Saturday, January 24, 2009

கள்ளக் குறிச்சியில் கள்ளத் தனத்தை ஆரம்பித்துவிட்டார் விஜயகாந்த் : கருத்துக் கணிப்பு முடிவு சரிதான்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் . . .
  • தனியாக நின்று வீணாகப் போவார் என்று 142 பேரும்
  • கூட்டணி சேர்ந்து கல்லா கட்டுவார் என்று 325 பேரும்
வாக்களித்துள்ளார்கள்.

கிட்டத்தட்ட நூறு நாட்கள் நடந்த இந்த கருத்துக் கணிப்பில் பதிவான வாக்குகள் மொத்தம் 467.

ஜனவரி முதல் வாரத்திலேயே நமது கருத்துக் கணிப்பு முடிந்துவிட்டது. ஆனாலும் நமது கேப்டன் உளறுவதற்க்காக காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே நேற்று கள்ளக் குறிச்சியில் நடந்த  நிதியளிப்பு மாநாட்டில் தனது கள்ளத் தனத்தை ஆரம்பித்துவிட்டார்.

அதாவது 100 நாட்கள் முன்பு வரை யாருடனுமே கூட்டணி கிடையாது என்று அலட்டியவர், நேற்று தேசியக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி உண்டு என்று பல்டி அடித்துவிட்டார்.

எனவே விஜயகாந்துக்கு இன்று முதல் பல்டிகாந்த் என்ற பட்டத்தை அளிக்கின்றோம்.

எத்தனையோ அரசியல்வாதிகளை பார்த்துவிட்டோம். இப்போது விஜயகாந்த்தையும் பார்த்துத் தொலைக்கிறோம்.

நேத்து என்னடான்னா கட்சியில ஆளுக்கு 100 ரூபாய் வாங்கி, ஒரு மாசத்துல 100 கோடி ரூபாய் நிதி வசூலிப்பேன்னு சொல்றார். ஆனா நிதியை வைச்சு என்ன செய்வீங்கன்னு கேட்டா வெளியில சொல்ல மாட்டேன் காப்பி அடிச்சிடுவாங்கன்னு ஸ்கூல் பையன் லெவலுக்கு உளறிக் கொண்டிருக்கிறார்.


ஆனா 'ஆனந்த விகடன்' மாதிரி பத்திரிகையே, ஒரு முட்டாள் இரசிகனைப் போல, என்னமோ இவர்தான் தமிழ்நாட்டின் விடிவெள்ளின்னு பத்து வாரம் ஊர் ஊரா போய் ஷோ காட்டுகிறது.


எல்லாம் நம்ம தலையெழுத்து.

வாங்க மிஸ்டர் பல்டி காந்த். வந்து உங்க அடுத்த பல்டியை ஆரம்பியுங்க.

Friday, January 23, 2009

80 வருட காத்திருப்பு - ஆஸ்கர் பற்றி ஏ.ஆர்.இரகுமான்

ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க!
எனை ஆடாம ஆட்டி வைத்தாய் வணக்கமுங்க!

பல பாடல்கள் செவிகளில் மட்டுமே ஒலிக்கும். வெகு சில பாடல்கள் மட்டுமே உணர்வுகளில் கலக்கும். சங்கமம் திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் அரிதான உணர்வுகளின் சங்கமம். இந்தப் பாடல் ஒரு மகன் தனது தந்தைக்கு செலுத்துகிற இசைக் காணிக்கையாகவே எனக்குத் தோன்றும். அதற்குப் பொருத்தமாக தகப்பன் ஸ்தானத்தில் எம்.எஸ்.வியின் மந்திரக் குரலும், மகன் ஸ்தானத்தில் ஏ.ஆர்.இரகுமானின் உணர்வுகளை உலுக்கும் இசையும் ஆழ்மன அதிர்வுகளை மீட்டும்.

“We have been waiting for this for nearly 80 years, haven’t we? I am so elated” 
ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்திற்க்காக இரண்டு பிரிவுகளில் மூன்று பரிந்துரைகளைப் பெற்றவுடன், இந்து நாளிதழுக்காக அளித்த பேட்டியில், ஏ.ஆர்.இரகுமான் கூறிய வார்த்தைகள் இவை. 80 வருட காத்திருப்பு என்று அவர் கூறிய வார்த்தைகளை அவருடைய இசை முன்னோர்களுக்கு அவர் செய்திருக்கும் மரியாதை என்று நான் நினைக்கிறேன்.

ஜி.இராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்ற தமிழ் இசைக் குடும்பத்தில் ஏ.ஆர்.இரகுமான் முன்னவர்களின் மகனைப் போன்றவர். இன்றைக்கு இந்த 'இளைய மகன்' ஆஸ்கர் விருதுகளின் வாசலில் நிற்கிறார். தந்தையின் ஸ்தானத்தில் இருக்கும் எம்.எஸ்.வி, இளையராஜா போன்றவர்களும் ஞானத்தில் குறைந்தவர்கள் அல்ல.

ஆனால் ஒரு குடும்பத்தில் மகன் தலையெடுத்து தனது தந்தையின் பெருமையை உலகுக்குச் சொல்வது போல, ஏ.ஆர்.இரகுமானின் வெற்றி எம்.எஸ்.வி, இளையராஜா போன்றோரின் ஸ்வரக் கலவைகளையும் நாளைய உலகம் நினைவில் வைக்க உதவும்.

நீ உண்டு உண்டு என்ற போதும்
இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமைய்யா
நிற்காது ஒரு போதும்.

80 வருடங்களாக இந்தியாவின் தென் மூலையிலிருக்கும் ஒரு மாநிலத்தின் சாதாரண இசையாக உணரப்பட்ட ஸ்வரங்கள் இன்று உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மேல்தட்டு சாஸ்திரிய இலக்கணங்களில் கட்டுப்பட்டிருந்த இசையை மெல்லிசையாக்கி நாட்டுப் புறங்களிலும்  உலவ விட்டவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

அந்த நாட்டுப் புறத்திலிருந்து புறப்பட்டு சிம்பொனி இசையின் உன்னதங்களை எளிய அன்னக்கிளியின் ராகங்களோடு உலவ விட்டார் இசை ஞாநி இளையராஜா.

டிஜிட்டல் யுகம் பிறந்த போது ராக், ஜாஸ், ரெகேக்களுடன் சூஃபி இசையும், ஹிந்துஸ்தானியின் ஸ்வரங்களும், கர்நாடக இசையும் கலந்து சிலிக்கன் சில்லுகளில் கடல் தாண்டினார் இரகுமான்.

இல்லை..இல்லை என்று ஒதுக்கிய இசைகளை
எம்.எஸ்.வி, இளையராஜாவைத் தாண்டிய மூன்றாவது தலைமுறை இரகுமான் உண்டு .. உண்டு...என்று உலகை ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்.


இன்று ஆஸ்கர் விருதுகளின் செவிகளைத் தொட்டிருக்கிற ஏ.ஆர்.இரகுமானின் இசை மேற்கத்திய இசை அல்ல. தமிழகத்திலிருந்து புறப்பட்டுள்ள இந்திய இசை.

At last western world accepted Indian Music
கோல்டன் குளோப் விருது பெற்றவுடன் ஏ.ஆர்.இரகுமான் சொன்ன வார்த்தைகள் இவை.

என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா
உன் கட்டளைகள் உள்ள வரைக்கும்.


இனி ஏ.ஆர்.இரகுமானைத் தொடர்ந்து உலகம் முழுக்க இந்திய இசை ஒலிக்கும்.

வணக்கம் வணக்கமுங்கோ!
ஐயா எம்.எஸ்வி!! ஐயா இளையராஜா!!
உங்களுக்கு சகோதரன் ஏ.ஆர்.இரகுமான் சார்பில் வணக்கம் வணக்கமுங்கோ!!
வணக்கமுங்கோ... வணக்கமுங்கோ!

ஜெய் ஹோ!

Tuesday, January 20, 2009

பாரக் ஹீசைன் ஒபாமா - தடுமாறுவாரா? தடம் மாற்றுவாரா?

உலகமே ஒருவரை உற்று நோக்கினால் என்னவாகும்?
இன்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஒபாமாவைக் கேளுங்கள், பதில் சொல்லுவார்.

1861ல் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் சாட்சியாக, அமெரிக்காவின் 44வது அதிபராக பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, பாரக் ஹீசைன் ஒபாமா, ஒரு கணம் தடுமாறித்தான் போனார்.

கிட்டத்தட்ட பத்து  இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முன்னிலையில், வாஷிங்டன் சதுக்கத்திற்கு எதிரிலிருந்து காப்பிடல் மாலில் சில மணி நேரங்களுக்கு முன்னால் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார், அல்லது சுமையை ஏற்றார்.

"இன்றைக்கு நம் முன்னால் இருக்கின்ற சவால்கள் அத்தனையும் நிஜம்" , தனது ஏற்புரையில் ஒபாமா அழுத்திச் சொன்னது இதைத்தான். போர், வேலையின்மை, நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் தடுமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்காவை ஒபாமா எப்படி காப்பாற்றுவார் என்று உலகமே ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போல பார்த்துக்கொண்டிருக்கிறது.

"நம்மை அச்சுறுத்தும் சவால்கள் பல. அவைகளை ஒரு குறுகிய காலத்தில் வெல்லுவது கடினம். ஆனால், இது அமெரிக்கா. சவால்கள் தோற்கடிக்கப்படும்", என்று எச்சரிக்கையும், நம்பிக்கையும் கலந்து ஏற்புரையாற்றினார் ஒபாமா.


ஆனால் "சவால்களை குறுகிய காலத்தில் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கும் ஒபாமா, பதவி ஏற்கும் போதே சில நிமிடங்களை இழந்துவிட்டார்"

ஒரு ஆப்பிரிக்க தந்தைக்கும், வெள்ளைக்கார அம்மாவுக்கும் பிறந்த 47வயது ஒபாமா, அவருடைய மனைவி லிங்கனின் பைபிளை ஏந்தியிருக்க,பதவி ஏற்கும்போது குறிப்பிட்ட நேரம் கடந்து சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.

வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம், வழக்கத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு, வழக்கத்தை மீறி ஒரு கருப்பின மனிதன் அமெரிக்க ஜனாதிபதி என பல வழக்க மீறல்களுடன் உலகத்தின் ராஜாவாகியிருக்கிறார் ஒபாமா.  வழக்கமாக எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளின் உரைகளிலும் உற்சாகம் கொப்பளிக்கும். ஆனால் ஒபாமாவின் உரையில் அது மிஸ்ஸிங்.

"But he downplayed deliberately"
"NO..he is already tensed"
என்று மீடியாக்கள் வழக்கம் போல வார்த்தைகளை அவரவர் பார்வையில் கூறு போட ஆரம்பித்துவிட்டன.


"அரசு மயமாக்கல், கல்வி, மாற்று எரிசக்தி, நவீன ஆனால் மலிவான தொழில் நுட்பம், இவைகளை முன்னிலை படுத்தி வேலை வாய்ப்பை பெருக்குவதுதான் உடனடி இலக்கு". அதற்காக கடுமையான ஆனால் துரிதமான “bold and swift” நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மக்களிடம் ஓட்டு கேட்டு சென்ற போதும் கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினார். "அரசாங்கமே அனைத்தையும் செய்யாது. ஆனால் நிச்சயமாக அதற்கு ஒரு தனி மனிதனை விட சக்தி அதிகம். அரசாங்கத்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியும், சுத்தமான உணவும் குடிநீரும்,  மருத்துவ வசதிகளும், பாதுகாப்பான விரைவான சாலையும் வழங்க முடியும். அதை எனது தலைமையில் அமையும் அரசு செய்யும் என்றார்."

கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சியாக "இன்று முதல் எழுந்து நில்லுங்கள், பிரச்சனைகளை தூசு தட்டி கவனம் கொள்ளுங்கள், அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம். begin again the work of remaking America" என்று முழங்கினார்.

காலை 5 மணி முதலே ஒபாமாவுக்காக காத்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்க கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உரையாற்றியபோதிருந்த அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு பதவி ஏற்பு விழாவில் நிச்சயம் இல்லை. ஆனாலும் உறைய வைக்கும் குளிரிலும், குளிரிலும் வெப்பத்தைக் கக்கிய அடர்த்தியான போக்குவரத்து நெரிசலிலும் மக்கள் கூட்டம் 'ஒபாமா...ஒபாமா' என்று கோஷமிட்டபடி காத்திருந்தது ஒரு வரலாற்றுப் பதிவுதான்.  குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மிக நம்பிக்கையுடன், இவன் நம்ப ஆளு என்கிற தோழமையுடன் வந்திருந்தார்கள். கூட்டத்தின் பெரும் பகுதி அவர்கள்தான்.

முன்னாள் குத்துச்சண்டை வீரர் நோய்வாய் பட்டிருந்த நிலையிலும் குளிரை பொருட்படுத்தாமல் ஒபாமா பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்தார். போட்டோவில் அவரை அடையாளம் தெரிகிறதா பாருங்கள்.


வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் ஒபாமாவின் வெற்றியை கேலி செய்து கொண்டும், சீக்கிரமே தோற்று வீழ்ந்துவிடுவார் என்று எதிர்கட்சிகளும், (2002ல் ஒபாமாவை கட்சி மாநாட்டு பந்தலுக்குள் விடாத)உள்கட்சி நிற வெறியர்களும் காத்திருக்கிறார்கள்.

அவர்களையும் தனது பேச்சில் இடித்துரைக்க மறக்கவில்லை ஒபாமா. 'எங்களை இழிவு படுத்துபவர்கள், தங்களது கால்களுக்கு கீழே நிற்க வழியில்லாமல் பூமியை நழுவ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்", என்றார்.

"இந்த அரசு பெரியதா சிறியதா என்பது முக்கியமல்ல. இந்த அரசு செயல் படுமா? இதுதான் இன்று உள்ள மிக முக்கியமான கேள்வி. இந்த அரசு நல்ல சம்பளத்துடன் வேலை தந்து குடும்பங்களை வாழ வைக்குமா? வயதான காலத்தில் நல்ல ஓய்வூதியம் தருமா?" இந்த கேள்விகளுக்கு விடைதருவதுதான் நமது செயல் திட்டம் என்றார்.


ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவிற்கு வந்த மக்கள் கூட்டம் ஒரு கின்னஸ் சாதனையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாலைகளும், சுரங்கப்பாதைகளும் நிரம்பி வழிந்தன. எங்கும் கார்களும், மனிதத்தலைகளும் குளிருக்கு அஞ்சாமல் பெருகிக் கொண்டே இருந்தன. பலர் கார்களை பல கிலோ மீட்டர்களுக்கு முன்பே நிறுத்திவிட்டு நடந்தே வந்தார்கள். காலை 5.30 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக இரண்டரை மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர் சில சுரங்கப் பாதையை பயன்படுத்தினார்களாம். காலை பத்து மணி அளவில் ஒரு சிறிய விபத்து பல மைல்களுக்கு போக்கு வரத்தை நிறுத்தியதாம்.

விழாவில் பிரார்த்தனை நேரத்தின் போது பிஷப் T.D. Jakes, ஒரு பைபிள் வாசகத்தை வாசித்தார்.  “In time of crisis, good men must stand up”; “You cannot change what you will not confront,” and “You cannot enjoy the light without enduring the heat.” பிரச்சனைகள் தலை தூக்கும்போது நல்லவர்கள் துணிந்து நிற்க வேண்டும்.நேருக்கு நேர் சந்திக்காமல் நாம் எதையும் மாற்ற முடியாது. வெப்பத்தை சகித்துக் கொள்ளாமல் வெளிச்சம் பெற முடியாது"

ஒபாமா "Change" என்கிற மந்திர வார்த்தையைச் சொல்லி ஆட்சியை பிடித்திருக்கிறார். பதவிப் பிரமாணத்தின் போது ஏற்பட்ட சிறு தடுமாற்றம் தொடருமா? தடுமாற்றம் மடியுமா?

உலகம் காத்திருக்கிறது.