Friday, August 17, 2012

In & Out Chennai - நீதானே என் பொன்வசந்தம்


Illayaraja is .... 

கோடிட்ட இடத்தை நான் நிரப்ப விரும்பவில்லை. உணர்வின் மிகுதியில் இளையராஜாவே தன்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் இவை. ஜெயா டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக இயக்குனர் கௌதம் மேனன் அவரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இருவரும் மிகச் சாதாரணமாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்த அந்த பேட்டியில், சட்டென ஏதோ ஒரு கணத்தில், இளையராஜா அந்த வார்த்தைகளை உச்சரித்தார். அவர் அப்படி சொன்ன பின், அவரே ஒரு கணம் மௌனித்தார். அவருடைய இசையின் இடையில் நிகழும் மௌனங்களைப் போல, ஓராயிரம் ஸ்வரக்கோர்வைகளை உள்ளடக்கிய அடர்த்தியான மௌனம். இதை எதிர்பாராத கௌதம் மேனன், நிலைத்த பார்வையுடன் என்ன பதில்சொல்வது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தார். உலகம் ஒரு நொடி நின்றது போல அதைப் பார்த்துக் கொண்டிருந்த நானும் உறைந்து போனேன். சில நொடிகள்தான்...இளையராஜாவே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

'தவறுக்காக ஒருவன் பெருமைப்படுவானா? இந்த பிறப்பே ஒரு தவறு. இந்த பிறப்புக்காக நான் பெருமைபட்டுக் கொள்ள என்ன இருக்கிறது?' எதற்காக நான் பிறந்தேன். எதற்காக இந்த வாழ்க்கை, இந்த இசை, இந்த பாராட்டு?'

இளையராஜாவின் இந்த வார்த்தைகளை எத்துனை பேர் புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை. பின்வரும் கவிதையை சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கவிதை இளையராஜா கூறிய வார்த்தைகளின் ஆழத்தை விளக்கக்கூடும்.

பசித்தவாயை பூமியின் இனிய மார்பில் பதிந்திருக்கும் மரம்.
தினம் முழுதும் கடவுளை நோக்கி
இலைநிறை கைகளை உயர்த்தி பிரார்த்திக்கும் மரம்.
கோடையில் கூந்தலில் பறவைக் கூடுகள் அணிந்து
குளிரில் மார்பில் பனிக்கட்டி படிந்து
மழையுடன் நெருக்கமாய் வாழும் மரம்.

இந்தக் கவிதை இத்துடன் முடிந்திருந்தால், அது மிகச் சாதாரணம். அதற்கடுத்த இரு வரிகள்தான் உணர்வுகளின் ஆழத்தில் ஆச்சரிய வளையங்களை எழுப்பக்கூடியவை.

கவிதைகள் செய்வது என் போன்ற முட்டாள்கள்.
கடவுள் ஒருவர்தான் மரம் செய்யத் தெரிந்தவர்!

இளையராஜா இதைத்தான் சொன்னார். 

பாடல்கள் சமைப்பது என் போன்ற சாதாரணர்கள், 
கடவுள் ஒருவர்தான் இசையை செய்யத் தெரிந்தவர்! 

எதிலும் உச்சம் தொட்டவர்கள் தங்களைத் தாங்களே கடவுளின் தேசத்தில் துச்சமாகத்தான் நினைக்கிறார்கள். சமுத்திரம் ஆரவாரம் செய்யும். நான் சமுத்திரத்தின் ஒரு துளி எனும்போது கரையின் ஆரவாரமோ, ஆழத்தின் அமைதியோ, எதுவுமே எனக்கு சொந்தமில்லை. எல்லாம் சமுத்திரத்திற்கே சொந்தம். நிறைய சாதித்தவர்கள் இப்படி ஒரு நிலைக்கு தங்களை தாங்களே இழுத்துச் செல்ல முயல்கிறார்கள். இசையில் உன்னதம் தொட்டிருக்கும் இளையராஜா தன்னை இசைச் சமுத்திரத்தில் கரைந்து போன ஒரு ஒலித்துளியாக நினைத்துக் கொண்டு உச்சரித்த வார்த்தைகள், அவருடைய இசையைப் போலவே என் ஆன்மாவை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

எதிர் நீச்சலும், எதிர்நீட்டலும்!
ICE AGE - 3D இந்தப் படம் சென்னையில் வெளியாகிவிட்டதா? வெளியாகியுள்ளதா? எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் வியாபாரத் தொடர்புடைய ஒருவர் டிவிட்டரில் படம் வெற்றி என அறிவித்திருந்தார். படம் நன்றாக உள்ளதா? இல்லையா? என இரசிகர்கள் பார்த்து உணரும் முன்பே, படத்தின் வசூல் பற்றிய கணக்குகளை தீர்மானிக்கும் வியாபார உத்திகள் கோடம்பாக்க சினிமாவுக்குள் வந்துவிட்டது. தற்போது ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி‘ திரைப்படம் 3Dயில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் தியேட்டர்களைத் தொடும் என செய்திகள் கசிகின்றன. இதைக் கேள்விப்பட்டதும், சிவாஜிக்கு பதில் எந்திரனை 3Dயில் மாற்றலாம் என சில இரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்திய சினிமாவுக்கு மை டியர் குட்டிச் சாத்தான்தான் முதல் 3D. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் அத்தகைய முயற்சி ஒரு எதிர் நீச்சல். அந்த வகையில் குட்டிச் சாத்தானுக்கு ஒரு சபாஷ்! எந்திரனை இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று வர்ணித்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எம்.ஜி.ஆர் நடித்து ஜெனோவா என்றொரு சயின்ஸ் பிக்ஷன் படம் அந்தக் கால தூர்தர்ஷனிலேயே பார்த்திருக்கிறேன். 

முதலாவதாக வந்ததோ, அடுத்ததோ எதுவாக இருந்தாலும் சயின்ஸ் பிக்ஷன் என்பதற்கு கதையில் ஒரு எதிர்நீட்டல் (Extra Polation) இருக்க வேண்டும். அதாவது இன்றைய கண்டுபிடிப்புகள், இன்றைய நடை முறை வாழ்விலும், நாளைய வாழ்விலும் எத்தகைய மாற்றங்களைத் தரும் என்பது பற்றி, ஒரு நிஜம் தாண்டிய கற்பனை வேண்டும். உதாரணமாக இன்றைய மனிதர்கள் ஆன்லைன் வழியாக ரேஷனரிசி வாங்குகிறார்கள். நாளைய மனிதர்கள் கை, கால்களை ஸ்பேர்பார்ட்ஸ் கடைகளில் வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இது போன்ற கற்பனை எதுவும் எந்திரனில் கிடையாது, சிட்டி ஒரு ரோபோ என்பதைத் தவிர. எனவே அது முழு சயின்ஸ் பிக்ஷன் அல்ல. ஆனாலும் எந்திரனை எனக்குப் பிடித்தது. அதற்கு காரணம் திரைக்கதையோ, இசையோ, நடிப்போ, டெக்னாலஜியோ அல்ல. எந்திரனைப் பொறுத்தவரை ரஜினி தன்னை முழுமையாக இயக்குனர் ஷங்கரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்த ஒப்படைப்பு எனக்கு பிடித்தது. படம் உருவான கதை பற்றிய காட்சிகள், சில ரஜனி பேட்டிகள் போன்றவற்றை பார்த்தபோது, ஷங்கரை பரிபூரணமாக நம்பி ஒத்துழைத்த ரஜினி, ரஜினிக்கே புதுசு.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பரிபூரண ஒத்துழைப்பை இளையராஜா-கௌதம் மேனன் இணையில் கண்டேன்.  கௌதம் மேனனின் பாடி லாங்வேஜ், பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், லண்டன் நகரில் அவர்கள் நடந்து சென்ற புகைப்படங்கள், இளையராஜாவின் நிறைவான புன்னகை, எனக்கு அப்படி ஒரு எண்ணத்தையே தோற்றுவித்தது. ஜெயா டிவி பேட்டியை பார்த்தபின், என்னுடைய எண்ணம் சரி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இளையராஜாவின் வார்த்தைகளே அதற்கு அத்தாட்சி தந்தன.

‘எனக்கே இந்த அனுபவம் புதிது. வேறு எந்த இயக்குனரிடம் எனக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை‘ என்று திரும்பத் திரும்ப, வெவ்வேறு வார்த்தைகளில் இளையராஜா, தான் கௌதம் மேனனின் மேல் கொண்ட ஈர்ப்பை வெளிப்படுத்தினார். என் ஞாபகம் சரி என்றால், இதற்கு முன்பு, எந்த இயக்குனருடனும் இளையராஜா இத்தனை ஈடுபாடுகாட்டியதில்லை, அவர்களுடன் அமர்ந்து பேட்டியளித்ததும் இல்லை.

சங்கமம் திரைப்படத்தில் ‘மழைத் துளி மழைத் துளி மண்ணில் சங்கமம்‘ என ஒரு பாடல் வரும். அதில் மெல்லிசை மன்னர் ‘மகனே‘ என்றொரு வார்த்தையை உருகி உருகி உச்சரிக்கும்போது, ஏ.ஆர்.இரகுமானை அவர் ஆசிர்வதிப்பது போலவே எனக்கு கேட்கும். அது போல எளிதில் அணுக முடியாத மேதமை பொருந்திய தந்தையை, புத்திசாலி மகன் தன் சாமர்த்தியத்தால் ஈர்த்து அவருடன் இணைந்து, கம்பீர வெட்கத்துடன் ஒரு காலை வாக்கிங் சென்றது போல இருந்தது அன்றைய இளையராஜா-கௌதம்மேனன் பேட்டி. ‘ஹோய் பாத்தியா எங்கப்பாவை.. யார் தெரியுமா அவரு.. ராஜாடா..‘ என்று பெருமையும், நம்பிக்கையும், பணிவும் பொங்க சொன்னது போல இருந்தது, கௌதம்மேனனின் ஒவ்வொரு வார்த்தையும்.

இந்த விதை நான் போட்டது, இதை ஆண்டு அனுபவிச்சு அடுத்த தலைமுறைக்கும் நீதான் எடுத்துட்டுப் போகணும், என்று தேவர் மகனில் சிவாஜி, தன் பட்டணத்து மகன் கமலுக்கு அறிவுறுத்துவார். கௌதம் மேனன் நீதானே பொன்வசந்தம் படத்தின் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறார். நேற்று தான் கேட்டு வளர்ந்த இளையராஜா இசையை இன்றைய தலைமுறைக்கும் அதே வீச்சுடன் அறிமுகப்படுத்த முன்வந்திருக்கிறார். கர்ணன் திரைப்படம் டிஜிட்டலில் உயிர் பெற்று, இன்றைய தலைமுறையின் சில நூறு பேர்களையாவது தொட்டதில் எனக்கு பலத்த சந்தோஷம். அதே போல ஒரு செய்தியாக, ஒரு தகவலாக, ஒரு பழைய பாடலாக மட்டுமல்லாமல், இளையராஜா, இளைஞர்களின் ராஜாவாகவே அறிமுகப்போகிறார் என்பது எனக்கு புத்துணைர்வை தருகிறது. இளையராஜாவுக்கும் ஒரு உற்சாகம் திரும்பி வந்திருப்பதாக உணர்கிறேன். 


ஓவியர் ஜீவாவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். ஜீவ்ஸ் என்று அவரை செல்லமாக அழைப்பேன். ஓவியர் என்றாலும், திரைச்சீலைகள் என்ற திரைப்படம் பற்றிய புத்தகம் எழுதி அதற்காக தேசிய விருது பெற்றவர். கடந்த வாரம் கோவை சென்றிருந்த போது, மரக்கடை வீதியில் இருந்த அவருடைய அலுவலகத்தில் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் சென்றபோது, இன்னமும் கண்கள் வரையப்படாத ஒரு புத்தர் ஓவியமும், கண்களில் தன் உணர்வுகள் கொப்பளிக்க உற்றுப் பார்த்த ஒரு ஓவியமும் அவருடைய மேஜையில் இருந்தன. சினிமாவுக்கு பேனர் வரைந்த காலத்தில் இருந்த திருப்தி, ஃபோட்டோஷாப்பில் தயாராகும் பிளக்ஸ் பேனர்களில் இல்லை. அந்த அலுப்பும் சலிப்பும் என்னை ஆக்கிரமிக்கும்போதெல்லாம், இது போல வரைந்து வரைந்து குவிப்பேன் என்றார். 

இதுதானே வாழ்க்கை!
அணுவுக்குள் அணுவாகி
அப்பாலுக்குள் அப்பாலாகி
ஒரு புள்ளியில் தோன்றி
புள்ளியில் மறையும்
ஒரு புள்ளி!
இதுதானே வாழ்க்கை!

இது தற்போது தயாரிப்பில் இருக்கும் நான் இயக்கும் திரைப்படத்தில் வெளிவரப்போகும் பாடல் வரிகள். இவற்றை அவரிடம் காண்பித்து, அந்தப் பாடல்களுக்கான ஓவியத் தேவைகள் பற்றி கேட்டேன்.  மேதைகள் அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஜீவாவும் பிடிகொடுத்து பேசவில்லை. கௌதம் மேனன், இளையராஜாவை ஈர்த்தது போல, நானும் அவரை ஈர்ப்பேன். இசையமைக்கப்பட்டிருக்கும் அந்த பாடல் வரிகளுக்கு அவரையே ஓவியம் வரையச் செய்வேன்.

இளையராஜாவின் மேதைமையை கௌதம் மேனன் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறார். இதே போல, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் தேவகானங்களையும் அடுத்த தலைமுறைக்கு, இன்றைய தலைமுறை இயக்குனர் யாராவது இட்டுச் செல்ல வேண்டும். 

இது என் ஆசை மட்டுமல்ல, தீராத வேட்கை என்றும் சொல்லலாம்.

 அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த மேதைகளின் இசை கேட்டு வளர வேண்டும் என்பது ஆவல்.
‘என்னோடு வா..வா.. என்று சொல்ல மாட்டேன். 
உன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன்‘

நீங்கள் எனக்காக எழுதிய வரிகள் என்று அந்த பேட்டியில், இளையராஜாவிடமே கௌதம்மேனன் பெருமைபட்டுக் கொண்டார்.
எனக்கென்னமோ இளையராஜாவின் இசையுடன் உலவும் காற்று, நம் எல்லோரையுமே பார்த்து இப்படிப் பாடுவதாகத் தோன்றுகிறது.

ஐ லவ் மியூசிக்! ஐ லவ் இளையராஜா!
கட்டுரையின் முதல் வரியில் உள்ள கோடிட்ட இடத்தை Music என்று நிரப்பிக் கொள்ளுங்கள்!

Thursday, August 16, 2012

ஃபேஸ்புக் நண்பர் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதம்

வணக்கம் கலைஞர் அவர்களே, 

பல தலைமுறைகள் கண்ட நீங்கள், இன்றைய இணைய தலைமுறையையும் நேரடியாக சந்திக்க வந்ததை பலத்த கைதட்டல்களுடன் வரவேற்கிறோம்.

சரியோ, தவறோ இயன்றவரை பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்தித்து உங்கள் கருத்துகளை எங்களிடம் கூறிவருகி
றீர்கள்.

அரசியல் களம் பல கண்டது உங்கள் பேனா! நாட்டின் தலையெழுத்தை புரட்டிப் போட்ட பல விவாதங்களை துவக்கியும், நடத்தியும் வைத்திருக்கிறது உங்கள் பேனா! உங்களுடைய அனுபவம் வாய்ந்த பேனா, இனி எங்களுடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லும் என்பது இனிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

உங்கள் மீதும், உங்கள் இயக்கம் மீதும் இங்கே எத்தனையோ விமர்சனங்கள் உண்டு, ஆதரவுக் குரல்களும் உண்டு. இவற்றையெல்லாம் சமாளிக்கத்தான் நீங்கள் இணையம் வந்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

உங்களை நாங்கள் கேள்வி கேட்க முடியுமா? என தயக்கமும், எங்கள் விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? என அச்சமும் எங்களில் சிலருக்கு இருக்கிறது. அவற்றை களைவீர்கள், எங்களுடன் கலந்து உரையாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதுகிறேன்.

வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வையும் உங்கள் பேனா நுனியில் வைத்திருப்பவர் நீங்கள். கட்டற்ற சுதந்திரம் தந்திருக்கும் இணையம், உங்களைப் போன்ற மாபெரும் தலைவர்களையும் சந்திக்க, உரையாட வாய்ப்பு தந்திருக்கிறது. இதனை நாங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்வோம்.

உங்களைத் தொடர்ந்து, உங்களைப் போன்ற இதர தலைவர்களும் இணையத்திற்கு வர வேண்டும். விவாதங்களில் ஈடுபட வேண்டும். அதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும். மக்களுக்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் இதனால் குறையும்.

அப்படி ஒரு நிலையை நீங்கள் விரைவில் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் ஒரு முறை உங்களை இணைய உலகிற்கு அன்புடனும், ஆரவாரத்துடனும் வரவேற்கிறேன்.

இப்படிக்கு உங்கள் ஃபேஸ்புக் நண்பன்.
(ஃபேஸ்புக் எல்லோரையும் இப்படித்தான் அறிமுகம் செய்து வைக்கிறது)

Tuesday, August 14, 2012

அங்கும் இங்கும் - கனவுகள்


சித்த மருத்துவக் கனவு

‘ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமாக கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக் குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல, பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது.‘

மருத்துவர் சிவராமன்
(வலது முதல் நபர் )
டாக்டர் கு. சிவராமன் எழுதியுள்ள ‘மருந்தென வேண்டாவாம் . . .‘ என்ற புத்தகத்தின் இந்த அறிமுக வார்த்தைகளை படித்து அசந்து போனேன். பொதுவாக உணவுப் பழக்கம் பற்றிய புத்தகங்கள், திகட்டிப் போன திருமண விருந்து போல இருக்கும். ஆனால் இந்த நூலின் பின் அட்டையில் இதைப் படித்ததும், முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.

முதல் அத்தியாயமே அருமை! அன்னைக்கான உணவு! பொதுவாக நமக்கு உணவு ஊட்டுபவள் அன்னை. அவளுக்கு உணவு ஊட்டுவது எப்படி? எந்த வகையான உணவு ஊட்ட வேண்டும் என்று முதல் அத்தியாயமே வித்தியாசமாக இருக்கிறது.

‘ஒரு கவள சோற்றை நாம் சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக, எத்தனை மணி நேரம் கால் கடுக்க நின்று, கதை சொல்லி காக்காய் காண்பித்து, இப்போதைய நமது ‘சிக்‘ அல்லது ‘சிக்ஸ் பேக்‘ உடம்பிற்கு அவர்கள் அடித்தளம் போட்டிருப்பார்கள்? அவர்களுக்காக வயோதிக சங்கடங்களை பொறுத்து நம்மோடு இணைத்து வைத்திருப்பதில்தான் அவர்கள் நல்வாழ்வு துவங்கும். காக்கை கதை கேட்கும்போதே, நம்மையறியாமல் உணவு உள்ளே இறங்கிவிடும். அது போல இது போல அழகான பகிர்வுகளுடன் அவர் உணவுப் பழக்கங்கள் பற்றிச் சொல்லும்போது, இலகுவாக மனதில்பதிகிறது. சினிமா மால்களுக்கு செல்வதை குறைத்து, மாதத்தில் ஒரு நாள் புத்தகக் கடைகளுக்கு சென்று இது போல புத்தகங்களை வாசிக்கலாம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். Inaguration of 'Society for Integrative Health Research' என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இந்த புத்தகமும், அதை எழுதிய மருத்துவர் கு.சிவராமனும் அறிமுகமானார்கள். ஓரிரு வார்த்தைகள்தான். அதற்குள் அவரை கருத்தரங்கிற்கு வந்தவர்கள் கவர்ந்து கொண்டுவிட்டார்கள். கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயம் இந்த புத்தகத்தைப் போலவே மிக முக்கியமானது. மேற்கத்திய மருந்து நிறுவனங்கள், திட்டமிட்டு எப்படி நமது சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி பேசினார்கள். சித்த மருத்துவத்தில் சாதாரண அரிப்பு முதல் கான்சர் வரை மருந்து உள்ளது என்பதை ஆர்வத்துடனும், ஆதங்கத்துடனும் பகிரந்து கொண்டார்கள்.

ஆதங்கத்துக்கு காரணம், மக்களிடம் சித்த மருத்துவத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைவாக உள்ளது என்பதுதான். ஆனால் குறைபட்டுக் கொள்வதுடன் நின்றுவிடாமல், மக்களிடம் சித்த மருத்துவம் பிரபலமாக என்ன வழி என்றும் பல கருத்துகளை கூறினார்கள். அதில் ஒரு அம்சம் கவனிக்கத்தக்கது. சித்த மருத்துவம், மேற்கத்திய மருந்துகளைப் போல பிராண்டடாக கிடைப்பதில்லை. சைதாப்பேட்டை சித்த மருத்துவரும், கோயமுத்தூர் சித்த மருத்துவரும் மருத்துவத்தில் சிறந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. சித்த மருந்து சாப்பிடும் ஒரு சைதாப்பேட்டைவாசி கோயமுத்தூர் செல்கிறார் எனக் கொள்வோம். வயிற்று வலி வந்தால் சைதாப்பேட்டை மருத்துவருக்குதான் ஃபோன் செய்வாரே தவிர, கோயமுத்தூர் மருத்துவரை நம்ப மாட்டார். ஆனால் அவரே மேற்கத்திய மருந்து சாப்பிடுபவராக இருந்தால், சைதாப்பேட்டையில் வாங்கிய அதே டோலோபாரை, கோயமுத்தூர் பார்மஸியில் வாங்கிக் கொள்வார். பிராண்ட் பெயர் ஒரு நம்பிக்கையை தருகிறது.

சித்த மருத்துவர்கள் தனித் தனியாக ஒரு தீவு போல இயங்குவதால், மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பிராண்டாக வெளிவருவதில் சாத்தியமே இல்லை. இதுவே அவர்கள் ஒன்றுபட்டு இந்த வியாதிக்கு இதுதான் தீர்வு என்று ஒரு மருந்து பட்டியல் தயாரித்து, மக்கள் எங்கு சென்றாலும் எளிதாக கிடைக்க வழி செய்தால், நம்பகத்தன்மை பெருகும். மேற்கத்திய மருந்துகளைப் போல பணம் பிடுங்காமல், பக்க விளைவுகள் இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும். ஆனால் இதற்கு சித்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் இணைய வேண்டும், அதற்காகத்தான் இந்த அமைப்பு என்று அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் ஒன்றிணையும் அந்த நாள் எப்போது வரும் என்று, மருத்துவர் சிவராமன் போலவே நானும் காத்திருக்கிறேன்.

ஈழக் கனவு
கருணாநிதி டெசோ மாநாடு நடத்தி முடித்துவிட்டார். இது வெற்றி-தோல்வி, பலன்-பலனில்லை என பல விவாதங்கள், இணையச் சண்டைகள் அடுத்த பத்து நாட்களை அபகரித்துக்கொள்ளும்.

இந்த மாநாட்டில் ராம்விலாஸ் பஸ்வான் பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்த டெஸோ மாநாடுகளை வட மாநிலங்களிலும் நடத்துங்கள். அப்போதுதான் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சனை புரியும் என்று பேசினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு இனப்பிரச்சனை தமிழகத்தை தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் உணரப்படவே இல்லை என்பதுதான் இதன் சாராம்சம். இன்று வரை தமிழக அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கிப் பிரச்சனையாக மட்டுமே ஈழப் பிரச்சனை சுருங்கிவிட்டது.

எனவே கருணாநிதி,ஜெயலலிதா,வை.கோ,நெடுமாறன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.இந்திய அரசை ஈழத்தமிழர் விஷயத்தில் நிர்ப்பந்திக்க ஒரே வழி, இந்தப் பிரச்சனையை தமிழகம் தாண்டியும், இந்தியா முழுவதும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு அல்லாத பிற மாநில இந்திய தலைவர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் விவாதங்களை சர்வதேச அளவில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும். ஐ.நா.வில் குரல் எழுப்பக் கூடிய நாடுகளின் நட்பையும், ஆதரவையும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் திரட்ட வேண்டும். இறுதியாக ஐ.நா.வின் நிர்பந்தத்துடன் இலங்கை அரசை ஈழம் தொடர்பான நியாயமான அரசியல் முடிவுகள் எடுக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால், மிக மிக முக்கியமாக, இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒரு வலுவான அரசியல் தலைவரை உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கருணாநிதி, ஜெயலலிதாவையே நம்பிக் கொண்டிருக்க கூடாது. தாங்களே முடிவெடுக்கக் கூடிய, தாங்களே தங்களை வழிநடத்திக் கொள்ளக் கூடிய ஒரு ஈழத் தமிழ் தலைவர் காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு தலைவர் உருவாக வேண்டும். அந்த தலைவரின் கீழ் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரு வேளை தனி ஈழமே கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள வலுவும், ஈர்ப்பும், எதிர்கால திட்டமும் உள்ள ஈழ தமிழ் அரசியல் தலைமையே இப்போதைய தேவை. இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது என்றாலும், இதெல்லாம் நடந்தே ஆக வேண்டும். 

எத்தனை எத்தனை உயிர்கள், விவரிக்க முடியாத தியாகங்கள்! இவற்றிற்கெல்லாம் ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசியல் தலைவர்களையே நம்பிக் கொண்டிருக்கும் போக்கை கைவிட்டு, தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்ள ஒரு ஈழ அரசியல் தலைமை விரைவில் வடிவமெடுக்க வேண்டும். அப்படி வடிவமெடுக்காவிட்டால், ஈழம் என்கிற நெடும் கனவு, வெறும் கனவாகப் போய்விடும். ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது. விரைவில் ஈழத் தமிழர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். இதுவே என் எண்ணம், இதுவே என் பிராத்தனை!

www.aanthaireporter.comல் வெளியான கட்டுரை!