Tuesday, March 3, 2015

நாமும் பங்கேற்கிற Interactive வீடியோக்கள்

வாட்ஸ்அப்பிலோ, டெலிகிராமிலோ யாருடனோ கொஞ்சிக் கொண்டிருக்கும்போது நாம் வெறும் திரையைப் பார்ப்பதில்லை. கொஞ்சல் முகத்தின் சொந்தக்காரரை மனதுக்குள்ளே திரையிட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் கொஞ்சித்திரிந்த பீச், மால்கள், மறைவுப்பிரதேசங்கள், இசிஆர் பைக் ரைடுகள் என எல்லாம் வந்து போகும். இந்த அனுபவங்களை அப்படியே 3Dயாக்கினால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். இதற்கான நுட்பங்கள் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. இப்போது எக்ஸ்ட்ரா லார்ஜாக ஒரு கற்பனை. அந்த 3D பிம்பங்களுக்குள் நான் அவ்வப்போது உள்ளே சென்று வரமுடியுமா? நிஜத்தில் சாத்தியமில்லை. ஆனால் உள்ளே நுழைந்து வெளிவரும் நிஜ நம்மையும் 3D பொம்மை(Virtual Reality)யையும் கலக்கிற நுட்பம் ஏற்கனவே கலக்கிக் கொண்டிருக்கிறது. Augmented Reality என்று பெயர். சுருக்கமாக AR.

இந்த நுட்பத்தை கொஞ்சம் மாற்றி 3Dக்கு பதில் உண்மையான பிம்பங்கள். மண்ணில், விண்ணில், கடலில் என பிடித்த இடங்களையெல்லாம் ஒரு சிலிக்கன் சில்லில் பதித்துவிட்டு அதை ஒரு ஹெட் செட்டுக்குள் பதித்து நம் தலையில் மாட்டிவிட்டால் என்ன ஆகும்? ஒரு மாயாபஜார் நம் கண்முன்னே உருவாகும். அந்த பிம்பங்களுக்குள் நாமும் நடப்போம், ஓடுவோம், தொடுவோம், படுவோம், சுடுவோ இன்னும் என்னென்னவோ செய்வோம்.

இந்த மாய 3D ஹெட்செட்டுகளை  ஃபேஸ்புக்கும் (Oculus rift), சோனியும்(Morpheous) ஏற்கனவே தயாரித்துவிட்டன. தற்போது HTC போட்டியாக தனது ஹெட்செட்டுடன்(Vive) களத்தில் குதித்துள்ளது.

எதிர்காலத்தில் AR + VR சேர்ந்த நாமும் பங்கேற்கிற Interactive சினிமாக்கள் வந்துவிடும். தயாராக இருங்க.



இரண்டே பேர் நடித்திருக்கும் திரைப்படங்கள்

இரண்டே பேர் நடித்திருக்கும் படம்
வித்தையடி நானுனக்கு

இதே போல் இரண்டே பேர் நடித்திருக்கும் திரைப்படங்கள் எத்தனை இருக்கும் என்று கூகுளில் தேடினேன். பத்து படங்களைக் கூட பட்டியல் போட முடியவில்லை. அந்த வகையில் எங்களுக்கு ஒரு பெருமை. உலக அளவில் டாப் - 10க்குள் வந்துவிட்டோம்.

DUEL
SLEUTH
BEFORE SUNRISE
BEFORE SUNSET 
GRAVITY
ANTICHRIST
GERRY

இவையெல்லாம் இதுவரை ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இரண்டே பேர் நடித்திருக்கும் திரைப்படங்கள். அந்த வரிசையில் எங்களுடைய ”வித்தையடி நானுனக்கு” திரைப்படமும் சிறப்பு கவனம் பெறுகிறது. தற்போது திரைப்படத்தை Crowd Funding முறையில் வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் வெள்ளித் திரையில் வித்தையடி நானுனக்கு திரைப்படத்தைக் காணலாம்.



Monday, March 2, 2015

தமிழக அரசியல் - அடைத்துக்கொண்டிருக்கும் சாக்கடை

 ஜெயலலிதாவுக்கும், மதுவுக்கும், இலவசங்களுக்கும் அடிமையாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிற கட்சி!
கருணாநிதி குடும்பத்தின் ஏற்ற தாழ்வுகளும், சண்டைகளும், சச்சரவுகளும்தான் கட்சிக்கும் அதன் தொண்டனுக்கும் என நிர்பந்திக்கிற கட்சி!
பொறுப்பான எதிர்கட்சி பதவியை இலவசமாகக் கிடைத்த டிஸ்கவுண்ட் கூப்பன் போல உதறித் தள்ளுகிற விஜயகாந்த் கட்சி!
இவர்கள் அனைவருடனும் தேவைப்படும்போது அவ்வவ்போது ஒட்டிப் பிரிகிற கட்சி!
தமிழகத்தில் இப்படி நான்கு வகை கட்சிகள்தான் இருக்கின்றன.

ஊழல் செய்வதும், அதிலிருந்து தப்பிக்கும் தந்திரங்களும் தான் அரசியல் என்பதைத்தவிர இந்தக் கட்சிகளிடம் வேறு கொள்கைகள் இல்லை.
ஊழல் செய்யும் தலைவர்களும், அவர்களை கும்பிட்டுத் தரிசிக்கிற தொண்டர்களும், அவர்களை ஊக்கப்படுத்தும்  சார்பு நிலை மீடியாக்களும் பெருகிவிட்டார்கள்.

அரசியலை சாக்கடை என்பார்கள். இன்றைய தமிழக அரசியலை அடைத்துக்கொண்டிருக்கும் சாக்கடை என்று சொல்லலாம். துர்நாற்றம் சகிக்கவில்லை. தமிகழத்தில் இதுவரையில் இவ்வளவு கேவலமான அரசியல் சூழ்நிலை நிலவியதில்லை. நல்ல கட்சி, நியாயமான கட்சி என ஒரு கட்சி கூட இல்லை. நல்ல தலைவர், நியாயமான தலைவர் என்று ஒரு தலைவர் கூட இல்லை. இவ்வளவு ஏன் ... நியாயமான அரசியல் பேசுகிற ஒரு நல்ல புத்தகம் கூட இல்லை.

மாபெரும் அரசியல் வெற்றிடம் உருவாகியிருக்கிறது. அந்த வெற்றிடத்தை மீண்டும் இதே ஊழல் சாக்கடைகள்தான் நிரப்பும் என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது. இவர்களின் மேல் சலிப்பும், கோபமும் இருந்தாலும் நல்ல தலைமை நல்ல தலைவர் என்று எவருமே கண்களுக்குத் தென்படாததால் இந்த சாக்கடைகளில் ஏதாவது ஒன்றுதான் 2016ல் மீண்டும் அரசாளும்.