Friday, October 23, 2009

41,685 தமிழர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பினார்கள் - தமிழ் பதிவர்கள் மௌனம்


காலையில் The Hindu இணையதளத்தில் இந்த செய்தியை பார்த்தேன். அப்புறம் நக்கீரனில் பார்த்தேன். பின்னர் சன் செய்திகளில் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. நான் அறிந்தவரை இந்தச் செய்தியின் சாராம்சம் இதுதான்.

முகாம்களில் இருந்து திருப்பி அனுப்பபட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 இலங்கை ரூபாயும், ரூ. 20,000க்கான வங்கி வைப்பு நிதியும் வழங்கப்பட்டது. அது தவிர, 6 மாதத்திற்கான ரேஷன் பொருட்களும், அவசர தேவைக்கான துணிகளும் வழங்கப்பட்டன. வவுனியா, மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு மக்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.

இதற்க்கான விழாவில் பேசிய மஹிந்த ராஜபக்ஷே, தமிழக முதல்வருக்கும், பாரதப் பிரதமருக்கும் நன்றி தெரிவித்தாராம்.

ஆனால் இந்த செய்தி குறித்த சந்தோஷமோ பரபரப்போ பகிர்தலோ, தமிழ் பதிவர்களிடையே துளி கூட இல்லை. டிவிட்டரில் கூட இந்தச் செய்தி தமிழர்களிடையே உலவவில்லை.  ஆதவன் ரிலீசுக்கு மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதியவர்களும், டிவிட்டரில் கமெண்ட் அடித்தவர்களும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் இருந்து விடுதலை ஆகிறார்கள் என்பதை ஏனோ கண்டு கொள்ளவில்லை!!! Facebookல் மட்டும், இந்தச் செய்தியைப் பற்றி சந்தேகம் தெரிவித்து ஒரு பதிவை பார்த்தேன். மற்றபடி பதிவர் உலகில் இந்தச் செய்தி எந்தச் சலனமும் இல்லாமல் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது.

கொஞ்சமாவது சந்தோஷம் தரக்கூடிய இந்தச் செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கிறோம் என்று தமிழ் பதிவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Thursday, October 22, 2009

ஜாலியான அட்வைஸ் கதை - 4


டாஸ்மாக் மூடுகிற நேரத்தில், கடைசியாக நாலு பேர் உள்ளே போனார்கள். சற்றுத் தொலைவில் கான்ஸ்டபிள் காத்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு கேஸ் பாக்கியிருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்க்காக ஒரே ஒருவன் சிக்கிவிட்டால், இன்றைய கோட்டா ஓவர்.

பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை. கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான்.  அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள். மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள்.

”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல”
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.

மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான்.

”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.” கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை.

”மிஸ்டர் காரை விட்டு இறங்கு”
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”
”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே  கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன்.  ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”

அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை.
”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”

”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான்.
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”
”எதுக்கு?”
”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.

நீதி
மது அருந்தாதீர்கள். மது அருந்தாவிட்டால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மது அருந்துபவர்களையும் காப்பாற்றலாம்.

Wednesday, October 21, 2009

வலைபாயுதே - 1 : ஹாரிபாட்டரை முந்திய விண்டோஸ் 7


விண்டோஸ் 7க்கான முன்பதிவு ஹாரிபாட்டருக்கான முன் பதிவையே முந்திவிட்டது, என்று அமேசான் ஆன்லைன் ஸ்டோர் அதிசயிக்கிறது.

”பிசி வேர்ல்டு” மக்களின் ஆர்வத்தைக் கண்டு,   லண்டன் நகரில் உள்ள ஒரு ஸ்டோரில் நள்ளிரவில் இருந்தே விண்டோஸ் 7 விற்பனை உண்டு என போர்டு மாட்டியிருக்கின்றது. இதே பாணியில் ஹாரிபாட்டருக்காக சென்னையில் கூட நள்ளிரவில் ஒரு புத்தகக் கடை திறந்திருந்தது, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

”டச் ஸ்கிரீன்” மென்பொருள்களுக்குத் தேவையான அனைத்து சமாச்சாரங்களையும் உள்ளடக்கியுள்ள விண்டோஸ் 7, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேஜிக் டச் என்று சொல்லலாம். விண்டோஸ் விஸ்டாவினால் சரிந்திருந்த மைக்ரோசாப்டின் இமேஜ் மற்றும் விற்பனையை விண்டோஸ் 7 உயர்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் இன்னும் 24 மணி நேரம் கழித்துதான் சந்தைக்கு வரப் போகிறது.

மக்களின் இந்த அதீத ஆர்வத்திற்கு காரணம், மைக்ரோசாப்டின் மார்கெட்டிங் உத்தி. அமெரிக்காவின் புகழ்பெற்ற டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று Family Guy. அந்த நிகழ்ச்சியின் இயக்குனரைக் கொண்டு, அரை மணிநேரத்திற்கு, ஒரு ஸ்பெஷல் விண்டோஸ் 7 புரோகிராமை தயாரித்திருக்கின்றார்கள்.

செயின் ஸ்டோர்ஸ் - இதுதான் சரிந்து கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய உத்தி. மைக்ரோசாப்டும் அதையே பின்பற்றி விண்டோஸ் 7ஐ ஒரு வெற்றிகரமான ஆபரேட்டிங் சிஸ்டமாக மாற்ற முயற்சிக்கின்றது. இந்த வரியை நீங்கள் வாசிக்கும் வரை வெற்றிதான். மக்கள் வாங்கி பயன்படுத்திய பின்தான் உண்மை நிலவரம் தெரியும். அதற்குள் இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.

உலகில் 93% கம்ப்யுட்டர்களில் மைக்ரோசாப்ட்தான் உள்ளது. ஆனால் தற்போது நிறைய கெட்டப் பெயருடன் உள்ளது. விண்டோஸ் 7 நல்ல பெயரெடுக்க வேண்டும் என்று பிசி நிறுவனங்கள் எல்லாம் கையை பிசைந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் பொருளாதாரச் சரிவால் HP, DELL, Sony போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் விற்பனை குறைந்து டல்லடித்துக் கொண்டிருக்கின்றன. விண்டோஸ் 7 இதையெல்லாம் மாற்றும் என்று உலகமே காத்திருக்கின்றது.

விண்டோஸ் ஏழா? விண்டோஸ் பாழா? என்று நாளை தெரிந்துவிடும்.

Sunday, October 18, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

”இலங்கைக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு”
தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் இலங்கைக்கு சென்று வந்த பின் சென்னையில்  மேற்கண்ட வாசகங்களுடன் சில போஸ்டர்கள் முளைத்தன.

இதை கண்டித்து, Facebookல் சிலர், முக்கியமாக இலங்கைத் தமிழர்கள் கலைஞரை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது. அவர்களுடைய கோபம் நியாயமானதே. ஆனால் கோபப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?


வயிற்று வலி எனக்கு என்றால், நான்தானே மருந்து சாப்பிட வேண்டும். கசப்பு என்பதால் எனக்காக இன்னொருவர் மருந்து சாப்பிட முடியுமா? பிரபாகரனின் (இன்னும் சிலரால் உறுதி செய்யப்படாத) முடிவுக்குப் பின்னால், ஈழத் தமிழர்களின் ஒருங்கிணைந்த தலைவர் யார்? யாராக இருந்தாலும் அவர் ஈழத்தில்தானே இருக்க வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் தி.க தலைவர்கள் அந்தந்த கட்சிக்குதான் தலைவர்களே தவிர, ஈழத் தமிழர்களின் தலைவர்கள் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.

ஆனால் அதை மறந்துவிட்டு, சில ஈழத் தமிழர்கள் தங்களது தலைவர்களை தமிழ்நாட்டில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு ”நான்கே நாட்களில் இலங்கை பிரச்சனையைத் தீர்த்த கலைஞர்” போஸ்டர்கள் கண்களில் படுகின்றன. அவர் கலைஞர் அல்ல, கொலைஞர் என்று அனல் கக்குகிறார்கள். மீண்டும் சொல்கிறேன். உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் கலைஞர் அல்லது கொலைஞரின் மேல் கோப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?


  • உங்கள் விடுதலைக்கு உங்கள் பங்கு என்ன?
  • இலங்கையில் உள்ள தமிழ்கட்சிகள் ஏன் தனித் தனி கட்சிகளாக இயங்குகின்றன? 
  • ஏன் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை? 
  • ஏன் அவர்களுக்குள் பொதுத் தலைமை இல்லை? 
  • அவர்களில் எந்தக் கட்சியை அல்லது அமைப்பை இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்?
  • ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு இவர்களுக்கு பங்கே இல்லையா?

தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கருணாநிதியை அல்லது பிரபாகரனை திட்டித் தீர்த்துவிட்டு பொழுதை போக்குவதும், பிறகு ”மானாட மயிலாட” பார்ப்பதும் வாடிக்கை தான்.

தற்போது இலங்கைத் தமிழர்களும் பிரபாகரனை அல்லது கருணாநிதியைத் திட்டிவிட்டால் தங்கள் கடமை முடிந்தது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நினைப்பு மாறி, இது தங்கள் பிரச்சனை என்று நினைத்து ஒற்றுமையுடன் போராடும் வரை, தனி ஈழம் என்பது கனவாகவே நீடிக்கக் கூடிய அபாயம் உண்டு.

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழ்நாட்டு போஸ்டர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களை குறி வைத்து ஒட்டப்படுகின்றன. அதைப் படித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.
”மானாட மயிலாட” நிகழ்ச்சிகள் எங்கள் (தமிழ்நாட்டு தமிழர்களின்) நேரத்தை  வீணடிக்கப் பிறந்த நிகழ்ச்சிகள். அதைப் பார்த்துவிட்டு கோபப்படாதீரகள். கலைஞர் மீதும், நமீதாக்கள் மீதும் கோபப்படுவதுதான் ஈழப்போராட்டம், தனி ஈழ உணர்வு என்று (கொச்சையாக) வரைமுறைப் படுத்தாதீர்கள்.உங்கள் தலைவர் யார்? அவரை கண்டுபிடியுங்கள். அவரைக் கண்டுபிடிக்க உங்கள் கோபம் உதவட்டும். தனி ஈழம் பிறக்கட்டும்.