Friday, August 31, 2012

சொந்தநாட்டிலேயே அகதிகளான இந்தியவடமாநிலத் தொழிலாளர்கள்


1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச சந்தை இந்தியாவிற்குள் நுழைந்ததும், விளை நிலங்கள் கட்டிடங்களாகின. பறவைகளும், மரங்களும் நிறைந்த வனங்கள், வாகனங்களும், சாலைகளும் நிறைந்த கான்க்ரீட் ஜங்கிள்கள் ஆகின. ஐடி என்கிற புதிய துறை பணத்தை வாரி இறைத்தது. இந்திய இளைஞர்கள் அலட்சியமாக செலவு செய்யத் துவங்கினார்கள். 25 பைசாவுக்கு விற்றுக் கொண்டிருந்த டீ, இன்று 7 ரூபாய் ஆகிவிட்டது. 50 பைசாவுக்கு கிடைத்த ஒரு இட்லி இன்று 12 ரூபாய் ஆகிவிட்டது. கிராம் 600க்கு விற்றுக் கொண்டிருந்த தங்கம் இன்று 3000ம் ரூபாயை தொட்டுவிட்டது. சில ஆயிரங்களுக்கு கிடைத்த நிலங்கள் இன்று கோடிகளைத் தொட்டுவிட்டன. சுருக்கமாகச் சொன்னால் வளர்ச்சி என்று நினைத்தால் அது வீக்கமாக உயர்ந்து நின்றுவிட்டது. விளை நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டு தொழிற்சாலைக்கும், நெடுஞ்சாலைக்கும் முதலீடு செய்த பெரும்பணக்காரர்களிடம் சென்று விட்டது. இந்த கால மாற்றத்தை ஓரளவுக்கு புரிந்து கொண்டார்கள் தென்னிந்தியர்கள். அவர்களுடைய ஆங்கில அறிவும், கற்கும் திறனும் தந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மளமளவென்று இந்த ஓட்டத்துடன் ஐக்கியமாகிவிட்டார்கள். சுதாரிக்காத வட இந்தியர்கள் பின் தங்கிப்போனார்கள்.

பணத்தின் மினுமினுப்பு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குடிபுகுந்ததும், 2000ம் ஆண்டின் பின்பகுதியில் உடல் உழைப்பு தேவைப்படுகிற வேலைகளை நிராகரிக்கத் துவங்கினார்கள் தென் இந்தியர்கள். இதனால் ஹோட்டல்கள், கட்டுமானப் பணிகள், காவல் பணிகள் போன்றவற்றில் ஆள் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. அதே நேரத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் இந்த பற்றாக்குறையை நிரப்ப ஆரம்பித்தார்கள். தென் இந்தியா முழுவதும் குறிப்பாக ஐ.டியால் முன்னேறிய கர்நாடகா, ஹைதராபாத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இவர்களின் குடியேற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. வாய்ப்பும், வறுமையும் துரத்த தமிழக கட்டிடத் தொழிலாளிக்கு கொடுப்பதில் பாதியைக் கொடுத்தால் கூடப்போதும் என்று அவர்கள் இறங்கி வரவே, சுரண்டல் முதலாளிகள் மீன்களை கொத்து கொத்தாக வலை வீசி பிடிப்பது போல, அவர்களை கூட்டம் கூட்டமாக இங்கு குடியமர்த்தினார்கள். கடன் வாங்கி, அதில் முன் பணம் கொடுத்து வேலை தேடி, வட்டி கட்டியபடியே கடின வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு. ஒரு காலத்தில் துபாய் போன்ற அரவு நாடுகளில் நிறைய மலையாளிகளும், கணிசமான தமிழர்களும் இப்படித்தான் குறைந்த சம்பளத்திற்கு தங்கள் வாழ்க்கையை உறிஞ்சிய முதலாளிகளிடம் அடிமைப்பட்டுக்கிடந்தார்கள். தற்போது இந்தியர்கள் சுதாரித்துக்கொள்ள, பிலிப்பினோக்களும், இலங்கை தமிழர்களும் அதே போன்ற அடிமை வாழ்வை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலைதான் தென் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும்.

நெருங்கி பேசிப்பார்த்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலியில் பாதிதான் அவர்களை சேருகிறது. பாதியை புரோக்கர்கள் அபகரிக்கிறார்கள். குறிப்பாக கட்டிடத் தொழிலாளர்களின் நிலை இதுதான். சுரண்டும் முதலாளிகள், வட இந்தியர்கள் என ஒதுக்கும் தென் இந்தியர்கள், வறுமை, கடன், ஆரோக்கியமற்ற சூழல் போன்றவற்றால் எப்போதுமே ஒரு அபத்திர சூழலில்தான் வாழ்கிறார்கள். இந்த அவநம்பிக்கை மேலோங்கியிருக்கும் வாழ்க்கை அவர்களை எப்போதும் இனம் புரியாத பயத்தில்தான் வைத்திருக்கிறது போலும். அதனால்தான் ஒரு வதந்தி SMS-ஐ படித்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக, கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு தாங்கள் பிறந்து வளர்ந்த ஊருக்கே புறப்பட்டு ஓடினார்கள்.

நதிக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும்தான் சமூகங்கள் குடியேறியதாகச் சொல்கிறது உலக வரலாறு. பருவம் பொய்க்கும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக நகர்ந்திருக்கிறார்கள், புதுப்புது நாகரீகங்கள் உருவாகியுள்ளன. ஆனால் இலங்கையும், அஸ்ஸாமும் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் இயற்கை அல்ல, அரசியல். இலங்கைத் தமிழர்களை பார்த்து சிங்களர்கள் வெறுப்பை உமிழ்ந்ததைப் போல, தற்போது இங்கு வந்து குடியேறும் வட இந்தியர்களை வேண்டா வெறுப்பாக அனுமதிக்கும் தென் இந்தியர்களைப் போல, அஸ்ஸாம் மாநிலம் வங்கதேச முஸ்லிம்களை ஒருகாலத்தில் அனுமதித்தது. போடோ இன மக்கள்தான் அஸ்ஸாம் மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்கள். ஆனால் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்கள், எண்ணிக்கையில் அதிகமாகி, அந்தஸ்திலும், அதிகாரத்திலும் உயரத்துவங்கியதும், எத்தனையோ வருடங்களாக சிறிய நெருடலாக இருந்த உணர்வுகள், கடந்த மாதம் பெரும் கலவரமாக உருவெடுத்துவிட்டது.

தென் இந்திய முஸ்லிம்கள், அஸ்ஸாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, தென் இந்தியாவில் குடியேறியிருக்கும் வடமாநிலத்தவரை அடித்து உதைத்து ஊரை விட்டே துரத்துகிறார்கள் என்ற ஒரு பொய் வதந்தீயாக, SMS மூலம் பரவியது. பயந்து போன அவர்கள் ஒரே இரவில் கூட்டம் கூட்டமாக ஒடிசா, அஸ்ஸாம், உ.பி, பீகார் போன்ற தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விரையத் துவங்கினார்கள். பஸ் நிலையங்களும், இரயில் நிலையங்களும் நிரம்பி வழிந்தன. அரசாங்கம் சுதாரிப்பதற்குள் வதந்தீ காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்துவிட்டது. கர்நாடகாவில் பரவத் துவங்கிய இந்த பதற்றம், தமிழகத்தையும் தொற்றிக் கொண்டுவிட்டது. பயப்படாதீர்கள் என்று கர்நாடக, கேரள, தமிழக அரசுகள் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தன. ஆனால் அவர்களின் பதற்றம் தணியவில்லை. அச்சம் குறையவில்லை. ஒருவர் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் சொற்ப உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

உளவியல் ரீதியாக இதை பார்த்தோம் என்றால், உலகம் முழுவதும் மக்கள் தனித் தனி குழுவாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு குழுவை நண்பனாகத்தான் ஏற்றுக் கொள்கிறார்களே தவிர, உடன் வாழ்பவர்களாக ஏற்க மறுக்கிறார்கள். இந்த மறுக்கும் உணர்வுக்கு காரணமாக எப்போதுமே பணமும், அந்தஸ்தும், அதிகாரமும் சார்ந்த அரசியல்தான் காரணமாக இருந்து வந்திருக்கிறது. தங்களிடமிருந்த இவை பறிபோய்விடும், குடியேற வந்தவர்கள் கவர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் வந்ததும், நெருடல் அதிகமாகிறது.

கேரளத்திலும், கர்நாடகத்திலும் எப்படியோ? ஆனால் தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்களின் மேல் இரக்கமே இல்லாமல் திட்டமிட்ட வெறுப்பை வளர்த்தது தமிழக அரசு. இந்த அரசு பதவி ஏற்றதும், தொடர்ந்து நடந்த கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் காரணம் தன் கையாலாகாத்தனம் என்பதை மறைக்க, இதற்கெல்லாம் காரணம் வட மாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்தான் என்று அரசு மக்களிடையே எண்ணத்தை விதைத்தது. வடமாநிலத்தவர் ஒவ்வொருவரும் தங்கள் புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை போலீஸ் ஸ்டேஷனில் பதிய வேண்டும் என்று மிரட்டியது. வடமாநிலத்தவர் மட்டுமல்ல, யாரை வாடகைக்கு வைத்தாலும், அவர்கள் பற்றிய தகவலை காவல் நியைலத்துக்கு தர வேண்டும். இல்லையேல் சிறை தண்டனை என்று தமிழக மக்களையும் பதற்றத்துக்கு உள்ளாக்கியது.

சமீபகாலமாக அரசுக்கு பயந்தோ ஆதரவாகவோ, பூசிமெழுகி எழுதிக் கொண்டிருக்கும் ஆனந்தவிகடன் கூட தைரியமாக ஒரு கருத்தை சென்ற வார இதழில் பதிவு செய்துள்ளது.

‘வேளச்சேரி ஐந்து பேர் என்கவுன்டருக்குப் பிறகு, வட மாநிலத்தவர்கள் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி, அரசே இவர்கள் மீது வெறுப்பைக் கட்டமைத்ததையும் நாம் மறந்துவிட முடியாது.‘, என்று குறிப்பிட்டுள்ளது விகடன். இந்த ஒரே ஒரு வரிக்காக ஆனந்தவிகடனின் (அவதூறு வழக்குக்கு பயப்படாத) தைரியத்தை மெச்சுகிறேன்.

வடமாநில மக்கள் இரு வாரங்களுக்குப் பின் பயம் தெளிந்து மீண்டும் தென் மாநிலங்களுக்கு பணிசெய்ய வந்துவிட்டார்கள். ஆனாலும் அரசியல்வாதிகளின் தூண்டுதலாலும், அதற்கு பலியாகும் மக்களாலும் மீண்டும் மீண்டும் அகதிகள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் - Exodus - அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சமீபத்திய உதாரணம், நம்மை பாதித்திருக்கும் உதாரணம், நம் கையாலாகாத்தனத்திற்கு உதாரணம், நம்மிடம் தீர்வு இல்லாத உதாரணம் . . . ஈழ தமிழ் மக்கள்!

அகதிகள் இல்லாத உலகே என் கனவு!

சொந்தநாட்டிலேயே அகதிகளான அமெரிக்க விவசாயிகள்!


1931 - டெக்ஸாஸ், கொலராடோ, ஓக்லஹோமா, புதிய மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் மழை தன் வரவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்ட வருடம். விவசாயிகள் வானத்தை அண்ணாந்து பார்த்து மழை ஏக்கங்களுடன் ஏழ்மையை தழுவிக்கொண்டிருந்தபோது, வானத்தை நிறைத்தன கரும்பூதங்கள். அவை கருத்த மழை மேகக் கூட்டங்களாக இருக்கும் என நினைத்த விவசாயிகளை, அலறி அடித்துக்கொண்டு ஓட வைத்தன புழுதிப்படலங்கள். ஒரு சில நிமிடங்கள்தான்... எத்தனையோ நூற்றாண்டுகளாக, விளை நிலங்களாக பரந்திருந்த பூமியை கரும்புழுதிகள் விழுங்கின.

‘புழுதிக் கோப்பை‘ (Dust Bowl) - புழுதிக்குள் புதைந்த அப்பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்ற ஒரு பத்திரிகையாளர்  இப்படித்தான் குறிப்பிட்டார். குடிநீர், உணவு, காற்று என எதிலும் புழுதி. காற்றை சுவாசிப்பதே மரணத்தை சுவாசிப்பது போல ஆகிவிட்டது. வயிற்றுக்குள்ளும், சுவாசக் குழாயிலும் தேங்கிவிட்ட புழுதிப்படலத்தால், பறவைகளும் விலங்குகளும் கூட்டம் கூட்டமாக மாண்டு போயின. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களையும் தின்னத் துவங்கியபோது, வங்கிகள் முடங்கின. கடைகள் சாத்தப்பட்டன. சாலைகள் புதைந்தன. அரசு மட்டுமல்ல, அப்பிரதேசம் முழுவதுமே இயக்கமற்று நின்றது. ஆனாலும் புழுதிபுயலின் தாக்கம் நிற்கவில்லை. தூசிக்கு தப்பிக்க ஈரத்துணிகளை வாசலில் கட்டி வைத்தார்கள். வீட்டின் அனைத்து துவாரங்களையும் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு அடைத்தார்கள். ஆனாலும் தொடர்ந்து நுண்துகள் தூசிகள் நாசி துவாரத்தை அடைக்க ஆரம்பித்தபோது, மூச்சுவிடவே திணறிய மக்கள் சிறு சிறு கூட்டங்களாக உயிர் தப்பி கலிஃபோர்னியாவுக்கு செல்லத்துவங்கினார்கள். 1940ம் வருடத்துக்குள் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் தாங்கள் வசித்தபகுதியை அப்படியே விட்டுவிட்டு, கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு அகதிகளாக அப்படியே புலம் பெயர்ந்திருந்தார்கள்.

முதலில் பரிதாபத்துடனும், பதைபதைப்புடனும் அவர்களை வரவேற்று அடைக்கலம் தந்தது கலிஃபோர்னியா. ஆனால் எண்ணிக்கை அதிகமானதும் திணற ஆரம்பித்தது. திணறல் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சலாக உருமாறி, பிறகு கோபமாக நிலைகொண்டது. மக்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டார்கள். உள்ளே வராதீர்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள். மீறி வந்தவர்கள் தாக்கப்பட்டார்கள். இந்த செய்தி பரவியதும், ஏற்கனவே கலிஃபோர்னியாவுக்குள் வந்து தங்கியவர்களுக்கும் சிக்கல் ஆரம்பித்தது. அவர்களையும் வெளியே போ என துரத்தியது கலிஃபோர்னியா! வாழ்க்கை தேடி வந்தவர்களை உள்ளே நுழையவிடாமல் துரத்தியடிப்படிப்பதற்காக, எல்லைகளில் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.

சொந்த மண்ணில் இயற்கையும், வந்த மண்ணில் இரக்கமற்ற சமூகமும் திரும்பத் திரும்ப துரத்தினாலும், வேறு வழியின்றி அங்கேயே தங்கியவர்களின் உழைப்பை பணக்கார சுரண்டல்காரர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். சொற்ப தொகைக்கு நாள் முழுவதும் உழைக்கும் அடிமைகளாக அவர்கள் மாற்றப்பட்டார்கள். பசியின் கொடுமை... வெறும் 75 சென்ட் முதல் 1.5 டாலர் வரை மட்டுமே பெற்றுக்கொண்டு உயிர்பிழைக்க போராடினார்கள். இந்த சொற்ப தொகையிலும் 25 சென்டுகளை அவர்கள் வீட்டு வாடகையாக தரவேண்டியதிருந்தது. வீடு என்றவுடன் ஏதோ பெரிதாக நினைத்துவிடாதீர்கள். கிழிந்த பாலிதீன் பேப்பர்களால் போர்த்தப்பட்ட கதவுகளற்ற குடிசைகள்தான் வீடு. சுகாதாரமற்ற சூழலால், அவர்கள் வசித்த பகுதி சேரிகளாக மாறி, காலரா, டிபி, மலேரியா, அம்மை உள்ளிட்ட நோய்கள் அவர்கை வாட்டி வதைத்தது.

யாருக்காகவோ தங்கள் உயிரையும், உழைப்பையும் இழந்து கொண்டிருப்பதை உணர்ந்த சிலர் முதுகு நிமிர்ந்து ஏன் என்று தட்டிக்கேட்டபோது, பண முதலைகளும், அரசாங்கமும் கை கோர்த்து அவர்களை தாக்கினார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடும் கம்யூனிஸ்டுகள் என முத்திரை குத்தி தண்டிக்கப்பட்டார்கள். மனிதர்கள் மேன்மேலும் அரக்கர்களாகி தண்டிக்கத் துவங்கியபோது, இயற்கை மென்மையாகியிருந்தது. மக்கள் அண்ட வந்த பூமியை விட்டு, பிறந்த பூமியை நோக்கி மீண்டும் புலம் பெயர்ந்தார்கள்.

அங்குதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர்கள் பிறந்து, வாழ்ந்து, கொண்டாடி, போராடி விளைநிலங்களாக வைத்திருந்த பூமி அபகரிக்கப்பட்டிருந்தது. இயற்கையின் தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள் அண்டைய பிரதேசங்களுக்கு தப்பிச் சென்று திரும்பி வந்த சில வருடங்களுக்குள், கார்ப்பரேட் பண முதலலைகள் அந்த ஏழை விவசாயிகளின் பூமியை தங்கள் வசமாக்கி கட்டிடங்களாக மாற்றிவிட்டிருந்தார்கள். அவர்கள் சொந்த மண்ணிலேயே வந்தேறிகளானார்கள். தாங்கள் உழுது பண்படுத்தி தன் வசம் வைத்திருந்த பூமியை இழந்து, அங்கு கால்பதிப்பதற்கே வாடகை தந்தார்கள். மண்ணின் சொந்தக்காரர்கள் சொந்த மண்ணிலேயே அடிமைகளாகிப்போனார்கள். இன்று அவர்களில் எவ்வளவோ பேர் படித்து, தெளிந்து, முன்னேறிவிட்டார்கள். ஆனாலும் அவர்களை Okies, Arkies என்று அடிமை முத்திரைகளால்தான் குறிப்பிடுகிறது, அமெரிக்க வரலாறு!