Saturday, May 12, 2012

சுமை தாங்கி முத்தம்

ஊறிக் கிடக்கும் முத்தங்களின் எடை
அவள் அதரங்களுக்கு சுமை என்பதால்,
என் இதழ்களுக்கு இடம் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

துணை முத்தம்



அவள் இதழ்களில் எனக்காக தனிமையில்
காத்திருக்கும் முத்தத்திற்கு துணையாக
என் முத்தங்களை விளையாட அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

Friday, May 11, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 4


எழுதிவிட்டு போஸ்ட் பண்ணப்படாத ஒரு வாசகர் கடிதத்துடன் இக்கட்டுரை துவங்குகிறது. சென்ற IOC (In & Out Chennai) இதழின் முதல் பக்கத்தில் ஆர்த்தி மங்களா எழுதியிருந்த கட்டுரை அருமை. திடீர் மின் துண்டிப்பால் விளக்குகள் அணைந்தாலும், கார்களின் விளக்கொளியில் தொடர்ந்து தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சி மிக மிக இன்ஸ்பயரிங். இந்தக் கடிதத்தை எழுதி போஸ்ட் பண்ணாத வாசகர் நான்தான்.

கட்டுரையும் எழுதிவிட்டு, வாசகர் கடிதமும் எழுதினால் பிரசுரிப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால் கடிதத்தையே என் கட்டுரையின் முதல் பாராவாக்கிவிட்டேன்.

பெரும் தலைவர்களின் சாதனைக் கதைகளை விட, இது போன்ற எளிய மனிதர்களின் எளிய வெற்றிதான் அதிகம் நம்பிக்கையும், உற்சாகமும் தருகிறது. அந்த பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கை தட்டி உற்சாகப்படுத்தியவர்களுக்கும், கார் லைட்டுகளுக்கும் வாழ்த்துகள்!

அந்தக் கட்டுரையில் ஒரே ஒரு விஷயம் மிஸ்ஸிங். பவர் கட் ஆனதும், ஆர்த்தி மங்களா என்ன மேஜிக் செய்தார் என்பது பற்றிய விபரம் இல்லை. சென்ற வாரம் ஒரு பவர்கட் இரவில் நான் ஒரு மாஜிக் செய்தேன். பவர்கட் ஆனதும், இருளில் யாருக்கும் தெரியாமல் டப்பாவுக்குள் இருந்த, கால்கிலோ திருநெல்வேலி ஹல்வாவை மறைய வைத்துவிட்டேன். வீட்டு வாண்டுகள் சண்டைக்கு வரும் என்பதால், எப்படி அந்த மாஜிக் செய்தேன் என்பதை திருநெல்வேலி இருட்டுகடை வாசலில் நின்று கேட்டாலும் சொல்ல மாட்டேன்.

முசோலினி
பின்னர் தேவைப்படும் எதையாவது மறக்காமலிருக்க வேண்டுமென்றால், அதை எங்காவது எழுதி வைப்பது வழக்கம். எனவே முசோலினி என்ற இந்தப் பெயரை இங்கே எழுதி வைக்கிறேன். ஏன் மறக்கக் கூடாது என்பதற்கு விடை (அ) கேள்வி கடைசி பாராவில் உள்ளது.

கழுகு - சுஜாதா எழுதிய சுருக்கமான நீதிக்கதை!
ஒரு கழுகு சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தது. விஷ் என்ற சப்தம் கேட்டு அது என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு அம்பு அதைத் தாக்க, அடிபட்டு தன் இறக்கை இழந்து சுழன்று சுழன்று சொத்தென்று கீழே விழுவதற்கு முன் தன்னைத் தைத்த அம்பை ஒரு தடவை பார்த்தது. கூர்மையான முனை, நீண்ட உடல், அதன் வாலில் கழுகிறகு! ‘அடப்பாவமே!’ என்று சொல்லிகொண்டே செத்துப்போனது.

நீதி : பல தடவை நம் எதிரிகளுக்கு நம்மை அழிக்க நாமே உதவி செய்து தருகிறோம்.

சுருக்கமா எப்படி எழுதறது என்பதை தலைவர் சுஜாதாகிட்டதான் கத்துக்கணும். அதே பாணியில நானும் ஒரு கதை டிரை பண்ணப் போறேன்.

காக்கா - நான் எழுதிய சுருக்கமான நீதிக்கதை!
பாட்டி சுட்ட வடையை நைஸாக கொத்திக் கொண்டு மரத்தில் அமர்ந்தது காக்கா. அதைப் பார்த்த நரி, ஹேய் காக்கா நீ ரொம்ப அழகு என்றது. நரித் தந்திரம் தெரிந்த காக்கா, வடையை காலில் பிடித்துக் கொண்டு, நான் அழகு என்று நீ சொன்னதை அப்படியே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸா போடு என்றது.

நீதி :
செக்புக் இல்லார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
ஃபேஸ்புக் இல்லா நபர்க்கு.

சுஜாதாவும், வள்ளுவரும் மன்னிப்பார்களாக!

வரம்பு மீறும் சின்னத்திரை
ஜீ தமிழில் அச்சமில்லை அச்சமில்லை என்றொரு நிகழ்ச்சி. நிர்மலா பெரியசாமி, பிரிந்து கிடக்கும் குடும்பங்களை எதிரெதிர் சோபாக்களில் உட்காரவைத்து கன்னாபின்னாவென்று கேள்வி கேட்கிறார்.
உன் அப்பா உன்னை அடிக்கிறாராம்மா.. அப்பெண் அழுகிறாள். தந்தை மறுக்கிறார். உடனே அவரை வெளியே அனுப்பிவிட்டு, அப்பெண்ணிடம், ஏம்மா உன் அப்பா உன்னை தனியா கூப்பிட்டு ...... . . . . . அதற்குப் பின் வந்த வார்த்தைகள் எல்லாம் மகா வக்கிரம். தனியறைக்குள் ஆலோசனையாக சொல்ல வேண்டியவற்றை, ஏதோ பட்டி மன்றம் போல, பொதுவில் வைத்து விசாரிப்பதை உடனே தடை செய்ய வேண்டும். காமிராவின் முன்னால் தன்னை மறந்து அழும் அந்த டீன் ஏஜ் பெண், அதே நிகழ்ச்சியை டிவியில் பார்க்கும்போது மனரீதியாக எப்படியெல்லாம் பாதிக்கப்படுவாள். குழந்தைகளுடன் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மனதில் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதைப் பற்றி யாரும் சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வித்யாபாலன் நடித்த டர்ட்டி பிக்சரை இரவு 11 மணிக்கு மேல்தான் ஒளிபரப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதே ரீதியில் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அல்லது நிறுத்தப்பட வேண்டும்.

மீண்டும் முசோலினி
இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மிஸ்டர் X ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்.

''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்.''
ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்.''
மிஸ்டர் X மீண்டும் தந்தி அனுப்பினார், ''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.'' சரி அந்த மிஸ்டர் X யார் எனத் தெரிய வேண்டுமா? நான்காவது பாராவின் தலைப்பு அவர் பெயர்தான்.

In & Out Chennai April (15-30) இதழில் எழுதியது

கற்றதும் கற்பதும் (கூகுள், டின்ட், பிக் மங்கி)



கூகுளின் மேகக் கணிமை (Cloud Computing)
சென்ற வாரம் ஒரு நள்ளிரவு. நண்பர் ஒருவர் விடிவதற்குள் ஒரு க்ரீட்டிங்கார்டு வேண்டும் எனக் கேட்டார். நெருங்கிய நண்பர் என்தால் தட்டமுடியவில்லை. தூக்கத்தை தொலைத்து அவசரம் அவசரமாக ஃபோட்டோஷாப்பில் ஒரு டிசைன் செய்து அனுப்பினேன். பிறகு மறந்தே போய்விட்டேன். இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால் வேறொரு டிசைனை வைத்து க்ரீட்டிங்கார்டு தயார் செய்திருந்தார்.

நான் அனுப்பிய டிசைன் பிடிக்கவில்லையான எனக்கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்தான் ஹைலைட்.
”நீ அனுப்பிய பதிலை பார்க்கவே இல்லை” என்றார்.
”ஏன்?” என்றேன்.
”ஏனென்றால் நீ அனுப்பிய ஃபோட்டோஷாப் ஃபைலை பார்க்க என்னிடம் ஃபோட்டோஷாப் இல்லை” என்றார்.

இதே அனுபவம் எனக்கு ஏற்கனவே நடந்திருக்கிறது. ஒரு கார்ப்பரேட் ஃபிலிம். ஒரு குறிப்பிட்ட காட்சியை எடிட் செய்யாமல் அப்படியே பார்க்க வேண்டும் என க்ளையண்ட் விரும்பியதால், அதை உடனடியாக உதவியாளர் வழியாக அனுப்பி வைத்து விட்டு வேறு வேலையில் மும்முரமாகிவிட்டேன். அதிகாலையில் ஃபோன். 

”சார், நீங்க அனுப்பின வீடியோவில் ஏதோ பிரச்சனை. திறக்கவே மாட்டேன்கிறது. திறந்தாலும் விட்டு விட்டு ப்ளே ஆகிறது” என்றார். 

பல்வேறு குழப்பங்கள், விளக்கங்கள் மற்றும் கோபங்களுக்குப் பின் . . . . ஹி..ஹி..ஹி... நீங்க அனுப்பினது HD வீடீயோவா... HD என் கம்ப்யூட்டரில் திறக்காதே என்றார்.

இந்த அவஸ்தைகளை இனி எளிதாக தவிர்க்கலாம். கூகுள் நிறவனம் தனது Google Docs சேவையை இன்னும் சிறப்பாக்கி (Google Drive) என்னும் புதிய ஸ்பெஷல் சேவையை தருகிறது. காதலிக்கு மேகத்தை தூதுவிடுவது போல, இனி கூகுள் (Cloud storage service) சேவையை பயன்படுத்தி குழப்ப க்ளையண்டுகளை சமாளிக்கலாம்.

இந்த தொழில்நுட்பம் மூலம் நம்முடைய கோப்புகள் ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் உட்பட எதுவாக இருந்தாலும், இணையத்தில் சேமித்து வைக்கலாம். மேலும் நாம் எங்கு சென்றாலும் அவற்றை அங்கிருந்தே திறக்க முடியும். உதாரணத்திற்கு என் க்ளையண்ட் கேட்ட வீடியோவை கூகிள் டிரைவில் பதிவேற்றம் செய்து விடலாம். எனது க்ளையண்ட் கூகிள் டிரைவ் மூலம் தனது மொபைல்களிலோ, அல்லது கணினிகளிலோ அதனை பார்த்துக் கொள்ளலாம். HD வீடியோ ப்ளேயர் இல்லை எனப் புலம்ப வேண்டாம். ஏனென்றால் கூகுள் டிரைவ் இதனை எளிதாக ப்ளே செய்யும். ஒரு காலத்தில் யாஹீ சூட்கேஸ் என்றொரு சமாச்சாரம் இருந்தது. இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் அதன் தொழில்நுட்பம் வேறு. இது மேகக் கணிமை (Cloud Computing) என்ற தொழில் நுட்பம் மூலம், எங்கிருந்தாலும் எளிதாகப் பயன்படுத்தும் வாய்ப்பு தருகிறது.

மேகக் கணிமை = Cloud Computing

இந்த மொழிபெயர்ப்பு அழகு. யார் செய்தது எனத் தெரியவில்லை. வாசித்தவுடன் மனதில் ஒட்டிக் கொண்டுவிட்டது.

சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன். அடுத்த முறை என் நண்பரைப் போல யாராவது க்ரீட்டிங் கார்டு டிசைன் செய்து ஃபோட்டோஷாப் ஃபைலை அப்படியே கேட்டால் கூகுள் டிரைவுக்குள் போட்டு விடுங்கள். அவரிடம் ஃபோட்டோஷாப் இல்லாவிட்டாலும், டவுன்லோடு செய்யாமலேயே அவரால் பார்க்க முடியும்.

இந்த  Cloud Storage சேவையில் ஏற்கனவெ Apple, Box.net, மற்றும் Dropbox என பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றில்  கூகுள் டிரைவ் சிறப்பாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

உங்களிடம் ஜிமெயில் ஐடி இருந்தால் https://drive.google.com/ என்ற முகவரி வழியாக நீங்கள் இந்த சேவையை பயன்படுத்தி 5GB வரை இலவசமாக சேமிக்கலாம். அதற்கு மேல் என்றால் பணம் கட்ட வேண்டும்.


ஐடி என்பது டாட்டா என்ட்ரி செய்ய மட்டுமல்ல
நான் எடிட்டராகப் பொறுப்பேற்று இருக்கும் மாத்தியோசி இதழின் சார்பாக, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் திரு. பி.வி. ரமணா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எளிமையாக, எளிமையை விட ஆர்வம், ஆர்வத்தை விட அக்கறை அதிகம் உள்ளவராக இருக்கிறார். சந்திப்புக்கு குஜராத்திலிருந்து ஒரு கன்ஸல்டன்ட் வந்திருந்தார். அவரும் ஆச்சரியப்பட்டார். பரவாயில்லயே எங்க குஜராத் மாதிரியே இங்கயும் சின்சியர் அமைச்சர்கள் உள்ளார்களே என்றார். எங்கள் குஜராத் என்றவர் ஒரு தமிழர் என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டுப் படிக்கவும்.

விடைபெற்று காரில் ஏறும்போது, குஜராத்தில் சாலையில் ஒரு கேபிள் போட வேண்டும் என்றால் கூட, கார்ப்பரேஷன், மின் துறை, தண்ணீர் துறை மற்றும் ஐடி துறையும் ஒரே இடத்தில் இருப்பார்கள். அனைவரும் ஒன்று கூடி பேசி முடிவெடுப்பார்கள். நெடுஞ்சாலைத் துறை சாலையை போட்டு முடித்த அடுத்தநாள், மின் துறை சாலையை துண்டிக்கும் அபத்தமெல்லாம் நடக்காது என்றார். அவர் சொன்ன லிஸ்டில் ஐடி துறையும் உள்ளதை கவனியுங்கள். ஐடி துறைதான் மற்ற துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க உதவும் துறை. நம்ம ஊரில் ஐடி துறை சம்பாதித்து ஹவுசிங் லோன் போடுவதற்கு மட்டும்தான் பயன்படுகிறது.

சென்னை கார்ப்பரேஷனின் கால்சென்டர் சொதப்பல்!
இன்று காலையில் ஒரு செய்தி. 1913 என்பது சென்னை கார்ப்பரேஷனின் புகார் எண். தண்ணீர் குழாயில் சாக்கடை வந்தாலோ, சப்வே போல பெரிதாக பள்ளம் தோண்டிக் கிடந்தாலோ இந்த எண்ணை அழைக்கலாம். அழைத்தால் வந்து சரி செய்வார்களாம். இதெல்லாம் யாரும் அழைக்காமலே வந்து செய்ய வேண்டிய சேவைகள். இருந்தாலும் அழைத்தால்தான் வருவேன் என்ற கார்ப்பரேஷனை அணுக நீங்கள் 1913ஐ அணுக வேண்டுமாம். திருப்பதியில் வரிசை டிக்கெட் வாங்காமலேயே லட்டு கிடைக்குமா? கிடைக்காது. அது போலத்தான் இந்த நம்பரும் கிடைக்கவே கிடைக்காது. கிடைத்தாலும், நீங்கள் கேட்ட சேவை கிடைக்காது.


இதற்கு மிக முக்கிய காரணம், ஆள் பற்றாக்குறை. இவ்வ்வவ்வளவு பெரிய சென்னைக்கு நான்கே நான்கு பேர்தான் இந்த ஃபோனில் பதில் சொல்ல நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அவர்கள் பதில் சொன்னாலும், வடபழனியில் உள்ள ஒரு பிரச்சனையை சென்னை சென்டர் ஸ்டேஷனுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் எப்படி தீர்க்க முடியும். வாய்ப்பே இல்லை.

எனவே இதன் எக்ஸ்டென்ஷனாக, சென்னை நகரின் அத்தனை கார்ப்பரேஷன் அலுவலகங்களும் இணைக்கப்பட வேண்டும். அடையாறில் இருந்து ஒருவர் 1913ஐ அழைத்தால் உடனடியாக அந்த ஃபோன் பார்வர்டு செய்யப்பட்டு அடையாறுக்கு அருகில் உள்ள அலுவகலத்தை இணைக்க வேண்டும். இது சும்மா ஒரு சாம்பிள் ஐடியாதான். பரபரவென இயங்கும் கால்சென்டர்களை அமைத்துத் தர இன்று டெக்னாலஜி மிகச் சுலபமாக இருக்கிறது. மொபைல் கம்பெனிகளின் கால்சென்டர்கள் பல டெல்லி, மும்பையில் உள்ளன. ஆனால் ஈரோடு சந்திப்பில் இருந்து அழைத்தால் கூட பக்கத்துதெருவில் இருந்து பேசுவது போல நெருக்கமாகி, உங்களுக்கு பதில் sms அனுப்பி அசத்திவிடுவார்கள்.

ஆனால் நமது சென்னை கார்ப்பரேஷன் 1913 சேவையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை சஸ்பெண்டு செய்திருக்கிறார்கள். இதை டைப் பண்ணும்போது, அவர்கள் டீ குடித்துவிட்டு வந்து மீண்டும் வேலையில் சேர்ந்திருக்கக் கூடும். 1913 சேவையை திறம்பட நடத்த வேண்டுமென்றால், சஸ்பெண்டு சிறந்த வழி அல்ல. அதற்கு பதில் இந்த கால்சென்டர்கள் எப்படி இயங்குகின்றன, அதனை எப்படி நடத்துவது என்ற வகுப்புக்கு அனுப்பி வைக்கலாம்.

உங்கள் பிளாகை மற்றவர்கள் களவாடாமல் தவிர்க்க ஒரு வழி
ஒருவர் எழுதிய பிளாகை அப்படியே வரிக்கு வரி கட் அண்டு பேஸ்ட் செய்து, தனது பிளாகாக வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் பேஸ்ட் செய்தவரின் தளத்தில் இது உங்களிடம் இருந்துதான் சுடப்பட்டது என்பதை தெரிவிக்கும் வழி ஒன்று உள்ளது.

டின்ட் என்றொரு தளம், http://id.tynt.com 
இந்த தளத்திற்கு சென்று தேவையான விபரங்களைக் கொடுங்கள்.
அதன் பின் உங்கள் பதிவுகள் ஏதாவது களவாடப் பட்டால், கண்ணுக்குத் தெரியாமல் உங்கள் பதிவின் முகவரியை அந்தப் பதிவிலேயே இணைத்துவிடும். எனவே உங்கள் பதிவை யார் எத்தனை காப்பி எடுத்தாலும், அத்தனையும் உங்கள் தளத்தை நோக்கியே இழுத்து வரும். டிரை பண்ணுங்க.

ஆன்லைனிலேயே இமேஜ் எடிட்டிங்
சென்னைக்கு வெளியே உள்ள, வாய்ப்பு வசிதிகள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சொல்லித் தர எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த சில மாதங்களாக, பொன்னேரியில் வசிக்கும் நண்பர் ஒருவர் துணையுடன், அங்கிருக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆன் லைன் வழியாக வெப்சைட் வடிவமைப்பு, அதில் கதை, கவிதைகளை ஏற்றுதல், இமேஜ் எடிட்டிங் என சில பல வேலைகளை சொல்லித் தந்து வருகிறேன். எல்லாமே skype அல்லது கூகுள் சாட் வழியாகத்தான். மாணவர்கள் படு சுட்டிகள். பளிச்சென்று பிடித்துக் கொள்கிறார்கள்.

கடந்த வாரம் ஆன்லைனிலேயே இமேஜ் எடிட்டிங் பழகினார்கள். உதவிக்கு வந்த தளத்தின் பெயர், www.picmonkey.com - பெயரில்தான் அடங்காத குரங்கின் பெயர் இருக்கிறதே தவிர, சமர்த்தான தளம். அட்டகாசமாக ஆன்லைனிலேயே ஃபோட்டோஷாப் வேலை பார்க்கலாம்.

Thursday, May 10, 2012

வழக்கு எண் : 18/9 - விமர்சனம்


முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறேன். இந்தப் படத்தை நிச்சயம் நீங்க பார்க்கணும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஒரு பெண்ணை மோட்டர் பைக்கில் துரத்திப் போய், அவள் அழகாக இல்லை என்பதற்காக அவள் முகத்திலேயே எச்சில் துப்புகிற ஹீரோக்களை கைதட்டி, விசிலடித்து ரசித்த நம்மை கன்னத்தில் அறைகிறது இந்தப் படம்.  உண்மையிலேயே நாம் காரித்துப்ப வேண்டியவர்கள் யார் என்பதை டைட் குளோசப்பில் காட்டுகிறது.


முதல்பாதி ஒரு கத்தியின் வீச்சு போல சரேலென்று முடிவடைகிறது. கச்சிதமாக ஒரு மணி நேரம்தான். ஆனால் அதற்குள் வயல்களை விழுங்கும் நகரம், கந்து வட்டி நரகம், முறுக்குத் தொழிலில் அடிமைச் சிறுவர்கள், கஞ்சா தெருக்கள், பாலியல் வடுக்கள், தெருவோர இட்லிக்கடை வாழ்க்கை என பலவற்றை மிக நெருக்கமாக ஆனால் நறுக்கென்று மனதில் தைப்பது போல சுளீரென்று சொல்லியிருக்கிறார் பாலாஜி சக்திவேல். அவரை நேரில் பார்த்தால் சல்யூட் அடிப்பேன்.  முகங்களை நேசிக்கிற உலகில், மனித மனங்களை நேசிப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையின் நுணுக்கங்களை இத்தனை அருகில் கவனிக்க முடியும்.

படம் முடிந்து பார்க்கிங்கை விட்டு நகரும்போது, செம படம் மச்சி. இதைப் போய் வேணாம் வேணாம்னு சொன்னியே, என்று ஒரு நண்பர் தன் நண்பேன்டா திட்டிக் கொண்டிருந்தார். இந்தப் படம் ஓடணும், அப்பதான் நல்ல தொடர்ந்து நல்ல படம் வரும், என்றார் வேறு யாரோ ஒருவர். திரும்பிப் பார்க்க முடியாத பார்க்கிங் நெரிசலில் அவர் முகத்தை கவனிக்கமுடியவில்லை.

படத்தின் ஹீரோ திரைக்கதை தான். ஒரே காட்சியின் ஒரு பாதியை மட்டும் காண்பித்துவிட்டு, மறுபாதியை இடைவேளைக்குப் பின் வேறொரு கதாபாத்திரத்தின் வழியாகத் தொடரும்போது, படம் ஜிவ்வென்று முன்னும் பின்னும் சம்பவங்களை ஒரு மாலை கட்டுவது போல, கோர்த்துக் கொண்டே வருகிறது. இந்த கதை நகர்த்தல் டெக்னிக்கை இன்னும் வேகப்படுத்துகிறது காமிரா. சில நேரங்களில், கதாபாத்திரங்களின் கண்களாகவும், சில நேரங்கள் அந்தக் கண்கள் பார்க்கும் எண்ணெய் ஊற்றப்படும் முறுக்குச் சட்டியாகவும், தேநீர் நிரப்பப்படும் கோப்பையாகவும் நம்மை உணர வைக்கிறது. ஆனாலும் பாத்திரங்களின் உடம்போடு ஒட்டிக் கொண்டு நகரும் பாடிகேம் ஷாட் (சுவாரசியமான சில கோணங்களைத் தவிர மற்றவை) எனக்குப் பிடிக்கவில்லை.

இன்ஸ்பெக்டர் குமரவேல். விளம்பரங்களில் அவர் முகத்தை அசட்டையாகக் கவனித்த போது, எஸ்.ரா என நினைத்துவிட்டேன். அருமையான இயல்பான நடிப்பு. அதே போல ஸ்ரீ. முதல்படம் என்றே தெரியவில்லை. கதாநாயகிகளின் தேர்வும் அசத்தல். ஊர்மிளா, மஹிமா! இருவருமே கச்சிதம்.  வேலைக்காரப் பெண்ணாக வரும் ஊர்மிளாவுக்கு மொத்தம் 10 வரிகளுக்குள்தான் வசனம். ஆனால் முகபாவம் அழகு. இளமை திமிரும் டீன் ஏஜ் நடுத்தர வர்க்க டீன் ஏஜ் பெண்ணாக மஹிமாவும் கண்களை விட்டு நகர மறுக்கிறார். பணக்கார வீட்டுப் பையன் தேர்வும் அட்டகாசம்.

கூத்து கட்டும் இளைஞனாக வந்து நீ கவலைப் படாதய்யா, நான் இருக்கேன்யா என்று பெரிய மனுஷத்தனத்தோடு பேசும் சின்னப் பையன் வித்தியாசமான பாத்திரப் படைப்பு. (அவன் பெயரை கவனிக்கல)

முக்கிய கதாபாத்திரங்கள் திரையை ஆக்கிரமித்திருக்க, பிண்ணனியில் நடமாடும் நபர்களின் சார்பில் ஒலிக்கும் வசனங்கள் காட்சிகளை முழுமைப்படுத்துகின்றன. அதே போல சுவாரசியமான துண்டு துண்டு ஷாட்கள். உதாரணமாக ஸ்ரீ சாப்பிட உணவின்றி மயங்கிக் கிடக்க, அவன் முகத்தைக் கடந்து போகும் டிபன் பாக்சும், ஆபீஸ் போகும் அவசரக் கால்களும்.

நீங்கள் டீன் ஏஜ் பெண்களின் பெற்றோராக இருந்தால், இந்தப் படம் பார்த்தவுடன், அவளுக்கு மொபைல் கால் வரும்போதெல்லாம், அவளை முன்பை விட அதிக அக்கறையுடன் கண்காணிப்பீர்கள்.

நீங்கள் டீன் ஏஜ் பெண்ணாக இருந்தால், உங்கள் இளமையை குறி வைத்து வீசப்படும் வசீகரங்கள் குறித்து இனி எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.

நீங்கள் வெறும் சினிமா இரசிகராக இருந்தால், இந்தப் படம் பார்த்தவுடன், தரமான சினிமாக்களின் இரசிகனாக மாறிவிடுவீர்கள்.

இந்த வழக்கு ஜெயித்துவிட்டது.