Wednesday, July 17, 2013

மனசு - கேபிள் சங்கரின் பிரியாணி சிறுகதை குறும்படமாக!

கடந்த வருடம் . . . அதற்கும் முந்தைய வருடமாகக் கூட இருக்கலாம். டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு சந்திப்பு. கேஆர்பி. செந்தில், சுரேகா, கேபிள் மற்றும் நான்.

பேச்சை கேபிளின் சிறுகதைகள் பற்றிய பகிர்வுகள் ஆக்கிரமித்தன. அப்போது சுரேகாவும், செந்திலும் பிரியாணி என்ற சிறுகதையைப் பற்றி சிலாகித்தனர். கதையின் முடிவை வாசித்ததும் கண்கலங்கிவிட்டதாக செந்தில் குறிப்பிட்டார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதை குறும்படமாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு எழுந்துவிட்டது.



கேட்டேன். கேபிள் உடனே அனுமதி தந்தார். திரைக்கதை உருவானதும் கேபிளிடம் வாசித்துக்காட்டினேன். தனக்குப் பிடித்திருக்கிறது என்று அவர் கூறியதும் ரிகர்சலில் ஈடுபட்டேன். யார்யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது தனது குறுகுறு படங்களால் கலக்கிக் கொண்டிருந்த கார்க்கி, நடிகராக குழுவுக்குள் வந்தார். ரிகர்சலின்போது ஞாயிறுதோறும் கலகலப்புதான். அந்த ஜாலி வீடியோக்களை யுடியூபில் பார்க்கலாம்.

படம் தயார் ஆனதும், ஈரோடு பதிவர் சந்திப்பில் கேபிள், கார்க்கி இல்லாமலேயே அவசரம் அவசரமாக ஒரு வெளியீடு நடந்தது. அவ்வளவுதான். விருதுகளுக்கு யோசித்து, தாமதித்து பிறகு மறந்தே போனேன். அதன்பின் வித்தையடி நானுனக்கு திரைப்படத் தயாரிப்பில் இறங்கிவிட்டதால் மனசு குறும்படம் என் மனதுக்குள் வரவே இல்லை.

போனவாரம் ஹார்டு டிஸ்க்கை தூசி தட்டிக் கொண்டிருந்தபோது மனசு மீண்டும் பூக்க ஆரம்பித்தது. யோசிக்காமல் பட்டென்று அடுத்த அரைமணியில் யுடியூபில் ஏற்றிவிட்டேன். தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வெளியான ஒரே குறும்படம் இதுவாகத்தான் இருக்கும்.

படத்தை பார்த்த பலருக்கு கார்க்கியின் நடிப்பு பிடித்திருக்கிறது. கேபிள் ஏற்கனவே இயக்குனர் ஆகிவிட்டார். எனவே தமிழ் திரையுலகின் அடுத்த பிரபலங்களை இப்போதே இந்தக் குறும்படத்தில் பார்த்து இரசியுங்கள்.