Friday, May 14, 2010

+2 ரிசல்ட் - பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்று(May 14) ஆவலும் பதட்டமும் நிறைந்த நாள். இன்று பிளஸ் டூ ரிசலட். நேற்றைய இரவிலிருந்தே தூக்கத்தை தொலைத்திருக்கும் பல பெற்றோர்கள் இதை வாசிக்கக் கூடும். உங்களுக்கு சில வார்த்தைகள்.

  • இன்றைய நாள் வழக்கம் போல காலை காபியுடன் துவங்கட்டும்.
  • ரிசல்ட், ரிசல்ட் என்று பிள்ளையாரையும், பிள்ளைகளையும் டென்ஷன் ஆக்கவேண்டாம்.
  • 10 நிமிடம் கழித்து பொறுமையாகப் பார்த்தாலும் அதே ரிசல்ட்தான். எல்லோருக்கும் போனைப் போட்டு, எஸ். எம். அனுப்பி, பிரவுசிங் சென்டர் வாசல்களில் வியர்ப்பது தேவையற்ற மன அழுத்தம் தரும்.
  • இந்த வருடம் ”கணக்கு” பாடத்தின் கேள்விகள் அளவுக்கு அதிகமாக கடினமாக இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே அதில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது.
  • ரிசல்ட் எப்படி இருந்தாலும் அதுதான் உங்கள் பிள்ளைகளின் (தற்போதைய) பெஸ்ட். நீங்கள் கோபிப்பதால் மார்க் ஷீட்டுகளில் மதிப்பெண்கள் உயராது. எனவே ஸ்வீட் எடுங்கள், கொண்டாடுங்கள்.
  • எல்லா பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு பிள்ளைகளும் நமது பிள்ளைகளை விட அதிக மார்க் வாங்கிவிட்டது போல ஒரு பிரமை தரும் நாள் இது. அதற்கு இடம் தர வேண்டாம்.
இன்றைய பரிட்சை முடிவுகள், இன்றைய பரிட்சையின் முடிவுகள் தானே தவிர, நாளைய வாழ்க்கைக்கான தீர்ப்புகள் அல்ல. இதை நீங்களும் உணருங்கள். உங்கள் அன்புச் செல்லங்களுக்கும் சொல்லுங்கள்.

பின் குறிப்பு - 
ரிசல்ட் எதிர் மறையாக இருந்தால் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். அம்மாதிரி சமயங்களில் அவர்களை கடிந்து கொள்ளவே கூடாது. உங்கள் பிள்ளைகளின் மேல் அக்கறையும், அன்பும் அதிகரிக்க வேண்டிய நேரமிது. உதவிக்கு சிநேகா - 24640050 போன்ற தொண்டு நிறுவனங்களை அணுகுங்கள்.