Saturday, September 5, 2015

We Miss You BK

இந்த உலகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதை நாமே தெரிந்து கொள்கிறோம். ஆனால் அதே உலகம் நாம் பார்க்கிற கோணத்தில் இருந்து ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. இதனை நாம் அறிந்து புரிந்து கொள்வதற்கு ஒரு குருவை நமது வாழ்க்கையில் சந்திக்க வேண்டியதிருக்கிறது.

தொலைக்காட்சித் துறை என்பது இனி இப்படித்தான் இருக்கும். இதில் செய்வதற்கு இனி என்ன இருக்கிறது என்ற ஒரு சலிப்பான எண்ணம் வந்திருந்தது எனக்கு. ஆனால் இது வரை செய்தது எதுவுமே துவக்கம் மட்டுமே இனிமேல்தான் நிறைய செய்ய வேண்டியதிருக்கிறது என்று ஒரு புதிய கோணத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பால கைலாசம் என்கிற பிகே. அந்த வகையில் அவரே எனது குரு.

சாடிலைட், காமிரா, கேபிள், DTH என அனைத்து தொழில்நுட்பங்களையும் கடந்த மனித மனங்களை ஊடுருவும் உணர்வுபூர்வமான ஒரு தத்துவமாக தொலைக்காட்சித்துறையை நோக்குவதற்கு எனக்கு  கற்றுத்தந்தவர் அவரே. அவர் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்கு தேவைப்பட்ட அவகாசங்களும், உரையாடல்களும், வாதங்களும், மோதல்களும், புரிதல்களும், ஏமாற்றங்களும், சினங்களும், சீற்றங்களும், புன்னகைகளும் அபாரமானவை. முற்றிலும் அந்நியனாக, நல்ல நண்பனாக, சக பணியாளனாக, மாணவனாக, சில நேரம் ஒரு ஆசிரியனாகவும் அவருடன் பழக நேர்ந்த அந்தச் சில மாதங்கள் என் வாழ்க்கையின் உன்னதமான உணர்வுக் குவியல்கள். புதுப்புது எண்ணங்களால் நான் தினம்தோறும் புதியவனாகிக் கொண்டிருந்தேன்.

இன்று அவருடைய கனவு மட்டும் என்னுடனும், அவரைப் புரிந்து கொண்ட பலருடனும் ஒரு அக்னியாக உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்கிறது. என்றோ ஒரு நாள் மனிதம் போற்றும் ஒரு புதிய வெளிச்சம் இந்த தொலைக்காட்சி உலகில் ஒளிரும். அதற்கு அவரே காரணம்.

எங்கள் நண்பனே, குருவே நீங்கள் இறுதியாக பேசிய சில வார்த்தைகளுடன் உங்களுடைய தொலைபேசி எண் இன்னமும் என் அலைபேசியில் இருக்கிறது. உங்கள் குரல் இனி அதில் கேட்கப்போவதில்லை. ஆனால் உங்கள் குரலாக என்றேனும் ஒரு நாள் நான் ஒலிப்பேன்.

We Miss You BK! குருவே போற்றி!

Friday, September 4, 2015

#மல்லிகைக்கிழமை

அவள் கூந்தலில் மயங்கிய 
பூக்கள் சரியாமலிருக்க
ஹேர் பின்களையும்,
அவள் கூந்தல் மயக்கிய 
நான் சரியாமலிருக்க
தன் கண்களையும் பிரயோகிக்கிறாள்.

#மல்லிகைக்கிழமை

Thursday, September 3, 2015

எப்போதிருந்து நீ நான் ஆனாய்..


உன்னை பார்ப்பதற்கு முன்பே
உன்னை எனக்குத் தெரியும் 
என்றுதான் நினைக்கிறேன்.

உன்னை நான் சந்திப்பதற்கு முன்
அதிகாலையில் நான் ஜன்னலைத் திறந்ததும்
என்னுள் நுழைகிற காற்றாக நீ இருந்திருக்கிறாய்.

நான் தினசரி நீரூற்றும் செடியாக இருந்திருக்கிறாய்.
பூக்களை பறித்துக் கொண்டு புன்னகைக்கும்
பக்கத்து வீட்டுச் சிறுமியாக இருந்திருக்கிறாய்!

எங்கிருந்தோ ஒலித்து என்னை  முணுமுணுக்க வைக்கும் 
பாடலாக இருந்திருக்கிறாய!
ஒரே ஒரு துளியாக என் மேல் விழுந்துவிட்டு
வராத மழையாக இருந்திருக்கிறாய்.

நள்ளிரவிலும் என்னை அடையாளம் கண்டு 
வாலாட்டும் ஜீவனாக இருந்திருக்கிறாய்!
நான் புரிந்து கொள்ள ஆசைப்படும்
கவிதையாக இருந்திருக்கிறாய்!

ஒரு நாள் நீ நீயாகவே வந்தாய்
ஆனால் 
எனக்கே தெரியாமல் ஏதோ ஒரு தருணத்தில்
நீ நானாகவும் ஆகிவிட்டாய்!


Monday, August 31, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
திரையரங்க இருளில் வரிசை எண் தேடும்போது
அனிச்சையாக நீ என் கரம் பற்றிக்கொள்வதும்
சலனப்படம் முடிந்து இருள் கலையும்வரை
பற்றிய உன் கரங்களை நான் விடாதிருப்பதும்.