Wednesday, November 4, 2009

தலை சுற்ற வைக்கும் கோனார் நோட்சும், தமிழ் Teacherசும்


”இவையும் சிங்கங்களும் மான்களும் புலிகளும், இங்ஙனம் ஒன்றுக்கொன்று பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும் பறவைகளும் இசையால் மயங்கித் தத்தம் வழியினை அறியாதவனாய் இடந்தோறும் ஒன்றோடொன்று கலந்து சோர்ந்து இசையாகிய வலையின்கண்பட்டன.”

இந்த வரிகளை உளறாமல் படித்துவிட்டால் உங்களுக்கு 5 மதிப்பெண்கள். மனப்பாடம் செய்து மூச்சுத் திணறாமல் ஒப்பித்துவிட்டால் 10 மதிப்பெண்கள். தலையை பிய்த்துக் கொள்ளாமல் உடனே அர்த்தம் கூறிவிட்டால் 15 மதிப்பெண்கள். இல்லாவிட்டால் பிரம்படி மற்றும் பரீட்சையில் ஃபெயில்.

கோனார் நோட்சும், தமிழ் டீச்சரும் சேர்ந்து என் மகளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தலை வலி என்றால் அனாசின், படுக்கையில் என்றால் ஹார்லிக்ஸ், டிவி என்றால் சன் டிவி என்பது போல, தமிழ் பாடம் என்றால் கோனார் நோட்ஸ் என்பது முப்பது வருடங்களாக மாறாத விதி. பலபேரின் தலை விதியை இந்த கோனார் நோட்ஸ் மாற்றியிருக்கிறது.

கோனார் நோட்ஸ் என்பது மாணவர்களின் உற்ற நண்பன் என்பார்கள். ஆனால் உண்மையில் இது தமிழ் டீச்சர்களின் உற்ற நண்பன். குறிப்பாக இங்கிலீஷ் பள்ளிகளில், தமிழ் நடத்தும் தமிழ் டீச்சர்ஸ் கோனாரின் உற்ற நண்பனாக இருக்கிறார்கள். வகுப்பில் எதையும் சொல்லித்தருவதில்லை. கோனார் நோட்ஸை மனப்பாடம் செய்யச் சொல்லிவிட்டு, சிவப்பு இங்க் பேனாவை எடுத்து மார்க் போடத் தயாராகிவிடுகிறார்கள்.

திருவிளையாடல் படத்தில் ”விறகு வாங்கலையோ விறகு” என்று கூவியபடி சிவன் விறகுவெட்டி வேஷத்தில் நடந்து வருவாரே ஞாபகம் இருக்கா?

”ஆமாம்? “பாட்டும் நானே, பாவமும் நானேன்னு“ ஒரு பாட்டு பாடுவாரே...”

”அதேதான். அவர் பாடறதைக் கேட்டு சிங்கம், மான், புலி போன்ற மிருகங்கள் எல்லாம் மயங்கிடுச்சாம். ”

”மயங்கி . .”

”மயங்கிப் போய் தங்களுக்குள்ள பகையை மறந்து, போற பாதையை மறந்து சொக்கிப்போயிடுச்சாம். இதைத்தான் கோனார் நோட்ஸ்ல எழுதியிருக்காங்க.”

”நிஜமாவா? எங்க மிஸ் இதையெல்லாம் சொல்லலயே!”

”கோனார் நோட்ஸ்லயும் இதைத்தான் எழுதியிருக்காங்க.”

”நீ சொல்றது ஈஸியா இருக்குப்பா. ஆனா இது வேண்டாம்.”

”ஏன்?”

”ஏன்னா? கோனார் நோட்ஸ்ல இல்லாததை நான் எழுதினா மிஸ் எனக்கு மார்க் போட மாட்டாங்க.”

”ரெண்டும் ஒண்ணுதாம்மா.”

”ஆனா கோனார் நோட்ஸ்ல நீ சொன்னது இல்லையே . . . அதனால நானே படிச்சிக்கறேன். என்னை விடு.”

”ஏங்க அவளை கெடுக்காதீங்க. ஏய் அப்பா சொல்றத கேட்காதடி . . .”, உள்ளேயிருந்து அவளுடைய அம்மா.

”பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும்.... பகைமை.. பகைமை... பகைமையினு... பக்கை..மை..யின..”

மீண்டும் என் மகள் கோனார் நோட்ஸை கையில் எடுத்துவிட்டாள். இனி நான் தடுக்க முடியாது.

வாழ்க கோனார் நோட்ஸ் . . . வளர்க தமிழ் டீச்சர்ஸ்

Tuesday, November 3, 2009

பேராண்மையில்லை - ஆண்மை - விமர்சனம்


 எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜனி பிரபலப்படுத்தி, நேற்று வந்த புதிய,இளைய,  புரட்சி தளபதிகள் வரை தன்னைத் தானே சொரிந்து கொள்ளும், புகழ்ந்து கொள்ளும் அருவருப்பான சுய பிரச்சார பாடல்களை, காட்சிகளை எந்த முணுமுணுப்பும் இல்லாமல் கைதட்டி இரசித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் இரசித்த நாம் பேராண்மை போன்ற ”சில கருத்துகளை” பிரச்சாரம் பண்ணும் படத்தை ஆதரியுங்கள் என்ற வேண்டுகோளுடன் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கின்றேன்.

திரைப்படங்கள் வழியாக “தன்” கருத்தைச் சொல்லும் படைப்பாளிகளில் (ஒரே)ஒருவராக ஜனநாதன் தனித்து தெரிகின்றார்.

கதை - மிக நல்ல கதை
(சொல்லாமல் கொள்ளாமல் தழுவிய கதை என்று இணையத்தில் படித்தேன்)

திரைக்கதை - பலவீனமான திரைக் கதை
(சாதிப் பிரச்சனையாக துவங்குகிற படம், தேச பக்தி படமாக முடிகிறது)

வசனம் - கொச்சை
(அந்தப் பெண்களின் விரசமான பாலியல் பேச்சுக்களும், ஜெயம் ரவியின் வீரமில்லாத அரசியல் கருத்துக்களும்)

நடிப்பு - அனைவரும் அபாரமாக நடித்திருக்கின்றார்கள். கடினமான உடல் உழைப்பும், மனோ ரீதியான அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்தப் படத்தில் வரும் காடுகளுக்குள் நடித்திருக்க முடியாது.

எடிட்டிங் - நறுக்கென்று இல்லை.

ஒளிப்பதிவு - நடிகர்களுக்கு இணையான உழைப்பு.

இயக்கம் - ஆபரேஷன் சக்ஸஸ்.

இந்தப்படத்தில் சென்சாரால் mute செய்யப்பட்ட வசனங்களாலும், சென்சாருக்கு தப்பித்த வசனங்களாலும் இயக்குனர் ஜனநாதன் படம் முழுக்க தனித்து தெரிகின்றார். ”வசனங்களால்” என்று குறிப்பிடக்காரணம் அவருடைய கருத்து வெறும் வசனங்களாகவே வெளிப்பட்டிருக்கின்றது. கருத்துக்களை காட்சியாக்குவதில் கவனம் செலுத்தவில்லை. காட்டுவாசிகளை காட்டை விட்டு துரத்தும் காட்சியிலும் அழுத்தமில்லை. அதனால்தான் திரையரங்குகளில் வெறும் பிரச்சார நெடி அடிக்கிறது.

மேலதிகாரி பொன்வண்ணன் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தும்போது எந்த முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக் கீழ்படிந்து, ஒரு புழுவைப் போல, கடமையை மட்டும் செய்யும் என்.சி.சி. அதிகாரி துருவனாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். தன்னை ஒடுக்கும் ஆதிக்க சக்திகள் யார் எனத் தெரிந்தும் அவர்களை எதிர்த்து ஒரு சிறிய கல்லைக் கூட எறியவில்லை துருவன். ஆனால் முகமற்ற, வெறுமனே வெள்ளைக்காரர்கள் என்ற அடையாளத்துடன் வரும் கூலிப்படையை ஒடுக்க உடனே போரில் இறங்குகிறார்.

உலக அரசியல் சுளிவுகள், மூலதனக் கோட்பாடுகள், காட்டுக்குள் மேப் பார்த்து வழி கண்டுபிடித்தல், கொலை செய்தல் உட்பட அனைத்தையும் ஒரு Demoவாக தன்னிடம் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு செய்து காட்டுகிறார்.

ஆனால் அந்தப் பெண்கள் யார் தெரியுமா? துருவன் ஒரு கீழ்சாதி ஆள் என்பதாலேயே அவனை பிடிக்காமல் கழிவறையை கழுவ வைத்து அவமானப்படுத்தும் ஆதிக்க வெறிபிடித்த பெண்கள். அவர்களையும் துருவன் ஒரு வார்த்தை கூட கடிந்து கொள்வதில்லை.

ஏன் என்று நமக்கு வரும் ஆச்சரியம், அந்தப் பெண்களுக்கும் வருகின்றது. ஏன் எங்கள் மேல் கோபப்படவில்லை என்று அவர்களில் ஒரு பெண் கேட்கிறாள். புன்னகைக்கும் துருவன் ”நமது சக்தியை எதிரிகளிடம்தான் காட்ட வேண்டும்” என்று துப்பாக்கியைக் கையில் கொடுக்கின்றான்.

பிறகு அதே 5 அடாவடி இளம் பெண்களுடன் இணைந்து போராடி முகம் தெரியாத கூலிப்படையினருடன் மோதி தேசம் காக்கிறார்.

அதாவது தேசத்திற்கு ஒரு ஆபத்து என்றால், சாதி மறந்து, ஆதிக்க வெறி மறந்து இணைந்து போராட வேண்டும் என்பது தான் படத்தின மெசேஜ்.  ஆனால் இந்த மெசேஜ் யாருக்கு? ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கா? அடங்கி நடப்பவர்களுக்கா? இதுதான் குழப்பம்.

ஏனென்றால் படம் முழுக்க கருத்து சொல்லும் துருவன், இந்தக் கருத்தைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதனாலேயே இது பேராண்மையில்லை.