Friday, September 12, 2008

டப்பிங் பொங்கல்

"பொங்கல் ஸ்பெஷல் என்ன படம் போடப்போறீங்க?"

கேட்டவர் மார்கெட்டிங் ஹெட்.  இவர் யாரு என்னைக் கேட்க என்று கருவியபடி பதில் சொல்லத் தயங்கியவர் சேனலின் புரொகிராமிங் ஹெட். அதை வேடிக்கை பார்த்தது நான்.  

மார்கெட்டிங் தலைக்கு தமிழ் தெரியாது. புரொகிராமிங் தலைக்கு தமிழைத்தவிர எதுவும் தெரியாது.  குத்து மதிப்பான ஆங்கிலத்தில் இருவரும் சூடாகிக் கொண்டிருந்தார்கள்.  

"சார், படத்துக்கு கேப்சுலிங் (இடையில் விளம்பரங்களை சொருகுவதை) ஸ்டார்ட் பண்ணிடவா?" என்றபடி எடிட்டிங் ஹெட் என்ட்ரி கொடுத்தார். 

"என்ன படம்னு சொல்லு மேன்", கொதித்தார் மார்க்கெட்டிங்.
"நீங்க அவரை கேட்கக்கூடாது", இடை மறித்தார் புரொகிராமிங்.
"நான் அப்புறமா வரட்டுமா சார்", ஜகா வாங்கினார் எடிட்டிங்.

"அப்புறமெல்லாம் கிடையாது. நாளன்னைக்கு டிரையலர் ஏர்ல வரணும்"
"அதை நாங்க பாத்துக்கறோம். நீங்க ஏன் தலையிடறீங்க?"
"சார் நான் அப்புறமா வரட்டுமா சார்"

"இரு மேன்.  என்ன படம்னு சொல்லிட்டுப் போ.  ஸ்பான்சரர் கேட்கறான்"
"என்னையா கேட்டான். உன்னைதான கேட்டான். நீயே பதில் சொல்லு போ"
"சார் நான் அப்புறமா . . ."

"நீங்க சொல்லகாட்டி பரவால்ல. நான் காலையில சஜஸ்ட் பண்ண படத்தையே போடுங்க"   
"மார்கெட்டிங் டிப்பார்மெண்ட்ல இருந்து என்கிட்ட யாரும் பேசல?"
"என்கிட்ட சொல்லிட்டாங்க சார்"

"கரெக்ட். காலையிலயே சொல்லியாச்சு. நீங்க அந்த போலீஸ் படத்தையே கேப்சுல் பண்ணுங்க"
"எந்தப் படம்?"
"அது தெலுங்கு டப்பிங் சார்"

"அதைப் பத்தி பரவால்ல. அது ஆக்சன் படம். ஸ்பான்சரர் கன்வின்ஸ் ஆகிடுவான்.
"யோவ் இது தமிழ்நாடு, பொங்கல் பண்டிகைக்கு எவனாவது டப்பிங் படம் போடுவானா?"
"சார் சீக்கிரமா ஒரு முடிவெடுங்க சார்."

"அதான் காலையிலேயே முடிவெடுத்தாச்சே. அந்த தெலுங்கு டப்பிங் படத்தையே போட்ரு"
"என்னை கேட்காம எப்படி முடிவெடுப்பீங்க?  திருவிளையாடல் - சிவாஜி படம். பொங்கலுக்கு கலக்கலா இருக்கும்."
"ஆமா சார்"

"என்ன மேன் ஆமா?. ஸ்பான்சரர் ஒரு ஹெல்த் டிரிங்க் இன்ட்ரடியுஸ் பண்றான். அதுக்கு ஆப்டா ஆக்சன் படத்தையே போட்ரு. திருவிளையாட்டு, சாமி படம், பொங்கல்னு சொல்லி என் ஸ்பான்சரரை காலி பண்ணிடாதீங்க.  5 இலட்ச ரூபாய். அவன்தான் நமக்கு சாப்பாடு போடறான். 
ஆங்.... ஞாபகம் வந்திடுச்சு. படம் பேரு. இது தான்டா போலீஸ்."
"யோவ் திருவிளையாடல் படத்துக்கு பதிலா இதுதாண்டா போலீசா?. அதுவும் பொங்கலுக்கு"

புரொகிராமிங் அதிர்ச்சியாகி நிற்க, மார்கெட்டிங் அட்டகாசமாக சிகரெட் பற்ற வைக்க, எடிட்டிங் தனது அறைக்கு நுழைந்துவி்ட்டார்.

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, பொங்கலை முன்னி்ட்டு அதிரடி ஆக்சன் திரைப்படம், இதுதாண்டா போலீஸ்"

சானல்களை ஆட்டிப் படைக்கும் மார்கெட்டிங் 'திருவிளையாடல்' இது தான்.

Thursday, September 11, 2008

1971ல் ஜெயகாந்தன் - 2008ல் கமல்

காலம் - 1971
நாயகன் - ஜெயகாந்தன்

"ஒரு விபசாரியின் கதையை எழுதும்போது, you can even justify prostitution; but you have no right to recommend it. அவள் விபச்சாரியானதற்க்கான நியாயங்களைக் கூட நீங்கள் கூறலாம்.  அதனை சிபாரிசு செய்யலாகாது."

'சமுதாய ஆன்மிகப் பார்வை' என்று அடிக்கடி கூறுகிறீர்களே, அது என்ன? என்ற கேள்விக்கான பதிலை ஜெயகாந்தன் இப்படி முடித்திருந்தார்.

"இராணுவத்திடமிருந்து தப்பிக்க தன்னிடம் அடைக்கலம் புகும் கம்யூனிஸ்டுகளை காப்பாற்றும் பொருட்டு, தனது அழுகின்ற குழந்தையின் வாயைப் பொத்துகிறாள், ஒரு தாய். அவர்கள் தப்பிக்கிறார்கள், ஆனால் குழந்தை மூச்சு முட்டி இறந்துவிடுகிறது."

பெற்ற குழந்தையையே கொல்ல நேருகிறபோது, அந்த இடத்தில் யார் இருந்தாலும் படிக்கிறவனையும் கூட, இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்த அனுபவத்தில் பங்கு பெற வைத்து, அந்தக் கொலைக்கு உடந்தையாக்கி, மனம் குமுற வைக்கின்ற ஆன்மிகச் சக்தி, இந்தக் கதையில் இருக்கிறது என்று இந்தக் கதையை விவரிகிறார் ஜெ.கே.

நீங்கள் எழுதிய கதைகள் எல்லாம் இப்படி இருக்கிறதா?
இருக்கிறதோ, இல்லையோ இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
(நன்றி: ஆனந்தவிகடன், 1971)


காலம் - 2008
நாயகன் - கமலஹாசன்

நல்லவர்களும், நியாயங்களும் ஏன் தண்டிக்கப்படுகின்றன என்று பல படங்களில் கேள்வி கேட்டவர் கமல். மகாநதி அருமையான உதாரணம், அன்பே சிவம் அதன் இன்னொரு பதிவு.  தசாவதாரம் படமும் இதே கேள்வியைத்தான் கேட்கிறது.

படத்தின் இறுதிக் காட்சியில் அஸின் கேட்கும் கேள்வி இது.
கடவுள் இருக்கார்னு ஒத்துக்கறீங்களா?
இருக்கார்னு சொல்ல மாட்டேன். ஆனா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லுவேன்.

படத்தில் கமல் இந்த வசனத்தை உச்சரிக்கும்போது ஜெயகாந்தனின் ஆன்மிகச் சிந்தனை பட்டெனத் தெரிப்பது போல இருக்கிறது.


ஜீனியஸ்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள். அவர்கள் காலம் கடந்தவர்கள்.