Tuesday, September 2, 2008

'து'வா? 'உ'வா?

இரவு ஒன்பது மணிக்கு மேல் அலுவலக தொலை பேசி அழைத்தால், அது மனைவியாகத்தான் இருக்கும்.
"ஹலோ"
"என்னங்க?", கரெக்ட் மனைவியேதான்.
"என்ன?"
"வீட்டுக்கு வரும்போது இரண்டு ஐட்டம் வாங்கிட்டு வந்திருங்களேன்",
"சொல்லு"
"துவரம் பருப்பு கால் கிலோ"
"ம்..."
"நோட் பண்ணிக்கோங்க. 'து....' பருப்பு. போன தடவை மாதிரி உளுத்தம் பருப்பை வாங்கிட்டு வந்திடாதீங்க.
"ஓ.கே"
"அப்புறம் உளுத்தம் பருப்பு அரை கிலோ. மறந்துடாதீங்க. . . 'உ' பருப்பு.
"இப்பதான 'உ' பருப்பு வேண்டாம்னு சொன்ன?"
"இல்லையே 'து' பருப்புக்கு பதில் 'உ' பருப்பை வாங்கிடாதீங்கன்னுதான் சொன்னேன்."
"என்னை கன்ஃபியூஸ் பண்றே?"
"நீங்க தான் என்னை கன்பியூஸ் பண்றீங்க! எனக்கு இரண்டு பருப்பும் வேணும். ஆனா அது கால் கிலோ, இது அரை கிலோ."
"அதுன்னா எது?"
"அதுன்னா 'து' பருப்பு. நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க, 'து' பருப்பு...'உ' பருப்பு வேண்டாம்"
"வேண்டாமா?"
"வேண்டாம்னா . . . வேண்டாம்னு அர்த்தம் இல்ல. அரை கிலோ வேண்டாம். கால் கிலோ வேணும்னு அர்த்தம்"
"சரி இப்போ எது கால் கிலோ வாங்கணும். 'து'வா? 'உ'வா?"
"ஏன் இப்படி குழம்பிக்கறீங்க?"
"நான் ஒண்ணும் குழம்பல. நீதான் குழப்பற?"
"பேசாம ஒரு பேப்பர்ல எழுதிக்கோங்க"
"சொல்லு"
"துவரம் பருப்பு கால் கிலோ, உளுத்தம் பருப்பு அரை கிலோ"
"அவ்வளவுதானா?"
"அவ்வளவுதான்"

(இப்படியெல்லாம் பேசக் கூடாது என்பதுதான் முதல். இதைத்தான் நான் 'கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் வகுப்பில் எடுக்கிறேன். எப்படி பேச வேண்டும் என்பது அடுத்தது.)

Monday, September 1, 2008

அவளை என்னால் மறக்க முடியவில்லை

அவள் தமிழில் அறிமுகமாகி, மலையாளத்திலும் பிரபலமாகியிருந்தாள்.  அவள் கைகளிலும் கால்களிலும் பிளேடு கீறல்.
"படுபாவி எல்லாம் அந்த ராஸ்கலுக்காகத்தான். இரத்தம் நிறைய போயிடுச்சி.  ஆனாலும் பிழைச்சுட்டேன்.  அவனை விடமாட்டேன்" என்று சீறிவிட்டு "டயலாக் என்ன?" என்றாள்.

சில வருடங்களுக்கு முன், தி.நகரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ஷோ ரூமுக்கு விளம்பரப் படம் எடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.  நான் சொன்னது  அவர்களுக்கு பிடிக்கவில்லை.  அவர்கள் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டு, சமாதானமாகி கடைசியாக ஒரு  ஸ்கிரிப்ட் ஓகே ஆனது. அதற்கு ஒரு ஜிங்கிளையும் ரெக்கார்ட் செய்த பிறகு, துணிக்கடை தரப்பிலிருந்து எங்களால் இவ்வளவு செலவு செய்ய முடியாது என்று சொல்லி பாதியாக வெட்டப் பட்ட ஒரு பட்ஜெட் வந்தது.

இந்த மாதிரி புது விளம்பரதாரர்கள் ஜகா வாங்குவதை அடிக்கடிபார்த்து பழகியிருந்ததால், நான் பெரிசாக அலட்டிக்கொள்ளவில்லை.   பட்ஜெட் குறையும்போதெல்லாம் உதவுவதற்க்காகவே சில மாடல் கோ-ஆர்டினேட்டர்கள் உள்ளார்கள்.  ரூபாய் 500லிருந்து 1000ம் வரை பேமெண்ட் கொடுத்தால் போதும். ஒரு நாள் முழுக்க நடித்துவிட்டு முகம் சுளிக்காமல், ஆட்டோ ஏறிப்போவார்கள்.  பட்ஜெட் சரிபாதியாகிப் போனதால் நான் அந்த மலிவு மாடல்களுக்காக காத்திருந்தேன்.

உள்ளே வரலாமா? என்று கேட்டுவிட்டு உள்ளே வந்தவள் 'அவள்'. கையில் பிளேடு கீறலுடன் 'டயலாக் என்ன?' என்று கேட்ட அவள். கிட்டத்தட்ட 7 வருட இடைவெளி. அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வேறு நரை தாடியை மறைக்க ஃபுல் ஷேவில் இருந்தேன்.  அதனால் நான் யாரென்று தெரியாமலேயே 'ஹலோ' என்று கையைக் குலுக்கிவிட்டு பெயரைச் சொன்னாள். அது அவளுடைய பெயர் அல்ல.  7 வருடங்களுக்கு முன்பு தமிழ்-மலையாளத் திரை உலகம் அறிந்த பெயர் அல்ல.

"ஏன் பெயரை மாற்றிக் கொண்டாய்?" என்று நான் கேட்டதும், அவள் அதிர்ந்து போனாள்.  என்னை எப்படித் தெரியும் என்றாள்? சொன்னேன்.   ஒரு நெடிய மெளனம்.  அப்போது கீறிய பிளேடின் வலியை இப்போது அவள் அனுபவிப்பதாய் உணர்ந்தேன்.
"புது பேரு, புது வாழ்க்கைன்னு இப்பதான் 3 வேளை சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். நான் பழைய ஆர்டிஸ்டுன்னு யாருக்கும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்."
"ஏன்?"
"எல்லாரும் என்னை மறந்துட்டாங்க?"
"இப்போ சொன்னா என்ன ஆகும்?"
"திரும்பவும் மறந்துடுவாங்க"

என்னால் மறக்க முடியவில்லை.

Sunday, August 31, 2008

ஜே.கே. ரித்திஷ் - விஜயகாந்த்! இவர்கள் 'காமெடி வெடியா' அல்லது 'தொடர் சரவெடியா'?

சொந்தப் பணமா? எங்கிருந்தோ வந்தப் பணமா? என்று தெரியாது.  ஆனால் தமிழகத்தில் இன்று இரண்டு பேர் இன்று 'தில்'லாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் ஜே.கே.ரித்திஷ்.

விஜயகாந்த், விருதாச்சலத்தில் ஆரம்பித்தார்.  2011ல் அடுத்த முதல்வர் ஆகிவிட்டுத்தான் நிற்பேன் என்கிறார். உங்கள் கொள்கை என்ன? தமிழகத்தை முன்னேற்ற உங்கள் யோசனை என்ன என்றால், இப்போது வெளியே சொல்ல முடியாது, சொன்னால் மற்ற கட்சிகள் காப்பியடித்துவிடுவார்கள் என்று தைரியமாக காமெடி பண்ணுகிறார்.

ஜே.கே ரித்திஷ் கானல் நீரில் சொதப்பலாக ஆரம்பித்து, நாயகனில் வந்து ஹிட் கொடுத்து நிற்கிறார். பட்டி தொட்டியெங்கும் கிட்டத்தட்ட 6 மாதங்களாக போஸ்டர்கள், பேனர்கள், படத்தில் பில்ட் அப் துவக்கப் பாடல் என பிரமாண்ட காமெடி லுக் கொடுக்கிறார்.

விஜயகாந்த் - ஜே.கே. ரித்திஷ் இருவருக்கும் பணம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியவில்லை.  ஆனால் இருவரும் பணத்தை செலவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

விஜயகாந்த் சினிமாவில் வேண்டுமானால் கேப்டனாக இருக்கலாம். அரசியலில் தொண்டனாகக் கூட முடியாது என்றார்கள். ஆனால் விருதாச்சலத்தில் ஹிட் கொடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

ஜே.கே. ரித்திஷை ஒரு பணக்காரக் கிறுக்கன். முன்பு 'சின்ன எம்.ஜி.ஆர்' என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் ஆட்டம் போட்டுவிட்டு காணாமல் போனது போல, இவரும் அம்பேல் ஆகிவிடுவார் என்றார்கள். ஆனால் 'நாயகன்' ஹிட் கொடுத்து மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.

விஜயகாந்த் நான் தனியாகவே ஜெயிப்பேன். 2011ல் நான்தான் முதல்வர் என்கிறார்.
ஜே.கே.ரித்திஷிம் ஓப்பனிங் சாங்கெல்லாம் வைத்து நானும் தனிதான் என்று சொல்லிவிட்டார்.

சும்மா வேடிக்கை காட்டுகிறார்கள் என்று முதலில் கிண்டல் செய்யப்பட்டார்கள். ஆனால் ஆளுக்கொரு ஹிட் கொடுத்து ஒருவேளை சீரியஸ் பார்ட்டிகளோ என்று அனைவரையும் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார்கள்.

இவர்கள் 'காமெடி வெடியா' அல்லது 'தொடர் சரவெடியா'?
பார்க்கலாம்!