"We request Advani and other politicians not to come to Mumbai at this moment. We don't want our security forces run behind them to safe guard them. We need them for our Mumbai"
என்று எழுத்தாளர் ஷோபா டே NDTV 24x7 சேனலில் குமுறிக் கொண்டிருந்தார்.
ஒரு புறம் தீவிரவாதிகளின் பிடியில் ஓபராய், தாஜ் ஹோட்டல்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு புறம் மும்பை தூசு தட்டி எழுந்து நிற்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. உயிரை துச்சமாக மதித்து தைரியமாக கூடி நின்ற மக்கள் மேலும் மேலும் வந்து இறங்கிய இராணுவத்தினரையும், போலீசாரையும், கமாண்டோக்களையும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றார்கள். "பாரத் மாதா கி ஜே", "வந்தே மாதரம்" என்ற கோஷங்கள் துப்பாக்கி சத்தங்களை மீறி ஒலித்தன.
அதே நேரத்தில் (நேற்று) அத்வானி அங்கு வந்து சென்றார். அவரைத் தொடர்ந்து (இன்று) மோடி வந்திறங்கிச் சென்றார். இன்னும் பல அரசியல்வாதிகள் வந்து செல்லக் கூடும். அவர்கள் வருவது ஓட்டுக்காகவா? அரசாங்கத்தை திட்டவா? இக்கட்டான நேரத்தில் மக்களை சந்திக்கும் அக்கறையா? என்ற விவாதத்தில் இறங்க வேண்டாம். அது தற்போதைய தேவையும் அல்ல.
ஒவ்வொரு துப்பாக்கியும், ஒவ்வொரு பாதுகாவலரும், ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையும் மும்பையை ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து இயங்கும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் வருகை நிச்சயம் ஒரு தடங்கல்தான். இந்த அரசியல்வாதிகளைத் தொடரும் கார்களும், கைத்தடிகளும், இந்த நேரத்தில் மிகப்பெரிய கவனச் சிதறல்தான்.
ஒவ்வொரு நொடியும் நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் பாதுகாப்புக்காக சில நிமிடங்களாவது அந்த பாதுகாப்பு திசை திரும்புகிறது. எனவே அவர்களுடைய வருகை இந்த தருணத்தில் தேவையற்றது.
எனவே 'இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!! தயவு செய்து சில நாட்களுக்கு மும்பை பக்கம் வராதீர்கள். நாட்டின் காவலர்களுக்கு தற்போது மக்களை காப்பதே முக்கியம். உங்களைக் காப்பது அல்ல."
ஷோபா டே இதைத்தான் சொன்னார். நான் வழி மொழிகிறேன்.