Thursday, November 11, 2010

ராஜாவை கை கழுவினால், காங்கிரசுக்கு ஆதரவு - ஜெவின் ஓப்பன் பல்டி!

ராஜாக்களும், ராணிக்களும் முழுவீச்சில் களமிறங்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி இந்திய அரசியலில் எல்லா கூத்துகளும் நடக்கும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடிபடும் தொகையைக் கேட்டால் தலையை சுற்றுகிறது. அதை விட தலை சுற்றல் ஜெயலலிதாவின் காங்கிரஸ் ஆதரவு பேட்டி

நேற்று இரவு வரை காங்கிரசை திட்டிக் கொண்டிருந்தார் ஜெ. அதை நம்பி அதிமுக எம்பி மைத்ரேயனும் காலையில் ஆங்கில டிவிக்களில் காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார். திடுமென மதியம் ஜெ TIMES NOW சேனலில் தரிசனம் தந்தார்.  என்னிடம் 18 எம்பிக்கள் இருக்கிறார்கள். எனவே ராஜாவை கை கழுவினால் தி.மு.க ஆதரவை விலக்கி விடும் என்று காங்கிரஸ் அஞ்ச வேண்டாம். நான் காங்கிரசின் ஆட்சி கவிழாமல் இருக்க நாடு முழுக்க பல கட்சிகளிடம் பேசி மெஜாரிட்டிக்குத் தேவையான 18 எம்.பிக்களை திரட்டி ஆதரவு தருகிறேன் என்று பரபரப்பான பல்டி அடித்தார்.


இந்த டிவி பேட்டியே ஒரு TIMES NOW சேனலின் டிராமா போல இருந்தது. அதாவது ஜெ தனது பதில்களை எழுதி வைத்து வாசித்தார். இடையிடைய திறமையாக நடித்து தனது கேள்விகளை எடிட்டிங்கில் ஒட்டிக் கொண்டார், பேட்டி கண்ட அர்னாப். இது எனது கணிப்பு.

மீண்டும் அந்த பேட்டி ஒளிபரப்பானால் கவனித்துப் பாருங்கள். ஜெயலலிதா நேர்பார்வை பார்க்காமல் அடிக்கடி காமிராவிற்கு கீழ் இருக்கும் பிராம்ப்டரை பார்த்து படிப்பது தெரியும். ஆக திமுகவிற்கு எதிராக, ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஒரு ஆங்கில சேனல் களம் இறங்கிவிட்டது. பேட்டி என்ற பெயரில் ஒரு ஒத்திகை பார்க்கப்பட்ட பேச்சை ஒளிபரப்பியுள்ளது. எப்பவுமே ஜெவிற்கு ஆங்கில சேனல்களில் மவுசு அதிகம். அதிலும் TIMES NOW சேனல் ஜெவிற்கு ஸ்பெஷல் கவரேஜ் தரும். சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது அவரை குயின் என்று வர்ணித்து மகிழ்ந்தது.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று ஜெயலலிதாவிற்கு கவலையாக இருக்கிறதாம். அதனால்தான் இந்த ஆதரவாம். அட..அட... ஜெவிற்கு காங்சிரசின் மேல் ஏன் இந்த திடீர் பாசம்? வேறென்ன தமிழகத்தில் கோட்டையை பிடிக்க காங்கிரஸ் தேவை. அதற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் அவர்.

இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜம். நாளையே ஜெவும், சோனியாவும் கைகுலுக்கி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தாலும் எனக்கு நிச்சயமாக ஆச்சரியமாக இருக்காது.

ஈழப் பிரச்சனையில் தனக்கு எதிராக கருத்துகள் உருவானாலும், விடாப் பிடியாக கருணாநிதி ஏன் காங்கிரஸ் திண்ணையை விட்டு இறங்காமல் இருந்தார் என்று இப்போது புரிகிறதா? ஜெவும் அதே திண்ணைக்குதான்  தொடர்ந்து குறிவைத்துக் கொண்டிருக்கிறார். வலியப் போய் ஒரு டிவி பேட்டி வழியாக காங்கிரசுக்கு ஆதரவு தருகிறேன் என்று ஜெ சொல்லியிருப்பதுதான் உண்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முகம். ஈழப் பிரச்சனையில் ஜெ, கருணாநிதி, வை.கோ உட்பட எவருக்கும் உண்மையில் அக்கறை கிடையாது. தமிழகத்தில் ஆட்சியில் பிடிப்பதுதான் அவர்களுடைய உண்மையான இலட்சியம்.

இப்போதாவது ஈழ சகோதர சகோதரிகள் இந்த உண்மையை புரிந்து கொண்டு, தமிழக அரசியல்வாதிகளை நம்பாதிருக்க பழக வேண்டும்!