Saturday, November 26, 2011

சிறு தயாரிப்பாளர்களுக்கு இனி சினிமாவில் இடமில்லை?

திரு. செந்தமிழன் இயக்கத்தில் பாலை என்கிற திரைப்படம் பற்றி கேள்விப்பட்டீர்களா? 

நான் டிரையலர் பார்த்தேன். நிச்சயம் ஈர்க்கிறது. இன்று புதிய தலைமுறை சானலில் படம் பற்றிய சிறு நிகழ்ச்சியை பார்த்தேன். படம் சிறப்பாக இருப்பதாக, பார்த்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூறினார்கள். ஆனால் படத்தை பெரும்பாலானவர்கள் பார்க்க முடியாத சூழல். 


காரணம் . . . பாலை இயக்குனர் திரு. செந்தமிழன் எழுதியுள்ள நீண்ட உருக்கமான கடிதத்தில் இருந்து சில வரிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். 

‘முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்.‘

அவருடைய கடிதம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

'தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை.

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன'


ஏன் இப்படி? சினிமா வெளியீடு ஒரு மிக முக்கியமான மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமிக்கும் Umbrella release பாணி, இந்திய சினிமா வியாபாரத்திலும் நுழைந்து விட்டது. ஆனால் இந்த வியாபார முறையினால், எல்லா சிறு தயாரிப்பாளர்களின் படங்களும் இப்படித்தான் சிக்கித் திணறுகின்றன.

வால்மார்ட் வந்தால் எப்படி சிறு வணிகர்கள் காணாமல் போவார்களோ, அது போல இந்த புதிய வியாபாரச் சூழலால் சிறு தயாரிப்பாளர்களும் காணாமல் போகத்தான் வேண்டுமா? இந்த சூழலை சிறு தயாரிப்பாளர்கள் எப்படி சமாளித்து எதிர்கொள்வது?

சினிமா வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள் கூறலாம்.

பாவம் சில்க் ஸ்மிதாக்கள்!

டர்ட்டி பிக்சர் என்ற ஹிந்திப் படத்தில் சில்க் ஸ்மிதாவாகத் தோன்றுகிறார், வித்யா பாலன்.

 மீடியாக்கள் சிலிர்த்து எழுந்துவிட்டன. சில்க் உயிருடன் இருந்தபோது, தாங்கள் எழுதிய வக்ரமான கிசுகிசுக்கள், கற்பனையாக புனைந்த செய்திகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, சில்க் ஸ்மிதா ஒரு பெண் என்றும் அவர் அப்பாவி என்றும் திடீரென கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தக் கரிசனம் கூட சில்க்காக தோன்றுவது வித்யாபாலன் என்பதால்தான். சில்க்கின் வேடத்தில் அனுராதா ஒப்பந்தமாகி இருந்தால், மீடியாக்களின் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் ஊடகங்களின் உண்மையான கோர முகம்.

சில்க் ஸ்மிதாவின் உயர்வுக்கும், புகழுக்கும், கடைசி காலத்தில் அவர் அனுபவித்த மன அழுத்தங்களுக்கும், மீடியாக்களின் பொறுப்பற்றதனத்துக்கும் பங்கு உண்டு.

இன்று காலை கூட அங்காடித் தெரு புகழ் அஞ்சலி ஒரு பத்திரிகையில் புலம்பியிருந்தார். சில வருடப் போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அதற்குள் நடிகர் ஜெய்யுடன் என்னை இணைத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

உற்று கவனியுங்கள், அஞ்சலியை புலம்ப வைத்திருப்பது நீங்களோ நானோ அல்ல. அகோரப் பசியுடன் திரியும் பொறுப்பற்ற பத்திரிகைகள்.

பாவம் சில்க் ஸ்மிதாக்கள்!

ஒரு லிட்டர் சன் லைட்

அரசு கேபிள் வழியாக ஜெயா டிவியில் விலைவாசி ஏற்றத்தை அறிவித்துவிட்டு ஜெயலலிதா ஹெலிகாப்டர் ஏறி பெங்களுரு பறந்துவிட்டார். அவருக்கு அவர் பிரச்சனை.

ஆனால் தமிழகம் முழுவதும் விலைவாசி மற்றும் மின்சாரம் காரணமாக அணுஉலை முதல் அடுக்களை வரை செம ஹாட். இப்படி விலை ஏற்றினால் நாங்க எப்படி வாழறது என்று டாஸ்மாக் தமிழன் முதல் ஐபேட் தமிழன் வரை புலம்ப ஆரம்பிச்சாச்சு.

நேற்று கூட பெங்களுரில் இருந்து ஹெலிபேடில் இறங்கிய கையோடு, தமிழக முதல்வர் மின்கட்டணத்தையும் கன்னா பின்னாவென்று உயர்த்திவிட்டார்.

அரசு எப்பவுமே அப்படித்தான். கஜானா காலி என்ற அறிக்கையுடன் ஓடி மறைந்துவிடும். மக்கள் முதலில் புலம்புவார்கள் பின்னர் அதுவே பழகிப்போய்விடும். இது சாதாரண மக்களின் நிலை. சில அசாதாரணர்கள் இருக்கிறார்கள். கையில் கிடைப்பதை வைத்து தங்களுக்கு வேண்டியதை உருவாக்கிக் கொள்வார்கள்.

கென்யாவில் வாழும் சேரி மக்கள் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு 60 வாட்ஸ் பல்பை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அணு உலை கிடையாது, சோலார் பேனல் கிடையாது, அனல் மின் அலட்டல்கள் கிடையாது. ஒரே ஒரு இரண்டு லிட்டர் பாட்டில், அதில் நிரப்பப்பட்ட நீர், கொஞ்சம் ப்ளீச்.... அவ்வளவுதான் 60 வாட்ஸ் அளவுக்கு வெளிச்சம் பளிச்.

குடிசைகளின் கூரை வழியாக நீர் நிரப்பப்பட்ட பாட்டில் தொங்கவிடப் படுகிறது. பாதி பாட்டில் கூரைக்கு மேல், மீதி கூரைக்கு உள்ளே, அதாவது வீட்டுக்கு உள்ளே. கூரைக்கு மேல் உள்ள பாட்டில் வழியாக சூரிய ஒளி உள்ளே இறங்குகிறது. அது ஒளிச் சிதறல் காரணமாக உள்ளே இறங்கியதும் வீடு முழுவதும் சிதறுகிறது. சிதறலை அதிகரிக்க, தண்ணீரில் கரைக்கப்பட்ட ப்ளீச் உதவுகிறது. வெளிச்சத்தை மேலும் அதிகப்படுத்திக் காட்ட, நைலான் துணிகள் (சினிமாவில் ரிஃப்ளடக்டர்கள்) போல பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிம்பிள் செட்டப் வழியாக அந்த பாட்டிலில் 50 முதல் 60 வாட்ஸ் பல்பை போல வெளிச்சம் பெற முடிகிறது. பைசா செலவில்லை, ஷாக் இல்லை, மின்சாரமும் இல்லை, மின்கட்டண மிரட்டலும் இல்லை. ஆனால் அறை முழுக்க வெளிச்சம்.

இரவு நேரத்தில் என்ன செய்வது? பௌர்ணமி காலங்களில் பிரச்சனை இல்லை. மற்றபடி விடியும் வரை காத்திருதான்.

தண்ணீர் பாட்டில் பல்பை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரின் பெயர் மோஸர். 2002ல் பிரேசில் சேரிகளில்  இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தற்போது Koch Hope என்ற இளைஞர் பட்டாளம் கென்யாவின் இருண்ட சேரிகளில் 100 வீடுகளில் இதை இலவசமாக செய்து தந்திருக்கிறார்கள். மேலும் விரிவுபடுத்த டோனர்களுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுடைய திட்டத்திற்குப் பெயர் 'Isang Litrong Liwanag' தமிழல் கூறினால் ஒரு லிட்டர் சன்லைட்‘

சன்லைட் என்ற வார்த்தை தமிழா என்று என் காதை திருகாதீர்கள். ச்ச்ச்சும்மா ஒரு ஸ்டைலுக்காக எழுதினேன். நம்ம ஊர்லயும் இதை யாராவது கொண்டு வாங்கப்பா... அம்மா கரண்ட் சார்ஜையும் ஏத்திட்டாங்களாம்.

இதை வாசித்த பின் க.பாலாஜி -ஒரு யுடியூப் வீடியோ இணைப்பு தந்திருந்தார். அதையும் இந்தப் பதிவில் சேர்த்துக் கொண்டுள்ளேன்