பண்ணிவிட்டு வந்த ஜெயராஜ், கார் பார்க்கிங்ல போட் நிக்குது சார் என்றார். இது மீன் மார்கெட்டா, தியேட்டரா என்று சந்தேகித்துக் கொண்டிருக்கும்போது, திமு திமுவென்று டாஸ்மாக் வாசனையுடன் கூட்டம். நண்பர் கணேஷ் திடீரென அலறினார். ஐயையோ 3 டிக்கெட்டுக்கு பதில் ரெண்டுதான் வாங்கினேன். இப்ப என்ன பண்றது என்று பதறிக் கொண்டே மீண்டும் வரிசைக்கு ஓடினார். 5 நிமிடம் கழித்து புன்னகையுடன் வந்தார். அண்ணே ஒரு ட்விஸ்ட். டர்ட்டி பிக்சர் கான்சலாம். அதுக்கு பதிலா ஒஸ்தி டிக்கெட் கொடுத்துட்டான் என்றார். இதுதான் நான் ஒஸ்தி பார்த்த கதை.

ஒஸ்தியில என்ன கதை என்று நீங்கள் கேட்டுவிட்டால் நான் என்னத்த சொல்ல முடியும். அதனால்தான் ஒஸ்தியை பார்க்கப் போன கதையை நீட்டி முழக்கியிருக்கிறேன்.

Young Super Star என்று தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் சிம்பு, படம் முழுக்க கவர்ச்சி நடிகைகள் டை்டாக பிளவுஸ் போடுவது போல சட்டை அணிந்து கொண்டு, கூலிங் க்ளாஸ் இருட்டில் திக்குத் தெரியாமல் திரிந்து கொண்டே,  திருன்னவேலி ஸ்லாங் பேசிக் கொல்கிறார் (வில்லன்களையும், நம்மையும்).

கடைசியில் ஒரு லே போட்டுவிட்டால் அது திருநெல்வேலி ஸ்லாங் என்பது ஒஸ்தி வசனகர்த்தாவின் கண்டுபிடிப்பு. இசையமைப்பாளர் தமன், கீபோர்டை ஆன் செய்துவிட்டு அதன் மேல் பேப்பர் வெயிட்டை வைத்துவிட்டார் போலிருக்கிறது. நான் ஸ்டாப்பாக டிஜிட்டல் கதறல்கள், காதில் இன்னமும் ஙொய்ங்.

திரும்பவும் ஒரு முறை சொல்றேன். கதையைக் கேட்காதீங்க. ஏன்னா படம் முழுக்க கதாசிரியரும் தூங்கிட்டார், நடுநடுவுல நானும் தூங்கிட்டேன். சாயமுடியாத கிழிந்து போன சேரில், 90 டிகிரி செங்குத்தாக உட்கார்ந்து கொண்டு அவ்வளவாக தூங்க முடியவில்லை, பக்கத்து சீட் டாஸ்மாக்கர் வேறு அவ்வப்போது வாந்தி எஃபக்ட் கொடுத்துக் கொண்டிருந்ததால், பயத்தில் கண் விழித்து சில சீன்களை பார்த்ததன் பலன்தான் இந்த விமர்சனம்.

சந்தானத்துக்கு யங் கவுண்டமணி என்று பட்டம் கொடுத்துவிடலாம். சகட்டு மேனிக்கு எல்லோரையும் வாடா போடா என்கிறார். விட்டால் காமிராவைப் பார்த்து நம்மையும் என்னடா என்பார் போலிருக்கிறது. சிம்பு கேப் விடும்போதெல்லாம் இவர் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்.

இவர்கள் அதிகம் பேசித் தள்ளிவிட்டதால், நாயகி ரிச்சா கங்கோபாத்யாயவிற்கு டயலாக் கட். கிட்டத்தட்ட கிளைமேக்ஸ் வரை, முந்தானையை சரியவிட்டு, இடுப்பை காண்பித்துக் கொண்டே இருக்கிறார். மயக்கம் என்ன படத்துக்கு முன் இது ரிலீஸாகியிருந்தால், ஃபீல்ட் அவுட் ஆகியிருப்பார். பாடல் காட்சிகளில் கூட இவருக்கு பதில் சிம்வுவே ஆடித் தள்ளிவிட்டார் என்பதால், அவ்வப்போது ஃபுல் மேக்கப்பில் முழிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை.

ரேவதி, நாசர், கணேஷ், ஜித்தன் ரமேஷ், நிழல்கள் ரவி அப்புறம் சரண்யா என்று இன்னும் யார் யாரோ வந்து போகிறார்கள்.

சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டால், பட்டன்கள் தெறிக்க சட்டை தானாக கழன்று கொள்ளும் என்பதும், டிராக்டரை ஆன் செய்து, புகை கக்கும் எக்ஸாட் பைப்பை வாய்க்குள் சொருகினால் ஆள் காலி என்பதும், ஒஸ்தி நமக்குத் தரும் கிளைமாக்ஸ் மெசேஜ்கள்.

சிம்பு வெறியர்களும், மசாலா பிரியர்களும் மட்டும் இந்தப் படத்தை 30 நிமிடங்கள் பார்க்கலாம்.

சிவாஜி த பாஸ் மாதிரி, ஒஸ்தி த மாஸ்! சிம்புவைத் தவிர வில்லன் உட்பட எல்லா கேரக்டர்களும் இந்த வசனத்தை சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
மாஸ்னா என்னாலே, கொசு கடிக்காம இருக்க தடவுவோமே அந்த ஓடோமாஸாலே..

கடைசியில் டைட்டில் போடும்போது, சிம்பு ஒரு பெரிய சிக்கன் லெக் பீஸை கடிக்கிறார்.

ஒஸ்தி, கடி என்பதை சிம்புவே சிம்பாலிக்காக சொல்லும்போது நான் வேறு தனியாக சொல்லணுமாலே. அன்லிமிட்டெட் கடிலே..