Wednesday, May 8, 2024

நீங்கள் கடைசியாக குயிலின் ஓசையைக் கேட்டது எப்போது?

எம்.எஸ்.வி-யிலிருந்து துவங்குகிறேன். அவருடைய பல பாடல்களை நான் ஏன் தவறவிட்டேன் என்பதற்கான விடை இளையராஜாவின் பாடல்களில் இருந்தது. இளையராஜாவின் பல பாடல்களை நான் ஏன் தவறவிட்டேன் என்பதற்கான விடை, ஏ.ஆர். இரகுமானின் பாடல்களில் இருந்தது. அதுபோலத்தான் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கின்ற விவரிக்க இயலாத ஒன்று யுவன், இமான், சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், ஆனிரூத் போன்றோரிடம் அவ்வப்போது கிடைக்கிறது. இவர்கள் தொடர்ந்து என் தேடலை பூர்த்தி செய்யும்போது எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான் வரிசையில் எனது ஆதர்சமாக நிலைத்துவிடுவார்கள்.

எளிதாகச் சொன்னால் நான் எதைத் தேடுகிறோனோ அது மட்டுமே என் கவனம் பெறுகிறது. சாவியைத் தேடும்போது நான் தொட்டு நகர்த்தி வைக்கும் புத்தகம் கவனத்தில் பதிவதில்லை.
இதற்கு அர்த்தம் நான் புத்தகத்தை நிராகரிக்கிறேன் என்பதல்ல. அது போலத்தான் நான் தவறவிட்ட பாடல்களும். இரசனை என்பதே ஒரு பஸ் பயணம் போலத்தான். பயணத்தில் இடதுபக்கம் தெரிவதை இரசிக்கும்போது வலதுபக்கம் உள்ளவை கண்களில் படுவதில்லை. திரும்ப வரும்போது அவை கண்களில் படுவதற்கு வாய்ப்பு உண்டு. சமீபத்தில் நான் அப்படிக் கண்டுகொண்ட பாடல்களில் ஒன்றுதான் ஆகாயத்தாரை!
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.இரகுமான் ஆகியோரின் சில பாடல்கள் இப்போதும் என் கவனத்தில் படாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்கள் எப்போதும் என் கவனத்தில் இருப்பார்கள்.

நீங்கள் கடைசியாக குயிலின் ஓசையைக் கேட்டது எப்போது?

Tuesday, May 7, 2024

ஆகாயத் தாமரை

ஆகாயத் தாமரை என்றொரு பாடல். இப்போதுதான் டிவிட்டரில் முதல் முறையாகக் கேட்டேன். ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ டிரைவர் பாடினார். பாடி முடிக்கும்போது உணர்வு மிகுதியில் அழுதுவிட்டார். அப்போது ஒரிஜினல் குரலை ஒலிக்க விட்டார்கள். குரல் இளையராஜா!

முழுப்பாடலையும் இனிமேல்தான் தேடிக் கேட்கப் போகிறேன். சில ஆட்டோ டிரைவர்கள் தேர்ந்த மெலடி இரசிகர்களாக இருப்பார்கள். அவர்களின் பிளே லிஸ்டில் பெரும்பாலும் எளிமையான, ஆர்கெஸ்ட்ராவின் ஆதிக்கம் அதிகம் இல்லாத, இனிமையான பாடல்கள் இருக்கும். இந்தப்பாடலைக் கேட்டதும் ஒரு கணம் ஆட்டோவில் அமர்ந்து கேட்டது போலத் தோன்றியது.
மறக்காமல் சொல்லிவிடுகிறேன், வீரபாண்டி என்ற அந்த ஆட்டோ டிரைவருக்கு நல்ல குரல்.

Monday, May 6, 2024

ராணி த்ரிஷா!

ராணி த்ரிஷா!

நாம் ரஜினி, கமல் பற்றி சிலாகிக்கிறோம். விஜய்-அஜீத் பற்றி ஆச்சரியம் உண்டு. குறைந்தபட்சம் 20 வருடங்களாக நாயகனாக வலம் வருகிறார்கள். வயதானாலும் இரசிகர்கள் அவர்களின் வயதை பொருட்படுத்துவதில்லை. அவர்களைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் வயதாகிவிட்டால் நடிகைகளை மறந்துவிடுகிறார்கள். அவர்களை கதாநாயகிகளாகக் கொண்டாடுவதில்லை. இதில் விதிவிலக்காக த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக உச்ச நடிகர்களுக்கு இணையான ஈர்ப்புடன் வலம் வருகிறார். இதற்காக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் தன்னை திரும்பத் திரும்ப புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் அவரை ஏற்கிறார்கள். இதனை சாதிப்பது அவ்வளவு எளிதல்ல.
அவர் மிஸ் சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்ட (1999) அழகிப்போட்டியின் வீடியோ இயக்குநர் நான்தான். அப்போது அந்தப் போட்டியில் பங்கு பெற்ற மற்ற எல்லாப் பெண்களையும் விட திரிஷா தனித்துவமாகத் தெரிந்தார். அவர் வெற்றி பெறுவார் என நினைத்தேன். அதே போல் வெற்றி பெற்று மிஸ். சென்னை பட்டம் பெற்றார்.
ஆனால் அப்போது முதல் இப்போது வரை, திரிஷாவின் அழகை விட, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அவருடைய மெனக்கெடல்தான் என்னை வசீகரிக்கிறது.
சதுரங்கப்போட்டியில் ராணிக்குதான் ஆற்றல் அதிகம். அந்த ராணியுடன் அவர் அமர்ந்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை, தன் பிறந்த நாளை முன்னிட்டு அவரே எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இன்னும் நான் ராணிதான் என்று அந்த புகைப்படம் வழியாக அவர் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
வாழ்த்துகள் திரிஷா! நீங்கள் ராணிதான்!

யாதெனக்கேட்டேன் - Focus Audience Show!

 

யாதெனக்கேட்டேன்!

Focus Audience Show!
வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி!

குறிப்பிட்ட சிலருக்கு படத்தை திரையிட்டு அவர்களின் கருத்தைக் கேட்டறியும் சிறப்புக் காட்சிக்கு Focus Audience Show என்று பெயர். படத்தை திரையிடுவதற்கு முன் பார்வையாளர்களின் கருத்தை உள்வாங்கிக்கொள்ள இந்தக் காட்சி உதவும். இதன் மூலம் படத்தின் நிறை குறைகளை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். கடந்த வாரம் ஒரு Focus Audience Show ஏற்பாடு செய்திருந்தோம். வந்திருந்தவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். அதற்கு ஏற்ப யாதெனக்கேட்டேன் மெருகேறியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பொன். காசிராஜனை பாராட்டு மழையில் நனைத்துவிட்டார்கள். மிக்க மகிழ்ச்சி!
அடுத்த Focus Audience Show-விற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல். அறிவிப்பு விரைவில்!

#isrselvakumar - #ISRventures
#YadenaKaten #FocusAudienceShow #Preview